ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

15

It Was All Engels’ Fault: A Review of Tom Rockmore’s Marx After Marxism1

எல்லாம் எங்கெல்சின் தவறு: ரொம் ரோக்மோரின் மார்க்சிசத்திற்குப் பின்னர் மார்க்ஸ் பற்றிய மதிப்புரை1

 

பென்சில்வேனியாவில் Duquesne பல்கலைக்கழகத்தில் மெய்யியல் (Philosophy) கற்பிக்கும் ரொம் ரோக்மோர் தன்னுடைய நூலான மார்க்சிசத்திற்கு பின்னர் மார்க்ஸ்: கார்ல் மார்க்சின் மெய்யியல் என்ற அவரின் நூலை பின்வரும் அறிக்கையுடன் ஆரம்பிக்கிறார்.

"ஓர் அரசியல் அணுகுமுறை என்ற வகையில், தாராளவாத முதலாளித்துவத்திற்கு ஒரு வரலாற்றுரீதியான மாற்றீடு என்னும் வகையில் மார்க்சிசம் தோல்வியுற்றதென்பது வெளிப்படையாக உள்ளது அல்லது குறைந்தபட்சம் வெளிப்படையாக இருக்க வேண்டும். 1989ம் ஆண்டு சோவியத் முகாமின் விரைவான முடிவுக்கு பின்னரும், 1991ல் சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னரும், இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் முக்கிய செல்வாக்கு செலுத்திய, சர்வாதிபத்திய மார்க்சிசத்திற்கும் (Totalitarian Marxism) தாராளவாத முதலாளித்துவத்திற்கும் இடையிலான எதிர்முரண்கள் கரைந்துவிட்டன. இதன் விளைவாக தற்கால தொழிற்துறைமயமாகியுள்ள உலகம், தாராளவாத பொருளாதார, தாராளவாத ஜனநாயகக் கொள்கைகளின் அடித்தளத்தில் தன்விருப்பற்ற ஒரு பாஸ்கலிய விவாதத்தினுள் (Pascalian wager) இறுதியாக புகுந்துவிட்டது. இதை எழுதும் நேரத்தில் தற்கால தாராளவாத பொருளாதார கொள்கை என்பது உண்மையில் தொழிற்துறைமயமாக்கப்பட்டுள்ள உலகில் எந்த உண்மையான போட்டியையும் கொண்டிருக்கவில்லை."2

"அரசியல் மார்க்சிசம்" மடிந்துவிட்டது என்னும் ரோக்மோரின் அறிவிப்பானது கல்வியாளர்களிடையே நிலவும் பின்வரும் பொதுப்பார்வையின் மாதிரியில் உள்ளது: அதாவது சோவியத் ஒன்றியத்தின் முடிவு என்பது மார்க்சிசத்தின் முடிவாகும். ஆனால், இந்தக் கூற்றுக்கு அடித்தளம் என்ன? பழைய சோவியத் அதிகாரத்துவத்தின் அரசியல், மார்க்சிசத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது என்ற அடிப்படைக்கூற்றிற்கு அப்பால் ஒன்றும் இல்லை. இந்த அடிப்படைக்கூற்று, பேராசிரியத்தன குழுமத்தின் சமூக, அரசியல் கண்ணோட்டத்தை பற்றி அதிகம் கூறுகின்றதே அன்றி மார்க்சிசத்தை பற்றி அல்ல. விஞ்ஞானபூர்வ உலக கண்ணோட்டத்தை கொண்ட மார்க்சிசத்தை, இந்தக் கல்வியாளர்கள் பிற்போக்குத்தனமான தேசியவாத அரசியலை அடிப்படையாக கொண்டிருந்த கிரெம்ளின் அரசியலுடன் எந்த அடிப்படையில் சமன்படுத்துகின்றனர்? பொதுவாக அவர்கள் இந்தப் பிரச்சினையை முற்றிலும் நிராகரிக்கிறார்கள். அவர்களின் அகங்கார நிலையிலிருந்து, கிரெம்ளின் தன்னலக்குழுவிற்கு எதிராக பல தசாப்தங்களாக புரட்சிகர மார்க்சிசவாதிகள் நிகழ்த்திய உண்மையான அரசியல் போராட்டங்களை அவர்கள் குறைமதிப்புடன்தான் காண்கின்றனர். அத்தகைய போராட்டங்கள் வெறும் "குறுங்குழுவாத பூசல்கள்" என்ற நினைப்பும், அது பற்றி ஆராய இந்த அனுசரித்துபோகும் பேராசிரியர்களுக்கு நேரமில்லை. அவர்களை பொறுத்தவரையில், குறைந்தது 1991 வரை கிரெம்ளின் அதிகாரத்துவம் உண்மையான அதிகாரத்தை கொண்டிருந்தது என்பதை உணர்ந்தால் போதுமானது என்று உள்ளது. வேறுவிதமாக கூறுவதானால், அதிகாரத்துவம் ஒரு சக்திவாய்ந்த நாட்டை கட்டுப்படுத்தியதுடன், மிகக்கணிசமான நிதியுதவிகளை வழங்கக்கூடிய திறனையும் கூடக் கொண்டிருந்தது; அதில் ஒருபகுதி சர்வதேச கருத்தரங்குகளுக்கு செலவழிக்கப்பட்டது; அவற்றில் இந்த இடது கல்வியாளர்கள் களிப்புடன் பகட்டாகக் கலந்து கொண்டனர்.

சரியாக வரையறுத்துகூறுவதானால், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் மற்றும் நடைமுறை ஆகியவற்றிற்கு தத்துவார்த்த அடித்தளத்தை அளித்தது மார்க்சிசம் என்ற வகையில், 1920களின் கடைசிப் பகுதியிலிருந்து, அதாவது சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து, இடது எதிர்ப்பில் இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை உத்தியோகபூர்வமாக வெளியேற்றிய பின்னர், அதற்கு சோவியத் ஆட்சியின் கொள்கையில் எந்தப் பங்கும் இல்லை. சோவியத் ஆட்சியில் இருந்த மார்க்சிசத்தின் மூலங்களை கிரெம்ளின் நிராகரித்ததானது, சோவியத்திற்குள் எஞ்சியிருந்த மார்க்சிச, புரட்சிகர புத்திஜீவிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினருக்கு எதிராக பரந்த அரசியல் கொலைப் பிரச்சாரத்துடன் 1930களில் இரத்தக்கறையுடன் முடிவிற்கு வந்தது. மாஸ்கோ வழக்குகள் மற்றும் நூறாயிரக்கணக்கான புரட்சிகர சோசலிஸ்டுகளின் படுகொலைகளில் முடிந்த அதைத் தொடர்ந்த களையெடுப்புக்கள் விரும்பத்தகாதவர்களின் நீக்கங்கள் என்பன, ஸ்ராலின் மற்றும் கிரெம்ளினில் இருந்த அவருடைய சகாக்கள் முன்னின்று நிகழ்த்திய சர்வதேச எதிர்ப்புரட்சிகர வேலைத்திட்டத்தில் முன்னணியில் இருந்தவையாகும்.

1933 ஆரம்ப காலங்களில் இருந்தே, ஹிட்லர் அதிகாரத்தை கைப்பற்றுவதை சாத்தியப்படுத்திய ஸ்ராலினிஸ்டுகளின் ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் காட்டிக்கொடுப்பை தொடர்ந்து, ட்ரொட்ஸ்கி கிரெம்ளினில் உள்ள அதிகாரத்துவத்தின் ஆட்சியை, ஓர் அரசியல் புரட்சி மூலம் தூக்கியெறிய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ட்ரொட்ஸ்கியின் பிரச்சினை பழிவாங்குதல் என்பதாக இல்லாமல், சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாத்தலாக இருந்தது. அதிகாரத்துவம், தொழிலாள வர்க்கத்தால் தூக்கியெறியப்படாவிட்டால், ஸ்ராலினிச ஆட்சியின் கொள்கைகள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பலமுறையும் அவர் எச்சரித்தார். ஸ்ராலினிசம் ஒரு நெருக்கடியின் ஆட்சி, கிரெம்ளின் அதிகாரத்துவத்தின் தேசியவாத வேலைத்திட்டம் பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாக திவால்தன்மையானது, அதிகாரத்துவத்தின் தன்னிறைவு (Autarkic) பொருளாதார கொள்கைகள், சோவியத் ஒன்றியத்தை முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்த உலக பொருளாதாரத்தின் அழுத்தத்திலிருந்து நீண்ட காலத்திற்கு காப்பாற்ற முடியாது, சோவியத் ஒன்றியத்தின் விதியானது, மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளில் ஏற்படும் சோசலிசப் புரட்சியின் வெற்றியைச் சார்ந்துள்ளது என்ற ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தல்கள் நான்காம் அகிலத்தின் மார்க்சிச வேலைத்திட்டத்தின் இன்றியமையாத கூறுபாடுகளாக இருந்தன.

1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது, ட்ரொட்ஸ்கியின் ஆய்வினை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், மார்க்சிசம் ஒரு விஞ்ஞானபூர்வமான அரசியல் முன்னோக்கு என்பதையும் கூட உறுதிப்படுத்தியது. சமூக விஞ்ஞானத்தில் வல்லுனர்கள் எனக் கூறிக்கொள்ளும் கல்விமான்களுக்கு, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் நிலைநிறுத்தப்பட்ட மார்க்சிச ஆய்வு, அசாதாரணமான வகையில் தொலைநோக்குடையது என நிரூபிக்கப்பட இருந்ததை ஒப்புக்கொள்வது பொருத்தமானதாக இருந்திருக்கும். இவர்களில் பெரும்பாலானோர், சோவியத் யூனியன் ஒரே நாளில் மறைந்துவிடும் என்று கற்பனையும் செய்ததில்லை.

எவ்வாறிருப்பினும், அத்தகைய புத்திஜீவித அடக்கத்தின் வெளிப்பாடுகள் எதையும் காணமுடியாதுள்ளது. மாறாக, சோவியத் ஒன்றியத்தின் முடிவு, மார்க்சிசத்தின் மரணம் என பிரகடனப்படுத்திய பிரசுரங்கள் வெளியாயின. இந்த படைப்புக்கள் இரண்டு பரந்த பிரிவுகளின் கீழ் உள்ளன. முதல் பிரிவில், அரசியலில் வலது பக்கம் இருந்து முதலாளித்துவத்தின் வெட்கங்கெட்ட கருத்தியல் பாதுகாவலர்கள் (புக்குயாமா மற்றும் பைப்ஸ் போன்றவர்கள்) எழுதிய படைப்புக்கள் வந்தன. இவர்களுக்கு சோவியத் யூனியனின் முடிவானது, இருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எவ்வித மாற்றும் சாத்தியமில்லை என்பதை நிரூபிக்கிறது. இரண்டாம் பிரிவில், இடது கல்வியாளர்களிடம் இருந்து பலவகை படைப்புக்கள் வந்தன, இவர்கள் இன்றும் ஏதோ ஒரு நீண்ட வருங்காலத்தில், சில புள்ளியில், சமூக மாற்றங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவ்வாறான எதிர்கால சமூக மாற்றத்திற்கான தத்துவார்த்த உள்ளடக்கத்தை மார்க்சிசம் கொடுக்காது என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மார்க்சிசத்திற்கு ஒரு மாற்றீட்டை கல்வியாளர்கள் தேடல்

அப்படியானால், மார்க்சிசத்திற்கு மாற்றீடு என்ன? மார்க்சிற்கு-முந்தைய மெய்யியல் மற்றும் அரசியலின் பல்வேறு வடிவங்களைப் புதுப்பிக்கும் வாதங்களைக் கொண்ட புதிய கல்விசார் இலக்கியங்களின் கணிசமான பகுதிகள் இருக்கின்றன. 1840களின் தொடக்கத்தில் இளைஞரான டாக்டர். மார்க்சின் வருகை, மாற்று இடது-முற்போக்கு மெய்யியல்கள் மற்றும் சமூக இயக்கங்களின் வளர்ச்சியை குறைப்பிரசவத்திற்கு உட்படுத்திவிட்டது என்று இப்பிரிவு கூறுகிறது. ஹேகலினதை தளர்ந்துபோகும் அளவிற்கு விமர்சித்ததின் அடித்தளத்தில் மார்க்சின் படைப்புக்கள் வளர்ந்ததால், மார்க்சின் தாக்குதலால் ஏற்பட்ட நாசம் கட்டாயம் திருத்தப்பட வேண்டும் என்று அது வாதாடுகிறது. மார்க்சினால் தலைகீழாக நிறுத்தப்பட்டுவிட்டதால், பழைய கருத்துவாத மெய்யியலாளரை மீண்டும் நேராக நிற்கவைக்க வேண்டிய தேவை வந்துள்ளதாக இந்த எழுத்தாளர்கள் வாதிடுகின்றனர். சமகால உள்ளடக்கத்தினுள், முற்போக்கான சமூக தத்துவம் மற்றும் நடைமுறைகளின் அபிவிருத்திக்கு ஹேகலுடைய படைப்பு போதுமான அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்று இவர்கள் எழுதுகின்றனர். இத்தகைய வழியில் வாதிடும் சில படைப்புக்கள் மார்க்சுக்கு வெளிப்படையாகவே விரோதப் போக்கை காட்டுகின்றன. சிலர், ஹேகலுடைய கருத்திற்கு மார்க்ஸ் அதிகமாக ஒன்றும் சேர்த்துவிடவில்லை என்றும், தன்னுடைய தனித்தன்மையை மிகைப்படுத்தி காட்டியுள்ளார் என்றும் கூறுகின்றனர். பொதுவாக பிந்தையதற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக, சிலர், ஹேகலிசம் மற்றும் மார்க்சிசம் இரண்டும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஹேகலின் அறிவுரு (Spirit of Hegel) என்னும் தன்னுடைய நூலில் பேராசிரியர் எரோல் ஹாரிஸ், "ஹேகல் ஒன்றும் தலைகீழாக நிற்கவில்லை; மாறாக, மார்க்சும் ஏங்கெல்சும் தான் தலையை துண்டித்தார்கள், பின்னர், தலையற்ற உடலின் இயங்கியல், உயிருடனும் இயக்கத்துடனும் இருக்க முடியும் என்று கற்பனை செய்துள்ளனர்" என்று எழுதியுள்ளார்.3 அவர் மேலும் கூறுவதாவது: "மார்க்சின் சொந்தக் கருத்துக்கள் நகைப்பிற்கிடமானவை என்று எவரும் கருதமாட்டார்கள்; ஆனால் ஹேகல் பற்றிய அவருடைய விமர்சனங்கள் பலநேரமும் அசாதாரண முறையில் மழுங்கியதானவையாகவும், மட்டுப்படுத்தப்பட்டதாகவும், ஹேகலுடைய 'கருத்துவாதம்' பற்றிய பெரும் பிழையான விளக்கத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்தது." 4

பேராசிரியர் போல் பிராங்கோ தன்னுடைய, சுதந்திரம் பற்றிய ஹேகலின் மெய்யியல் (Hegel's Philosophy of Freedom) என்னும் நூலில், சமகால உலகின் பிரச்சினைகளுக்கு, மார்க்ஸ் அல்ல ஹேகல் தான் தக்க விடைகளை கொடுத்துள்ளார் என்று வாதிடுகிறார்:

"கிட்டத்தட்ட கடந்த முப்பது ஆண்டுகளாக ஹேகலின் சமூக மற்றும் அரசியல் மெய்யியல் புதுப்பிக்கப்படுவதில் மகத்தான ஆர்வம் உள்ளது. ஆரம்பத்தில் இதன் உந்துதல் மார்க்சின் நோக்கத்தின் தோற்றத்தை பற்றிய தேடுதலை நோக்கமாக கொண்டிருந்தது. பின்னர் இந்த ஆர்வத்தின் புதுப்பித்தல் தன்னுடைய இயல்பிலேயே ஹேகல் ஒரு சிந்தனையாளர் என்பதிலும், மார்க்சையும் விட ஆழமான ஒன்றை வழங்கியிருக்க கூடியவர் என்ற கருத்திலும் குவிப்புக் காட்டியது".5

ஹேகலை "அப்படியே பின்பற்றுபவர்" என்று பிராங்கோ மார்க்சை குறிப்பிடுகிறார். 6

கனடாவின் கல்வியாளரான டேவிட் மக்கிரேகர், ஜனநாயகம் மற்றும் சமூக முற்போக்கு திட்டங்கள் தளமாக கொள்ளவேண்டிய முதன்மை தத்துவார்த்த அடித்தளமாக ஹேகலியனிசத்தை நிறுவுவதற்கு பல நூல்களை எழுதியுள்ளார். ஹேகலினதும் மார்க்ஸினதும் கம்யூனிச கருத்துக்கள் (The Communist Ideal in Hegel and Marx) என்ற நூலில் மக்கிரேகர்,

"ஹேகலிய கருத்தை மார்க்ஸ் பிழையாகப் புரிந்து கொண்டதானது, ஹேகலின் அரசு பற்றிய தத்துவத்திற்கு எதிராக அவரை நிறுத்தியதுடன், தாராளவாத ஜனநாயகம் பற்றிய சமகாலத்திய உண்மை பற்றி முற்றாக விளங்கி கொள்வதற்கு மார்க்சிற்கு தடையாகவும் இருந்திருக்கலாம். இப்பொழுதுதான் அவருடைய பிற்காலத்திய பின்பற்றாளர்கள் அதை தீவிரமாக எதிர் கொள்கின்றனர் (அவர்கள் ஹேகலிடம் இருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியதுள்ளது). இந்நூல் தாராளவாத ஜனநாயக அரசு பற்றி அறிந்து கொள்வதை சுட்டிக்காட்டி, இது மார்க்சின் விமர்சனத்தை பலமிழக்கச் செய்து ஹேகலின் அரசியல் தத்துவம் பற்றிய புதிய உட்பார்வைகளை அளிக்கிறது."7

தன்னுடைய நோக்கம், "மார்க்சினால் சுமத்தப்பட்ட விளக்கத்திலிருந்து ஹேகலின் சிந்தனையைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான்" என்று மக்கிரேகர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஹேகலிய இயங்கியல் "தலைகீழாக மாற்றப்பட வேண்டும்; அப்பொழுதுதான் புதிரான மேலோட்டுக்குள் இருக்கும் பகுத்தறிவான கருப்பொருள் (Rational kernel) கண்டுபிடிக்கப்படும்" என்று மார்க்ஸ் கூறியதற்கு எதிராக தான் வாதிடுவேன் என மக்கிரேகர் கூறுகிறார்".8

இதற்குப் பின் அவர் வெளியிட்ட ஹேகல், மார்க்ஸ் ஆங்கில அரசு (Hegel, Marx and the English State) என்ற நூலில் மார்க்சிசம் பற்றிய தன்னுடைய விமர்சனத்தை மக்கிரேகர் விரிவாக்கி, ஹேகலிய மரபின் முக்கிய கூறுபாட்டை தவறாக கையாண்டுவிட்டார் என மார்க்சின் மீது குற்றம்சாட்டுகிறார்.

தொழிலாளருக்கு உழைப்பின் உற்பத்திப் பொருள் மீது உரிமை உண்டு என்பதை உள்ளடக்கிய தனியார் சொத்து பற்றிய ஹேகலுடைய கருத்தை, உபரிமதிப்பு என்ற கருத்தாலும், கம்யூனிசத்தின் கீழ் தனியார் சொத்துரிமையை மறுத்ததன் மூலமும் மாற்றி அமைத்துவிட்டார். இதன் அர்த்தம், மார்க்சின் உயர்வான சமூகத்தில் அரசுக்கு இடம் இல்லாததோடு, தனிநபர் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்தும் மற்றும் செல்வாக்கான மேற்தட்டினால் நடத்தப்படும் தன்னிச்சையான ஆட்சியை தடுக்கவும் தேவைப்படும் பொது சமூகத்தின் பல அமைப்புக்களும் கூட இல்லாமல் போய்விடும். 9

கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஹெகலும் மார்க்சும் என்ற மற்றொரு நூலில், ஹேகல்—மார்க்ஸ் உறவின் நன்கு நிறுவப்பட்ட மார்க்சிச கருத்தாய்வு மீதான மக்கிரேகருடைய விமர்சனத்தின் சமூக அரசியல் சாராம்சம் மிகத் தெளிவாக வெளியாகியுள்ளது:

"தனிச்சொத்துடமை வடிவங்கள் பற்றிய கருத்துத்தான் ஹேகல்—மார்க்சிற்கு இடையே உள்ள உறவின் பிரச்சனைக்குரிய புள்ளியாகும் ... தனியார் சொத்துரிமை என்ற அமைப்பை காப்பதற்கு ஹேகல் விரும்பினார். மார்க்சோ அது தூக்கியெறியப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்... முதலாளித்துவ சொத்துரிமை பற்றிய மார்க்சின் விமர்சனத்தை ஹேகல் ஏற்றிருப்பார் என்று நான் விவாதிப்பேன். ஆயினும்கூட, ஹேகல் போலன்றி, மார்க்ஸ் சொத்துரிமைகளின் சாதகமான பக்கத்தை நன்கு ஆராயத் தவறிவிட்டார். மாறாக, அவர் உற்பத்தி சாதனங்கள் பொதுச்சொத்தாக இருக்க வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவாக சொத்துரிமை அகற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்".10

மக்கிரேகரை பொறுத்தவரையில், மார்க்சின் புரட்சிகர சோசலிச அபிலாசைகளுக்கு ஒரு சாத்தியமான மாற்றீட்டிற்கான புத்திஜீவித உந்துதலை ஹேகலின் அரசியல் தத்துவம் அளிக்கிறது. அதாவது, உயர்சிந்தனை மற்றும் பொதுநல உணர்வுடைய அதிகாரத்துவத்தால் இயக்கப்படும் பன்முகப்பட்ட ஒரு சமூக-சந்தை முறையை கொண்ட, தாராளவாத சமூகநல அரசு புத்துயிர்க்கப்பட வேண்டும் என்பதாகும்.

பேராசிரியர் வாரென் பிரெக்மன் தன்னுடைய இளம் ஹெகலியன் மார்கசும், தீவிரப்போக்கு சமூக தத்துவத்தின் தோற்றமும் (Marx, the Young Hegelians, and the Origins of Radical Social Theory) என்ற நூலில், இதே போன்ற வகையில்தான் வாதிடுகிறார். சோவியத் யூனியன் மற்றும் அதனோடு இணைந்திருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சரிவானது, முதலாளித்துவம் மற்றும் பூர்ஷூவா "மக்கள் சமுதாயத்தின்" மீதான மார்க்சின் சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்பை சமூக தத்துவ கல்வியாளர்களிடையே மதிப்பிழக்கச் செய்துவிட்டது என்று கூறுகிறார். பிரெக்மன் எழுதுவதாவது:

பூர்ஷூவா "மக்கள் சமுதாயம்" பற்றிய கருத்துருவை முற்றிலும் நிராகரிக்கும் கார்ல் மார்க்சின் நிலைப்பாடு, சிக்கல் வாய்ந்த சமுதாயங்களுக்குள்ளே ஜனநாயக வாழ்வின் விரிவாக்கத்திற்கு போதுமான இடம் இல்லை என்பதில் பாரியளவு உடன்பாடு உள்ளது. இங்கு புதிதாக இருப்பது ஒருமித்த உணர்வே ஒழிய உட்பார்வை அல்ல. இப்பொழுது சோசலிசத்தை பற்றிய சில கருத்துகளுக்கு அனுதாபம் காட்டுபவர்கள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சிச விமர்சனத்தின் கூறுபாடுகளைப் பிடித்திருப்பவர்களாலும் கூட, அல்லது குறைந்தளவில் ஜாக் டெரிடா (Jacques Derrida) போல் "மார்க்சிசத்தின் குறிப்பிட்ட உள்ளாற்றலில் இருந்து உத்வேகம் பெறுபவர்களாலும்" மார்க்சின் மக்கள் சமுதாயம் பற்றிய விமர்சனத்தில் உள்ள குறைபாடுகள், வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.11

பிரெக்மன் மேலும் எழுதுவதாவது:

"மார்க்சிசத்திற்கும் அப்பால் செல்லவேண்டும் என்பதற்கான வாதத்தை தற்போதைய விவாதம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றால், உத்வேகத்திற்கும் மற்றும் தத்துவார்த்த வழிகாட்டுதலுக்கும் மார்க்சின் காலத்திற்கு முன்னால் பார்க்க வேண்டியுள்ளது என்ற கருத்து அதன் முக்கிய பண்பு நகர்வுகளில் ஒன்றாக உள்ளது.

மார்க்சிற்கு முந்தைய கால சமூக தத்துவம் பற்றிய இத்தகைய மார்க்சிற்கு பிந்தியவர்களின் அக்கறையானது, இளம் மார்க்ஸ் கடந்துவிட்டதாக வெற்றிகரமாக கூறப்படும் மாபெரும் சிந்தனையாளரான ஹேகலின் வாய்ப்புவளங்கள் மற்றும் பொருத்தம் பற்றியவற்றை கணிசமாக அதிகரித்துள்ளது." 12

இந்த நோக்கம் அரசியல்ரீதியாகவும் புத்திஜீவிதரீதியாகவும் மிகுந்த சந்தேகத்திற்கிடமானதாக இல்லாவிட்டால், ஹேகல் பற்றிய அக்கறை புதுப்பிக்கப்படுவது வரவேற்கத்தக்க நிகழ்வாக இருக்கும். ஆனால், 1840க்கு முந்தைய மூலச்சிறப்புள்ள ஜேர்மன் கருத்துவாத உலகில், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் நிகழ்த்தப்பட்ட புத்திஜீவித வளர்ச்சி பற்றிக் குறிப்புரைக்காமல் ஹேகல் அல்லது வேறு எந்த பெரிய மனிதருடைய அடிப்படையில் சமூக, அரசியல் கோட்பாட்டை அபிவிருத்தி செய்ய முனைவது, (அல்லது அவற்றை தவறாக எடுத்துக் கூறுதல்) என்பது பெரும் தத்துவார்த்தரீதியிலும், புத்திஜீவிதரீதியாகவும் பின்னோக்கிப் போவதற்கான ஒரு பாரிய அடியை வைப்பதாகும். அத்துடன் இது பிற்போக்கான அரசியல் முடிவுகளுக்கே சேவை செய்யும். ஏனென்றால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோருடைய படைப்புக்கள் 1831ல் ஹேகலுடைய மறைவுக்கு பின்னர் விமர்சனரீதியான விஞ்ஞான முன்னேற்றங்களில் இருந்தும், வரலாற்றுரீதியாக ஐரோப்பாவின் மகத்தான சமூகப் பொருளாதார மாற்றங்களில் இருந்தும் எழுச்சியுற்றவையாகும்.

ரோக்மோர் ஏங்கெல்சை குற்றம்சாட்டுகிறார்

மேலே மேற்கோளிடப்பட்ட நூல்களுடன், ரோக்மோரின் நூலும் மார்க்சிசத்தின் தத்துவார்த்த தாக்கத்தை இல்லாதொழித்து தீவிரமான சமூக மாற்றத்திற்கு புதிய செயற்பட்டியலை கண்டுபிடிக்க முன்மொழிகின்றது. ஆனால், அவர் மேற்கொள்ளும் அணுகுமுறை மற்றவர்களுடைய படைப்புக்களில் இருந்து சிறிது வேறுபட்டதாகும். ஏனைய நூல்கள், ஹேகலை மார்க்சின் பிடியில் இருந்து விடுவிக்க முயலும் போது, ரோக்மோர் மார்க்சிசத்திற்குள் இருக்கும் அவரது கருத்தியல் சிறையிலிருந்து மார்க்ஸ்தான் விடுவிக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறார்! உண்மையான மார்க்ஸ் தீவிர ஹேகலிய கருத்துவாதி என்று ரோக்மோர் பிரகடனப்படுத்துகிறார். உலகம் முழுவதிலும் அனைவராலும் மார்க்ஸ் ஒரு சடவாதி என்று அறியப்பட்டுள்ளமை, பிரெடெரிக் ஏங்கெல்சினால் செய்யப்பட்ட பெரும் தவறு மற்றும் மோசடியின் விளைவு என்று ரோக்மோர் வாதிடுகிறார். இவருடைய கருத்தின்படி ஏங்கெல்ஸ் மெய்யியல் நிலைப்பாட்டில் அதிகம் அறியாதவர். அவர் முக்கியமான தத்துவார்த்த பணிக்கு தேவையான பல்கலைக்கழக பயிற்சியை பெற்றிராததால், உண்மையான மார்க்சிச சிந்தனையில் இருந்த ஆழ்ந்த ஹேகலிய நுட்பங்களை அகற்றிவிட்டு மார்க்சிசம் எனப்படும் சித்தாந்தரீதியான அரக்கத்தனத்தை தோற்றுவித்தார் என ரோக்மோர் கூறுகிறார்!

"ஏங்கெல்சிடமிருந்து கிடைக்கும் மார்க்சிசம், மார்க்ஸ் ஹேகலுடன் கொண்டிருந்த உறவின் கருத்தாய்விற்கு செல்லுகிறது. அதுவோ தன்னுடைய பங்கிற்கு ஹேகலை பின்விட்டுச் செல்லும் கருத்தை மார்க்ஸ் கொண்டதாக உறுதி செய்கிறது. மார்க்ஸ் பற்றிய மார்க்சிச பார்வை கணிசமாக பிழையானது என்றும், மார்க்சின் நிலைப்பாட்டை பற்றிய சிறந்த பார்வையை அளிக்காமல் தடுக்கிறது என்றும் நான் நம்புகிறேன். இதில் மார்க்சின் மெய்யியல் பங்களிப்பும் அடங்கியுள்ளது. மார்க்ஸ் “மீட்கப்படுவதற்கு”, முடிந்த அளவுக்கு அவரை மார்க்சிசத்திலிருந்து விடுவிப்பது நமக்குத் தேவையாக இருக்கிறது, இதன் காரணமாக முதலாவது மார்க்சிசவாதியான ஏங்கெல்சிடமிருந்தும் அவர் விடுவிக்கப்படவேண்டும் என்று நான் வாதிடப் போகிறேன்".13 என ரோக்மோர் எழுதுகின்றார்.

ஏங்கெல்சிற்கும் மார்க்சுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தன என்பதை வாதிட்டவர்களில் ரோக்மோர் ஒன்றும் முதலாவது மனிதரல்ல. பல்வேறு காலங்களில் Stanisław Brzozowski, Georg Lukacs, Lucio Colletti, Jean Hyppolite, George Lichtheim போன்ற பல எழுத்தாளர்களும், பிராங்பேர்ட் பள்ளியின் பலதரப்பட்ட பிரதிநிதிகளான Leszek Kolakowski, இன்னும் அண்மையில் Terrell Carver போன்ற பலரும் இக்கருத்தை முன்வைத்துள்ளனர். மார்க்ஸ் இறந்து 12 ஆண்டுகளுக்கு பின்னர்தான் ஏங்கெல்ஸ் காலமானார் என்ற உண்மையே, உயிரோடு இருந்த அவர், மார்க்சின் இலக்கியத்தேட்டத்தின் உடமையாளர் என்ற முறையில் தன்னுடைய நிலைமையை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய கருத்துக்களை மறைந்த சகாவுடையதாக மாற்றினார் என்று கூறுவதற்கு போதிய காரணமாயிற்று. மார்க்சிற்கும் ஏங்கெல்சுக்கும் இடையே வேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுவது இப்பொழுது கட்டுக்கதை அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள எழுத்தாளர்களின் எந்தக் கூற்றும் கவனமான ஆய்வின் முன்னே நின்றுபிடிக்க முடியாது. கிஜோர்க் லூகாஸ் (Georg Lukas) தன்னுடைய நிலைப்பாட்டை இப்பிரச்சினையில் பின்னர் மாற்றிக்கொண்டுவிட்டார்.

ரோக்மோரின் ஆய்வறிக்கை, மூலமுதலான ஒன்றல்ல. அவருடைய படைப்பு, அதன் விதிவிலக்கான அரைகுறைத்தன்மை மற்றும் புத்திஜீவித நேர்மையின்மை இவற்றால் மட்டுமே வேறுபட்டதாக இருக்கிறது. இந்த விடயத்தில் அதன் காலத்திற்கான அடையாளத்தை தாங்கி நிற்கின்றது. அவருடைய நூல் முழுவதும் பரவலாக காணப்படும்  அவநம்பிக்கையும் வாழ்நாள் முழுவதும் தமது கூட்டுழைப்பின் அடித்தளத்தில் மார்க்ஸும், ஏங்கெல்ஸும் பொதுவான மெய்யியல் — தத்துவார்த்த பார்வையை கொண்டிருந்தார்கள் என கருதுவோருக்கு தான் "விடையிறுக்கத் தயார்" என்று ரோக்மோர் கூறுவது குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டை காண்கின்றது.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரும் பொதுவாக பகிர்ந்துகொள்ளப்பட்ட கோட்பாடு (Doctrine) ஒன்றின் கூட்டு ஆசிரியர்கள் என்பதை நம்புவது, முன்னவர் பின்னவருடன் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பில் இருக்கிறது. இது எப்படி உள்ளது என்றால் இரண்டு பேர் ஒன்றாகவே இருந்தால் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாகவே சிந்திக்கிறார்கள் என்பதற்கு ஒப்பானது என்று ரோக்மோர் எழுதுகிறார். 14

"ஒன்றாகவே இருந்தார்கள்"? இது பேராசிரியர் ரோக்மோர் Duquesne பல்கலைக் கழகத்தில் மெய்யியல்துறையில் தன்னுடைய நண்பர்களுடன் இருந்தது பற்றிய நியாயமான விவரிப்பாக இருக்கலாம். ஆனால், மார்க்சிற்கும் ஏங்கெல்சிற்கும் இடையே உள்ள உறவு பற்றி இது ஒன்றும் பொருத்தமான வகையில் விளக்கம் ஆகாது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும் இடையே புத்திஜீவித, அரசியல் ஒத்துழைப்பு நெருக்கமாக 39 ஆண்டுகாலம், 1844ல் இருந்து மார்க்ஸ் 1883ல் காலமாகும் வரை நீடித்தது. அக்காலம் முழுவதும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் நேரடித் தொடர்பை கடித மூலமோ அல்லது கிட்டத்தட்ட நேரடிச் சந்திப்பின் மூலமோ அன்றாடம் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். அக்காலத்திய மார்க்ஸ்ஏங்கெல்ஸின் தொகுப்பு நூல்களில் 10 நூல்கள் (ஒவ்வொன்றும் 500 முதல் 600 பக்கங்கள்) கடித பரிமாற்றத்தை அடக்கியுள்ளன. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரண்டு அசாதாரண மனிதர்களின் அறிவார்ந்த வளர்ச்சி, ஒருவர் மீதான ஒருவரின் செல்வாக்கை காட்டும் இக்கடிதங்கள், எந்த அளவிற்கு மெய்யியலுக்குரிய ஒருமைப்பாடு, ஒழுக்கநெறி பிணைப்பு மற்றும் தனி நட்பு இவர்களுக்கு இடையே இருந்தது என்பதற்கு வரலாற்றிலேயே இணையில்லை என்பதை வாசகர்களுக்கு உணர்த்துகின்றன. தத்துவார்த்த ரீதியாகவோ, அரசியல்ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முரண்பாடுகள் எழுந்திருந்தாலும் அதைப்பற்றிய ஆவணங்கள் பதிவாகி உள்ளன.

மார்க்சிசத்தின் விமர்சனரீதியான வடிவம் பெற்ற மெய்யியல் படைப்புக்களில் கூட்டாக எழுதியதை தவிர —குறிப்பாக ஜேர்மன் சித்தாந்தம் (The German Ideology) என்னும் நூல், வரலாறு பற்றிய சடவாத கருத்தாய்வு முதன்முதலாக விரிவான வகையில் ஆய்வு செய்யப்பட்டதை பிரதிபலித்திருந்தது— தங்களுடைய பொதுவான தத்துவார்த்த உலகப் பார்வையில் ஏங்கெல்சின் பங்கு பற்றி விரிவான குறிப்பையும் மார்க்ஸ் அளித்துள்ளார். ஜேர்மனிய கருத்துவாதத்தில் இருந்த மார்க்சின் நீடித்த விசுவாசத்தால், தனக்கு திரையிட்டுக் கொண்ட ஒரு ஹேகலிய—எதிர்ப்பு நிறைந்த தீயவராக ஏங்கெல்சை சித்தரித்துக் காட்டும் ரோக்மோரின் முயற்சி, அரசியல் பொருளாதாரத்திற்கு ஒரு விமர்சனம் என்பதன் முன்னுரையில் (Preface to A Critique of Political Economy) 1859ல் வெளிவந்த தன்னுடைய நூலில் மார்க்சே கூறியுள்ள கருத்தினால் தகர்ந்து போகிறது :

"பொருளாதார வகையினங்களின் விமர்சனம் பற்றிய அவரது மிகச் சிறந்த கட்டுரை (DeutschFranzösische Jahrbücher இல் அச்சிடப்பட்டது) வெளியிடப்பட்ட பின்னர், தொடர்ந்து கடித பரிமாற்றம் மூலம் நான் தக்கவைத்துக் கொண்டிருக்கும் தொடர்புகளால், பிரெடெரிக் ஏங்கெல்ஸ் வேறுபாதையில் அவருடைய இங்கிலாந்து தொழிலாள வர்க்கத்தின் நிலைமையை ஒப்பிட்டு நான் கண்ட முடிவிற்கே வந்தார். 1845ம் ஆண்டு வசந்தகாலத்தில், அவரும் பிரஸ்ஸல்ஸில் வசிப்பதற்கு வந்தபோது, நாங்கள் இருவரும் ஜேர்மன் மெய்யியலுக்கு எதிராக எங்களுடைய சிந்தனைப் போக்கை ஒன்றாகக் கொண்டுவருவது என்ற முடிவிற்கு வந்தோம். உண்மையில் இது எங்களுடைய முன்னைய மெய்யியல் பகுத்தறிவுடன் கணக்கை தீர்த்துக் கொள்வதற்காக எனலாம். இந்த நோக்கம் ஹேகலிய தத்துவத்திற்கு பிந்தைய தத்துவத்தின் மீதான விமர்சனத்தின் வடிவத்தில் செயல்படுத்தப்பட்டது. ஜேர்மன் சித்தாந்தம் [The German Ideology] பற்றிய இரண்டு பாரிய புத்தக அளவிலான கையெழுத்துப் பிரதிகள் நீண்ட காலத்திற்கு முன்னரே வெஸ்ட்பாலியாவில் உள்ள பதிப்பாளர்களை அடைந்திருந்தது. மாறுபட்ட சூழ்நிலையின் காரணமாக அது அச்சேற முடியாது என்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த கையெழுத்துப் பிரதியை எலிகள் கடிக்கும் நிலைக்கு கைவிட்டுவிட்டோம். சொல்லப்போனால் மகிழ்ச்சியுடனேயே எனலாம். ஏனெனில் எங்களுடைய முக்கிய இலக்கான சுயதெளிவை நாங்கள் அடைந்து விட்டோம். அக்காலத்தில் எங்களுடைய கருத்துக்களின் ஏதாவதொரு அம்சத்தை பொதுமக்களுக்கு பல படைப்புக்களில் முன்வைத்திருந்தோம். அவற்றில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்று என்னாலும் ஏங்கெல்ஸாலும் கூட்டாக எழுதப்பட்டதை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அதேபோல் சுதந்திர வர்த்தக பிரச்சினை பற்றிய ஒரு உரை (A Speech on the Question of Free Trade) என்று நான் வெளியிட்ட படைப்பு பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். எங்களுடைய கருத்தாய்வின் முக்கிய கூறுபாடுகள் முதலில் அறிவு செறிந்த முறையில் கோடிட்டுக் காட்டப்பட்டதுடன், வாதப்போக்குடனும் ஒரு வடிவத்தை என்னுடைய மெய்யியலின் வறுமை (Poverty of Philosophy) என்ற நூலில் பெற்றது...." 15

மார்க்ஸ் ஒரே பத்தியில் குறிப்பிடும், "நான் கண்ட முடிவிற்கே வந்த", "எங்களுடைய எண்ணக்கரு", "எங்களுடைய முன்னாள் மெய்யியல் பகுத்தறிவை", "எங்களுடைய முக்கிய நோக்கமான சுயதெளிவு", "எங்களுடைய பார்வைகள்" மற்றும், "எங்களுடைய எண்ணக்கருவின் முக்கிய கூறுபாடுகள்" என்பவை மிகத் தெளிவாக அவருக்கும் ஏங்கெல்ஸுக்கும் இடையே இருந்த உயர்ந்த அளவு தத்துவார்த்த உடன்பாட்டை நிறுவிக்காட்டுகின்றன.

மார்க்சின் விமர்சனத்திற்கான (Critique) முன்னுரை பற்றி ரோக்மோர் குறிப்பிட்டாலும், அவர் இந்த மிக முக்கியமான பத்தியை மேற்கோளிடவில்லை. ரோக்மோர் அசட்டை செய்வது இது ஒன்றுமட்டுமல்ல என்பதை நாங்கள் ஸ்தாபிப்போம். அவர் அப்படிச் செய்துள்ள விதம் அகங்காரத்துடன் இருப்பதுடன், புத்திஜிவித்தனமான நேர்மையின்மையிலும், தன்னுடைய சொந்த ஆய்வுரைக்கு முரண்பட்டு இருக்கும் மார்க்சின் அறிக்கைகளை அசட்டையும் செய்துள்ளார்.

ஏங்கெல்சின் போதாத கல்வியறிவு பற்றி ரோக்மோர்

ஏங்கெல்சை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினால், ரோக்மோர் மார்க்சின் வாழ்நாள் முழுவதுமான ஒத்துழைப்பாளர், மார்க்சை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியதற்கு தேவையான கல்வித்தரத்தை பெற்றிருக்கவில்லை என்று வலியுறுத்துகிறார். ஏங்கெல்ஸ் ஒரு வெறும் "மெய்யியலை சுயமாகவே பயின்றவர்" என்றும் "மெய்யியலின் நுட்பங்களை பற்றி அக்கறை அற்றவர் என்றும் ரோக்மோர் கூறுகிறார்..."16.

மார்க்ஸ் மெய்யியலை படித்தார். பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு கலாநிதி பட்டம் கூட அதில் பெற்றார். ஆனால் ஏங்கெல்ஸ் ஒரு கல்லூரிப்பட்டம் கூட பெற்றிருக்கவில்லை." அவர் மெய்யியலை மேம்போக்காகத்தான் பயின்றார். சொந்த முறையில் உயர்மட்ட மெய்யியல் படைப்பை அவர் இயற்றுவதற்கான மெய்யியல் திறமையைக் கொண்டிருக்காததுடன் அதற்கான போதுமான பயிற்சியையும் பெற்றிருக்கவில்லை.

மெய்யியல் கோட்பாடுகளை மற்றும் மார்க்சின் மெய்யியல் சார்ந்த புதியது புனையும் ஆற்றலையும் நயமுடன் பாராட்டும் திறனையும் அவர் கொண்டிருக்கவில்லை. ஒரு மெய்யியலாளர் என்ற முறையில் அத்துறையில் பொழுதுபோக்கிற்காக அக்கறைகொண்டிருந்த ஒரு திறமையானவர் என்று கூறலாம்17 என ரோக்மோர் தனது வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார்.

என்னவொரு வெறுப்புமிக்க தேர்ந்த போலி நாகரிகப்பகட்டு மற்றும் தற்பெருமை கொண்ட சுயநலத்தின் சேர்க்கை! கல்வித்தகுதி திறன்களில் பேராசிரியர் ரோக்மோர் வெளிப்படையாக அதிக மதிப்பை வைத்தாலும், ஒரு பல்கலைக்கழகத்தில் மெய்யியற்துறையில் வேலையும் ஊதியமும் பெறுவது ஒருபுறம் இருக்க, மெய்யியல்  சிந்தனை வரலாற்றின் அடிப்படையில் தீவிரமான மெய்யியல் படைப்பைத் தயாரிக்கும் திறனிற்கும் ஒரு பல்கலைக்கழக பேரறிஞர் பட்டம் பெற்றிருப்பதற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. எவர் தீவிரமான மெய்யியலாளர் என்பதை நிர்ணயிக்க ரோக்மோரின் அளவுகோலை அடிப்படையாக கொண்டால், மேற்கத்திய அறிவாளிகள் வரலாற்றில் பல நன்கு அறியப்பட்ட பெயர்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும். இதில் ஸ்பினோசா (யூத மெய்யியலார் 1632—1677) மற்றும் டெகார்ட் (பிரெஞ்சு மெய்யியலார் 1596—1650) ஆகியோரின் பெயர்களும் உள்ளடங்கி இருக்கும். கார்ட்டிசீய பகுத்தறிவுவாதம் (Cartesian rationalism) நிறுவியவரை பற்றி மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்றில் டெஸ்மொண்ட் எம். கிளார்க் கூறுகிறார்: "டெகார்ட்டின் முறையான கல்வி என்பது குறுகிய முறையில் பல்கலைக்கழக புலமையைத் தான் கொண்டிருந்தது; உறுதியாக அதில் மனித அறிவின் சீர்திருத்தம் என்று அவர் இறுதியில் கொண்டிருந்த முயற்சிக்கான அடிப்படை உறுதியாக இல்லை."18 ரோக்மோர் பயன்படுத்தும் சொல்லான "சுயமாக பயின்றவர்" (Autodidact) என்பது இகழ்வை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது என்றால், வரலாற்றின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் இந்தப் பிரிவில்தான் சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஒருவர் கவனிக்கவேண்டும்.

ஆனால் எப்படிப்பார்த்தாலும், ஏங்கெல்சின் அறிவார்ந்த தயாரிப்பு பற்றிய ரோக்மோரின் முன்வைப்பில், ஏங்கெல்சின் அறிவு பற்றிய விரிவான மற்றும் ஆழமான தன்மை பற்றிக் குறிப்பிடவில்லை, அதிலும் குறிப்பாக மெய்யியல் பற்றி கூறுவது முற்றிலும் தவறாகும். எல்பர்ஃபெல்ட் (Elberfeld) என்னும் இடத்தில் உயர்தர மாணவர்களுக்கான பள்ளியில் (gymnasium) தன்னுடைய படிப்பை ஏங்கெல்ஸ் முடித்த நிலையில் அவர் பெற்றிருந்த தரம், நான் ஊகித்துக் கருத்துக்கூறலாம் என்றால், தன்னிடம் கலாநிதி பட்ட ஆராய்ச்சிக்கு வரும் மாணவர்களிடம் பேராசிரியர் ரோக்மோர் அரிதாகவே காணும் உயர்ந்த கல்வி தரத்தை, அவர் பெற்றிருந்தார் என்பேன். செப்டம்பர் 1837 ஏங்கெல்சின் பள்ளி அறிக்கையின்படி (அப்பொழுது அவர் 17 வயது கூட நிரம்பியிருக்கவில்லை) ஏங்கெல்ஸ் இலத்தீன் மொழியில் பெற்றிருந்த புலமை "லிவியஸ், சிசிரோ, வர்ஜில், ஹொரேஸ் போன்ற உரைநடை அல்லது கவிதை எழுத்தாளர்களை புரிந்து கொள்வதில் சிறிதும் அவர் சிரமப்படவில்லை. நீண்ட பத்திகளைக் கூட அவரால் எளிதில் அறிந்து கொள்ள முடியும், சிந்தனைப் போக்கை தெளிவுடன் உணர்ந்து அவர் முன் இருந்த பத்தியை தாய்மொழியில் திறமையுடன் மொழிபெயர்க்க முடியும்." "கிரேக்க மொழியை பொறுத்தவரையில், ஏங்கெல்ஸ், "சொல் வடிவு வரலாறு, இலக்கண விதிகள் ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார் என்றும், குறிப்பாக முந்தைய கிரேக்க உரைநடை ஆசிரியர்கள் மற்றும் ஹோமர், யூரிபிடிஸ் (Homer and Euripides) ஆகியோர் நூல்களை திறமையுடனும் நயத்துடனும் மொழி பெயர்க்கும் திறனைக் கொண்டிருந்தார். மேலும் பிளாட்டோவினுடைய உரையாடல்களின் சிந்தனைப் போக்கையும் தெளிவாக அறிந்து மொழிபெயர்க்கக் கூடியவர்" என்று பள்ளி அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையை தயாரித்தவர், கணிதம், இயற்பியல், "மெய்யியற் சிந்தனைகள்" ஆகியவற்றில் ஏங்கெல்ஸின் படைப்புக்கள் பற்றியும் பெரும் வியப்பை தெரிவித்துள்ளார். 19

ஏங்கெல்ஸிடம் மெய்யியற் துறையில் தீவிர படைப்பை மேற்கொள்ள தேவையான பயிற்சியோ அல்லது திறமையோ கிடையாது என்ற கூற்றை நம்பியிருக்கும் ரோக்மோரின் நிலைப்பாட்டில், ஏங்கெல்சின் இளமைப் போக்கில், மார்க்சுடன் அவர் ஆரம்ப தொடர்பு கொள்வதற்கு முன்பே நிகழ்ந்த நிகழ்வு பற்றிய குறிப்பை அவர் கூறவில்லை என்பது அதிர்ச்சியைத் தருகிறது. பிரெடெரிக் ஷெல்லிங்கின் (Friedrich Schelling) கருத்துக்களை நிராகரித்திருந்ததால் ஜேர்மனிய புத்திஜீவித வட்டங்களில் ஏங்கெல்ஸ், பெரும் புகழ் கொண்டிருந்தார் என்பதே அது. 1841ம் ஆண்டு தீவிர—ஜனநாயகப் போக்குடைய மாணவர்களிடையே ஹேகலிய கருத்துக்களின் செல்வாக்கு படர்ந்திருந்ததை அகற்றும் வகையில் இந்த வயதான மெய்யியலார் (பிரெடெரிக் ஷெல்லிங்) பேர்லினுக்கு அழைக்கப்பட்டிருந்தார். பிரஷ்ய தலைநகரில் இவருடைய வருகை பேராரவாரத்தை ஏற்படுத்தியது. அவருடைய பேருரைகள் பிரமாண்டமான தத்துவார்த்த நிகழ்வாக கருதப்பட்டு மாபெரும் கூட்டத்தை ஈர்த்தன. ஏனையவர்களுடன் அதில் இளைய கிர்கஹார்ட், பக்கூனின் (Kierkegaard, Bakunin), ஏங்கெல்ஸ் ஆகியோரும் இருந்தனர். தன்னுடைய இளவயதில் ஹேகலுடன் ஒரே அறையில் தங்கியிருந்த ஷெல்லிங், ஒருகாலத்தில் அவரை தன்னுடைய நெருக்கமான நண்பர்களுள் ஒருவராகத்தான் நினைத்திருந்தார். ஆனால், இப்பொழுதோ அவருடைய புறநிலை கருத்துவாத முறையை மறுத்து, மெய்யியல் சார்ந்த அகநிலைவாதம் மற்றும் பகுத்தறிவற்றதன்மை இவற்றின்பால் தீவிரமாக பற்றுக் கொண்டிருந்தார். மேலும் ஷெல்லிங்கின் ஆரம்பகால பெரும்புகழ், ஜேர்மன் மெய்யியல் உலகில் செல்வாக்கு பெற்ற மெய்யியலாளராக ஹேகல் எழுச்சி பெற்றவுடன் மங்கிப் போயிற்று. ஆனால் 1831ல் ஹேகல் காலமான பின்னர், பிரஷ்ய அரசாங்க அதிகாரிகள் மறைந்த மெய்யியலாரின் படைப்புக்களிலிருந்து மாணவர்கள் பற்றியெடுத்த புரட்சிக் கருத்துரைகள் பற்றி கவலைப்படலாயினர். தீவிரப்போக்குடைய ஹேகலிய தொற்றுவியாதி பரவுவதை தடுத்து நிறுத்தும் பணி ஷெல்லிங்கிற்கு அளிக்கப்பட்டது.

ஹேகலிய பாரம்பரியத்தின் புகழை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில், மிகப் பெரிய சிந்தனையாளராக ஏங்கெல்ஸ் தான் வெளிப்பட்டிருந்தார். 1841ம் ஆண்டு அவர் எழுதிய மூன்று நூல்களான ஷெல்லிங்கும் வெளிப்பாடும், ஹேகல் பற்றி ஷெல்லிங் மற்றும் ஷெல்லிங், கிறிஸ்துவத்தில் மெய்யியலாளர் என்பன இடது ஹேகலிய இளைஞர்களால் ஹேகலிய நிலைப்பாட்டிலிருந்து, ஷெல்லிங் தவறியுள்ளார் என்று உறுதியாக மறுக்கப்பட்டதாக பாராட்டப் பெற்றன. "ஏங்கெல்ஸுக்கு மெய்யியலும் தெரியாது, ஹேகலையும் நன்கு தெரியாது"20 என்று அபத்தமான கூற்றுக்களை வெளியிட்டுள்ள ரோக்மோர் இந்த மூன்று நூல்களையும் அசட்டை செய்துள்ளார். இது புத்திஜீவித வகையில் நேர்மையற்றதன்மை என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. தன்னுடைய பலவீனமான ஆய்வுரையை குறைமதிப்பிற்குட்படுத்தும் அல்லது இகழும் எந்த நிகழ்வையும், நூல்களையும் ரோக்மோர் வெறுமே புறக்கணித்து விடுகிறார்.

ஏங்கெல்ஸ் ஒரு "நேர்மறைவாதி"

ஏங்கெல்ஸ் ஒரு "நேர்மறைவாதி" (Positivist) என்று ரோக்மோர் பலமுறையும் வலியுறுத்தியுள்ளதுடன், மெய்யியல் முற்றிலும் விஞ்ஞானத்தால் கடக்கப்பட்டு விட்டதாகவும், அதன் புத்திஜீவித தன்மையையும் இழந்துவிட்டதாகவும் ஏங்கெல்ஸ் நம்பியிருந்ததாக ரோக்மோர் தெரிவிக்கிறார். ரோக்மோரின் கருத்தின்படி, "ஹேகலுடைய மெய்யியல், விஞ்ஞானத்திற்கு முந்தைய பொருளற்ற கருத்து என்பது போல் ஏங்கெல்ஸ் ஹேகலை நடத்துகிறார்".21 இத்தகைய சீற்றம் தரக்கூடிய தவறான அறிக்கைகளை படிக்கும்போது, வழக்கத்திலிருக்கும் மார்க்சிச எதிர்ப்பு அரசியல் மற்றும் புத்திஜீவித பிற்போக்கின் சூழலின் பின்னணியில் தான் புலமைத் தரத்தின் அனைத்து மரபுவழி நெறிகளிலிருந்தும் விலக்கிக் கொண்டுவிடலாம் என்ற கருத்தை ரோக்மோர் கொண்டிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட கருத்து உண்மையானாலும், தவறானாலும், அது எழுத்து வடிவில் உள்ள நூல்களில் இருந்தாலும் வரலாற்றுச் சான்றாக ஆதரிக்கப்படுகிறதா அல்லது இல்லையா என்பதன் முக்கியத்துவம் வேறு. ஆனால், புத்திஜீவித முறையில் தெளிவாக்குவதற்கும் தத்துவார்த்த துல்லியமாக்கலுக்கும் ரோக்மோர் முயற்சி செய்யவில்லை. மாறாக முன்கூட்டி உறுதி செய்யப்பட்டு விட்ட சித்தாந்த நிகழ்ச்சிநிரலை நிறைவேற்ற வேண்டும் என்பதில்தான் ஆர்வம் கொண்டுள்ளார்.

ஹேகலுடைய மேதமைக்கு ஏங்கெல்ஸ் புகழாரம் சூட்டியவற்றை தொகுத்து பல டஜன் பக்கங்களை நிரப்புவது கடினமானதல்ல. "தன்னுடைய காலத்தில் மாபெரும் அறிவுக்களஞ்சியம் போன்ற சிந்தனையை கொண்டவர்"22 என்று அவர் ஹேகலைப் பற்றி சிறப்புடன் விளக்கியுள்ளார். ஹேகல் பற்றிய ஏங்கெல்சின் பாராட்டு, லூத்விக் ஃபயர்பாக்கும், மூலச்சிறப்புள்ள ஜேர்மன் மெய்யியலின் முடிவும் (Ludwig Feuerbach and the End of Classical German Philosophy) என்ற மிகச் சிறந்த வெளியீட்டில் சிறப்பான வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. அதில் ஹேகலை, இன்றும் கூட வியத்தகு அளவில் காணக்கூடிய வளமான சிந்தனைகளை அளித்த ஒரு “மாபெரும் மேதை” ("Olympian Zeus") என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனையின் புலப்பாட்டியல் (இது சிந்தனையின் உருவாக்கம் மற்றும் அதிலுள்ள பதிவுகள், பல்வேறு கட்டங்களிலிருந்து எழுந்த தனிப்பட்ட நனவின் அபிவிருத்தி, வரலாற்று போக்கினூடாக மனிதனின் நனவு பல்வேறு கட்டங்களின் ஒரு சுருக்கமாக அமைந்த மாற்று வடிவங்கள் ஆகியவற்றிற்கு இணையாகவும் இதை கூறலாம்), தர்க்கவியல், இயற்கையின் மெய்யியல், சிந்தனையின் மெய்யியல் மற்றும் அதன் தனித்துவத்தால் விரிவாக்கப்பட்ட பிந்தையது, வரலாற்று துணைப் பிரிவுகளான: வரலாற்றின் மெய்யியல், சட்டத்தின் மெய்யியல், சமயத்தின் மெய்யியல், மெய்யியலின் வரலாறு, கலையுணர்வு போன்றவை என்று அனைத்து வரலாற்று துறைகளிலும் ஹேகல் அரும்பாடுபட்டு நிகழ்வுகளில் ஊடுருவியுள்ள இழையை கண்டுபிடித்து நிரூபணம் செய்துள்ளார். அவர் படைக்கும் மேதையாக மட்டுமின்றி, பெரும் புலமை பெற்ற அறிவுக்களஞ்சியமாகவும் இருந்தார், ஒவ்வொரு துறையிலும் புதிய சகாப்தத்தை திறந்துவிடும் தன்மையை அவர் கொண்டிருந்தார். "அமைப்பு முறையின்" தேவைகளுக்கு கடமைப்பட்ட வகையில், அந்த வலுக்கட்டாயமான கட்டமைப்புகளை அவர் அடிக்கடி மாற்றி வகைப்படுத்த வேண்டியிருந்தது என்பது தானாகவே வெளிப்படையாக உள்ளது, இதை குறுகிய மனம் படைத்த எதிர்ப்பாளர்கள் இன்றும் கூட ஒரு கடுமையான பரபரப்பிற்கு உள்ளாக்குகிறார்கள். ஆனால் இந்த கட்டமைப்புக்கள், அவருடைய படைப்பின் சாரம் மற்றும் பக்கவாட்டுசட்டம் போன்றவை தான். ஒருவர் அங்கு தேவையில்லாமல் கிளறிக்கொண்டிருக்காது, மாபெரும் கட்டிடத்திற்குள் நுழைந்தால், இன்றும் தங்களுடைய முழு மதிப்புகளை பெற்றுள்ள கணக்கிலடங்கா செல்வங்களை அவர் காணலாம்." 23

இதுபோன்றும், இதற்குமேலும் கணக்கிலடங்கா ஏனைய பத்திகளும் ஏங்கெல்ஸால் எழுதப்பட்டிருந்த போதினும், ஏங்கெல்ஸ் ஹேகலுடைய படைப்பை "விஞ்ஞானத்திற்கு முந்தைய பொருளற்ற படைப்பு" என உதறித்தள்ளினார் என்று ரொக்மோர் எவ்வாறு கூறமுடியும்? அவருடைய பதிப்பாளர்களும், அவர் உலா வந்து கொண்டிருக்கும் கல்வியாளர் சமூகத்திலும் எவரும் இவருடைய பெரும் தவறுகளைப் பற்றி அக்கறை கொள்ளமாட்டார்கள் என்று ரொக்மோர் நினைத்துவிட்டார் போலும். மார்க்சிச தொடர்புடைய படைப்புகளை பொறுத்தவரையில், புலமை நடுக்கத்தின் எதிர்பார்ப்பு எதுவும் அங்கு இல்லை என்றே தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், இப்பொழுது வழக்கத்திலிருக்கும் குறிக்கோள் "எதுவும் எழுதலாம்!" என்று உள்ளது போலும்.

மெய்யியலுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி ஏங்கெல்ஸ்

ஏங்கெல்ஸ், விஞ்ஞானத்தின் வளர்ச்சி மெய்யியலை பொருளற்றதாக்கிவிட்டது என்ற கருத்துக் கொண்ட ஒரு "நேர்மறைவாதி" (Positivist), என்று ரோக்மோர் குற்றஞ்சாட்டுவதும் தவறானதாகும். உண்மையில், இதற்கு எதிர்மாறாகத்தான் ஏங்கெல்ஸ் எழுதியுள்ளார். மெய்யியலின் வரலாற்றில் காரணகாரியங்களுடனான பரந்த, ஆழமான மனிதசிந்தனை ஒரு முக்கிய இடம் பிடிப்பதால், மிகச் சிறந்த இயற்கை விஞ்ஞானிகளும் காரணகாரியங்களுடனான பரந்த, ஆழமான மனிதசிந்தனையின் வரலாற்றுடன் தீவிர அறிமுகமில்லாமல் பின்தங்கி இருந்தார்கள் என்பதால் அவர்களின் படைப்புகளும் கூட ஒரு எல்லைக்குட்பட்டுத்தான் உள்ளது என்று அவர் பலமுறை தொடர்ச்சியாக எச்சரித்தார். அனுபவ ஆராய்ச்சியின் விளைவுகளை சரியாக விளக்குவதற்கு காரணகாரியங்களுடனான பரந்த, ஆழமான சிந்தனைக் கலை மிகவும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்திய ஏங்கெல்ஸ், இது மெய்யியலின் வரலாற்றை பெரும் கவனத்துடன் பயில்வதன் மூலமாக தான் பெற முடியும் என்று கூறினார். ஒரு முக்கியமான பத்தியில் ஏங்கெல்ஸ் பின்வருமாறு எழுதினார்:

"அனுபவவாத இயற்கை விஞ்ஞானம் அறிவிற்கு மகத்தான அளவில் சாதகமான தகவல்களைக் குவித்துள்ளது. இதை ஆய்விற்காக தனித்தனி துறையில் முறையாக வகை பிரிப்பது மற்றும் அவற்றின் உட்தொடர்பு பற்றி முறையாக தொகுப்பது என்பது தவிர்க்கமுடியாத கட்டாயமாக உள்ளது. அதேபோல் அறிவின் பல தனிப்பட்ட மண்டலங்களை ஒருங்கிணைத்து சரியான முறையில் ஒன்றோடு ஒன்று கொண்டுள்ள தொடர்பை தெளிவாக்குவதும் தவிர்க்க முடியாத கட்டாயமாகும். ஆனால் அவ்வாறு செய்கையில் இயற்கை விஞ்ஞானம் தத்துவார்த்த களத்தில் நுழைகிறது. இங்கு அனுபவவாத வழிமுறைகள் பயன்படாதுபோகின்றன, இங்கு தத்துவார்த்தரீதியான சிந்தனைதான் உதவிக்கு வரும். ஆனால் தத்துவார்த்த சிந்தனை என்பது இயற்கையான தகமையில் உள்ளடங்கியுள்ள ஒரு உட்திறன்தான் எனக் கருதப்படவேண்டும். இந்த இயல்பான தகமை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும், முன்னேற்றுவிக்கப்பட வேண்டும் அதன் அபிவிருத்திக்கு, முந்தைய மெய்யியலை பயிலுவதைவிட வேறு சிறந்த வழிவகை இல்லை."24

மற்றொரு பத்தியை மேற்கோளிடுவதையும் என்னால் தவிர்க்க முடியவில்லை. இங்கு ரோக்மோர் குறிப்பிட்டதற்கு முற்றிலும் எதிரான நிலையில்தான் மெய்யியலின் பொருத்தம் பற்றிய கருத்தாய்வை ஏங்கெல்ஸ் அளித்துள்ளார்:

"இயற்கை விஞ்ஞான வல்லுனர்கள் மெய்யியலை புறக்கணிப்பதன் மூலமோ, தவறாக பயன்படுத்துவதின் மூலமோ அதில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்று நம்புகின்றனர். எவ்வாறாயினும், சிந்தனை இல்லாமல் அவர்கள் எந்த முன்னேற்றத்தையும் காணமுடியாது. அத்தகைய சிந்தனைக்கு சிந்தனை வரையறைகள் அவர்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் அவர்கள் இந்த வகையினங்களை படித்தவர்கள் என்று கூறப்படுபவர்களின் பொதுவான நனவிலிருந்து எவ்வித சிந்தனையுமற்று எடுத்துக் கொள்கின்றனர். இது நீண்டகாலம் பழமையாகிவிட்ட மெய்யியல்களின் ஆதிக்கத்தில் உள்ளது, அல்லது பல்கலைக்கழகத்தில் கட்டாயமாக செவிசாய்க்கப்பட்ட மெய்யியலில் இருந்து சிறிது எடுத்துக்கொள்ளப்படுகின்றது. (இது பூரணமற்றது மட்டுமல்லாததுடன் பலதரப்பட்ட, வழமையாக மோசமான பாடசாலைகளை சேர்ந்தவர்களின் குழப்பமான சிந்தனைகளாக இருப்பதுடன், அல்லது விமர்சனமற்றமுறையில், ஒழுங்குமுறையற்ற வகையில் அனைத்துவிதமான மெய்யியல் படைப்புக்களையும் படித்ததில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே இவர்கள் மெய்யியலுக்கு கட்டுண்டவர்கள் என்றாலும் (துரதிருஷ்டவசமாக பெரும்பாலும் மோசமான மெய்யியலுக்கு) மெய்யியலை தவறாக பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் மோசமான மெய்யியலார்கள் விட்டுச் சென்ற இழிந்த மட்டமான எச்சங்களின் துல்லியமான அடிமைகள் ஆவர்." 25

இப்பொழுது வாசகர் தம்முள் ஒரு கேள்வி எழுப்பவேண்டும்: ஏங்கெல்சின் படைப்புக்களில் பரந்த சான்று இருக்கும்போது, எப்படி ரோக்மோர் எழுத்து வடிவில் அறிக்கைகளை இத்தனை வெட்ட வெளிச்சமாக தவறாகக் கொடுக்கமுடியும்? இதற்கு பதில், "மார்க்சிச-எதிர்ப்பு கல்வி தொழில்சார் உலகிற்கு வருக, இங்கு எதுவும் கூறப்படமுடியும்!" என்பது தான்.

ரோக்மோர் தனது கவனத்தை மார்க்சின் பக்கம் திருப்பத்தொடங்கிய உடனேயே, ஏங்கெல்ஸ் மீதான ரோக்மோரின் தாக்குதலின் நோக்கம் வெளிப்படையாகிறது. மெய்யியலில் அறியாமைலிருந்த ஏங்கெல்ஸ்தான் "மார்க்சிசம்" என அறியப்படுவதை தோற்றுவித்திருந்தார் என்றும், நீண்டகால தோழரும் நண்பருமான மார்க்சின் கருத்துக்களை தவறாக கூறியதும், சிதைத்ததும் ஏங்கெல்ஸ் தான் எனக்கூறி, ரோக்மோர் ஒரு "புதிய" மார்க்சை காண்பிக்க முற்படுகிறார்: அதாவது மார்க்சின் மரணத்திற்கு பின்னர் ஏங்கெல்சால் உருவாக்கப்பட்ட சடரீதியான "கதையாடல்" (பின்நவீனத்துவ சொல்லை பயன்படுத்த வேண்டும் என்றால்) இல்லாத மார்க்சை காண்பிக்க விரும்புகிறார். இவ்வாறாக, ஏங்கெல்ஸ் மற்றும் பல தலைமுறை "மார்க்சிஸ்டுகளால்" கருத்திற் கொள்ளப்படும் நிலைப்பாட்டிற்கு எதிராக உண்மையான மார்க்ஸ், ஹேகலுடைய மெய்யியல் கண்ணோட்டத்திலிருந்து கணிசமான வேறுபாட்டைக் கொண்டிருக்கவில்லை என அவர் கூறுகின்றார். ரோக்மோர் கூறுவதாவது:

"மார்க்சிற்கும் ஹேகலுக்கும், அல்லது மார்க்சிற்கும் மெய்யியலுக்கும் இடையே அல்லது மெய்யியலுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையே கூட உள்ள வேறுபாடுகளின் தன்மையில் நிலவும் அரசியல் உந்ததுல் பெற்ற கூற்றுக்களுக்கும் அப்பால் செல்ல வேண்டும்; அந்த விதத்தில் மட்டும்தான் இறுதிப்பகுப்பாய்வில்  மார்க்ஸ் ஒரு மெய்யியலாளர் மட்டுமில்லாமல், ஒரு ஜேர்மனிய மெய்யியலாளர் என்பது மட்டுமில்லாமல், ஒரு ஜேர்மனிய ஹேகலியன், ஆகவே ஜேர்மனிய கருத்துவாத மெய்யியலாளர் (idealist philosopher) என ஒருவர் காணமுடியும்." 26

ரோக்மோரின் இக்கண்டுபிடிப்பிற்கு முன்பு, மார்க்ஸ் கருத்துவாதத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை "மார்க்சிஸ்டுகள்" மறுத்து, மறைத்தனர் என நாம் நம்பவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். மெய்யியல் சார்ந்த விடயங்களில் அவர்கள் கொண்டிருந்த திறமையின்மையின் விளைவினால் தான் அவர்கள் மார்க்ஸ் மீது  சடவாத மற்றும் ஹெகெலிய எதிர்ப்பு நிலைப்பாடுகள் அனைத்தையும் சுமத்தினர். "ஏங்கெல்சுக்கு மெய்யியல் பற்றியோ, ஹேகல் பற்றியோ நன்கு தெரியாது." என்று ரோக்மோர் எழுதுகிறார். "ஏங்கெல்சிலிருந்து, லெனின் உட்பட சில மார்க்சிசவாதிகளே ஹேகலை நன்கு பயின்றிருந்தனர். ...ஹேகலை மார்க்சிச முறையில் இழிவுபடுத்துதல் என்பது மார்க்சின் நிலைப்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பான அவரின் அறிவுகுறைந்த விழிப்புணர்வின் விளைவாகும்".27

மார்க்சை ஓர் கருத்துவாதியாக புதுவிளக்கம் காண முற்படும் ரோக்மோரின் முயற்சியைத் தவிர, "லெனின் உட்பட மார்க்சிசவாதிகள் பலரும் ஹேகலை அதிகமாக பயின்றிருக்கவில்லை" என்னும் கூற்றும் இன்னொரு அப்பட்டமான போலித்தனமாகும். அவநம்பிக்கை, அசட்டைத்தன்மை ஆகியவற்றில் ஆழ்ந்திருக்கும் கல்வியாளர் குழு கூறுவதை, அப்படியே ஏற்றுக்கொள்ளும் புத்திஜீவித நிலையில் ரோக்மோர் நம்பிக்கை வைக்கிறார். உண்மையை சிறிதும் ஆதாரமாகக் கொண்டிராத வகையில் இப்படி எழுதுவதற்கு அவருடைய கல்வியாளர் கூட்டத்தில் அவரை ஒருவரும் சாடமாட்டார்கள் என்று அவர் உறுதியாக நினைக்கிறார். "ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை" எனப்படும் G.V. பிளெக்ஹானோவின் படைப்புக்களை ரோக்மோர் எப்பொழுதாவது நன்கு ஆய்வு செய்ய முயன்றுள்ளாரா? பிளெக்ஹானோவின் மெய்யியல் கருத்துருக்களுடன் ஒத்துவராதவர்கள் கூட அவர் ஹேகலை மிகவும் பரந்த, ஆழ்ந்த அளவில் பயின்றிருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்வர். ஹேகலின் தர்க்கவியலின் விஞ்ஞானம் (Conspectus on Hegels Science of Logic) பற்றிய லெனினுடைய மதிப்பீட்டை ரோக்மோர் முன்பின் அறிந்திராதவரா? 1914—15ல் வெளிவந்த லெனினுடைய "மெய்யியற் குறிப்புக்கள் (Philosophical Notebooks) என்பதில் ஹேகலுடைய தர்க்கவியல் பற்றிய பரந்த மேற்கோள்களும் அடங்கியுள்ளன; இந்த நூல், லெனினுடைய அரசியல் பணிக்கு பலமான கோட்பாட்டு அடித்தளமாக இருப்பதை விளங்கிக்கொள்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லெனினுடைய இந்த விரிவான மதிப்பீடுதான் மார்க்சிச மாணவர்களிடையே ஹேகல் பற்றிய தத்துவார்த்த அக்கறையை குறிப்பிடத்தக்க வகையில் புத்துயிர்ப்பு கொடுப்பதற்கு உதவியது என்பதை ரோக்மோர் அறியவில்லை போலும். அத்தகைய அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்க வகையில் ரோக்மோர் பாராட்டுத் தெரிவிக்கும் லூகாஸ் உம் அடங்கியுள்ளார். மிகச்சிறந்த வகையில் இயங்கியல் முறையில் திறமையை வெளிப்படுத்தும் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்கள் பற்றி என்ன கூறுவது?28 அல்லது Deborin, Axelrod போன்ற ஆரம்ப சோவியத் தத்துவார்த்தவியலாளர்களுடைய படைப்பு பற்றி என்ன கூறுவது? பிந்தைய சோவியத் மெய்யியலாளர்களான Mikhail Lifshits மற்றும் E.V.Ilyenkov ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம்; அவர்கள்தான் ஒடுக்குமுறைமிகுந்த சூழ்நிலையிலும் ஹேகல்—மார்க்ஸ் உறவு பற்றி அறிந்து கொள்வதற்கு நிறைய எழுதினார்கள். அதுவும் சோவியத் ஒன்றியத்தில் சலுகை பெற்றிருந்த அதிகாரத்துவம் தத்துவார்த்த படைப்புக்களுக்கு கடுமையான குரோதத்தை காட்டிய நிலையிலும் (அது ஸ்ராலினுடைய ஆட்சியின்போதும் அதற்குப் பின்னரும்கூட பொருந்தும்) எழுதினர்.

மார்க்ஸ் ஒரு கருத்துவாதியா?

ஏங்கெல்சை ஒரு நேர்மறைவாதி, (Positivist) மெய்யியலின் பொருந்தும் தன்மையை நிராகரித்தவர் எனச் சித்திரித்துக்காட்டும் முயற்சிகளுக்கு பெரும் தடை ஏங்கெல்சின் சொற்களே என்பதை நாம் காட்டினோம். அதேபோல், மார்க்ஸ் ஒரு ஜேர்மனிய கருத்துவாதி என்பதை நிராகரிக்கும் கருத்தும் அவருடைய எழுத்துக்களிலேயே காணக்கூடியதாக இருக்கும். மார்க்சின் படைப்புக்களை மெதுவாக அடியெடுத்துப் பார்த்து மிகவும் உன்னிப்பான முறையில் தெரிந்தெடுத்து எப்பொழுதாவது ரோக்மோர் மேற்கோளிட்டுக் காட்டும் வகையானது, தன்னுடைய கருத்தாய்வு உறுதியற்ற தன்மையில் உள்ளது என்பதை அவரே உணர்ந்துள்ளார் என்பதை குறிப்பிடுகிறது. ஹேகலிடம் இருந்து அவர் முறித்துக் கொண்டார் என்றுள்ள பரந்த நம்பிக்கைக்கு மார்க்ஸ் "ஓரளவு காரணம்" என்று கூறும் வகையில் ரோக்மோர் தவறாகவே கருத்தாய்வை ஆரம்பிக்கிறார். மூலதனம் நூலின் இரண்டாம் பதிப்பிற்கு எழுதியுள்ள பின்னுரையில், அடிக்கடி மேற்கோளிடப்படும், அவரது சொந்த நிலைப்பாடு ஹேகலின் நிலைப்பாட்டின் தலைகீழ்த்தன்மையிலிருந்து விளைவு என்று "தெளிவற்ற" முறையில் மார்க்ஸ் கருத்துரைப்பதன் காரணமாக ஆகும். ஏங்கெல்ஸ் முதற்கொண்டு பல தலைமுறை மார்க்சிசவாதிகளும் மார்க்சின் நிலைப்பாட்டை ஹேகலின் தலைகீழ்நிலையாகத்தான் அணுகியுள்ளனர்.

உண்மையில், ரோக்மோர் குறிப்பிடும் பத்தியில் எச்சிறுபகுதியும் தெளிவற்றதாக இல்லை. 1873 ஜனவரி மாதம் மார்க்ஸ் எழுதியது இதுதான்:

"எனது இயங்கியல் வழிமுறை ஹேகலிய வழிமுறையினின்று வேறுபட்டது மட்டுமன்றி, அதற்கு நேர் எதிரானதுமாகும். ஹேகலுக்கு மனித மூளையின் இயங்கிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிப்போக்கானது, அதாவது சிந்தனை நிகழ்ச்சிப்போக்கானது —ஒரு சுயாதீன பொருளாகக்கூட மாற்றிவிடுகிறார்— எதார்த்த உலகத்தின் படைப்பாளி ஆகும்; எதார்த்த உலகம் “கருத்தில்” இருந்து மட்டும் வரும் அகநிலை உணர்வுக்கு புறம்பான தோற்றப்பாடே அன்றி வேறில்லை. மாறாக எனக்கு, கருத்து என்பது சடத்துவ உலகம் மனித சிந்தனையால் பிரதிபலிக்கப்பட்டு பின்னர் சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகின்ற ஒன்றே அன்றி வேறில்லை." 29

இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு மார்க்ஸ் ஜேர்மனிய மொழியால் எழுதியதின் நம்பிக்கையான படிவமாகும். மார்க்சின் சொற்களில் தெளிவற்றதாகவோ, மறைமுகமாகவோ அல்லது குழப்பமாகவோ, ஏதும் இல்லை. எவ்வளவு தெளிவாகக் கூறமுடியுமோ, அவ்வளவு தெளிவாக மார்க்ஸ் தன்னுடைய வழிமுறை ஹேகலுடைய வழிமுறையில் இருந்து அடிப்படையில் வேறுபாடு உடையது, "அதற்கு நேர் எதிர்மாறானது" என்று கூறியுள்ளார். ஏன் இவ்வாறு? ஏனெனில் ஹேகலின் இயங்கியல் யதார்த்த உலகம் சிந்தனையின் ஒரு வெளிப்படுத்தல் மட்டுமே எனக் கருதும் கருத்துவாதியுடையது. மார்க்சை பொறுத்தவரை, சிந்தனையின் வடிவங்கள், யதார்த்தமாய் நிலவும் சடத்துவ உலகு, மனித சிந்தனையில் ஏற்படுத்தும் ஒரு பிரதிபலிப்பாகும். மார்க்ஸ் பயன்படுத்தும் "மனித சிந்தனையால் பிரதிபலிக்கப்பெற்றது" என்ற சொற்றொடர் இருக்கும் நிலையை பற்றி கூடுதலான கவனத்தை கொள்ளுங்கள். ஆனால் ரோக்மோர்: "எமது நோக்கங்களுக்கு, அறிதலின் பிரதிபலிப்பு தத்துவத்தை எடுத்துக்காட்டினால் மட்டுமே போதுமானது. இது, பின்னர் நீண்ட வரிசையில் உள்ள மார்க்சிசவாதிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டது, ஆனால் மார்க்சின் எழுத்துக்களில் அடித்தளத்தை கொண்டிருக்கவில்லை."30 நாம் முன்னரே குறிப்பிட்டுள்ளபடி, எதையும் கூறலாம் என்றாகியுள்ளது.

மார்க்சின் எழுத்துக்களில் ரோக்மோர் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு முடிவே இல்லை. ஹேகலின் உரிமையின் மெய்யியல் மீதான மார்க்சின் விமர்சனத்தை பற்றிக் குறிப்பிடுகையில், "பிரசுரிப்பதற்காக தயாரிக்கப்படாத இந்தப் பொருளுரையில் மார்க்ஸ் பலவற்றை மீண்டும் மீண்டும் கூறுகிறார்; படிப்பதற்கு கடினமானதாக இது உள்ளது" என்று கூறுகிறார்.31 ரோக்மோருக்கு அவ்வாறு தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அவருடைய அதிருப்திக்கு காரணம் மார்க்ஸ் கொடுத்துள்ள விமர்சனம், மார்க்சை ஒரு ஹேகலிய கருத்துவாதி என ரோக்மோர் சித்தரித்துக் காட்டும் முயற்சியுடன் எவ்விதத்திலும் சமரசப்படுத்திவிட முடியாது. இந்த விமர்சனத்தை மார்க்ஸ் எழுதிய அளவில், ஹேகலின் மெய்யியல் முறையின் கருத்துவாத கட்டமைப்பை உடைக்கும் தீவிரமான தத்துவார்த்த பணியை முன்னெடுத்தார். (இதற்கு ஏங்கெல்சும் கணிசமாக பங்கு அளித்திருந்தார்). மேலும் ஹேகலுடைய இயங்கியல் முறையில் இருந்த புதிரை அகற்றி, மனிதனை ஒரு சமூக இருப்பாக கருதும் வரலாற்று ஆய்வில் ஊன்றியிருக்கும் எதார்த்தவியல் பற்றிய ஆய்வின் (Ontology) உண்மையான ஒரு சடவாத அபிவிருத்திக்கான அஸ்திவாரங்களை இட்டார். மார்க்சின் விமர்சனத்தின் உறுதியான சாதனைக்கு லூத்விக் ஃபயர்பாக்கின் எழுத்துக்கள் முக்கியமான தத்துவார்த்த ஊக்கத்தை தந்திருந்தன (இவரைப் பற்றி கிட்டத்தட்ட ரோக்மோர் குறிப்பிடுவதே இல்லை எனலாம்); இத்திறனாய்வுதான் வரலாற்று, சமூக ஆய்விற்கு ஒரு கருவியாக ஹேகலின் ஊகரீதியான சிந்தனைமுறை போதுமான தன்மையை கொண்டிருக்கவில்லை என்ற நிரூபணத்தை அளித்தது. ஏங்கெல்சுக்கு முழுமுதல் கருத்தை (Absolute Idea) இயங்கியல் ரீதியாக மறுசீரமைக்கும் புறநிலை சந்தர்ப்பங்கள் என அவர் விளக்கமளித்த தர்க்கரீதியான வரையறைகள் என்பன சடத்துவ எதார்த்தத்தை எடுத்துக்காட்டியதுடன், அதன் அடித்தளமாகவும் இருந்தது. அவர் இருத்தலின் வடிவங்களை எதார்த்தமற்ற தர்க்கரீதியான சிந்தனையின் இயங்கியல் நிகழ்முறையில் இருந்து விளக்க முற்பட்டார். ஹேகலுடைய வழிவகை நனவுக்கும் எதார்த்தத்திற்கும் இடையே இருக்கும் சரியான உறவை தலைகீழாக்கிவிட்டது என்று மார்க்ஸ் நிறுவினார்; அவ்வாறு செய்கையில், மனிதன் வாழும் "மக்கள் சமுதாயத்தை" (நிலவும் சமூக ஒழுங்கமைப்பு என ஹேகல் குறிப்பிட்டார்) பற்றிய உண்மையான அறிதல் தடைபட்டுப்போகிறது என்றும் அவர் கூறினார். உண்மையான சமூக நிகழ்முறையின் சடத்துவ அடித்தளத்தை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, ஹேகல் அவற்றை அருவமான தர்க்கரீதியான உறவுகள் என்றவகையில் விளக்கப்பார்த்தார் என மார்க்ஸ் விளக்குகிறார்.

"குடும்பமும், மக்கள் சமுதாயமும், அரசியல்ரீதியான அரசாக மாற்றம் பெறுவதென்பது இவ்விதத்தில் தான், அதாவது: இந்த துறைகள் பற்றிய சிந்தனை, அதாவது இறுதியாக இது அரசு பற்றிய சிந்தனையாக உள்ளது, இப்பொழுது அது தனக்கு அவ்விதத்திலும் அதன் உள்ளடக்கத்திலும் உண்மையாக உள்ளது போல் நடந்து கொள்கிறது. இவ்வாறான மாற்றம் குடும்பம் மற்றும் ஏனையவற்றின் குறிப்பிட்ட தன்மையில் இருந்தும், அரசின் குறிப்பிட்ட இயல்பில் இருந்தும் மட்டுமின்றி சுதந்திரத்திற்கு தேவையான பொது உறவில் இருந்தும் உந்தப்படுகிறது. துல்லியமாய் அதே மாற்றம் தான் உட்சாரத்தின் செயற்களத்திலிருந்து கருத்துருவின் செயற்களத்திற்கு தர்க்கவியலில் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதே மாறுதல் தான் இயற்கையின் மெய்யியலில் உயிர் வளர்ச்சியற்ற (அசேதன) தன்மையிலிருந்து உயிர்த் தன்மைக்கு ஏற்படுகிறது. ஆன்மாவை எப்பொழுதும் இதே வகையினங்கள்தான் இப்பொழுது அந்த செயற்களத்திற்காக வழங்குகிறது. இங்கு அருவமான தனி இயல்புகளுக்கு தொடர்புடைய ஸ்தூலமான தனிஇயல்புகளை தனிமைப்படுத்தி அடையாளம் காண்பதுதான் விஷயமாகும். 32

இதற்கு உதாரணம் கொடுக்கும் வகையில் மார்க்ஸ் ஹேகலுடைய சட்டத்தின் மெய்யியல் என்ற நூலில் இருந்து ஒன்றோடொன்று பின்னப்பட்ட, தெளிவற்ற பொருளுடைய பத்தியை ஆராய்கிறார்.

இலட்சியத்தன்மையில் தேவை [ஹேகல் எழுதுகிறார்] தான் அதற்குள்ளேயே இருக்கும் சிந்தனையின் அபிவிருத்தியாக உள்ளது. அகநிலையான சொல்லின் பொருளளவில் அது அரசியல் நம்பிக்கையாகும், அதிலிருந்து மாறுபட்ட தன்மையில், ஒரு புறநிலையான சொல்லின் பொருளளவில் அது அரசின் உயிர்ப்பொருளாக இருப்பதுடன், கண்டிப்பான வகையில் அரசியல் அரசும் அதன் அரசியல் யாப்புமாகும்.33

மார்க்ஸ் இதன் பின், விளங்காமல் இருந்த ஹேகலிய சொல்லாட்சியில் மறைந்திருக்கும் ஆய்வின் வறுமையை, சொற்புரட்டுகளைப் பற்றியும் கூட, அம்பலப்படுத்துகிறார்:

இங்கு எழுவாயாக இருப்பது “இலட்சியத்தன்மையில் தேவை” என்பதும் — 'அதற்குள்ளேயே அடங்கியிருக்கும் கருத்தும்' ஆகும். அதன் பயனிலை: அரசியல் நம்பிக்கை மற்றும் அரசியல் யாப்பு. சாதாரண மொழியில் அரசியல் நம்பிக்கை என்பது அகநிலை அம்சமாகும், அரசியல் யாப்பு என்பது அரசின் புறநிலையான அம்சமாகும். குடும்பம், மக்கள் சமூகம் இவற்றிலிருந்து அரசிற்கு தர்க்கரீதியான வளர்ச்சி ஏற்பட்டது என்பது வெளிப்படையான மோசடியாகும். குடும்ப உணர்வு, மக்கள் உணர்வு, குடும்ப அமைப்பு மற்றும் சமூக அமைப்புக்கள் என்பன அரசியல் நம்பிக்கை மற்றும் அரசியலமைப்பு ஆகியவற்றுடன் எவ்வாறு தொடர்புடையவை என்பது விளக்கப்படவில்லை; மேலும் அவை எவ்வாறு தொடர்புபட்டுள்ளன என்றும் விளக்கப்படவில்லை."34

ஹேகலைப் பொறுத்தவரையில், "'கருத்தை' மறுபடியும் கண்டுபிடிப்பதற்கான முழு ஆர்வமும் தெளிவானதும், எளிதானதும், 'தர்க்கரீதியான கருத்து' அதன் ஒவ்வொரு கூறுபாட்டிலும் அதாவது அரசு அல்லது இயற்கை எதுவானாலும், மற்றும் அதில் உண்மையாக அதற்கு கீழ்ப்படிவாக உள்ள, இந்த விஷயத்தில் 'அரசியல் யாப்பு' என்பது வெறும் பெயரை வழங்குகின்றதே தவிர எந்த விளக்கத்தையும் தரவில்லை. எனவே நமக்கு எஞ்சுவதெல்லாம், உண்மையை அறிந்தது போன்றதொரு தோற்றமே இருக்கும். அவை விளங்கப்படாமல் தான் இருக்கும்; ஏனெனில் அவற்றின் சிறப்பு தன்மையிலிருந்து அவை விளங்கிக் கொள்ளப்படவில்லை." என்று மார்க்ஸ் எழுதுகிறார்.35 (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது)

ஹேகல் முறையின் முக்கியமான பலவீனம்:

"அவர் சிந்தனையை புறநிலையிலிருந்து வளர்க்கவில்லை; ஆனால் அருவமான தர்க்கவியல் களத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்ட மற்றும் நிலைத்துவிட்ட வெட்டுண்ட மற்றும் வறண்டுபோன சிந்தனையின் அடிப்படையில் அவர் புறநிலையை விளக்க முற்படுகிறார். இது அரசியல் யாப்பின் குறிப்பிட்ட சிந்தனை படிப்படியாய் அபிவிருத்திசெய்யும் பிரச்சினையாக இராது, மாறாக அரசியல் யாப்பிற்கும் அருவமான கருத்துக்கும் இடையே உறவுமுறையை நிறுவுவதாக, கருத்தின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதியாக அதை வைக்கும் முயற்சியாக, புதிரான பகுதியாக விளக்கிக்காட்டும் கூறாக இருக்கும்." 36

இவ்வாறு ஹேகலிய அணுகுமுறையில் உள்ள பின்வரும் அடிப்படை பிழையை மார்க்ஸ் தொகுத்து காட்டுகிறார்:

"மெய்யியல் பணி என்பது அரசியல் வரையறைகளில் சிந்தனைக்கு உருக்கொடுப்பதை கொண்டிருக்கவில்லை, மாறாக நிலவும் அரசியல் வரையறைகளை ஆவியாக்கி அருவமான சிந்தனைகளாக செய்துவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. விஷயத்தை பற்றிய தர்க்கம் அல்ல மாறாக தர்க்கம் பற்றிய விஷயம் தான் மெய்யியல் கூறுபாடாக உள்ளது. அரசு இருப்பதை நிரூபிக்க தர்க்கம் பயன்படுத்தப்படுவதில்லை; மாறாக தர்க்கத்தை நிரூபிக்க அரசு காட்டப்படுகின்றது." 37

மிக ஆழ்ந்த முறையில் ஹேகலுடைய வழிமுறையைப் பற்றிய மார்க்சின் விமர்சனத்தை ரோக்மோர் கருத்தில் கொள்ளவில்லை. அது மிகவும் "கடினமான பகுதி" என்று ஒதுக்கிவிடுகிறார். தர்க்கநிலையிலிருந்து அரசு என்னும் சிந்தனையை ஹேகல் கொண்டு வருவது பற்றிய மார்க்சின் விமர்சனத்தைப் பற்றி சுருக்கமாகவும் தெளிவற்ற முறையிலும் ரோக்மோர் குறிப்பிடுகிறார்; ஆனால் மார்க்சின் தத்துவார்த்த வளர்ச்சியில் அதன் பல விளைவு கொண்ட முக்கியத்துவத்தை பற்றி ஒப்புக் கொள்ளவில்லை. உண்மையில் ரோக்மோர் இதை சரியாகப் புரிந்து கொள்ளாத தன்மை என்று உதறித்தள்ளுகிறார்; அதற்கு அவர் கூறுவது: "மார்க்ஸ் ஹேகலை விமர்சித்தது ஹேகலுக்கு நியாயத்தைக் கொடுத்ததா என்று நாம் நம்மைக் கேட்டுக் கொள்ளவேண்டும்; அல்லது அது ஹேகலை "பிழையாக" படித்ததின் விளைவில் தளத்தை கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்."38 இப்படி வினாவை எழுப்புவது புத்திஜீவித முறையில் நேர்மையற்றதாகும்; ரோக்மோரின் திட்டத்திற்கு இதுதான் அடித்தளமாக உள்ளது. ஒருபுறத்தில் மார்க்ஸ் ஹேகலியவாத கருத்துவாதி என்று பிரகடனப்படுத்தப்படுகிறார்; மறுபுறத்தில் சடவாத பறிப்பாளர் பிரெடெரிக் ஏங்கெல்சால் அறிமுகப்படுத்தப்பட்ட திரித்தல்களின் விளைவுதான் கருத்துவாத எதிர்ப்பு "மார்க்சிசம்" தோற்றுவிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் மார்க்சின் படைப்புக்களில், ஹேகலியத்தை, சடவாத நிலைப்பாட்டிலிருந்து விமர்சிக்கும் குறிப்புக்களை சொல்லும் இடத்திலெல்லாம், மார்க்ஸ் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே ஏதோ கூறுகிறார் என்று தெரிவிக்கும்படி பேராசிரியர் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்.

விமர்சன ஆய்வுரையை தொடர்ந்து (கூடியளவில் ஏங்கெல்சின் முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பால்) எழுதப்பட்ட மார்க்சின் ஒரு தொடர் படைப்புக்களைப் பற்றிப் பேசும்போதும், இத்தகைய தவிர்க்கும் முறையில்தான் ரோக்மோர் எழுதுகிறார். இந்நூல்களில் எல்லாம் மார்க்ஸ் தனது சடவாத தெளிவுபடுத்தலூடாக ஹேகலிய இயங்கியலில் மறுஆய்வு செய்துள்ளார். 1844ம் ஆண்டு பொருளாதார, மெய்யியல் பற்றிய கையேடுகளில் ஹேகலிய வழிமுறை பற்றிய மார்க்சின் நீண்ட, விரிவான பகுப்பாய்வை பற்றி ரோக்மோர் கிட்டத்தட்ட ஒன்றுமே எழுதவில்லை. இப்பகுதிக்கு மார்க்ஸ் கொடுத்த தலைப்பு ''முழு ஹேகலிய இயங்கியலும் மெய்யியலும் பற்றிய விமர்சனம்'' ("Critique of the Hegelian Dialectic and Philosophy as a Whole") என்பதாகும். இந்த விலைமதிப்பற்ற உரையில் இருந்து பரந்த முறையில் மேற்கோளிடும் அவாவை நான் நிறுத்திக் கொள்ளுகிறேன்; ஆனால் அப்பகுதி விமர்சன ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருந்ததை விட கூடுதலான வகையில் ஹேகலிய வழிவகையை ஆழ்ந்த முறையில் ஆராய்கிறது. இந்த விமர்சனத்தை மார்க்ஸ் எழுதியதற்கு காரணம் தன்னுடைய படைப்பை ஹேகல் மற்றும் அவருடைய கருத்துக்களை ஒட்டிய படைப்புக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டிய முக்கிய தேவையினால் தான் என்பதை வலியுறுத்துவது இன்றியமையாததாகும். ப்ரூனோ பௌவர் போன்ற நன்கு அறியப்பட்டிருந்த இடது ஹேகலியர்கள் தங்கள் ஆசிரியர் பற்றிய விமர்சனரீதியான அணுகுமுறையை கொள்ளாததற்காக மார்க்ஸ் கடிந்து கொண்டார். ஆனால் மார்க்ஸ், ஃபயர்பாக்கிடம் பெரும் மதிப்பைக் கொண்டிருந்தார்; "ஹேகலிய இயங்கியலை கவனமாக விமர்சிக்கும் அணுகுமுறை பெற்று, அத்துறையில் உண்மையான கண்டுபிடிப்புக்களை மேற்கொண்ட ஒரே மனிதர் இவர்தான். உண்மையில் பழைய மெய்யியலை வெற்றிகொண்டவர் இவர்"39 என்று மார்க்ஸ் கூறினார். தன்னை ஒரு ஹேகலியன் என்று கருதிக் கொண்டிருந்தால் இத்தகைய புகழாரத்தை அவர் ஃபயர்பாக்கிற்கு ஏன் அளித்திருக்க வேண்டும்?

ஏங்கெல்ஸ் உடன் படைக்கப்பட்ட மார்க்சின் அடுத்த பெரிய நூலான புனிதக் குடும்பம் (The Holy Family) ரோக்மோரினால் உதறித் தள்ளப்படுகிறது. ரோக்மோர் எழுதுகிறார்:

"பௌவர் மற்றும் பல இடதுசாரி ஹேகலிய சிந்தனையாளர்களுக்கு எதிராக அதிக வறட்டுத்தனமான வாதத்தை இந்நூல் கொண்டுள்ளது. மிக நன்றாக எழுதும்போது [அதாவது ரோக்மோரின் கருத்துடன் மார்க்ஸ் ஒத்துப்போகும்போது], மார்க்ஸ் ஓர் உள்ளொளி தரக்கூடிய எழுத்தாளர்; கவனத்துடனும் விரைவுடனும் தான் ஆராயும் நூலாசிரியர்களின் நயமான நுட்பங்கள், சிறந்த உட்பார்வை உடையவர்களுக்கு தக்க விடையிறுப்பு கொடுப்பவராக உள்ளார். ஆனால், முரண்படும்பொழுது இந்நூல் முழு விவாதத்திற்குரியதாக, மிக எளிய கருத்துக்களின் தொகுப்பாக உள்ளதுடன், [அதாவது ரோக்மோரின் கருத்துக்களுக்கு முரணாக உள்ளது] முந்தைய, பிந்தைய மார்க்சிச படைப்புக்களின் நுட்பங்கள் இதில் இல்லாததுடன், புரிந்து கொள்வதைவிட நிராகரிப்பதை கொண்ட, தீவிர எதிர்ப்புக் கருத்துக்கள் நிறைந்ததாக உள்ளது." 40

புனிதக் குடும்பம்

ரோக்மோரை பொறுத்தவரையில் "நுட்பமான வேறுபாடு" என்பது வேண்டுமேன்றே குழப்பமான வகையில் கூறுதலாகும், இத்தன்மை மார்க்சின் தத்துவார்த்த படைப்பு எதிலும் கிடையாது. ஹேகல் நிலைப்பாடு பற்றிய மார்க்சின் விமர்சனம் மிகத் தெளிவான முறையில் வரையறுக்கப்பட்டுள்ளது; அதை உருத்திரிப்பிற்கோ, தவறான விளக்கத்திற்கோ உட்படுத்தப்பட முடியாது. ஹேகலுடைய கருத்துவாத ஊகங்களுடன் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்களை ஒருவிதத்திலும் இயைந்து நிற்பவை என விளக்கிக் கூற முடியாது. வரலாற்றில் சடவாத கருத்தை விரிவாக்கம் செய்தது மற்றும் பூர்ஷ்வா சமுதாயத்தில் புறநிலையான புரட்சிகர சக்தியாக பாட்டாளி வர்க்கத்தை அடையாளம் கண்டது என்பன புனிதக் குடும்பத்தில் பிரதிபலித்த மகத்தான முன்னேற்றமாகும். தர்க்கரீதியான கருத்துப்படிவங்களின் தன்னியல்பான இயக்கம் அல்ல இந்த வர்க்கத்தின் சடரீதியான நடைமுறையே சமுதாயத்தின் புரட்சிகர மாற்றத்திற்கான அடிப்படையை வழங்கும். சோசலிசப் புரட்சிக்கான உண்மையான அடித்தளங்கள் எந்த தனித் தொழிலாளியின் சிந்தனையிலும் உறைந்திருக்காமல், ஒரு வர்க்கம் என்ற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் புறநிலையான சமூக இருப்பில் உள்ளது.

ஜேர்மனிய ஊக கருத்துவாதம் பற்றிய மார்க்சுடைய விமர்சனத்தின் வரலாற்று தாக்கங்கள், "இந்த அல்லது அந்த பாட்டாளி வர்க்கம் அல்லது முழு பாட்டாளி வர்க்கமும் அக்கணத்தில் என்ன இலக்கை கொண்டுள்ளது என்பது பற்றிய பிரச்சினையல்ல என்ற கண்டுபிடிப்புத்தான் மார்க்ஸ், ஏங்கெல்சின் படைப்புக்கள் மூலம் வெளிப்படுகின்றது. மாறாக பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன, தனது இருப்பு காரணமாக வரலாற்றுரீதியாக எதை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினை. அதன் நோக்கமும் வரலாற்று நடவடிக்கையும் காணக்கூடிய வகையில் தவிர்க்கமுடியாமல் அதன் வாழ்க்கை நிலைமையிலும், இன்றைய பூர்சுவா சமூகத்தின் முழு அமைப்பிலும் முன்னிழலிட்டு நிற்கின்றன.41

இத்தகைய முறையில் மார்க்ஸ், ஏங்கெல்சின் படைப்புக்களில் பாட்டாளி வர்க்கம் ஒரு புதிய புரட்சிகர வர்க்கம் எனக் கூறப்படுதல் ஒரு முழு உணர்வுடன் கூடிய தத்துவார்த்த வெளிப்பாடாக இருப்பது ரோக்மோரினால் மேற்கோளிடப்படவில்லை என்பதில் வியப்பு ஏதும் இல்லை. ஒருவேளை அவர் இதையும் மிக "வறண்டதாகவும்", "நுட்பவேறுபாடு அற்றதாகவும்", "வெறும் வாதத்திற்காக கூறப்பட்டதாகவும்", "சுவையற்றது" என்றும் கருத்துக்கள் கூறத் தேவையற்றது என்றும் நினைத்தார் போலும்.

ரோக்மோர் புனிதக் குடும்பத்தில் அசட்டை செய்ய நினைக்கும் மற்றொரு முக்கியமான பிரிவு, தற்கால சடவாதத்தின் வளர்ச்சி என்ற நெடிய பகுதியாகும். "ஏங்கெல்ஸின் படைப்பில் சடவாதம் தெளிவான கோட்பாடாக கூறப்பட்டுள்ளது, ஆனால் மார்க்சிடம் இன்னும் தெளிவு குறைவாக உள்ளது"42 என்று கூறிய பின்னர், புனிதக் குடும்பத்தில் மார்க்சினாலேயே எழுதப்பட்ட சுருக்கமான பரிசீலனையில் 17ம் நூற்றாண்டில் இருந்து வளர்ச்சியுற்ற நவீன சடவாதம் மற்றும் சோசலிச சிந்தனையின் வளர்ச்சிக்கு அதன் ஆழ்ந்த பங்களிப்பு ஆகியவை பற்றி ரோக்மோரால் வரவேற்று எழுதமுடியாதுதான்:

"கார்ட்டிசிய சடவாதம் (Cartesian Materialism) சரியான இயற்கை விஞ்ஞானங்களுள் சென்றுவிடுவதைப் போலவே, பிரெஞ்சு சடவாதத்தின் மற்றைய போக்கு சோசலிசம் மற்றும் கம்யூனிசம் இவற்றிற்கு நேரடியாக இட்டுச் செல்கிறது.

"இயல்பான நலன்கள், அதேயளவு புத்திஜீவித நிலை கொண்ட மனிதர்களுக்கு சடவாதம் பயிற்றுவிக்கப்படல், அனுபவம், பழக்கவழக்கம் மற்றும் கல்வியின் சக்தித்திறன், மனிதர்கள் மீதான சுற்றுசூழலின் தாக்கம், தொழிற்துறையின் முக்கியத்துவம், மகிழ்ச்சியை நியாயப்படுத்துவதல் இவற்றில் இருந்து சடவாதம் எவ்வாறு கம்யூனிசம் மற்றும் சோசலிசத்துடன் தொடர்பு பெற்றதில் இன்றியமையாததாக இருந்தது என்பதை அறிய பெரும் ஆற்றல் ஒன்றும் தேவையில்லை. மனிதன் தன்னுடைய அறிவு, உணர்வுகள் போன்ற அனைத்தையும் உணர்வுகளின் உலகத்திலிருந்தும், அதில் இருந்து பெறப்படும் அனுபவத்திலிருந்தும் எடுத்துக் கொள்ளுகிறான் என்றால், இவ் அனுபவவாத உலகத்தை உண்மையான மனிதத் தன்மை எங்கு உள்ளதோ அதை அனுபவித்து, அதற்கு ஏற்ப பழகிக் கொண்டு தன்னை ஒரு மனிதன் என்று அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட, கூடியவகையில் ஒழுங்கமைக்க என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்வான்."43

ஹேகலுடைய கருத்துவாத நிலை பற்றி மார்க்சின் விமர்சனத்தை இப்படிப்பட்ட உதறித்தள்ளும் பாங்கைக் கொண்டதின் விளைவாக, விஞ்ஞானபூர்வமான அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அது கொடுத்த இன்றியமையாத பங்களிப்புக்கள் ஒருபுறம் இருக்க, ரோக்மோரினால் முதலாளித்துவ சமுதாயம் பற்றிய மார்க்சின் தத்துவங்களின் அடித்தளங்களில் ஏதேனும் ஒன்றை அறிந்து கொள்ள இயலவில்லை. அவர் எழுதுவதாவது:

"மார்க்சின் பொருளாதார தத்துவத்தின் மையக் கருத்து அவருடைய மதிப்பு தத்துவமோ, பண்டங்கள் பற்றிய குறிப்புக்களோ, அந்நியப்படல் போக்கு பற்றிய கருத்து அல்லது பண்டங்களின் வழிபாடு பற்றிய அவருடைய பார்வையோ அல்ல. மாறாக ஆடம் ஸ்மித்தின் கருத்துக்களை தளமாகக் கொண்டு, ஓரளவு ஹேகலினால் வளர்க்கப் பெற்ற தெளிவான உட்பார்வை ஆகும்; அதாவது, நவீன சமூதாயம் என்பது முதலாளித்துவ உலகத்தின் பொருளாதார கட்டமைப்பிற்குள் தனிமனிதர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவு செய்துகொள்வதில் செய்யும் முயற்சிகளிலிருந்து தோன்றும் மாறும்தன்மை கொண்ட கட்டமாகும்." 44

ஒரு உயர்நிலைப்பள்ளி வகுப்பில் வீட்டுப் பொருளாதாரம் பற்றி வரும் வெற்று உபதேச உரையை எதிர்கொள்ளும் தன்மையை (அதாவது, நவீன சமுதாயம் என்பது வாழ்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தனிநபர்களைக் கொண்டது என்ற கருத்து) "முக்கியமான உட்பார்வை", இது அவரால் ஹேகல், ஆடம் ஸ்மித் ஆகியோரின் படைப்புக்களை பெரும் கவனத்துடன் படித்ததால் திரட்டி எடுக்கப்பட்டவை என்று கூறுவது போல் உள்ளது. (உண்மையில் மார்க்ஸ், ஸ்மித் பற்றி உபரி மதிப்பு தத்துவங்களில் பல நூற்றுக்கணக்கான பக்கங்கள் கூறியுள்ளார்). ஆனால் இந்த இழிவான கண்ணோட்டத்திற்கும் மார்க்சின் தத்துவார்த்த வளர்ச்சியை ரோக்மோல் திரித்துக் கூறுவதற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. மார்க்சின் முதலாளித்துவ சமுதாயம் முழுவதற்குமான பொதுக் கோட்பாட்டின் முக்கிய கூறுபாடுகள் அனைத்தையும் அவர் உதறித்தள்ளுகிறார்; அவற்றின் கண்டுபிடிப்பும், விரிவாக்கமும் ஹேகலிய இயங்கியல் மீதான சடவாதரீதியான மீளாய்வும், ஊக கருத்துவாதம் மீதான விமர்சனமும் இல்லாது சாத்தியமாயிருக்காது. உண்மையில் 1844ம் ஆண்டு மார்க்ஸ் பொருளாதாரத்தின் பக்கம் கவனம் திரும்புதல்" என்பது, உலகம் என்பது தர்க்க வடிவங்களின் இயக்கத்தில் இருந்து வந்தது என்ற ஹேகலின் கருத்தை பற்றிய விமர்சனரீதியான நிலைப்பாட்டில் இருந்துதான் வெளிப்பட்டது. மனித சமூகத்தின் உண்மையான அஸ்திவாரங்களின் சடவாத விளக்கமும், அது வரையறுக்கப்பட்ட வடிவமைப்பில் சமூக உணர்வை அத்தியாவசியமாக பிரதிபலித்தது என்பதற்கு, மெய்யியல் தன்னுடைய கவனத்தை சுவர்க்கத்தில் இருந்து பூமிக்குச் செலுத்துவதிலும், கடவுளின் அனைத்து வடிவங்களில் இருந்து (ஹேகலின் முற்றுமுழுதான எண்ணம் என்ற மெய்யியற் கடவுள் உட்பட) மனிதன் பால் திரும்புதல், தூய எண்ணத்தில் இருந்து மனித சமூகத்தின் தோற்றம், இனப்பெருக்கம், கலாச்சார வளர்ச்சி ஆகியவற்றிற்கு உழைப்புத்தான் உண்மையான அடித்தளம் என்ற ஆய்விற்கு திரும்புதல் என்பது வரை தேவைப்படுகிறது.

மார்க்சின் விமர்சனத்தில் காணப்படும் வெளிப்படையான மிகப் பரந்த தன்மை இருந்தபோதிலும், மார்க்ஸ் கருத்துவாத மெய்யியலாளர், ஹேகலுடன் உண்மையில் முறித்துக்கொள்ளவில்லை என தான் சித்தரித்துக்காட்டும் முயற்சிகளை நிலைநிறுத்தும் வகையில், ரோக்மோர் சொல்லாட்சி முறையில் விளையாடுகிறார். அவர் எழுதுவதாவது: " 'கருத்துவாதம்' என்பதில் ஒரு கருத்து ஏதேனும் ஒருவிதத்தில் தன்னுடைய உலகையும், தன்னையும் தோற்றுவித்துக் கொள்கிறது என்று உள்ளபோது, மார்க்ஸ் தெளிவான கருத்துவாதியாகத்தான் உள்ளார்".45 வேறுவிதமாகக் கூறினால், நனவை பெற்றுள்ள மனிதர்கள் உலகத்தில் செயல்படுகின்றனர்; அவ்வாறு செயல்படும்போது உலகத்தையும் தங்களையும் மாற்றுகின்றனர்; அப்பொழுது அவர்கள் கருத்துவாதியாகின்றனர். இத்தகைய வரையறை கருத்துவாதத்திற்கும் சடவாதத்திற்கும் இடையே இருக்கும் மோதல் நிலையை தவிர்த்து இரண்டு வேறுபட்ட, இயைந்திருக்க முடியாத மெய்யியற் போக்குகளையும் இணைத்துவிடும். நனவானது வரலாற்றில் ஒரு செயல்படும் தன்மையையும், ஆக்கத்தன்மையையும் கொண்டுள்ளது என்று ஒப்புக்கொள்ளும் அனைத்து மெய்யியல் போக்குகளையும் கருத்துவாதம் உள்ளடக்கி உள்ளது என்று ரோக்மோர் உறுதியாக கூறுகிறார்.

சடப்பொருளும் நனவும்

ஆனால் இது இரண்டு முக்கியமான ஒன்றோடொன்று தொடர்புடைய மெய்யியல் பிரச்சினைகளுக்கு விடையிறுக்காமல் விட்டுவிடுகிறது. முதல் பிரச்சினை சிந்தனைக்கும் சடப்பொருளுக்கும் இடையே உள்ள உறவு பற்றியது; அதில் கீழ்க்காணும் வினாக்கள் எழுப்பப்படுகின்றன: நனவில் இருந்து சடப்பொருளுள் சுதந்திரமாக உள்ளதா, அல்லது சடப்பொருளில் இருந்து சுதந்திரமான முறையில் நனவு எழுகிறதா? சிந்தனைக்கு முன்பு சடப்பொருளுள் உள்ளதா அல்லது சடப்பொருளுக்கு முன் சிந்தனை உள்ளதா? நனவு (அல்லது spirit — தூய உணர்வு) சடத்துவ உலகம் இல்லாது அல்லது அதிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற முன்னிபந்தனையை கொண்டுள்ளதா அல்லது நனவு (தூய உணர்வு) சடத்துவ உலகில் இருந்து தனித்து அல்லது சடத்துவ உலகு இல்லாமல் இருக்க முடியுமா? பிரபஞ்ச உலகத்தின் படைப்பு நனவு ஏற்படுவதற்கு முன்பு வந்ததா, அதாவது பிரபஞ்ச உலகம் தோன்றுவதற்கு முன்பே நனவு இருந்ததா? முதல் வினாவில் வேரூன்றியுள்ள இரண்டாம் பிரச்சினை இயற்கைக்கும் அறிந்துகொள்ளும் ஆற்றல் நிகழ்போக்கிற்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிய வினாக்களை எழுப்புகிறது — அதாவது, எந்த அளவிற்கு தன்னில் இருந்து புறத்தே இருப்பதைப் பற்றி சிந்தனை அறியமுடியும்? சிந்திப்பதன் மூலம் யதார்த்தத்தைப் பற்றிய ஒரு துல்லியமான விளக்கத்தை கொடுக்க முடியுமா?

மெய்யியலார்கள் இந்த வினாக்களுக்கும் கொடுக்கும் விடைகள்தான் அவர்கள் கருத்துவாத முகாமில் இருக்கின்றனரா அல்லது சடவாதமுகாமில் உள்ளனரா என்பதற்கு அடிப்படையாகும். ஏதேனும் ஒருவிதத்தில் சடப்பொருள் மீது சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர்கள், இருப்பின் மீது நனவு மேலாதிக்கம் கொண்டுள்ளது எனக் கூறுபவர்கள் கருத்துவாதிகள். இந்நிலைப்பாட்டிற்கு எதிரானவர்கள், சடப்பொருளுக்குதான் நனவு மீது ஆதிக்கம் உண்டு என வலியுறுத்துபவர்கள், சடப்பொருளின் படிப்படியான வளர்ச்சியின் விளைவாகத்தான் நனவு உருவாகின்றது என்று வலியுறுத்துபவர்கள் சடவாதிகள் ஆவர்.

கருத்துவாதம் பற்றிய ரோக்மோரின் வரையறை முக்கியமான மெய்யியல் பிரச்சினைகளைக் குழப்பும் தந்திரமாகும். மனிதர்கள் நனவுடன் நடந்து கொள்கிறார்கள் என்ற மறுக்கமுடியாத உண்மையில் கருத்துவாதத்திற்கான ஒரு முழுமையான அடித்தளத்தை கண்டறிவதில் இவர் ஒன்றும் முதல்தடவையாகக் கூறிவிடவில்லை. ஏங்கெல்ஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி,

"மனிதர்களுக்கு உந்துதல் கொடுக்கும் எந்தப் பொருளும் அவர்களுடைய மூளை வழியே கடந்து வரவேண்டும் என்பதை நாம் தவிர்க்க முடியாது — உண்பது, நீர் அருந்துவது ஆகியவை பசி அல்லது தாக உணர்வு வழி தோன்றும் உணர்வு மூளை வழியாகச் செலுத்தப்பட்டு திருப்தியடைந்த பின்னர் மூளை வழியாக அறியப்படும் விளைவு என்று முடிவடைகிறது. புற உலகு மனிதன் மீது கொண்டுள்ள ஆதிக்கம் அவனுடைய மூளையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு உணர்வுகள், சிந்தனைகள், உந்துதல்கள், விருப்பங்கள் என்று பிரதிபலித்து வருகின்றன —அதாவது "கருத்துப் போக்குகளாக" வெளிவருகின்றன; இந்த வடிவமைப்பில் அவை "கருத்து சக்திகளாக" மாறுகின்றன. அப்படியானால் மனிதன் "கருத்தியல் போக்குகளை" பின்பற்றுகிறான், "கருத்தியல் போக்குகள்" அவன்பால் செல்வாக்கு கொண்டுள்ளன என்று ஒப்புக் கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் ஓர் கருத்துவாதி என்று கருதப்பட முடியுமானால், சாதாரண வளர்ச்சியுறும் ஒவ்வொரு மனிதனும் ஒரு பிறவி கருத்துவாதி ஆவான்; அப்படியானால் சடவாதிகள் இருக்கவே முடியாதா?"46

"கருத்து சக்திகள்" இருப்பதைப் பற்றிய அறிதல் அல்லது மனிதர்கள் மீது அவற்றின் செல்வாக்கு என்பது சடவாதம் மற்றும் கருத்துவாதம் இவற்றிற்கு இடையே உள்ள பூசலின் பிரச்சினை அல்ல; மாறாக "கருத்து சக்திகளின்" தோற்றங்கள் மற்றும் இயல்பு எவ்வாறு அறியப்பட்டு விளக்கப்பட முடியும் என்பதுதான் பிரச்சினை. இறுதிப்பகுப்பாய்வில், "கருத்தின்" ஆதாரம் சிந்தனைக்கு வெளியே, புறநிலையாக இருக்கும் சடத்துவ உலகத்தில் உள்ளதா, இல்லையா?

இந்த கேள்விக்கு தொடர்ச்சியாகவும், ஐயத்திற்கு இடமின்றியும் மார்க்ஸ் கொடுத்துள்ள விடையை திரித்துக்கூறத்தான் ரோக்மோர் பலமுறையும் முயன்றுள்ளார். உதாரணமாக, மூலதனம் எழுதப்படுவதற்கான வழிவகையை பற்றிக் கூறும்போது, ரோக்மோர் இரண்டாம் ஜேர்மன் பதிப்பில் வந்துள்ள பின்னுரையை (Afterword) மேற்கோளிடுகிறார்: அதில் "ஒரு கண்ணாடியில் நேரிய முறையில் ஆய்வுப்பொருளின் உயிருள்ளதன்மை பிரதிபலிக்கப்பட்டால், அது முன்னரே எம் சிந்தனையில் உள்ள கட்டமைப்பே நம் முன் பிரதிபலிப்பது போல் தோன்றும்." என்று மார்க்ஸ் எழுதியுள்ளார். இதைப்பற்றி ரோக்மோர் கூறும் கருத்தாவது:

"இங்கு மார்க்சின் சொற்கள் தவறாகப் புரிந்துகொள்ளும் தன்மையை எளிதில் தோற்றுவிக்கின்றன. மார்க்சிசத்திற்காக ஏங்கெல்ஸ் வழங்கும் முன்னோடியான வகையில் உள்ள அறிவு பற்றிய பிரதிபலிப்புக் கோட்பாடு பற்றி ஒன்றும் அவர் வெளிப்படையான ஆதரவைக் கொடுக்கவில்லை. ஒரு சுதந்திரமான உலகத்தை அப்படியே சிந்தனை பிரதிபலிக்கிறது என்ற உண்மையை பற்றிய அறிவையும் அவர் ஏதும் கூறவில்லை." 47

கருத்தும் உண்மையும்

மார்க்சின் சடவாதத்தை ரோக்மோர் மீண்டும் மறுக்க முற்பட்டு, ஏங்கெல்ஸிற்கு எதிரான தன்னுடைய கருத்துக்களை முன்வைப்பதில் ஒரு தந்திர உத்தியை காட்டுகிறார். "அப்படியே" என்ற சொல் பயன்படுத்தப்படுவது குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இழுக்கப்பட்ட போலிக்கோடு ஆகும். ஒரு சுதந்திரமான உலகத்தை சிந்தனை பிரதிபலிக்கிறதா என்பதுதான் முக்கியமான பிரச்சினை ஆகும். சடத்துவ உலகம் கருத்துமுதல்வாத வடிவங்களில் பிரதிபலிக்கிறது என்ற கூற்றுக்கள் சிக்கல் வாய்ந்தவை, முரண்பாடுகள் உடையவை ஆகும். மனித சிந்தனையில் எதார்த்தத்தின் மிகச்சிறந்த மறுஉருவாக்கம், வரலாற்றுரீதியாகவும் மற்றும் சமூகரீதியாகவும் நிபந்தனைக்குட்பட்ட பிரித்தெடுக்கும் நிகழ்வுப்போக்கு மூலம் ஏற்படும். இந்தக் குறிப்பிட்ட கருத்துவகையில், மனது "ஒரு கண்ணாடி" போல், உண்மையில் அதன் சிக்கலான மறு உருவாக்கத்தை உடனடியாக பிரதிபலிப்பது போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது எனக் கூறுவதற்கு இல்லை.48 ஆயினும்கூட இறுதிப்பகுப்பாய்வில், மனித சிந்தனையில் வெளிப்படும் தோற்றங்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துப்படிவங்கள் ஆகியவை சிந்தனைக்கு வெளியேயுள்ள அந்த அறிந்துகொள்ளும் பொருளின் புறநிலை எதார்த்தத்தின் பிரதிபலிப்புக்களே ஆகும்.

ரோக்மோரினால் மேற்கோளிடப்படும் அதே சொற்கள், மூலதனத்தின் பின்னுரையில் (Afterword) வந்துள்ளன; அதில் மார்க்சின் மெய்யியற் கண்ணோட்டம் மற்றும் பகுப்பாய்வுமுறை பற்றி ஒரு ரஷ்ய ஏட்டிற்காக சமகாலத்திய ஆய்வாளர் ஒருவர் விவரித்த நீண்ட உரைப்பகுதிக்கு பின் உள்ளது. அந்த மதிப்புரையை ஒப்புக்கொண்டு மார்க்ஸ் மேற்கோள்காட்டியுள்ளார். அதில் ஒரு பகுதியாக எழுதப்பட்டதாவது:

"மார்க்ஸ் சமுதாயத்தின் இயக்கத்தை இயற்கை வரலாற்று நிகழ்முறையாக அணுகுகிறார்; இந்நிகழ்முறையை ஆளுகின்ற விதிகள் மனித விருப்பத்தையும் நனவையும் மதிநுட்பத்தையும் சார்ந்திராதவை மட்டுமல்ல, அதற்குமாறாக அந்த விருப்பத்தையும் நனவையும் மதிநுட்பத்தையும் நிர்ணயிக்கவும் செய்பவை எனக் கொள்கிறார்.... நாகரீக உலகின் வரலாற்றில் நனவான அம்சம் இவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றதென்றால், நாகரீக உலகை கருப்பொருளாக கொண்ட ஒரு கவனமான ஆய்வுகூட நனவின் எந்த வடிவத்தையும் அல்லது எந்தப் பயனையும் அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது என்பது கூறாமல் விளங்கும். இப்படிச்சொல்வதன் பொருள் அதன் தொடக்க ஆதாரமாக பயன்படக்கூடியது கருத்தன்று, சடரீதியான புலப்பாடே என்பதாகும்."49

இப்பத்தியை மேற்கோளிட ரோக்மோர் விரும்பவில்லை.

மாறாக, பின்னுரையை பற்றிய தன்னுடைய பொருளற்ற பகுப்பாய்வில், மார்க்ஸ் "தன்னை ஒரு ஹேகலியன் என அறிவித்துக்கொண்டு அதை உறுதிப்படுத்துவது வெளிப்படையாக உள்ளது" என்ற முடிவுரையான கூற்றை ரோக்மோர் எழுதியுள்ளார். உண்மையில் மார்க்ஸ் தன்னை ஹேகலியன் என்று விவரித்துக் கொள்ளவும் இல்லை; அதையும்விட சரியாகவும் துல்லியமாகவும், "அந்த மகத்தான சிந்தனையாளரின் மாணவர்" என்றுதான் கூறிக் கொண்டார்; ஏற்கனவே கருத்துவாத ஆசிரியரை சடவாத மாணவரிடம் இருந்து பிரிக்கும் தன்மையை அவர் விளக்கிக் கூறிவிட்டார். தன்னுடைய வழிமுறையின் உறவு ஹேகலுடன் எப்படி உள்ளது என்பது பற்றிய கருத்தாய்வுடன் முடிவுரையாக மார்க்ஸ் கூறுவதாவது:

"ஹேகலுடைய கைகளில் இயங்கியல் படும் புதிரானதன்மை, அதனை பொதுவான இயங்கும் வடிவத்தை புரிந்துகொள்ளும் வகையில், நனவான முறையில் அளிப்பதில் முதலாவதாக இருந்தார் என்பதை சிறிதும் தடுத்து நிறுத்தவில்லை. அவரைப் பொறுத்தவரையில் அது தலைகீழாக நிற்கிறது. அது மீண்டும் சரியாக நிறுத்தப்படவேண்டும்; அப்பொழுது புதிரானகூட்டிற்குள் உள்ள பகுத்தறிவார்ந்த சாரத்தை நாம் கண்டறிய முடியும்."50

"மார்க்ஸ் தெளிவான முறையில் ஓர் கருத்துவாதி"51 என்ற ரோக்மோரின் கூற்று, "மார்க்சிசத்தில் இருந்து வேறுபட்ட முறையில் மார்க்ஸ் உயர் சிந்தனை முறையை பற்றி நிற்கிறார்"52 என்பவை 1843ல் இருந்து அவர் 1883ல் காலமாகும் வரை மார்க்ஸ் கொண்டிருந்த மெய்யியல்சார்ந்த நிலைக்கு படுமோசமான மற்றும் ஐயத்திற்கு இடமற்ற தவறான கருத்து என்பது புலனாகும். ஆயினும்கூட இந்த விவாதத்திற்கு முடிவு காண்பதற்கு மார்க்சையே மீண்டும் பேசவைப்பது பொருத்தமாகும். தன்னுடைய நண்பர் லூத்விக் கூகெல்மான்(Ludwig Kugelmann)க்கு மார்ச் 6, 1868ல் எழுதிய கடிதம் ஒன்றில் ஓர் இளம் பேராசிரியர் ஒய்கென் டூரிங் (Eugen Dühring) மூலதனம் பற்றி எழுதிய விமர்சனத்தை (பின்னர் ஏங்கெல்சின் ஒப்பற்ற விவாதப் பொருளாக வரவிருக்கிறது). தீவிரமாக விமர்சிக்கிறார். டூரிங் "ஏமாற்றுத்தனத்தை கையாள்கிறார்" என்று குறைகூறிய மார்க்ஸ் எழுதியதாவது:

"நான் ஒரு சடவாதி, ஹேகல் ஓர் கருத்துவாதி என்பதால், என்னுடைய ஆராய்வுமுறை ஹேகலியத்தை சார்ந்தது அல்ல என்பதை அவர் நன்கு அறிவார். ஹேகலுடைய இயங்கியல் அதன் புதிரான தன்மையை அகற்றிய பின்னர்தான் அனைத்து இயங்கியலுக்கும் அடிப்படை வடிவமாகிறது; இதனால் தான் தெளிவாக இது என்னுடைய வழிமுறையை வேறுபடுத்துகிறது”. 53

பேராசிரியர் ரோக்மோர் இந்த நன்கறியப்பட்ட கடிதத்தை தன்னுடைய நூலை எழுதும்போது கண்டிருக்கவில்லை என்பதை நம்புவது கடினமாகும். மாறாக அதை வெறுமே புறக்கணிக்கத்தான் அவர் செய்துள்ளார். இவ்விதத்தில் மார்க்ஸ் டூரிங்கிற்கு எதிராக எழுப்பிய குற்றச்சாட்டை மிகவும் பொருத்தமான முறையில் ரோக்மோர் பற்றியும் கூறவியலும்.

சீர்திருத்தவாதி மார்க்ஸ்

இப்படி துன்பப்பட்டு சுற்றிவளைத்து ஏங்கெல்ஸ் மற்றும் மார்க்சிசத்திடம் இருந்து மார்க்சை பிரிக்கும் முயற்சியை, அதேநேரத்தில் மார்க்சை ஒரு ஹேகலிய கருத்துவாதியாக காட்டுவதை ரோக்மோர் நோக்கமாகக் கொண்டுள்ளதன் காரணம் யாது? ஒரு சமூகப் புரட்சிக்கான தேவை இருந்தது என்ற தன்னுடைய முந்தைய கருத்துக்களை மார்க்ஸ் மூலதனத்தின் மூன்றாம் பாகத்தில் நிராகரித்துவிட்டார் என்ற "திகைப்பூட்டும் பத்தியை கண்டுபிடித்ததாக" தன்னுடைய புத்தகத்தின் முடிவிற்கு வரும்போது ரோக்மோர் கூறுகையில், அதற்கான விடை வருகிறது. "கட்டாய வேலை வாங்குதல் நிறுத்தப்படும்போதுதான் சுதந்திரம் வருகிறது; இதன் பொருள் மனிதர்களுக்கு ஆதரவான நிலையில் பொருளாதார வழிவகை மீதான கட்டுப்பாடு நிறுவப்படுவதில் உள்ளது. இருப்பினும், உண்மையான தேவைகள், இன்னும் பொருளாதார வழிவகைகள் மூலம்தான் பூர்த்தி செய்யப்பட முடியும், எப்போதும் அவ்வாறே இருக்கும் என்றாலும், அதாவது தேவையின் தன்மைக்கு ஏற்ப என்று இருக்கும் என்றாலும், அதற்கு அப்பால் மார்க்ஸ் இப்பொழுது கூறும் சுதந்திரத்தின் மண்டலம் என்பது உள்ளது. அதற்கான முன்தேவை வேலை நேரத்தை குறைத்தல் என்று ஆலோசனை கூறும்போது, வரலாற்றின் இலக்கு, உண்மையான சுதந்திரம் என்பது நிறைய சுதந்திரமான நேரம் கிடைப்பதில்தான் உள்ளது என்பதை உட்குறிப்பாக காட்டுகிறார்"54 என்று ரோக்மோர் எழுதியுள்ளார்.

இதன்பின் மார்க்சிடமிருந்து நீண்ட மேற்கோளை ரோக்மோர் அளிக்கிறார்:

"தேவைகளினாலும் நாளாந்த அவசியத்தாலும் தீர்மானிக்கப்படும் உழைப்பு இல்லாமற் போகுமிடத்தேதான் உள்ளபடியே சுதந்திரத்தின் ஆட்சி தொடங்குகிறது. இவ்விதம் இயல்பாகவே அது நடைமுறையிலுள்ள பொருள் உற்பத்தியின் எல்லைக்கு அப்பாற்பட்டு உள்ளது. எப்படி ஆதிகால மனிதன் தம் தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காகவும் தமது வாழ்வை பாதுகாத்து மறு உற்பத்தி செய்து கொள்வதற்காகவும் இயற்கையோடு மல்லுக்கட்டி போராடியாகவேண்டுமோ, அதேபோல் நாகரிக மனிதனும் எல்லா சமூக அமைப்புக்களிலும், சாத்தியமான எல்லா பொருளுற்பத்தி முறைகளிலும் அப்படித்தான் செய்தாக வேண்டும். நாகரிக மனிதன் வளர்ச்சி அடைவதையொட்டி அவரின் விருப்பங்களின் விளைவாக பொருட்களின் தேவையின் எல்லையும் விரிவடைந்து செல்கிறது. ஆனால் அதேபோது இந்தத் தேவைகளை நிறைவு செய்யும் உற்பத்தி சக்திகளும் அதிகரித்துச் செல்கின்றன. இந்தத்துறையில் சுதந்திரம் என்பது கூட்டாக உழைக்கும் சமூகமயப்பட்ட மனிதனானவன், இயற்கையுடனான பரிமாற்றத்தை அறிவுக்குகந்த வழியில் ஒழுகி இயக்குவதாகத்தான் அமைந்திடமுடியும்; அவர்கள் இயற்கையின் குருட்டுச் சக்திகளால் ஆளப்படுவதற்கு பதில் இயற்கையை தங்களின் பொதுக் கட்டுப்பாட்டிற்கு கீழ்ப்படுத்த வேண்டும்; மிகக் குறைந்த அளவில் ஆற்றலைச் செலவிட்டும், தங்கள் மானிட இயல்புக்கு மிகச்சாதகமான, மிகப் பொருத்தமான நிலைமைகளுக்குட்பட்டும் இதனைச்சாதிக்க வேண்டும், ஆனால் இது இன்னமும் தேவையின் எல்லைக்குட்பட்டே இருந்து வருகிறது. அதற்கப்பால் ஆரம்பமாகும் சுதந்திரத்தின் உண்மை எல்லையான மானுட ஆற்றலின் வளர்ச்சி, இறுதியிலும் இயல்பாகவும் என்றாலும் தேவையின் எல்லையை அடித்தளமாக கொண்டுதான் சுதந்திரத்தின் எல்லை பூத்துக் குலுங்க முடியும். வேலை நாளைக் குறைப்பது அதற்கான அடிப்படை முன்நிபந்தனையாகும்."55

ரோக்மோரினால் மேற்கோளிடப்பட்ட இந்தப் பத்தியை அதன் முழுமையில் இங்கு கொடுத்துள்ளேன்; ஏனெனில் அப்பொழுதுதான் வாசகர்கள் மார்க்ஸ் உண்மையில் என்ன எழுதினார் என்பதைக் கொண்டு தன்னுடைய முடிவிற்கு ரோக்மோர் வந்தது நியாயப்படுத்தப்பட முடியுமா என்பதைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும்.

"இந்தச் சிறப்பான உரைப்பகுதி பற்றி பல கூறப்பட முடியும். கம்யூனிசத்திற்காக பல ஆண்டுகள் போராடிய பின்னர், இங்கு அதை மார்க்ஸ் வெளிப்படையாக, உண்மையான மனித சுதந்திரத்திற்கு ஒரு முன் நிபந்தனையாக கைவிடுகிறார் என்பது மிகவும் வெளிப்படையானதாகும். சமூகத்தின் முந்தைய கட்டத்துடன் ஒரு முறிவு என்பதில்தான் சுதந்திரம் வரும் எனக் கூறுவதற்கில்லை; அதாவது புரட்சியின் மூலம்தான் அடையப்படும் என்று இல்லை; ஆனால் வாழ்கை நிலைமையில் அடிப்படை முன்னேற்றத்தை அதாவது சீர்திருந்தத்தைக் கொண்டுவருவதில் உள்ளது. சுருக்கமாகக் கூறினால், மார்க்ஸ் இங்கு புரட்சியை சீர்திருத்தத்தால் பிரதியீடு செய்கின்றார்."56 ரோக்மோர் குறிப்பிடுவது.

இந்த பத்தியை பற்றி பலவும் கூறப்பட முடியும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உண்மைதான்; ஆனால் ரோக்மோர் கூறுவது எதுவும் சரியில்லை. இந்த உரைப்பகுதியில் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக புரட்சியை நிராகரிக்கலாம் என்று காண்பதற்கு சொற்றொடரின் ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் எதிர்ப்பொருளை கொடுத்தால்தான் முடியும் என்று இருக்கிறது. "சுதந்திரம் என்பது கூட்டாக உழைக்கும் சமூகமயமாக்கப்பட்ட மனிதன் இயற்கையுடனான தங்கள் பரிமாற்றத்தை பகுத்தறிவார்ந்த வகையில் கட்டுப்படுத்தி, இயற்கையின் குருட்டுத்தனமான ஆற்றல்களால் ஆளப்பட்டுவிடாமல், அதனை பொதுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்" என்று மார்க்ஸ் பிரகடனப்படுத்துகிறார். இது அனைத்து சக்தியும் நிறைந்த சந்தை வடிவமைப்பு கொண்டுள்ள பொருளாதார அராஜகம் நிலவும் முதலாளித்துவ உற்பத்திமுறையைத் தூக்கி எறிவதின் மூலம்தான் அடையப்பட முடியும்; இந்த அடிப்படையில் தன்னை தக்க வைத்துக்கொள்ளவும் வாழ்வை விஸ்தரிக்கவும் இனப்பெருக்கம் செய்யும் தேவையால் ஆணையிடப்படும் உழைப்பின் செயற்பாட்டெல்லைக்கு அப்பால் மனிதனுடைய படைப்புத் திறன்களின் வளர்ச்சி சுதந்திரம் என்பது புரிந்துகொள்ளப்படும். இயற்கையில் இருந்து தான் தப்பி வாழ்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்குத் தேவையானவற்றை மனிதன் பெறவேண்டிய தளத்தில் இருந்துதான் சுதந்திரம் தோன்றும். மணித்தியாலம் குறைந்த வேலைநாள் என்று வரும்போது தேவை மீது சிறிது சிறிதாக சுதந்திரம் ஆதிக்கம் செலுத்தும் அடிப்படையின் அளவுகோலாக அது இருக்கும். ஆனால் அதுவே சுதந்திரம் அடையப்பட்டுவிட்டதாக பொருள் தராது; அதுவும் முதலாளித்துவ வடிவமைப்பிற்குள் உறுதியாகத் தராது. ரோக்மோர் கொடுக்கும் அடுத்த கருத்திற்கு இப்பத்தியில் இருந்து ஏதும் ஆதரவைக் கொடுக்காது.

"மரபுவழிப்படி மார்க்சிசம் வெறும் சீர்திருத்தத்திற்கு எப்பொழுதுமே விரோதப் போக்கைத்தான் கொண்டுள்ளது. ஆயினும்கூட இந்த உரைப்பகுதியில் மார்க்ஸ், முதலாளித்துவ சமூகத்தின் உண்மையான எஜமானர்களாக பொருளாதார நிகழ்வுப்போக்குகள்மீது கட்டுப்பாட்டை மனிதர்கள் மீண்டும் கொள்ள முடியும் என்றால், தற்கால தொழிற்துறை சமூகமும் உண்மையான மனித சுதந்திரமும் இயைந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளார்."57

ஆனால் பொருளாதார வாழ்வின்மீது பகுத்தறிவார்ந்த கட்டுப்பாடு என்பது முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் இயலாதது ஆகும்; இம்முறையின் கீழ் முற்றிலுமான மனிதத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலாப நோக்கத்திற்கான உந்துதலைக் கீழ்ப்படுத்தவும் முடியாது.

வரலாற்று சடவாதம், ஏங்கெல்ஸ், மார்க்சிசம் ஆகியவை இல்லாத மார்க்சிற்குத்தான் ரோக்மோர் வாதிடுகிறார்; இறுதியில் இது சோசலிசப் புரட்சி இல்லாத மார்க்ஸ், தலைகீழாக மட்டும் என்றில்லாமல் கைவிலங்குகள் மற்ற தளைகளுக்கும் உட்படுத்தப்பட்ட "மார்க்ஸ்" என்று ஆகிவிடுகின்றது.

முடிவுரை

இந்த ஆய்வுரைக்கு ஒரு சிறிய முடிவுரையை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது. Marx After Marxisim என்னும் நூல் வெளியிடப்பட்ட பின்னர் The Philosophal Challenge of September  11 என்ற வேறு ஒரு நூல், பேராசிரியர் ரோக்மோரின் பதிப்பின்கீழ் வந்துள்ளது. ரோக்மோரும் ஜோசப் மார்கொலிஸும் இணைந்து எழுதிய இந்நூலின் முன்னுரையில், நாம் கீழேயுள்ளதைப் படிக்கிறோம்:

"எமது மரபில் நாம் நன்கறிந்த வழிவகைப்படி 9/11 நிகழ்வுகளை பற்றி ஆராயத் தயாராக உள்ளோமா அல்லது அவ்வித முறைகள் இப்பணிக்கு போதுமா என்றும் வியக்க வேண்டியுள்ளது. எமது பகுப்பாய்வுக் கருவிகள் பற்றி இனி நாம் உறுதியாகக் கூறுவதற்கு இல்லை. ...நாம் அறிந்துள்ள அரசியல் மெய்யியல் என்பது காலம் கடந்துவிட்டது போல் தோன்றுகின்றது, எமக்கு தேவையான நேரத்தில் உதவாமற் போய்விடுகிறது.

"இத்தேக்க நிலை மற்ற தேவைகளுக்கும் விரிவாக்கம் அடைந்துள்ளதோ என்ற ஐயமும் எழுகின்றது. நம்முடைய தயாரிக்கப்பட்ட கருத்தாய்வு உத்தரவாதங்கள் அனைத்தும் 9/11 நிகழ்வினால் பெரும் குழப்பத்தை அடைந்துள்ளன. உலகை எமது கோட்பாடுகளில் பிடித்துவைத்துள்ளோம் என்ற முன்கருத்து உலகத்தினாலேயே தகர்க்கப்பட்டுவிட்டது. எவரும் எதிர்பார்க்க முடியாத வகையில் உலகம் பலவிதங்களிலும் மாறிவிட்டது. வழக்கமான கருவிகளை எளிதாகப் பயன்படுத்தும் முறையில் 9/11 நிகழ்வுகளை நாம் பகுத்துக் காணமுடியாது. எமது புரிந்து கொள்ளும் ஒழுங்கை அவை மறுக்கின்றன; எமது வழிவகைகள் வளைந்து கொடுத்து புரிய வைக்குமா என்றும் நாம் கூறமுடியாது."58

எதார்த்தத்தை எதிர்கொள்ளும்போது தத்துவார்த்த செயலிழந்தநிலை, புத்திஜீவித திவால்தன்மையின் ஒப்புதல் வாக்குமூலமாக இதைவிட ஆச்சரியம்மிக்க சுய அம்பலப்படுத்தலை நாம் கற்பனைகூட செய்யமுடியாது. கடத்தல்காரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்ட விமானங்கள் உலக வர்த்தக மையத்தை சிதைத்தன என்று மட்டுமில்லாமல் 2,500 ஆண்டுகளாக புலனுணர்வு சார்ந்த மற்றும் ஆய்வுரீதியான வளர்ச்சியுற்ற மெய்யியல் சிந்தனையையும் சிதறடித்துவிட்டது என நாம் நம்பவேண்டும் என்று பேராசிரியர் ரோக்மோர் எதிர்பார்க்கிறார்.

9/11 நிகழ்வுகளுக்கு தனித்தன்மையில் இப்படி புரிந்துகொள்ளா நிலையை எது கொடுத்தது என்பது பற்றி ரோக்மோர் கூறவில்லை. இரண்டு உலகப் போர்களின் கொடூரங்கள், யூதப் படுகொலை (Holocaust), ஸ்ராலினிசத்தின் களையெடுப்பு, இரண்டு அணுகுண்டுகள் போடப்பட்டமை, நூறாயிரக்கணக்கான மில்லியன் மக்களின் உயிர்களைக் குடித்த வகையில் மொத்தமாக நிலவியிருந்த கணக்கிலடங்கா காட்டுமிராண்டித்தன செயல்கள் ஆகியவை இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்றுள்ளன; செப்டம்பர் 11, 2001ல் நடந்த நிகழ்வு இத்தகைய முன்னோடி துன்பியல் நிகழ்வுகளில் இருந்து எப்படித் தனித்தன்மையுடையது? அந்நாளின் நிகழ்வுகளை விட என்ன புதிய, இதுகாறும் கற்பனை செய்திருக்க முடியாத நிகழ்வுகளை இக்கால நிகழ்வுகள் வெளிப்படுத்தின?

மார்க்சிசத்தின் மீதான ரோக்மோரின் தாக்குதல் அவரை இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் அரசியல் சவாலை சந்திக்க தயாரற்ற நிலையில் தள்ளிவிட்டுள்ளது என்பது வெளிப்படையாகும். "மார்க்சிசத்தின்" மரணத்தை பிரகடனம் செய்தபின்னர், ஹேகலிய கருத்துவாதத்தை மார்க்ஸ் மறுத்தது தத்துவார்த்த முறையில் நெறிபிறழ்ந்த மார்க்சிச மறுப்பு என்று பிரகடனம் செய்த பின்னர், ரோக்மோர் தற்கால எதார்த்தத்தை ஆராய்ந்து விளங்கிக்கொள்ளுவதற்கு தேவையான மாற்றீடான தத்துவார்த்த கட்டமைப்பை கண்டுபிடிப்பதில் தோல்வியுற்றுள்ளார் என்பது தெளிவு.

அடிக்குறிப்புக்கள்

1 Published 2 May 2006 on the World Socialist Web Site.

2 Tom Rockmore, Marx After Marxism: The Philosophy of Karl Marx (Oxford: Blackwell Publishers, 2002), p. xi.

3 Errol Harris, The Spirit of Hegel (New Jersey: Humanities Press, 1993), p. 11.

4 Ibid., p. 47.

5 Paul Franco, Hegel's Philosophy of Freedom (New Haven and London: Yale University Press, 1999), p. ix.

6 Ibid., p. 77.

7 David MacGregor, The Communist Ideal in Hegel and Marx (Toronto: University of Toronto Press, 1984), p. 3–4.

8 Ibid., p. 11.

9 David MacGregor, Hegel, Marx and the English State (Toronto, Buffalo and London: Westview Press, 1992), p. 7.

10 David MacGregor, Hegel and Marx After the Fall of Communism (Cardiff: University of Wales Press, 1998), p. 116–118.

11 Warren Breckman, Marx, the Young Hegelians, and the Origins of Radical Social Theory (Cambridge: Cambridge University Press, 1999), p. 2.

12 Ibid., p. 3.

13 Marx After Marxism, p. 1.

14 Ibid., p. 8.

15 Karl Marx and Frederick Engels, Collected Works Volume 29 (New York: International Publishers, 1987), p. 264.

16 Marx After Marxism, p. 9.

17 Ibid., p. 10.

18 Desmond M. Clarke, Descartes: A Biography, (Cambridge: Cambridge University Press, 2006), p. 37.

19 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 2, (New York: International Publishers, 1975), pp. 584–585.

20 Marx After Marxism, p. 162.

21 Ibid., p. 15.

22 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 25 (New York: International Publishers, 1987) p. 25.

23 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 26 (Moscow: Progress Publishers, 1990), p. 361–362.

24 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 25, p. 338.

25 Ibid., p. 490–491.

26 Marx After Marxism, p. 161.

27 Ibid., p. 162.

28 செயல்முறைவாதியும் ஹேகலின் கடுமையான எதிர்ப்பாளருமான பேராசிரியர் ஜேம்ஸ் பேர்ன்ஹாமின் (ஹேகலை இவர் "மனித சிந்தனையைப் பெரும் குழப்பத்திற்கு உட்படுத்திய மடிந்துவிட்ட தன்மையையுடையவர்" என்று கண்டித்திருந்தார்) தனது வாதரீதியாக பதிலிறுக்கையில், ட்ரொட்ஸ்கி மாபெரும் ஜேர்மனிய மெய்யியலாருக்கு புகழாரம் சூட்டினார்: "டார்வினுக்கும், மார்க்சுக்கும் முன்னால் ஹேகல் எழுதினார். பிரெஞ்சுப் புரட்சி, சிந்தனைக்கு கொடுத்திருந்த சக்தி வாய்ந்த ஊக்கத்தினால், ஹேகல் விஞ்ஞானத்தின் பொது இயக்கத்தை நன்கு எதிர்பார்த்திருந்தார். ஆனால் மேதையிடமிருந்து என்றாலும், அது ஒரு எதிர்பார்ப்புத்தான் என்றாலும், ஹேகலிடம் அதுவொரு கருத்துவாத தன்மையை பெற்றது. கருத்துவாத நிழல்களுடன், அவை இறுதி உண்மை என்பது போல் கருதி ஹேகல் செயல்பட்டார். இந்த கருத்துவாத நிழல்கள் சடத்துவ பொருட்களின் இயக்கங்களைத்தான் பிரதிபலிக்கின்றன என்று மார்க்ஸ் நிரூபணம் செய்தார்." (In Defense of Marxism [London: 1971], p. 66). ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் 1939—40ல் வெளிப்பட்ட உட்பிரிவுப் பூசலின் இறுதியில், பேர்ன்ஹாம் சோசலிச அரசியலை நிராகரித்து தன்னுடைய மிகத் தீவிர வலது அரசியல் வளர்ச்சியை தொடங்கினார்.

29 Karl Marx, Capital, Volume 1 (London: Lawrence & Wishart, 1974), p. 29.

30 Marx After Marxism, p. 6.

31 Ibid., p. 47.

32 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 3 (New York: International Publishers, 1976), p. 10.

33 Ibid.

34 Ibid., p. 10–11.

35 Ibid., p. 12.

36 Ibid., p. 14.

37 Ibid., pp. 17–18.

38 Marx After Marxism, p. 48.

39 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 3, p. 328.

40 Marx After Marxism, p. 75.

41 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 4, (New York: International Publishers, 1975), p. 37.

42 Marx After Marxism, p. 5.

43 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 4, p. 130.

44 Marx After Marxism, p. xvi.

45 Ibid., p. 70.

46 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 26 (Moscow: Progress Publishers, 1990), p. 373.

47 Marx After Marxism, p. 131.

48 தன்னுடைய ஹேகலின் தர்க்கவியல் விஞ்ஞானத்தின் மீதான சுருக்கமான மதிப்பீடு (Conspectus of Hegel's Science of Logic) இல் லெனின் எழுதியதாவது: "அறிகை (Cognition) பற்றிய விஞ்ஞானமே தர்க்கமாகும். அது அறிவை பற்றிய கோட்பாடு ஆகும். மனிதன் மூலமான இயற்கையின் பிரதிபலிப்பே அறிவு ஆகும். ஆனால் இது ஒன்றும் அத்தனை எளிதானதோ, உடனடியானதோ, முழுமையான பிரதிபலிப்போ அல்ல; தொடர்ச்சியான பிரித்தெடுத்தல் நிகழ்வுப்போக்கின் ஊடாக, கருத்துப்படிவங்கள், விதிகள் ஆகியவற்றின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றின் ஊடாக இத்தகைய கருத்துப்படிவங்கள், விதிகள் ஆகியவை (சிந்தனை, விஞ்ஞானம் = 'தர்க்கரீதியான கருத்து') விதிகளுக்கு உட்பட்டு, கிட்டத்தட்ட எப்பொழுதும் அசைந்துகொண்டிருக்கும், வளரும் இயற்கையின் எல்லாக்காலத்திற்கும் பொருந்தும் தன்மையை தழுவுகின்றன. உண்மையாக இங்கு புறநிலையாக மூன்று தொடர்புகள் உள்ளன: 1) இயற்கை; 2) மனிதனின் அறியும் தன்மை = மனித மூளை (அதே இயற்கையின் மிக உயர்ந்த விளைபொருள்), மற்றும் 3) மனித அறிவில் இயற்கையை பிரதிபலிக்கும் வடிவமைப்பு; இந்த வடிவமைப்பு துல்லியமான கருத்துப் படிவங்கள், சட்டங்கள், பிரிவுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மனிதன் புரிந்துகொள்ள = சிந்தித்துப் பார்க்க = இயற்கையை அதன் முழுத்தன்மையையும் பிரதிபலிக்க, அதன் 'உடனடி முழுமையை' பிரதிபலிக்க முடியாது; அவனால் அதற்கு அருகாமையில்தான் எப்பொழுதும் வந்து, பிரித்தெடுத்து, கருத்துப் படிவங்களை, சட்டங்களை, அறிவார்ந்த முறையில் உலகைப் பற்றிய ஒரு சித்திரத்தைத் தீட்டுவது போன்றவற்றைச் செய்ய முடியும். (Lenin, Collected Works, Vol. 38 [Moscow, 1972], p. 182, அழுத்தம் மூலத்தில் உள்ளது).

மற்றொரு உரைப்பகுதியில் லெனின் குறிப்பிடுகிறார்: "அறிகை என்பது நிலைபேறுடையது (சாசுவதமானது), புறநிலைக்கான எண்ணத்தின் முடிவிலா அனுமானம். மனிதனின் சிந்தனையில் இயற்கையின் பிரதிபலிப்பை "உயிரற்றதாகவோ", "அருவமானதாகவோ", இயக்கமற்றதாகவோ, முரண்பாடுகள் அற்றதாகவோ புரிந்து கொள்ள கூடாது, ஆனால் இயக்கத்தின் இடையறா நிகழ்ச்சிபோக்கில், முரண்பாடுகளின் மற்றும் அவற்றின் தீர்வுகளின் தோற்றுவாய்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்." (Ibid, p. 195, அழுத்தம் மூலத்தில் உள்ளது).

49 Karl Marx, Capital, Volume 1, p. 27.

50 Ibid., p. 29.

51 Marx After Marxism, p. 70.

52 Ibid., p. 179.

53 Karl Marx and Frederick Engels, Collected Works, Volume 42 (New York: International Publishers, 1987), p. 544.

54 Marx After Marxism, pp. 172–173.

55 Ibid., p. 173. (Original passage appears in Capital, Volume 3, p. 820).

56 Ibid.

57 Ibid.

58 Tom Rockmore, Joseph Margolis and Armen T. Marsoobian, ed., The Philosophical Challenge of September 11 (Malden MA, Oxford, Carlton Victoria: Blackwell Publishing, 2005), p. 3.