ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Two Palestinians killed, hundreds wounded in clashes following Trump announcement on Jerusalem

ஜெருசலேம் குறித்த ட்ரம்ப் அறிவிப்பைத் தொடர்ந்து நடந்த மோதல்களில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், நூற்றுக் கணக்கானவர்கள் காயமடைந்தனர்

By Jordan Shilton
9 December 2017

வெள்ளியன்று மேற்கு படுகை மற்றும் காசா பகுதியில் இஸ்ரேலிய சிப்பாய்களுடன் நடந்த மோதலில் 200 க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர் மற்றும் குறைந்தபட்சம் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஆங்கீகரித்து, அப்பிராந்தியத்தை நோக்கிய பல தசாப்த கால அமெரிக்க கொள்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு நகர்வாக அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவ் இல் இருந்து அங்கே நகர்த்துவதற்கும் சூளுரைத்ததை அடுத்து இப்போராட்டங்கள் நடந்தன.

காசா பகுதியிலிருந்து இராணுவ சாவடிகளை நோக்கி முன்னேறி வந்த நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய சிப்பாய்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், 30 வயதான ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் டஜனுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். ஜெருசலேமிலேயே கூட, பொலிஸ் அந்த பழைய நகருக்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தள்ளுமுள்ளில் ஈடுபட்டது. மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் குறைந்தபட்சம் 123 பேர் காயமடைந்திருப்பதாக பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்தனர். இது வியாழனன்று நடந்த வன்முறை மோதலில் 31 பாலஸ்தீனர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து நடந்திருந்தது. அப்போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து அண்மித்து 800 பேர் காயமடைந்திருப்பதாக அல்-ஜசீரா குறிப்பிட்டது.

போராட்டங்களின் அலை, தென்கிழக்கு ஆசியாவில் இந்தோனேஷியாவில் இருந்து வட ஆபிரிக்காவின் துனிசியா வரையில், சர்வதேச அளவில் பரவியது. ஜோர்டான் தலைநகரான அம்மானில் பத்தாயிரக் கணக்கானவர்கள் அணிவகுத்தனர். ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் நிறைய கூட்டங்கள், “இஸ்ரேல் மரணிக்கட்டும்,” “அமெரிக்கா மரணிக்கட்டும்,” என்று கோஷமிட்டவாறு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாஹூவின் உருவப்படங்களை எரித்தனர். ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி ட்ரம்பின் முடிவை "தவறானது, சட்டவிரோதமானது, ஆத்திரமூட்டுவது மற்றும் மிகவும் அபாயகரமானது" என்று குறிப்பிட்டார்.

ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, இஸ்ரேலிய விமானப்படை வெள்ளியன்று மாலை காசா பகுதியில் விமான தாக்குதல்கள் நடத்தியது, அதில் ஆறு குழந்தைகள் உட்பட 25 பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர். ராக்கெட் ஒன்று இஸ்ரேலிய நகரமான Sderot இல் வெடித்தது, அதில் யாரும் காயமடையவில்லை என்று Haaretz குறிப்பிட்டது.

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ட்ரம்ப் நிர்வாகம் அங்கீகரித்திருப்பது ஒரு திட்டமிட்ட ஆத்திரமூட்டலாகும். அதுவொரு சர்வதேச சட்டமீறல், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கு இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமாக மட்டுமே அந்நகரின் அந்தஸ்து தீர்மானிக்கப்பட வேண்டுமென நீண்டகாலமாக பேணி வந்த சர்வதேச சட்டம், கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் சட்டவிரோதமாக இணைத்துக் கொண்டதையும் ஒருபோதும் அங்கீகரித்திருக்கவில்லை. இந்நகர்வானது, அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் பல தசாப்த காலமாக ஊக்குவித்து வந்த "சமாதான நடைமுறை" மற்றும் "இரு-அரசு தீர்வு" என்ற பாசாங்குத்தனமான நாடகம் முழுமையாக முடிவுக்கு வந்திருப்பதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.

ஈரானின் அணுஆயுத நடவடிக்கை, 2015 உடன்படிக்கைக்கு இணங்கி உள்ளது என்று ட்ரம்ப் சான்றிதழ் அளிக்க மறுத்து இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாட்களில் வந்துள்ள, இந்த ஜெருசலேமின் அங்கீகரிப்பு, மத்திய கிழக்கு எங்கிலுமான மோதல்களை பரந்தளவில் தூண்டிவிடுகின்றதும் மற்றும் தெஹ்ரானுடன் ஒரு பிராந்திய போருக்கு தயாரிப்பு செய்வதற்கும் அமெரிக்க ஏகாதிபத்திய தூண்டுதலின் பாகமாக உள்ளது. இந்த அறிவிப்பு, முன்னர் ஒப்புக் கொண்ட எண்ணிக்கையை விட நான்கு மடங்கு அதிகமாக, சிரியாவில் 2,000 அமெரிக்க துருப்புகள் உள்ளன என்றும், அமெரிக்க படைகள் கால வரம்பின்றி அங்கே நீடிக்குமென்றும் பென்டகன் ஒப்புக் கொண்ட அதே நாளில் வந்தது. இது, சிரிய மோதல் ISIS பயங்கரவாதிகளை இலக்கில் கொண்டிருப்பதாக கூறப்படும் வாதங்களின் போலித்தனத்தை எடுத்துக்காட்டுகிறது, ISIS பயங்கரவாதிகளோ இராணுவரீதியில் அந்நாட்டில் தோல்வி அடைந்துள்ளனர். உண்மையில், எரிசக்தி வளம் மிகுந்த மத்தியக் கிழக்கின் மீது சவாலுக்கிடமற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை ஒன்றுதிரட்டுவதற்காக, வாஷிங்டன், ஈரானிய மற்றும் ரஷ்ய செல்வாக்கைப் பின்னுக்கு இழுக்கத் தீர்மானமாக உள்ளது.

இஸ்ரேல் மற்றும் சுன்னி வளைகுடா முடியாட்சிகளுடன், அனைத்திற்கும் மேலாக சவூதி அரேபியாவுடன் ஒரு கூட்டணி ஏற்படுத்துவதை வாஷிங்டனின் மூலோபாயம் உள்ளடக்கி உள்ளது.

ட்ரம்பின் நகர்வு பென்ஜமின் நெத்தன்யாஹூவின் அதிவலது இஸ்ரேலிய ஆட்சிக்கு போராட்டங்களை ஒடுக்குவதற்கும் மற்றும் மேற்கு படுகையில் அதன் விரிவாக்கவாத குடியமர்வு கொள்கையைத் தொடர்வதற்கும் மட்டுமல்ல, மாறாக அதன் அப்பிராந்திய எதிரிகளான லெபனானின் ஹெஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆட்சியுடன் அதன் மோதலைத் தீவிரப்படுத்துவதற்கும் வரம்பில்லா அதிகாரங்களை வழங்குகிறது. செப்டம்பரில், இஸ்ரேலிய ஆயுதப்படைகள், ஹெஸ்புல்லா படையெடுப்புக்கு எதிராக இஸ்ரேலைப் பாதுகாக்கும் ஒத்திகை மேற்கொண்டு, 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அவற்றின் மிகப்பெரிய போர் பயிற்சிகளை நடத்தின. டெல் அவெவ் ஈரானிய விரிவாக்கத்தைத் தடுக்கும் நோக்கில் சிரியாவில் உள்ள இலக்குகளையும் ஆயுத நகர்வுகளையும் வழமையாக தாக்கி உள்ளதுடன், ஈரானிய-சார்பு படைகள் இஸ்ரேலிய எல்லைகளுக்கு நெருக்கத்தில் தங்களை ஸ்தாபித்தால் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கவும் சூளுரைத்துள்ளது.

லெபனானில் ஸ்திரமின்மை ஏற்படுத்தும் ரியாத்தின் பிரச்சாரத்தை ஆமோதிருப்பது உட்பட, இஸ்ரேல் சவூதி அரேபியாவின் ஈரான்-விரோத கடுமையான நிலைப்பாட்டையும் ஊக்குவிக்கிறது. சவூதி முடியாட்சி பாலஸ்தீனர்களின் தலைவிதி குறித்து கவலை கொள்ளவில்லை, மாறாக இஸ்ரேல் ஆதரவுடனும் ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆசிர்வாதத்துடனும் தெஹ்ரானை எதிர்கொள்வது குறித்து கவலை கொண்டுள்ளது.

ட்ரம்பின் கொள்கை மாற்றம் ஏற்கனவே நிலவும் அப்பிராந்தியத்தின் பதட்டங்களை கொதிநிலைக்குக் கொண்டு வந்துள்ளது. ஹெஸ்புல்லா மற்றும் காசாவை மையமாக கொண்ட ஹமாஸ் இரண்டுமே மூன்றாவது பாலஸ்தீன எழுச்சியை (intifada) தொடங்குமாறு பாலஸ்தீனர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளன.

பாஸ்தீன ஆணையத்தின் (PA) தலைவர் மஹ்மத் அப்பாஸ் அம்முடிவை "வருந்தத்தக்கதாக" கண்டித்தார், மற்றும் பாலஸ்தீன ஆணையத்தின் ஒரு மூத்த அதிகாரியான ஜிப்ரில் ரஜோப் குறிப்பிடுகையில் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இம்மாத இறுதியில் திட்டமிட்டுள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கான விஜயத்தின் போது அவர் பாலஸ்தீன பகுதியில் வரவேற்கப்பட மாட்டார் என்று தெரிவித்தார். பென்ஸ் உடன் திட்டமிடப்பட்டிருந்த ஒரு சந்திப்பு இரத்து செய்யப்படும் என்பதையும் ரஜோப் சேர்த்துக் கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர் குறிப்பிடுகையில், ட்ரம்பின் அறிவிப்பால் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான சமாதான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா எந்தவொரு தலைமை பாத்திரம் வகிப்பதற்கும் தகுதி இழக்கிறது என்று அறிவித்தார்.

உண்மையில், பாலஸ்தீன ஆணையமும் சரி ஹமாஸ் தலைமையும் சரி இரண்டுமே பாலஸ்தீன மற்றும் அரபு மக்களின் பார்வையில் அதிகரித்தளவில் மதிப்பிழந்துள்ளன. அப்பாஸூம் பாலஸ்தீன ஆணையமும், பெரிதும் சிஐஏ இல் இருந்து கிடைக்கும் நன்கொடைகளில் உயிர்வாழும் ஒரு செல்வந்த உயரடுக்கைப் பிரதிநிதித்துவம் செய்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கான ஒரு பாதுகாப்பு சக்தியாக சேவையாற்றுகின்றனர். பல்வேறு வல்லரசுக்களுக்கு இடையே தந்திரமாக செயல்பட்டு, மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய மற்றும் யூதவாத மேலாதிக்கம் கொண்ட கட்டமைப்பிற்குள் ஒரு பாலஸ்தீன அரசை உருவாக்குவதற்கு அழுத்தமளிக்கலாம் என்ற அவர்களின் ஒட்டுமொத்த முன்னோக்கும், திவாலாக அம்பலமாகி உள்ளது.

ஜெருசலேம் குறித்து விவாதிக்க டிசம்பர் 13 இல் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பினது ஒரு அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தயிப் எர்டோகன், இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ட்ரம்பின் உரை "நெருப்பு வலையத்திற்குள்" மூழ்கடித்துள்ளதாக எச்சரித்தார். ஆனால் துருக்கி உட்பட அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து முதலாளித்துவ ஆட்சிகளுமே பல தசாப்தங்களாக பாலஸ்தீனர்களை ஒடுக்ககுவதற்கு உடந்தையாய் இருந்துள்ளன.

“சமாதான நடைமுறை" மற்றும் "இரு-அரசு தீர்வு" எனப்படும் மோசடியை ட்ரம்ப் திடீரென கைவிட்டிருப்பது, அடிப்படையிலேயே முதலாளித்துவ தேசியவாதத்தின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை எடுத்துக்காட்டுவதுடன், ஒரு சோசலிச மத்திய கிழக்கிற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் அரபு மற்றும் யூத தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சோசலிச சர்வதேசவாத மாற்றீட்டுக்கான அவசியத்தை முன்நிறுத்துகிறது.

ட்ரம்பின் கொள்கை மாற்றம், வாஷிங்டனுக்கும் அதன் பெயரளவுக்கான ஐரோப்பிய கூட்டாளிகளுக்கும் இடையிலான விரிசலையும் தீவிரப்படுத்துகிறது. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி அனைத்தும் ட்ரம்பின் அறிக்கையைக் கண்டித்தன. வெள்ளை மாளிகை அறிக்கையை நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்துக் கொண்ட அமெரிக்காவின் ஒரேயொரு நெருக்கமான கூட்டாளி கனடா மட்டுந்தான்.

வெள்ளியன்று ஒரு அவசர அமர்வுக்கு அழைப்புவிடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆறு ஏனைய அங்கத்தவர்களுக்கு பிரிட்டனும் பிரான்ஸூம் தலைமை கொடுத்தன. ஆச்சரியத்திற்கு இடமின்றி, அக்கூட்டத்திற்கு கோரிய எட்டு நாடுகளில் அமெரிக்கா இடம் பெறவில்லை.

பாதுகாப்பு அவையில், அமெரிக்க தூதர் நிக்கி ஹேலே ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடு மீதான எந்தவொரு விமர்சனத்தையும் பிடிவாதமாக நிராகரித்தார், அதற்கு பதிலாக அவர் ஐ.நா. ஒருதலைபட்சமாக இஸ்ரேல்-விரோதமாக இருப்பதாக கூறி அதை தாக்குவதை நோக்கி திரும்பி இருந்தார். இரு-அரசு தீர்வுக்கு இருதரப்பும் ஒப்புக் கொள்கின்றன என்றால் வாஷிங்டன் இப்போதும் அதை ஏற்றுக் கொள்ளுமென அப்பெண்மணி வாதிட்டார்.

பாஸ்தீன மக்களை ஒடுக்குவதில் ட்ரம்பை விட ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அதிக அக்கறை செலுத்துகின்றன. அவை வாஷிங்டனை விலையாக கொடுத்து மத்திய கிழக்கில் அவற்றின் செல்வாக்கை பலப்படுத்திக் கொள்ள தற்போதைய இந்த நெருக்கடியை ஒரு சந்தர்ப்பமாக பார்க்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் பெடிரிகா மொஹிரினி, வியாழனன்று, அமெரிக்காவின் அணுகுமுறை "நம்மை முன்பினும் இருண்ட காலங்களுக்கு பின்னோக்கி தள்ளும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது" என்றும், “ஜெருசலேமில் என்ன நடக்கிறதோ அது அப்பிராந்தியம் முழுவதையும் மற்றும் ஒட்டுமொத்த உலகையும் கவலை கொள்ள செய்கிறது" என்றும் அறிவித்த போது, பேர்லின் மற்றும் பாரீசில் நிலவும் சிந்தனைகளைத் தொகுத்தளித்தார். ட்ரம்பின் அறிவிப்பால் சமாதான நடைமுறையில் வாஷிங்டன் வகித்த பாத்திரம் நலிந்து விட்டதாக அப்பெண்மணி தெரிவித்தார்—அதாவது ஐரோப்பிய ஒன்றியம் அப்பிராந்தியத்தில் ஒருமுனைப்பட்டு, இன்னும் ஆக்கபூர்வமாக பாத்திரம் வகிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன், வாஷிங்டன் மத்திய கிழக்கில் ஒரு மத்தியஸ்தராக இருந்து வருவதில் இருந்து தன்னைத்தானே விலக்கிக் கொண்டு விட்டது என்றார்.

ஜேர்மனியின் Süddeutsche Zeitung கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகையில், வட கொரியா மீதான ட்ரம்பின் ஆத்திரமூட்டல்கள் போல் இல்லாமல், மத்திய கிழக்கில் ஐரோப்பிய ஒன்றியம் "நேரடியாக அழைக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டது. அது தொடர்ந்து குறிப்பிட்டது: “புவியியல்ரீதியில் அருகில் இருப்பதாலும், வரலாற்று, அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் இருப்பதாலும், [ஐரோப்பிய ஒன்றியத்திற்கு] ஒரு பொறுப்பு இருப்பதாக அது காண்கிறது, இதற்காக நிச்சயமாக அது கடந்த காலத்தில் நீதி வழங்க முடியாதிருந்தது.”

இந்த கருத்துக்கள் ஜேர்மன் வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியேலின் வெளியுறவு கொள்கை உரையின் முக்கிய குறிப்புகளின் அடியொற்றி வருகின்றன. ஜேர்மன் அமெரிக்காவிற்கு எதிராக இன்னும் பலமாக எதிர்த்து நிற்க வேண்டும் மற்றும் அதன் சொந்த வெளியுறவு கொள்கை அபிலாஷைகளை வரையறுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி இருந்தார்.

ஜெருசலேம் மீது ஆழமடைந்து வரும் நெருக்கடி ஒரு பிராந்திய மோதலின் அச்சுறுத்தலை மட்டுமல்ல, மாறாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் இரண்டுமே அவற்றின் செல்வாக்கைப் பலப்படுத்த முனைகின்ற நிலையில், மத்திய கிழக்கு எங்கிலும் வல்லரசு போட்டியாளர்களின் தீவிரப்பாட்டுக்கு ஒரு தூண்டுபொருளாக சேவையாற்ற கூடும் என்பதையே ஐரோப்பிய விடையிறுப்பு எடுத்துக்காட்டுகிறது.