ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan elite discusses “frightening economic situation”

இலங்கை ஆளும் உயரடுக்கு "அச்சுறுத்தும் பொருளாதார நிலைமை" பற்றி கலந்துரையாடுகிறது

By Saman Gunadasa
22 February 2017

கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் பத்திரிகை, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடந்த ஒரு இரகசிய கூட்டத்தைப் பற்றி கடந்த வார இறுதியில் ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டிருந்தது. செய்தித்தாளின் படி, இந்த உயர் மட்ட கூட்டத்தில், "நாட்டில் கட்டவிழ்ந்து வரும் பயங்கரமான பொருளாதார நிலைமையின் முன்னறிவித்தல் எத்தகையதாக இருக்கும்" என்பது பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்த கூட்டத்தில், மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, அவரது துணைவர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் விளக்கவுரை ஆற்றியதோடு சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) அமைச்சர்கள் பங்குபற்றியிருந்தனர்.. ஸ்ரீ.ல.சு.க., பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) உடனான "ஐக்கிய அரசாங்கத்தின்" பங்காளியாகும். ஐ.தே.க. அமைச்சர்கள் உடனான மற்றொரு கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை முழுமையாக செயல்படுத்துமாறு மத்திய வங்கி அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டதாக சண்டே டைம்ஸ் செய்தி தெரிவிக்கின்றது. கடந்த ஆகஸ்ட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாகப் பெற்றதற்கு ஈடாக, சர்வதேச நாணய நிதியமானது வரி அதிகரிப்பு, மானியங்களை வெட்டுதல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் போன்ற பல்வேறு பாரதூரமான பொருளாதார சீர்திருத்தங்களை சுமத்துமாறு கொழும்பை நெருக்குகிறது. தற்போது அரசாங்கம் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் வாழ்க்கை நிலைமை மீது மேலும் தாக்குதல்களை நடத்த தயாராகி வருகிறது.

இலங்கை, உலக பொருளாதாரத்தின் தொடர்ச்சியான சரிவினாலும் நீண்ட வறட்சியால் பிரதான பயிர்கள் அழிக்கப்பட்டு, பிரதான உணவுகளின் விலைகளை அதிகரிக்கச் செய்தமையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில், மத்திய வங்கித் தலைவர் குமாரசுவாமி, இலங்கை பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் கைகளில் "மருத்துவமனையில்" அனுமதிக்கப்பட்டுள்ளது என விவரித்தார்.

மத்திய வங்கி அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கடன் சேவைகள் பற்றிய பிரச்சினைகள் சம்பந்தமாக ஒரு விரிவான கண்ணோட்டத்தை அமைச்சர்கள் முன் வழங்கினார். உள்நாட்டு கடன் 2010ல் 30 பில்லியன் (4,590 பில்லியன் ரூபா) அமெரிக்க டாலரில் இருந்து 2016ல் 62 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக வீரசிங்க கூறினார். திறைசேரிப் பத்திரிங்களின் வருடாந்த சேவை, 6.23 பில்லியன் டாலர்களாக (945 பில்லியன் ரூபாய்) இருக்க வேண்டும், ஆனால், அது 4.74 பில்லியன் டாலர்கள் (720 பில்லியன் ரூபா) வரை மட்டுமே உயர முடியும் என சந்தை தகவல்கள் எச்சரிக்கின்றன, என அவர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பானது ஜனவரி மாதத்தில் 5.5 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது, இது முந்தைய 12 மாதங்களில் இருந்து அரை பில்லியன் டாலர்கள் வீழ்ச்சியாகும் என்று சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. முதலீட்டு சபையின் படி, வெளிநாட்டு நேரடி முதலீடானது 2015ல் 600 மில்லியன் டாலரில் இருந்து 2016ல் 300 மில்லியன் டாலர்களுக்கு பாதியாக குறைந்துள்ளது.

ஒரு சமீபத்திய ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் கட்டுரையும், அமெரிக்க மத்திய வங்கியின் "வேட்டையாடும் கொள்கை நோக்கு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகம், குடிவரவு மற்றும் சர்வதேச உறவுகள் சம்பந்தாமன கொள்கைகளினால் ஏற்பட்ட நிச்சயமின்மையின் விளைவாக, “மூலதன வெளியேற்றத்தினால் பாதிக்கப்பட்டு ரூபாய் புதிய விற்பனை அழுத்தத்துக்கு உள்ளான நிலையில், இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் ஒரு தந்திரமான சமநிலைப்படுத்தும் செயலை எதிர்கொண்டனர்" என்று குறிப்பிட்டுள்ளது..

இலங்கையில் இருந்து மேலும் மேலும் மூலதனம் வெளியேறுவதை குறிக்கும் வகையில், பெப்பிரவரி 8ம் திகதிக்கு முன்னரான நான்கு வாரங்களில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 208 மில்லியன் டாலர் மதிப்பிலான அரசாங்க பிணைப்பத்திரங்களை விற்றுவிட்டனர். ஏற்றுமதியும் சரிந்து, ரூபாயும் ஜனவரி 2015 முதல் சுமார் 15 சதவீதம் வீழ்ச்சியடைந்து, உள்நாட்டு விலைவாசியை கூர்மையாக உயர்த்திவிட்டுள்ளது.

கொழும்புடன் நேரடியாக வேலை செய்யும் சர்வதேச நாணய நிதியத்தின் படி, "அரசாங்க பிணைபத்திரங்களில் இருந்து வெளிநாடுகள் வெளியேறியதாலும், வெளிநாட்டு நேரடி முதலீடு குறைந்ததாலும் மற்றும் வெளியார் நிதியுதவியிலான பொது மற்றும் தனியார் திட்டங்கள் மெதுவாக அமுல்படுத்தப்பட்டதாலும் இலங்கையின் மூலதன மற்றும் நிதி கணக்கு நிலைமை வலுவிழந்துவிட்டது."

"உலக சந்தை ஏற்ற இறக்கம் மற்றும் உள்நாட்டு கொள்கைகளை குறித்த கவலையை பிரதிபலிக்கும் வகையில், முதலீட்டாளர் உணர்வு மிகவும் மோசமடைந்துள்ளது," என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதிய குழுவொன்று இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் செய்துள்ளதுடன், விரைவில் விரிவான பிரதிநிதிகள் குழு ஒன்றின் வருகையும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிணைப்பத்திரங்களில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நிதியை ஈடு செய்ய, நிதிச் சந்தைகளில் இருந்து 500 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சேகரிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் பிரேரித்துள்ளது. எனினும், நிதி அமைச்சு, இந்த திட்டம் பற்றிக் கவலை தெரிவித்துள்ளது. "மக்கள் மீது நியாயமற்ற சுமைகளை சுமத்துவது அறிவார்ந்த செயலாக இருக்காது" என்று அமைச்சானது சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்ததாகவும் "சர்வதேச நாணய நிதியத்தின் பக்கத்தில் இருந்து நெகிழ்வு காட்ட தயங்குவதானது அரசாங்கத்தை சீர்குலைக்க கூடும்," என்றும் எச்சரித்ததாகவும் கடந்த வார சண்டே டைம்ஸ் கூறுகின்றது.

தனது கவலைகளை அலட்சியம் செய்த அரசாங்கம், ஏற்கனவே சர்வதேச சந்தைகளில் இருந்து கடன் பெறுவதற்கு முயன்றுள்ளது. இந்த ஆண்டு கடனுக்கு வட்டி செலுத்துவதற்காக 1.5 பில்லியன் டாலர்களை அடுத்த சில மாதங்களில் பெறுவதற்கான முயற்சிகளுக்கு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் கொடுத்துள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாட்டின் நிதிய செயல்திறன் 2016ல் சரியான பாதையில் இருந்தது என்று கூறி, உருவாகி வரும் பொருளாதார பிரச்சினைகளை மூடி மறைக்க முயற்சி செய்தார். “நிதிய செயல்திறன் சரியான பாதையில் இருந்தது,” என்பதன் அர்த்தம், அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, கூடுதல் வரி அதிகரிப்புக்கள் மற்றும் சமூக செலவின குறைப்புக்களின் மூலம் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 5.4 சதவீதமாக வெட்டிக் குறைக்கும் என்பதாகும்.

எனினும், ஃபிட்ச் கடன் தர நிர்ணய நிறுவனம், "மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தை நெருங்கியுள்ள வெளிநாட்டு நாணய கடன், ரூபாய் தீவிரமாக மதிப்பிறங்கினால், அது உள்ளூர் நாணய அடிப்படையில் அதிக கடன் ஆபத்தை அதிகரிக்கின்ற நிலையில், இலங்கையின் நிதி நிலைமையை பலவீனப்படுத்துகிறது,” என்று எச்சரித்துள்ளது.

பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக அரிசி, தேங்காய் மற்றும் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரி ஆண்டு பணவீக்கம், 2017 வரவு-செலவுத் திட்டத்தில் சுமத்தப்பட்ட வரியின் தாக்கத்தினால், டிசம்பர் 5.8 சத வீதத்தில் இருந்து ஜனவரியில் 7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கடும் வரட்சி நாட்டின் பரந்த பகுதிகளை தாக்கியுள்ளதுடன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அரசாங்கம், கடந்த வாரம் ஒரு விலை ஏற்றத்தைத் தடுக்கும் பெரும் அவநம்பிக்கையான முயற்சியாக, அரிசி விலைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அது இந்தியா, வியட்னாம் மற்றும் இந்தோனேஷியாவில் இருந்தும் அரிசி இறக்குமதி செய்ய தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் தொடர்பு உள்ள பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசியை பதுக்கி வைத்து விலையை அதிகரிக்கச் செய்கின்றனர் என விவசாயிகள் சாட்டியுள்ளனர்.

இந்த சமூக வெடிப்பு நிலைமையின் அரசியல் விளைவுகளுக்கு அஞ்சி, சண்டே டைம்ஸ் அறிவித்ததாவது: "இந்த கோரமான கடன் சூழ்நிலையில், நிதி அமைச்சு, மத்திய வங்கி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்கள் உட்பட, அரசாங்கத்தின் முழு இயந்திரங்களும், கடன் நெருக்கடியின் பிரமாண்டமான சவாலை சந்திக்க சந்தோசமாக தயாரின்றி உள்ளதாகத் தெரிகிறது...”

உண்மையில், சிறிசேன-விக்கிரமசிங்கவின் அரசாங்கம், மக்கள் மத்தியில் அமைதியின்மையை தடுப்பதற்காக அவசரகால நிலையை அமுல்செய்வது மற்றும் பாதுகாப்பு படைகளை நிலைநிறுத்துவது பற்றி பரிசீலித்து வருகிறது. பிரதமர் விக்கிரமசிங்க கடந்த மாதம் இந்த வழிகளில் அமைச்சரவைக்கு ஒரு பிரேரணையை முன்வைத்தார். இந்த கடுமையான பிரதிபலிப்புக்கான சாக்குப் போக்காக இலங்கையின் 25 மாவட்டங்களில் 16 மாவட்டங்களை தாக்கியுள்ள வரட்சி சுரண்டிக்கொள்ளப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு அதன் ஆதரவு தெரிவித்து, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் ஒன்று கூறியதாவது: "நாட்டில் அவசரகால நிலை பொருத்தமானதாக இல்லாவிட்டாலும், இப்போதைக்கு ஒரு விழிப்புநிலை மற்றும் தீவிரம் தேவைப்படுகின்றது."

ஆசிரியரின் பரிந்துரை:

இலங்கையில் வர்க்க போராட்ட அலைகள்: தொழிலாளர்கள் தமது உரிமைகளை பாதுகாக்க சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும் [PDF]