ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The election of Trump and the crisis of the European Union

ட்ரம்ப் தேர்வானமையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியும்

By Peter Schwarz
10 February 2017

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடித்தளமமைத்த ரோம் உடன்படிக்கையின் அறுபதாவது ஆண்டு தினம் இந்த மார்ச் மாதத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஆண்டுதினமானது, ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (GDR) ஸ்தாபிக்கப்பட்டதின் 40வது ஆண்டுதினம் 1989 அக்டோபரில் கிழக்கு பேர்லினில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதை நினைவூட்டுகிறது. அடுத்த சில வாரங்களில் GDR பொறிந்து போனது. அதைப் போலவே ஐரோப்பிய ஒன்றியமும் இப்போது ஒரு மரண நெருக்கடியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. ரோம் உடன்படிக்கை வெற்றிகண்டிருந்ததாக சொல்லப்பட்ட அத்தனை பதட்டங்கள், மோதல்கள் மற்றும் முரண்பாடுகளும் மீண்டும் மேலெழுந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆவேசத்துடன் கண்டனம் செய்வதானது —பதிலடியான சுங்கவரி விதிப்பு குறித்த அவரது மிரட்டல், ஐரோப்பாவின் நலன்களைக் காவுகொடுத்து ரஷ்யாவுடன் ஒரு கூட்டணி காணலாம் என்று சூசகம் செய்வது, மற்றும் அவரது தலைமை மூலோபாயவாதியான ஸ்டீபன் பானனுக்கு ஐரோப்பாவில் உள்ள அதி-வலது தீவிரவாதிகளுடன் உள்ள நெருங்கிய தொடர்புகள் ஆகியவை— ஐரோப்பிய ஒன்றியமானது, அமெரிக்க ஆதரவு என்ற கடந்த காலத்தில் அதன் இருப்புக்கு ஒரு அடிப்படையான முன்நிபந்தனையாக இருந்த ஒன்றை இனியும் அடித்தளமாகக் கொள்ள முடியாது என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது.

2003 ஈராக் போரை விவாதித்த சமயத்தில், உலக சோசலிச வலைத் தளம், போருக்குப் பிந்தைய ஒழுங்கு என்பது “உண்மையில் வரலாற்று இயல்புகளில் இருந்தான ஒரு விலகலாக இருந்தது” என்று விளக்கியது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் எழுதினார், “ஐரோப்பாவை பலியிட்டு தனது உலக நிலையை வலுப்படுத்துவது தான் அமெரிக்க முதலாளித்துவத்தின் மிக அடிப்படையான போக்காக —ஒரு பெரும் ஏகாதிபத்திய சக்தியாக ஓரளவுக்கு தாமதமாக எழுந்ததில் தான் அதன் வேர் இருந்தது— இருந்து வந்திருந்தது.” இந்த பகுப்பாய்வு இப்போது ஊர்ஜிதப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான ட்ரம்ப்பின் நிலைப்பாடு என்பது நீண்டகாலமாக நடந்து வந்திருக்கக் கூடிய ஒரு அபிவிருத்தியின் மிகத் தீவிரமான வெளிப்பாடு மட்டுமேயாகும்.

பதட்டங்கள் ஆழமடைவதை வெளிச்சமிடும் விதமாக, வெள்ளை மாளிகையானது ஜேர்மனியை அமெரிக்காவின் ஒரு பொருளாதார எதிரியாக சித்தரிப்பது மேலும்மேலும் அதிகரித்துச் செல்கிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய வர்த்தக கவுன்சில் தலைவரான பீட்டர் நவரோ, ஜேர்மனியை கிட்டத்தட்ட நாணயமதிப்பில் கையாடல் செய்யும் நாடாக அறிவிக்குமளவுக்கு சென்றுவிட்டார். யூரோ “மொத்தத்தில் மதிப்புக்குறைக்கப்பட்டதாய்” இருந்தது, அது “மறைமுகமாய் Deutsche Markக்கு” நிகரானதாய் இருந்தது, ஜேர்மன் மார்க்கின் குறைந்த மதிப்பளவானது, ஃபைனான்சியல் டைம்ஸ் கூறிய விதமாய், “ஜேர்மனிக்கு அதன் முக்கிய வர்த்தக கூட்டாளிகளை விடவும் கூடுதல் அனுகூலத்தை அளித்தது” என்று அவர் தெரிவித்தார்.

இந்த வார ஆரம்பத்தில், ஜேர்மனியின் Bundesbank இன் தலைவரான Jens Weidmann பின்வருமாறு பதிலடி கொடுத்தார்: “ஜேர்மன் நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் மேல் போட்டித்திறன் மிகுந்து இருக்கின்றன என்றால் அதன் காரணம் அவை உலகச் சந்தைகளில் மிகச்சிறந்த இடங்களைப் பிடித்திருக்கின்றன என்பதுடன் புதுமையான தயாரிப்புகளைக் கொண்டு நம்பிக்கையூட்டுகின்றன.”

ஐரோப்பாவை அதன் சொந்த மேலாதிக்க நோக்கங்களின் பின்னால் ஒன்றுதிரட்டும் முயற்சியிலான பொருளாதார மற்றும் இராணுவ எதிர்நடவடிக்கைகளைக் கொண்டு அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு ஜேர்மன் பதிலிறுத்திருக்கிறது.

“எதிர்த்தாக்குதல்” என்கிற தலைப்பில் ஜேர்மன் வார இதழான Die Zeit வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியறிக்கையானது, ஐரோப்பிய ஒன்றியம் “அமெரிக்காவுக்கு எதிரான ஒரு வர்த்தகப் போருக்கு ஆயத்தமாக” தொடங்கி விட்டிருப்பதாக கூறுகிறது. “அமெரிக்காவிடம் இருந்தான தண்ட வரிகளுக்கு பதிலிறுப்பான பதிலடி நடவடிக்கைகளை” அது திட்டமிட்டு வருவதோடு மெக்சிகோ மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளுடன் ஒரு தடையில்லா வாணிப உடன்பாட்டிற்கும் அது முனைந்து வருகிறது. “அமெரிக்கர்கள் தங்களை மூடிக் கொள்கின்றதான இடத்தில், ஐரோப்பியர்கள், அதற்குப் பதிலாய், தங்களை இன்னும் திறந்து விட வேண்டும்” என்று அது தெரிவிக்கிறது.

ஜேர்மனி, அமெரிக்காவிடம் இருந்து வருகின்ற அச்சுறுத்தல்களையும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான நெருங்கிய உறவுகளுக்கான சாத்தியத்தையும், ஐரோப்பாவை தனது சொந்த மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காய் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. சிறிது காலமாய், பிரெக்ஸிட்டையும் ட்ரம்ப்பின் தேர்வையும் வெறுமனே ஒரு அபாயமாக சித்தரிப்பதைக் காட்டிலும் வாய்ப்புகளாய் சித்தரிக்கின்ற ஒரு விவாதம் ஜேர்மன் ஊடகங்களில் நடத்தப்பட்டு வந்திருக்கிறது.

இந்த வாரத்தில், மாஸ்ட்ரிச்ட் உடன்படிக்கையின் இருபத்தியைந்தாவது ஆண்டுதினத்தையொட்டி பதவியில் இருந்து அகலவிருக்கும் ஜேர்மன் ஜனாதிபதியான ஜோஅஹிம் கௌக் ஒரு உரை நிகழ்த்தினார், அதில் அவர் கூறினார், “பல ஆண்டுகளாய் அமெரிக்காவிடம் இருந்து தலைமையை பெற்று வந்திருக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக ஜேர்மனிக்கு, தன்னம்பிக்கை பெறுவதற்கும் தன்னாட்சி பெறுவதற்குமான காலம் வந்திருக்கிறது.” “ஐரோப்பிய திட்டம் அடித்தளமாகக் கொண்டிருந்த விழுமியங்களை கைவிடாமல்” பார்த்துக் கொள்வது அவசியம் என்று சிடுமூஞ்சித்தனத்துடன் வலியுறுத்திய அவர், ஐரோப்பா “தனது பாதுகாப்புத் திறன்களை அதிகப்படுத்துவதற்கு” அழைப்பு விடுத்தார்.

ஜேர்மனி, இரண்டாம் உலகப் போரில் அது தோல்வி கண்ட ஏழு தசாப்தங்களுக்கு பின்னர், மீண்டும் ஐரோப்பாவின் மேலாதிக்க சக்தியாக எழுவதற்கு முயற்சி செய்வதானது தேசங்களிடையேயான பதட்டங்களை அதிகப்படுத்தியிருப்பதோடு வலது-சாரி தேசியவாத சக்திகளுக்கு அரசியல் ஊட்டத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறது.

அநேக ஐரோப்பிய நாடுகளில், ஆளும் வர்க்கம் இந்தப் பிரச்சினையில் பிளவுபட்டிருக்கிறது. பிரான்சில், அதி-வலது ஜனாதிபதி வேட்பாளரான மரின் லு பென் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறுவதற்கு அழைப்பு விடுத்து ட்ரம்ப் மற்றும் புட்டினை நோக்கி நோக்குநிலையமைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், இறுதிச் சுற்றில் அவருக்கு போட்டியாளராக வரக் கூடிய வாய்ப்பிருக்கும் இம்மானுவல் மக்ரோன் ஒரு தீர்மானகரமான ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நட்புப் பாதை மீது வலியுறுத்தம் செய்கிறார்.

ஆயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியின் அடிப்படைக் காரணத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தேர்வானதில் நீங்கள் கண்டடைய முடியாது. அமெரிக்க தேர்தலுக்கு முன்பாகவே, ஐரோப்பிய ஒன்றியம் அதன் ஒட்டுமொத்த வரலாற்றிலுமான மிக ஆழமான நெருக்கடிக்குள் ஏற்கனவே நுழைந்து விட்டிருந்தது. பிரெக்ஸிட், யூரோ நெருக்கடி, தேசியக் கடன், அகதிகள் நெருக்கடி, கிழக்குக்கும் மேற்குக்கும் மற்றும் வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பதட்டங்கள், மற்றும் வலது-சாரி, பேரினவாதக் கட்சிகளது எழுச்சி ஆகியவை அதனை சில்லுச்சில்லாய் சிதறடிக்க அச்சுறுத்தின.

அதே சமயத்தில், வெடிப்பான சமூகப் பதட்டங்கள் மேற்பரப்புக்குக் கீழே அபிவிருத்தி கண்டு கொண்டிருக்கின்றன. ஐரோப்பாவில் பத்தில் ஒருவர் உத்தியோகபூர்வமாய் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளார், நான்கில் ஒருவர் வறுமைப்பட்ட நிலையிலோ அல்லது சமூகரீதியான விளிம்புநிலையிலோ இருக்கிறார். கிழக்கு ஐரோப்பாவின் வறுமைப்பட்ட நாடுகளில், சராசரி மாத ஊதியம் வெறும் 400 யூரோக்களாக இருக்கிறது. வசதியான நாடுகளிலும் கூட, மில்லியன் கணக்கான மக்கள் நிராதரவின் விளிம்பில் ஆபத்தான நிலைமைகளின் கீழ் வேலைபார்த்து வருகின்றனர்.

இராணுவமயமாக்குவதன் மூலமும், அரசு எந்திரத்தை வலுப்படுத்துவது மற்றும் ஆயுதபாணியாக்குவதன் மூலமும், எல்லைகளை மூடுவதன் மூலமும் மற்றும் முடிவில்லாத சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதன் மூலமும் ஆளும் வர்க்கமானது இந்த நெருக்கடிக்கு பதிலிறுப்பு செய்து வருகிறது. ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் இரண்டு அபாயங்களுக்கு முகம் கொடுக்கிறது, உண்மையில் இவை இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே ஆகும். முதலாவதாய், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொருளாதார ஒன்றியமாக இருப்பதில் இருந்து உள்முக சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை நசுக்குவதற்காய் தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு இராணுவ ஒன்றியமாகவும் உருமாறும் நிலைக்கு அது முகம்கொடுத்திருக்கிறது. உதாரணமாய், பிரான்ஸ் 15 மாதங்களாய் அவசரகாலநிலையின் கீழ் இருக்கிறது. இரண்டாவதாய், ஐரோப்பா வலது-சாரி எதேச்சாதிகார ஆட்சிகளின் கீழான தேசிய அரசுகளாக சின்னாபின்னமாக சிதறும் அபாயத்திற்கு அது முகம் கொடுத்துள்ளது. இந்த இரண்டு பயணப்பாதைகளுமே போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தை நோக்கிய வீழ்ச்சியையே அர்த்தமளிப்பவையாகும்.

ஆயினும், ட்ரம்ப்பின் மேலெழுச்சியிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடியிலும் மிகக் கூர்மையாக வெளிப்பட்ட, முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியானது, இருபதாம் நூற்றாண்டின் பெருந்துன்பங்களை மீண்டும் நேராமல் தடுக்கவல்ல ஒரேயொரு சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் ஒரு தாக்குதலுக்கான புறநிலை முன்நிபந்தனைகளையும் சேர்த்தே உருவாக்குகிறது.

ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்ற வேலைத்திட்டம் மட்டுமே ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கான ஒரே முற்போக்கு அடிப்படை ஆகும். போர், தேசியவாதம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கான ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் அத்தனை பிரதிநிதிகளையும் எதிர்க்கின்றதான ஒரு சுயாதீனமான, புரட்சிகர தலைமை தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமாக உள்ளது. அந்த தலைமையே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகும்.