ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In speech at Florida Air Force base

Trump appeals to the military against the press and the courts

புளோரிடா விமானப்படை தளத்தில் உரையாற்றுகையில்

ட்ரம்ப் பத்திரிகைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு எதிராக இராணுவத்திற்கு முறையிடுகிறார்

Barry Grey
8 February 2017

திங்களன்று புளோரிடாவின் தாம்பாவில் உள்ள மாக்டில் (MacDill) விமானப்படை தளத்திற்கான ஒரு சிறப்பு விஜயத்தில், ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஓர் அரசியல் உரை வழங்கி ஜனநாயக மரபை மீறினார். பத்திரிகைகளைக் கண்டித்த அவர், நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிராக ஜனாதிபதிக்கும்- இராணுவத்திற்கும் இடையே ஒரு கூட்டணியை உருவாக்க மறைமுகமாக அறிவுறுத்தினார்.

ட்ரம்ப் அவரது சிறிய குறிப்புகளில், மாக்டில் விமான தளத்தில் இருக்கும் மத்திய கட்டளையக மற்றும் சிறப்பு படை கட்டளையக துருப்புகளைப் புகழ்ந்து தள்ளினார். கடந்த நவம்பர் தேர்தலில் இராணுவம் கூடவோ குறையவோ அவருக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். “நீங்கள் என்னை விரும்புவதற்கும் மற்றும் நான் உங்களை விரும்புவதற்குமான ஒரு எண்ணிக்கையாக அதை நான் பார்த்தேன்" என்றார்.

அவர் தொடர்ந்தார்: “அழகான புதிய போர்விமானங்கள் மற்றும் அழகான புதிய தளவாடங்களைக் கொண்டு நாம் [மாக்டில் ஐ] நிரப்ப இருக்கிறோம்… உங்களை நாங்கள் பலப்படுத்த இருக்கிறோம்,” என்றார். இந்த கருப்பொருளுக்கு அவர் பல முறை திரும்பி வந்தார், ஒரு புள்ளியில் அவர், “அமெரிக்காவின் ஆயுத படைகளில் ஒரு வரலாற்று நிதி முதலீட்டை செய்யவிருக்கிறோம்…" என்றார்.

“அதிதீவிர இஸ்லாமிய பயங்கரவாதிகள்" என்ற பேராபத்தைக் காட்ட முயலுகையில், அந்த அச்சுறுத்தலை திட்டமிட்டு குறைத்துக் காட்டுவதாக அவர் பத்திரிகைகளை மிரட்டும்ரீதியில் குற்றஞ்சாட்டினார். “அது செய்திகளில் கூறப்படாத புள்ளிக்கு வந்துவிட்டது, பல சமயங்களில், மிக மிக நேர்மையற்ற பத்திரிகைகள் அதை செய்தியாக குறிப்பிட விரும்புவதில்லை. தங்களுக்கென அவர்கள் காரணங்களை வைத்துக் கொள்கிறார்கள், அது உங்களுக்கே தெரியும்,” என்றார்.

பத்திரிகைகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கின்றன மற்றும் துணைபோகின்றன என்ற இந்த கருத்தைத் தொடர்ந்து, ட்ரம்ப் அவரது புலம்பெயர்வு-விரோத நடவடிக்கைகளை ஆனால் நேரடியாக குறிப்பிடாமல் ஊக்குவித்தார், மற்றும் அவரது முஸ்லீம்-விரோத உள்நுழைவதற்கான தடையை தற்காலிகமாக தடுப்பதற்காக நீதிமன்றங்களையும் மறைமுகமாக விமர்சித்தார்.

“அதிதீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தை நாம் தோற்கடிப்போம், அது நம் நாட்டில் வேரூன்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம்… கடந்த சில நாட்களாக என்ன நடந்து வருகிறது என்பதை நீங்களே பார்த்து வருகிறீர்கள். நம்மை நேசிக்கும் மற்றும் நம் நாட்டை நேசிக்கும் மக்களை —நம்மை அழிக்க விரும்புபவர்களையோ அல்லது நம் நாட்டை அழிக்க விரும்புபவர்களையோ அல்ல— நம் நாட்டை இறுதி வரையில் நேசிக்கும் மக்களை உள்ளே அனுமதிக்கும் பலமான திட்டங்கள் நமக்கு அவசியமாகும்,” என்றார்.

அவரது பயணத் தடைக்கு எதிராகவும் மற்றும் "நீதிமன்ற அமைப்புமுறை" மீது எந்தவொரு எதிர்கால பயங்கர தாக்குதலைக் கண்டித்தும் தீர்ப்பளித்த நீதிபதியை கண்டித்த அவரது ட்வீட்டர் கருத்துக்கள், அந்த உரையை தொடர்ந்து வந்தன.

பயணத் தடை சம்பந்தமாக மட்டுமின்றி மாறாக ரஷ்யாவை நோக்கி அவர் "மென்மையாக" இருக்கிறார் என்று ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பெரும்பாலான ஊடகங்களின் புதிய தாக்குதல்களுடனும் சம்பந்தப்பட்டுள்ள வெளியுறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு கேள்விகள் மீது அரசுக்குள் நடந்து வரும் ஓர் ஆழ்ந்த மோதலுக்கு இடையே ட்ரம்பின் இந்த உரைகள் வந்துள்ளன.

இது, அவரது இனவாத புலம்பெயர்வு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய ஜனநாயக விரோத கொள்கைகளுக்கு எதிராக அந்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் சூழலில் வந்துள்ளது.

அமெரிக்க அரசியல் வாழ்வில் ஆயுத படைகள் வகிக்கும் பாத்திரம் நீண்டகாலமாக பலப்படுத்தப்பட்டுள்ளதிலும், மற்றும் படைத்துறைசாரா கட்டுப்பாட்டிலான அரசியலமைப்பு கோட்பாடுகள் அழிக்கப்பட்டுள்ளதிலும், மாக்டில் நிகழ்வு ஒரு மைக்கல்லாகும். “போர் வெறியர்" ஜேம்ஸ் மாட்டீஸ் ஐ பாதுகாப்புத்துறை செயலராகவும், மைக்கல் ஃபிளினை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், ஜோன் கெல்லியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைவராகவும் நியமித்துள்ளது உட்பட ஓய்வூபெற்ற தளபதிகளை ட்ரம்ப் அவர் நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். ஜோன் கெல்லியின் நியமனம், “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்" உள்ளார்ந்த கூறுபாடாக நிறுவப்பட்ட உள்நாட்டு ஒடுக்குமுறைக்கான ஒரு பரந்து விரிந்த எந்திரத்தின் தலைவராக முதல்முறையாக ஒரு இராணுவ மனிதரை நிறுத்துகிறது.

இத்தகைய அபிவிருத்திகளை ஆத்திரமூட்டும் சம்பவம் பின்தொடர்கிறது, இது ஊடகங்களால் நடைமுறையளவில் குறிப்பிடப்படாமலும் விவரிக்கப்படாலும் விடப்பட்டுள்ளதுடன், இது ட்ரம்பின் பதவியேற்பு உரையிலிருந்தே ஆரம்பித்து நடந்து வருகின்றது. பல்வேறு சேவைகளைச் சேர்ந்த பத்து அதிகாரிகள் ட்ரம்புக்குப் பின்னால் வரிசையாக நின்றிருந்தனர், அதுவும் நாடெங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஒளிபரப்புவதற்காக சீருடையணிந்த இராணுவத்தினர் பக்கவாட்டில் நிற்க புதிய ஜனாதிபதியுடன் படமெடுப்பதற்காக போதுமானளவிற்கு நீண்ட நேரம் நின்றிருந்தனர். இது தற்செயலானது கிடையாது, மாறாக உள்நாட்டில் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் மற்றும் பல்வேறு வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராக போர் தொடுக்கவும் தயாராக உள்ள அரை-இராணுவ அரசாங்க பிம்பத்தை காட்டுவதற்காக, பானன் போன்ற ஆலோசகர்களாலும் மற்றும் ட்ரம்பினாலும் திட்டமிடப்பட்டிருந்த ஒரு கணக்கிடப்பட்ட சூழ்ச்சியாகும்.

இராணுவத்தின் அளவு, அதிகாரம் மற்றும் அரசியல் செல்வாக்கின் ஆதீத வளர்ச்சி என்பது ஏதோ புதிதானதோ அல்லது ட்ரம்ப் நிர்வாகத்தின் தனித்துவமோ கிடையாது. மாறாக, அமெரிக்க ஜனநாயகத்தின் ஏனைய ஒவ்வொரு வெளிப்பாட்டையும் போலவே, ட்ரம்ப் இன் ஜனாதிபதி ஆட்சி காலத்துடன், வீழ்ச்சியின் ஒரு நீடித்த நிகழ்வுபோக்கு பண்புரீதியில் ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

சோவியத் ஒன்றிய கலைப்பைத் தொடர்ந்து முடிவில்லா போரின் இருபத்தைந்து ஆண்டுகள், இராணுவ உயரடுக்கின் அதிகாரத்தை பாரியளவில் அதிகரித்துள்ளன. தொழில்ரீதியில் இராணுவ ஒன்றுதிரட்டலானது, அதிகரித்தளவில் படைத்துறைசார சமூகத்தில் இருந்து இராணுவ படைகளை தனிமைப்படுத்தி, வெளியுறவுத்துறை விவகாரங்களில் அதன் சுதந்திரமான நலன்களை முன்பினும் அதிக ஆக்ரோஷமாக வலியுறுத்தும் ஒரு தனித்துவமான சமூக ஜாதியை உருவாக்கி உள்ளது.

மிகப் பெரியளவிலான சமூக சமத்துவமின்மையால், உழைக்கும் பெருந்திரளான மக்கள் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையில் இருந்து மிகப் பரந்தளவில் அன்னியப்பட்டு இருப்பதால், ஆளும் நிதியியல் செல்வந்த அதிகார அடுக்கு இன்னும் அதிகமாக தன்னைத்தானே இராணுவத்தின் மீது நிலைநிறுத்த முயல்கிறது. புளோரிடாவில் மறுவாக்கு எண்ணிக்கையை முடக்கியதன் மூலமாக, மக்கள் வாக்குகளில் தோல்வியடைந்திருந்த ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷிடம் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வெள்ளை மாளிகையை ஒப்படைத்த 2000 தேர்தலில், பிரதானமாக புஷ்ஷூக்கு சார்பாக புளோரிடாவில் பதிவான சட்டவிரோத இராணுவ வாக்குகள் எண்ணப்பட வேண்டுமென்ற குடியரசு கட்சி கோரிக்கைகளுக்கு ஜனநாயக கட்சியின் அல் கோர் உடன்பட்டார்.

புஷ்ஷூம் சரி பராக் ஒபாமாவும் சரி இருவருமே இராணுவத்தினருக்கு அளித்த அவர்களது சொற்பொழிவுகளின் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். தளபதிகள் மற்றும் பில்லியனர்களைக் கொண்ட ட்ரம்பின் இனவாத "முதலிடத்தில் அமெரிக்கா" அரசாங்கத்துடன், இந்த அரை-குற்றகர நிதியியல் செல்வந்த தட்டு ஜனநாயக நயனங்களின் முகமூடியை நீக்கிவிட்டு அதன் கோரப்பற்களைக் காட்டுகிறது.

பத்திரிகைகளிலும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் சிந்தனை குழாம் மூலோபாயவாதிகள் இடையிலும், இராணுவத்தின் மீதான படைத்துறைசார கட்டுப்பாட்டின் அடித்தளத்திலிருக்கும் அரசியலமைப்பு கோட்பாடுகளை அழிக்க பகிரங்கமாக விவாதிக்கப்பட்டும், வாதிடப்பட்டும் வருகிறது.

இந்த விடயத்தில் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து வந்துள்ள கட்டுரையின் தலைப்புகளில் உள்ளடங்குபவை: “இராணுவம் மீதான படைத்துறைசாரா கட்டுப்பாடு இடையூறா?” (The American Conservative), “'இராணுவம் மீதான படைத்துறைசார கட்டுப்பாடு' பிழையான நம்பிக்கை" (Defense One), “ட்ரம்ப் தன்னைச் சுற்றி தளபதிகளை நிறுத்தி வருகிறார். இது அபாயகரமானது" (Washington Post). ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியர் ரோசா புரூக்ஸ் எழுதி டிசம்பரில் Foreign Policy இல் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை வாதிடுகையில், இராணுவம் மீதான படைத்துறைசாரா கட்டுப்பாடு "மரபு சார்ந்ததில்லை, அழகியலின் ஒரு விதியாக மாறி" உள்ளது, “மற்றும் அதை கையிலெடுப்பது எந்தவித மதிப்பையும் உள்ளடக்காமல் நம்மை சிறப்பாக உணர செய்யும் ஒரு ஆறுதலான சம்பிரதாயமாகும்,” என்று குறிப்பிட்டது.

இராணுவத்தை மேற்கொண்டும் அரசியல்மயப்படுத்துவதையும் மற்றும் அரசியலை இராணுவமயப்படுத்துவதையும் ஜனநாயக கட்சி எதிர்க்காது. அதற்கு முரணாக, ஜனநாயக கட்சியினருடன் அணி சேர்ந்துள்ள ஊடக நிறுவனங்கள் சமீபத்திய நாட்களில், இராணுவ உயரடுக்கை ட்ரம்பின் பாசிச தூண்டுதலுக்கு ஒரு ஜனநாயக முட்டுக்கட்டையாக சித்தரித்துள்ளன. பாதுகாப்பு செயலர் மாட்டீஸ் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் டன்ஃபோர்ட் போன்ற "மிகவும் சிந்தனை திறன்மிக்க அனுபவமான கரங்களிடம் இருந்து" போர் மற்றும் சமாதானம் குறித்த விடயங்களில் ட்ரம்ப் ஆலோசனைகளைப் பெற வேண்டுமென வலியுறுத்தி, பானனை தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு ட்ரம்ப் உயர்த்தியதற்கும் மற்றும் தேசிய உளவுத்துறை இயக்குனர் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதியை பதவியிறக்கம் செய்ததற்கும், நியூ யோர்க் டைம்ஸ் விடையிறுத்தது.

“ட்ரம்பின் தளபதிகள் ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாக்க முனைந்து வருகிறார்களா?” என்று தலைப்பிட்டு, Atlantic இதழ் ஒரு கட்டுரை பிரசுரித்தது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, அங்கே ஆளும் வர்க்கத்தில் எந்தவொரு கன்னையோ அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகளோ, ஜனநாயக கட்சியினர் ஆகட்டும் அல்லது குடியரசு கட்சியினர் ஆகட்டும், யாரும் கிடையாது. உலகெங்கிலுமான ஜனநாயக அமைப்புகளைப் போலவே அமெரிக்க ஜனநாயகத்தின் பொறிவானது, அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் உயிர்பிழைக்க முடியாத நெருக்கடியின் விளைவாகும். அரசியல் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான ஒரு சுயாதீனமான போராட்டத்தின் மூலமாக அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தலைமை எடுப்பது, தொழிலாள வர்க்கத்தின் வசம் உள்ளது.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Media remains silent on appearance of military officers at Trump’s inauguration
[27 January 2017]