ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spain imposes military rule in Catalonia to preempt independence bid

சுதந்திர முயற்சியை முந்திக்கொண்டு கட்டலோனியாவில் ஸ்பெயின் இராணுவ ஆட்சியைத் திணிக்கிறது

By Alex Lantier and Alejandro López
28 October 2017

கட்டலோனியாவில் சட்டமன்ற ஆட்சியை நிறுத்தி வைக்கின்ற ஸ்பானிய அரசியல்சட்டத்தின் பிரிவு 155 ஐ அமல்படுத்துவதற்கு ஸ்பானிய செனட் 214-47 என்ற விகிதத்தில் உத்தியோகபூர்வமாக வாக்களித்தது. கட்டலான் பிராந்திய அரசாங்கத்தை இடைநீக்கம் செய்வதற்கும், ரஹோயின் அக்டோபர் 21 உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டவாறான தண்டிப்பு நடவடிக்கைகளை அவர் முன்னெடுப்பதற்கும், மாட்ரிட்டுக்கு மட்டுமே பதிலளிக்கும் கடமை கொண்டதான ஒரு தேர்ந்தெடுக்கப்படாத கட்டலான் அரசாங்கத்தை திணிப்பதற்குமான முழு அதிகாரங்களை இது ஸ்பானிய பிரதமர் மரியானோ ரஹோய்க்கு கையளித்தது.

ரஹோயின் வலது-சாரி மக்கள் கட்சி (PP) அறுதிப் பெரும்பான்மை கொண்டிருக்கும் செனட்டில் பிரிவு 155 குறித்து விவாதிக்கப்பட்ட அதேவேளையில், இந்த விவாதத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை முன்கணித்திருந்த கட்டலான் சட்டமன்றம் சுதந்திரத்தை அறிவிப்பதற்கு வாக்களித்தது. புதிதாக-அறிவிக்கப்பட்ட குடியரசை பாதுகாப்பதற்கு அழைப்புகள் விடுக்கப்பட்டதன் மத்தியில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளியன்று இரவு பார்சிலோனாவில் உள்ள கட்டலான் அரசாங்கக் கட்டிடங்களை சூழ்ந்து கொண்டனர்.

நேற்றைய நிகழ்வுகள் மேற்கு ஐரோப்பாவில் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் ஒரு வரலாற்றுப் பெரும் உருக்குலைவு கண்டதையும் நீண்டகால தாக்கங்களுடன் எதேச்சாதிகாரத்திற்கு திரும்புவதையும் குறித்து நிற்கின்றன. 39 வருடங்களுக்கு முன்பாக, ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோவினால் ஸ்தாபிக்கப்பட்ட 1939-1978 பாசிச ஆட்சியில் இருந்தான உருமாற்றம் என்று சொல்லப்பட்டதில் உருவாக்கப்பட்டிருந்த ஸ்பானிய அரசியல் அமைப்பு சுக்குநூறாகியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் முழுமையான ஆதரவுடன், மாட்ரிட், 7 மில்லியன் கட்டலான் மக்களை போலிஸ் மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் ஒருதரப்பான உத்தரவுகளின் மூலமாகக் காவல் செய்வதற்கு நோக்கம் கொண்டுள்ளது, அத்துடன் தேசிய அளவிலான ஒரு அவசரகாலநிலையைத் திணிப்பதற்காக பிரிவு 116 ஐக் கொண்டுவருவதைக் கையிருப்பில் தயாராய் கொண்டுள்ளது.

கட்டலோனியாவில் ஒடுக்குமுறைக்கு தீர்மானகரமான அரசியல் எதிர்ப்பை வெளிப்படுத்துவது தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை நலன்களைப் பாதுகாப்பதற்கு அவசியமானதாகும். கட்டலோனியாவிலும் மற்றும் ஸ்பெயின் எங்கிலுமான தொழிலாளர்களின் மீது ஐரோப்பிய நிதிப் பிரபுத்துவத்தின் உத்தரவுகளைத் திணிப்பதற்கு மாட்ரிட் நடவடிக்கை எடுக்கின்ற நிலையில், ஒரு இரத்த ஆற்றின் அபாயம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரிவு 155 ஐ அமல்படுத்துவதற்கு ஐரோப்பிய சக்திகளது ஆதரவை ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைவரான டொனால்ட் டஸ்க் நேற்று மீண்டும் வலியுறுத்தம் செய்தார், அவர் ட்விட்டரில் எழுதினார்: “ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரை எந்த மாற்றமுமில்லை. ஸ்பெயின் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உரியதாகும்”. மாட்ரிட் “வாதத்தின் வலிமையைப் பயன்படுத்தும், அல்லாமல் வலிமையின் வாதத்தை அல்ல” என்று தான் நம்புவதாகவும் டஸ்க் சிடுமூஞ்சித்தனத்துடன் சேர்த்துக் கொண்டார்.

பிரிவு 155 ஐ ஏற்றுக் கொள்வதற்கு செனட்டை வலியுறுத்துகின்ற தனது உரையில், ரஹோய் “வேறு எந்த மாற்றும் இல்லை” என்று அறிவித்தார். அவர் தொடர்ந்து கூறினார்: “சட்டத்தை அமலாக்குவதற்கான சட்டத்தை பயன்படுத்துவது மட்டுமே இத்தகையதொரு நிலையில் செய்யக் கூடிய மற்றும் செய்யப்பட்டாக வேண்டிய ஒரேயொரு விடயமாகும்”. தனது அரசாங்கத்திற்கு நான்கு இலக்குகள் இருப்பதாக அவர் கூறினார்: கட்டலோனியாவில் ”சட்டபூர்வநிலைக்கு மீண்டும் திரும்புவது”, “மக்களின் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுப்பது”, “சமீப காலத்தின் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்க மட்டங்களைத் தொடர்ந்து பராமரிப்பது”, மற்றும் “ஸ்தாபன இயல்பு மீண்ட ஒரு சூழ்நிலையில் தேர்தலுக்கு ஏற்பாடு செய்வது”.

“கட்டலான் மக்களை நாம் காப்பாற்ற வேண்டியது, அவர்கள் கூறுவதைப் போல, ஸ்பானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து அல்ல, மாறாக ஏதோ கட்டலோனியாவே தமக்குத் தான் சொந்தம் என்பதைப் போல சகிக்கமுடியாத ஒரு விதத்தில் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு சிறுபான்மையான கூட்டத்திடம் இருந்து தான்” என்று ரஹோய் அறிவித்தார்.

கட்டலோனியாவில் சர்வாதிகாரத்திற்காக ரஹோய் வழங்கிய விவரிப்பு பொய்களின் ஒரு தொகுப்பாக இருக்கிறது. ஸ்பானிய ஊடகங்களில் சில வாரங்களுக்கு முன்பு வரை “அணுத் தெரிவு” என்று பரவலாக விவரிக்கப்பட்டு வந்த பிரிவு 155 ஐ அமல்படுத்துவதைத் தவிர வேறு எந்த மாற்றும் இல்லை என்று அவர் கூறுவது அபத்தமானது. பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான கருத்துவாக்கெடுப்பை 2014 இல் ஸ்காட்லாந்து நடத்தியது, 1980 மற்றும் 1995 இல் கனடாவில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான கருத்துவாக்கெடுப்பை கியூபெக் நடத்தியது. ஆனால் அக்டோபர் 1 கட்டலான் சுதந்திரக் கருத்துவாக்கெடுப்பு தினத்தன்று ரஹோய் செய்ததைப் போல, லண்டனோ அல்லது ஒட்டாவாவோ அமைதியான வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பத்தாயிரக்கணக்கான துணைஇராணுவப் போலிசை அனுப்பி வைக்கவில்லை. அல்லது பிரிவினை நோக்கிய நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டான பலவந்தமான நடவடிக்கைகள் எதனையும் அவை எடுக்கவில்லை.  

இந்த நெருக்கடிக்கான முழுப் பொறுப்பும் மாட்ரிட்டுக்கே உரியதாகும், அது அக்டோபர் 1 அன்று கொடூரமான ஒடுக்குமுறையில் இறங்கியதோடு, அதன்பின் மோதலை எரியூட்டுவதற்கு தொடர்ச்சியாக முனைந்து வந்திருக்கிறது. அக்டோபர் 19 அன்று, கட்டலான் முதல்வரான கார்லஸ் புய்க்டெமொன்ட் சுதந்திரத்தை நோக்கிய நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்ததோடு பேச்சுவார்த்தைக்கு மாட்ரிட்டிடம் விண்ணப்பம் செய்தார். இந்த விண்ணப்பத்தை ஒருதரப்பாக நிராகரித்தமை, கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகளான ஜோர்டி சான்சேஸ் மற்றும் ஜோர்டி குவிக்ஸார்ட் ஆகியோரை எதேச்சாதிகாரமாக சிறையிலடைத்தமை, மற்றும் பிரிவு 155 ஐ கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலமாக, மாட்ரிட், பாரிசிலோனாவில் இருக்கும் கட்டலான் தேசியவாதிகளை சுதந்திர அறிவிப்பின் பாதையில் பலவந்தமாகத் தள்ளியது.

”சட்டநிலை”, “தேர்தல்” மற்றும் “ஸ்தாபன இயல்பு” ஆகியவற்றுக்கு ரஹோய் விடுக்கும் அழைப்புகள், சர்வாதிகாரத்தை நோக்கிய செலுத்தத்தை ஜனநாயக மற்றும் அரசியல்சட்ட ஆட்சியின் பாதுகாப்பிற்கு என்பதாக சித்தரிக்கின்ற சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சியாகும். அரசு பயங்கரம் மற்றும் ஒடுக்குமுறையின் மூலமாகத் தான் தனது திட்டநிரலை திணிக்க முடியும் என்பதை மாட்ரிட் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அக்டோபர் 21 அன்று ரஹோய் வழங்கிய உரையின் படி, கட்டலானின் வரவு-செலவு, அரசாங்கம், கல்வியமைப்பு, போலிஸ் படை மற்றும் பொது ஊடகங்கள் அனைத்தின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றுவதற்கு அவர் நோக்கம் கொண்டிருக்கிறார்.

இந்த நடவடிக்கைகள் மில்லியன் கணக்கான மக்களிடையே ஆழமான எதிர்ப்பைத் தூண்டும் என்ற நிலையில், அதனைப் பலவந்தமாக ஒடுக்குவதற்கு மாட்ரிட் தயாரித்துக் கொண்டிருக்கிறது. துணை இராணுவ சிவில் பாதுகாப்பு போலிஸ், அராபைல்ஸ் வாகனமய காலாட்படை பிரிவு மற்றும் அண்டைப் பிராந்தியங்களில் இருக்கக் கூடிய மற்ற இராணுவ பிரிவுகள் அனைத்தும் கட்டலோனியாவில் தலையீடு செய்வதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கீழ்ப்படிய மறுப்பதற்கான அழைப்புகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், கட்டலான் பொதுத்துறை தொழிலாளர்களை பாரிய எண்ணிக்கையில் “துரிதகதியில்” வேலையில் இருந்து அகற்றுவதற்கு மாட்ரிட் தயாரித்துக் கொண்டிருக்கிறது. ”ஒழுங்குநடவடிக்கைகளின் விடயத்தில் முந்தைய பொறிமுறைகளுக்கு திரும்பமுடியா வண்ணம்” தொழிலாளர்களை ஒழுங்குக்கு கொண்டுவருவதற்கு மாட்ரிட்டை அனுமதிக்கும் நடவடிக்கைகளுக்கு நேற்று ஸ்பானிய செனட் ஒப்புதல் அளித்தது.

செனட் வாக்களிப்பு குறித்து விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட தனது அமைச்சரவை கேபினட்டின் கூட்டத்திற்குப் பின்னர், வெள்ளிக்கிழமை இரவு ஒரு செய்தியாளர் சந்திப்பில், ரஹோய், கட்டலான் அரசாங்கம் இடைநீக்கம் செய்யப்படுவதையும் டிசம்பர் 21 அன்று தேர்தல் நடத்தப்பட இருப்பதாகவும் அறிவித்தார். இப்போதைய கட்டலான் அரசாங்கத்தின் மற்றும் சட்டமன்றத்தின் அங்கத்தவர்களுக்கு எதிராக, 30 ஆண்டுகள் வரை சிறையில் தள்ளி தண்டிக்கத்தக்க ஒரு குற்றமான, “கலக”க் குற்றச்சாட்டுகளை முன்னெடுக்க இருப்பதையும் மாட்ரிட் ஊர்ஜிதம் செய்தது.

இந்த அறிவிப்புகள் மாட்ரிட் கட்டலோனியாவில் தேர்தலை ஏற்பாடு செய்யும் என்பதான ரஹோயின் கூற்றை ஒரு ஆர்வெல்லிய மோசடியாக அம்பலப்படுத்துகின்றன. ரஹோயின் திட்டங்கள் நடக்குமானால், இந்த தேர்தல் நடத்தப்படும்போது, PPக்கான கட்டலான் அரசியல் எதிர்ப்பாளர்களில் அநேகம் பேர் சிறையிலிருப்பார்கள். மேலும், டிசம்பர் 21 அன்று யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் சட்டமியற்றுவதற்கு அல்லது ஒரு பிராந்திய அரசாங்கம் என்று கூறிக் கொள்வதற்கான அத்தனை அதிகாரங்களும் அகற்றப்பட்டதொரு சட்டமன்றத்தில் தான் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். மாட்ரிட் தனக்கு இஷ்டமானதைத் திணிப்பதை இந்த சட்டமன்றம் கையாலாகத வகையில் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும்.   

தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து திணித்தாக வேண்டும் என்பதே மாட்ரிட் மற்றும் புதிய கட்டலான் அரசாங்கத்தின் முக்கியக் கவலையாக இருக்கும். பொதுச் செலவின பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.2 சதவீதமாகக் குறைக்கும் இலக்கை எட்டுவதற்கு ஸ்பானிய பொதுச் செலவினங்களில் மேலதிக வெட்டுகளைக் கோரி நேற்று ஐரோப்பிய ஒன்றியம் மாட்ரிட்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. “நிதிநிலை ஸ்திரத்தன்மை இலக்குகளை பூர்த்தி செய்வதை உத்தரவாதம் செய்வதற்கு அவசியமான அத்தனை நடவடிக்கைகளையும்” எடுப்போம் என்கிற ஒரு வாசகம் அடங்கியிருந்த ஒரு பதிலை பொருளாதார அமைச்சரான லூயிஸ் டி கிண்டோஸ் மற்றும் கருவூல அமைச்சரான கிறிஸ்டோபால் மொண்டாரோ அளித்தனர்.

ஸ்பெயினில் எதேச்சாதிகார ஆட்சியை நோக்கிய திருப்பம் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு அவசர எச்சரிக்கை ஆகும். பல தசாப்த கால சிக்கன நடவடிக்கைகள், ஏகாதிபத்தியப் போர் மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்கும், இன்னும் குறிப்பாக 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கும் பின்னர் ஐரோப்பாவெங்கிலும் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டமையானது முதலாளித்துவ ஆட்சியின் ஒரு மரணகரமான நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. ஐரோப்பாவெங்கிலும் பத்துமில்லியன்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பற்று இருக்கும் நிலையில், வெடிப்பான சமூகக் கோபம் குறித்து ஆளும் வர்க்கம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது. சர்வாதிகார நடவடிக்கைகளில் துரிதமாய் இறங்குவது தான் எதிர்ப்புக்கு முகம்கொடுக்கையில் அதன் பதிலிறுப்பாக இருக்கிறது.

மீண்டும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதற்கு எதிரான ஒரு போராட்டத்தில் கட்டலோனியாவில், ஸ்பெயினில் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அணிதிரட்டப்படுவது தான் இன்று முன்நிற்கிற இன்றியமையாத பிரச்சினை ஆகும். ஸ்பானிய பிராந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கான அழைப்புகளின் அடிப்படையில் சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு திருப்பத்தையும் மக்களை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்குவதையும் நியாயப்படுத்துவதற்கு செய்யப்படுகின்ற அத்தனை முயற்சிகளையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான, சோசலிசத்துக்கு ஆதரவான ஒரு புரட்சிகரமான மற்றும் சர்வதேசியப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது மட்டுமே லைபீரியத் தீபகற்பத்திலும் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் ஐக்கியத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரே முற்போக்கான வழியாகும்.

தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டமானது, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் “இடது” என்பதாகக் கூறிக் கொள்ளும் முதலாளித்துவக் கட்சிகளிடம் இருந்து முழுமையாக சுயாதீனப்பட்டதாகவும் அவற்றுக்கு எதிரானதாகவும் இருக்கின்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும். CCOO தொழிற்சங்கம் மற்றும் ஸ்பெயினின் பொடேமோஸ் கட்சி போன்ற சக்திகள் சர்வாதிகாரத்தை நோக்கிய ரஹோயின் செலுத்தத்தின் பின்னால் அணிவகுத்து நின்று கொண்டிருக்கின்றன.

பொடேமோஸ் பொதுச் செயலரான பப்லோ இக்லெஸியாஸ், கட்டலான் தேர்தலுக்கான ரஹோயின் அழைப்பை, இந்தத் தேர்தல் “ஒடுக்குமுறை இன்றி” நடத்தப்பட வேண்டும் என்று மட்டும் கூறி, ஓசையின்றி ஆதரித்து செனட் வாக்களிப்புக்கு பதிலிறுத்தார். மாட்ரிட் அதன் ஒடுக்குமுறைக்கு தயாரிப்பு செய்கின்ற நிலையில் ஒரு நடுநிலையை கையிலெடுத்த அவர் கூறினார், “ஒருதரப்பான நிலையையும் (கட்டலான் சுதந்திர அறிவிப்பு) ஆதரிக்காமல், வன்முறை அல்லது ஒடுக்குமுறைக்கும் ஆதரவளிக்காமல் இருக்கின்ற ஸ்பெயின் மக்களின் அமைதியான ஒரு  பெரும்பான்மை அங்கே இருப்பதாகவே நான் நம்புகிறேன்.”

மாட்ரிட்டை எதிர்த்துமீறும் தொழிலாளர்களது எந்தவொரு நடவடிக்கையையும் தனது சங்கம் ஊக்குவிக்காது என்று CCOO நிர்வாகியான ஃபெர்னாண்டோ லெஸ்கானோ வலியுறுத்தினார். அவர் எச்சரித்தார், “குடிமக்களின் கீழ்ப்படியமறுப்புக்கோ அல்லது பொதுத் துறை தொழிலாளர்கள் தண்டனைக்குரிய நடவடிக்கைகளில் இறங்குவதற்கோ இட்டுச்செல்லத்தக்க ஒரேயொரு வழிகாட்டலையும் நாங்கள் வழங்கமாட்டோம்.”