ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump and Jerusalem: The end of the Mideast “peace” charade

ட்ரம்பும் ஜெருசலேமும்: மத்திய கிழக்கு "சமாதான" நாடகத்தின் அபத்தமான பாசாங்குதனத்தின் முடிவு

Bill Van Auken
8 December 2017

அமெரிக்கா ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கிறது மற்றும் அங்கே வாஷிங்டன் அதன் தூதரகத்தை ஏற்படுத்த உத்தேசித்துள்ளது என்று அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆணவமான ஆத்திரமூட்டும் உரை, இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுத்தள்ளும் ஆயுதங்கள், இரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி அந்த ஆக்கிரமிப்பு பகுதி எங்கிலும் எழுந்த போராட்டங்களை நசுக்குவதில் 100 க்கும் அதிகமான பாலஸ்தீன தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் காயப்படுத்தப்பட்ட வடிவத்தில் வியாழனன்று அதன் பலன்களை விளைவித்தது.

ட்ரம்ப் அவரது புதன்கிழமை உரையில், பாசாங்குத்தனத்தில் அடித்தளமிட்டிருந்த ஏழு தசாப்த கால அமெரிக்க கொள்கையை மாற்றியமைத்தார். ஜெருசலேமின் அந்தஸ்து, இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே அமெரிக்க வெளியுறவுத்துறையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாக இருந்துள்ளது என்றாலும், அடுத்தடுத்து வந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள், ஜனநாயகக் கட்சி ஆகட்டும் அல்லது குடியரசுக் கட்சி ஆகட்டும் ஒன்று போல, தூதரகத்தை கொண்டுசெல்வதற்கு சூளுரைத்துள்ளனர், ஆனால் பதவிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கி உள்ளனர். அதேபோல, அந்நகர்வுக்கு அண்மித்து ஒருமனதாக அமெரிக்க காங்கிரஸ் வாக்களித்த அதேவேளையில், இடம் மாற்றுவதை ஒத்திப்போடுவதற்கு தேசிய பாதுகாப்பு விலக்குரிமையை ஜனாதிபதிக்கு வழங்கியது.

இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் யூத மதத்தின் (Judaism) மிக புனித்தலங்களில் ஒன்றின் இருப்பிடமாக கருதப்படும் ஜெருசலேம் மீதான சட்டபூர்வ அதிகாரம் குறித்த இப்பிரச்சினைகளின் வெடிப்பார்ந்த குணாம்சம், இஸ்ரேல் அரசு நிறுவப்படுவதற்கு முன்னர் இருந்தே சர்வதேச இராஜாங்க நடவடிக்கைகளில் கையாளப்பட்டு வந்துள்ளது.

ஒரே வீச்சில், ட்ரம்ப் கடந்த நிர்வாகங்களின் தோரணைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார். அவ்வாறு செய்ததன் மூலம், பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தெனியாகுவின் வலதுசாரி அரசாங்கத்தின் சியோனிச குடியமர்வுகள் மீதான விரிவாக்கம், பாலஸ்தீன நிலம் மீதான அதன் அபகரிப்பு, இனச் சுத்திகரிப்பு மற்றும் ஒட்டுமொத்த ஒடுக்குமுறை ஆகியவை வாஷிங்டனிடமிருந்து நிபந்தனையற்ற ஆதரவைப் பெறும் என்பதற்கு அவர் ஒரு தெளிவான சமிக்ஞை அனுப்பினார்.

பாலஸ்தீன ஆணையத்தைப் பொறுத்த வரையில், "தீவிரவாதத்தை தோற்கடிப்பதற்கான" அமெரிக்க சிலுவை போரில் அது இணைந்து கொள்ளவதற்கும், பாலஸ்தீன மக்கள் அவர்களின் "உடன்பாடின்மையை, வன்முறை இன்றி, நியாயமான விவாதத்துடன் விடையிறுப்பதை" உறுதிப்படுத்தி வைக்க அதற்கு அழைப்புவிடுத்தும், அது இஸ்ரேலுக்கும் மேற்கிற்கும் ஒரு பாதுகாவலனாக அதன் பாத்திரத்தைத் தொடர வேண்டுமென்ற ஒரு கோரிக்கைக்கு அதிகமாக அதனிடம் வேறெந்த பொறுப்பையும் அவர் ஒப்படைக்கவில்லை.

இடைவிடாது இஸ்ரேலிய வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு மக்கள், அதன் நில அபகரிப்பு, இளைஞர்கள் மீதான அதன் எதேச்சதிகார சிறைபிடிப்பு, அதன் தொடர்ச்சியான போர்கள் மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் பத்தாயிரக் கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டமை என இப்பிரச்சினைகள் ஏற்கனவே அவர்களின் அடிப்படை விருப்பங்கள் மற்றும் உரிமைகளை முழுமையாக அவமதித்து தீர்க்கப்பட்டுள்ள நிலையில், இவற்றிற்காக "நியாயமான விவாதத்தில்" ஈடுபடுமாறு கூறப்படுகிறது.

ஜெருசலேம் மீதான இஸ்ரேலிய இறையாண்மையை அங்கீகரித்திருப்பதையும் —அங்கு வசிப்பவர்களில் 40 சதவீதம் பேர், சுமார் 320,000 பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது— அமெரிக்க தூதரகத்தை அங்கே நகர்த்துவதையும், “நீண்டகாலமாக சமாதான நிகழ்முறையை முன்னெடுப்பதில் காலங்கடத்தப்பட்டு வந்த நடவடிக்கையாக" ட்ரம்ப் சித்தரிக்கிறார். அவர் மருமகன் ஜாரெட் குஷ்னரும், அவரின் பெருநிறுவனத்தின் முன்னாள் உயர்மட்ட வழக்கறிஞர்களான Jason Greenblatt மற்றும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் டேவிட் ப்ரீட்மனும் இந்த "நிகழ்முறையை" மேற்பார்வையிட்டுள்ளனர், இவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பு பிராந்தியத்தில் சட்டவிரோத இஸ்ரேலிய குடியமர்வுகளுக்கு வெறிபிடித்த ஆதரவாளர்கள் ஆவர்.

செல்வந்த வலதுசாரி அமெரிக்க சியோனிசவாதிகளின் ஒரு சிறிய குழுவினரும் மற்றும் வலதுசாரி கிறிஸ்துவ எவங்கேலியர்களும் (Evangelicals) 2016 இல் அவருக்கு பிரச்சார நிதி வழங்கியிருந்த நிலையில், அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக அவர் அளித்த பிரச்சார வாக்குறுதிகளை "நிறைவேற்றும்" ஒரு நடவடிக்கையாக ட்ரம்ப் அவர் உரையை ஒளிவுமறைவின்றி சித்தரித்தார். அவர் நிர்வாகம் நெருக்கடிகளால் சூழப்பட்டுள்ள நிலைமைகளின் கீழ், இந்த "அடித்தளத்தை" அவர் உறுதிப்படுத்தி வைக்க ஆர்வப்படுகிறார்.

எவ்வாறிருப்பினும் மிக அடிப்படையில், பாலஸ்தீனர்களுக்கு எதிரான அவரது அரசியல் ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது மத்திய கிழக்கு முழுவதிலும், குறிப்பாக ஈரானுக்கு எதிராக, போரை நோக்கிய முனைவுடன் பிணைந்துள்ளது. ட்ரம்ப் அவர் உரை வழங்கிய அதேநாளில், பென்டகன் 2,000 துருப்புகளை —முன்னர் ஒப்புக் கொண்ட எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகம்— சிரியாவில் நிலைநிறுத்தி இருப்பதாகவும், ISIS ஐ விரட்டியடித்த பின்னரும் அவர்களைத் திரும்பப் பெற எந்த உத்தேசமும் இல்லை என்பதையும் பென்டகன் ஒப்புக் கொண்டது.

ட்ரம்பின் உரையை அடுத்து, அல் கொய்தா போன்ற இஸ்லாமிய குழுக்கள் மதவாத உணர்வுகளுக்கு முறையிட்டு வருகின்ற நிலையில், அமெரிக்க கொள்கை மாற்றம் புதிய பயங்கரவாத தாக்குதல்களைத் தூண்டும் என்று எண்ணற்ற எச்சரிக்கைகள் வந்துள்ளன. ஐயத்திற்கு இடமின்றி, இவை அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் கணக்கீடுகளுக்குள் காரணிகளாக இருந்து வருகின்றன, இவை எந்தவொரு புதிய பயங்கரவாத நடவடிக்கையையும் வெளிநாடுகள் மீது —குறிப்பாக ஈரானுக்கு எதிராக— போர் தொடுக்கவும், மற்றும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தவும் சாக்குபோக்காக பற்றிக்கொள்ளப்படும்.

நடைமுறையளவில் ஒவ்வொரு அரபு ஆட்சியும், அத்துடன் மேற்கு ஐரோப்பாவில் உள்ள வாஷிங்டனின் பெயரளவிற்கான கூட்டாளிகள் அனைத்தும் உள்ளடங்கலாக, ட்ரம்பின் உரை ஏறத்தாள உலகெங்கிலும் இருந்து கண்டனங்களை எதிர்கொண்டது.

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம், வாஷிங்டனின் இந்த ஆத்திரமூட்டும் ஒருதலைபட்சமான நகர்வை, தங்களின் எல்லைகளுக்குள் முஸ்லீம் மக்களைக் கிளர்ந்தெழச் செய்து, அத்துடன் ஈரானின் ஆதாயமுள்ள முதலீடுகள் மற்றும் சந்தைகளை அணுகுவதைத் தடுக்கும் ஈரான்-விரோத கொள்கையை விரிவாக்கி, தனது நலன்களுக்கு குறுக்காக வெட்டுவதாக காண்கிறது. அதேநேரத்தில், ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் மத்திய கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் இராணுவ வழிவகைகள் உட்பட அவற்றின் சொந்த சுதந்திரமான வல்லரசு நலன்களைப் பின்தொடர்வதற்கு ட்ரம்பின் நகர்வை ஒரு நியாயப்பாடாக பயன்படுத்தும் என்பதை, குறிப்பாக ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அரசாங்கங்களின் விடையிறுப்புகளில் இருந்து தெளிவாகிறது.

அரபு ஆட்சிகளைப் பொறுத்த வரையில், போராட்டங்கள் முன்பினும் அதிகமாக போலித்தனமாக உள்ளன. சவூதி முடியாட்சி, தளபதி சிசி இன் எகிப்திய பொலிஸ் அரசு சர்வாதிகாரம், ஜோர்டானின் ஹஷெமியத் (Hashemite) முடியாட்சி மற்றும் மஹ்மத் அப்பாஸியின் பாலஸ்தீன ஆணையம் (PA) ஆகிய அனைத்திற்கும், ஜெருசலேம் மீதான அமெரிக்க கொள்கை மாற்றம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெருசலேம் மொத்தத்தையும் மற்றும் மேற்குகரை குடியமர்வுகள் மொத்தத்தையும் இஸ்ரேலிய கரங்களில் விட்டுக்கொடுத்து, பாலஸ்தீன அகதிகளுக்கான திரும்பி வரும் உரிமையை மறுத்து, பாலஸ்தீன "அரசை" இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எல்லைகளைக் கொண்ட ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பன்துஸ்தான்களின் ஒரு துண்டு நிலப்பகுதியாக குறைக்கும் அமெரிக்க-இஸ்ரேலிய "சமாதான" வரையறைகளை அவருக்கு கட்டளையிடவே, மகுடம் தரிக்க உள்ள சவூதியின் இரும்பு மனிதர் இளவரசர் மொஹம்மத் பின்-சல்மான், அப்பாஸ் ஐ கடந்த மாதம் அழைத்திருந்ததாக நம்பகமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒன்று இந்த பயங்கரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது "நீக்கப்படுவார்", அதாவது அவரது பாலஸ்தீன ஆணையம் சார்ந்திருக்கும் சவூதியின் பணம் வெட்டப்படுமென அப்பாஸிக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்த 70 ஆண்டுகளில் பல முறை பாலஸ்தீனர்களைக் காட்டிக்கொடுத்துள்ள அரபு ஆட்சிகளுக்கு, ட்ரம்ப் மற்றும் நெத்தனியாகுவை எதிர்க்க எந்த ஆர்வமும் இல்லை. சவூதி அரேபியா மற்றும் பிற பிற்போக்குத்தனமான சுன்னி வளைகுடா முடியாட்சிகள் ஈரானுக்கு எதிராக அவற்றுடன் இணைந்திருக்க விரும்புகின்றன.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காசா துண்டுப் பகுதியில் அரசமைப்பை பகிர்ந்து கொள்வதன் மீது பாலஸ்தீன ஆணையத்துடன் பேரம்பேசி வரும், இஸ்லாமியவாத பாலஸ்தீன குழுவான ஹமாஸூம் இதிலிருந்து எந்த விதத்திலும் வித்தியாசப்பட்டதில்லை. ட்ரம்பின் முடிவு "நரகத்தின் கதவுகளைத் திறந்துவிடும்" என்று எச்சரிக்கின்ற அது, ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் இஸ்ரேலுடன் ஓர் உடன்பாட்டை எட்ட முயன்று வரும் அதேவேளையில் மத அடிப்படைவாதத்தில் தன்னைத்தானே உருமறைத்து கொண்டு, வெறுமனே பாலஸ்தீன முதலாளித்துவத்தின் மற்றொரு கன்னையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

நெத்தனியாகு ட்ரம்பின் முடிவை ஒரு “வரலாற்று மைல்கல்” என்று பாராட்டினாலும், யதார்த்தத்தில் அது பல தசாப்தங்களாக பாலஸ்தீன மக்கள் மீதான ஒடுக்குமுறையை மூடிமறைக்கவும் மற்றும் நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள, “சமாதான நிகழ்முறை”, “இரண்டு-அரசு தீர்வு” என்றெல்லாம் அறியப்படும் அரசியல் கட்டுக்கதைகளின் சவக்குழி மீது எழுப்பட்ட வெறும் ஒரு கல்லறைக் கல்லாக விளங்குகிறது.

ஏகாதிபத்தியத்திற்கும் அரபு முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் இடையிலான உடன்படிக்கைகள் மற்றும் தந்திரோபாயங்கள் மூலமாக பாலஸ்தீன மக்களின் அபிலாஷைகளை அடைய முடியும் மற்றும் அவர்கள் மீதான சியோனிச அரசினது ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்ற வாதங்களின் மோசடித்தன்மையையே, ட்ரம்பின் நடவடிக்கை —மீண்டுமொருமுறை— அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது.

தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு போர்கள் மற்றும் அதிகரித்து வரும் இஸ்ரேலிய-பாஸ்தீன பதட்டங்கள் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட, அதிகரித்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடி, முதலாளித்துவ தேசியவாதத்தின் வரலாற்று திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது.

அதன் சியோனிச வடிவத்தில், யூத இனப்படுகொலை பயங்கரங்களில் இருந்து தப்பியோடிய யூதர்களுக்கு ஒரு சொந்த நாட்டை நிறுவுவது என்ற அடித்தளத்தில் அதன் சட்டபூர்வத்தன்மை கோரப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக, யூத மக்களைப் பாலஸ்தீனர்களுக்கும் மற்றும் அப்பிராந்தியத்தின் ஏனையவர்களுக்கும் எதிராக நிறுத்தி, காலனித்துவவாதம் மற்றும் விரிவாக்கவாதம் என்ற அடித்தளத்தில் அது ஓர் இராணுவமயப்பட்ட அரசை உருவாக்கி உள்ள அதேவேளையில், இப்புவியின் முன்னால் மிகவும் சமநிலையற்ற சமூகங்களில் ஒன்றுக்குத் தலைமை தாங்குகிறது. லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்ததைப் போல, இந்த அரசின் உருவாக்கமானது யூத மக்களுக்கு வைக்கப்படும் ஒரு "இரத்தந்தோய்ந்த பொறியாக" நிரூபணமாகிறது.

மத்திய கிழக்கில் ஒரு புதிய குட்டி-அரசை உருவாக்கும் முதலாளித்துவ தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த பாஸ்தீன தேசியவாதமே கூட, பாலஸ்தீன மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை எட்ட முற்றிலும் தகைமையற்றது என்பதை நிரூபித்துள்ளது. அதற்கு பதிலாக, அது பாலஸ்தீன ஆணையத்தைத்தான் உருவாக்கியது, இது வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்கள் மற்றும் சிஐஏ உதவி நிதிகளில் ஊட்டம் பெறும் அப்பாஸ் மற்றும் அவரது சக அதிகாரிகள் மற்றும் மில்லியனர்களுக்கு அப்பாற்பட்டு யாருடைய நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, அதேவேளையில் ஆக்கிரமிப்பு பகுதியில் எழும் எதிர்ப்பை ஒடுக்கி வருகிறது.

பாலஸ்தீனர்கள் அனுபவித்த தசாப்த கால ஒடுக்குமுறை, வறுமை மற்றும் வன்முறைக்கு முடிவு கட்டுவதும், ஒரு பிராந்திய அளவிலான போர் அபாயத்தை நிறுத்துவதும் தொழிலாள வர்க்கத்தின் பணியாகும், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மற்றும் அதன் உள்ளூர் முகவர்களான இஸ்ரேல் மற்றும் அரபு இரண்டுக்கும் எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில், எல்லா தேசிய மற்றும் மத எல்லைகளையும் கடந்து தொழிலாள வர்க்கம் அதன் பலத்தை ஐக்கியப்படுத்த வேண்டும்.

அப்பிராந்தியத்தில் மேலாதிக்கம் செய்துள்ள அரசியல் கன்னைகளின் உடைவு, தீர்க்கவியலாத முதலாளித்துவ நெருக்கடியால் எரியூட்டப்பட்டுள்ள இது, இப்புவியெங்கிலும் முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டும் போராட்டத்தின் பாகமாக, மத்திய கிழக்கின் சோசலிச கூட்டமைப்புக்கான போராட்டத்தில் யூத மற்றும் அரபு தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த வேண்டியதன் அவசரமான அவசியத்தை முன்நிறுத்துகிறது.