ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Leader of Barcelona terror attack was Spanish intelligence informant

பார்சிலோனா பயங்கரவாத தாக்குதல் தலைவர் ஸ்பானிய உளவுத்துறை உளவாளி ஆவார்

By Alex Lantier
20 November 2017

பார்சிலோனாவில் ஆகஸ்ட் 17 இஸ்லாமிக் அரசு பயங்கரவாத தாக்குதல்களின் பின்மூளையாக செயல்பட்ட அப்தெல்பாகி எஸ்-சாட்டி (Abdelbaki es-Satty) ஒரு பொலிஸ் உளவாளி என்பதை ஸ்பானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

மார்ச் 11, 2004 மாட்ரிட் இரயில் குண்டுவெடிப்புகளை நடத்திய அல் கொய்தா நடவடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்தவரும், குற்ற தண்டனைக்கு உள்ளான ஒரு போதைப்பொருள் வினியோகஸ்தருமான சாட்டி, அத்தாக்குதலுக்கு சற்று முன்னர் வரையில், உளவுத் தகவல்கள் வழங்கி வந்ததாகவும், அதற்காக ஸ்பானிய உளவுத்துறையிடம் இருந்து பணம் பெற்று வந்ததாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இவர், 16 பேர் கொல்லப்பட்டு 162 பேர் காயமடைந்த பார்சிலோனா தாக்குதலை நடத்திய இளைஞரின், அரசியல் அல்லது மதவாத தலைவர் என்றும், அல்கனாரில் ஒரு வீட்டில் தயாரிக்கப்பட்டு வந்த பெரும் எண்ணிக்கையிலான நாட்டு-வெடிகுண்டுகள் தற்செயலாக வெடித்ததில், சாட்டி அவரே கூட தாக்குதல்களுக்கு முன்னதாக உயிரிழந்தார் என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த குறிப்பிடத்தக்க செய்திகள், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" தொடுக்க ஜனநாயக உரிமைகள் மீதான ஆழ்ந்த தாக்குதல்கள் அவசியப்படுவதாக வலியுறுத்தும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்க வலியுறுத்தலின் முற்றிலும் வஞ்சகமான குணாம்சத்தை எடுத்துக்காட்டுகின்றன. சார்லி ஹெப்டோ தாக்குதல் மற்றும் 2015 இல் பாரீசில் நடந்த நவம்பர் 13 தாக்குதல்கள், பேர்லின் கிறிஸ்துமஸ் தாக்குதல் மற்றும் மே 22 மான்செஸ்டர் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவற்றை போலவே, பார்சிலோனாவிலும், பயங்கரவாதிகள் சட்ட அமுலாக்க பிரிவுக்கு நன்கறியப்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் உளவுத்துறை சேவைகளுக்கான கருவிகளாகவும், சிரியா மற்றும் ஈராக்கில் ஐரோப்பிய ஏகாதிபத்திய போர்களின் துணைச்சாதனங்களாகவும் சேவையாற்றியதுடன், உத்தியோகபூர்வ பாதுகாப்பின் கீழும் செயல்பட்டனர்.

ஒரு ஸ்பானிய உளவுத்துறை சொத்தாக, சாட்டி அம்பலமாகி இருப்பது, குறிப்பாக கட்டலோனியாவில் வெடிப்பார்ந்த நிலைமை நிலவுகின்ற நிலையில் முக்கியத்துவம் பெறுகிறது, அக்டோபர் 1 கட்டலான் சுதந்திர கருத்து வாக்கெடுப்புக்குப் பின்னர் அங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்திய அரசாங்கத்தை மாட்ரிட் இடைநீக்கம் செய்து, நேரடியாக பொலிஸ் ஆட்சியை திணித்தது. இந்த செய்திகள் எல்லாம், அக்கருத்து வாக்கெடுப்புக்கு முன்னதாக தீவிரமடைந்த கடும் மோதல்களிலிருந்து அரசியல் ஆதாயங்களை பெறுவதற்காக, மாட்ரிட்டிலோ அல்லது பார்சிலோனாவிலோ தாக்குதல் நடத்துவதற்கு இந்த சக்திகள் அனுமதிக்கப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்புகின்றன.

நவம்பர் 16 அன்று, வலதுசாரி வெகுஜனவாத வலைத் தளம் OkDiario தான் முதன்முதலில், ரைபோல் நகரில் ஒரு இமாம் ஆக சேவையாற்றிய சாட்டி, ஸ்பெயினின் தேசிய உளவுத்துறை மையத்தின் (CNI) ஒரு உளவாளியாவார் என்பதை அறிவித்தது. “இரகசிய சேவைகளுக்கு உளவுத் தகவல்கள் வழங்கிய அதேநேரத்தில், அவர் இப்பணிக்காக சிறப்பு நிதியாரங்களைப் பெற்றார், கட்டலோனிய பயங்கரவாத வரலாற்றில் இரண்டாவது மிக இரத்தத்தோய்ந்த தாக்குதலை நடத்துவதற்காக, அந்த இமாம் பயங்கரவாத பிரிவுகளை ஏற்படுத்தி வந்தார்,” என்று எழுதிய OkDiario, விசாரணை செய்து வந்த ஸ்பானிய நீதித்துறை நீதியரசர்களின் வசமிருந்த ஆவணங்களையும் மேற்கோளிட்டு காட்டியது.

ஸ்பானிய அதிகாரிகள் இந்த அறிக்கையை மூடிமறைக்க பெரும்பிரயத்தனம் செய்ததாக OkDiario குறிப்பிட்டது. “இந்த இமாம் ஓர் உளவாளியாக இருந்தார் என்பது வெளியில் தெரிந்து விடக்கூடாது, பொதுமக்களின் கருத்துக்குச் செல்லக்கூடாது என்பது வாரக்கணக்கிலான அலைக்கழிப்புகளாக இருந்துள்ளன,” என்றது எழுதியது.

பார்சிலோனாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள கட்டலான் பிராந்திய பொலிஸ் Mossos d’Esquadra, சாட்டி உடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும் OkDiario குற்றஞ்சாட்டியது. “Mossos இன் ஓர் உளவாளி, பார்சிலோனா தாக்குதலுக்கு வெறும் இரண்டு மணி நேரங்களுக்கு முன்னர், அந்த படுகொலையை நடத்த இருந்தவருடன் அவரது பார்சிலோனா அலுவலகத்தில் இருந்து பேசி இருந்தார்,” என்று அவ் வலைத் தளம் குறிப்பிட்டது.

நவம்பர் 17 அன்று, சமூக-ஜனநாயக சார்பெடுக்கும் ஸ்பெயினின் பிரதான பத்திரிகை El País சுருக்கமான கட்டுரை ஒன்றை வெளியிட்டது, அதில் உளவுத்துறை அதிகாரிகள் OkDiario இன் பல அம்பலப்படுத்தல்களை உறுதிப்படுத்தினர். CNI இன் ஆதாரநபர்கள் El País க்கு கூறுகையில், போதைப் பொருள் கையாண்டதற்காக சாட்டி, 2010 இல் இருந்து 2014 வரையில், காஸ்டெல்லன் சிறைச்சாலையில் இருந்த போது, அவருடன் CNI “தொடர்புகளைப் பேணி வந்ததாக,” தெரிவித்தனர். இந்த உறவு, “குற்றவாளிகளைக் கையாள்வதற்காக" வழமையாக "ஸ்தாபிக்கப்பட்ட வழிமுறைகளுக்கு" ஏற்ப இருந்ததாகவும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் சாட்டி 2010-2014 க்கு முன்னரும், பின்னரும் கூட, பாதுகாப்பு சேவைகளுடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. El País தொடர்ந்து குறிப்பிடுகிறது, “இத்தாக்குதல்களைக் குறித்த விசாரணையிலிருந்து மேலெழும் புதிய ஆதாரங்கள், இவற்றை தேசிய நீதிமன்றம் இரகசியமாக வைத்து வருகின்ற நிலையில், சாட்டி ஏறக்குறைய 2002 இல் ஸ்பெயினுக்கு வந்ததிலிருந்தே பாதுகாப்பு படைகளின் பழைய அறிமுகமாக இருந்ததை எடுத்துக் காட்டுகின்றன. பயங்கரவாத-தடுப்பு முகமைகளின் ஆதாரநபர்களது தகவல்களின்படி, அவர் பெயர் ஏற்கனவே மார்ச் 11 தாக்குதல்களில் கைது செய்யப்பட்ட சிலரின் தொலைபேசி தொடர்பு பட்டியலில் காணப்பட்டது.”

விலனோவாவை மையமாக கொண்ட ஒரு பயங்கரவாத பிரிவின் அங்கத்தவராக சாட்டி 2006 இல் கைது செய்யப்பட்டார். ஆனால் உளவுத்துறை சேவைகளின் ஒரு "பழைய அறிமுகம்" என்ற அவர் அந்தஸ்து அவருக்கு உதவியதாக தெரிகிறது; அவர் விடுவிக்கப்பட்டு, அவர் மீதான வழக்கு கிடப்பில் போடப்பட்டது. ஆனால் பின்னர் மொரோக்கோவிலிருந்து அவரின் காரில் ஸ்பெயினுக்குள் 121 கிலோ போதைப்பொருள் (hashish) கொண்டு வர முயன்றதற்காக கைது செய்யப்பட்டு, 2010 இல் நான்காண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

2014 இல் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், அவர் புருசெல்ஸ் பகுதிக்கு பயணித்தார், அங்கேதான் 2015 பாரீஸ் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட பலர் தங்கியிருந்தனர். ஆனால் அவரது குற்றகரமான முன்வரலாறு காரணமாக அங்கே அவருக்கு இமாம் பதவி மறுக்கப்பட்டது, அவர் கட்டலோனியாவின் ரிபோலில் ஒரு வேலையை ஏற்க திரும்பி வந்தார். சாட்டிக்கும் Mossos க்கும் இடையிலான தொடர்புகள் குறித்த OkDiario இன் செய்தியை El País உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அது குறிப்பிடுகையில், அவர் "ஒரு குற்றகரமான முன்வரலாறை" கொண்டிருந்த நிலையில், "அதுவும் முக்கியமாக அதுபோன்றவொரு பதவியைப் பெற அவரை தகுதியிழக்க செய்கிறது" எனும் போதும், ரிபோலில் ஒரு இமாம் ஆக அவர் சேவையாற்றினார் என்பது வழமைக்கு முரணானது என்று எழுதியது.

இந்த செய்திகள் எல்லாம், தசாப்த காலமாக நேட்டோவின் குற்றகரமான வெளியுறவு கொள்கை எவ்வாறு தொடர்ந்து ஐரோப்பாவுக்கு உள்ளேயே உயிரிழப்புகளுக்கும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் ஒத்துழைத்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றன. 2010 சிரியப் போர் வெடிப்புக்கு பின்னர், அல் கொய்தா, இது ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான 1979-1989 சிஐஏ போரிலிருந்து உருவானது, மற்றும் இஸ்லாமிக் அரசு (IS), இதன் தோற்றுவாய் 1991 க்குப் பின்னர் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய போர்களில் தங்கியுள்ளது, இவை போன்ற வலையமைப்புகள் மத்திய கிழக்கில் தாக்குதல்களை நடத்த ஆயிரக் கணக்கான போராளிகளை அனுப்பின.

மார்ச் 22, 2016 புரூசெல்ஸ் குண்டுவெடிப்புக்குப் பின்னர் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) எழுதியது, “மார்ச் 22 குண்டுவெடிப்பை நடத்தியவர்களும், பாரீசில் நவம்பர் 13 மற்றும் சார்லி ஹெப்டோ தாக்குதல்களை நடத்தியவர்களும் மத்திய கிழக்குக்கு சுதந்திரமாக சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு பரந்த குழுவினரின் பாகமாக உள்ளனர் என்பது தெளிவாகிறது. இந்த சுலபமான கட்டுப்பாடற்ற வசதி வாய்ப்புகளை கொண்டு இந்த சக்திகள் தேசிய எல்லைகளைக் கடந்து வியாபித்து, நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பதிலிருந்து எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரே தீர்மானம் என்னவென்றால், அவர்கள் பயணிப்பதற்கு சுலபமான கட்டுப்பாடற்ற வசதி வாய்ப்புகள் வழிமுறைகளிலேயே உள்ளடக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதும், எந்தவொரு எச்சரிக்கை சமிக்ஞைகளும் விலக்கிவைக்கப்பட்டுள்ளன என்பதும், அவை உத்தியோகபூர்வ பாதுகாப்பின் மூடிமறைப்பின் கீழ் செயல்படுகின்றன என்பதே ஆகும்.”

சாட்டி குறித்த சமீபத்திய செய்திகள், ஐரோப்பாவில் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" அழுகிய அடித்தளங்களைக் குறித்த இந்த பகுப்பாய்வைத் தான் மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதப்படுத்துகின்றன. ஏகாதிபத்திய தலையீடுகள், முஸ்லீம்-விரோத வெறுப்புகளை ஊக்குவிப்பது, ஐரோப்பா எங்கிலும் பொலிஸ்-அரசு ஆட்சிக்கும் மற்றும் அவசரகால நெருக்கடி நிலைக்குமான உந்துதல் ஆகியவை அரசியல் பொய்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. பயங்கரவாத இஸ்லாமிஸ்டுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சமரசத்திற்கு இணங்காத, கண்டறியவியலாத எதிர்பார்ப்பாளர்கள் கிடையாது, மாறாக அவர்கள் சில வகையில் வழிவகுத்து கொடுக்கும் கருவிகளாக உள்ளனர்.

மத்திய கிழக்கில் நேட்டோ சக்திகள் தேர்ந்தெடுத்த இலக்குகளை விட்டுவிட்டு அவர்கள் அதற்கு பதிலாக ஐரோப்பாவில் தாக்குதலை மேற்கொள்ளும் போது, ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மிக சுலபமாக இதை இன்னும் அதிக பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கான ஒரு சாக்குபோக்காக பயன்படுத்துகின்றன. இந்த பொலிஸ்-அரசு நடவடிக்கைகள் பெரிதும் பயங்கரவாத இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக நோக்கம் கொண்டவை அல்ல, இவர்கள் அரசு எந்திரத்துடன் ஆழ்ந்த உறவுகளை வைத்துள்ளனர், மாறாக இவை சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் எழும் எதிர்ப்பைக் குறி வைத்துள்ளன.

இதுவரையில் சாட்டி குறித்து வெளியாகி உள்ள தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், பல கேள்விகள் பதிலின்றி உள்ளன. முதலாவதாக, Vanity Fair இன் ஸ்பானிய பதிப்பு குறிப்பிடுவதைப் போல, உண்மையில் சாட்டி CNI ஐ "ஏமாற்றி" கொண்டிருந்த ஒரு பொலிஸ் உளவாளி என்றால், அவர் என்ன செய்து கொண்டிருப்பதாக பொலிஸிற்கு தெரிவித்தார்? அவர் அறையில் குவித்து வைத்திருத்த பெருமளவிலான வெடிகுண்டு தயாரிக்கும் இரசாயனங்கள் இறுதியில் தற்செயலாக வெடித்து, சாட்டியே அதில் உயிரிழந்தார் என்றால், CNI இன் படி தேர்வு செய்யப்பட்ட இலக்கு யார்?

இரண்டாவதாக, ஜூன் 29 இல் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 1 கட்டலான் சுதந்திர கருத்து வாக்கெடுப்பு விவகாரம் மீது மாட்ரிட்டுக்கும் மற்றும் பார்சிலோனாவுக்கும் இடையிலான மோதல், சாட்டியை CNI பாதுகாப்பதில் ஒரு பாத்திரம் வகிக்கிறதா?

ஸ்பானிய பிரதம மந்திரி மரீயானோ ரஹோய் ஆகஸ்ட் 17 தாக்குதலுக்கு விடையிறுப்பாக இராணுவச் சட்டம் கொண்டு வருவது பற்றி பேசி இறுதியில் அதற்கு எதிராக முடிவெடுத்தார் என்றாலும், அவரது அரசாங்கம் அத்தாக்குதலுக்கு விடையிறுப்பாக அதை விவாதித்ததன் மூலமாக விடையிறுத்தது. ஆனால் அமைதியான முறையில் நடந்த அக்டோபர் 1 கருத்து வாக்கெடுப்பின் மீது ரஹோய் மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறையை தொடங்கிய பின்னர், அவர் பார்சிலோனாவிலும் கட்டலோனியாவிலும் நடந்த பாரிய போராட்டங்களுக்கு இடையிலும், கட்டலோனியாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை இடைநீக்கம் செய்து, அதை நேரடியாக பொலிஸ் ஆட்சியின் கீழ் நிறுத்தினார்.

அரசு எந்திரத்திற்குள் தயாரிப்பு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகின்ற பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கிய நகர்வுக்கு வித்தியாசமான சாக்குபோக்கு தேடிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு எந்திரத்தின் பலமான பிரிவுகள், இராணுவச் சட்ட திணிப்பை நியாயப்படுத்துவதற்காக ஏதோவொரு விதமான தாக்குதலை அனுமதிக்க விருப்பம் கொண்டுள்ளனவா?

மேலதிக படிப்பினைகளுக்கு

சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் “பேச்சு சுதந்திரம்" எனும் பாசாங்குத்தனம் (PDF)

9 January 2015

சார்லி ஹெப்டோவும் விச்சி கோரக்காட்சியும்: லவால் முதல் ஹாலண்ட் வரை

16 January 2015