ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Left Front, Socialist Party pursue alliance in French presidential elections

இடது முன்னணியும், சோசலிஸ்ட் கட்சியும் பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் கூட்டணியை பின்பற்றுகின்றன

By Anthony Torres
21 February 2017

ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) வேட்பாளரான பெனுவா அமோன், மற்றும் Rebellious France இன் வேட்பாளரான ஜோன் லூக் மெலோன்சோன் ஆகியோர் இடையே ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இந்த இரண்டு வேட்பாளர்களும் 2017 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரச்சாரத்தை ஒன்றிணைக்க திணறி வருகின்றனர். PS மதிப்பிழந்திருப்பதன் மத்தியில், PSக்கான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் அத்தனை வெளிப்பாடுகளையும் முடக்கும் நோக்கத்துடனான சமூக ஜனநாயக அரசியலின் பழைய, சிடுமூஞ்சித்தனமான பொறிமுறைகள் அனைத்தும் ஆழமான நெருக்கடியில் இருக்கின்றன.

அமோன் மற்றும் மெலோன்சோன் கருத்துக்கணிப்பு வாக்குகளில் முறையே 14 சதவீத மற்றும் 11 சதவீத வாக்குகளை பெற்றிருக்கின்ற நிலையில், அவர்களது கூட்டணி மூலோபாயங்கள் தீர்வற்ற முரண்பாடுகளை எதிர்கொண்டு இப்போது வரை முடங்கி கிடக்கின்றன. போட்டியாளரான முன்னாள் பிரதமர் மானுவல் வால்ஸ்க்கு PS இன் வாக்காளர்கள் கொண்டிருந்த குரோதம் காரணமாக ஜனவரி 29 அன்று நடந்த முதனிலைத் தேர்தலில் PS இன் வேட்பாளராய் தேர்ந்தெடுக்கப்பட்ட அமோன், PS இன் கொள்கை திசையை தொடர்ந்து பராமரிக்க முனைகின்ற அதேநேரத்தில், மறுமலர்ச்சியின் ஒரு வேட்பாளராக முன்நிற்பதற்கும் வாக்குறுதியளிக்கிறார். மெலோன்சோன், ஒரு தீவிரமயப்பட்டவராக காட்டிக் கொண்டு, அமோன் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறத் தேவையான வாக்குகளை அவருக்கு கொண்டுவருகின்ற பணி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆயினும், PS இன் அதிகாரத்துவத்தின் ஆதரவைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மக்கள் வெறுப்பைச் சம்பாதித்திருக்கும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் செயல்வரலாறை முன்னினும் அதிகமாய் வழிமொழியும் நிலைக்கு அமோன் தள்ளப்பட்டு வருகிறார். இராணுவச் செலவினங்களிலும் போலிஸ் பணியாளர் எண்ணிக்கை மட்டங்களிலும் ஒரு பாரிய அதிகரிப்புக்கு ஆலோசனை வைத்திருந்ததற்கு பின்னர், இப்போது அவர், மரியம் எல் கொம்ரியின் பேர் கொண்டு அழைக்கப்பட்ட PS இன் ஆழமான அவப்பெயர் பெற்ற தொழிலாளர் சட்டத்தை கைவிடுவதற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை, அதன் “நேர்மறை அம்சங்களை” காரணம் காட்டி கைகழுவிக் கொண்டிருக்கிறார். ஞாயிறன்று RTL இல் அவர் கூறினார்: “எனக்குத் தேவை ஒரு புதிய தொழிலாளர் சட்டம்.”

அதேசமயத்தில், அமோனின் ஊழியர்களும் வால்ஸ் ஆதரவாளர்களும் PS இன் தலைமையிலும் அதன் சொந்த தேர்தல் பிரச்சாரத்திலும் மோதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

குறைந்தபட்சம் தற்காலிகமாகவேனும், அமோன் முன்வைக்கக் கூடிய எந்தவொரு உடன்பாட்டையும் ஏற்பதற்கு துணிவில்லை என்றாலும் கூட மெலோன்சோன் தன் பங்காக, தன்னுடன் கூட்டணிக்குப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமோன் மீது கூடுதல் அழுத்தத்தை செலுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தன்னை வெளிப்பட சந்திப்பதற்கான ஒரு புதிய விண்ணப்பத்தை வியாழக்கிழமையன்று அவர் அமோனுக்கு முன்வைத்தார், “முட்டி நிற்பதாய் தோன்றும் ஒரு சூழ்நிலையில் அபத்தமான கூறில் இருந்து வெளியே வருவது கடினமாக ஆகிக் கொண்டிருக்கிறது” என்பதால் இந்த யோசனைக்கு தான் வந்ததாக மெலோன்சோன் கூறிக் கொண்டார்.

இந்தக் கொள்கையானது, பிற்போக்குத்தனமானதாகவும் உருக்குலைவு நிலையிலும் இருக்கக்கூடிய PS இன் மீது பிரமைகளை தூண்டுவதை தனது பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பதால், இதுவும் பிற்போக்குத்தனமானதும் மோசடியானதுமாகும். அணுசக்தியை அகற்றுவது, தொழிலாளர் சட்டம் மற்றும் PS இன் அவசரகாலநிலை ஆகியவை உள்ளிட PS ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தெளிவாக தெரிகின்ற கொள்கைகளது ஒரு வரிசையை மெலோன்சோன் அதற்கு முன்வைத்திருக்கிறார். ஆயினும் அதன்பின் அவர், ஒரு உடன்பாட்டை எட்டும் பொருட்டு, இத்தகைய உறுதிப்பாடுகளை PS மதித்து நடக்கும் என்பதான உத்தரவாதத்தை அமோன் தர வேண்டும் என்று இந்த பக்கமாய் திரும்பி கோரிக்கை வைக்கிறார்.

“நல்ல மனதுடன், உங்களது நல்ல நம்பிக்கைக்கு நான் மதிப்பளிக்கிறேன்” என்று மெலோன்சோன் அமோனுக்கு அறிவித்தார். “ஆயினும் நீங்கள் பாதுகாத்து நிற்கும் நோக்குநிலைக்கு பெரும்பான்மையாய் குரோதத்தைக் கொண்டிருக்கக் கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களை கொண்டிருக்கக் கூடிய ஒரு கட்சியின் வேட்பாளராக நீங்கள் இருக்கின்ற சமயத்தில், வெறுமனே உங்கள் வார்த்தைகளை மட்டுமே கொண்டு முடிவெடுக்கும் அளவுக்கு நாம் மிகவும் அப்பாவிகளாக இருக்க இயலாது. ஆகவே, [ஹாலண்டின் ஜனாதிபதி] பதவிக்காலம் மற்றும் அதன் செயல்வரலாற்றுடன் முறித்துக் கொள்ள உறுதி கொண்டிருப்பதாக துல்லியமான அரசியல் உத்தரவாதங்களை அளிக்க உங்களிடம் கோருவது எங்களுக்கு முறையானதும் நேர்மையானதுமே ஆகும்.”

PS க்கும் அதன் நீண்டகால கூட்டாளியான மெலன்சோனின் இடது முன்னணிக்கும் இடையில் கடுமையான நிதி மற்றும் வாக்குவங்கி மோதல்கள் இருப்பதையும் மெலோன்சோன் மறைமுகமாய் சுருக்கமாய் சுட்டிக்காட்டினார். அவர் வலியுறுத்தினார், “அதிகாரத்துவரீதியான ஒப்பந்தங்கள், துரதிர்ஷ்டவசமாக, நாம் ஒருபக்கத்தில் மற்றும் மறுபக்கத்தில் ஒன்றாக கொண்டுவந்திருக்க கூடியவற்றை விரக்தியடையச் செய்து ஒழுங்கைக் குலைக்கலாம். பயனுள்ளதாக நாம் என்ன செய்யலாம் என்பதை நாம் யோசிப்போம். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நெருக்கமான பிணைப்பு கொண்டவை என்பதில் நாம் இருவருமே உடன்பட்டிருக்கிறோம். இந்த நிலைமைகளில், பிரெஞ்சு மக்கள் செய்ய வேண்டிய முடிவையும் தெரிவையும் அதற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு நாம் கவனத்துடனும், நேர்மையுடனும், அம்மக்களுக்கு விசுவாசத்துடனும் பேசுவோம்.”

இந்த மோதல்கள் ஒரு நெடிய காலத்தில் முதிர்ச்சி கண்டிருக்கக் கூடிய ஒரு ஆழமான நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன. இது, 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் தொடங்கி முதலாளித்துவ ஆட்சியின் பிரதான முட்டுத்தூணாக இருந்து வந்திருக்கின்ற PS மற்றும் இடது முன்னணி உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளையும், அத்துடன் நேட்டோ சக்திகள் அத்தனையிலும் இருக்கின்ற இதேபோன்ற கட்சிகளையும் பலவீனப்படுத்தியிருக்கிறது. ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பிரெக்ஸிட் மற்றும் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேர்வானது ஆகியவற்றின் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் மீது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்ற சிதறல் அச்சுறுத்தலானது, இத்தகைய அரசியல் கூட்டணிகள் பல தசாப்தங்களது காலத்தில் அபிவிருத்தி காண வழிதந்திருந்த ஒரு பொருட்சூழலுக்கு வேட்டுவைத்துக் கொண்டிருக்கிறது.

PS  இன் பெரும்பகுதியினர் அமோனுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, தங்களது சொந்தக் கட்சியின் வேட்பாளரான அவரை ஆதரிப்பதைக் காட்டிலும் அவரது எதிரியும் முன்னாள் முதலீட்டு ஆலோசகரும் ஹாலண்டின் பொருளாதார ஆலோசகருமான இமானுவேல் மக்ரோனை ஆதரிக்கவும் கூட வாக்குறுதியளித்துள்ளனர். PS இன் இந்தப் பொறிவு, அத்துடன் வலது-சாரி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோனின் கண்துடைப்பு வேலை மூலமான பணம்சுருட்டல் தொடர்பாக  Le Canard Enchaîné  ஆல் வெளிக்கொண்டு வரப்பட்ட ஊழல் மற்றும் மக்ரோனின் பிரச்சாரத்தின் சுலபமாய் நொருங்கத்தக்க நிலை ஆகியவை, நவ-பாசிச தேசிய முன்னணியின் வேட்பாளரான மரின் லு பென் தவிர்த்து அத்தனை முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களையும் மதிப்பிழக்கச் செய்திருக்கிறது.

ஆரம்பம் முதலாகவே, PS மற்றும் மெலன்சோனின் Rebellious France இன் பிரச்சாரமானது ஹாலண்டுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதன் மூலம் தங்களை மதிப்பிழக்கச் செய்து விடாவண்ணம் ஒரு உருப்படியான வேட்புநிலையை உருவாக்கக் கூடியதான ஒரு கூட்டணியை ஒழுங்கமைப்பதற்காய் முயன்று வந்தது. மெலன்சோனுக்கும் PSக்கும் இடையில் கோட்பாட்டு வித்தியாசம் ஏதும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும். முன்னாள் நாஜி-ஒத்துழைப்புவாத அதிகாரியும் PS இன் ஸ்தாபகருமான மித்திரோனின் புகழ்பாடியும் நெருங்கிய கூட்டாளியுமான மெலோன்சோன், PS போர்களையும் தொழிலாளர்-விரோத சிக்கனநடவடிக்கைக் கொள்கைகளையும் முன்னெடுத்த சமயத்தில் அதில் பல தசாப்தங்களுக்கு வேலைசெய்தார்.

€600 - €800 மாதாந்திர ஊதியத்தை அனைவருக்கும் பொருந்தும் குறைந்தபட்ச ஊதியமாய் நிர்ணயிக்க ஆலோசனையளித்து “இடது” போல் காட்டிக்கொள்ள முயற்சித்த அமோன், ஜனவரி 29 இரவு தொடங்கி மெலோன்சோன் மற்றும் பசுமைக் கட்சியினருக்கு ஐக்கியத்திற்கான விண்ணப்பங்களை விடுத்து வந்திருக்கிறார். “இடதுகளை ஐக்கியப்படுத்துவதன் மூலம் நாளை தொடங்கவிருப்பதாக”வும் “ஒரு சமூக, பொருளாதார, மற்றும் ஜனநாயக ஆட்சிப் பெரும்பான்மையை உருவாக்குவதற்கு, குறிப்பாக [பசுமை வேட்பாளர்] யானிக் ஜடோட் மற்றும் ஜோன்-லூக் மெலன்சோனுக்கு யோசனை முன்வைக்க இருப்பதாக”வும் அவர் தெரிவித்தார்.

உடனடியாக இணக்கக்குரல் எழுப்பி அமோனுக்கு பதிலிறுப்பு செய்த மெலோன்சோன், அதேசமயத்தில் இதனால் அவரது இடதின் மீது அதிக விமர்சனம் வரும்வண்ணம் அம்பலப்படுத்துவதாக ஆகிவிடக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டினார். “ஒரு நல்ல காப்பியுடன் அமர்ந்து பேச அவருக்கு எப்போதும் வரவேற்பு கிடைக்கும், ஆயினும் ஒன்றுபடுத்துகின்ற ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டுவருவதற்காய் நாங்கள் இட்ட பிரம்மாண்டமான முயற்சி என்ற ஒரேயொரு விடயத்தில் மட்டும் பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை.”

ஹமோனுடன் ஒரு உருப்படியான தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கு, மரியம் எல் கொம்ரி போன்ற, ஹாலண்டுடன் பகிரங்கமாய் தொடர்புடைய குறிப்பிட்ட PS உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு மெலோன்சோன் ஆலோசனை வைக்கிறார். அவர் தெரிவித்தார், “ஒரு ஒத்திசைவான நாடாளுமன்ற ஆட்சிப் பெரும்பான்மையை உருவாக்குவதற்கு நீங்கள் எங்களிடம் கேட்க முடியாது... திருமதி.எல் கொம்ரி சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக அமர்ந்திருக்கின்ற ஒரு சமயத்தில் எல் கொம்ரி சட்டத்தை ஒழிப்பதற்கான ஒரு பெரும்பான்மையை எப்படி உருவாக்க நீங்கள் கேட்கிறீர்கள்?”

எப்படியிருப்பினும், உத்தேசக் கூட்டணியின் கோட்பாடில்லாத தன்மையும் இப்போதுவரை கூட்டணியை முடக்கி வைத்திருக்கின்ற அமோன் மற்றும் மெலோன்சோன் இடையிலான பேதங்களும் இருந்தபோதிலும், PS மற்றும் இடது முன்னணியின் அதிகாரத்துவங்கள் தொடர்ந்து அதற்காய் நெருக்கி வருகின்றன. மெலோன்சோன்-அமோன் இன் “சிறு விளையாட்டை” PS இன் அங்கத்தவர் ஒருவர் Libération  பத்திரிகை நேர்காணல் ஒன்றில் விமர்சனம் செய்தார்: “பெனுவா இன் தந்திரோபயம் உலகளவுக்குப் பழமையானது: FN அபாயத்தை பூதாகரமாக்குவது அதன்பின் குறைந்த தீமைக்கு வாக்களிக்கும் வாதத்தை அந்தப் பெயர் குறிப்பிடாமல் ஊதிப்பெருக்குவது. பதிலுக்கு ஜோன்-லுக் உத்தரவாதங்களைக் கோருவதன் மூலம் பதிலிறுப்பு செய்கிறார், ஹாலண்டின் ஜனாதிபதி காலத்தைக் கொண்டு பார்த்தால், வெளிப்படையாய், இதுவே அவர் செய்யக் கூடிய குறைந்தபட்சமானதாகும்.”

இடது முன்னணியின் ஒரு முன்னணி சக்தியாக இருக்கும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தொடர்பாளரான Olivier Dartigolles அறிவித்தார்: “அத்தனை பேரும் ஒரு அறையில் ஒன்றுகூடியிருந்தால், ஒரு வேட்பாளருடனும் ஒரு வேலைத்திட்டத்துடனும் எங்களால் வெளியில் வந்திருக்க இயலாது.” ஆயினும் யார் மிகவும் விருப்பத்திற்குரிய வேட்பாளராக இருக்கமுடியும் என்பதைக் கண்டுகொள்ள கட்சிகளை அனுமதிக்கின்ற ஒரு மூலோபாயத்திற்கு அவர் ஆலோசனையளித்தார். “ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான இந்த போராட்டத்தில் மிகவும் முன்னுதாரணமாகவும் படைப்புத்திறனுடனும் இருப்பவர் அதிக மதிப்பெண்களை பெறப் போகிறார். அதைச் செய்ய முடியாத எவரும் ஒரு அரசியல் பிழையை இழைத்தவராவார்.”

எவ்வாறாயினும், அமோன்-மெலோன்சோன் கூட்டணி ஒன்று எழுமானால், அது நிச்சயமாக தொழிலாள வர்க்கத்திற்கு குரோதம் கொண்ட ஒரு பிற்போக்குத்தனமான குழுவாக்கமாகவே இருக்கும்.