ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සයිටම් පාවාදීම ජයග‍්‍රහනයක් ලෙස ඔජවැඩූ වේදිකාවක්

சைட்டம் காட்டிக் கொடுப்பை வெற்றியாக தம்பட்டம் அடித்த மேடை

By Kapila Fernando
17 November 2017

நவம்பர் 9, மருத்துவ மாணவர் நடவடிக்கை குழுவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் (அ.ப.மா.ஒ.), கொழும்பில் கூட்டம் ஒன்றை நடத்தின. சைட்டம் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அறிவித்த இந்தக் கூட்டம், கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, மாணவர்கள் மற்றும் பெற்றோர் முன்னெடுத்த உறுதிப்பாடான போராட்டத்தை, அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க முடிவுக்கு கொண்டுவந்து காட்டிக் கொடுத்ததை மூடி மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அவநம்பிக்கையான முயற்சியாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த “சைட்டம் பிரச்சினையை தீர்க்கும்” குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சைட்டம் “இரத்துச்” செய்யப்படுவதாக கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே எதிர்ப்பைக் கைவிடுவதற்காக முடிவெடுக்கப்பட்டது என மாணவர் ஒன்றிய தலைவர்கள் இங்கு குறிப்பிட்டனர்.

ஆயினும், மறுநாள் தனது முகநூலில் குறிப்பு ஒன்றை எழுதிய ஹர்ஷ டி சில்வா, இந்த கலந்துரையாடலில், சைட்டம் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி சிறிசேன அக்டோபர் 29 முன்வைத்த வேலைத் திட்டம் சம்பந்தமான தெளிவுபடுத்தலை மட்டுமே நான் செய்தேன் என அறிவித்துள்ளார்.

எனினும், சிறிசேனவின் மேற் குறிப்பிட்ட வேலைத் திட்டம் முன்வைக்கபட்ட நாளில் இருந்தே, தாம் அந்த பிரேரணையை ஏற்றுக்கொள்வில்லை என்றும், எதிர்ப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக மாணவர் ஒன்றியம் கூறி வந்தது.

கடும் அரசியல் நெருக்கடியில் மூழ்கியுள்ள சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கம், மாணவர்களின் போராட்டத்துடன் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களில் குதித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய வறியவர்களதும் போராட்டங்களும் ஐக்கியப்படும் என கடும் பீதியில் இருந்தார். இதனாலேயே மாணவர் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவருமாறு அரசாங்கம் இடைவிடாமல் கோரி வந்தது. முடிவில் கடந்த நவம்பர் 9, ஹர்ஷ டி சில்வா, அரசியலமைப்பு பிரேரணை பற்றிய விவாதத்தின் மத்தியில், சபாநாயகரிடம் விசேட அனுமதியை பெற்று, பாராளுமன்றத்தில் செய்த அறிவித்தலில், அரசாங்கத்தின் இந்த அழைப்பு வெளிப்பட்டது.

எதிர்ப்புகளில் முன்னணியில் இருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) சிறிசேன முன்வைத்த உத்தேச வேலைத் திட்டத்தை “சாதகமானது” எனக் கூறி, முதலில் வேலை நிறுத்த செயற்பாடுகளில் இருந்து விலகியது.

முடிவில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மட்டுமன்றி, மாணவர் ஒன்றியம் மற்றும் அதற்கு தலைமைத்துவம் கொடுக்கும் போலி-இடது முன்னிலை சோசலிச கட்சியும், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அடிபணிந்து அரசாங்கத்துக்கு பிராணவாயு கொடுக்கும் வேலையையே செய்துள்ளன. அதன் மூலம் எதிர்கால தாக்குதல்களுக்காக, அரசாங்கத்துக்கு அவசியமான பலம் மற்றும் கால அவகாசத்தை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அமைப்புகள் அனைத்தும் தோள் கொடுத்துள்ளன.

இந்த விடயத்தை மூடி மறைப்தற்காக, மாணவர்கள் போராட்டத்தை மிகைப்படுத்தி உரை ஒன்றை ஆற்றிய அ.ப.மா.ஒ. அழைப்பாளர் லஹிறு வீர சேகர, “வரலாறு பூராவும் ஆட்சியாளர்களின் குப்பத்துக்குள் நுழையாத ஒரு இயக்கம் இருக்குமெனில், அது இலங்கை மாணவர் இயக்கமே ஆகும்,” என வாய்ச்சவடால் விடுத்து, சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிடுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதற்கு முதல் நாள் இரவு அத்தகை குப்பத்துக்குள் நுழைந்து, அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொண்ட அந்த “இலங்கை மாணவர் இயக்கத்தின்” தலைவரே இவ்வாறு பேசுகின்றார். உண்மையிலேயே, அப்போது மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி.) தலைமை கொடுக்கப்பட்ட மற்றும் இப்போது முன்னிலை சோசலிசக் கட்சி தலைமைத்துவம் கொடுக்கும் இந்த “இலங்கை மாணவர் இயக்கத்தின்” வரலாறு, வீரசேகர சொல்லும் விடயத்துக்கு முற்றிலும் எதிர்மாறாக, அவர் செய்யும் நடவடிக்கைகளிலேயே நிரூபிக்கப்படும் சமரசவாத வரலாறே ஆகும்.

இந்த தலைவர்கள், “வெற்றி” என மீண்டும் மீண்டும் மிகைப்படுத்துவது, ஹர்ஷ டி சில்வாவின் “வாக்குறுதியையே” ஆகும். இந்த “வாக்குறுதியின்” அர்த்தத்தை மேலும் தெளிவுபடுத்தி, சில்வா தனது முகநூல் குறிப்பில், மருத்துவ கல்லூரி சம்பந்தமாக குறைந்தபட்ச தரங்களை வர்த்தமானிப்படுத்தி, இந்த மாத கடைசியில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதாகவும், மற்றும் இந்த ஆண்டு முடிவதற்குள் அந்த தரங்களுக்கு ஏற்ப அரச-சார்பற்ற (அதாவது தனியார்) இலாபம் பெறாத நிறுவனத்துக்குள் சைட்டம் மாணவர்களை இணைப்பதாகவும், குறிப்பிடுகின்றார்.

பங்கு உரிமையாளர்கள், அதன் ஊழியர்கள் மற்றும் அதற்கு கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் உட்பட, சைட்டத்துக்கு சம்பந்தமான அனைத்து தரப்பினர் மற்றும் புதிய நிறுவனத்திற்கும் இடையிலான உடன்பாட்டில், சைட்டத்தின் அனைத்து சொத்துக்கள் மற்றும் மாணவர்களும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக, சில்வா தெரிவிக்கின்றார்.

இதன்படி, “சைட்டம் இரத்துச் செய்வது” என்பது வெறுமனே அதன் பெயரில் உள்ள தனியார் மருத்துவ பீடத்தை தூக்கியெறிந்து, வேறு பெயரில் நடத்துவது மட்டுமே ஆகும். கல்வியைத் தனியார் மயாமாக்குவது என்பது, “இலாபம் பெறாத மற்றும் அரச சார்பற்ற” போன்ற பல்வேறு சாக்குப் போக்கின் கீழ் முன்னெடுக்கப்படும். இதன்படி, மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் கொண்டாடுவதற்கு எந்தவொரு வெற்றியும் இங்கு கிடையாது. உண்மையிலேயே இது இழிவான காட்டிக்கொடுப்பாகும்.

பல ஆண்டுகளாக எதிர்ப்புகளில் ஈடுபட்ட மற்றும் மாதக் கணக்காக வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட மாணவர்களின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த தன் பின்னர், அதை மேலும் மேலும் திசை திருப்பி விடுவதற்காக, போலி-இடது கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி, பக்ஸிஸ் குழுமம் மற்றும் ஜே.வி.பி. போன்று, இலங்கை ஆசிரியர் சங்கம், தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் போன்ற, ஒரு தொகை சந்தர்ப்பவாத தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கூட்டத்தின் மேடையில் குவிந்திருந்தனர்.

சிறிசேன-விக்கிரமசிங்க உட்பட முதலாளித்துவ அரசாங்கங்களை ஆட்சிக்கு கொண்டுவருதவற்காக ஒத்துழைத்த மற்றும் அந்தந்த துறைகளில் தொழிலாளர் போராட்டங்களைக் காட்டிக்கொடுத்த இந்த துரோகிகள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அதற்கு தலைமை கொடுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியினால் வீரம்மிக்க தலைவர்களாக புகழப்பட்டனர். இந்தத் தட்டினரை சேர்த்துக்கொண்டு, கல்வி தனியார்மயமாக்கத்துக்கு எதிரான போராட்டத்தை சைட்டம் எதிர்ப்புக்குள் மட்டுப்படுத்தி, அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தை தடுப்பதற்கே, அ.ப.மா.ஒ. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியினால் “சைட்டம் எதிர்ப்பு மாணவர்-மக்கள் அணிதிரள்வு” என்ற பெயரில் வலதுசாரி கூட்டணி அமைக்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின், பாடசாலைகளின் அரசாங்கம் தனியார்மயமாக்க வேலைத் திட்டத்து முன்னெடுத்து வருவதாக தெரிவித்து, “இன்னமும் மருத்துவ கல்வியை விற்கும் திட்டம் இருட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் கொடுத்துள்ள இந்த தீர்வை யதார்த்தமாக்கிக்கொள்வதற்கு முன்வர வேண்டும். இவர்கள் மத்தியில் ஆசிரியர்களும் அதிபர்களும் கூட உள்ளனர்,” என அறிவித்தார்.

ஸ்டாலின் உட்பட ஏனைய ஆசிரியர் சங்கத் தலைவர்கள், பாடசாலை முறையில் இடம்பெறும் கடுமையான வெட்டுக்கள் மற்றும் தனியார்மயமாக்கத்துக்கு எதிராக ஆசிரியர்கள் மத்தியில் எந்தவொரு போராட்டத்தையும் ஏற்பாடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். ஏனெனில் அத்தகைய போராட்டம், அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் அவசியத்தை நிச்சயமாக முன்கொண்டுவருவதனாலேயே ஆகும்.

ஜே.வி.பி. தலைமைத்துவத்தில் உருவாக்கப்பட்ட இன்னொரு முதலாளித்துவ கூட்டணியான “சைட்டம் எதிர்ப்பு மாணவர்-மக்கள் தடுப்புச் சுவர்” என்ற அமைப்பால் கடந்த மாதம் கூட்டப்பட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, ஆசிரியர்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவே இருந்தது, ஆசிரியர்கள் தனியார்மயமாக்கத்தை ஏற்றுக்கொள்வதால் அல்ல. மாறாக போராட்டங்களைக் காட்டிக்கொடுத்ததன் மூலம் இந்த சங்கங்கள் சம்பந்தமாக ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனம் மற்றும் எதிர்ப்பின் காரணமாகவே ஆகும்.

ஐக்கிய சோசலிசக் கட்சியின் சார்பில் தம்மிக்க டி சில்வா உரையாற்றினார். அவர், அ.ப.மா.ஒன்றியத்தைச் சூழ தொழிற்சங்கங்களை அணிதிரட்டிக்கொண்டு வெற்றியைப் பெறக்கூடியதாக இருந்தது என்றும், “சைட்டம் இரத்துச் செய்யப்பட்டமை தற்காலிக வெற்றி மட்டுமே. வீதியில் இறங்கித்தான் எமது வெற்றிகளைப் பெற முடியும்” எனக் கூறி, அ.ப.மா.ஒன்றியத்தின் எதிர்ப்பு அரசியலுக்கு புகழ் பாடினார்.

1988-89 கால கட்டத்தில் ஜே.வி.பி.யினால் முன்னெடுக்கப்பட்ட, தேசப் பற்று பிரச்சாரம் என அழைக்கப்பட்டதன் மாணவ செயற்பாட்டாளராக இருந்த மற்றும் அரசாங்கத்தால் இளைஞர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரத்தில் படுகொலை செய்யப்பட்ட, திரிமாவிதான போன்றவர்களின் தொழிலாளர்-விரோத அரசியலை தூக்கிப் பிடித்த ஜே.வி.பி.யின் வசந்த சமரசிங்க பின்வருமாறு கூறினார்: “புத்தகங்களில் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக, திரிமானவிதாரனவின் பரம்பரையின் தற்கால தலைமுறையின் வெற்றி, போராட்டத்தில் மட்டுமே உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.”

சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள, தொழிலாள வர்க்க அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு முன்னெடுக்கும் அரசியல் மற்றும் தத்துவராத்த போராட்டத்தையே, புத்தகப் போராட்டம் என வசந்த சமரசிங்க கிண்டல் செய்கின்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் ஜே.வி.பி. சார்ந்த தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் போன்ற இந்த அமைப்புகள், சைட்டத்தை இரத்துச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்குள் கூட, தமது அமைப்புகளின் தொழிலாளர்களை ஒழுங்கமைப்பதில் இருந்து விலகி நின்றன.

இது மட்டுமன்றி, இந்த காலகட்டத்தில் வெடித்த துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சாரத்துறை தொழிலாளர்களின் போராட்டங்ளை தனிமைப்ப்படுத்தி காட்டிக்கொடுத்து, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தவை இந்த அமைப்புகளே ஆகும்.

பக்ஸிஸ் குழுவின் விதர்ஷன கன்னங்கரவும், “எதிர்காலப் போராட்டங்களின் சக்தி மாணவர்களின் கையிலேயே உள்ளது” என மாணவர் போராட்டத்தை பாராட்டினார். கன்னங்கர உட்பட கும்பல் அடிப்படையாகக் கொண்டிருக்கும் பின்நவீனத்துவ மற்றும் மார்க்சிச-விரோத தத்துவங்களில் இருந்தே, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயலுமையை நிராகரித்து மாணவர் போராட்டங்களை தூக்கிப் பிடிக்கும் கருத்துக்கள் வெளிவருகின்றன.

முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, மாணவர்-மக்கள் அணிதிரள்வின் முதலாளித்துவ-சார்பு சந்தர்ப்பவாதப் பண்பை மூடி மறைப்பதற்கு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை குட்டி முதலாளித்துவ கந்தல் என கூறினார். “இந்த குட்டி முதலாளித்துவ கந்தல்களுடன் புதிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியாது. இந்த போராட்டத்திற்குள் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், மாணவர்கள் மார்க்சியத்தை கொஞ்சமாவது கற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.

இந்த முன்னிலை சோசலிசக் கட்சி, “குட்டி முதலாளித்துவ கந்தல்” உடன் மட்டுமன்றி, கல்வி உட்பட சமூக உரிமைகள் போலவே ஜனநாயக உரிமைகள் மீதும் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்த மஹிந்த இராஜபக்ஷவின் முதலாளித்துவ “கூட்டு எதிர்க் கட்சி” பிரதிநிதிகளுடன் கூட்டாக முன்னணி ஒன்றை அமைத்தது. தனியார்மயத்துக்கு தலைமுதல் கால்வரை உடன்பாடுகொண்டுள்ள இந்த கூட்டத்துடன், தனியார்மயத்துக்கு எதிராகப் போராட முடியாது என, மார்க்சிசத்தை பற்றி எதுவுமே தெரியாதவர்களால் கூட புரிந்துகொள்ளக்கூடிய உண்மையாகும்.

முன்னிலை சோசலிசக் கட்சி, இந்த விளைவுகளைப் பற்றி தெரியாமல் மேற் கூறப்பட்ட கூட்டணிகளை அமைக்கவில்லை. இந்த முதலாளித்துவ கூட்டணிகளுக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சிக்கவைத்து, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தை தடுத்து, முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பது, இந்த போலி இடதுகள் சர்வதேச ரீதியில் பொறுப்பெடுத்துள்ள ஒப்பந்தமாகும்.