ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Philippine President Duterte declares “all-out war” against Maoist party

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டுரேற்ற மாவோயிச கட்சிக்கு எதிராக "முழு அளவிலான போரினை" அறிவிக்கிறார்

By Joseph Santolan
8 February 2017

ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்றவின் பிலிப்பைன்ஸ் நிர்வாகத்திற்கும், பிலிப்பைன்ஸ் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (Maoist Communist Party of the Philippines - CPP) இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் திடீரென கடந்த வாரம் முறிந்துவிட்டன. செவ்வாய் கிழமையன்று, பிலிப்பைன்ஸ் இராணுவம், ஜனாதிபதியின் முழு அங்கீகாரத்துடன், CPP மற்றும் அதன் ஆயுதப்படை பிரிவான புதிய மக்கள் இராணுவத்திற்கும் (New People's Army - NPA) எதிராக "முழு அளவிலான போரை" அறிவித்தது.

டுரேற்ற ஜுலை மாதம் பதவி ஏற்றுக்கொண்டதிலிருந்து, அவரது கொலைகார போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கான ஆதரவின் கீழ், இராணுவ ஆட்சிக்கான ஒரு அமைப்பை கட்டமைத்திருப்பதுடன், இராணுவ சட்டத்தை அறிவிப்பதற்கான அவரது விருப்பம் குறித்து பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக பேசிவருகிறார். அதே நேரத்தில் அவர், உறுதியற்றதும் மற்றும் நிலையற்றதுமான தன்மையுடன் அதிகரித்த வகையில் வாஷிங்டனை விட்டு விலகி, பெய்ஜிங் உடனான மணிலாவின் இராஜதந்திர மற்றும் அரசியல் கூட்டுக்களை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு முனைந்து வருகிறார்.

டுரேற்ற இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகள் மட்டத்திற்குள்ளும்  சாதாரண தரத்திலானவர்களின் மத்தியிலும் அவரது நிர்வாகத்தின் மீதான ஆதரவிற்கு ஒரு அடித்தளத்தை வளர்த்து வருவதுடன், அவர்களுக்கு பாரிய ஊதிய உயர்வுக்கும் வாக்குறுதியளித்து வருகிறார். அவர் தனது போதைப்பொருள் எதிர்ப்பு போராட்ட வழக்கு விசாரணை என்பதிலிருந்து இராணுவத்தை நோக்கி கவனத்தை திருப்பி நகர்ந்துகொண்டிருக்கிறார், மேலும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் மூலமாக அரசு அடக்குமுறை சக்தி உருவாக்கப்பட்டதை வெறுக்கின்றதும், மற்றும் இராணுவ சட்டத்தை செயல்படுத்த மார்கோஸ் மூலம் நிலைநிறுத்தப்பட்டதுமான பிலிப்பைன்ஸ் ஊர்க்காவல் படை போன்று இராணுவத்தின் ஒரு பகுதியை மறுகட்டமைப்பு செய்யவும் அவர் உறுதிகொண்டிருக்கிறார். வெறுக்கப்படும் முன்னாள் சர்வாதிகாரிக்கு ஒரு அரசுமரியாதையுடனான மரணச்சடங்கினை நடத்தியதுடன், பிலிப்பைன்ஸ் வாழ்வின் அனைத்தையும் முற்றாக இராணுவமயமாக்கும் வகையில் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ரிசர்வ் அதிகாரிகள் பயிற்சி படை பிரிவு (Reserve Officers' Training Corps - ROTC) என்ற ஒரு கட்டாய கொள்கையை நடைமுறைப்படுத்தவும் முனைந்து வருகிறார்.

அதேநேரத்தில், தனது பாசிச திட்டநிரலை முற்போக்கானதாக காட்டிக்கொள்ள பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியையும், அதன் முன்னணி அமைப்புக்களையும் நம்பியிருக்கிறார். ஒரு இரண்டு கட்ட புரட்சியுடனான அவர்களது ஸ்ராலினிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் முன்னணி அமைப்புக்களும் அவரது வலதுசாரியின் ஜனரஞ்சக வாய்ச்சவடால்களை பரப்பி வருவதுடன், தற்போது 7000 பாதிக்கப்பட்டவர்களை ஏற்கனவே பலிகொண்டுள்ள அத்திட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்கும், ஏழைகளுக்கும் பயன் தரக்கூடியதாக கூறி, அவரது போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்திற்கும் ஊக்கமளித்து வருகின்றனர்.

சமூக நலத்துறை, விவசாய சீர்திருத்தம், வறுமை எதிர்ப்பு ஆணையம் என மூன்று அமைச்சரவை நிலை பதவிகளையும், மற்றும் டுரேற்ற நிர்வாகத்திற்கு ஒரு தொழிலாளர்துறைக்கான துணை செயலரையும் CPP நியமித்தது. CPP இன் பாதுகாப்பு முன்னணிக் குழுவான BANYAN மூலம் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜுலை 25 அன்று அளிக்கப்பட்ட ஒரு இரவு விருந்தின்போது கண்காணிப்புக் குழுக்களின் கொலைகள் குறித்த அவரது பகிரங்க ஆதரவை அறிவித்தார். BANYAN அதே நாளன்று, போதைப்பொருள் எதிர்ப்பு போராட்டத்தை எடுத்து நடத்துகையில் கொலைகளுக்கு நேரடி பொறுப்புகொண்டுள்ள பிலிப்பைன்ஸ் தேசிய பொலிஸ் தலைவர் பாட்டோ டி லா ரோசாவையும் அங்கு கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அழைப்புவிடுத்து ஒரு பேரணியையும் நடத்தியது. CPP இன் ஆயுதப்படை பிரிவான NPA, டுரேற்ற நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு ஆதரவாக போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அது மரணதண்டனை நிறைவேற்றும் என்று அறிவித்தது.

இதற்கிடையில், ஒரு "நீடித்த மக்கள் போராட்டம்" எனும் தனது மாவோயிச மூலோபாயத்தை பின்பற்றும் விதமாக 1969 ஆம் ஆண்டிலிருந்து பிலிப்பைன்ஸ் கிராமப்புறங்களில் ஒரு ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற CPP உடனான சமாதான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தொடங்கியது. அரசாங்கம் மற்றும் CPP இரண்டும், பேச்சுவார்த்தை காலத்திற்காக ஒருதலைபட்சமான போர் நிறுத்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. டிசம்பரில், டுரேற்ற ஒரு உரையில், கம்யூனிஸ்டுகள் "எனக்காக இறக்கவும் தயாராகவுள்ளனர்" என்பதனால், எனது நிர்வாகம் சீர்குலைவிலிருந்து பாதுகாப்பானதாக இருந்ததென்று அறிவித்து இருந்தார்.

ஜனவரி 19 அன்று, ரோமில் CPP இன் நிறுவனர் மற்றும் தலைவருமான ஜோமா சிசன் உடன் மூன்றாவது கட்ட சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, "அவர் உண்மையில் ஒரு தேசப்பற்றாளர், முற்போக்கான தலைவர், மக்கள் நலனுக்காக ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் செல்வந்த மேற்தட்டுக்களின் தன்னலக்குழுக்களுக்கு எதிராக போராடுபவர்" என்பதை டுரேற்றவினால் நிரூபிக்க முடியுமென நம்பப்படவேண்டும் என்று அவர் அறிவித்தார். ஜனவரி இறுதியில் டுரேற்ற, வாஷிங்டன் அதன் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் இருந்து CPP ஐ நீக்கவேண்டுமென்று கோரிக்கைவிடுத்ததன் மூலமாக இதற்கு விடையிறுப்பு செய்தார்.

இப்போது ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தத்தை முடிவுக்குகொண்டுவரவும், மேலும் இரண்டு வாரத்திற்குள் CPP ஐ பயங்கரவாதிகள் எனவும், அந்த கட்சிக்கு எதிராக ஒரு "முழு அளவிலான போரை" தொடங்க இராணுவத்திற்கு உத்தரவிடவும் டுரேற்ற அறிவித்திருக்கின்றார். என்ன நடந்தது?

கீழ்நிலை அதிகாரிகள் குழுவின் ஆதரவினை பெறுவதற்கு டுரேற்ற முனைந்துவருகின்றபோதும், இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் வாஷிங்டனில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள், மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களுடைய விசுவாசம் பென்டகனிடத்தில் உள்ளதே அல்லாது ஜனாதிபதி மாளிகையான Malacanang மீது இல்லை. உள்நாட்டு ஒடுக்குதல் எனும் கலையை பயன்படுத்தி வாஷிங்டன் மூலமாக அவர்கள் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளனர், மேலும் கடந்த 48 வருடங்களாக CPP உடனான போரில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிசன் மற்றும் CPP, அத்துடன் அவரது பூகோள அரசியல் மறுநோக்குநிலைப்படுத்துவது போன்றவை உடனான அவரது நல்லிணக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பாகவுள்ள இராணுவ தலைமையிலிருந்து எழும் சலசலப்புக்கள் குறித்து டுரேற்ற வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவை பகிரங்கமாக இரத்து செய்யும் பழக்கத்தினை இராணுவ உயர்மட்டம் பெற்றிருக்கிறது. அமெரிக்க படைகளுடன் இணைந்த எந்தவொரு கூட்டு போர் பயிற்சிகளும் இனிமேல் நீடிக்காது என்று அவர் அறிவித்தபோதும், அவரது பாதுகாப்பு செயலர் டெல்பின் லோரென்ஷானா செய்தியாளர்களிடம், இது உண்மை இல்லை என்றும், போர் பயிற்சிகள் தொடரும் என்றும் தெரிவித்தார். இதே பாணியில், CPP உடனான சமாதான பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மின்டானோவின் தெற்கு தீவுகள் மீது ஒரு தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை கடந்த பல மாதங்களுக்கும் மேலாக இராணுவம் நடத்தியுள்ளது.

அதேநேரத்தில், CPP தலைமையினுள் ஒரு வளர்ந்துவரும் துண்டுதுண்டாதல் உள்ளது. ஜனவரி 21 அன்று, Manila Standard கட்சியின் தலைமைக்குள் மூன்று கன்னைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அறிவித்தது: தற்போது நெதர்லாந்தை அடித்தளமாக கொண்ட, ஜோமா சிசன் மற்றும் கட்சியின் ஸ்தாபக மற்றும் பழைய உறுப்பினர்கள், டுரேற்ற மற்றும் ஒரு சாத்தியமான கூட்டணி அரசாங்கத்துடன் ஒரு சமரச உடன்பாடு செய்துகொள்ள முனைந்துள்ளனர்; 2014ல் அவர்கள் கைதுசெய்யப்பட்டது வரை சிசன் நாடுகடத்தப்படுவதில் கட்சிக்கு தலைமை வகித்த பெனிட்டோவும், வில்மா தியம்ஜோனும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு மட்டும் முனைந்து வந்தனர்; ஆனால் NPA இன் தேசிய நடவடிக்கை கட்டளையகத்தை (NPA National Operational Command) சார்ந்த ஜோர்ஜ் மேட்லாஷ், ஆயுத போராட்டம் தொடர்வதையே விரும்பினார். இந்த அறிக்கை அரசியல் நிகழ்வுகளுடன் நெருக்கமான தொடர்புகொண்டுள்ளது.

ஆகஸ்டில், சமாதான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டபோது மேட்லாஷ் இன் கீழ் NPA, இராணுவ படைகளுடன் ஒரு துப்பாக்கி மோதலை நிகழ்த்தியது. ஜனவரி 30 அன்று, கடைசி சுற்று சமாதான பேச்சுவார்த்தை முடிந்து ஐந்து நாட்களுக்கு பின்னர், மேட்லாஷ் தனது கட்டுப்பாட்டிலுள்ள கட்சியின் முகநூல் பக்கத்தின் மூலமாக, அடுத்த நாள் அவர் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தார். ஜனவரி 31 அன்று, மீண்டும் மீண்டும் இராணுவ ஊடுருவல்கள் நிகழ்வதனால், CPP இன் செயலூக்கம்கொண்ட ஒருதலைபட்சமான போர்நிறுத்தத்தை பிப்ரவரி 10 க்கு தள்ளிப்போடுவதற்கு அவர் அழைப்பு விடுத்ததாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதே நாளன்று, பிலிப்பைன்ஸின் தேசிய ஜனநாயக முன்னணி (National Democratic Front of the Philippines - NDFP) அமைப்பின் மூலமாக CPP இன் பேச்சுவார்த்தை குழுவிற்கு தலைமை வகித்தவரும், சிசனின் வலது கரமுமாகிய பிடெல் அக்கோய்லி, நெதர்லாந்து குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சிக்கான ஒரு தனிப்பட்ட முகநூல் பக்கம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். மேலும் அவர், "CPP-NPA தலைமையிலிருந்து அதன் ஒருதலைபட்சமான போர்நிறுத்த அறிவிப்பினை திரும்பப் பெறுவது குறித்து எந்தவித உத்தரவுகளும் பெறப்படவில்லை என்று இன்றைக்கு நாங்கள் அறிவிக்கிறோம். அதாவது CPP-NPA's ஒருதலைபட்சமான போர்நிறுத்தம் இன்னமும் நடைமுறையில் உள்ளது.... புரட்சிகர இயக்கத்தின் அணிகளின் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மை தன்மையினை வெளிப்படுத்தி காட்டவேண்டாம் என்று செயலர் டியூரேஷாவிற்கு (அரசாங்க பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்) நாங்கள் கடுமையாக அறிவுறுத்தி இருக்கிறோம்." என்று தெரிவித்தார்.

பிப்ரவரி 1 அன்று, மேட்லாஷ் கீழ் NPA படைகள் இராணுவத்துடன் நடத்திய துப்பாக்கி சண்டையில் மூன்று சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இந்த கொல்லப்பட்ட மூவரும் கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர், மேலும் அவர்களது உடல்களும் "நாசப்படுத்தப்பட்டுள்ளன" என்று இராணுவம் கூறுகிறது. அவர்களது உடல்கள் "நாசப்படுத்தப்படவில்லை" என்று மேட்லாஷ் விடையிறுத்தபோதும், 24 மணி நேரம் கழித்து அரசாங்கப் படைகள் அவர்களது உடல்களை கண்டெடுத்தபோது அவை மிகவும் சிதைவுற்ற நிலையில் இருந்தன. இன்னுமொரு தனிப்பட்ட எதிர்பாராத தாக்குதலில், NPA படைகள் மற்றொரு மூன்று சிப்பாய்களை கைப்பற்றியது.

நிகழ்வுகளின் ஓட்டத்தை வெளிப்படையாக கட்டுப்படுத்த முடியாத நிலையில், பிப்ரவரி 1 அன்று அக்கோய்லி, "அரசாங்கத்திற்கு உத்தரவாதம்" அளித்து, NDFP இன் ஒருதலைபட்சமான போர் நிறுத்தத்தை நீக்குவது குறித்த சமீபத்திய அறிவிப்பு சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அர்த்தமாகாது." என்று ஒரு அறிக்கை விடுத்தார். பிப்ரவரி 2 அன்று, "NDFP சமாதான பேச்சுவார்த்தைகளை கொண்டு முன்னோக்கி நகர்த்தும் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது" என்று மற்றொரு அறிக்கையை வெளியிட்டார். பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள மூன்று சிப்பாய்களும் விடுவிக்கப்படவேண்டும் என்று அவர் விடுத்த அறிவுறுத்தல்கள் இதுவரை அலட்சியம் செய்யப்பட்டுவருகின்றன.

நெதர்லாந்து குழுவிற்கும், மேட்லாஷ் இன் கீழ் NPA படைகளுக்கும் இடையே காணப்படும் வேரூன்றிய பதட்டங்களுடன், ஒரு வெற்றிகரமான அமைதி உடன்பாட்டை அடுத்து NPA படைகளின் மனநிலை குறித்து தெரியவருகிறது. NPA தற்போது, அதன் தலைமைத்துவத்திற்கு ஒரு மிகவும் இலாபகரமான மோசடியை செயல்படுத்துவதுடன், பாதுகாப்புக்காகவும், குறிப்பாக மின்டானோவா தீவுகளின் மீது நடவடிக்கையை தொடரும் அனுமதிக்காகவும், உள்ளூர் வணிகங்களிடமிருந்து வற்புறுத்தலுடன் கூடிய "புரட்சிகர வரியை" பெறுகிறது. ஜூன் மாதம் ஆற்றிய உரையில், தொழில் துறைக்காக NPA ஐ "ஆயுதம் தாங்கிய காவலர்களாக" மாற்றுவதற்கு சிசன் திட்டமிட்டார், அதாவது தொழிலாளர் வர்க்கத்தை அடக்குவதில் நேரடியாக ஈடுபட்டிருக்கும் ஒரு முகவராக மாறசெய்வது, அத்துடன் பிலிப்பைன்ஸ் ஆயுத படைகளுக்குள் அவர்களை ஒருங்கிணைப்பதுமாகும். சிசன், மேட்லாஷ் இருவருக்கும், அவர்களது அரசியல், பொருளாதார சிறப்புரிமைகளை பாதுகாத்துக்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப்படை பிரிவு இருக்கின்றது என்றாலும் அதன் தயார்நிலைமை குறித்து அவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேட்லாஷ் இன் அறிவிப்புக்கு டுரேற்ற, ஒருதலைபட்சமான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது என்று ஆரம்பத்தில் தயக்கத்துடன் விடையிறுத்தார். NPA சிப்பாய்களை தாக்கிய பின்னரும் அவர் சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்திருந்தால், இராணுவம் "என்னை கொன்றுவிடக்கூடும், அவ்வாறு நடந்திருக்கும்பட்சத்தில் நீங்கள் யாருடன் சமாதானம் பேசியிருக்கமுடியும்?" என்று அவர் ஒரு உரையில் எச்சரித்தார். பிப்ரவரி 3 அன்று, அரசாங்கம் அதன் ஒருதலைபட்சமான போர்நிறுத்தத்தை நீக்குவதன் மூலம் பதிலடி கொடுத்ததாகவும் அவர் அறிவித்தார்.

பிப்ரவரி 5 அன்று, டுரேற்ற வழங்கிய ஒரு உரையில் CPP க்கு எதிராக தனது முழு கோபத்தை வெளிப்படுத்தினார். அவர் கட்சியை "கெட்டுப்போன மதலையர்" போன்றது என்று கண்டனம் தெரிவித்தார், மேலும் CPP க்கும், ஒரு "பயங்கரவாத அமைப்புக்கும்" இடையே எந்தவொரு வேறுபாடும் கிடையாது என்றும் அறிவித்தார். அவரது நிர்வாகத்தின் எஞ்சிய பதவிக்காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு அவர் அக்கறை எதுவும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தார். அடுத்த நாள் காலையில் அவர், சமாதான பேச்சுவார்த்தைகளை அணுசரணையாக நடத்த சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட CPP இன் 13 தலைவர்களுக்கு கைது ஆணைகளை பிறப்பித்ததுடன், அன்று பிற்பகலில் அவர்களுள் ஒருவரை பொலிஸ் கைது செய்தது.

கட்சிக்கு எதிராக டுரேற்ற போர் அறிவித்தமைக்கு, "நாங்கள் பிப்ரவரி 22-24 இல் திட்டமிட்டப்படி பேச்சுவார்த்தையினை எதிர்நோக்குவதை தொடர்கிறோம்" என்று திரும்ப திரும்ப வலியுறுத்துவதன் மூலமாக நெதர்லாந்தில் CPP தலைமை விடையிறுத்தது. அன்று மாலை டுரேற்ற நடத்திய ஒரு அமைச்சரவை கூட்டத்தில் CPP நியமித்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அவர்கள், "நாங்கள் அமைச்சரவைக்குள்ளும், மீதமுள்ள நிர்வாகத்திலும் தொடர்ந்து ஈடுபடுவோம்..." என்று ஒரு அறிக்கை விடுத்தனர். "ஜனாதிபதி டுரேற்றவின் அரசியல் விருப்பமானது" "வரலாற்று முன்னேற்றங்களை" உருவாக்க சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அனுமதியளித்தது என்றும் பாராட்டினர், மேலும் அரசாங்கமும், CPP யும் "வறுமையையும், சமத்துவமின்மையையும் போருக்கான மூல காரணங்களாக காட்டும் அவர்களது உரைகளில் தாம் ஒரேவிதமான பார்வையை கொண்டிருக்கின்றோம் என்பதற்கு நெருக்கமாக அவர்கள் ஒருபொழுதும் இருக்கவில்லை." என்றும் அறிவித்தனர். சமாதான பேச்சுவார்த்தைகளில் இரு கட்சிகளின் அதிமுக்கிய கவலையாக (அதாவது டுரேற்றவுக்கும், மாவோயிஸ்டுக்கும்) இருப்பது, பிலிப்பைன்ஸ் மக்களின் நலன்களுக்காக "வறுமைக்கான மூல காரணங்கள் குறித்தும், ஒரு நீதியான, நீடித்த சமாதானத்தை அடைவது குறித்தும் உரையாடுவதில் தான் ஆர்வம் உள்ளது" என்று தொடர்ந்தனர்.

CPP யும் அதன் முன்னணி அமைப்புக்களும் டுரேற்றவை முற்போக்கானவர் என்றும், அவருடன் பணியாற்றுவதற்கான அவர்களது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தியும் அவரை பாராட்டுவது தொடருகின்றபோதும், இராணுவ தலைமை அவரது பிப்ரவரி 5 உரையினை பற்றிக்கொண்டது. பிப்ரவரி 7 அன்று, பாதுகாப்பு செயலர் லோரென்ஷானா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் நிகழ்த்திய உரையில், CPP க்கும், அபு சயீஃப் என்ற பயங்கரவாத குழுவிற்கும் இடையே எந்தவித வேறுபாடும் இருந்தது இல்லை என்று டுரேற்ற விளக்கி கூறியதாக அறிவித்தார். மேலும் அவர், இராணுவம் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஒரு "முழு அளவிலான போரை" தொடங்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.

அன்று மாலையில், "விரைவாக சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் மேற்கொள்ளுமாறு" டுரேற்றவிடம் முறையீடு செய்யும் பொருட்டு ஜனாதிபதி மாளிகை நோக்கி CPP இன் முன்னணி அமைப்புக்களின் மணிலா பிரிவுகள் சென்றன. அவர்களது அறிக்கைகளில் ஒன்றுகூட டுரேற்றவை கண்டனம் செய்யாததோடு, அனைவரும் இராணுவ தலைமையின் பிரிவுகள் அவரை தவறாக வழிநடத்துவதாக குற்றம் சுமத்தினர். ஜனாதிபதியின் பாதுகாப்பு படைகள் மூலமாக இந்த பேரணியினர் கலைக்கப்பட்டனர்.