ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spain annuls Catalan self-government, prepares military rule from Madrid

ஸ்பெயின் கட்டலான் தன்னாட்சியை இரத்துசெய்கிறது, மாட்ரிட்டில் இருந்தான இராணுவ ஆட்சிக்குத் தயார் செய்கிறது

By Alex Lantier
23 October 2017

அக்டோபர் 1 கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்து வாக்கெடுப்பு அன்று நடந்த கொடூரமான போலிஸ் ஒடுக்குமுறைக்கு மூன்று வாரங்களின் பின்னர், சனிக்கிழமையன்று, ஸ்பானிய பிரதமரான மரியானோ ரஹோய் கட்டலோனியாவின் பிராந்திய அரசாங்கத்திடம் இருந்து அதன் தன்னாட்சியை பறிக்கின்ற ஸ்பானிய அரசியல் சட்டத்தின் 155வது பிரிவு கொண்டுவரப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார். அந்த இடத்தில் ஸ்பானிய இராணுவம், சிவில் கார்ட் துணை இராணுவப் போலிஸ் மற்றும் பிற போலிஸ் பிரிவுகளின் துணையுடனான ஒரு தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தை மாட்ரிட் அமர்த்த இருக்கிறது.

பிரிவு 155 ஐ அமல்படுத்துவதானது, மாட்ரிட் சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்புவதற்கு ஆழமான எதிர்ப்பு கொண்டிருக்கின்ற பரந்த கட்டலான் மக்களுடன் ஸ்பானிய ஆட்சியை ஒரு வன்முறையான மோதலுக்குள் தவிர்க்கவியலாமல் கொண்டுவருவது சம்பந்தப்பட்டதாகும். ரஹோயின் அமைச்சரவை சனிக்கிழமையன்று நடவடிக்கைகளை வகுத்துக் கொண்டிருந்த சமயத்தில், கட்டலான் தேசிய சட்டமன்றத்தின் (ANC) ஜோர்டி சான்சேஸ் மற்றும் Omnium Cultural அமைப்பின் ஜோர்டி குவிக்ஸார்ட் ஆகிய இரண்டு கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகளை மாட்ரிட் எதேச்சாதிகாரமாகக் கைதுசெய்ததற்கு எதிராக பார்சிலோனாவில் அரை மில்லியன் மக்கள் பேரணி நடத்தினர்.

அமைச்சரவை வகுத்த நடவடிக்கைகள், கட்டலோனியாவில் ஜனநாயக ஆட்சி வடிவங்களை நிறுத்திவைப்பது மற்றும் பெயரைத் தவிர்த்து அனைத்திலும் இராணுவ ஆக்கிரமிப்பின் ஒரு அரசாங்கத்தை அமர்த்துவது ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கின்றன. அவற்றில் இவையும் இடம்பெறுகின்றன:

*கட்டலான் முதல்வர் கார்லஸ் புய்க்டெமொன்ட் மற்றும் அத்தனை கட்டலான் பிராந்திய அமைச்சர்களையும் அகற்றி விட்டு, அந்த இடத்தில் “இந்த நோக்கத்திற்காக [ஸ்பானிய] அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட சிறப்புக் குழுக்கள் அல்லது அதிகாரிகளை” வைப்பது.

* பிராந்தியத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கின்ற அவர்களது அதிகாரத்தை ஸ்பானிய அரசாங்கத்திற்கு மாற்றுவது.

* கட்டலான் பிராந்திய போலிசான Mossos d'Esquadra ஐ கட்டுப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் போலிஸ் அல்லது சிவில் கார்ட் பிரிவுகளை நிலைநிறுத்துவதற்கும் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்குமான முழு அதிகாரங்களை மாட்ரிட்டுக்கு வழங்குவது.

* கட்டலோனியாவின் “பொருளாதார, நிதி, வரி, மற்றும் வரவு-செலவு” அதிகாரங்களது கட்டுப்பாட்டை ஸ்பானியக் கருவூலத்திற்கு ஒதுக்குவது.

*கட்டலோனியாவில் மாட்ரிட்டினால் அமைக்கப்படுகின்ற அதிகாரங்களின் மேற்பார்வையில் இருக்கும் ஒரு அரசாங்கத்தை அல்லது நடவடிக்கையை நியமிப்பதற்கு கட்டலான் சட்டமன்றத்திற்கு அதிகாரமில்லாமல் செய்வது.

*கட்டலான் அரசு ஊடகங்களின் கட்டுப்பாட்டை மாட்ரிட்டுக்கு மாற்றுவது, “ஸ்பானிய அரசியல்சட்டத்தில் இருக்கின்ற விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு மரியாதையளிப்பதை” உத்தரவாதம் செய்கின்ற வகையில் அது அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

இந்த நடவடிக்கைகள் இந்த வார இறுதியில் ஸ்பானிய செனட்டினால் ஒப்புதலளிக்கப்பட இருக்கின்றன. அங்கு ரஹோயின் வலது-சாரி மக்கள் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளது.

கட்டலான் தன்னாட்சியை இடைநீக்கம் செய்வதற்கு மாட்ரிட் எடுத்த நடவடிக்கையானது, மேற்கு ஐரோப்பாவில் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் ஒரு வரலாற்று உருக்குலைவை கண்டதைக் குறிக்கிறது. 40 வருடங்களுக்கு முன்பாக இதேதினத்தில் தான் கட்டலான் தேசியவாத அரசியல்வாதியான Josep Taradellas, ஸ்பானிய உள்நாட்டுப் போரின் போது பிரான்சிஸ்கோ பிராங்கோவினால் அமர்த்தப்பட்ட பாசிச ஆட்சியானது தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்களுக்கு மத்தியில் நிலைகுலைந்த நிலையில், கட்டலான் அரசாங்கத்திற்கு தலைமை கொடுப்பதற்காக அவர் நாடுகடந்து வாழ்ந்த பிரான்சில் இருந்து பார்சிலோனாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். மொழி உரிமைகள் வழங்குவது மற்றும் கட்டலோனியாவுக்கு தன்னாட்சி வழங்குவது ஆகிய இரண்டும், கட்டலான் மொழியை அரசு உபயோகத்திற்குப் பயன்படுத்துவதைத் தடைசெய்திருந்த பிராங்கோவின் பாசிச மரபை வெல்வதற்கான முக்கியமான அம்சமாகப் பார்க்கப்பட்டது.

சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் விடயத்தில், பிராங்கோவுக்கு பிந்தைய காலகட்டத்தில் விட்டுக்கொடுக்கப்பட்டதை மறுதலிப்பதற்கு இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் துணையுடன் மாட்ரிட் நகர்ந்து கொண்டிருக்கிறது. புரூசெல்ஸில் சென்ற வாரத்தில், பிரிவு 155 ஐ கொண்டுவருவதற்கு ரஹோய் சூளுரைத்திருந்ததன் பின்னர், நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்கெல், பிரிட்டிஷ் பிரதமரான தெரசா மே மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உள்ளிட்ட அனைவருமே கட்டலோனியாவுக்கு எதிரான ரஹோயின் தாக்குதலை வெளிப்படையாக வழிமொழிந்தனர். 

சிவில் கார்ட் போலிஸ் மட்டுமல்லாது, Arapiles இன் வாகனமய இராணுவ காலாட்பிரிவு உள்ளிட்ட ஸ்பெயினின் இராணுவ அலகுகளும் கூட, நடவடிக்கைகளுக்காக தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  

புரட்சிகரத் தாக்கங்களுடனான ஒரு வெடிப்பான மோதல் களமிறக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 1 கருத்துவாக்கெடுப்பானது கட்டலான் சுதந்திரத்திற்கு ஆதரவாக 90 சதவீத வாக்களிப்பை அதாவது 2 மில்லியனுக்கும் அதிகமானோரின் வாக்களிப்பை பெற்றதன் பின்னர், ஒரு தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகாரத்தை மாட்ரிட் திணிப்பதானது பாரிய எதிர்ப்பை தூண்டும். கட்டலோனியாவின் சென்ற பிராந்தியத் தேர்தலில் வெறும் 8 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற PPக்கு அங்கு எந்த ஆதரவோ அல்லது வாக்கு வங்கியோ கிடையாது.

மாட்ரிட் அதிகாரத்தைப் பறிப்பதானது கட்டவிழ்த்து விடக் கூடிய ஆழமான வேர் கொண்ட எதிர்ப்பு குறித்து பார்சிலோனாவில் La Vanguardia எச்சரித்தது. கட்டலான் மக்களில், “பிரிவினைவாதிகளாக இல்லாத அதேசமயத்தில், 1977 இல் பெற்ற தன்னாட்சி உருக்குலையப் போவதைக் கொண்டு பெரும் கண்ணீர் வடிக்கப் போகும் பலர் இருக்கிறார்கள்” என்று அது எழுதியது. அது தொடர்ந்தது: “லிபீரியன் தீபகற்பத்து அரசியல் நுட்பமான வித்தியாசத்தை அனுமதிப்பதில்லை. கட்டலோனியா தண்டிக்கப்பட்டாக வேண்டும் என்பதுதான் அந்த மண்ணில் எழுதப்பட்டிருக்கும் செய்தியாக இருக்கிறது.”

சனிக்கிழமையன்று, சான்சேஸ் மற்றும் குவிக்ஸார்ட் சிறையிலடைக்கப்பட்டதற்கு எதிராக 450,000 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கட்டலோனியா எங்கிலும் இருந்து பார்சிலோனாவுக்கு பயணம் செய்தவர்களால் பேருந்துகளும் தொடர்வண்டிகளும் நிரம்பி வழிந்தன. புய்க்டெமொன்ட் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார், அதைப் போலவே கட்டலானின் முக்கிய அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளும் கலந்து கொண்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களின் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்த சிவில் கார்ட் போலிஸ் ஹெலிகாப்டர்களைப் பார்த்து விசிலடித்தனர், பரிகசித்தனர், “No pasarán” (“அது நடக்காது”) என்ற 1936-1939 ஸ்பானிய உள்நாட்டுப் போரின் பிராங்கோ-எதிர்ப்பு முழக்கத்தை அவர்கள் முழங்கினர்.

கட்டலான் அரசுத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் அவர்களுக்கு மாட்ரிட்டின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய எண்ணமில்லை என்பதைத் தெளிவாக்கிக் கொண்டிருக்கின்றனர். பிரிவு 155 ஐ “கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், தகவல் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீதும் தொழிலாளர்களின் தொழில்நேர்மை மீதுமான ஒரு நேரடியான, பயனற்ற மற்றும் ஆணவமான தாக்குதல்” என்று கண்டனம் செய்கின்ற ஒரு அறிக்கையை TV3 தொழிலாளர்கள் விடுத்தனர். “2015 செப்டம்பர் 27 அன்று ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட” கட்டலான் சட்டமன்றத்திற்கே தாங்கள் தொடர்ந்தும் விசுவாசமாக இருக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

கட்டலோனிய வானொலியின் தொழிற்கமிட்டி “பொது ஊடகம் இல்லாமல் ஜனநாயகம் இல்லை” என்று தலைப்பிட்ட ஒரு அறிக்கையை விடுத்தது. அந்த அறிக்கை PP ஐ மீறுவதற்கு சூளுரைத்தது. மத்திய அரசாங்கம் வானொலி நிலையத்துக்கு ஒரு புதிய இயக்குநரை தெரிவு செய்யுமானால், “அந்த அதிகாரத்தை அங்கீகரிக்க மறுப்பதைத் தவிர எங்களுக்கு வேறேதும் வழி இருக்கப் போவதில்லை” என்று அது எச்சரித்தது.

கட்டலோனியாவில் இன்னும் இரத்தக்களரியானதொரு ஒடுக்குமுறைக்கான மாட்ரிட்டின் திட்டங்களை எதிர்ப்பது ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான தொழிலாளர்களுக்கு இன்றியமையாததாகும். கட்டலோனியாவின் தொழிலாளர்கள் மற்றும் வெகுஜனங்களுக்கு எதிராக ரஹோயினாலும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்ற தாக்குதலின் அரசியல் இலக்கு முன்னெப்போதினும் தெளிவாய் இருக்கிறது: ஒரு ஒட்டுமொத்த மாநிலத்தின் மீதுமான போலிஸ்-இராணுவ சர்வாதிகாரத்தின் உதாரணத்தைக் கொண்டு தொழிலாளர்களை அச்சுறுத்தி வைப்பதன் மூலம், நெருக்கடி-பின்னியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஸ்திரப்படுத்துவது என்பதே அது.

கட்டலோனியா மீதான தாக்குதல் 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் உலகெங்கிலும் தொடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதல்களின் வர்க்க உள்ளடக்கத்தை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

போலிஸ் பிரிவுகள், மின்னணு வேவு நடவடிக்கைகள் மற்றும் பிரான்சின் அவசரகாலநிலை போன்ற உள்நாட்டு இராணுவ நிலைநிறுத்தங்கள் ஆகியவற்றின் பாரிய பெருக்கத்தை ”பயங்கரவாதத்தின் மீதான போர்” என்று சொல்லி நியாயப்படுத்துவதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகள் செய்த முயற்சிகள் ஒரு அரசியல் மோசடியாகும். அவற்றின் பிரதான இலக்காக அல்கெய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமியவாதிகள் இருக்கவில்லை, ஏனென்றால் அவர்களில் பலருக்கும் சிரியாவிலும் மற்ற இடங்களிலும் ஆட்சிமாற்றத்திற்கான போர்களில் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டாளிகளிடம் இருந்தும் அமெரிக்காவிடம் இருந்தும் தான் நிதியாதாரம் கிட்டியது. கட்டலோனியாவிலும் அமைதியான அரசியல் எதிர்ப்பின் மீது மாட்ரிட் இத்தகைய பலப்பிரயோகம் செய்வதை ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் அனைத்தும் ஆதரிக்கின்றன என்றால் அதன்காரணம் அவையும் இதையே செய்யத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன என்பதால் தான்.

கட்டலான் சுதந்திரத்திற்கான கருத்துவாக்கெடுப்புக்கு இராணுவ ஆட்சி மட்டுமே சாத்தியமான ஒரே பதிலிறுப்பாக உள்ளதாக மாட்ரிட், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்படையான ஆதரவுடன், கூறுவது ஏகாதிபத்திய இரட்டைவேடத்தில் தோய்ந்ததாகும். கிரேட் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான கருத்துவாக்கெடுப்பை ஸ்காட்லாந்து 2014 இல் நடத்தியது, கனடாவில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான கருத்துவாக்கெடுப்புகளை கியூபெக் 1980 மற்றும் 1995 இல் நடத்தியது. அப்போதெல்லாம் அமைதியான வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் இந்த பகுதிகள் பிரிந்து செல்லும் நடவடிக்கைகளில் இறங்காமல் தடுப்பதற்கும் லண்டனோ ஒட்டாவாவோ பத்தாயிரக்கணக்கான துணைஇராணுவப் போலிஸ் மற்றும் இராணுவ அலகுகளை அனுப்பி வைக்கவில்லை. 

நேரெதிராய், நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் பிரிவினைவாத இயக்கங்களைப் பாதுகாப்பது என்னும் தங்களது புனிதமான கடமையை மறுபடியும் மறுபடியும் முன்நிறுத்தி -1999 இல் கொசாவோவில் 2011 இல் லிபியாவின் பெங்காசியில்- அவை கைப்பற்ற இலக்கு கொண்டிருந்த யூகோஸ்லாவியா, லிபியா போன்ற நாடுகளைத் தாக்குவதற்கு நியாயம் கற்பித்தன.

அக்டோபர் 1 அன்று சிவில் கார்ட் போலிஸ் செய்ததைப் போல, லிபியாவின் பாதுகாப்புப் படைகள் அமைதியான வாக்காளர்கள் மீது தாக்குவதும் வயதுமுதிர்ந்த பெண்களை அடிப்பதுமான காணொளிகள் 2011 இல் வெளியாகியிருக்குமாயின், அப்போது பசுமைக் கட்சியின் டானியல் கோன்-பென்டிட் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் ஒலிவியே பெசென்செனோ போன்ற “மனிதாபிமான” ஏகாதிபத்தியத்தின் வக்காலத்துவாதிகள் என்னமாதிரியான எதிர்வினையாற்றியிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்வதற்கு கற்பனைத்திறன் அதிகமாய் அவசியப்படாது. ”தனது சொந்த மக்களை” தாக்குவதற்காக லிபியத் தலைவர் கேர்னல் மும்மார் கடாபியைக் கண்டனம் செய்து, லிபியா மீது குண்டுவீசுவதற்கும் கடாபியைப் படுகொலை செய்வதற்குமான காலஅட்டவணையை நேட்டோ துரிதப்படுத்துவதற்குக் கோரியிருப்பார்கள்.

ஆனால் கோன்-பென்டிட் இப்போது மாட்ரிட்டை குண்டுவீசவோ ரஹோயைக் கொல்லவோ அழைக்கவில்லை. பாரிஸ், கட்டலோனியா மீது ஒரு நவ-பிராங்கோவாத தாக்குதலைத் தொடுப்பதற்கு ரஹோய்க்கு பச்சைக்கொடி காட்டிக் கொண்டே, பிரான்சின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மறைப்பின் கீழ் ஒரு மேலதிக போலிஸ்-அரசின் பெருக்கத்திற்குத் தயாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் மக்ரோனுடனான நட்புணர்வு சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.