ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

නව ජාතික හැඳුනුම්පත: පොලිස් රාජ්‍ය සැලසුම්වල තවත් විසකුරු පියවරක්

இலங்கை புதிய அடையாள அட்டை: பொலிஸ்-அரச திட்டங்களின் இன்னொரு நச்சுத்தனமான முன்நகர்வு

By Kapila Fernando 
3 November 2017

இலங்கை அரசாங்கத்தினால் அக்டோபர் 27 அன்று புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. வினைத்திறன் அட்டை (smart card) என்ற பெயரில் அழைக்கப்படும் இது நவீன இலத்திரனியல் தொழில்நுட்பத்தைக் கொண்டது. அதை வெளியிடுவதன் மூலம், “ஏமாற்று நடவடிக்கைளையும் போலி அடையாள அட்டை மோசடிளையும்” நிறுத்தி, மக்களுக்கு சேவைகளை “விரைவிலும் தரமாகவும்” பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைப்பதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக கூறியுள்ளார். இது “தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் அபிவிருத்தியை துரிதமாக்கவும் வசதி ஏற்படுத்திக்கொள்வதற்காக” எடுக்கப்பட்ட நடவடிக்கையாக அரசாங்கம் குறிப்பிட்டது.

எனினும் அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அதுவல்ல. அது அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களுக்குத் தள்ளப்படும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களை அடக்குவதற்காக, முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொலிஸ்-அரசு திட்டங்களின் பாகமாகும்.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ், 2011ம் ஆண்டிலேயே இந்த அடையாள அட்டைகளைக் கொண்டுவர திட்டமிடப்பட்டது. 2011 ஆகஸ்டில் தொடங்கிய ஐந்து ஆண்டு கால திட்டத்தில் அரச நிர்வாக, உள்நாட்டு நடவடிக்கைகள், அரசாங்கத்தின் திறைசேரி மற்றும் ஆட்பதிவு திணைக்கள அதிகாரிகளுக்கும் மேலாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர்களும் சம்பந்தப்பட்டிருந்தனர்.

தற்போது பயன்பாட்டில் உள்ள அடையாள அட்டையை பெறும்போது, விண்ணப்பதாரியினால் ஆட்பதிவு திணைக்களத்துக்கு பெயர், பிறந்த இடம், பிறந்த திகதி மற்றும் பால் போன்ற விபரங்கள் வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கு மேலாக, புதிய அடையாள அட்டைக்கு, குடும்பத்தில் சகல உறுப்பினர்களதும் “சுயவிபரங்கள் மற்றும் ஆள் அடையாள தடயமாக விரல் அடையாளம் மற்றும் தேசிய உள்நாட்டு விமான சேவை தரத்துக்கு ஏற்ப எடுக்கப்படும் புகைப்படமும்” உள்ளடக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் தரவுகளை கொடுப்பதா அல்லது கொடுக்காமல் விடுவதா என்பதை விண்ணப்பதாரி தீர்மானிக்க முடியும் எனக் கூறினாலும், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் அனுமதியுடனேயே அவ்வாறு செய்ய முடியும்.

இந்த தகவல்கள்கள் அடங்கிய மத்திய தரவுகள் முறை ஒன்று ஸ்தாபிக்கப்படும். இலத்திரனியல் இயந்திரங்களின் மூலம் வாசிக்கக் கூடிய பட்டைக்குறியீடும் (barcord) அதில் உள்ளடங்கும். குழந்தை ஒன்று பிறந்த நாளில் இருந்தே அதை அடையாளம் காட்டக்கூடியவாறு இலக்கம் கொடுக்கப்படும் அதே வேளை, 15 வயதாகும் போது இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும்.

இப்போதைக்கு அடையாள அட்டைகள் வைத்திருப்பவர்களுக்கு புதிய அடையாள அட்டைகள் கட்டாயம் இல்லை என ஆட்பதிவு திணைக்களம் கூறியிருந்தாலும், அரசாங்கத்தின் திட்டமிடலின் படி கூடிய விரைவில் தீவின் அனைத்து பிரஜைகளும் அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இலத்திரனியல் அடையாள அட்டையை போலவே, தனிநபர் தரவுகள் மற்றும் ஆள் அடையாள விபரங்கள் அடங்கிய இலத்திரனியல் கடவுச்சீட்டையும் உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

1971ல் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கிளச்சியை அடுத்து 1972ம் ஆண்டிலேயே தேசிய அடையாள அட்டை முறை கொண்டுவரப்பட்டது என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால், இத்தகைய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டது, முதலாளித்துவ அரசுக்கு விரோதமாக தோன்றக்கூடிய எத்தகைய அரசியல் எதிர்பையும் நசுக்குவதற்காக அதைப் பயன்படுத்திக்கொள்தற்கே அன்றி, மக்களின் பாதுகாப்புக்காக அல்ல என்பது தெளிவு.

தேசிய அடையாள அட்டைக்காக சட்ட அடித்தளத்தை அமைப்பதன் பேரில், 1968 இலக்கம் 32 ஆட் பதிவு சட்டம், 1971ல் மற்றும் 1981ல் திருத்தப்பட்டதோடு புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கு பொருத்தமாக 2016 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் திருத்தப்பட்டது.

புதிய அடையாள அட்டைக்கு உள்ளடக்கப்படும் தரவுகள் மற்றும் ஆள் அடையாள விபரங்கள் மூலம் மக்களின் தனிநபர் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன.

தண்டனை சட்டத்தின் படி, அவர் அல்லது அவளது விருப்பத்தின் பேரில் அல்லது நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டுமே குற்றவாளியாக கருதப்படும் ஒருவரிடம் இருந்து கூட விரல் அடையாளத்தைப் பெற முடியும். புதிய அடையாள அட்டை முறையின் கீழ் ஸ்தாபிக்கப்படும் இலத்திரனியல் தரவு முறை மூலம், எந்தவொரு தனிநபரும் போகும் வரும் இடங்கள், அவரது தொலை பேசி உரையாடல்கள் உட்பட சகல தகவல்களையும் பாதுகாப்பு துறைகளால் தேவையான சந்தர்ப்பத்தில் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியும்.

அதன் படி, எந்தவொரு நபரையும் கைது செய்ய வேண்டுமெனில், இந்த ஆட் தரவுகளையும் ஆள் அடையாள விபரங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அவரைத் தேடிச் சென்று கைது செய்யும் வாய்ப்பு பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படுகின்றது. முதலாளித்துவ அரசாங்கத்தின் பாதுகாப்பு இயந்திரங்களான பொலஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறையும் செயற்படுவது, வெறுமனே குற்றவாளிகளை தண்டிப்பதற்கு மட்டுமன்றி அரசியல் எதிரிகள், விசேடமாக தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே ஆகும்.

இந்த தரவுகள் மற்றும் ஆள் அடையாள விபரங்கள், அவசியமெனில் ஏனைய அரசுகளுடன் பரிமாறிக்கொள்ளக் கூடியதாக இருப்பதோடு, அமெரிக்காவின் இரகசிய புலனாய்வுத்துறை போன்ற சர்வேதேச புலனாய்வு முகவர் அமைப்புகளுக்கு, இணையம் மூலம் அந்த தகவல்களை இரகசியமாக பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியும் வழங்கப்படுகின்றது.

புதிய அடையாள அட்டைக்கும் மேலாக, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமானது பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தி, அதற்கு புதிய விஷப் பற்களை பூட்டியுள்ளதுடன், நீதவானிடம் முற்படுத்தாமல் ஒரு சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கும் காலத்தை 24 மணித்தியாலத்தில் இருந்து 48 வரை நீடிக்கக் கூடியவாறு குற்றவியல் வழக்கு விதிமுறை சட்டங்களை திருத்தியுள்ளது.

முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியின் மத்தியில், உலகம் பூராவும் ஆளும் வர்க்கங்கள் அதன் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தி வருகின்றது. இதற்கு எதிராக ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு வந்து கொண்டிருக்கும் நிலைமையின் கீழ், அந்த போராட்டங்களை நசுக்குவதற்காக பொலிஸ்-அரசு வழிமுறைகளைப் பயன்படுத்துவது இப்போது ஆளும் வர்க்கங்களின் கொள்கைகளாக ஆகியுள்ளன. இதன் பாகமாகவே, இவ்வாறு அடையாள அட்டைகளை வழங்கும் மற்றும் ஆட் தரவு மற்றும் ஆள் அடையாள விபரங்கள் அடங்கிய தரவு களஞ்சியங்கள் உருவாக்கப்படுகின்றன. 

இந்தியாவில் “ஆதார் அட்டை” என்ற பெயரில் இத்தகை அடையள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன. அவை உலத்தில் இப்போதுள்ள பிரமாண்டமான அடையாள ஆள் அடையாள திட்டமாகும். அதன் மூலம் இந்திய பொலிஸ் மற்றும் புலனாய்வுத் துறையால் சகல இந்திய பிரஜைகளதும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். ஆதார் காட் துஷ்பிரயோகம் செய்யப்படுவது பற்றி இப்போது இந்தியாவில் சில அரச நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிலும் தரவுகள் முறை மற்றும் ஆட் பதிவு செய்யும் அதிகாரசபையினால், “தேசிய நபர் பெயர் பட்டியல் மத்திய தரவு முறை” பேணப்பட்டு வருகின்றது. அதைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் இராணுவம் தனிநபர்களை பரிசோதிக்கும் தரவு கருவியை உருவாக்கிக்கொண்டுள்தோடு அதன் மூலம் அதற்கு அவசியமான எந்தவொரு நபரினதும் போகும் வரும் இடங்கள், அப்போது இருக்கும் இடம், அவர் பெற்றுக்கொள்ளுக்கும் அல்லது அவருக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கள் உட்பட குறிப்பிட்ட நபரின் ஒட்டுமொத்த விபரங்களையும் பொலிசாரால் பெற முடியும்.

“அடையாள மோசடிகளுக்கு எதிராகப் போராடும் மற்றும் செயற்திறனை அபிவிருத்திசெய்யும்” சாக்குப் போக்கின் கீழ், பிரான்சில் கடந்த ஆண்டில் அந்த நாட்டு 60 மில்லியன் மக்களின் ஆட் தரவு சேகரிக்கும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. “பயங்கரவாதத்துக்கு திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராகப் போராடுதல்” என்ற பெயரில், ஐரோப்பாவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் விமானப் பயணிகளின் தரவுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பொலிசாலும் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு ஒன்றிணைக்கப்பட்ட முறை ஒன்றை உருவாக்கும் திட்டமொன்று, ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் 2016 ஏப்ரலில் அங்கீகரிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் படி நடைமுறைப்படுத்தப்புடும் சிக்கன நடவடிக்கை மற்றும் ஏனைய தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள், கிராமப்புற வறியவர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் பாரிய சமூகப் போரட்டங்கள் வெடித்துவரும் நிலமைகளின் கீழ், அவர்களை வேட்டையாட மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகவே இலங்கையில் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படுகின்றது.