ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

மாருதி சுசுகி மோட்டார் வாகன தொழிலாளர்களை விடுதலை செய்!

ICFI இன் இந்திய ஆதரவாளர்கள் ஸ்ரீபெரும்புதூரில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளனர்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் மாருதி சுசுகி தொழிலாளர்களை சிறைத்தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நடத்திவரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 10 அன்று, சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு பன்னாட்டு மோட்டார் வாகன மற்றும் எலெக்ரானிக் மையமான ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளார்கள். மாருதி சுசுகியின் ஜோடிப்பு வழக்கிற்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் ஏப்ரல் மாதத்தில், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஒரு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

வட இந்திய மாநிலமான ஹரியானாவிலுள்ள குர்கானுக்கு அருகே உள்ள மனேசரில் இருக்கும் மாருதி சுசுகி கார் தயாரிப்பு ஆலையில் பணியாற்றிய 13 தொழிலாளர்கள், போலியான கொலை குற்றச்சாட்டுகளின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

அதே ஆலையைச் சேர்ந்த மற்ற 18 தொழிலாளர்கள் சற்றுக் குறைந்த குற்றச்சாட்டுகளுக்காக மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் முழு ஒத்துழைப்புடன், நிறுவனமும் இந்திய காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் கூட்டாக நடத்திய ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கின் விளைவாகத்தான் 31 தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆலையிலுள்ள கொத்தடிமை உழைப்பு நிலைமைகளை எதிர்த்து வேலைநிறுத்தம், ஆலைஆக்கிரமிப்புக்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட பல தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டதால் தான் மானேசர் தொழிலாளர்கள் மேல் குறி வைக்கப்பட்டது.

ஜூலை 18, 2012 அன்று நிர்வாகத்தின் தூண்டுதலால் ஏற்பட்ட கைகலப்பை, தங்களது வேட்டையாடலைத் தொடங்க மாருதி சுசுகியும் மற்றும் போலீசாரும் சேர்ந்து பயன்படுத்திக் கொண்டனர், அச்சம்பவம் தீவைத்தல் மற்றும் மனித வள மேலாளரான அவானிஸ் குமார் தேவின் இறப்பில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து, 148 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு பல போலி குற்றச்சாட்டுக்களுக்காக வழக்கு விசாரணை செய்யப்பட்டனர். இதில் கொலை, தீவைத்தல் நிறுவன அதிகாரிகளின்மேல் தாக்குதல் மற்றும் ஆலைக்கு சேதம் விளைவித்தல் ஆகியவை அடங்கும். கடந்த மார்ச்மாதம் 31 தொழிலாளர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் உயரடுக்கு, தொழிலாளர்களை அச்சுறுத்தி, இந்தியா முழுவதும் மலிவு உழைப்பு நிலைமைகளை பராமரிப்பதற்கான அதன் அர்ப்பணிப்பு பற்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவான சமிக்ஞைகளை வழங்குவதற்காக மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கை தொடுத்து சிறையிலடைப்பதை பயன்படுத்த முயற்சிக்கின்றது.

மாருதி சுசுகி தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரச்சார இயக்கம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் பலத்தை அணிதிரட்டுவதையும் அனைத்து ஜோடிக்கப்பட்ட தொழிலாளர்களின் விடுதலையை உறுதி செய்வதையும் இலக்காக கொண்டது. இந்தியாவிலும், தெற்காசியாவிலும், சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் ஜோடிக்கப்பட்ட தண்டனையை தோற்கடிக்கவும் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து மாருதி சுசுகி தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரும் போராட்டத்தில் இணையுமாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அறைகூவல் விடுக்கின்றது.

ஸ்ரீபெரும்புதூர் கூட்டம் இந்த பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையும், அதற்கு அடிப்படையாக இருக்கும் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை பற்றியும் விவாதிக்கும். இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் ஆகியோரை நாங்கள் அழைக்கிறோம்.

கூட்ட உரைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்படும். இந்த உரைகளின் சுருக்கம் ஹிந்தி மொழியிலும் கிடைக்கும்.

தேதி மற்றும் நேரம்: ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 10, காலை 10 மணி.

இடம்: கல்யாண மண்டபம், தான்தோன்றி அம்மன் கோயில், ஸ்ரீபெரும்புதூர்.

(ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில்)