ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ආන්ඩුව දුම්රිය සේවක වර්ජනය කැඞීමට අත්‍යාවශ්‍ය සේවා නියෝග පනවයි

இலங்கை அரசாங்கம் புகையிரத தொழிலாளர் வேலை நிறுத்தத்தை தகர்ப்பதற்கு அத்தியாவசிய சேவை கட்டளையை பிறப்பித்துள்ளது

By W.A. Sunil 
9 December 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று நள்ளிரவில் இருந்து புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து, புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பயணச் சீட்டு பரிசோதகர்களும் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்தார். வேலை நிறுத்தம் செய்வதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை அபகரித்துக்கொண்டு அத்தியாவசிய சேவைகள் கட்டளையை அறிவித்த ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, திணைக்கள மட்டத்தில் வேலை நிறுத்தக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த கொடூரமான கட்டளையும், வேலைநிறுத்தக்காரர்களை தொழிலுக்குத் திரும்புமாறு கடைசி அறிவித்தலை விடுப்பதும் மற்றும் அதை மீறுபவர்களை வேலை நீக்கம் செய்வதையும் உள்ளடக்கியுள்ளது. ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கமும் அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்க்க வேண்டிருப்பதோடு, வேலைநிறுத்தக்காரர்களை பாதுகாப்பதற்கு முன் வர வேண்டும்.

சுமார் ஐயாயிரம் தொழிலாளர்கள் பங்குபற்றும் இந்த வேலை நிறுத்தம் சம்பந்தமாக அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. இந்த வேலை நிறுத்தமானது சமூக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் வெட்டப்படுகின்ற காரணத்தினால் ஆத்திரமடைந்துள்ள ஏனைய தொழிலாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதையிட்டு அது பீதியடைந்துள்ளது. தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் தாக்குதலை பற்றி இதுவரை எதுவும் கூறவில்லை. ஊழியர்களை தரத்தின் அடிப்படையில் வேறு வேறாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த சங்கங்களின் தலைவர்கள், அரசாங்கத்துடன் ஒரு சமரசத்துக்கு போகும் முயற்சியிலேயே நேற்று மாலை வரை ஈடுபட்டிருந்தனர்.

புகையிரத சாரதிகள் புதன் கிழமை இரவில் இருந்து வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர். வியாழக் கிழமை நள்ளிரவில் இருந்து புகையிரத நிலை அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மேற்பார்வாயாளர்களும் வேறு வேறாக வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக் கிழமை நண்பகலில் இருந்து, புகையிரத பயணச் சீட்டு பரிசோதகர்களும் வேலை நிறுத்ததில் இணைந்துகொண்டனர்.

முறையான விதிமுறைக்கு வெளியில் சாரதிகளின் ஊதியத்திற்கு சமாந்தரமான ஊதியத்துடன் சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்வதன் காரணமாக ஏற்படுகின்ற சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு புகையிரத சாரதிகள் சங்கம் கோருகின்றது. தமது தரத்தில் உயர் மட்டம் ஒன்றை உருவாக்குமாறு சங்கம் கோரியுள்ளது. அரசாங்கம் வாக்குறுதி கொடுத்த சம்பள அதிகரிப்பை உடனடியாக கொடுக்குமாறும், சம்பள முரண்பாட்டை அகற்றுமாறும் புகையிரத நிலைய அதிபர்கள் உட்பட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய தரத்தில் உள்ள ஊழியர்களும் கோருகின்றனர்.

சாரதிகள் 400 பேரும் ஏனைய தரங்களைச் சேர்ந்த ஊழியர்களுமாக 5,000 பேர் அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதனால் புகையிரத போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சாரதிகளின் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், புதன் கிழமை நள்ளிரவில் இருந்து, வியாழக் கிழமை மாலை 6 மணி வரை, செல்ல வேண்டிய 340 என்ற பயண எண்ணிக்கையில் 63 மாத்திரமே இடம்பெற்றுள்ளது. அதேபோல், வியாழக் கிழமை இரவு முதல் தலைநகர் கொழும்பில் இருந்து புறப்படும் மற்றும் கொழும்புக்கு வந்து சேரும் தபால்களை கொண்டு வரும் புகையிரதங்கள் 12 இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

நேற்று மாலை ஜனாதிபதி செயலாளருடன் சாரதிகள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறியதால் பேச்சுவார்த்தை முறிந்து போனது.

புகையிரத கட்டளைச் சட்டம் மற்றும் புகையிரத ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் அரச நிர்வாக சுற்றுநிரூபத்தின் அறிவுறுத்தல்களை மீறி, நிர்வாகிகளால் சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ளும் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் குற்றம் சாட்டுகின்றது. சாரதிகள் சங்கம் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் குறித்த கோரிக்கையின் படி வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்திய அதேவேளை, அக்டோபர் மாதம் 11ம் திகதி வேலை நிறுத்தம் ஒன்றை ஆரம்பித்தது. ஆயினும், சிக்கலைத் தீர்ப்பதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டது.

புதிய ஆட்சேர்பு ஒழுங்கு விதிகளின் கீழ், புகையிரத திணைக்களத்தின் அனுபவம் கொண்ட ஊழியர்களை சாரதி உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை நூற்றுக்கு 30 சதவீதத்தால் வெட்டப்பட்டது. கல்விப் பொதுத் தராதரம் சித்தியடைந்த தொழில்நுட்ப உயர்நிலை பட்டம் பெற்றவர்களே இந்த நூற்றுக்கு முப்பது வீதமானோராக இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.

இதற்கிடையில் வேலை நிறுத்தம், சாரதிகள் சங்கத்தின் தலைவர்களின் “அரசியல் தேவையின் பேரில் செய்யப்படும் சட்ட விரோத” நடவடிக்கை என, வியாழக் கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சாரதி உதவியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயாலளர் தனுஷ்க பெரேரே குற்றம் சாட்டினார். அவர், சாரதிகள் சங்கம் அரசாங்கத்தின் கைத் தேங்காயாக செயற்படுகின்றது என சுட்டிக் காட்டினார்.

புகையிரத சேவையை “அத்தியாவசிய” சேவையாக அறிவித்து, வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத தொழில்நுட்பட மற்றும் இயக்குனர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரசேன பண்டார அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். அரசாங்கத்தின் கொடூரமான ஒடுக்குமுறை சட்டங்களை அமுல்படுத்துவதற்கு சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த சங்கங்களே ஆகும்.

அரசாங்கம் வாக்குறுதி கொடுத்தவாறு குறித்த தரங்களைச் சேர்ந்தவர்களுக்கான சம்பளத்தை, எம்.டி. 1 மற்றும் எம்.டி 2 என்ற சம்பள மட்டத்தில் ஸ்தாபிக்குமாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய சங்கங்கள் கோருகின்றன. பிரதமரும் போக்குவரத்து அமைச்சரும் இது சம்பந்தமாக ஒரு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைத்திருந்தாலும், அமைச்சரவை அதை அங்கீகரிக்க தாமதிக்கின்றது என சங்கத்தின் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையிலேயே அமைச்சரவை கூடுகின்றது. அவர்களின் தலைமையிலே தீர்மானங்களும் எடுக்கப்படுகின்றன. குறித்த அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்படுமானால் அல்லது தாமதிக்கப்படுமானால், அது அவர்களது அனுமதியின்றி இடம்பெற முடியாது. யதார்த்தம் என்னவெனில், அரச சேவை சம்பளத்தை வெட்டுதல் மற்றும் ஏனைய அரச செலவுகளை வெட்டுவது உட்பட சர்வதேச நாணய நிதியத்தால் திணிக்கப்பட்டுள்ள கட்டளைகளின் அடிப்படையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது. தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகளின் படி அரசாங்கம் செயற்படவில்லை.

புகையிரத ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அத்தகைய ஊதிய அதிகரிப்பு, அரச சேவையின் ஏனைய தொழிலாளர்களதும் சம்பள உயர்வு கோரிக்கைக்கான போராட்டத்தை ஊக்குவிக்கும் என்பதை அரசாங்கம் நன்கு அறியும். அரசாங்கம், தேசிய மற்றும் வெளிநாட்டுக் கடனில் மூழ்கிப் போயுள்ளது. எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அரசாங்கம் 7,000 பில்லியன் ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என வரவு-செலவு விவாதத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரத அறிவித்தார். அதன் காரணமாக அரசாங்கம் சம்பளத்தை அதிகரிப்பதில் அன்றி, சம்பளத்தை வெட்டுவதிலேயே அக்கறை காட்டுகின்றது. அதேபோல் புகையிரத திணைக்களம் உட்பட அரச ஸ்தாபனங்களை மறுசீரமைக்கவும் தனியார்மயமாக்கவும் அக்கறை காட்டுகின்றது.

புகையிரத திணைக்களம் 2014 மற்றும் 2015ல் எதிர்கொண்ட நஷ்டம் முறையே 11 மற்றும் 7.7 பில்லியன் ரூபாய்கள் என குறிப்பிடப்படுகின்றது. கட்டண அதிகரிப்பு, ஊழியர்கள் குறைப்பு மற்றும் நலன்புரி சேவைகள் குறைப்பு மற்றும் சேவை நிலைமைகள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலமே அரசாங்கம் நட்டத்தை சமாளிக்க முயற்சிக்கின்றது.

தனியார்மயமாக்கத்தின் ஆரம்ப நடவடிக்கையாக, புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றும் மசோதா ஒன்று 1993ல் நிறைவேற்றப்பட்டது. ஆட்சிக்கு வந்த அரசாங்களுக்கு ஊழியர்களின் எதிர்ப்பின் காரணமாக இந்த திட்டத்தை கைவிட நேர்ந்த போதிலும், அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பதையும் தனியார்மயமாக்குவதையும் துதிரதப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ளது. இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில், இந்த தனியார்மயமாக்கல் திட்டமே, பெயரளவிலான அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் உருவாக்கும் திட்டமாக பிரேரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வாழ்க்கை நிலைமைகளை நசுக்கிவருகின்ற நிலைமையின் கீழ், சகல தொழிலாள பகுதியினருக்கும் சம்பளத்தை அதிகரித்துக்கொள்ளவதற்காக இருக்கும் விருப்பத்தையே, படிநிலைவாத அடிப்படையில் பிளவுபடுத்தும் சம்பள கோரிக்கைகள் மூலம் தொழிற்சங்கங்களால் திசைதிருப்பி விடப்பட்டுள்ளன. தொழிலாளர்களை படிநிலைவாத பிளவுகளுக்குள் தள்ளிவிடுவதன் மூலம், வாழ்க்கை நிலைமைகள் மீது தாக்குதல் தொடுக்கவும் தனியார்மயமாக்கல் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதையே தொழிற்சங்கங்கள் உண்மையில் செய்கின்றன.

புகையிரத தொழிலாளர்களைப் போலவே, ஒட்டு மொத்த அரசாங்க ஊழியர்களும் இந்த பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர். வேலை நிலைமகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் காரணமாக, தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினர் மத்தியிலும் புகையிரத ஊழியர்கள் மத்தியிலும் கொந்தளிப்பான அமைதியின்மை நிலவுகின்றது. குறுங்குழுவாத மற்றும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பயனற்ற எதிர்ப்புகளுக்குள் புகையிரத ஊழியர்களை சிறைவைத்து, அரசாங்கத்தின் தாக்குதல்கள் சம்பந்தமாக தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் சீற்றத்தையும் அமைதியின்மையையும் தணிப்பதற்கே தொழிற்சங்கங்கள் முயற்சிக்கின்றன. புகையிர ஊழியர்களும் ஏனைய தொழிலாளர்களும், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, சோசலிச கொள்கையின் அடிப்படையிலான ஒரு பொதுவான அரசியல் போராட்டத்தில் இணைய வேண்டும்.