ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

පෙසප නායකයා සයිටම් පාවාදීම ආරක්ෂා කිරීමට ප‍්‍රතිගාමී න්‍යාය ගොතයි

இலங்கை: முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் சைட்டம் காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்துவதற்கு பிற்போக்கு தத்துவத்தை பின்னுகின்றார்

By Pradeep Ramanayake 
25 November 2017

அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு அடிபணிந்து, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (அ.ப.மா.ஒ.) மற்றும் மருத்துவ பீட மாணவர் நடவடிக்கை குழுவினதும் தலைமையிலான மாணவர் சங்கத்தினால் “சைட்டம் இரத்துச் செய்யப்பட” வேண்டும் என கோரி முன்னெடுத்த சகல எதிர்ப்பு போராட்டங்களையும் நவம்பர் 8 அன்று கைவிட்டன.

இந்த மாணவர் ஒன்றியங்களை இயக்கும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) முன்னணி கொள்கை வகுப்பாளர் புபுது ஜயகொட, மறுநாள் முகநூல் குறிப்பொன்றை வெளியிட்டு, “சைட்டம் எதிர்ப்பு போரட்டம் வெல்லப்பட்டதாக” பெரும் பெருமையுடன் கூறிக்கொண்டார்.

ஜயகொடவுக்கு வெற்றியாக இருந்தாலும் மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் சம்பந்தமாக எடுத்துக்கொண்டால், அது கொடூரமான காட்டிக்கொடுப்பாகும். ஆழமாக்கப்பட்டிருக்கும் கல்வி வெட்டுக்கும் தனியார்மயமாக்கத்துக்கும் எதிராக போராடும் நேர்மையான அபிலாஷையுடன், அரசாங்கம் முன்னெடுத்துள்ள கடுமையான பொலிஸ் ஒடுக்குமுறையை அலட்சியம் செய்து நீண்ட காலமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் சைட்டம் எதிர்ப்பைச் சூழ அணிதிரண்டனர்.

எனினும், ஜனாதிபதி சிறிசேன அக்டோபர் 29 அன்று “சைட்டம் நெருக்கடியை தீர்க்கும்” பெயரில் வெளியிட்ட அறிக்கையின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டே மாணவர்களின் இந்த எதிர்ப்புகள் நிறுத்தப்பட்டது. அந்த அறிவுரைகளை எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு இரண்டு வார காலம் அரசியல் பாசாங்கு செய்த இந்த மாணவர் சங்கங்கள் கடைசியில் அதற்கு உடன்பட்டன. சைட்டம் என்று அழைக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை அகற்றி, வேறு பெயரில் அதை பராமரித்துச் செல்வதே அரசாங்கத்தின் இலக்கு என்பது அந்த அறிவுறுத்தல்கள் ஊடாக நன்கு தெளிவாகியுள்ளது.

தமது போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குறுகிய காலத்திலேயே புரிந்துகொள்வர் என்பதை நன்கு அறிந்த ஜயகொட, மாணவர்களின் கண்களில் மண் தூவுவதற்காக ஒரு தொகை பிற்போக்கு தத்துவங்களை பின்னியுள்ளார்.

சைட்டம் என்ற பெயரை அகற்றுவதற்கு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை சைட்டம் இரத்துச் செய்யப்படுவதாக அர்த்தப்படுத்தும் ஜயகொட, அது “தற்காலிக மற்றும் மேற்பரப்பில்” தெரியும் வெற்றியாக கூறுகின்றார்.

சோசலிச உற்பத்தி பொருளாதார முறைக்காக போராடாமல், பொறிவில் மூழ்கியிருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் ஜயகொட கூறும் விதத்திலான “தற்காலிக மற்றும் மேற்பரப்பில் தெரியும் வெற்றியையோ” பெற முடியாது என்பதே சைட்டம் போராட்டத்தின் படிப்பினை ஆகும்.

ஜயகொட பின்வறுமாறு கூறுக்கின்றார்: “அரசாங்கம் இந்த உட்பாட்டை மீறக் கூடும், இல்லையென்றால் அரசாங்கம் வேறு பட்டப்படிப்பு கடைகளை திறக்கக் கூடும். இந்த வரையறைகளுக்கு வெளியிலேயே இந்தப் போராட்டத்தின் உண்மையான போராட்டம் உள்ளது.” (வலியுறுத்தல் எம்முடையது)

கல்வி தனியார்மயமாக்கம் அரசாங்கத்தின் கொள்கை என்றும், நெருக்கடியில் மூழ்கியுள்ள முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் அதை இடைவிடாமல் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் புறநிலையில் நெருக்கப்பட்டுள்ளது என்றும், ஜயகொட நன்கு அறிவார். நிச்சயமாக இடம்பெற்றுவரும் இந்த நிகழ்முறைக்கு, அத்தகைய ஒன்று இடம்பெற “வாய்ப்புள்ளது” என்று கூறுவதன் மூலம், ஜயகொட அதற்கு நிச்சயமின்மை பண்பைக் கொடுக்கின்றார்.

போலி-இடதுகளின் கபடத்தனங்களுக்கு பொருத்தமானவாறு, அவர் கூறும் “உண்மையான வெற்றி” எந்த எல்லைவரை கிடைக்கும் என்பதைப் பற்றி ஜயகொட கூறவில்லை. எவ்வாறெனினும், அந்த “எல்லை” முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் “எல்லைக்கு” உள்ளேய இருக்கும், அந்த எல்லையை கடக்கப் போவதில்லை என்பது தெளிவாகும்.

சைட்டம் போரட்டத்தில் பெற்ற “வெற்றி” பட்டியலை முன்வைத்த ஜயகொட கூறியதாவது: “கடைசியில் அரசாங்கம் கூட கல்வியை இலாப நோக்கு அமைப்பு முறைக்கு இரையாக்கக்கூடாது என்று ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளது. இது பெரும் வெற்றியாகும். அது ஆட்சியாளர்களால் மீண்டும் அபகரிக்க முடியாத வெற்றியாகும்.”

இது பிரமாண்டமான பொய்யாகும். கல்வியை இலாப குறிக்கோள்களுக்கு இரையாக்க  கூடாது என அரசாங்கம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, இலாப உற்பத்தி செய்யும் தனியார் துறையாக இன்னும் இன்னும் கல்வி நிறுவனங்களை உருவாக்க முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துகிறது என்பதை அரசாங்கம் மீண்டும் நிரூபித்துள்ளது. முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்குள் மேலும் மேலும் ஆழமாக மூழ்கிச் செல்லும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்தி சகல நலன்புரித் துறைகளிலும் கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முதலாளித்துவ அமைப்பு முறையின் இந்த ஒட்டு மொத்த தாக்குதல்களுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் வெடித்த கடும் எதிர்ப்பை, மாணவர் ஒன்றியங்களும் மு.சோ.கவும் வெறும் சைட்டம் எதிர்ப்புக்குள் சிறைவைத்தன.

எனினும், ஜயகொட அதை “மூலதனத்தின் சக்திக்கு எதிரான போராட்டம்” என புகழ்கின்றார். மூலதனத்தின் சக்திக்கு எதிரான போராட்டம், முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டமாகும். உண்மையிலேயே இத்தகைய போராட்டத்திற்கு ஜயகொட உட்பட போலி-இடதுகள் முழு எதிரிகளாவர். ஏனெனில், அவர்கள் தலையில் இருந்து கால் வரை முதலாளித்துவ அமைப்பு முறையுடன் பின்னிப் பிணைந்துள்ளதாலேயே ஆகும்.

“இந்த போராட்டம் ஆளும் தட்டுகளுக்கும் சிவில் புத்திஜீவிகளுக்கும் உரிய விடயம் என்றும், தேர்தலில் வாக்களித்து, பின்னர் அரசியலை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பார்வையாளர்களாக இருப்பதே கீழ் மட்டத்தில் உள்ள மக்கள் செய்ய வேண்டியுள்ளது என்றும் பிரசித்திப்படுத்திய, மேலாதிக்கவாத அரசியலுக்கு எதரான போராட்டமே இது” எனக் கூறி ஜயகொட முன் செல்கின்றார்.

இது முற்றிலும் வேறுபட்ட வகையிலேயே இடம்பெற்றது. அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க., மாணவர்களையும் தொழிலாளர்களையும் அவர்களது சுயாதீன அபிலாஷகளுக்கு எதிராக, சிங்களப் பேரினவாத ஜாதிக ஹெல உறுமய போன்ற அரசாங்கத் தரப்பினர், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் கூட்டு எதிர்க் கட்சியையும் சேர்த்துக்கொண்ட ஒரு கும்பலுக்குப் பின்னால் அவர்களை கட்டிவைப்பதற்கு செயற்பட்டன. ஒரு பக்கத்தில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியிலும் மறுபக்கம் தொழிலாளர்கள் உட்பட ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களாலும் நெருக்கப்பட்டுள்ள அரசாங்கம், அந்தப் போராட்டங்களில் பிரதானமான ஒன்றான சைட்டம் எதிர்ப்பை நிறுத்துமாறு மு.சோ.க. உட்பட கும்பலிடம் கேட்டுக்கொண்டது. அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு சீக்குப் பிடித்த அரசாங்கத்துக்கு பிராணவாயுவைக் கொடுத்து, அதன் ஆயுட் காலத்தை நீட்டிக் கொடுத்தன.

மு.சோ.க.யின் ஒட்டுமொத்த அரசியல் வேலைத் திட்டமே, இவ்வாறு தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களை “மேலாதிக்கவாத அரசியலின்” பிடிக்குள் வைத்திருப்பதே ஆகும்.

ஏனைய சமூக நலன்புரி சேவைகள் போலவே கல்விக்காக மக்களுக்கு உள்ள உரிமையை, இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கி வீசுகின்ற சோசலிச வேலைத் திட்டம் இன்றி, வேறு எதனாலும் உறுதிப்படுத்த முடியாது என்பதையே சைட்டம் எதிர்ப்பில் தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்ட அரசியல் உண்மை ஆகும். மு.சோ.க. உட்பட போலி இடதுகள், கூடுமானவரையில் அதை மூடி மறைப்பத்றகாகவே முயற்சிக்கின்றன.

இந்த வேலைத்திட்டத்தை நோக்கி மாணவர்கள் திரும்புவதை தடுத்து, “சைட்டத்தை இரத்துச் செய்” என்ற தனிப் பிரச்சினைக்கான பிரச்சாரத்துக்குள் மாணவர்களை அடைத்து வைத்து, அதற்காக அரசாங்கத்துக்கு கூடுமானவரை அழுத்தம் கொடுப்பதற்கு மாணவர்களை இயக்குவதற்கே அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க. ஆரம்பத்தில் இருந்தே முயற்சித்தன.

அரசாங்கம் தனது தனியார்மயமாக்க கொள்கைகளில் எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் காட்டாமல், அவற்றை மேலும் மேலும் துரிதப்படுத்துவதன் மூலம், அ.ப.மா.ஒன்றியத்தின் அரசியல் வங்குரோத்து அம்பலப்பட்டு, கல்வி உரிமைக்காக ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான போராட்டத்துக்குள் நுழைய வேண்டிய அவசியம் மாணவர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடன்களை இரத்துச் செய்கின்ற, பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் வங்கிகளை தொழிலாளர் ஆட்சியின் கீழ் மக்கள்மயப்படுத்துகின்ற, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றின் கீழ் கல்விக்கு பிரமாண்டமான நிதித் தொகையை ஒதுக்குவதன் மூலம் மட்டுமே, அத்தகைய போராட்டத்தை வெற்றிகொள்ள முடியும். முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கிவீசி அத்தகைய சோசலிச பொருளாதாரத்தை பதிலீடு செய்யும் போராட்டத்துக்கு தலைமைத்துவம் கொடுக்கும் வரலாற்று இயலுமை கொண்ட ஒரே புரட்சிகர சக்தி, தொழிலாள வர்க்கமே ஆகும்.

மார்க்சிசத்தின் இந்த மிக அடிப்படையான விவரிப்புக்கு முற்றிலும் எதிராக, கூடுமானவரை வர்க்க கோடுகளை மங்கலாக்கி, குழப்பங்களை ஏற்படுத்துவதையே இந்த போலி இடதுகள் செய்துவருகின்றன. ஜயகொட இந்த குறிப்புகளிலும் அதற்கான போதுமான இடத்தை ஒதுக்கியுள்ளார்:

“சைட்டம்-விரோத மாணவர்-மக்கள் இயக்கத்தின் பிரதேச அமைப்புகளைச் சூழ, கீழ் மட்ட மக்கள் கூடினர். பாடசாலைகளில் பெற்றோர்-ஆசிரியர் சங்கம், கிராமங்களில் நலன்புரி சங்கங்கள், இறப்பு நிதியுதவி சங்கங்கள், சிறு வியாபாரிகளின் வர்த்தக சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள் உட்பட மக்கள் அமைப்புகளின் கீழ், நூற்றுக்கணக்கான சமூகத்தின் கீழ் மட்டத்தினர் ஒழுங்கமைந்து போராட்டத்திற்கு வந்தனர்,”

தேவைப்பட்டால், ஜயகொட இன்னும் டசின்கணக்கான சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பட்டியல் ஒன்றை முன்வைக்கக் கூடியதாக இருந்திருக்கும். எனினும், தொழிலாளர் வரக்கத்திற்கு வெளியில், ஏனயை ஒடுக்கப்பட்ட குழுவினர், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயலுமையை புரிந்துகொண்டு, அதன் தலைமைத்துவத்தின் கீழ், சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அணிதிரளாமல், ஜயகொடவின் சூத்திரத்தின் படி, வர்க்க அடிப்படைகளை அலட்சியம் செய்து, கூடுமான வரை கூட்டத்தை கூட்டுவதன் மூலம், முதலாளித்துவ அரசாங்கங்களின் சமூக எதிர்ப் புரட்சி கொள்கைகளை தோற்கடிக்க முடியாது.

ஜயகொட தனது குறிப்பை பெரும் பொய்யுடன் முடிக்கின்றார். அதாவது, “சைட்டம் எதிர்ப்பு” வெற்றிகொள்வதன் மூலம் மக்கள் நனவு வளர்ச்சியடைந்துள்ளதாக கூறுகின்றார். அவர் பின்வருமாறு கூறுகின்றார்: “தன்னை புத்திஜீவிகளாக கூறிக்கொள்ளும் சிலரினது தடையை அலட்சியம் செய்து அவர்கள் வர்க்க அரசியலுக்கு வந்தனர். சமூகத்தின் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்கு குரல் கொடுப்பது, அதை ஏற்பாடு செய்வது, அதற்கு அரசியல் நனவைக் கொடுப்பது மற்றும் அதன் சக்தியை வளர்ப்பதன் பக்கத்தில், போராட்டம் வெற்றிகரமாக முன் நகர்ந்துள்ளது.”

ஜயகொட கூறும் இந்த “வர்க்க அரசியல்” என்பது என்ன? இல்லையெனில் அது எந்த வர்க்கத்துடைய அரசியல்? இது மு.சோ.க. மற்றும் அதன் தொப்புள் கொடி இணைந்துள்ள ஜே.வி.பி. வேண்டுமென்றே ஏற்படுத்துகின்ற குழப்பமாகும். அவை தொழிலாளர்கள், விவசாயிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சிறு வியாபாரிகளை ஒரு வர்க்கத்துக்குள் போட்டு பிசைந்து விடுகின்றனர். ஒரு சமூக மனிதனின் வர்க்கம் தீர்மானிக்கப்படுவது, உற்பத்தி நடவடிக்கைகளில் அவர் அல்லது அவள் பங்குபற்றும் விசேடமான முறையினால் அன்றி, அவரின் கையில் உள்ள வருமானத்தின் அடிப்படையில் அல்ல.

உற்பத்தி சாதனங்கள் இல்லாது தமது உழைப்புச் சக்தியை மட்டுமே விற்றுப் பிழைக்கும் வர்க்கமே தொழிலாள வர்க்கம் என்ற ஒடுக்கப்பட்ட வர்க்கமாகும். விவசாயிகள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் சிறு வியாபாரிகள், தமது உற்பத்தி சாதனங்கள் ஊடாக தமது உழைப்பை ஈடுபடுத்தி வாழுகின்ற நிலைமையின் கீழ், அவர்கள் தொழிலாள வர்க்கம் என்ற ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் குட்டி முதலாளித்துவ தட்டினரைச் சேர்ந்தவர்கள்.

தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சுயாதீனத்திற்கு எதிராகவும் அதன் புரட்சிகர தலைமைத்துவத்துக்கும் எதிராகவே மு.சோ.க. இந்த வர்க்க குழப்பங்களை ஏற்படுத்துகின்றது.

வர்க்க “நனவு” சம்பந்தமாகவும் அவர்கள் இதே போன்ற சேறாக்கும் வேலையையே அவர்கள் செய்கின்றனர். தொழிலாள வர்க்க நனவு என்பது, சோசலிச நனவைத் தவிர வேறு எதுவும் அல்ல. முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தொழிலாள வர்க்கத்துக்கும் இயல்பாகவே முதலாளித்துவ நனவு உரிமையாகின்றது. தொழிலாள வர்க்கப் புரட்சிகர கட்சியின் மூலம், “வெளியில் இருந்து தொழிலாள வர்க்கத்துக்குள்” இந்த சோசலிச அல்லது புரட்சிகர நனவை கொண்டு செல்ல வேண்டும் என, லெனின் என்ன செய்ய வேண்டும்? என்ற நூலில் இதையே தெளிவுபடுத்தியுள்ளார்.

சோசலிச நனவுக்கு எதிராக முதலாளித்துவ நனவை பரப்புவதையே சைட்டம் போராட்டம் முழுதும் அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க.யும் செய்தன. அதாவது, முதலாளித்துவ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் தமது கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியும் என்ற மாயையை பரப்புவதே ஆகும். முடிவில் அ.ப.மா.ஒ. மற்றும் மு.சோ.க.யின் தலைமைத்துவத்தினால் அவர்கள் மோசமாக காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர்.

மு.சோ.கட்சிக்கு எதிராக, சைட்டம் போராட்டம் முழுதும், சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE), சோசலிச நனவை மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஸ்தாபிக்கவே போராடின. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ., இந்தப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.