ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

October 9 - 15: Lenin steps up campaign for insurrection

அக்டோபர் 9 -15: லெனின் கிளர்ச்சிக்கான பிரச்சாரத்தை அதிகரிக்கிறார்

9 October 2017

ட்ரொட்ஸ்கி பெட்ரோகிராட் சோவியத்தின் தலைவராக இருந்த நிலையில், பெரும்பாலான பிற சோவியத்களின் மீது அதிகரித்தளவில் போல்ஷிவிக் கட்சி கட்டுப்பாட்டை ஏற்று வந்த நிலையிலும், ரஷ்ய புரட்சியில் இப்போது போல்ஷிவிக்குகளே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர். இருப்பினும் என்ன போக்கை ஏற்பது என்பதில் கட்சி தலைமைக்குள் குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.

Petrograd: Lenin urges seizure of power

பெட்ரோகிராட்: லெனின் அதிகாரத்தைக் கைப்பற்ற வலியுறுத்துகிறார்


இவார் டி. ஸ்மில்கா

போல்ஷிவிக்களுக்கான தொழிலாள வர்க்க ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இடைக்கால அரசாங்கமோ புரட்சியை நசுக்க இராணுவ தயாரிப்புகளைச் செய்து வருகையில், பின்லாந்தில் தலைமறைவாக இருந்த லெனின் ஈடிணையற்ற சாதகமான சந்தர்ப்பம் கைநழுவி சென்று கொண்டிருப்பதை உணர்கிறார். அக்டோபர் 10 அன்று (O.S. நாட்காட்டியின்படி, செப்டம்பர் 27) அவர் இவார் ஸ்மில்காவுக்கு சீற்றத்துடன் ஒரு கடிதம் எழுதுகிறார்:

பொதுவான அரசியல் நிலைமை எனக்கு பெரும் மனக்கவலையை உண்டாக்குகிறது. பெட்ரோகிராட் சோவியத்தும் மற்றும் போல்ஷிவிக்குகளும் அரசு மீது போர் அறிவித்துள்ளனர். ஆனால் அரசிடம் இராணுவம் உள்ளது, முறையாக தயாரிப்பு செய்து வருகிறது... நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் வெறுமனே தீர்மானங்களை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். நாம் நேரத்தை இழந்து கொண்டிருக்கிறோம். நாம் "தேதிகளைக்" குறித்து கொண்டிருக்கிறோம் (அக்டோபர் 20, சோவியத்துக்களின் மாநாடு—இவ்வளவு நாட்களுக்குத் தள்ளி வைப்பது அபத்தமாக இல்லையா? அதற்காக காத்திருப்பது அபத்தமாக இல்லையா?) கெரென்ஸ்கியைத் தூக்கியெறிவதற்கு போல்ஷிவிக்குகள் அவர்களின் சொந்த இராணுவ படைகளைத் தயார் செய்ய முறையான வேலையில் ஈடுபட்டிருக்கவில்லை.

ஆயுதமேந்திய எழுச்சியை நோக்கி கட்சிக்குள் ஒரு உத்வேக மனோபாவத்தை நாம் தூண்ட வேண்டுமென்பது என் கருத்து, இதற்காக இக்கடிதத்தை தட்டெழுத்திட்டு, பெட்ரோகிராட் மற்றும் மாஸ்கோ தோழர்களுக்கு அனுப்ப வேண்டும். …

பின்லாந்து மற்றும் பால்டிக் கடற்படை பிரிவு துருப்புகளின் எழுச்சிக்கு என்ன தயாரிப்புகளை செய்ய வேண்டுமென லெனின் ஸ்மில்காவிடம் வலியுறுத்துகிறார்: “நாம் இதை செய்ய தவறினால், நாம் முழு முட்டாள்களாக ஆவோம், அழகான தீர்மானங்களுக்கும் மற்றும் சோவியத்துக்களுக்கும் வேண்டுமானால் சொந்தக்காரர்கள் ஆகலாம், ஆனால் அதிகாரம் கிடைக்காது!

இதற்கிடையே, கிராமப்புறங்களில் விவசாயிகள் அமைதியின்மை அதிகரிக்கிறது. பிரபு வம்சத்திடமிருந்து விவசாயிகள் பறிமுதல் செய்த நிலங்கள் மீதான தகராறுகள், குறிப்பாக கடுமையாகவும் வன்முறையாகவும் உள்ளன. விவசாயகளின் கலகங்களைக் கெரென்ஸ்கி அரசாங்கம் இராணுவ பலத்துடன் நசுக்க நகர்கின்ற போது, போல்ஷிவிக்குகள் உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றி, விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டுமென்ற அவர் வலியுறுத்தலை லெனின் இரட்டிப்பாக்குகிறார்.

உண்மையில், செம்படையை ஆயுதபாணியாக்குவது உட்பட அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ட்ரொட்ஸ்கி உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் என்பது, பின்லாந்தின் அவர் மறைவிடத்திலிருந்து, லெனினால் அறிந்து கொள்ள முடியவில்லை. காமனேவ் மற்றும் சினோவியேவைச் சுற்றி திரண்டிருந்த கட்சியின் பழமைவாத போக்குகள், நெருக்கடியால் தொழிலாள வர்க்கத்தின் முன்நிறுத்தப்பட்ட பணிகளைப் பின்னுக்கு இழுத்துவிடுமோ என்று லெனின் அஞ்சுகிறார்.

பின்லாந்திலிருந்து வரும் அவர் எச்சரிக்கைகள், அதிகாரத்தைக் கைப்பற்ற போல்ஷிவிக்களைத் தயார்படுத்துமாறு மிகத் துல்லியமாக உள்ளன. இந்த பாணியில், "இன்னும் மூன்று வார கால போரை சகித்து" கொள்ளக் கூடிய அனைவரையும் கண்டிக்கும் அவர், மாஸ்கோ மற்றும் பெட்ரோகிராட்டின் அரசு கட்டிடங்களை முற்றுகையிட உடனடி தயாரிப்புகள் செய்ய கோருகிறார். ஆனால் லெனினின் நிலைப்பாடு சிறுபான்மையாக இருக்கிறது. மத்திய குழு ஓர் உடனடி கிளர்ச்சிக்கு அழைப்புவிடுக்கும் லெனினின் எழுத்துக்களை ஒடுக்குகிறது.

ஸ்மில்காவிற்கு கடிதம் எழுதிய ஒருசில நாட்களுக்குள், “நெருக்கடி முதிர்ந்துள்ளது,” (The Crisis Has Matured) என்பதை லெனின் எழுதுகிறார், இதில் அவர் "அதிகாரத்தை உடனடியாக கைப்பற்றுவதற்கு எதிராகவும், உடனடி கிளர்ச்சிக்கு எதிராகவும், சோவியத்துக்களின் மாநாட்டுக்காக காத்திருப்பதற்கு ஆதரவாக" "மத்திய குழுவிலும் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்களிலும்" இருப்பவர்களை தோலுரித்துக் காட்டுகிறார். அவர் எழுதுகிறார்:

இதுபோன்ற சூழ்நிலைகளின் கீழ் சோவியத்துக்களின் மாநாட்டுக்காக இனியும் "காத்திருப்பது", சர்வதேசியவாதத்தின் காட்டிக்கொடுப்பாக இருக்கும், உலக சோசலிச புரட்சியின் நோக்கத்தைக் காட்டிக்கொடுப்பதாக இருக்கும்.

சர்வதேசியவாதத்தைப் பொறுத்த வரையில், அது வார்த்தைகளுக்கு அல்ல, நல்லிணக்க வெளிப்பாடுகளுக்கு அல்ல, தீர்மானங்களுக்கு அல்ல, செயல்களுக்கு உட்பட்டுள்ளது.

விவசாயிகள் கலகம் மீதான ஒடுக்குமுறையைச் சகித்துக் கொள்வது ஒட்டுமொத்த புரட்சியையும் வீணடித்து [விடும்], நிரந்தரமாக அதை நாசமாக்கியதற்காக, போல்ஷிவிக்குகள் விவசாயிகளுக்கு துரோகிகளாகி விடுவார்கள். அராஜகம் குறித்தும், மக்களின் பெரும் அலட்சியம் குறித்தும் ஆவேசமாக கூச்சலிடப்படுகிறது, ஆனால் விவசாயிகள் எழுச்சிக்குள் தள்ளப்பட்டுள்ள போது, அதேவேளையில் 'புரட்சிகர ஜனநாயகவாதிகள்' எனப்படுபவர்கள் இராணுவ பலத்தால் அது நசுக்கப்படுவதை பொறுமையாக சகித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், மக்கள் தேர்தல்களுக்கு அலட்சியமாக இருப்பதைத் தவிர வேறு எவ்வாறு இருக்க முடியும்!

ஜனநாயக சபை (Democratic Conference) மற்றும் "நாடாளுமன்றத்திற்கு முந்தைய சபை" (Pre-parliament) நடத்தப்பட்டதைப் போலவே, துல்லியமாக அதே விதத்தில், சொல்லப்போனால் இன்னும் மோசமாகவும் மட்டும் இன்னும் குரூரமாகவும் நடக்கக்கூடிய, அரசியலமைப்பு சபை தேர்தல்களை நடக்க அனுமதிப்பதென்பது, இத்தருணத்தில் போல்ஷிவிக்குகள் விவசாயிகள் கலகம் மீதான ஒடுக்குமுறையை சகித்துக் கொண்டு, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான துரோகிகள் ஆகிவிட்டார்கள் என்பதையே அர்த்தப்படுத்தும்.

நெருக்கடி முதிர்ந்துள்ளது. ரஷ்ய புரட்சியின் ஒட்டுமொத்த எதிர்காலமும் பணயத்தில் உள்ளது. போல்ஷிவிக் கட்சியின் மதிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது. சோசலிசத்திற்கான சர்வதேச தொழிலாளர் புரட்சியின் ஒட்டுமொத்த எதிர்காலமும் பணயத்தில் உள்ளது…

இது விவசாயிகளுக்கு செய்யும் படுமோசமான நம்பிக்கை துரோகமாகிவிடும். இரண்டு தலைநகரங்களின் சோவியத்களையும் நாம் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கையில், விவசாயிகள் கலகம் ஒடுக்கப்படுவதை அனுமதிப்பது விவசாயிகளின் ஒவ்வொரு நம்பிக்கை துளியையும் இழக்க செய்வதாக, துல்லியமாக இழக்கச் செய்வதாக, இருக்கும்.. . .

சோவியத்துக்களின் மாநாட்டுக்காக "காத்திருப்பது" முற்றிலும் முட்டாள்தனமானது, வாரங்களும், ஏன் நாட்களுமே கூட ஒவ்வொன்றையும் தீர்மானித்து வரும் ஒரு தருணத்தில், வாரங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதையே இது அர்த்தப்படுத்தும். … சோவியத்துக்களின் மாநாட்டுக்காக "காத்திருப்பது" முட்டாள்தனமானது, அம்மாநாட்டைப் பொறுத்த வரையில் அது ஒன்றும் வழங்கப் போவதில்லை, எதையும் வழங்கவும் முடியாது!

… கிளர்ச்சியின் வெற்றி இப்போது போல்ஷிவிக்குகளுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது: (1) (சோவியத்துக்களின் மாநாட்டுக்காக நாம் "காத்திராமல்") நம்மால் மும்முனைகளிலிருந்து ஒரு திடீர் தாக்குதலை தொடங்க முடியும்—பெட்ரோகிராடில் இருந்து, மாஸ்கோவில் இருந்து, பால்டிக் கடற்படை தளத்திலிருந்து; (2) நம் ஆதரவுக்கு உத்தரவாதமளிக்கும் முழக்கங்கள் நம்மிடம் உள்ளன—நில-அதிபர்களுக்கு எதிராக விவசாயிகள் கலகத்தை ஒடுக்கும் அரசாங்கம் ஒழிக! (3) நாட்டில் நமக்கு பெரும்பான்மை உள்ளது; (4) மென்ஷிவிக்கள் மற்றும் சோசலிச புரட்சியாளர்களிடையே ஒழுங்கமைப்பு முழுமையாக சீர்குலைந்துள்ளது; (5) நாம் புள்ளிவிபரங்களின்படி மாஸ்கோவில் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலையில் உள்ளோம் (எதிரி விழிப்பின்றி இருப்பதை சாதகமாக்கி, அங்கிருந்தே கூட தொடங்கலாம்); (6) நம்மிடம் பெட்ரோகிராடில் ஆயிரக் கணக்கான ஆயுதமேந்திய தொழிலாளர்களும் சிப்பாய்களும் உள்ளனர், இவர்களால் ஒரேசமயத்தில் குளிர் மாளிகையையும் (Winter Palace), பொதுத்துறை கட்டிடங்களையும், தொலைபேசி நிலையம் மற்றும் மிகப்பெரிய அச்சுகூடங்களையும் கைப்பற்ற முடியும். எதுவுமே நம்மை வெளியேற்ற முடியாது…

லெனின் மத்தியக் குழுவிலிருந்து அவரது உத்தியோகபூர்வ இராஜினாவுடன் இக்கடிதத்தை நிறைவு செய்கிறார். “நான் மத்திய குழுவிலிருந்து இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளேன், இங்கே அதை சமர்பித்து, கட்சியின் சாமானிய உறுப்பினர்களிடையேயும் கட்சி காங்கிரஸிற்குள்ளும் பிரச்சாரம் செய்வதற்கு எனக்கு நானே சுதந்திரம் எடுத்துக் கொள்கிறேன்,” என்றவர் எழுதுகிறார். “சோவியத்துக்களின் மாநாட்டுக்காக நாம் 'காத்திருந்தால்', இப்போதைய தருணத்தைக் கடந்து செல்ல அனுமதித்தால், புரட்சியை நாம் வீணடிக்கிறோம் என்பதே என் ஆழமான முடிவு.”

ட்ரொட்ஸ்கி பெட்ரோகிராட் சோவியத்தின் தலைவராக இருந்த நிலையில், பெரும்பாலான பிற சோவியத்களின் மீது அதிகரித்தளவில் போல்ஷிவிக் கட்சி கட்டுப்பாட்டை ஏற்று வந்த நிலையிலும், ரஷ்ய புரட்சியில் இப்போது போல்ஷிவிக்குகளே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர். இருப்பினும் என்ன போக்கை ஏற்பது என்பதில் கட்சி தலைமைக்குள் குறிப்பிடத்தக்க கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.

காமனேவ் தலைமையிலான ஒரு கன்னை, போல்ஷிவிக் கட்சியின் "மிதமான" அணி, ஓர் அரசியலமைப்பு சபை கூட்டும் வரையில் ஆட்சி இருக்கக்கூடிய "ஜனநாயக" சக்திகளது ஒரு பரந்த கூட்டணியில், போல்ஷிவிக் பங்கெடுப்பதை ஆதரிக்கிறது. இந்த மூலோபாயம், ஆளும் கட்சிகளில் ஒன்றாக போல்ஷிவிக்குகளை உள்ளடக்கிய ஒரு முதலாளித்துவ குடியரசை உருவாக்குவதை நோக்கி நோக்குநிலை கொண்டுள்ளது.

கட்சியின் எதிரணியிலிருந்து, லெனினும் அவர் ஆதரவாளர்களும், ஆயுதமேந்திய தொழிலாள வர்க்கம், சிப்பாய்கள் மற்றும் மாலுமிகளின் ஆதரவுடன் மாஸ்கோ மற்றும் பெட்ரோகிராடில் ஓர் உடனடி கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இத்தகைய ஒரு போல்ஷிவிக் அரசாங்கம், உடனடி சமாதானத்திற்காகவும், நிலங்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு பங்கிட்டு அளிக்கவும், உணவு வினியோகத்தை ஒழுங்கமைக்கவும், மற்றும் மிகப் பரந்தளவில் சாத்தியமான சோசலிச நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தேவையான சட்டரீதியிலான நடைமுறைகளை மேற்கொள்ளும்.

ட்ரொட்ஸ்கி தலைமையிலான "உத்வேகத்திலிருந்த லெனினிசவாதிகள்" (Leninists in spirit) நவம்பர் 2 இல் (O.S. நாட்காட்டியின்படி, அக்டோபர் 20) நடத்த திட்டமிடப்பட்டிருந்த சோவியத்துக்களின் மாநாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக போல்ஷிவிக்குகளுக்கு அழைப்புவிடுக்கின்றனர். இம்மாநாட்டில் அதிகாரத்தை மாற்றுவது பெருந்திரளான மக்களால் சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ளப்படும் என்றும், “சோவியத்களுக்கே அதிகாரம்!” என்ற மக்களின் முழக்கத்திற்கு வெளிப்பாட்டை அளிக்குமென்றும் ட்ரொட்ஸ்கி வாதிடுகிறார். ரஷ்ய புரட்சியின் வரலாற்றில் (History of the Russian Revolution) என்ற நூலில் ட்ரொட்ஸ்கி அவர் நிலைப்பாட்டை விவரிக்கிறார்:


ஒட்டுமொத்த தேசத்தின் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் புரட்சிகர முயற்சிகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு ஒரே இலட்சியத்தைக் காட்டி, அவர்களுக்கு ஒற்றுமைக்கான இலக்கையும் நடவடிக்கைக்கான ஒரே தேதியையும் வழங்கி, அதேநேரத்தில் அதை சோவியத் மாநாட்டின் முழக்கமாக ஆக்குவது, தொழிலாளர்கள், சிப்பாய்கள் மற்றும் விவசாயிகளின் சட்டபூர்வ பிரதிநிதித்துவத்திற்கான தொடர்ச்சியான முறையீடுகளுடன் ஒரு கிளர்ச்சிக்கான அரைவாசி-தந்திரத்தை, அரைவாசி-மக்கள் தயாரிப்பைக் காட்ட சாத்தியமாக்குகிறது. அவ்விதத்தில் புரட்சிக்கான சக்திகளை ஒன்றுதிரட்டுவதை ஊக்கப்படுத்துவதன் மூலமாக, சோவியத்துக்களின் மாநாடு பின்னர் அதன் முடிவுகளை நிறைவேற்றி, மக்களின் பார்வையில் திரும்பப் பெறவியலாத புதிய அரசாங்கத்திற்கான ஒரு வடிவத்தை வழங்கும்.


October 23 (October 10, O.S.): Bolshevik Central Committee votes for armed insurrection

அக்டோபர் 23 (O.S. நாட்காட்டியின்படி, அக்டோபர் 10): போல்ஷிவிக் மத்தியக் குழு ஆயுதேந்திய கிளர்ச்சிக்கு வாக்களிக்கிறது


அக்டோபர் 23 இல் மத்தியக் குழுவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட லெனினின் கைப்பட எழுத்தப்பட்ட தீர்மானத்தின் முதல் பக்கம்

மாலை 10 மணி, 21 உறுப்பினர் போல்ஷிவிக் மத்திய குழுவிலிருந்து சுமார் ஒரு டஜன் கணக்கானோர் பெட்ரோகிராடில் ஒரு இரகசிய இடத்தில் ஒன்றுகூடினர். இக்கூட்டம் நிக்காலைய் சுக்ஹானோவ் இன் (Nikolai Sukhanov) வீட்டில், அவர் வீட்டில் இல்லாத போது நடக்கிறது, இவர் இடதுசாரி மென்ஷிவிக் ஆவார், ஆனால் இவர் மனைவி ஒரு போல்ஷிவிக் ஆவார்.

இது, பல மாதங்களுக்குப் பின்னர், லெனின் நேரடியாக பங்குபற்றிருக்கையில் நடக்கும், மத்திய குழுவின் முதல் கூட்டமாகும். இடைக்கால அரசாங்கத்தால் இப்போதும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் லெனின், இரகசியமாக கூட்டத்திற்கு வந்துள்ளார். இக்கூட்டம் யகொவ் ஸ்வெர்ட்லொவ் (Yakov Sverdlov) தலைமையில் ஒழுங்கமைக்கப்படுகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி, ஜோசப் ஸ்ராலின், கிரிகோரி சினோவியேவ், லேவ் காமனேவ், ஃபீலிக்ஸ் டிஜெர்ஜின்ஸ்கி, அலெக்சாண்டரா கொல்லொன்டாய், கிரிகோரி சொகொல்னிகொவ், ஜோர்ஜி லொமோவ், ஆண்ட்ரி பப்னோவ், மொய்சி உறிட்ஸ்கி மற்றும் வர்வாரா லகோவ்லெவா (இவர் குறிப்பெடுக்கிறார்) ஆகியோர் இந்த வரலாற்று கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஏனைய மத்திய குழு உறுப்பினர்களாவர்.

கூட்டம் லெனினின் மணிக்கணக்கில் நீண்டவொரு அறிக்கையுடன் தொடங்குகிறது, அவர் உடனடி நடவடிக்கைக்காக முழங்குகிறார்.

மத்திய குழுவை ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்குத் தயார்படுத்த லெனின் கடந்த வாரங்களில் தீர்க்கமானவொரு பிரச்சாரம் நடத்தி உள்ளார். இருப்பினும் கட்சி தலைமைக்குள் சினோவியேவ் மற்றும் காமனேவ் தலைமையிலான வலது கன்னையிடமிருந்து வரும் கணிசமான எதிர்ப்புக்காக இப்போதும் போராட வேண்டியிருந்தது.

அக்கூட்டத்தின் உத்தியோகபூர்வ, சிறிய, முழுமையற்ற கையெழுத்துப் பிரதி குறிப்பிடுகிறது:

செப்டம்பர் தொடக்கத்திலிருந்து கிளர்ச்சி மீதான கேள்வியில் ஒருவித அலட்சியம் தெரிவதாக தோழர் லெனின் குறிப்பிடுகிறார். ஆனால் சோவியத்துக்களால் அதிகாரம் கைப்பற்றப்பட வேண்டுமென்ற முழக்கத்தை, நாம் முழு தீவிரத்துடன் வெளியிட்டு வருகிறோம் என்றால், இதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே இக்கேள்வி மீதான புள்ளிவிபர அம்சங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது … சர்வதேச நிலைமையோ, நாம் முன்முயற்சி எடுத்தாக வேண்டும் என்பதாக உள்ளது … பெருந்திரளான மக்களின் தரப்பில் புறக்கணிப்பும் அலட்சியமும் உள்ளது என்றால், அவர்கள் சொற்கள் மற்றும் தீர்மானங்களால் சோர்ந்து போய் இருக்கிறார்கள் என்பதனால் தான் …

விவசாயிகளின் இயக்கமும் அந்த திசையில் தான் அபிவிருத்தி அடைந்து வருகிறது, அதைப் பொறுத்த வரையில் அந்த இயக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கு மிகப்பெரும் முயற்சி தேவைப்படும் என்பது வெளிப்படையானது. மொத்த நிலங்களையும் கைமாற்றுவதற்கான முழக்கம் விவசாயிகளின் பொதுவான முழக்கமாக மாறியுள்ளது. ஆகவே அரசியல் நிலைமை முதிர்ந்துள்ளது. நாம் புள்ளிவிபர அம்சத்தை பேச வேண்டும். அது தான் தீர்க்கமான விடயமாக உள்ளது. இல்லையென்றால் நாமும், பாதுகாப்புவாதிகளைப் (defencists) போலவே, ஒரு எழுச்சிக்கான திட்டமிட்ட தயாரிப்பை, ஏதோ இயற்கையின் அரசியல் சாபக்கேடாக கருதும் தரப்பில் சாய்ந்துவிடுகிறோம். அரசியலமைப்பு சபைக்காக காத்திருப்பது அர்த்தமற்றது, நிச்சயமாக அது நம் வசம் வராது, மேலும் இது நமது பணியை இன்னும் கடினமாக்கும்.

லெனின் அறிக்கை மீது நடக்கும் நீண்டவொரு பதட்டமான விவாதம், அடுத்த நாள் காலை வரையில் இரவு முழுவதும் நீள்கிறது. காமனேவும் சினோவியேவும் ஒரு கிளர்ச்சிக்கான லெனினின் அழைப்பை தொடர்ந்து எதிர்ப்பதுடன், அதற்கு பதிலாக கட்சி ஒரு "தற்காப்புவாத நிலைப்பாட்டை" ஏற்று, அரசியலமைப்பு சபையில் சாத்தியமானளவுக்கு பலமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் ஒருமுனைப்பட வேண்டுமென வாதிடுகின்றனர். அவர்களின் பார்வையில், அது கிளர்ச்சிக்குரிய சரியான நேரமாக இல்லை. அது தலைகீழாக எதிர்புரட்சியின் ஒரு தாக்குதலை மட்டுமே அதிகரிக்கும் என்பதோடு, அத்தகைய ஒன்று குட்டி-முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஆதரவைக் காணும் என்றவர்கள் வாதிடுகின்றனர்.

சினோவியேவ் மற்றும் காமனேவ் உடன் நடந்து வந்த கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, மத்திய குழு அங்கத்தவர்கள் இடையிலான விவாதங்கள், பெரிதும் இப்போது எழுச்சிக்கு தயாரிப்பு செய்வதா வேண்டாமா என்பதிலிருந்து விலகி, எப்போது எவ்வாறு செய்வது என்பதைச் சுற்றி சுழல்கிறது. எழுச்சிக்கான சரியான தருணத்தைக் கட்சி தவற விட்டுவிடக்கூடாது என்று கவலை கொண்டிருந்த லெனினுக்கு மாறுபட்டவகையில், ட்ரொட்ஸ்கி வாதிடுகையில், கிளர்ச்சி ஒரு கட்சி-சாரா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட வேண்டுமென்றும், நவம்பரின் தொடக்கத்தில் நடக்கவிருந்த இரண்டாவது அகில-ரஷ்ய சோவியத்துக்களின் மாநாட்டில் அதை நிறைவேற்றும் வகையில் அது திட்டமிடப்பட வேண்டுமென்றும் வாதிடுகிறார்.

இறுதியில், மத்தியக் குழுவின் அறுதி பெரும்பான்மை லெனினின் முன்மொழிவுக்கு 10 வாக்குகள் ஆதரவாகவும், இரண்டு வாக்குகள், காமனேவ் மற்றும் சினோவியேவ் வாக்குகளை எதிராகவும் பெற்று, நிறைவேறுகிறது.

இந்த வரலாற்று தீர்மானம் குறிப்பிடுகிறது:

சர்வதேச அளவில் ரஷ்ய புரட்சியின் இடம் (ஐரோப்பா எங்கிலும் உலக சோசலிச புரட்சிக்கான வளர்ச்சியினது ஒரு அதீத வெளிப்பாடாக ஜேர்மன் கடற்படை கலகம்; ரஷ்ய புரட்சியின் குரல்வளையை நசுக்கும் நோக்கில் ஏகாதிபத்தியவாதிகளின் சமாதான அச்சுறுத்தல்), அத்துடன் இராணுவ நிலைமை (பெட்ரோகிராட்டை ஜேர்மனியர்களுக்கு அடிபணிய செய்வதற்கு ரஷ்ய முதலாளித்துவ வர்க்கம் மற்றும் கெரென்ஸ்கி மற்றும் குழுவின் சந்தேகத்திற்கிடமற்ற முடிவு), மற்றும், பாட்டாளி வர்க்க கட்சி சோவியத்துக்களில் ஒரு பெரும்பான்மை பெற்றுள்ளது என்ற உண்மை—ஆகிய இவற்றை, விவசாயிகள் எழுச்சியுடனும் நமது கட்சியை நோக்கிய மக்களின் அதிகரித்த நம்பிக்கை உடனும் (மாஸ்கோ தேர்தல்கள்) இணைத்து பார்க்கையில், மேலும் இறுதியாக, இரண்டாவது கோர்னிலோவ் கலகத்திற்காக நடந்து வரும் வெளிப்படையான தயாரிப்புகள் (பெட்ரோகிராட்டில் இருந்து துருப்புகளைத் திரும்ப எடுத்துக் கொண்டமை, பெட்ரோகிராட்டுக்கு கொசாக்குகளை அனுப்பியமை, கொசாக்குகளைக் கொண்டு மின்ஸ்க்கை சுற்றி வளைத்தமை, இன்னும் இதர பிற நடவடிக்கைகள்) என—இவையனைத்தும் ஆயுதமேந்திய எழுச்சியை இன்றைய நாளின் வரிசையில் நிறுத்துகின்றன.

ஆகவே ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சி தவிர்க்கவியலாதது என்பதுடன், அதற்கான நேரம் முழுமையாக கனிந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு, மத்திய குழு, இதற்கேற்ப அனைத்து கட்சி ஒழுங்கமைப்புகளையும் வழிநடத்த வேண்டுமென்றும், இந்த கண்ணோட்டத்திலிருந்து அனைத்து நடைமுறை கேள்விகளையும் (வடக்கு பிரதேச சோவியத்துக்களின் மாநாடு, பெட்ரோகிராட்டில் இருந்து துருப்புகளைத் திரும்ப பெறுவது, மாஸ்கோ மற்றும் மின்ஸ்கில் நமது மக்களின் நடவடிக்கை, இதர பிற நடவடிக்கைகளையும்) விவாதித்து முடிவெடுக்குமாறும் அறிவுறுத்துகிறது.

கிளர்ச்சிக்கான குறிப்பிட்ட தேதி எதுவும் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் லெனின், ட்ரொட்ஸ்கி, சினோவியேவ், காமனேவ், ஸ்ராலின், புப்னொவ் மற்றும் சொகொல்னிகோவ் ஆகிய உள்ளடக்கி, கிளர்ச்சியை வழிநடத்துவதற்கென சிறப்பு பணியுடன் ஓர் அரசியல் குழுவை (பொலிட்பீரோ) உருவாக்க மத்தியக் குழு தீர்மானிக்கிறது.


October 29 (October 16, O.S.): Enlarged Central Committee meeting confirms resolution on armed uprising

அக்டோபர் 29 (O.S. நாட்காட்டியின்படி, அக்டோபர் 16): விரிவான மத்தியக் குழு கூட்டம் ஆயுதமேந்திய கிளர்ச்சி மீதான தீர்மானத்தை உறுதிப்படுத்துகிறது



பழைய போல்ஷிவிக்குகள் மற்றும் லெனினின் நெருக்கமான கூட்டாளிகள், காமனேவும் (இடது), சினோவியேவும் கிளர்ச்சியை எதிர்க்கின்றனர்

அக்டோபர் 23 அன்று (O.S. நாட்காட்டியின்படி, அக்டோபர் 10 இல்) மத்தியக் குழு, அதன் தீர்மானத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்த ஆயுதமேந்திய கிளர்ச்சி மீதிருக்கும் கருத்து வேறுபாடுகளைக் குறித்தும், எழுச்சிக்கான உறுதியான திட்டங்களைக் குறித்தும் விவாதிக்க போல்ஷிவிக் இராணுவ பிரிவு மற்றும் பீட்டர்ஸ்பேர்க் கமிட்டியின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறது.

போல்ஷிவிக் கட்சி தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு லேவ் காமனேவ் மற்றும் கிரிகோரி சினோவியேவ் ஆல் இன்னமும் குரல்கொடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பை எதிர்த்து, லெனின் ஆரம்ப அறிக்கையில் வலியுறுத்துகிறார்:

நாம் மக்களின் மனோநிலையால் வழிநடத்தப்படக் கூடாது, ஏனென்றால் அது மாறிக் கொண்டே இருக்கும் என்பதோடு, கணக்கீடுகளையும் மீறுகிறது. நாம் புறநிலை பகுப்பாய்விலிருந்தும் புரட்சியைக் குறித்த மதிப்பீட்டிலிருந்தும் நகர வேண்டும். பெருந்திரளான மக்கள் போல்ஷிவிக்குகளை நம்புகிறார்கள் என்பதோடு, அவர்களிடமிருந்து வெறுமனே வார்த்தைகளை அல்ல, நடவடிக்கைகளைக் கோருகிறார்கள். அவர்கள் போருக்கு எதிராகவும் மற்றும் சீரழிவுகளுக்கு எதிராகவும் போராடுவதற்கான ஒரு தீர்க்கமான கொள்கையைக் கோருகிறார்கள். புரட்சியைக் குறித்த ஓர் அடிப்படை அரசியல் பகுப்பாய்வு இதை முற்றிலும் தெளிவாக்குகிறது என்பதுடன், சமீபத்திய அராஜகவாத எழுச்சிகள் (anarchistic uprisings) இத்துடன் ஒத்துப் போகின்றன.

யகொவ் ஸ்வெட்லொவ் அவர் அறிக்கையில், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது சுமார் 400,000 ஆக பெருமளவில் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்துகிறார். டொனெட்ஸ்க் பிரதேசத்திலும், மின்ஸ்க் மற்றும் வடக்கு போர்முனையில் குவிக்கப்பட்டுள்ள எதிர்புரட்சிகர படைகளைக் குறித்த அறிக்கைகளையும் ஸ்வெட்லொவ் கூடுதலாக வழங்குகிறார்.

போக்கி (Bokii) மற்றும் க்ரெலென்கொ (Krylenko), முறையே, பீட்டர்ஸ்பேர்க் கமிட்டி மற்றும் இராணுவ பிரிவைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற வகையில், போல்ஷிவிக் இராணுவ பிரிவுக்குள் இன்னமும் அதிதீவிர இடது போக்குகள் பலமாக இருப்பதை பிரதிபலித்து, முக்கிய மாவட்டங்களிலும் பீட்டர்ஸ்பேர்க் காவற்படைகளிலும் (garrisons) தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் மன உணர்வுகளைக் குறித்த வேறுபட்ட மதிப்பீடுகளை வழங்கி, துருப்புகள் "ஒரே மனிதராக நம்முடன்" இருக்கிறார்கள் என்று வாதிட்டு கிளர்ச்சிக்கான தயாரிப்பு மீதான புள்ளிவிபர அம்சங்களை முடிவுக்குக் கொண்டு வருகின்றனர்.

காமனேவும் சினோவியேவும் ஓர் ஆயுத கிளர்ச்சிக்கான அவர்களின் எதிர்ப்பை மீளவலியுறுத்துவதுடன், அக்டோபர் 23 தீர்மானத்தை கைத்துறக்குமாறு மத்திய குழுவை வலியுறுத்துகிறார்கள்.

“நம்மை முழுமையாக தனிமைப்படுத்தும்" ஒரு நிலையைக் குறித்து சினோவியேவ் எச்சரிக்கிறார். காமனேவ் அவரை ஆதரித்து வாதிடுகையில், “ஒரு கிளர்ச்சிக்கான எந்திரம் நம்மிடம் இல்லை; நம் எதிரிகளிடம் ஒரு மிகவும் பலமான எந்திரம் உள்ளது, மேலும் அது இவ்வாரத்தின் போது அனேகமாக அதிகரித்திருக்கலாம் … அந்த தீர்மானம் செய்திருப்பதெல்லாம் அரசாங்கம் தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறது … ஒரு கிளர்ச்சியில் வெற்றியை உறுதிப்படுத்த நம் படைகள் போதுமானவை இல்லை, மாறாக அதீத பிற்போக்குத்தனத்தை தடுக்க மட்டுமே போதுமானவை. இங்கே இரண்டு தந்திரோபாயங்கள், அதாவது சதிக்கான தந்திரோபாயமும், மற்றது ரஷ்ய புரட்சியின் உந்துசக்திகளின் மீதுள்ள நம்பிக்கை மீதான தந்திரோபாயமும் ஒன்றோடொன்று மோதுகின்றன,” என்கிறார்.

அவர்களின் வாதங்களை, உக்ரேனிய போல்ஷிவிக் Mykola skrypnyk உட்பட மத்தியக் குழுவின் பல அங்கத்தவர்கள் எதிர்க்கின்றனர். எழுத்துப்பிரதியின்படி Mykola Skrypnyk குறிப்பிடுகிறார், “நமக்கு இப்போது பலமில்லை என்றால், இதை விட அதிகமாக பின்னர் கிடைக்க போவதில்லை. நம்மால் இப்போது அதிகாரத்தைப் பிடிக்க முடியாவிட்டால், பின்னர் அது இன்னும் மோசமடையலாம்.” Skrypnyk தொடர்கிறார், அங்கே வெற்றிக்கு உத்தரவாதம் கிடையாது என்றாலும், காமனேவும் சினோவியேவும் "மென்ஷிவிக்குகளுக்கும் சோசலிச புரட்சியாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்ட போது அவர்கள் என்ன கூறினார்களோ அதையே தான் திரும்ப கூறுகிறார்கள். நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியபோது, நாம் நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். பெருந்திரளான மக்கள் நம்மிடமிருந்து நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்கள். நாம் அவர்களுக்கு எதையும் வழங்கவில்லை என்றால், அதை அவர்கள் ஒரு குற்றமாக கருதுவார்கள். என்ன அவசியப்படுகிறது என்றால் ஒரு கிளர்ச்சிக்கான தயாரிப்பும், பெருந்திரளான மக்களுக்கான ஓர் அழைப்பும் ஆகும்.”

அந்த எழுத்துப்பிரதியின்படி, அக்கூட்டத்தின் முடிவில் லெனின், “ஒரு கிளர்ச்சியானது அரசியல்ரீதியில் தவிர்க்கவியலாதது என்றால், பின் கிளர்ச்சியை நாம் ஒரு கலையாக உரையாட வேண்டும். அரசியல்ரீதியில், ஏற்கனவே அது கனிந்துள்ளது. துல்லியமாக இது ஏனென்றால் அங்கே ரொட்டி ஒரேயொரு நாளுக்குத் தான் உள்ளது, நாம் அரசிலமைப்பு சபைக்காக காத்திருக்க முடியாது" என்று வாதிடுகிறார். தீர்மானம் உறுதி செய்யப்படட்டும், தீர்க்கமான தயாரிப்புகள் செய்யப்படட்டும், எப்போது என்பதை அதன் பின்னர் மத்திய குழுவும் சோவியத்தும் முடிவெடுக்கட்டும் என்று லெனின் முன்மொழிகிறார்.

முடிவாக, ஓர் ஆயுதமேந்திய எழுச்சிக்கான தயாரிப்பு அவசியமென்பதை மீண்டும் உறுதிப்படுத்தி, மத்திய குழு 20 வாக்குகளுடன் லெனினின் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. காமனேவும் சினோவியேவும் அத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கின்றனர், இன்னும் மூன்று உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டிருக்கவில்லை.

பின்னர், ஸ்வெர்ட்லொவ், ஸ்ராலின், புப்னொவ், உறிட்ஸ்கி மற்றும் டிஜெர்ஜின்ஸ்கி ஆகியோரை உள்ளடக்கிய ஓர் "இராணுவ-புரட்சி மையம்" (Military-Revolutionary Center) என்பதை மத்திய குழு தேர்ந்தெடுக்கிறது. இந்த மையம், பெட்ரோகிராட் சோவியத் நிறுவியிருந்த "சோவியத் புரட்சிகர குழுவின் பாகமாக ஆவதற்காக" வடிவமைக்கப்படுகிறது. அவ்விதத்தில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு வழிநடத்தும் பிரதான அமைப்பாக புரட்சிகர இராணுவக் குழு மாறக்கூடுமென மத்திய குழு முதல்முறையாக அறிவுறுத்துகிறது—உண்மையில் அது அவ்வாறு தான் மாறும்.


மைக்கேல் சி. ஹிக்கி: ரஷ்ய புரட்சியில் போட்டியிடும் குரல்கள், கிரீன்வுட் பிரசுரம் 2010, பக்கம். 427-439 என்பதிலிருந்து எழுத்துப்பிரதி மேற்கோளிடப்பட்டுள்ளது.

 

October 30-November 5: Bolsheviks marshal forces for the revolution

அக்டோபர் 30-நவம்பர் 5: போல்ஷிவிக்குகள் புரட்சிக்கான மார்ஷல் சக்தியாகின்றனர்

30 October 2017

இராணுவ புரட்சிக் குழு அரசாங்க உத்தரவை பகிரங்கமாக எதிர்த்து அறைகூவல் விடுத்த நிலையில், தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்களின் முக்கிய பிரிவுகளது நம்பகத்தன்மைகள் பரிசோதிக்கப்பட்டு, உறுதிபடுத்தப்படுகின்றன. இதற்கிடையே, இடைக்கால அரசாங்கத்தின் படைகள் தனிமைப்படுத்தப்பட்டு, பலவீனமடைகின்றன. ஒரு துப்பாக்கி தோட்டா கூட சுடப்படாமல், போல்ஷிவிக்குகள் அவர்களின் கரங்களுக்கு அதிகாரத்தை மாற்ற தொடங்குகின்றனர், அதேவேளையில் அரசு படைகள் அதிகாரம் அவற்றின் கரங்களிலிருந்து நழுவி செல்வதை உணர்கின்றன.

பெட்ரோகிராட், அக்டோபர் 31 (O.S. நாட்காட்டியின்படி, அக்டோபர் 18) : போல்ஷிவிக் தலைமை மீது காமனேவ் தொடுத்த தாக்குதலை கோர்க்கியின் Novaya Zhizn அச்சிடுகிறது


ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி, Novaya Zhizn இன் பதிப்பாசிரியர்

ஓர் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு தயாரிப்பு செய்வதென்ற போல்ஷிவிக் கட்சி மத்திய குழுவின் முடிவை எதிர்த்து, லேவ் காமனேவ் அக்டோபர் 20 (O.S. நாட்காட்டியின்படி அக்டோபர் 16) இல் மத்திய குழுவிலிருந்து இராஜினாமா செய்கிறார். லெனினின் தீர்மானம் மீதான அவர் ஆட்சேபணைகளை கட்சியின் மத்திய அங்கமான Rabochii put’ (தொழிலாளர்களின் பாதை) இல் பிரசுரிக்க வேண்டுமென அவர் கோருகிறார். பதிப்பாசிரியர் குழு இக்கோரிக்கையை நிராகரித்ததும், காமனேவ் அவர் நிலைப்பாடு குறித்த ஒரு சுருக்கமான தொகுப்புரையை மாக்சிம் கோர்க்கியின் பத்திரிகையான Novaya Zhizn’ (புதிய வாழ்வு) க்கு அனுப்புகிறார். கோர்கியின் பத்திரிகை உடனடியாக, போல்ஷிவிக் தலைமை மீதான காமனேவ்வின் தாக்குதலைப் பிரசுரித்து ஓர் எழுச்சிக்கான போல்ஷிவிக் தயாரிப்புகளை அம்பலப்படுத்துவதுடன், போல்ஷிவிக்கள் மீதான தனது கண்டனைகளையும் கோர்கி அதில் சேர்த்துக் கொள்கிறார்.

படைகளுக்கு இடையிலான இடைதொடர்பு நிலவுகின்ற நிலையில், சோவியத்துக்களின் மாநாட்டுக்கு பல நாட்களுக்கு முன்னதாக, இந்த தருணத்தில் ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கான முனைவை ஏற்பதென்பது, பாட்டாளி வர்க்கத்திற்கும் மற்றும் புரட்சிக்கும் சீரழிவை உண்டாக்கும் ஒரு ஏற்கத்தகாத நடவடிக்கையாக தோழர் [கிரிகோரி] சினோவியேவும் நானும் மட்டுமல்ல, மாறாக நடைமுறையில் பல தோழர்களும், கருதுகிறோம். … நிலவும் நிலைமைகளின் கீழ் ஓர் ஆயுதமேந்திய எழுச்சிக்கான எந்தவொரு முன்முயற்சிக்கு எதிராகவும் பேசுவது எங்களின் கடமையாகும், அத்தகைய ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி தோல்வியால் சபிக்கப்பட்டு, கட்சிக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் மற்றும் புரட்சியின் எதிர்காலத்திற்குமே கூட மிகவும் நாசகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்…

தொலைபேசி மூலமாக அக்கடிதத்தை அவருக்கு வாசித்துக் காட்டும் ஒரு தோழர் மூலமாக அதை குறித்து அறிந்து கொள்ளும் லெனின், சீற்றம் கொள்கிறார். அப்பதிப்பகம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டங்களை வெளியிட்டு விடுமென அஞ்சி, காமனேவும் சினோவியேவும் கட்சி ஒழுங்குமுறையை மீறியதற்காக அவர்களை மத்தியக் குழுவிலிருந்து நீக்குமாறு அவர் கோருகிறார். அதே நாளில் எழுதப்பட்ட, போல்ஷிவிக் கட்சி அங்கத்தவர்களுக்கான ஒரு கடிதத்தில், அவர் அவர்களின் "தாக்குதல்-முறிப்பு நடவடிக்கையை” கண்டிக்கிறார்:

காமனேவ் மற்றும் சினோவியேவின் எழுத்துக்களில் இருந்து, அவர்கள் மத்திய குழுவுக்கு எதிராக சென்றுள்ளனர், அல்லது வேறுவிதத்தில் அவர்களின் கருத்துக்கள் அர்த்தமற்றவை என்பது துல்லியமாக தெளிவாகிறது. ஆனால் மத்திய குழுவின் எந்த குறிப்பிட்ட முடிவுக்காக அவர்கள் வாதிடுகிறார்கள் என்றவர்கள் கூறவில்லை. ஏன்? காரணம் வெளிப்படையானது: ஏனென்றால் அது மத்திய குழுவால் பிரசுரிக்கப்படவில்லை. இதனால் என்ன கெட்டு போய்விட்டது? பற்றி எரியும் ஓர் அதிமுக்கிய பிரச்சினை மீது, முக்கிய தினமான அக்டோபர் 20 க்கு முன்னதாக, இரண்டு "உயர்மட்ட போல்ஷிவிக்குகள்" பிரசுரிக்க முடியாதென கட்சி மையம் எடுத்த முடிவைத் தாக்குகின்றனர், அதுவும் கட்சி பத்திரிகை அல்லாத பத்திரிகையில் என்பதை விட, இதே பிரச்சினை மீது தொழிலாளர்களின் கட்சிக்கு எதிராக முதலாளித்துவ வர்க்கத்துடன் இரகசியமாக கைகோர்த்திருக்கும் ஒரு பத்திரிகையில் அதை தாக்குகின்றனர்! ஆயிரம் முறை வெறுக்கத்தகுந்த இது, சான்றாக 1906-07 இல் கட்சி பத்திரிகை அல்லாத ஒன்றில் பிளெக்ஹானோவ் ஆல் வெளியிட்டு, கட்சியால் மிகவும் கூர்மையாக கண்டிக்கப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் விட மில்லியன் மடங்கு அதிக பாதிப்பு ஏற்படுத்த கூடியது! அப்போது அது தேர்தல்கள் மீதான ஒரு பிரச்சினையாக மட்டுமே இருந்தது, ஆனால் இப்போதோ இது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு கிளர்ச்சி சம்பந்தமான பிரச்சினையாகும்! இதுபோன்றவொரு பிரச்சினையில், மத்திய குழுவால் ஒரு முடிவெடுக்கப்பட்ட பின்னர், பிரசுரிக்க முடியாதென முடிவெடுக்கப்பட்ட இதை கட்சி பத்திரிகை அல்லாத ஒன்றில் Rodziankos மற்றும் Kerenskys இன் முன்னால் விவாதிப்பது—மிகவும் துரோகத்தனமானது அல்லது முதுகில் குத்துவதை விட மோசமான ஒரு நடவடிக்கை என்பதை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா? இவர்கள் முன்னர் என்னுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் என்பதற்காக இந்த முன்னாள் தோழர்களை கண்டிக்க நான் தயங்கினால், அது என் தரப்பிலிருந்து வெட்கக்கேடானது என்று நான் கருதுகிறேன். அவர்கள் இருவரையும் நான் இனி தோழர்களாக கருத முடியாது என்பதையும், மத்திய குழுவிலும் சரி காங்கிரஸிலும் சரி, அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்காக, எனது முழுப் பலத்தையும் கொண்டு போராடுவேன் என்று வெளிப்படையாக அறிவித்து கொள்கிறேன்.


ஆனால், நவம்பர் 2 (O.S. நாட்காட்டியின்படி அக்டோபர் 20) இல் நடந்த ஒரு மத்திய குழு கூட்டம், காமனேவ் மற்றும் சினோவியேவை வெளியேற்றுவதற்கு எதிராக முடிவெடுக்கிறது. அவர்களைக் கட்சியில் வைத்திருப்பதென்ற முடிவுக்கான முக்கிய காரணம், அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமற்ற துரோகத்தனமான நடவடிக்கை இருந்தாலும், உண்மையில் காமனேவும் சினோவியேவும் ஒட்டுமொத்தமாக போல்ஷிவிக் கட்சிக்குள் ஒரு பரந்த போக்கை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். சான்றாக, காமனேவ் மற்றும் சினோவியேவின் நிலைப்பாடுகள் அக்டோபர் 31 (O.S. நாட்காட்டியின்படி, அக்டோபர் 18) அன்று பெட்ரோகிராட்டில் நடந்த போல்ஷிவிக் பொது கூட்டம் ஒன்றில் பல அங்கத்தவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

பேர்லின், நவம்பர் 1: இரண்டாம் கெய்சர் வில்ஹெம் புதிய சான்சிலராக ஜோர்ஜ் பிரெடெரிக் கிராஃப் வொன் ஹெர்ட்லிங் ஐ பெயரிடுகிறார்


ஜோர்ஜ் பிரெடெரிக் கிராஃப் வொன் ஹெர்ட்லிங்

மூன்று மாதங்களில் இரண்டு சான்சிலர்கள் மாறிய பின்னர், கைய்சர் வில்ஹெல்ம், தலையாய-பழைவாத பாவேரிய மத்திய கட்சியின் (Bavarian Centre Party) அரசியல்வாதி ஜோர்ஜ் பிரெடெரிக் கிராஃப் வொன் ஹெர்ட்லிங்கை (Georg Friedrich Graf von Hertling) சான்சிலராகவும், பிரஷ்யாவின் அரசு தலைவராகவும் நியமிக்கிறார்.

அவர் நியமனத்திற்கு முன்னதாக, ஜேர்மன் நாடாளுமன்ற கட்சிகளின் பல்வேறு நாடாளுமன்ற குழுக்களுக்கும், அரசு அதிகாரத்துவத்திற்கும் மற்றும் இராணுவம் எதிலிருந்து பலம் பெறுகின்றதோ அந்த தலைமை இராணுவ கட்டளையகத்திற்கும் (OHL) இடையே நீண்ட நாட்களாக பலப்பரீட்சை நடந்திருந்தது. புதிய சான்சிலர் கிராஃப் வொன் ஹெர்ட்லிங், பீல்டு மார்ஷல் போல் வொன் ஹின்டென்பேர்க் (Paul von Hindenburg) மற்றும் தளபதி எரிச் லூடென்டொர்ஃப் (Erich Ludendorff) தலைமையிலான இராணுவ தளபதிகளின் சர்வாதிகார உட்குழுக்களின் ஒரு கைப்பாவையாக இருந்தார். OHL அவருக்கு ஆதரவாக இருந்தது ஏனென்றால், அவரது உடல் தளர்ச்சியும் வயதும் (74) ஒருபுறம் இருந்தாலும், அவர் முன்னாள் சான்சிலர் Theobald von Bethmann-Hollweg இன் செப்டம்பர் வேலைத்திட்டத்தில் உள்ளடங்கி இருந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு இலட்சியங்களையும், மற்றும் ஏப்ரல் 1917 இல் Bad Kreuznach மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்ட போர் நோக்கங்களையும் உறுதியாக ஏற்றுள்ளார். இதற்கு கூடுதலாக, கத்தோலிக்க பெரும் பெருநிலக்கிழார்கள் மற்றும் பணக்கார நகரத்தார்களின் ஒரு பிரதிநிதியாக அவர் பல தசாப்தங்களாக சமூக ஜனநாயகத்தின் கடுமையான எதிரியாக இருந்துள்ளார்.

கிராஃப் வொன் ஹெர்ட்லிங்கிற்கு முன்பிருந்த Georg Michaelis உம் OHL இன் ஓர் அரசியல் பினாமியாகவே பார்க்கப்பட்டார். ஆனால் ஒரு சில வாரங்களே அதிகாரத்திலிருந்த அவர், SPD இல் இருந்து முறிந்து சென்ற மத்தியவாத பிரிவான சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி (USPD) கோடையில் மாலுமிகள் கலகத்தை தூண்டியதன் மூலம் தேசத்துரோகமாக நடந்து கொண்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டி, அவர்களை அவர் கண்மூடித்தனமாக எதிர்கொண்டார். ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள், உலோக தொழிற்சாலை மற்றும் சுரங்க தொழிற்சாலைகளில் நடந்து கொண்டிருந்த வேலைநிறுத்த நிலைமைகளின் கீழ், இந்நகர்வு எரிந்து கொண்டிருந்த வர்க்க போராட்ட நெருப்பில் எண்ணெய்யை மட்டுமே ஊற்றியது. பகிரங்கமாக புரட்சிகர போராட்டங்கள் வெடிப்பதை ஒடுக்குவதற்காக, SPD, கத்தோலிக்க மத்திய கட்சி மற்றும் முற்போக்கு மக்கள் கட்சி (FVP) ஆகியவற்றின் ஒரு கூட்டணியை ஏற்படுத்தும் பொருட்டு, அக்டோபர் 20 இல் Michaelis இராஜினமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.

இலண்டன், நவம்பர் 2: பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் பால்ஃபோர் பிரகடனம் எழுதுகிறார்


ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர்

பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலர் ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் பிரபு (Lord Arthur James Balfour), ரோத்ஸ்சைல்ட் பிரபுக்கும் (Lord Rothschild) மற்றும் சியோனிச அமைப்புக்கும் எழுதிய ஒரு பதில் கடிதம், பின்னர் பால்ஃபோர் பிரகடனம் என்று அறியப்படுவதாக இருந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான ஒரு பெருநிலத்தை உருவாக்குவதை ஆதரிக்க பிரிட்டன் பொறுப்பேற்பதை அறிவிக்கும், அக்கடிதம், அக்டோபர் 31 அன்று பிரிட்டிஷ் போர்கால மந்திரிசபையின் ஒரு கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதில் பால்ஃபோர் எழுதுகிறார்:

அவரது மேதகு அரசாங்கம், பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தேசிய புகலிடத்தை நிறுவுவதை ஆதரவாக பார்க்கிறது, மேலும் இந்நோக்கத்தை எட்டுவதற்கு உதவியாக அது சிறந்த முன்முயற்சிகளை மேற்கொள்ளும். பாலஸ்தீனத்தில் இப்போதிருக்கும் யூதர்கள் அல்லாத சமூகத்தின் உள்நாட்டு உரிமைகள் மற்றும் மத உரிமைகள் மீதோ அல்லது வேறு நாடுகளில் வசிக்கும் யூதர்களுக்கு கிடைத்து வரும் உரிமைகள் மற்றும் அரசியல் அந்தஸ்துக்கோ கேடு விளைவிக்கும் வகையில் எதுவொன்றும் செய்யப்படாது என்பது தெளிவாக புரிந்து கொள்ளப்படுகிறது.

பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் படைகளோடு இணைந்து சண்டையிட யூத படையணியை நிறுவுவதற்கும்; வெற்றியாளர்களுக்கு இடையே ஒட்டோமான் பேரரசு துண்டாடப்பட்டதின் கீழ் பிரிட்டனால் ஆளப்பட இருந்த, போருக்குப்-பிந்தைய பாலஸ்தீனத்தில் குறிப்பிட்டளவில் ஐரோப்பிய யூதர்களைப் புலம்பெயர்த்துவதற்கும்; சிறிய முன்னாள் ஒட்டோமான் மாகாணத்தில் தேசிய அரசுகளை ஸ்தாபிக்க விரும்பிய அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு இடையிலான ஒரு நூற்றாண்டு கால மோதலுக்கும் பால்ஃபோர் பிரகடனம் (Balfour Declaration) வழி வகுக்கிறது.

1896 இல் ஐரோப்பிய யூதர்கள் முகங்கொடுத்த இன்னல்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு தீர்வாக Theodore Herzl ஆல் வரையறுக்கப்பட்ட சியோனிச சிந்தனையின் மையக்கரு, 3 இல் இருந்து 5 சதவீதத்திற்கு மிகாது என்று மதிப்பிடத்தக்க ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினரின் ஓர் அரசியல் அமைப்புக்குள் யூத தேசம் ஒன்றின் மறுபிறப்பைக் காட்டுகிறது. அதுபோன்றவொரு திட்டத்திற்கு ஒரு மேலாதிக்க சக்தியின் உதவி அவசியமாகும். எதிர்பார்த்ததற்கு முரண்பட்ட வகையில் துருக்கி, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரிய-ஹங்கேரியின் தரப்பில் போருக்குள் நுழைந்ததும், பிரிட்டன் படிப்படியாக அந்த சிந்தனையை வரவேற்க தொடங்கியது.

பால்ஃபோர் பிரகடனமானது, Chaim Weizmann உட்பட பிரிட்டனின் சியோனிசவாதிகளால் ஒரு யூத அரசுக்காக பல ஆண்டுகளால் செய்யப்பட்ட பரந்த பரப்புரையின் விளைவாகும். அட்லாண்டிக்கில் இருந்து பசிபிக் மத்திய பகுதி வரையில் பிரட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பல்வேறு பாகங்களை இணைக்கும் ஒரு மூலோபாய இடத்தில் பிரிட்டனுக்கு ஒரு வாடிக்கை அரசை பாதுகாத்து வைப்பதே அப்பிரகடனத்தின் நோக்கமாக உள்ளது—அவ்விதத்தில் தலையீட்டுக்கு ஒரு சாக்குபோக்கை வழங்குகிறது.

இவ்விதத்தில் பால்ஃபோர் பிரகடனம், ஒட்டோமான் பேரரசு பிராந்தியங்களின் எண்ணெய் வினியோகங்கள் மற்றும் வர்த்தகத்தை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வடிவமைக்கப்பட்ட பல்வேறு இரகசியமான, மோசடியான மற்றும் பரஸ்பர சமரசமற்ற உடன்படிக்கைகளை கொண்டுள்ளது. துருக்கியர்களுக்கு எதிராக மெக்காவின் Hashemite Sherif Hussein இன் ஆதரவுக்கு கைமாறாக, சிரியா, லெபனான், இஸ்ரேல்/பாலஸ்தீனம், ஜோர்டான், ஈராக் மற்றும் சவூதி அரேபியா என்று பின்னர் அறியப்படவிருந்த பிராந்தியங்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுமென 1915 இல் அவருக்கான இலண்டனின் வாக்குறுதியையும் அந்த உடன்படிக்கைகள் உள்ளடக்கி உள்ளன. இந்த வாக்குறுதிகள், போருக்குப் பின்னர் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனி ஆட்சிக்கு இடையே அப்பிராந்தியத்தைப் பங்கிட்டு கொள்வதற்கான வழிவகைகளை உள்ளடக்கி இருந்த, பிரான்சுடனான 1916 ஸ்கெஸ்-பைகாட் உடன்படிக்கையோடு (Sykes-Picot agreement) நேரடியாக முரண்படுகின்றன.

பெட்ரோகிராட், நவம்பர் 3 (O.S. நாட்காட்டியின்படி, அக்டோபர் 21): புரட்சிகர இராணுவக் குழு, அரசாங்கத்திற்கு பகிரங்கமாக அறைகூவல் விடுத்து இராணுவம் மீதான கட்டுப்பாட்டை அறிவிக்கிறது


ட்ரொட்ஸ்கி பெட்ரோகிராட்டுக்கு ரயிலில் வந்திறங்கியதும் உரையாற்றுகிறார்

நவம்பர் 2 அன்று புரட்சிகர இராணுவக் குழு, காவற்படை சிப்பாய்களின் மாநாட்டு அமர்வு ஒன்றை அதற்கடுத்த நாள் கூட்டுகிறது. அக்கூட்டம் ட்ரொட்ஸ்கியின் ஓர் உரையுடன் தொடங்குகிறது, அவர் அதிகாரத்திற்கான நேரடி போராட்டத்தில் பெட்ரோகிராட் சோவியத்தையும் புரட்சிகர இராணுவக் குழுவையும் ஆதரிக்குமாறு கோருகிறார். அதை செவிமடுத்த ஒருவர் நினைவுகூர்கிறார்:

ட்ரொட்ஸ்கியின் உரைக்குப் பின்னர், பலரும், அதிகாரத்தை உடனடியாக சோவியத்களுக்கு மாற்ற வேண்டியதன் அவசியத்தைக் குறித்து பேசத் தொடங்கினர்…

நான்காவது டொன் கொசாக் படைப்பிரிவின் பிரதிநிதி, கூடியிருந்தோர் மத்தியில் அறிவிக்கையில், அவர் படைப்பிரிவு குழு அடுத்த நாள் மத ஊர்வலத்தில் [அதாவது வலதுசாரி சக்திகளின் ஓர் ஆர்ப்பாட்டம்] பங்கெடுப்பதற்கு எதிராக முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார்.

பதினான்காவது டொன் கொசாக் படைப்பிரிவின் பிரதிநிதி, அவர் படைப்பிரிவு எதிர்புரட்சிகர நகர்வுகளுக்கு ஆதரவளிக்காது என்பது மட்டுமல்ல, அவர்கள் எங்கிருந்து வந்தாலும், அதன் முழு பலத்துடன் எதிர்புரட்சிக்கு எதிராக போராடுமென அறிவித்தபோது ஒரு பரபரப்பு ஏற்பட்டது. [அவர் கூறினார்,] “இந்த உணர்வுடன், நான் நான்காம் டொன் கொசாக் படைப்பிரிவின் எனது தோழர் கொசாக்குடன் கை குலுக்குகிறேன்.” (இவ்விடத்தில் அந்த பேச்சாளர் குனிந்து, நான்காம் படைப்பிரிவின் கொசாக்குடன் கைகுலுக்கினார்.) மேலும், இதற்கு பிரதிபலிப்பாக, கூட்டம் ஒப்புதலுக்கான உற்சாக குரல் எழுப்பி, இடி முழக்கமென நீண்ட நேரம் நீடித்து கைத்தட்டியது.

வரவிருக்கும் அகில-ரஷ்ய சோவியத்துக்களின் மாநாடு "அதிகாரத்தை அதன் கரங்களில் எடுத்து, சமாதானத்தையும், ரொட்டி மற்றும் மக்களுக்கு நிலங்களையும் வழங்க வேண்டுமென்ற" ஒரு கோரிக்கை உட்பட, கிளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பல தீர்மானங்களையும், சோவியத்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதை ஆதரிப்பது மற்றும் பாதுகாப்பதென சிப்பாய்களின் ஒரு சூளுரையையும் அக்கூட்டம் நிறைவேற்றியது.

அதற்கடுத்த நாள் ட்ரொட்ஸ்கி பெருந்திரளான சிப்பாய்களின் ஒரு கூட்டத்திற்கு மத்தியில் தோன்றுகிறார், பேச்சாளர்கள் உடனடியாக அவர் மேடை ஏற இடங்கொடுக்கிறார்கள். இரவு வரையில் நீளும் அக்கூட்டம், புரட்சிகர இராணுவக் குழுவை சிப்பாய்கள் ஆதரிப்பதா வேண்டாமா என்பதன் மீது வாக்கெடுப்பு நெருங்குகையில் பதட்டமடைகிறது. இறுதியில், புரட்சிகர இராணுவக் குழுவை ஆதரிக்கும் சிப்பாய்கள் இடப்புறமும், அதை எதிர்ப்பவர்கள் வலப்புறமும் செல்லுமாறு கோரப்படுகிறது. “உற்சாக கூச்சல்களுடன், அதிக பெரும்பான்மையினர் இடதுபுறம் சென்றனர்,” என்று போல்ஷிவிக் Mikhail Lashevich பின்னர் நினைவுகூர்கிறார்.

கிளர்ச்சிக்கு அஞ்சிய இடைக்கால அரசாங்கம், சிப்பாய்களை நகருக்கு வெளியே செல்ல உத்தரவிடுகிறது. பெரும் மனஎழுச்சிக்கு இடையே, சிப்பாய்கள் வெளியேற மறுக்கின்றனர், புரட்சிகர இராணுவக் குழுவின் ஒப்புதல் இல்லாத எந்த கட்டளைகளுக்கும் கீழ்படிய வேண்டாமென ட்ரொட்ஸ்கி சிப்பாய்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

(ஆதாரம்: அலெக்சாண்டர் ராபினொவிட்ச் இன் போல்ஷிவிக்குகள் அதிகாரத்திற்கு வருகின்றனர், ஹேமார்க்கெட் புத்தகங்கள், 2009, பக்கம். 240-241)

பெட்ரோகிராட், நவம்பர் 4 (O.S. நாட்காட்டியின்படி அக்டோபர் 22): முன்னணி போல்ஷிவிக்குகள் "பெட்ரோகிராட் சோவியத் தினம்" அன்று கிளர்ச்சிக்காக பிரச்சாரம் செய்கின்றனர்


பிரபல போல்ஷிவிக் பேச்சாளர் வி. வொலொடார்ஸ்கி

அக்டோபர் 22 (O.S.) ஞாயிற்றுக்கிழமை "பெட்ரோகிராட் சோவியத் தினமாக" அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரொட்ஸ்கி, வொலொடார்ஸ்கி, லாஷிவிச், கொல்லொன்டாய், ரஸ்கொல்னிகொவ், மற்றும் க்ரெலென்கொ உட்பட மிக பிரபலமான போல்ஷிவிக் பேச்சாளர்கள் அனைவரும் பெருந்திரளான கூட்டத்திலும் நகரெங்கிலுமான பெரும் பேரணிகளிலும் உரையாற்றுகின்றனர்.

நெவா ஆற்றங்கரையில் அமைந்த மக்களவை, சிறப்பு பேச்சாளர் ட்ரொட்ஸ்கியின் பேச்சைக் கேட்கும் ஆர்வத்துடன் பெரும் கூட்டத்தால் நிறைந்துள்ளது. ட்ரொட்ஸ்கி அவர் உரையில், அடுத்து நடக்கவிருக்கும் புரட்சியால் தூண்டிவிடப்படும் புரட்சி தீ ஒட்டுமொத்த உலகையும் சூழப் போகிறதென அறிவிக்கிறார். அங்கே இருந்த மென்ஷிவிக்-சர்வதேசவாதி சுக்ஹானோவ் பின்னர் நினைவுகூர்கிறார்:

என்னைச் சுற்றிலும் ஓர் ஆனந்த பரவச உணர்வு நிறைந்திருந்தது. கூட்டம், தன்னியல்பாக தானே ஒருங்கிணைந்து ஏதேனும் மதப் பாடலை பாடக்கூடும் என்பதாக தெரிந்தது. ட்ரொட்ஸ்கி பொதுப்படையாக ஒரு சிறிய தீர்மானத்தை நெறிப்படுத்தினார்…

[அத்தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் யார்?] ஆயிரக் கணக்கானவர்களின் கூட்டம், ஒரே ஒருத்தரைப் போல, அதன் கரங்களை உயர்த்தியது…

ட்ரொட்ஸ்கி தொடர்ந்து பேச தொடங்கினார். எண்ணிக்கையில் அடங்கா அக்கூட்டம் தொடர்ந்து அதன் கைகளை உயர்த்தியவாறே இருந்தது. ட்ரொட்ஸ்கி அசகாய சொல்லாட்சியோடு உரைத்தார்: “உங்களின் இந்த வாக்கு உங்களின் சூளுரையாக இருக்கட்டும் — புரட்சியை வெற்றியோடு முடிவுக்கு கொண்டு வர தன்மீது மாபெரும் சுமையைத் சுமந்துள்ள சோவியத்துக்கு ஆதரவாகவும், நிலம், ரொட்டி மற்றும் சமாதானத்தை வழங்கவும், உங்களின் முழு பலமும் எல்லாவித தியாகமும் இதில் உள்ளது!”

அந்த பாரிய கூட்டம் இன்னமும் அதன் கரங்களை உயர்த்தியவாறே இருந்தது. அது உடன்பட்டது. அது சூளுரைத்தது …

போல்ஷிவிக்குகளுக்கு விரோதமான Rech’ பத்திரிகையின் ஒரு செய்தியாளர், அந்த பாரியளவிலான கூட்டம் அதன் கரங்களை உயர்த்தியவாறே, “நாங்கள் இதற்கு உறுதியளிக்கிறோம்!” என்று உச்சரித்தவாறு இருந்தது என்று பதிவு செய்கிறார். (ஆதாரம்: அலெக்சாண்டர் ராபினொவிட்ச், போல்ஷிவிக்குகள் அதிகாரத்திற்கு வருகிறார்கள், ஹேமார்க்கெட் புத்தகங்கள், 2009, பக்கங்கள். 242) ரஷ்ய புரட்சியின் வரலாற்றில் ட்ரொட்ஸ்கி எழுதுகிறார்:

இதே காட்சியை நகர மையப் பகுதியிலிருந்து புறநகர் பகுதிகள் வரையில் நகரின் அனைத்து பகுதிகளிலும் சிறியளவிலாவது காண முடிந்தது. நூறாயிரக் கணக்கானவர்கள், ஒரே நேரத்தில், தங்களின் கரங்களை உயர்த்தி அப்போராட்டத்தை இறுதி வரையில் முன்னெடுத்து செல்ல சூளுரைத்தனர். சோவியத்துக்கள், சிப்பாய்களின் பிரிவுகள், காவற்படை அணிதிரள்வு, ஆலை மற்றும் அங்காடி குழுக்கள் என இவர்களின் அன்றாட கூட்டங்கள், தலைவர்களின் ஒரு மிகப்பெரிய குழுவுக்கு உள்ளார்ந்த நல்லிணக்கத்தை வழங்கியிருந்தன; பெருந்திரளான மக்களுக்கான பிரத்யேக கூட்டங்கள் ஆலைகளையும் படைப்பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தி இருந்தன; ஆனால் அந்நாளில், அக்டோபர் 22 அன்று, திட்டவட்டமாக செயல்படும் பெருந்திரளான மக்கள் உயர் வெப்பநிலையில் கொதிப்பேறிய ஒரு மிக பிரமாண்டமான கொப்பரையாக இருந்தனர். ஒவ்வொரு தரப்பும் மற்ற தரப்பு குறித்து திருப்திகரமாக இருந்தது. இனியும் காலந்தாழ்த்த முடியாது! என்பதில் தலைவர்கள் உடன்பட்டிருந்தார்கள். இதை செய்வதற்கு இதுவே சரியான நேரம்! என மக்கள் அவர்களுக்குள் கூறிக் கொண்டனர்.

நவம்பர் 4-5 (O.S. நாட்காட்டியின்படி, அக்டோபர் 22-23): இடைக்கால அரசாங்கம் பெட்ரோகிராட்டில் எதிர்புரட்சியை உயிர்ப்பிக்க முயல்கிறது


பெண்களினது முதல் பெட்ரோகிராட் அதிரடி பட்டாலியன், கெரென்ஸ்கி அரசாங்கத்திற்கு விசுவாசமாக உள்ளது

“இரத்தம் மற்றும் இரும்புப்பிடி" ஆட்சியின் “தனிப்பெரும் தலைவரும்" சர்வாதிகாரியுமான அலெக்சாண்டர் கெரென்ஸ்கியால், ஒன்றும் செய்யவியலாது, போல்ஷிவிக்குகள் நடத்திய பெரும் பேரணிகளைக் குறித்த செய்திகளை ஒன்று மாற்றி ஒன்றாக செவிமடுக்க மட்டுமே முடிகிறது. அவர் அரசாங்கம் முடமாகி உள்ளது. போல்ஷிவிக்குகளுக்கு எதிராக அவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அது பரவலாக ஓர் எதிர்புரட்சிகர நடவடிக்கையாக உணரப்பட்டு மேற்கொண்டும் போல்ஷிவிக்-ஆதரவு உணர்வுகளுக்கு எரியூட்டுமோ என்று கெரென்ஸ்கியும் அவர் அமைச்சர்களும் அஞ்சுகின்றனர். முன்னர் கோர்னிலோவ் முயன்றதைப் போன்ற அதேமாதிரியான மற்றொன்றை பெட்ரோகிராட்டில் அணிவகுக்க செய்து, “சட்டம் ஒழுங்கை மீட்க" போர்முனையிலிருந்து துருப்புகளை வரவழைக்குமாறு அங்கே முன்மொழிவுகள் உள்ளன, ஆனால் தலைநகருக்கு வரவழைக்கப்படும் எந்தவொரு சிப்பாய்களும் வெறுமனே போல்ஷிவிக்குகளின் தரப்பிற்கே செல்வார்கள் என்ற அச்சங்களால் இந்த முன்மொழிவுகள் இறுதியில் நிராகரிக்கப்படுகின்றன.

இதற்கிடையே ஒவ்வொரு இடத்தில் உள்ள சிப்பாய்களும் புரட்சிகர இராணுவக் குழுவுக்கு அவர்களின் விசுவாசத்தை அறிவிக்கின்றனர். சோவியத் ஆணையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் சிப்பாய்கள் எந்தவொரு கட்டளைக்கும் கீழ்படிய மாட்டார்கள். அரசாங்கம், வேறு வழியின்றி, இராணுவ பயிலகத்திலிருந்து காடேட் அதிகாரிகளையும், லெஷோவாவில் இருந்து முதல் பெட்ரோகிராட் பெண்கள் அதிரடி பட்டாலியனையும், அவர்கள் நம்பி கணக்கில் எடுக்க கூடிய விசுவாசமான பிற பிரிவுகளின் ஒரு சிறிய குழுவையும் குளிர் மாளிகைக்கு வரவழைக்க முடிவெடுக்கிறது.

ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு முன்னதாக பெட்ரோகிராட் வீதிகளின் ஒரு காட்சியை ட்ரொட்ஸ்கி ரஷ்ய புரட்சியின் வரலாற்றில் விவரிக்கிறார்:

இது அக்டோபர் மாதம். குரோன்ஸ்ரட் திசையிலிருந்து கடுங்குளிர் பால்டிக் காற்று பெட்ரோகிராட்டின் ஓடத்துறையை ஒட்டி சதுக்கங்களின் வழியாக வீசிக் கொண்டிருக்கிறது. குதிக்கால் வரை நீண்ட மேல் அங்கிகளில் ஜூங்கர்கள், தங்களின் மனக்கவலைகளை மறக்க வெற்றி கீதங்களில் மூழ்கியவாறு, வீதிகளில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

குவிக்கப்பட்டிருந்த பொலிஸ், அவர்களின் புத்தம்-புதிய தோலுறையில் வைக்கப்பட்ட துப்பாக்கிகளோடு, மேலும் கீழுமாக துள்ளி குதித்தவாறு நடந்து கொண்டிருந்த குதிரைகளில் பவனி வருகின்றனர். இல்லை. அதிகாரம் இன்னும் போதுமானளவுக்கு அத்துமீறி இருப்பதாக தெரிகிறது! அல்லது இது ஒருவேளை பார்வைக்கு ஒரு பிரமையாக இருக்குமோ? நெவிஸ்கி முனையில், புத்திஜீவித அகக்கண்களோடு ஒன்றும் அறியாதவர் போல ஓர் அமெரிக்கர், ஜோன் ரீட், இப்போது பணத்திற்கு பதிலாக புழக்கத்தில் இருக்கும் தபால்தலைகளில் ஒன்றை விலையாக கொடுத்து, போல்ஷிவிக்குகளால் அரசு அதிகாரத்தைப் பிடிக்க முடியுமா? என்று தலைப்பிட்ட லெனினின் துண்டறிக்கையை வாங்குகிறார்.

கெரென்ஸ்கி, கடைசி தருணத்தில், கடுமையான ஒரு விளாசலாக, ட்ரொட்ஸ்கி உட்பட போல்ஷிவிக் தலைவர்களைக் கைது செய்ய உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். மந்திரிசபையும் போல்ஷிவிக் பத்திரிகைகளான Rabochii Put’ மற்றும் Soldat (மற்றும், பாரபட்சமின்றி இருப்பதாக காட்டுவதற்காக, இரண்டு தீவிர வலது பத்திரிகைகளையும்) மூடுமாறு உத்தரவிடுகிறது. அப்பத்திரிகைகளின் பதிப்பாசிரியர்களைக் கைது செய்ய உத்தரவாணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. அக்டோபர் 23-24 (O.S.) இரவு, அரசாங்க படைகள் போல்ஷிவிக் அச்சு அலுவலகங்களை சோதனையிட்டு, மூடுகின்றன. இந்நகர்வு, பலத்தைக் காட்டுவதற்காக செய்யப்பட்டாலும், இதுவே இடைக்கால அரசாங்கம் பதவியிலிருந்து செய்த கடைசி நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

பேர்லின், நவம்பர் 5: ஜேர்மனிக்கும் ஆஸ்திரிய-ஹங்கேரிக்கும் இடையிலான மாநாடு "இறுதி வெற்றி" வரையில் போரை உறுதிப்படுத்துகிறது


ஜேர்மனியின் வெளியுறவு விவகாரங்களுக்கான அரசு செயலர் Richard von Kühlmann

ஜேர்மனியின் வெளியுறவு விவகாரங்களுக்கான அரசு செயலர் (வெளியுறவுத்துறை அமைச்சர்) Richard von Kühlmann தலைமையின் கீழ், ஜேர்மனிக்கும் ஆஸ்திரிய-ஹங்கேரிக்கும் இடையிலான இரண்டு நாள் நீடித்த ஒரு மாநாடு அச்சு நாடுகளின் (Axis Powers) போர் நோக்கங்களை மீளமதிப்பீடு செய்ய ஒன்று கூடுகிறது. ஏகாதிபத்திய மற்றும் அரச வெளியுறவுத்துறை அமைச்சர் Ottikar Czernin தலைமையில் வியன்னாவிலிருந்து பிரதிநிதிகள் குழு வந்துள்ளது.

சமீபத்திய நாட்களில், புதிய ஜேர்மன் சான்சிலர் Graf von Hertling இன் நியமனத்திற்குப் பின்னர், ஜேர்மனியின் போர் நோக்கங்கள் அரசாங்கத்திற்கும், OHL, பிரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், அரச குழு மற்றும் கெய்சருக்கும் இடையே உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இப்போது நடைமுறையில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய கூட்டாளிக்கு விவரிக்கப்பட வேண்டியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில், போர் கொள்ளையிடல்களை முன்னர் திட்டமிட்டப்பட்டதை விட வேறு விதமாக பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. ஓராண்டுக்கு முன்னர், ஜேர்மன் அரசாங்கம் ஒரு சுதந்திர போலாந்தைப் பிரகடனப்படுத்தியது, இது யதார்த்தத்தில் ஜேர்மனியின் அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ செல்வாக்கு எல்லையை கூடுதலாக கிழக்கில் ரஷ்ய எல்லைகள் வரையில் விரிவுபடுத்துவதற்காக, ஜேர்மன் சாம்ராஜ்ஜியத்தின் மேலாளுமையில் இருந்தது. ரோமானியா மீது ஹப்ஸ்பேர்க் க்கு முழு கட்டுப்பாட்டை வழங்கியதன் மூலமாக, ஆஸ்திரிய-ஹங்கேரியின் எல்லை இழப்புகளை ஈடு செய்ய வேண்டியதாக இருந்தது.

இந்த மூலோபாயம் இப்போது கைவிடப்படுகிறது, ஏனென்றால், ஒரு பெயரளவிலான சுதந்திர போலாந்து ஜேர்மன் சாம்ராஜ்ஜியத்தின் கிழக்கில் வாழும் பல போலாந்தியர்களிடையே எதிர்ப்பு போக்குகள் எழுவதை ஊக்குவித்து, அந்த சாம்ராஜ்ஜியத்தின் ஸ்திரப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதை கடந்த 12 மாதங்கள், ஏனைய பிற விடயங்களோடு சேர்ந்து, எடுத்துக் காட்டியுள்ளன. இதற்கு பதிலாக, காங்கிரஸ் போலாந்து, கலிசியா மற்றும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த போலாந்தின் பகுதிகளை ஆஸ்திரிய-ஹங்கேரிக்கு வழங்க வேண்டியிருக்கும்.

ஆகவே பேர்லின் அதன் கூட்டாளி மீது நிபந்தனைகளைச் சுமத்துகிறது: (1) போலாந்து எல்லை பிரதேசத்தின் ஒரு பரந்த பகுதி ஜேர்மன் பேரரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்; (2) ஆஸ்திரேலிய-ஹங்கேரி நிர்வகிக்கும் போலாந்தில் ஜேர்மனி அதன் பொருளாதார மற்றும் இராணுவ மேலாதிக்க செல்வாக்கை தக்க வைக்கும்; (3) லிதுவேனியா மற்றும் குர்லாந்தின் பால்டிக் அரசுகள் முழுமையாக ஜேர்மன் பேரரசுடன் ஒருங்கிணைக்கப்படும்; (4) ஆஸ்திரியா ரோமானியா மீதான அதன் அனைத்து உரிமைகோரல்களையும் கைவிட வேண்டும், ரோமானியா உடனடியாக ஜேர்மன் நலன்களுக்கான செல்வாக்கு எல்லையாகிறது; மற்றும் (5) ஆஸ்திரிய-ஹங்கேரி அதன் நட்பு நாடுகளது அணியுடன் ஒட்டுமொத்தமாகவோ அல்லது அதன் ஏதேனும் அங்கத்துவ நாடுகளுடனோ எந்த தனிப்பட்ட சமாதானம் எட்டக்கூடாது. அதற்கு பதிலாக, அது, மேற்கில் பேர்லின் அதன் நோக்கங்களையும், பெல்ஜியத்துடன் பொருளாதார ஒருங்கிணைவு, Longwy-Briey இல் உள்ள பிரெஞ்சு இரும்பு தாது மற்றும் நிலக்கரி சுரங்கங்களை இணைப்பது, லூக்செம்போர்க்கை இணைப்பது வரையில், மற்றும் மத்திய ஆபிரிக்காவில் அதன் நோக்கங்களை எட்டும் வரையில், அதனுடன் சேர்ந்து "இறுதி வெற்றி" வரையில் ஜேர்மனியுடன் இணைந்து சண்டையிடும்.

ஹம்ஸ்பேர்கின் பிரதிநிதிகள் குழு இந்த கோரிக்கைகளை ஜீரணிப்பதையே சிரமமாக காண்கிறது என்றாலும் எதிர்ப்பின்றி அவற்றை ஏற்றுக் கொள்கிறது. பேர்லினால் அவமதிப்போடு பார்க்கப்படுகின்ற ஆஸ்திரிய இராணுவத்தின் சீரழிந்த நிலைமைகளின் கீழ், வியன்னா வேறு வழியின்றி உள்ளது.

தனது போர் நோக்கங்களில் இந்த புதிய மாற்றங்களோடு, ஜேர்மன் பேரரசின் இராணுவ மற்றும் அரசியல் தலைமை, அது போர் தொடங்கிய போது ஏற்றிருந்த முன்னாள் சான்சிலர் Bethmann-Hollweg இன் செப்டம்பர் வேலைத்திட்ட கருத்துருக்களுக்கு மீண்டும் திரும்புகிறது: அதுவாவது, வெற்றியாளராக ஜேர்மனி கட்டளையிடும் சமாதானம் இல்லாமல் போர் நிறுத்தப்படக்கூடாது; ஒரு மத்திய ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பின் விரிவாக்கமும் ஒருங்கிணைப்பும் ஜேர்மன் தலைமையின் கீழ் இருக்க வேண்டும்; ஜேர்மன் ஏகாதிபத்தியம் அருகிலுள்ள கிழக்கு பகுதியில் (Near East) அதன் பிரிட்டிஷ் போட்டியாளரை எதிர்கொள்வதற்கேற்ப, ஓர் இராணுவ மற்றும் பொருளாதார பாலமாக ரோமானியாவை ஒருங்கிணைக்க வேண்டும்.

இந்த கொள்கைகளுக்கும், உலக போரில் இராணுவ படைகளின் நிஜமான உறவுகளுக்கும் அல்லது யதார்த்தத்திற்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை. போரில் அமெரிக்கா நுழைந்து வெறும் ஆறு மாதங்களில், இப்போது நட்பு நாடுகளின் மேலாதிக்க சக்திகளுடன் அச்சு நாடுகளால் சமாதானம் பேச முடியுமா என்ற கேள்விக்கே இப்போது முற்றிலும் இடமில்லாமல் போனது, இது இத்தகைய எந்தவொரு குழம்பிய போர் நோக்கங்களையும் எட்டுவதற்கு முன்நிபந்தனையாக உள்ளது.

ஆனால் ரஷ்ய இராணுவத்தைப் பிடித்திருந்த புரட்சிகர உணர்வுகளின் காரணமாக கிழக்கு போர்முனையில் அவர்களின் எதிராளி பலவீனமடைந்து வரும் செய்திகளும், (இத்தாலியில் Caporette எனப்படும்) Karfreit போர் வெற்றி போன்ற மட்டுப்பட்ட வெற்றிகளும், இராணுவ உயர்மட்ட கட்டளையகம், கெய்சர் மற்றும் நீதிமன்ற காமரில்லா (camarilla) இடையே ஒரு குதூகல சூழலை உருவாக்குகிறது. அவர்களின் வெளிநாட்டு எதிரிகளையும், உள்நாட்டில் சிப்பாய்கள் மற்றும் மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பையும் அவர்கள் முன்பினும் கூடுதல் ஆக்ரோஷத்துடனும் ஈவிரக்கமின்றியும் அணுக துணிகிறார்கள்.