ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ජවිපෙ -පෙසප “ඉල්මහ විරු සැමරුම” සහ 1987-89 භීෂනය

ஜே.வி.பி.–மு.சோ.க. கார்த்திகை வீரர்கள் கொண்டாட்டமும் 87-89 பயங்கரமும்

By W.A. Sunil
26 November 2017

கொழும்பு விகாரமாதேவி திறந்த வெளியரங்கில் நவம்பர் 13 நடத்திய கூட்டத்தில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுச் செயாலஙளர் டில்வின் சில்வா பின்வருமாறு கூறினார்: “87, 88, 89 காலத்தில் எமது நாட்டில் சுதந்திரத்துக்காக, மக்களின் விடுதலைக்காக மற்றும் சோசலிசத்துக்காக எமது தோழர்கள் நடத்திய போராட்டம் தற்காலிக தோல்வியைக் கண்டிருந்தாலும், அந்தப் போராட்டம் இந்த தாயகத்தில் சோசலிச சமூகம் ஒன்றை அமைப்பதில் வெற்றி பெறும்.

அம்பலங்கொட கரந்தெனியவில் முன்னிலை சோசலிசக் கட்சி நடத்திய கூட்டத்தில், கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் அதையே மீண்டும் உச்சரித்து குறிப்பிட்டதாவது: “1971 ஆயுதக் கிளர்ச்சியும் 87-89 எழுச்சியும் சோசலிசத்தை இலக்காக்க போரட்டங்களாகும்.”

இந்த கருத்தானது உண்மையை மூடி மறைப்பதற்கான திட்டமிட்ட முயற்சியாகும். 1971 அல்லது 1987-89ம் ஆண்டுகளில் ஜே.வி.பி. முன்னெடுத்த ஆயுத இயக்கம் எந்த வகையிலும் சோசலிசத்துக்கான போராட்டம் அல்ல. 1971ல் ஜே.வி.பி.யின் எழுச்சியானது ஒரு குட்டிமுதலாளித்துவ கிளர்ச்சியாகும். 1987-89ல் நடத்திய ஆயுதக் கிளர்ச்சி, தமிழர்-விரோத இனவாதத்தை கிளறிவிட்டு, தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் வளர்ச்சி கண்ட கொந்தளிப்பை அதற்கு அடிபணியச் செய்வதற்காக பாசிச விதிமுறைகளைப் பயன்படுத்தி முன்னெடுத்த ஒரு பயங்கரமாகும்.

ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) சுய விமர்சனம் செய்துகொள்வதிலும் அவற்றை மீண்டும் விழுங்கிக்கொள்வதிலும் திறமைப்படைத்தவையாகும். 2015 பொதுத் தேர்தலுக்காக ஜே.வி.பி. முன்வைத்த விஞ்ஞாபனத்தை பெரும் வர்த்தகர்களுக்கு முன்வைத்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, 1971 மற்றும் 1987-89 கிளர்ச்சிகள் பற்றி கூறியதாவது: “கட்சி ஒன்றினால் செய்யக் கூடாத சில நடவடிக்கைகளை நாம் செய்தோம். அவற்றைப் பற்றி நாம் கவலையடைகின்றோம். நாம் மீண்டும் ஆயுதங்களைத் தூக்கிப் போராட மாட்டோம். எமது போராட்டம் கருத்தியல்வாதமானதாக இருக்கும்.” அன்று சோசலிசத்துக்காகப் போராடியாதாக இப்போது கருத்துக்களை உளறும் ஜே.வி.பி. தலைவர்களே இப்போது இவ்வாறு கூறுகின்றனர்.

எண்பதுகளின் தசாப்தத்தில் நடுப் பகுதியில், இலங்கையில் முதலாளித்துவ வர்க்கம், ஒரு பக்கம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிக்கிக் கொண்டிருந் அதேவேளை, மறுபக்கம் ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு முகம்கொடுத்திருந்தது.

புது டில்லி அரசாங்கம், 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக ஜயவர்தனவை உந்தித் தள்ளி, ஒரு இலட்சம் “அமைதி காக்கும் படையை” தீவின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு அனுப்பியது. கொழும்பு அரசாங்கம் ஆட்டம் காணுவதை தடுப்பதற்கும் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் போரினால் ஏற்பட்ட எதிர்ப்பை தணிப்பதற்குமே இதைச் செய்தது. ஒப்பந்தத்தில் தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களுக்கு சில வரப்பிரசாதங்களைக் கொடுத்து இந்த திட்டத்திற்கு அவர்களை வளைத்துப் போட்டுக்கொள்ளவும் விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்கவும் இந்திய அரசாங்கத்திற்கு அவசியப்பட்டது. ஜயவர்தன, வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் இருந்து அழைத்த இராணுவத்தை தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டார். அவ்வாறு கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான அரச பயங்கரத்திற்கும் ஜே.வி.பி.யினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதபாணி பயங்கர இயக்கத்துக்கும் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் முகங்கொடுத்தனர்.

இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மூலம் பிரேரிக்கப்பட்ட மாகாண சபைகள் ஊடாக நாட்டைப் பிரிப்பதாக குற்றம்சாட்டிக்கொண்டு தமிழர்-விரோத இனவதத்தை கிளறிவிடும் ஒரு வலதுசாரி இயக்கமாகவே தேசப்பற்று மக்கள் இயக்கம் என அழைக்கப்பட்ட ஜே.வி.பி.யின் ஆயுத இயக்கம் தலைதூக்கியது. ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஆர். பிரதமதாச கும்பலினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) இனவாத மக்கள் ஐக்கிய முன்னணியினதும் மற்றும் சிங்கள-பௌத்த அடிப்படைவாதிகளினதும் அணுசரனை அதற்கு கிடைத்திருந்தது.

சில அறிக்கைகளின் படி, ஜே.வி.பி. துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 7,000 ஆகும். அதில் பெரும்பான்மையானவர்கள் ஜே.வி.பி.யின் அரசியல் எதிரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுமாவர். சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) மூன்று உறுப்பினர்களும் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டனர்.

1988ல் ஜனாதிபதியான ஐ.தே.க. தலைவர் ரணசிங்க பிரேமதாச, முதலில் ஜே.வி.பி. தலைவர் ரோஹன விஜேவிரவுடன் இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தி ஒரு சமரசத்திற்கு தள்ளுவதற்கு முயற்சித்தார். ஆயினும், ஆளும் பகுதியினரதும் இராணுவத் தலைவர்களதும் எதிர்ப்பின் மத்தியில் மீண்டும் மறுபக்கம் திரும்பிய பிரேமதாச அரசாங்கம், விஜேவிர உட்பட கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையினரையும், கிளர்ச்சியடைந்திருந்த இளைஞர்கள் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் சுமார் 60,000 பேரை படுகொலை செய்த பயங்கரத்திற்கு இராணுவத்தை கட்டவிழ்த்துவிட்டது.

அரச அடக்குமுறைக்கும் ஜே.வி.பி.யின் பயங்கரவாத இயக்கத்துக்கும் மற்றும் புலிகளின் பிரிவினைவாதத்துக்கும் எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஒன்றிணைப்பதற்காக உறுதியான போராட்டத்தில் ஈடுபட்ட பு.க.க., 1989ல் வீஜேவீர உட்பட ஜே.வி.பி. தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களை நசுக்கித் தள்ளிய அரச அடக்குமுறைக்கு எதிராக கொள்கைப் பிடிப்பான போராட்டத்தையும் முன்னெடுத்தது.

தனது தலைவரான ரோஹன விஜே விர உட்பட தலைமைத்துவத்தின் மற்றும் அங்கத்தவர்களில் பெரும்பான்மையினரை படுகொலை செய்த முதலாளித்துவ ஆளும் வர்க்கம் மற்றும் இராணுவத்துடன் ஜே.வி.பி. சினேகபூர்வமாக உறவுகொண்டாடுகின்றது. 1987-89 படுகொலைகளைக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவர் எவராக இருந்தாலும், அவர்களுடன் எந்தவொரு தனிப்பட்ட “மனக்கசப்பும்” இல்லை என ஜே.வி.பி. அரசியல் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த கூறினார். முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்துடன் ஜே.வி.பி. எந்தளவுக்கு பிணைந்துள்ளது என்பதை இந்த கொடூரமான கருத்து வெளிப்படுத்துகின்றது.

அது மட்டுமன்றி, மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 2006ல் யுத்தம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இராணுவப் புலனாய்வுத் துறையுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்ட ஜே.வி.பி., இராணுவத்திற்கு பங்கர் வெட்டுவதற்காக அதன் அங்கத்தவர்களை பயன்படுத்தியது.

சோசலிசம் என்ற சுலோகத்தை அடிக்கடி கூறி, ஜே.வி.பி. தன்னை சிவப்பு போர்வையால் போர்த்திக்கொள்கின்றது. ஆயினும் அதன் ஆரம்பமே ஸ்ராலினிசம், மாவோவாதம் மற்றும் குவேரவாதத்தையும் சிங்கள பேரினவாதத்துடன் கலந்தெடுத்த ஒரு போக்கையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1971 கிளர்ச்சிக்காக சிறைசென்று 1978ல் விடுதலை பெற்ற பின்னர் செய்துகொண்ட சுய விமர்சனம் என அழைக்கப்பட்டதில், “மென்ஷிவிக் கர்ப்பத்தில் இருந்தே” ஜே.வி.பி. பிறந்தது என விஜே வீர சுட்டிக்காட்டியிருந்தார். மென்ஷிவிக்வாதம் என்பது, லெனினுடைய போல்ஷிவிக் கட்சியால் அபிவிருத்தி செய்யப்பட்ட சர்வதேசியவாத சோசலிச முன்நோக்கிற்கு எதிரான இரண்டு கட்ட புரட்சி என்ற பிற்போக்கு தேசியவாத முன்னோக்கை முன்வைத்த ரஷ்யாவின் சந்தர்ப்பவாத அரசியல் குழுவே ஆகும்.

உற்பத்தியின் பூகோளமயமாக்கலினால் ஸ்ராலினிச வேலைத் திட்டத்தின் பொறிவு, தேசியவாதத்தின் திவால் மற்றும் சீரழிவுகளின் மத்தியில் ஜே.வி.பி. மேலும் மேலும் வலது பக்கம் நகர்ந்தது.

கடந்த இரு தசாப்தங்களில் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐ.தே.க அரசாங்கங்களை ஆட்சிக்கு கொண்டுவர ஜே.வி.பி. நேரடியாக அல்லது சுற்றிவளைத்து ஒத்துழைப்பு கொடுத்தது. இலங்கை முதலாளித்துவ வர்க்க ஆட்சி எதிர்கொண்ட மிகப் பாரதூரமான அரசியல் ஸ்திரமற்ற நிலைமையில் இருந்து அதைக் காப்பாற்றுவதற்காகவும், இனவாத யுத்தத்துக்கும் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்காகவும் அதன் கைகளை வலுப்படுத்துவதிலும் ஜே.வி.பி. இடைவிடாமல் உதவி வந்துள்ளது.

1993ல் ஐ.தே.க. அரசாங்கத்தை தகர்த்து, தீவிரமடைந்து வந்த இலங்கை அரசியல் நெருக்கடியின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற இளைஞர்களையும் அரசியல் ரீதியில் திசைதிருப்பி விடுவதற்காக, ஜே.வி.பி.யை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள ​​அப்போதைய ஜனாதிபதி டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிகா குமாரதுங்க உட்பட ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி தீர்மானித்தது. ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணியில் 1994 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி., அதே ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்ற பொய்யான வாக்குறுதியின் அடிப்படையில் குமாரதுங்கவுடன் ஒரு போட்டியிடாமை உடன்படிக்கை ஒன்றை செய்துகொண்டது.

2001ல் குமாரதுங்க உடன் தகுதிகாண் அரசாங்கம் ஒன்றில் நுழைந்த ஜே.வி.பி., 2004ல் ஸ்ரீ.ல.சு.க. உடன் கூட்டணி சேர்ந்து, அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு.) அரசாங்கத்தில் தொங்கிக்கொண்டு அதில் மூன்று அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றது.

2004 டிசம்பரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கொடுப்பதற்கு எதிராக குமாரதுங்க அரசாங்கத்தில் இருந்து வெளியேறி ஜே.வி.பி., 2005ல் இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவர ஒத்துழைத்ததோடு இனவாத போருக்கு அறைகூவல் விடுத்தது.

ஜே.வி.பி.யின் இந்த இழிவான சரித்திரத்தை டில்வின் சில்வா கூட்டத்தில் பின்வருமாறு சமாளித்தார்: "நாட்டைப் பிரிப்பதைத் தடுப்பதற்கே ஒரு கூட்டணியை (2004ல் ஸ்ரீ.ல.சு.க. உடன்) அமைத்து ஐ.தே.க. அரசாங்கத்தை கவிழ்த்தோம்”…. “நாங்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி நீதிமன்றத்திற்கு சென்று, சுனாமி நிவாரண அமைப்பை தோற்கடித்தோம்"…. "மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்திற்கு சென்றே வடக்கு மற்றும் கிழக்கைப் பிரித்தது”…

2005 ஜனாதிபதித் தேர்தலில் “தாயகத்தை பாதுகாக்கும்” ஒரு பிற்போக்கு பிரச்சாரத்தை முன்னெடுத்து, இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவர அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜே.வி.பி., அவர் யுத்தத்தை தொடங்கிய பின்னர் வெடித்த தொழிலாளர்கள் போராட்டங்களை, புலிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் நடவடிக்கையாக முத்திரை குத்தி, அரசாங்க அடக்குமுறையை திணிப்பதற்கு ஆதரவு கொடுத்தது. 2010 ஜனாதிபதி தேர்தலில் இன்னொரு கரணம் அடித்து, ஐ.தே.க. உடன் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய ஜே.வி.பி. ஊழியம் செய்தது.

2015 ஜனாதிபதித் தேர்தலில், இராஜபக்ஷவின் எதேச்சதிகாரத்தில் இருந்து நாட்டை விடுவிக்கவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் என்ற பெயரில், மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்திற்கு கொண்டுவர ஜே.வி.பி. அர்ப்பணித்துக்கொண்டது. இராஜபக்ஷ ஆட்சி சீனாவுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகள், பிராந்தியத்தில் தமது மூலோபாய நலன்களுக்கு தடையாகக் கருதிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தால், இந்தியாவின் ஆதரவுடன் மேற்கொண்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையுடன் ஜே.வி.பி. இவ்வாறே அணிதிரண்டது.

முதலாளித்துவ ஒற்றை ஆட்சியை பாதுகாப்பதற்காக ஜே.வி.பி.யின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய சில்வா, இந்த நினைவுநாள் கூட்டத்தில் அறிவித்தாவது: "நாட்டை பிரிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம், அதே போல் பலவந்தமாக ஆக்கிரமித்திருப்பதையும் எதிர்க்கின்றோம். அதாவது எங்களுக்கு ஒரு நடுநிலை அரசு ஒன்று எமக்கு வேண்டும்". சிங்கள பேரினவாத வலதுசாரி சக்திகள் கோருகின்ற பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சிங்கள மேலாதிக்கவாத ஒற்றை ஆட்சியையே நடுநிலை அரசு என ஜே.வி.பி. குறிப்பிடுகின்றது.

ஜே.வி.பி.யைப் போலவே, முன்னிலை சோசலிசக் கட்சியும், 1987-1989 பேரினவாத இயக்கத்தை சோசலிசத்திற்கான போராட்டமாக தனது கூட்டங்களில் தூக்கிப் பிடித்த அதே வேளை, அதை இந்தியாவின் ஆக்கிரமிப்புக்கு, ஜனநாயக விரோத ஆட்சிக்கு மற்றும் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட சுரண்டல் பொருளாதார முறைமைக்கு எதிரான போராட்டமாக மிகைப்படுத்திக் பாராட்டியது.

இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த போது, “ஜனநாயக விரோத ஆட்சி மற்றும் கொள்ளையடிக்கும் பொருளாதாரத்துக்கும் தீர்க்கமான தோல்வியை உறுதிப்படுத்துவதற்கு தேசபக்தி இயக்கமாக ஒரு ஆயுத போராட்டத்தைத் தொடங்கியதாக" கரந்தெனியவில் நடந்த கூட்டத்தில் குணரட்ணம் அறிவித்தார்.

ஜே.வி.பி.யின் "கூட்டணி அரசியலுக்கும்" "இனவாதத்துக்கும்" மற்றும் போருக்கு ஆதரவளித்ததற்கும் எதிராகவே ஜே.வி.பி.யில் இருந்து முறித்துக் கொண்டு தாம் வேறு கட்சியை அமைத்தோம் என, 1978-2012 ஜே.வி.பி.யின் பயணப் பாதை, என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள "சுய விமர்சனத்தில்", மு.சோ.க. தெரிவித்துள்ளது.  இந்த சுய விமர்சனம் பச்சைப் பொய் என்பது இந்த கருத்துக்களிலேயே அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜே.வி.பி. யுத்தத்துக்கும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து முதலாளித்துவ அரசின் கைத்தேங்காயாக செயற்பட்டதன் மூலம், மக்கள் மத்தியில் அவப்பேறு பெற்ற நிலைமையின் கீழ், மக்களுக்கு எதிராக புதிய அரசியல் பொறி ஒன்றை உருவாக்குவதற்கே மு.சோ.க. தலைவர்கள் 2011ல் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்தனர், என சோசலிச சமத்துவக் கட்சி சுட்டிக் காட்டியது. இது கடந்த சில ஆண்டுகளில் மு.சோ.க. முன்னெடுத்த நடவடிக்கைகள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புரட்சி மற்றும் சோசலிசம் பற்றி பிரகடனம் செய்யும் மு.சோ.க., சோசலிசத்திற்கு எதிரான ஒரு போலி இடது கட்சி ஆகும். இராஜபக்ஷவின் எதேச்சதிகார ஆட்சியை தோற்கடிக்கும் போர்வையில், தற்போதைய கூட்டணி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு மு.சோ.க. மறைமுகமாக ஆதரவளித்தது. அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக எழுந்த தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை, அரசியல் ரீதியில் திசை திருப்பிவிடுவதற்காக, சிவில் சமூகம் என அழைத்துக்கொள்பவை உடனும், தொழிற் சங்கங்கள் உடனும் மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (யூ.எஸ்.பி.) போன்ற ஏனைய போலி இடது குழுக்களுடன் கூட்டு சேர்ந்தது.

கிரேக்கத்தில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடெமோஸ் இயக்கம் உட்பட போலி இடது இயக்கங்களை சோசலிசத்துக்காகப் போராடும் இயக்கங்களாக மிகைப்படுத்தி, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை குழப்பிவிடும் மு.சோ.க., முதலாளித்துவ அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் தோன்றுவதை தடுப்பதற்கு வேண்டுமென்றே செயற்படுகின்றது.

இலவசக் கல்வி தனியார்மயமாக்கலை எதிர்த்து, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில், மு.சோ.க.யின் அழிவுகரமான அரசியல் போதுமானளவு காட்சிக்கு வந்தது. சைட்டம்-விரோத மக்கள் அமைப்பு என்ற பெயரில், ஜே.வி.பி., இராஜபக்ஷவின் கூட்டு எதிர்க் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுடன் அணிசேர்ந்த மு.சோ.க. மற்றும் அதன் கீழ் இயக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், சுமார் ஒரு வருடம் பூராவும் பல்கலைக்கழக மாணவர்களை வீதிகளில் இறக்கிவிட்டு அரச அடக்குமுறைக்கு இறையாக்கிய பின்னர், சைட்டத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் கொடுத்த பொய் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு, நவம்பர் 9 அன்று மாணவர்களின் போராட்டத்தை காட்டிக்கொடுத்தது.

ஒட்டு மொத்த முதலாளித்துவமே அவப்பேறு பெற்று, நெருக்கடியில் மூழ்கிப் போகின்ற நிலைமையின் கீழ், தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான வலதுசாரி இயக்கம் ஒன்றை முன்னணிக்கு கொண்டு வருவதற்கு ஜே.வி.பி. முயற்சிக்கின்ற அதேவேளை, கிரேக்கத்தில் சிரிசா மற்றும் ஸ்பெயினில் பொடெமொஸ் போன்ற போலி இடது இயக்கமொன்றுக்குள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சிறைவைத்து முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு அவர்களை அடிபணியச் செய்வதற்கே மு.சோ.க. முயற்சிக்கின்றது