ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Trump-Bannon government: Rule by decree

ட்ரம்ப்-பானன் அரசாங்கம்: ஆணைகளின் ஆட்சி

Patrick Martin
30 January 2017

முஸ்லீம் பெரும்பான்மை நாடுகள் என்பதுடன், அனைத்துமே அமெரிக்க இராணுவ தாக்குதலின் அல்லது பொருளாதார தடையாணைகளின் இலக்குகளாக இருக்கும் ஏழு நாடுகளில் இருந்து திரும்பிவரும் குடியிருப்பு அனுமதியுடையவர்களையும், விருந்தினராக வருபவர்களையும் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிப்பதில்லை மற்றும் அகதிகளை ஏற்பதை நிறுத்துவது என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவு, புதிய அரசாங்கத்தின் இயல்பை முன்னொருபோதும் இல்லாதளவில் எடுத்துக்காட்டுகிறது.

இந்த அரசாங்கம், சட்டங்கள் அல்லது அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டதாக இருக்காது. உண்மையில் ட்ரம்ப் ஒரு சிறுபான்மை ஜனாதிபதி என்றாலும், அவர் நிர்வாகமானது "பத்தில் ஒன்பது பங்கு சட்டத்தை உடமையாக கொண்ட" கொள்கையுடன் செயல்பட்டு, அரசின் மீது அதன் அதிகபட்ச கட்டுப்பாட்டைப் பிரயோகிக்க விரும்புகிறது. அது ஏற்கனவே ஆணைகளின் ஆட்சி வடிவத்தை ஸ்தாபித்துள்ளது.

எந்தவொரு காங்கிரஸ் வாக்கெடுப்பும் இல்லாமல், எந்தவித நீதித்துறை நடைமுறைகளும் இல்லாமல் அல்லது ஏதேனும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதா என்பதெல்லாம் ஆராயாமல், மத்திய சுங்கத்துறை மற்றும் புலம்பெயர்வோர் முகவர்களால் 100 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், சிலர் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். வயதானவர்களும், சிறு குழந்தைகளும், தங்களின் கணவரிடம் திரும்பும் மனைவிமார்களும் மற்றும் பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக கூட, அமெரிக்காவில் சட்டபூர்வமாக வாழ்ந்து வந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் அமெரிக்க கட்டுப்பாட்டிற்குட்பட்ட விமானங்களில் ஏறுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை வெறுமனே முதல் வாரயிறுதிக்குரியதாகும். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அனேகமாக பல ஆயிரங்களிலோ, மில்லியன்களிலோ கூட இருக்கலாம்.

பல மத்திய நீதிபதிகள் நாடுகடத்துவதை தடுக்கும் நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர், ட்ரம்ப் உத்தரவிட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்குகள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையில்தான் தமது தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். சிலர் சிறைக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றபோதினும், வெள்ளை மாளிகை உத்தரவு இன்னும் நடைமுறையில் இருப்பதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அதிகாரிகள் வாதிடுகின்றனர்.

அரசாங்கத்தின் முதல் பத்து நாள் நடவடிக்கைகளே, அனைத்திற்கும் மேலாக ட்ரம்பின் "தலைமை மூலோபாயவாதி" ஸ்டீபன் கே. பானன் மிகஅதிக அச்சுறுத்தலான மைய பாத்திரம் வகித்து வருவதைக் காட்டுகிறது. வெள்ளையின மேலாதிக்கவாதிகள், யூதயின எதிர்ப்பாளர்கள் மற்றும் alt-right இயக்கத்தின் நவ-நாஜிக்கள் என இவர்களின் ஒரு பலமான குழுவைக் கொண்ட ப்ரைய்ட்பார்ட் நியூஸ் (Breitbart News) பத்திரிகையின் முன்னாள் தலைவர் பானனை, வெள்ளை மாளிகையில் தலைமை தளபதி ரியன்ஸ் பிரைபஸ் க்கு சரிசமமாக முக்கியத்துவம் கொண்ட ஒரு பதவிக்கு ட்ரம்ப் பெயரிட்டுள்ளார் என்ற உண்மையை ஊடகங்கள் பெரிதும் குறைத்துக் காட்டியுள்ளன.

நாஜி ஆதரவாளரான சார்ல்ஸ் லின்ட்பேர்க் இரண்டாம் உலக போரின் ஆரம்ப நாட்களில் முதன்முதலில் பிரபலப்படுத்திய "முதலிடத்தில் அமெரிக்கா" கோஷத்தைப் பகிரங்கமாக தழுவி, தவறுக்கிடமின்றி ட்ரம்பின் பதவியேற்பு உரையில் பானனின் குரல்தான் பலமாக ஒலித்துக் கொண்டிருந்தது. பல தொழில்துறை பகுதிகளில் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் படுமோசமாக வீழ்ச்சி அடைந்திருப்பதன் மீதான உண்மையான சமூக மனக்குறைகளுக்கு முறையிடுவதில் அவரது உரை பாசிச பாணியை பின்பற்றியதுடன், அதேவேளையில் மக்களின் கோபத்தை அமெரிக்க முதலாளித்துவ உயரடுக்கிடம் இருந்து திசைதிருப்பி, அரசியல்ரீதியில் பயனுள்ள ஒரு பலிக்கடாவை நோக்கி, அதாவது இந்த விடயத்தில் சீனா, மெக்சிக்கோ மற்றும் ஏனைய வெளி நாடுகளை நோக்கி திசைதிருப்பியுள்ளது.

அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டுவதற்கு உத்தரவிட்டதில் இருந்து "சரணாலய நகரங்கள்" என்றழைக்கப்படுவதை ஒடுக்குவது வரையில், பயணியர்கள் மற்றும் அகதிகளுக்கு வெள்ளிக்கிழமை தடைவிதித்தது வரையில், ட்ரம்பின் பல தொடர்ச்சியான கடந்த வார அறிக்கைகள் மற்றும் நிர்வாக அரசாணைகளில் வெளிக்காட்டப்பட்ட இனவாத மற்றும் புலம்பெயர்வோர்-விரோத நிலைப்பாட்டிற்கு, கோல்ட்மன் சாக்ஸ்ஸின் ஒரு முன்னாள் நிர்வாகியும், ஹாலிவுட் தயாரிப்பாளரும் மற்றும் தேசிய பாதுகாப்பு அனுபவமில்லாத அதிதீவிர வலது ஊடகத்துறை அதிபருமான பானன் தீவிரமான ஆதரவாளராவார்.

வெளியுறவு மற்றும் இராணுவ கொள்கையை வழிநடத்துவதில் வெள்ளை மாளிகையின் பிரதான கருவியான தேசிய பாதுகாப்பு குழுவை (NSC) மறுசீரமைப்பு செய்வதற்கான நிர்வாகத்தின் ஓர் அரசாணையுடன், ட்ரம்ப் சனியன்று அவரது வெள்ளை மாளிகையில் பானனின் மைய நிலைப்பாட்டை அடிக்கோடிட்டார். அந்த உத்தரவு, “ஜனாதிபதியின் உதவியாளரும் தலைமை மூலோபாயவாதியுமான பானனை, முக்கியஸ்தர்களின் குழுவின் (Principals Committee), ஜனாதிபதி முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பாத்திரம் வகிக்கும் NSC இன் துணைக்குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்து கொள்ள உரிமையுடைய உயர்மட்ட அதிகாரிகளின் பட்டியலில் சேர்த்தது, மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறை செயலர் மற்றும் பாதுகாப்பு செயலரையும் உள்ளடக்கியது.

அதே உத்தரவு, முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் தேசிய உளவுத்துறை இயக்குனரை முக்கியஸ்தர்களின் கூட்டத்திலிருந்து நீக்கியது.

வாரயிறுதியில் இன்னுமொரு மேலதிக நடவடிக்கையும் நடந்துள்ளது, இது ட்ரம்பின் தலைமை அரசியல் ஆலோசகரது மனோபாவம் மீது மிகவும் அதிர்ச்சியூட்டும் உட்பார்வையை வழங்குகிறது. நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்ட "அப்பாவி மக்களுக்கு" அஞ்சலி செலுத்தும் விதமாக சர்வதேச இனப்படுகொலை நினைவு நாளை நடத்துவதற்கு வெள்ளை மாளிகை ஓர் அறிக்கை வெளியிட்டது, ஆனால் யூதர்கள் அல்லது யூத-எதிர்ப்புவாதம் குறித்து அதில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அந்த 117 வார்த்தைகள் கொண்ட அறிக்கையில் யூதர்களைக் குறித்து குறிப்பிடாமல் விட்டது தவறுதலாக நடந்ததல்ல, வேண்டுமென்ற செய்யப்பட்டது என்பதை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இது நேரடியாக நவ-நாஜி alt-right இயக்கத்தின் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்ட கூறுபாடாகும்: அதாவது, அந்த இனப்படுகொலையானது ஐரோப்பிய யூத மக்கள் மீது முயற்சிக்கப்பட்ட நிர்மூலமாக்கல் என்ற அதன் விஷேடமான உள்ளடக்கத்தினை குறிப்பிடாது, மேலும் பலர் கொல்லப்பட்ட ஒரு பொதுவான துயரமாக மாற்றப்பட்டுவிட்டது.

ட்ரம்ப் நிர்வாகம் சர்வாதிபத்திய ஆட்சியை நோக்கி நகர்ந்து வருவதை எதிர்க்க ஜனநாயகக் கட்சியோ ஒன்றும் செய்யப் போவதில்லை. ஜனநாயகக் கட்சியினர் புதிய அரசாங்கத்தின் அதிதீவிர வலது குணாம்சத்தைக் குறைத்துக் காட்டும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளனர், அதேவேளையில் அமெரிக்க உளவுத்துறை முகமைகளுடனான ட்ரம்பின் கருத்து முரண்பாடுகள் குறித்த விமர்சனங்களில் அவர்கள் மையமிட்டுள்ளனர்.

அதிகார மாற்றத்திற்கான இடைப்பட்ட காலத்தில், வெளியேறவிருந்த ஜனாதிபதி ஒபாமா அவருக்கு அடுத்து வந்தவரின் அதிதீவிர வலது மற்றும் நவ-பாசிசவாத கூறுபாடுகள் உடனான தொடர்புகள் குறித்து ஒன்றும் கூறாமல், அவரை மதிப்பிற்குரியவர் மற்றும் பகுத்தறிவாளர் என்று சித்தரித்திருந்தார், ஆனால் அதற்குப் பிந்தைய ட்ரம்ப் நிர்வாகத்தின் முதல் பத்து நாட்களிலேயே செனட் சிறுபான்மை தலைவர் சார்ல்ஸ் சூமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் பேர்ணி சான்டர்ஸ் போன்ற ஜனநாயகக் கட்சியினர் வெள்ளை மாளிகையின் தேசியவாத பொருளாதார கொள்கைகள் மீது அதனுடன் ஒத்துழைப்பதற்கான அவர்களது விருப்பத்தைக் காட்டியுள்ளனர்.

உள்நுழைவதன் மீதான தடையை எந்த சட்டபூர்வ அதிகாரம் அங்கீகரித்தது என்று சவால் விடுக்கப்பட்டபோது, ட்ரம்பின் செய்தி தொடர்பாளர்கள் ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மேற்கோளிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும், அது ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன் ஆகிய இதே ஏழு நாடுகளை அமெரிக்கா மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு மிகப்பெரும் அபாயத்தை முன்னிறுத்தும் நாடுகளாக முத்திரை குத்தி இருந்தது. ட்ரம்ப் தன்னைத்தானே, புஷ் மற்றும் ஒபாமா அமைத்த ஜனநாயக விரோத அடித்தளங்கள் மீது அமைத்து கொண்டு, அவற்றை பண்புரீதியில் புதிய மட்டங்களுக்கு எடுத்துச் செல்கிறார் என்பதையே இது காட்டுகிறது.

அண்மித்து 9/11 விமானக் கடத்தல்காரர்கள் அனைவரது தாயகமாக விளங்கும், ஆனால் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் இருந்து அத்துடன் இராணுவ தளவாட ஒப்பந்தங்கள் வரையில் அமெரிக்க பெருவணிகங்களது பரந்த செல்வவளத்திற்கான ஆதாரமாகவும் விளங்கும் சவூதி அரேபியாவுக்கு தடையாணைகளில் விதிவிலக்கு அளித்த புஷ் மற்றும் ஒபாமாவை ட்ரம்பும் பின்தொடர்கிறார். இந்த நிர்வாக அரசாணைக்கும் பயங்கரவாதத்திலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது: இதன் நோக்கம் புலம்பெயர்ந்தோர் மற்றும் உள்நாட்டில் பிறந்தவர்கள் என இருதரப்பின் உழைக்கும் மக்களையும் பீதியூட்டி, ஒட்டுமொத்தமாக அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது ஒரு நேரடியான தாக்குதலுக்கு வழிவகுப்பதாகும்.

இந்த வாரயிறுதி சம்பவங்கள், அமெரிக்க ஜனநாயகத்தின் வெற்றுத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகளை இழிவுபடுத்துவதில், ட்ரம்ப் நிர்வாகமானது, அமெரிக்க சமூகத்தின் செல்வந்த தட்டுக்களின் குணாம்சத்திற்கு அப்பட்டமான வெளிப்பாட்டை வழங்குகிறது. அவரது அரசு நடத்தும் பாணியானது, அவரது பில்லியனிய மந்திரிசபையும் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக சக்திகளுக்குரிய ஓர் ஆட்சி வடிவமாக உள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு உட்பட தொழிலாள வர்க்கத்தின் சொந்த வர்க்க நலன்களுக்கான போராட்டத்தில், அதன் சுயாதீனமான தலையீடே தீர்க்கமான கேள்வியாகும்.