ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සයිටම් යෝජනා ආන්ඩුව අධ්‍යාපන පෞද්ගලිකරනය දිගටම ගෙනයන බව තහවුරු කිරීමක්

இலங்கை அரசாங்கம் கல்வி தனியார்மயமாக்கத்தை தொடர்வதையே சைட்டம் பிரேரணை உறுதிப்படுத்துகிறது

By Pradeep Ramanayake
8 September 2017

கொழும்பு புறநகர் பகுதியான மாலம்பேயில் அமைந்துள்ள சைட்டம் (South Asian Institute of Technology and Medicine -SAITM) தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் சம்பந்தமாக “ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதன்” பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டு யோசனைகள் உள்ளடங்கிய அறிவித்தல் ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விரிவாக்கப்பட்டு வரும் கல்வி தனியார்மயமாக்கல் வேலைத் திட்டம் கைவிடப்படமாட்டாது என்பதை ஜனாதிபதி சிறிசேன இந்த பிரேரணையின் மூலம் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளார்.

பல்வேறு அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் கொள்கையை நிறுத்த முடியும் எனக் கூறும் வேலைத் திட்டத்தின் முழு வங்குரோத்தையே சிறிசேனவின் இந்த “தீர்வு” எனப்படுவது அம்பலப்படுத்தியுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதை இயக்கும் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட சைட்டம்-எதிர்ப்பை ஏற்பாடு செய்வதன் பேரில் கூட்டுச் சேர்ந்துள்ள சந்தர்ப்பவாத குழுக்களாலேயே இந்த வேலைத் திட்டம் தூக்கிப் பிடிக்கப்படுகின்றது.

மேற்குறிப்பிட்ட அமைப்புகள், இப்போது சிறிசேனவின் பிரேரணையை “அனுகூலமானது” எனவும், இது தாம் பெற்ற “வெற்றியை” காட்டுகின்றது எனவும் கருத்து தெரிவித்து, மாணவர்களதும் வைத்தியர்களதும் போராட்டங்களுக்கு முடிவுகட்டுவதற்கு தயாராகின்றனர்.

சிறிசேனவின் முதலாவது யோசனை “சைட்டம் நிறுவனத்தில் இப்போதுள்ள பங்குதாரர்கள், கடன் கொடுக்கும் நிறுவனங்கள் மற்றும் இலாபம் எதிர்பார்க்காமல் சைட்டம் மருத்துவ பீடத்தின் சகல நிர்வாக நடவடிக்கைகளையும் முகாமைத்துவத்தையும் பொறுப்பேற்க விருப்பம் கொண்டுள்ள புதிய நிறுவனங்களும், சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில், சைட்டம் நிறுவனத்தின் தற்போதை உரிமையையும் முகாமைத்துவ முறையையும் இரத்துச் செய்வதாகும்.”

“இத்தரப்பினர் மத்தியில் ஏற்படுத்திக்கொள்ளப்படும் உடன்படிக்கைகள் மூலம், சைட்டம் நிறுவனத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள், நிர்வாக சபை மற்றும் மாணவர்களும், மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி சம்பந்தமான குறைந்தபட்ச தரத்திற்கு ஏற்ப ஸ்தாபிக்கப்படும், மருத்துவ பட்டங்களை வழங்கும் ஒரு உத்தேச புதிய அரச சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்,” என்பது இரண்டாவது பிரேரணையாகும்.

புதிய நிறுவனத்தை உயர் கல்வி அமைச்சினதும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினதும் மேற்பார்வையின் கீழ் ஸ்தாபித்தல், அதில் இப்போது கல்வி கற்கும் மாணவர்களை புதிய நிறுவனத்தில் இணைத்தல், எதிர்காலத்தில் சட்டப்பூர்வமாக்கப்படும் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சி சம்பந்தமான குறைந்தபட்ச தரத்திற்கு ஏற்ப புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளல், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கட்டணத் தொகையை செலுத்திக்கொள்வதற்கு கடன் கொடுத்தல் போன்றவை அரசாங்கத்தின் ஏனைய பிரேரணைகளாகும்.

“வைத்தியர் நெவில் பெர்னான்டோ மற்றும் அவரது குடும்பத்தினரதும் உரிமையின் கீழ் நிர்வகிக்கப்படும், இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம் இரத்துச் செய்யப்படும் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்படுகின்றது. கலந்துரையாடலுக்காகவே தீர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை டிசம்பர் 31ம் திகதிக்கு முதல் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

“புதிய அரச சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற இந்த நிறுவனம்” மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதன் மூலமே இயக்கப்படும் என பிரேரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. அவ்வாறெனில், அது வேறு வடிவத்திலும் வேறு பெயரிலும் ஆரம்பிக்கப்படும் தனியார் நிறுவனமே ஆகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்தி, அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகள், தொழிலாளர்களதும் வறியவர்களதும் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலைமைகளின் கீழ் சிறிசேனவின் பிரேரணைகளின் குறிக்கோள், மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் நீண்டு செல்லும் எதிர்ப்பை தணிப்பதற்காக, சைட்டம்-எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ள அமைப்புகளை அணிதிரட்டிக்கொள்வதே ஆகும். “சைட்டத்தை இரத்துச் செய்” என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட நிலைமைகளின் கீழ், “சைட்டம் இரத்துச் செய்யப்பட்டதாக” அரசாங்கம் செய்துள்ள கண்கட்டி வித்தையைச் சூழ, ஏதாவதொரு வழியில் அணிதிரள்வதற்கான தயார் நிலையை இந்த எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்த அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த மூன்று ஆண்டு காலமாக, “சைட்டத்தை இரத்துச் செய்வதற்காக” அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தல் எனும் பெயரில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA), போலி இடது முன்னிலை சோசலிசக் கட்சி, ஜே.வி.பி., பல தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர்களதும் பெற்றோர்களதும் அமைப்புகளும் பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களை ஏற்படு செய்தன. அவர்கள் ஒன்று சேர்ந்து, “சைட்டம்-விரோத மக்கள் தடுப்புச் சுவர்” என்ற பெயரில் ஒரு இயக்கத்தையும் அமைத்துக்கொண்டனர்.

மாணவர்-பெற்றோர்களது சாகும்வரையான உண்ணாவிரதம் ஒன்றை முன்னெடுப்பதாக அறிவித்துக்கொண்டு, சிறிசேனவின் பிரேரணை முன்வைக்கப்பட்ட அன்றே, “சைட்டம்-விரோத மக்கள் தடுப்புச் சுவர்” நுகேகொடையில் கூட்டம் ஒன்றை நடத்தியது. அங்கு உரையாற்றிய ஜே.வி.பி. முன்னணி தலைவரான கே.டி. லால்காந்த, “இதில் ஒன்றும் கிடையாது” என கூறிக்கொண்டு பிரேரணைகள் அடங்கிய பத்திரத்தை கிழித்தெறிந்துவிட்டு, போலி போராளிக்குணத்தை வெளிப்படுத்தினார். எனினும் அவர், எட்டு மருத்துவ பீடங்களதும் பீடாதிபதிகள் முன்வைத்துள்ள தீர்வை ஏற்றுக்கொள்ளுமாறு, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

திங்களன்று ஜே.வி.பி. அரசியல் குழு வெளியிட்ட அறிக்கையிலும், இந்த கோரிக்கையை முன்வைத்து, சைட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் முதலில் ஏற்றுக்கொண்டிருப்பதனால், இது, அதற்காக போராட்டம் நடத்திய அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகும் என ஆரவாரம் செய்துள்ளது. ஜே.வி.பி. குறிப்பிடும் பீடாதிபதிகளின் பிரேரணை, சைட்டத்துக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டதாகும். கல்வி தனியார்மய கொள்கையை நிறுத்துவதை, எந்த விதத்திலும் அவர்கள் பிரேரிக்கவில்லை.

ஜே.வி.பி. இந்த பிரச்சாரத்தின் தலையில் அமர்ந்துகொண்டிருப்பது, இலவசக் கல்வி உரிமை சம்பந்தமான கவலையினால் அல்ல. ஜே.வி.பி. சைட்டம் எதிர்ப்பு போலவே, தொழிற்சங்கத்தையும் கூட தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ச்சியடையும் போது, அவற்றை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்துக்குள் சிறைவைப்பதற்காகவே பயன்டுத்திக்கொள்கின்றது.

நுகேகொட கூட்டத்தில் உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே, அரசாங்கத்தின் பிரேரணையை “வெற்றி” என அறிவித்தார். லால் காந்த பிரேரணையை கிழித்தெறிந்த தை கண்டனம் செய்வதாக சமிக்ஞை செய்யும் வகையில், பின்னர் நடத்திய நிருபர்கள் மாநாடொன்றில் அலுத்கே பின்வருமாறு கூறினார்: “அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற வகையில், தீர்வுகளை கிழித்துப் போட்டு தீர்வுகளை நாசமாக்கி அதில் தரித்திரம் பிடித்த திருப்தியைப் பெற வேண்டிய அவசியம் இல்லை”. இந்த தீர்வில் மிகவும் “அனுகூலமான விடயங்கள் ஒரு தொகை உள்ளடங்கியிருக்கின்றன” எனக் கூறிய அவர், ஜனாதிபதி சைட்டத்தை இரத்துச் செய்வதற்கு “தைரியமான” முடிவென்றை எடுத்துள்ளார் எனப் பாராட்டி, பிரேரணைகளில் “பிழைகளை திருத்திக்கொள்வதற்கு” அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அறிவித்தார்.

வைத்திய அதிகாரிகளின் சங்கம் தனது கிளை அமைப்புகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, புதிய நிலைமைகளை கலந்துரையாடுமாறு ஆலோசனை கூறியுள்ளது. அதன் தலைமைத்துவம், வெறும் எதிர்ப்பு வலைக்குள் தம்மை சிறைவைப்பதற்கு எதிராக உறுப்பினர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் அதிருப்தியை தணிப்பதற்காக, சங்கம் “வெற்றி” பெற்றுள்ளதாக மிகைப்படுத்துவதற்கே முயற்சிக்கின்றது. சைட்டம் உரிமையாளர் நெவில் பெர்னான்டோ, அரச வைத்திய அதிகாரிகளின் நிலைப்பாட்டை பற்றி மகிழ்ச்சி தெரிவித்து, அடுத்த நடவடிக்கையாக வைத்திய மாணவர்களின் பிரச்சாரங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மாணவர்கள் ஒன்பது மாதங்களுக்கும் அதிகமாக வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்வி மற்றும் சுகாதார சேவை உட்பட தனியார்மயப்படுத்தலுக்காக முதலாளித்துவ அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டத்தை எதிர்க்காத அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மாணவர்கள் மற்றும் வைத்தியர் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பை தடம்புரளச் செய்து கரைத்து விடுவதற்கே, சைட்டத்தை இரத்துச் செய்யும் ஒரு தனியான பிரச்சினையைச் சூழ்ந்த ஒரு பிரச்சாரத்துக்காக, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் முன்னிலை சோசலிச கட்சி உடனும் கூட்டுச் சேர்ந்தது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தற்காலிக அழைப்பாளர் மங்கள மத்துமகே ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: “எமது கோரிக்கை சைட்டத்தை இரத்துச் செய்வதே, இலவசக் கல்வியை தனியார்மயமாக்குவதை நிறுத்த வேண்டும், அரசாங்கம் சைட்டத்தை இரத்துச் செய்வதாக அறிவித்திருந்தாலும், பிரேரணைகளில் அதன் முகாமைத்துவத்தை மாற்றுவதாகமட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது”. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது அரசாங்கத்தின் முடிவின் பின்னால் கூட்டுச் சேர்வதற்கு நிலைமைகளை தேடித்திரிவது மத்துமகேயின் கருத்தில் வெளிப்படுகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரான புபுது ஜாகொட, திங்களன்று நடத்திய நிருபர்கள் மாநாட்டில் பேசுகையில், சட்டத்துக்கு எதிராகச் சென்று சைட்டம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, அந்த நிறுவனத்திற்கு எந்த தரமும் கிடையாது, மற்றும் “குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநியாயம் செய்யப்பட்டுள்ளது” என்பதை, சிறிசேனவின் பிரேரணையின் மூலம் அரசாங்கம் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது, எனத் தெரிவித்தார். மேலும் மேலும் அழுத்தம் கொடுத்தால் சைட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்பது வரை அதை தள்ளிச் செல்ல முடியும் என்பதை புரிய வைப்பதற்கே ஜாகொட முண்டியடிக்கின்றார்.

சைட்டத்தை “மக்கள்மயப்படுத்துவதன் மூலம்” பிரச்சினையை தீர்க்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கே, முன்னிலை சோசலிச கட்சி மற்றும் அனைத்துப் பல்கலைக்கழ மாணவர்கள் ஒன்றியம் மாணவர்களை பயன்படுத்தி வந்தது. 1980ல் வட கொழும்பு தனியார் மருத்துவக் கல்லூரியை, வெறுமனே மாணவர்களின் பிரச்சாரத்தின் காரணமாகவே அரசாங்கம் அதைப் பொறுப்பேற்க நிர்ப்பந்திக்கப்பட்டது என அவர்கள் உதாரணம் காட்டினர். அதாவது, அரசாங்கத்தின் தனியார்மயப்படுத்தலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு எதிராக முன்வைக்கப்படும் ஒரு வெற்றுத் தர்க்கமே இதுவாகும்.

வட-கொழும்பு மருத்துவக் கல்லூரியை, மாணவர்களதும் தொழிலாளர்களதும் பரந்த மக்கள் பகுதியினரதும் பிரச்சாரத்தின் மத்தியிலேயே அரசாங்கம் பொறுப்பேற்றது என்பது உண்மையே. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அப்போது அதை இயக்கி வந்த ஜே.வி.பி.க்கு எலும்புத் துண்டைக் கொடுத்து அமைதிப்படுத்துவதற்கே அரசாங்கம் அவ்வாறு செய்தது. எனினும், கல்வி உட்பட தனியார்மயமாக்கலை அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மேலும் மேலும் துரிதப்படுத்தின. தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் காளான் முளைப்பது போல் பரவியுள்ளன. கல்விக்கான அரசாங்கத்தின் செலவு, குறைந்தபட்சத்துக்கு கீழிறக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கல்வி வெட்டு வேலைத் திட்டம், சமூக உரிமைகளை அபகரித்துக்கொள்வதற்காக உலகம் பூராவும் போலவே இலங்கையிலும் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களின் பாகமாகும். உலக முதலாளித்துவ நெருக்கடியானால் ஆழமடைந்துள்ள இலங்கையின் பொருளாதார பிரச்சினைகளின் மத்தியில், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை வெட்டிக் குறைப்பதும் தனியார்மயப்படுத்தலும் அதன் அங்கங்களாகும். பெரும் வர்த்தகர்களுக்கும் விசேடமாக சர்வதேச மூலதனத்துக்கும் நல்ல நிலைமைகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் இந்த வேலைத்திட்டம் பிணைந்துள்ளது. கல்வி தனியார்மயமாக்கலை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக சுட்டிக் காட்டி, கடந்த வெள்ளிக் கிழமை, உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லஷ்மன் கிரியல்ல, கடந்த வருடத்தில் இன்னும் இரண்டு மருத்துவ பீடங்களை ஆரம்பித்ததாகக் கூறினார்.

அரசாங்கத்தின் கொள்கைகளை கொடூரமாக அமுல்படுத்துவதன் பேரில், மாணவர்களதும் தொழிலாளர்களதும் போராட்டங்களை நசுக்குவதற்காக, இராணுவ-பொலிஸ் அரச ஒடுக்குமுறைக்கு மேலும் மேலும் அழைப்பு விடுக்கப்படுகின்றது.

கல்வி தனியார்மயமாக்கல்களுக்கு எதிரான போராட்டமானது அரசாங்கத்தினதும் முதலாளித்துவ வர்க்கத்தினதும் கொள்கைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒரு அரசியல் போராட்டமாக ஆகியுள்ளது. அதைச் சுட்டிக் காட்டி, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், அந்தப் போராட்டத்துக்காக வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்து தலையீடு செய்தது. தொழிலாள வர்க்கமானது ஏழைகளதும் இளைஞர்களதும் தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டு, முதலாளித்துவ வர்க்கத்தின் சகல கன்னைகளிலும் இருந்து சுயாதீனமாக, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கான தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக போராட வேண்டும் என நாம் பிரேரிக்கின்றோம்.

இந்த வேலைத்திட்டத்தை, சைட்டம் எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்த அமைப்புகளான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முன்னிலை சோசலிசக் கட்சி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஜே.வி.பி. மற்றும் ஏனைய குழுக்களும் கடுமையாக எதிர்த்து வந்தன. முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் எப்படியாவது சீர்திருத்தத்தை வென்றெடுக்கும் வேலைத் திட்டத்தினுள் தொழிலாளர்களையும் மாணவர்களையும் கட்டிவைப்பதற்கு இந்த அமைப்புகள் செயற்படுகின்றன. இப்போது, இவை சிறிசேனவின் பிரேரணையின் பின்னால் கூட்டுச் சேர்வது பற்றி கலந்துரையாடிக்கொண்டு அரசாங்கத்தின் தாக்குதலின் எதிரில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை அரசியல் ரீதியில் நிராயுதபாணிகளாக்குகின்றனர்.

நாம், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. முன்வைத்துள்ள வேலைத் திட்டத்திற்காகப் போராட ஒன்றிணையுமாறு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.