ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German military leadership calls for massive rearmament program

ஜேர்மன் இராணுவ தலைமை பாரிய மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது

By Johannes Stern
4 December 2017

அரசியல் கட்சிகள் அடுத்த கூட்டாட்சி அரசாங்க கூட்டணியை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கையில், முன்னணி இராணுவ அதிகாரிகளோ, 1930 களில் ஹிட்லர் இராணுவம் பாரியளவில் மீள்ஆயுதமயமானதை நினைவூட்டும் ஒரு மிகப் பரந்த ஆயுதமயமாக்கல் திட்டத்தின் மீது வேலை செய்து வருகின்றனர். நவம்பர் 28 மற்றும் 29 இல் பேர்லின் பாதுகாப்பு கருத்தரங்கில் நடந்த உயர்மட்ட இராணுவ அதிகாரிகளது ஒரு குழு விவாதம் மிரட்சியூட்டும் சாட்சியமாக இருந்தது.

நாடாளுமன்ற பாதுகாப்பு குழு தலைவர் வோல்ஃப்காங் ஹெல்மிச் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD) விவாதத்தை நெறிப்படுத்திய நிலையில், வெவ்வேறு ஆயுதப்படை பிரிவுகளின் தலைவர்கள் ஜேர்மன் இராணுவவாத குற்றங்கள் ஒருபோதும் நடந்திராததைப் போல உரையாற்றினர். ஒருவர் மாற்றி ஒருவர், எதிர்கால அரசாங்கத்திற்கு தங்களின் கோரிக்கைகளை முன்வைத்ததுடன், 2014 இன் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட வெளியுறவு கொள்கை திருப்பத்தை மேற்கோளிட்டு அவற்றை நியாயப்படுத்தினர்.

அவரது இறுதி முறையீட்டில், விமானப்படையின் (Luftwaffe) இன்ஸ்பெக்டர் கார்ல் முல்னெர் (Karl Müllner) கூறினார்: “ஜேர்மன் கூட்டாட்சி குடியரசானது உலகில் அதிக பொறுப்புறுதியை ஏற்க வேண்டுமென நாம் விரும்புவதை குறிப்பிட்டோம், முக்கியமாக இது இலவசமாக கிடைத்து விடாது என்பது நம் எல்லோருக்கும் தெரியுமென நான் நினைக்கிறேன்.” இந்த "தலைமை விழாவில்" இருந்து, “தேவையான கருவிகளைக் கூர்மையாக்குவது" அவசியம் என்றவர் தெரிவித்தார். “இதை அரசியல்வாதிகளும் உணர்ந்து, உரிய வழிவகைகளை வழங்குவார்கள்" என்றவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் விமானப்படை என்ன எதிர்பார்க்கிறது என்பது ஏற்கனவே முல்னெரின் ஆரம்ப கருத்துக்களிலேயே வரையறுக்கப்பட்டிருந்தது. ஒரு முக்கிய இலக்கு "ஒன்றுதிரட்டல்,” அதாவது, நடவடிக்கை மேற்கொள்ளும் இடங்களுக்கு படைகளை நம்பத்தகுந்த வகையிலும் விரைவாகவும் இடம் பெயர்த்துவதும் மற்றும் "தரைத் தளத்திலிருந்து வான்வழி பாதுகாப்பிற்கான" “புதிய தகைமைகளை" அபிவிருத்தி செய்வதும் ஆகும். அதுமட்டுமல்ல, "எதிர்காலத்தில் விமானப்படையின் வான்வழி தாக்குதலுக்கான ஆற்றல்களை நாம் எவ்வாறு கூர்மைப்படுத்த விரும்புகிறோம் என்பதைக் சிந்திப்பதற்கும்,” “நீண்டதூர இலக்குகளைக் கண்டறிவதையும், கையாள்வதையும்" சாத்தியமாக்கும் "குறிப்பாக, புதிய தலைமுறை போர் விமானங்களின் ஆற்றல்களைக் குறித்து" எதிர்நோக்குவதற்கும் அது சரியான தருணமாக இருந்தது.

இராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜோர்ஜ் வொல்மெர் (Jörg Vollmer) தான் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார். தேசிய மற்றும் கூட்டு பாதுகாப்புக்கு திரும்புவதற்கான "முன்மாதிரியான மாற்றம்" என்பது, பனிப்போரைப் போலவே, இப்போதும், அவர் "துருப்புகளை நீண்ட தூரங்களுக்கு இடம்பெயர்த்து, அவற்றை போருக்குள் ஈடுபடுத்த" வேண்டியிருப்பதை அர்த்தப்படுத்தியது. ஜேர்மன் இராணுவத்தை பொறுத்த வரையில், அதற்கான கடமைப்பாடுகள் என்பது நடவடிக்கைக்கான மூன்று பிரிவுகளை வழங்குவது மற்றும் அதேவேளையில் கிழக்கு ஐரோப்பாவில் துருப்புகளை நிலைநிறுத்துவதும் அத்துடன் ஆப்கானிஸ்தான், மாலி, ஈராக் மற்றும் கொசொவோவிற்கான இராணுவப் படைப்பிரிவுகளை அனுப்புவது ஆகியவற்றை அர்த்தப்படுத்தியது.

அது, அவர் "தெளிவாக வெளிப்படுத்த" வேண்டியிருந்த "படைகளுக்கான ஒரு சவாலாக" இருந்தது. இராணுவம் "2027 க்குள் முழுமைப்படுத்தப்பட்ட மற்றும் பயன்பாட்டுக்கு தயாராக வைக்கப்பட்ட முதல் பிரிவை ஏற்றிருக்கும்" திட்டத்தைப் பின்பற்றி வருகிறது. மேலும், “டிஜிட்டல்மயமாக்கல் அறிமுகம்" “நீண்டகாலமாக தாமதமாகி" வந்ததால், அது வரையில், “தொழில்துறையால் என்ன வழங்க முடியுமோ அவற்றை பரிசோதிக்க நம்மை அனுமதிக்கும் வகையில், ஒரு பரிசோதனை மற்றும் வெள்ளோட்டத்திற்கான அமைப்பை நாம் அமைப்போம்,” என்றார். 2032 இல், “டிஜிட்டல்மயப்பட்ட இராணுவம் 4.0” தயாராக இருக்க வேண்டும்.

அவர் உரையின் இறுதியில், அத்தளபதி ஹெல்மிச்சிடம் (Hellmich) நேரடியாக பேசினார்: “நமக்கு ஒரு விருப்பம் உண்டு என்றால், அது, என்ன தொடங்கப்பட்டுள்ளதோ அதை நீடித்து நிலைத்து வைக்க வேண்டும் என்பது தான், ஒட்டுமொத்த விடயமும் படிப்படியாக முன்னோக்கி நகர வேண்டும்.” “நாளையே அனைத்தும் அவற்றிற்குரிய இடத்தில் இருக்க வேண்டும்...” என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அது சற்று வேகமாக நடக்க வேண்டும். அது வேகமாக நடந்தே ஆக வேண்டும்.”

நான்கு புதிய ரக 125 சிறிய போர்க்கப்பல்கள் (frigates), ஐந்து வழித்துணை கப்பல்கள் (corvettes) மற்றும் ஆறு பல ரக-பயன்பாட்டுக்குரிய தாக்கும் கப்பல்கள் உட்பட ஒரு பில்லியன் யூரோ மதிப்பிலான புதிய கொள்முதல்களுக்கான பட்டியல் ஒன்றை கடற்படை இன்ஸ்பெக்டர் Andreas Krause வழங்கினார். பிந்தையதை அவர் "போருக்கான" நிஜமான "போராளிகள்" என்று வர்ணித்தார். இத்துடன் புதிய ஹெலிகாப்டர்களும் நீர்மூழ்கிக்கப்பல்களும் இருக்கும். அந்த மேடையில் அமர்ந்திருந்த அரசியல் மற்றும் வணிக பிரதிநிதிகளுக்கும், பார்வையாளர்களுக்கும் Krause ஒரு நேரடியான முறையீட்டையும் வழங்கினார். “நாம் இத்தருணத்தை தவற விடக்கூடாது, ஆகவே நெருக்கமாக ஒருங்கிணைந்து ஒரு குழுவாக செயல்பட, எல்லா துறை கொள்கை முடிவெடிப்பாளர்களாகிய, நீங்கள் என்னுடன் வேண்டும்,” என்றார்.

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அபிலாஷைகளைக் குறித்து Krause எந்த இரகசியமும் வைக்கவில்லை. “கடல் போக்குவரத்து களத்தில் ஜேர்மனியின் ஆர்வத்திற்குரிய பகுதிகள்,” “சமஅளவில் வடக்கின் பக்கவாட்டு கீழ்பகுதியிலிருந்து மத்திய தரைக்கடல் வரையில் விரிந்துள்ளது, மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு உள்ளேயும் நீள்கிறது...” என்றார்.

2016 இல், மொத்த இறக்குமதி பண்டங்களில் 25 சதவீதம் ஜேர்மன் துறைமுகங்கள் வழியாக வந்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஏற்றுமதிகளை பொறுத்தமட்டில், மொத்த பண்டங்களில் ஏறத்தாழ 60 சதவீதம் கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டன. ஒட்டுமொத்தமாக, தொலைதூர வர்த்தகத்தில் 90 சதவீதம் பெருங்கடல்களின் ஊடாக நடந்தன. இவ்விதத்தில் ஜேர்மனி "பாதுகாப்பான மற்றும் இடர்பாடில்லாத கடல் வழிகளின் மீது இன்றியமையா நலன்களைக்" கொண்டிருந்ததுடன், "எளிய வேலைகளில் இருந்து அதி-தீவிர முப்பரிமாண போர்முறை வரையில்" செயல்படக்கூடிய ஆற்றல்கள் அதற்கு அவசியப்பட்டிருந்தது.

கூட்டு ஒத்துழைப்பு சேவை இன்ஸ்பெக்டர் Martin Schelleis இன் புரிதல்கள், உள்நாட்டு முகப்பிலும் ஜேர்மன் இராணுவம் போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதைத் தெளிவுபடுத்தியது. அவர், “ஜேர்மனியில் தேசிய இராணுவத்தின் பணிகளை ஒருங்கிணைப்பது, சாத்தியமானளவுக்கு செயல்திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் மையக்களமாக ஜேர்மன் செயல்படுவதை உறுதிப்படுத்துவது ஆகியவற்றை" குறித்து பேசினார்.

பெரும்பாலான விடயங்களில், “ஜேர்மனி, புவியியல்ரீதியில் மைய இடத்தில் அமைந்திருப்பதாலும், தரையிறக்குவதற்கான துறைமுகங்களைக் கொண்டிருப்பதனாலும்” “நேசப் படைகளை மீளபலப்படுத்துவதற்குரிய போக்குவரத்து மண்டலமாகவும் மற்றும் பின்புல செயல்பாட்டுக்கான பகுதியாகவும்” இருக்கும். கூட்டு ஒத்துழைப்பு சேவை, “அதன் இன்ஸ்பெக்டரை தேசிய மற்றும் பிராந்திய தளபதியாக கொண்டிருக்கும்… குறிப்பாக இங்கே சவாலாக இருக்க போவது,” “ஜேர்மன் இராணுவத்தின் சொந்த பணிகளை மேற்கொள்வது மட்டுமல்ல, மாறாக படைத்துறைசாரா அதிகாரிகள், பொலிஸ், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பதும் தான்,” என்று தொடர்ந்து கூறினார்.

ஜேர்மன் போர் திட்டங்கள் பொதுமக்களுக்கும் அத்துடன் சிப்பாய்களுக்கும் ஏற்படுத்தக்கூடிய பேரழிவுகரமான விளைவுகள், மருத்துவ சேவைகளுக்கான இன்ஸ்பெக்டர் Michael Tempel இன் கருத்துக்களில் வெளிப்பட்டன. ஜேர்மனி மிகப்பெரிய மற்றும் சிறந்த சாதனங்களைக் கொண்ட இராணுவ மருத்து சேவைகளைக் கொண்டுள்ளது என்றாலும், நடப்பு அபிவிருத்திகள் சவால்களை முன்னிறுத்துவதாக கூறிய அவர், “மிகப்பெரிய மோதலில் நாம் ஒரு நாள் அல்லது இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து நாட்களைக் கடந்து செல்வதானால், காயப்பட்டவர்களை எவ்வாறு கையாள்வது என்று நான் கவனத்தில் கொள்ள வேண்டும்... சம்பவம் நடக்கும் தேசத்தின் மருத்துவமனைகளை எந்தளவுக்கு நான் சார்ந்திருக்க முடியும், உள்நாட்டு மருத்துவமனைகளை எந்தளவுக்கு நான் சார்ந்திருக்க முடியும்? ஐரோப்பாவில் நம்மிடம் தீக்காயம் அடைந்தவர்களுக்கு எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன? அனேகமாக ஒருவருக்கும் குறைவாகவே இருக்கும். ஆகவே இத்தகைய குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்றார்.

ஜேர்மன் ஆயுத தொழில்துறை ஏற்கனவே நாக்கை தொங்கப் போட்டு நிற்கிறது. மேடையில் அமர்ந்திருந்த, ஆயுதத் தொழில்துறை நிறுவனம் MBDA இன் தலைவர் Thomas Gottschild கூடியிருந்தவர்களுக்கு இவ்வாறு உறுதியளித்தார்: “நம்மால் அனைத்தையும் உருவாக்க முடியும், ஆனால் எப்போதும் மிக விரைவாக முடியாது.” “கண்டுபிடிப்புகளும், புத்திசாலித்தனமான தேசிய கூட்டுறவு அணுகுமுறைகளும்" நடப்பு நிலைமைக்கு அவசியப்படுகின்றன என்பதை அவர் சேர்த்துக் கொண்டார்.

“சர்வசாதாரணமாக அதிகரிக்க முடியாத நிலைமையும்" அதில் ஒன்று, ஆகவே அத்தருணத்தில் உற்பத்தி ஆற்றலை மீண்டும் வேகத்திற்கு கொண்டு வருவதற்காக சில குறிப்பிட்ட தயாரிப்புகளை நாம் செய்ய வேண்டியுள்ளது,” என்றார். இங்கே, “தொழில்துறைக்கும் ஆயுத படைகளுக்கும் இடையிலான" கூட்டுறவைக் குறிப்பிட வேண்டியது முக்கியமானது, அதேவேளையில் "ஐரோப்பிய ஆயுத தளவாடங்களின் கூட்டுறவும்" இன்றியமையாதது. “நிஜமாகவே மிகப்பெரிய ஆயுத தளவாட திட்டங்களை" எந்தவொரு தனி நாடும் இன்று முன்னெடுக்க முடியாது.

பேர்லின் பாதுகாப்பு மாநாட்டு விவாதங்கள், புதிய தேர்தர்களுக்கான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei–SGP) கோரிக்கையினது அவசரத்தை அடிக்கோடிடுகிறது. மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரு தீவிர வலதுசாரி அரசாங்கத்தை நிறுவுவதை அனுமதிக்கக் கூடாது. அதுபோன்ற அரசாங்கம், ஜேர்மனியை கோரப்பற்களுடன் ஆயுதமயப்படுத்தி, கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை நடந்ததைப் போல, பேரழிவுகரமான விளைவுகளுடன் உலக சக்திக்கான ஒரு புதிய பிடியை உருவாக்கும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP), முதலாளித்துவம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சோசலிச மாற்றீடுக்காக போராடி வருகிறது.