ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Tamil parties launch communal campaign to divert social tensions

இலங்கை: தமிழ் கட்சிகள் சமூக பதட்டங்களை திசை திருப்ப இனவாத பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன

By Subash Somachandran and S. Jayanth
9 February 2017

தமிழ் தேசியவாத அமைப்பான தமிழ் மக்கள் பேரவை, இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் பெப்ரவரி 10 அன்று எழுக தமிழ் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை கடந்த செப்டம்பர் மாதமும் யாழ்ப்பாணத்தில் இதே போன்ற ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது.

இந்த எதிர்ப்பின் நோக்கம், தமிழ் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் சமூக பதட்டங்களை இனவாத வழியில் திசை திருப்பி, நாட்டின் தெற்கில் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளிடம் இருந்து பிளவுபடுத்துவதே ஆகும்.

தமிழ் மக்கள் பேரவை, 2015ல் பாராளுமன்ற எதிர்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினராலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களாலும் ஸ்தாபிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னணி உறுப்பினரும் வட மாகாண சபை முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவைக்கு தலைமை வகிக்கின்றார்.

ஆர்.சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் போன்ற சிரேஷ்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், இந்த பிரச்சாரத்தில் இருந்து தங்களை தூர விலக்கி வைத்துக்கொண்டுள்ள அதேவேளை, இந்தப் பேரணி தமிழ் தேசிய கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கே என விக்னேஸ்வரன் வலியுறுத்துகின்றார்.

தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் ரி. வசந்தராஜா, “வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை, எழுக தமிழ் வழியாக ‘சர்வதேசத்துக்கும்' குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் (UNHRC) இந்த நாட்டின் அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்த முடியும்” என்று தமது குழு நம்புவதாக ஊடகங்களுக்கு கூறினார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள், சர்வதேச யுத்த குற்ற விசாரணை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட கோரிக்கைகளை தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் புதிய சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த செல்வாக்கை பரப்புவதையும் நிறுத்த வேண்டும், இந்த மாகாணங்களில் இருந்து இலங்கை இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவை "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றது" எனக் கூறிக்கொள்வது முழு பொய் ஆகும். இந்த அமைப்பு ஒடுக்கப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களுக்காகவும் ஏழைகளுக்காகவும் பேசவில்லை, மாறாக தமிழ் முதலாளித்துவத்தின் மற்றும் உயர் மத்தியதர வர்க்கத்தின் பகுதியினருக்காகவுமே பேசுகின்றது. "சமஷ்டி தீர்வுக்கான" அதன் கோரிக்கை, தமிழ் தொழிலாள வர்க்கத்தை கூட்டாக சுரண்டுவதற்காக கொழும்புக்கும் வடக்கு கிழக்கில் தமிழ் முதலாளித்துவ உயரடுக்கும் இடையேயான ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைச் செய்ய முயற்சிப்பதாகும்.

வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கைகள், தமிழ் மக்களின் கோபத்தை சுரண்டிக்கொண்டு, அதை ஏகாதிபத்திய நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் மற்றும் பிரதான பிராந்திய சக்தியான இந்தியாவின் ஆதரவுக்கு அழைப்பு விடுப்பதற்காக திசைதிருப்பி விடுவதை இலக்காகக் கொண்டதாகும்.

எழுக தமிழ் என்ற பெயர் அர்த்தப்படுத்துவது போல், இந்தப் பேரணியானது நாட்டின் தெற்கில் சிங்களப் பேரினவாத குழுக்களின் தமிழர்-விரோத ஆத்திரமூட்டல்கள் மீதான ஒரு இனவாத பதிலிறுப்பாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் தலைமையிலான சிங்கள அதிதீவிரவாதிகள், இராணுவத்தால் 2009 மே மாதம் நசுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் புத்துயிர் பெறுகின்றனர் என கூறுகின்றனர். இராஜபக்ஷ இந்த பிற்போக்கு பிரச்சாரத்தின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கவும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கும் எதிர்பார்க்கின்றார்.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் பேரவையில் உள்ளவை உட்பட ஏனைய தமிழ் கட்சிகளும் குழுக்களும், இராஜபக்ஷவுக்கு பதிலாக மைத்திரிபால சிறிசேனவை நியமிப்பதற்காக அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையை ஆதரித்தன.

பெய்ஜிங்குடனான அரசாங்கத்தின் நெருக்கமான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை இராஜபக்ஷ முறித்துக்கொண்டு, சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர்த் தயாரிப்பில் இலங்கை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என வாஷிங்டன் விரும்பியது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆர்.சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன் போன்ற பெரும் புள்ளிகளும் இந்த பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபட்டனர்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச சக்திகளுக்கும், அத்துடன் யு.என்.எச்.ஆர்.சி.யும் தமிழ் மக்களுக்கு உதவும் என்று தமிழ் மக்கள் பேரவை கூறுவது, முற்றிலும் பொய்யானதாகும். இலங்கை தங்கள் புவிசார் மூலோபாய நலன்களுக்கு பொருத்தமானதாக இருந்ததால் இந்த சக்திகள் அனைத்தும் புலிகளுக்கு எதிராக ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களின் இனவாத யுத்தத்தை ஆதரித்தன.

யு.என்.எச்.ஆர்.சி. ஏகாதிபத்தியத்தின், குறிப்பாக அமெரிக்காவின் கருவியாகும். 2015ல், அது சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு அதன் சொந்த யுத்தக் குற்ற விசாரணைகளை நடத்த முடியும் என உடன்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய உண்மையை நசுக்குவதே ஆகும். தமிழ்த் கூட்டமைப்பினர் இந்த நடவடிக்கையை ஆதரித்தனர்.

சிறிசேன, இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஜனநாயக விரோத வழிவகைகளை நிறுத்தி, யுத்தத்தினால் ஏற்பட்ட அவல வாழ்க்கை நிலைமைக்கு முடிவு கட்டுவார் என வலியுறுத்தியே தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் குழுக்களும் சிறிசேனவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தன. இரண்டு ஆண்டுகளுக்குள், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சமூக சிக்கன கோரிக்கைகளை திணித்துவரும் நிலையில், இலங்கை முழுவதும் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் தமது ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.

தெற்கில் வளர்ந்து வரும் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு இணையாக, வடக்கில் மாநகர சுத்தீகரிப்பு தொழிலாளர்கள், சுகாதார ஊழியர்கள், தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளும் நிரந்தர நியமனம் மற்றும் வேலைகள் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். "புனர்வாழ்வளிக்கப்பட்ட," புலிகளின் முன்னாள் போராளிகள் வேலைகள் கோரி சிவில் பாதுகாப்பு அலுவலகத்தை சுற்றி வளைத்த அதேவேளை, யாழ்ப்பான பல்கலைக்கழக மாணவர்கள், அரசாங்கத்தின் கல்வி வெட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

போரில் "காணாமல்" ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியாவில் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டமானது தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது. கிளிநொச்சிக்கு அருகில் கேப்பாப்புலவைச் சேர்ந்த மக்கள் குழுவினர், கிராமத்தினருக்கு சொந்தமான விவசாய நிலங்களை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றை தொடர்கின்றனர்.

தமிழ் மக்கள் பேரவை அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தப் போராட்டங்களை ஆதரிக்கவில்லை. கொழும்பில் அமெரிக்க-சார்பு அரசாங்கத்தின் ஒவ்வொரு சமூக தாக்குதலுக்கும் ஆதரவு கொடுத்து அதைக் காத்துவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பார்வையில் அரசியல் ரீதியில் அவமதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

உண்மையில், தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் வசந்தராஜா, "மக்கள் [வடக்கு மற்றும் கிழக்கில்] இப்போது தலைவர்களை புறக்கணித்து, சொந்த முடிவுகளை எடுக்கவும் செயல்படுத்தவும் முயற்சிக்கின்றனர்" என்று சமீபத்தில் அரசாங்கத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் என்று எச்சரித்தார்.

இதேபோல், கொழும்பை தளமாகக் கொண்ட தமிழ் தினசரியான வீரகேசரி பத்திரிகையின் தலையங்கம், "தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிப்புப் போக்கை கடைப்பிடித்து வருகின்றமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தயிருக்கின்றது. இதனால் வெறுப்படைந்துள்ள தமிழ் மக்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக அணிதிரளும் நிலை தற்போது உருவாகி வருகின்றது," என சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள அனைத்து ஆளும் உயரடுக்கின் பிரிவுகளும் இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் வளர்ச்சி பற்றி மிக விழிப்புடன் உள்ளன.

தொழிலாள வர்க்கம் தமிழ் மக்கள் பேரவையின் இனவாத பிரச்சாரத்தை நிராகரிக்க வேண்டும். தமிழ் மக்கள் பேரவை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதுடன் ஏகாதிபத்திய சக்திகளுக்கு சேவை செய்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பகுதியினர் அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என நம்பினர். "தமிழர் பிரச்சினைகளை தீர்க்க" அது ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும் கூறிக்கொண்டனர். குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, தமிழ்த் கூட்டமைப்பு அவரிடம் உதவிக்கு அழைப்பு விடுக்கப் போவதாக அறிவித்தது.

தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள், இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் நிராகரித்து, சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்துக்காக போராட வேண்டும். கொழும்பின் இனவாத போருக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் ஒரு நீண்ட மற்றும் கொள்கை ரீதியான வரலாறு கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இத்தகைய வேலைத் திட்டத்தையே அபிவிருத்தி செய்கின்றது.

தெற்காசியவிலும் மற்றும் உலகம் பூராவும் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற வடிவத்தில் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக அது போராடுகிறது.