ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

New York Times and Wall Street Journal demand censorship of YouTube

நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட்  நாளிதழ்கள் யூ டியூப் இன் தணிக்கைக்கு கோரிக்கை விடுக்கின்றன

By Andre Damon
26 October 2017

நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நாளிதழ்களின் முதல் பக்கங்களில் செவ்வாயன்று பிரசுரமான இரண்டு கட்டுரைகளில் அந்நாளிதழ்கள், யூடியூப் இன் சேவை ரஷ்ய பிரச்சாரத்தை பரப்புவதற்கு உதவுவதாக குற்றம்சாட்டி அதன் இணையவழி சேவையை தணிக்கை செய்ய நியாயப்படுத்துதல்களை முன்வைக்கின்றன.

கூகுளுக்கு சொந்தமான யூடியூபின் மூலம் சென்றடையும், ரஷ்ய அரசாங்க நிதியளிப்பினைக் கொண்ட சர்வதேச தொலைக்காட்சி வலை அமைப்பான RT இன் கணிசமான பரவலை இந்தக் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. RT வீடியோக்கள், CNN ஐ போல அதிக பார்வையாளர்களையும், மேலும் ஃபாக்ஸ் நியூஸைக் காட்டிலும் கூடுதலாக கணிசமான அளவு பார்வையாளர்களையும் கொண்டுள்ளன.

ஜனவரி 6ம் தேதிய தேசிய உளவுத்துறையின் அமெரிக்க இயக்குனரின் அறிக்கையை மேற்கோளிட்டு, “கிரெம்ளினின் ‘முக்கிய சர்வதேச பிரச்சார வெளியீடாகவும்,’ மற்றும் உலகம் முழுவதிலுமான ரஷ்யாவின் தகவல் போர் நடவடிக்கைகளின் ஒரு முக்கிய செயற்பாட்டாளராகவும்” செயல்படுவதாக RT ஐ டைம்ஸ் பத்திரிகை விவரிக்கிறது.

“யூடியூபின் தேடல் முடிவுகளில் RT க்கு இருக்கும் முக்கிய முன்னிலை,” என்பது “உலகெங்கிலும் உள்ள எந்தவொரு செய்தி அமைப்பினது மிகப்பெரிய அளவிலான இணையவழி பார்வையாளர்களையும்” அதன்வசம் இழுக்க அனுமதிக்கிறதென இந்தக் கட்டுரை குறைகூறுகிறது.

இது, இணையதளத்தில் அரசியல் எதிர்ப்பிற்கு எதிரான ஜனநாயகவாதிகளின் நவ-மெக்கார்த்தியிச சதிவேட்டையை வென்ற வெர்ஜீனியா ஜனநாயக செனட்டரான மார்க் வார்னரை மேற்கோளிட்டுக் காட்டுகின்றது: “ஒரு நீண்டகால, அடுத்த தலைமுறைக்கான சவாலை பிரதிநிதித்துவம் செய்யும் எந்தவொரு தவறான தகவல் பிரச்சாரத்திற்கும், அது ரஷ்யாவினது அல்லது வேறொன்றினது எதுவானாலும் சரி, யூடியூப் ஒரு இலக்கு நிறைந்த சூழலாக உள்ளது.”

இப் பத்திரிகை அதன் பங்கிற்கு குற்றம்சாட்டுகிறது, “யூடியூப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் காட்சிகளில் காணப்படும் RT இன் பிரபலத்தன்மை, நம்பமுடியாத செய்தி ஆதாரங்கள், அரசாங்க ஆதரவுடைய பிரச்சார மையங்களில் இருந்து சதித் திட்ட குழுக்களையும், பின்னர் தொடர்ந்து தீவிரவாதக் குழுக்களையும் எவ்வாறு சென்றடைகின்றது என்பதை சமூக ஊடக நிறுவனங்களின் வெளிப்படையான அணுகுமுறை எப்படி வலுப்படுத்த முடியுமெனக் காட்டுகிறது. இந்த “வெளிப்படையான” அணுகுமுறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே இதன் உட்குறிப்பாகும்.

யூடியூபில் RT இன் பிரபலத்தன்மையை குற்றம்சாட்டி, இந்த சேனல், அரசியல் சாராத காட்சிகளை அதன் “பிரச்சாரத்துடன்” கலப்பதன் மூலம் சேவை நெறிமுறைகளில் “விளையாடுகிறது” என இந்த கட்டுரைகள் கற்பிதம் செய்கின்றன. அதே போல, RT ஐ தண்டிப்பதற்கும் அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இல்லாத ஏனைய செய்தி வெளியீட்டு நிறுவனங்களைத் தண்டிப்பதற்கும் யூடியூபின் நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற வாதத்தை அவர்கள் உருவாக்குகின்றனர்.

“யூடியூப் நேரிடையாக தலையீடு செய்வதைத் தீர்மானிக்காமல், அவை [RT] தமது காட்சிகளை தொடரும்” என்று கட்டுரையை நிறைவு செய்யும் ஆய்வாளர் ஒருவரின் கருத்தின் மூலமாக தனது நோக்கங்களை டைம்ஸ் பத்திரிகை முன்னெடுக்கிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “யூடியூப் மற்றும் பேஸ்புக் இரண்டும் பல வருடங்கள் பழமைவாய்ந்த காட்சிகளை உயிரோட்டமாக வைத்திருக்க உதவுவதன் மூலமாகவும், மேலும் முக்கியபோக்கிற்கு வெளியேயுள்ள செய்தி ஆதாரங்களில் ஆர்வம் காட்டும் பார்வையாளர்களுக்கு RT இன் வீடியோக்களை பரிந்துரைத்தும் RT க்கு ஊக்கமளித்துள்ளது” என்பதாகக் குற்றம்சாட்டுகிறது.

இந்த பத்திரிகையின் கட்டுரை, வெவ்வேறு ஆய்வாளர்களின் பொழிப்புரை கூறுவது போல் தொழில்நுட்ப நிறுவனங்கள், “அதன் உள்ளடக்கத்தை ரஷ்ய பிரச்சாரமாக முத்திரைகுத்த வேண்டும்” என்பது போன்ற மேற்கோள்களுடன் முடிவடைகிறது, மேலும், “RT கதைகளை உள்ளடக்கி கூகுள் செய்திகளும், இந்த தளத்தை வாசகர்களுடன் சட்டபூர்வமானதாக்க உதவுகிறது” என்றும் இது குற்றம்சாட்டுகிறது.

அரசாங்க ஸ்தாபக பத்திரிகைகளால் வழமையாக புறக்கணிக்கப்படும் நிகழ்வுகளை அறிக்கை செய்வதில் வளர்ச்சியடைந்துள்ளதால் RT பிரபலமாகியுள்ளது என்பது இந்த இரு கட்டுரைகளிலும் தவிர்க்கப்பட்டுள்ளது உண்மைதான்.

“கிரெம்ளின் பொதுவாக அதன் பார்வையை ஊக்குவிக்க ஆர்வமாக இருக்கும் விடயங்களைத் தேடுகிறது, அதாவது, சிரியாவில் அமெரிக்கத் தலையீடு, உக்ரேனிய உள்நாட்டுப் போர்…. போன்ற தலைப்புகள் பெரும்பாலும் RT வீடியோக்களை சிறந்த முடிவுகளில் ஒன்றாக மாற்றி விடும்” என்று டைம்ஸ் கட்டுரை குற்றம்சாட்டுகிறது. நிச்சயமாக, RT வீடியோக்கள் உட்பட, எதிர்க்கும் கோணத்திலான கருத்துக்களை இணையதளத்தில் தேடுவதற்கு முன்னணி பார்வையாளர்கள் அமெரிக்க பிரதான ஊடகங்களைச் சார்ந்திருப்பது மிக வெளிப்படையானது என்ற வகையில் இது வெளியுறவு கொள்கையின் முக்கிய விடயங்களைச் சார்ந்துள்ளது.

கடந்த மாதம் யூடியூப், “நிலையான நெறிமுறை மேம்படுத்தல்” என அழைக்கப்படுவதன் ஒரு கூறாக, தனது “விருப்பமான” சேனல்களின் பட்டியலில் இருந்து RT ஐ விலக்கி அதற்கு எதிரான முதல் வெளிப்படையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

RT இன் தலைமை துணை ஆசிரியர் கிரில் கர்னோவிச்-வலுவா, இந்த நடவடிக்கை “அமெரிக்க சந்தையிலிருந்து ஒட்டுமொத்தமாக எங்களது சேனலை வெளியேற்றுவதற்கு எந்தவொரு வகையிலாவது சாத்தியமாக்கும் ஒருங்கிணைந்த முயற்சியில், அனைத்து RT பங்குதாரர்களுக்கும் உறவுகளுக்கும் அதிகரித்தளவில் பொருந்தக்கூடிய முன்என்றுமிருந்திராத அரசியல் அழுத்தத்தை குறித்து பேசுகிறது” என்று டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு விடுத்த தனி அறிக்கை ஒன்றில், RT குறிப்பிட்டதாவது, “தகவல் பற்றியதில் ஏகபோகத்தை இழப்பதாய் ஸ்தாபனத்தின் அச்சத்திற்கு நடைமுறையில் அனைத்து செய்தி அமைப்புக்களாலும் பேசப்பட்ட அதன் ஏதோ ஒரு உள்ளடக்கத்தை RT இன் சமூக ஊடகம் விளம்பரம் செய்தல்போல அத்தகைய மனக் கிளர்ச்சியற்ற நடவடிக்கைகளைச் சுற்றி ஒரு வெறி நிலவுகிறது, மற்றும் அமெரிக்க சந்தையிலிருந்து RT ஐ வெளியேற்றும் ஒருங்கிணைந்த முயற்சியையும் காட்டிக்கொடுக்கிறது”

கடந்த மாதம், அமெரிக்காவுடன் ஒரு “வெளிநாட்டு முகவராக” இணைந்து கொண்ட RT இன் பதிவை அமெரிக்க நீதித்துறை கோரியமையானது, அந்த சேனலுடன் பணியாற்றும் சுயாதீனமான பத்திரிகையாளர்கள் சிலரை, அவர்களும் “வெளிநாட்டு முகவர்களாக” பதிவு செய்ய நிர்பந்திக்கப்படுவார்களோ என்ற அச்சத்திற்கு இட்டுச்சென்றது.

RT க்கு எதிரான கோரிக்கைகளின் அபத்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு அறிக்கையில், வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை, “இங்கிலாந்தின் BBC அல்லது அமெரிக்காவின் Radio Free Europe போன்ற, ஏனைய அரசாங்க நிதியளிப்பு பெறும் செய்தி ஊடக நிறுவனங்கள் போலல்லாமல், RT, மேற்கத்திய நிறுவனங்கள் மற்றும் ஜனநாயகங்களை கீழறுப்பதற்கான ஒரு இலக்குடன் மிக வெளிப்படையாக அரசியல் சார்ந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்” என குறிப்பிடுகிறது. சோவியத் பிளாக்கை இலக்காகக் கொண்ட கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஆதாரமாக நிறுவப்பட்ட Radio Free Europe ஐ காட்டிலும் RT எப்படி “மிக வெளிப்படையாக அரசியல் சார்ந்ததாகும்” என்று ஒருபோதும் விளக்கப்படவில்லை.

வார்னரோ அல்லது டைம்ஸோ அல்லது எந்தவொரு பத்திரிகையோ, RT வெளியிட்ட எந்தவொரு அறிக்கையும் மறுப்பிற்கு இடமின்றி தவறானது என்பதைக் காட்ட எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, ரஷ்ய அரசாங்கத்துடனான அதன் இணைப்பின் காரணமாக அந்தச் செய்தி வெளியீட்டு நிறுவனத்தை சட்டவிரோதமானது என்று அவர்கள் முத்திரைகுத்தவே முனைகின்றனர்.

இருப்பினும், அவர்களது உண்மையான இலக்கு ரஷ்யா அல்ல, உள்நாட்டில் தான் அரசியல் எதிர்ப்பு உள்ளது. இந்த காட்சிகளுக்குப் பின்னால், இடதுசாரி, போர் எதிர்ப்பு மற்றும் முற்போக்கு வலைத் தளங்களுக்கான தேடல் நெரிசலில் 55 சதவிகிதத்தை வீழ்த்தும் வகையில் கூகுள், “அதிகாரபூர்வ” உள்ளடக்கத்தை மேற்பார்வையிடுவதாக அதன் நெறிமுறைகளில் ஏற்கனவே மாற்றங்களை செயல்படுத்தியுள்ளது, உலக சோசலிச வலைத் தளம் மட்டும் தான் அதன் தேடல் நெரிசலில் 74 சதவிகிதத்திற்கும் மேலான வீழ்ச்சியினைக் கொண்டு மிக கடுமையான இலக்காக இருந்து வருகிறது.

கடந்த வாரம், கூகுள் செய்திகளுக்கான ஒரு சமீபத்திய புதுப்பிப்பு, உலக சோசலிச வலைத் தளத்தின் கட்டுரைகளையும், அத்துடன் பிற முக்கிய சுயாதீனமான பத்திரிகையாளர்கள் எழுதிய கட்டுரைகளையும் சேர்த்து கிட்டத்தட்ட முற்றிலும் ஒதுக்கியுள்ளது என்று உலக சோசலிச வலைத் தளம் தெரிவித்துள்ளது.