ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan regime whips up hysteria over alleged assassination attempt on TNA parliamentarian

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் மீதான கூறப்படும் படுகொலை முயற்சி பற்றி இலங்கை ஆட்சி வெறிக்கூச்சலை தூண்டிவிடுகிறது

By K. Nesan,
18 February 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.சுமந்திரனுக்கு எதிராக படுகொலை முயற்சி நடந்ததாகக் கூறப்படும் விடயத்தில் இலங்கையின் ஆளும் உயரடுக்கால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற சட்டம்-ஒழுங்கு, தமிழர்-விரோத வெறிக்கூச்சல் ஒரு அரசாங்க ஆத்திரமூட்டலின் அத்தனை முத்திரைகளையும் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் அரசாங்கம் நாளுக்குநாள் அதிகமாய் மதிப்பிழந்து செல்கின்ற நிலையிலும், அதன் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் பெருகிச் செல்கின்ற நிலையிலும், அரசியல் ஸ்தாபகத்தில் இருக்கும் பல்வேறு பிரமுகர்களும் 1983-2009 இலங்கையின் உள்நாட்டுப் போர் காலத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீண்டும் உயிர் பெறுவது குறித்து எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர் அல்லது பாரிய கைது நடவடிக்கைகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுமந்திரனை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக கூறப்படுவது இந்த வெறிக்கூச்சலுக்கான அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆயினும், இந்த சதித்திட்டம் குறித்த செய்திகள் அனைத்தும் பெயர்கூறாத இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து வருவதாய் இருக்கின்றன என்பதுடன் ஊர்ஜிதப்படுத்தக்கூடிய வகையிலான எந்தவிதமான உண்மைவிபரங்களும் இல்லாதிருக்கின்றன.

ஒரு வெற்றிபெறாத படுகொலை முயற்சி குறித்த தகவல், இலங்கை அரசாங்கத்தின் ஒரு “முக்கிய-இடத்தில்” இருக்கும் ஆதாரத்திடம் இருந்து “பெயர்கூற விரும்பாத நிபந்தனையின்” கீழ் தமக்கு கிட்டியிருந்ததாக ஜனவரி 28 அன்று, இந்திய நாளிதழான ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அதே நாளில், டெய்லி மிரர் பத்திரிகையில் வெளியாகியிருந்த ஒரு கருத்துரையில், கனடாவை தளமாக கொண்ட பத்திரிகையாளரான டி.பி.எஸ்.ஜெயராஜ், இந்த சதித்திட்டம் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு சக்திகளால் தான் தீட்டப்பட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுத் துறை (TID) உறுதி செய்திருந்ததை மேற்கோளிட்டிருந்தார்.

அதற்கு 12 நாட்களுக்கு முன்பாக “மறுவாழ்வு” பெற்றுவந்த ஐந்து முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை TID கைதுசெய்திருந்தது என்பது பின்னர் தெரியவந்தது; யாழ்ப்பாணத்தில் டிசம்பர் 12 மற்றும் ஜனவரி 13 அன்று நடந்த பொது நிகழ்வுகளின் போது சுமந்திரனை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டதாக அவர்கள் மீது TID குற்றம்சாட்டியிருந்தது. அவர்கள் கைதுசெய்யப்பட்ட சமயத்தில் அவர்களிடம் போதைப் பொருட்கள் இருந்ததாகக் கூறப்பட்டதைத் தவிர்த்து வேறெந்த விவரங்களையும் TID ஆல் வழங்க முடியவில்லை.

குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க-ஆதரவு ஆட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வரும் நிலையில், அது இந்த சதித்திட்டம் குறித்த எச்சரிக்கைகளை உதாசீனம் செய்திருந்தது என்பதுதான். சுமந்திரன் கூறும்போது, அவர் யாழ்ப்பாணம் செல்கின்ற வழியில் இந்த சதித்திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் இருந்து தகவல் கிட்டியதாகவும் கொழும்பு திரும்புவதற்கு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆயினும், சுமந்திரன் யாழ்ப்பாண பயணத்தை தொடர்ந்ததோடு அங்கே அவருக்கு கொலை அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறப்பட்ட பொது நிகழ்விலும் கலந்துகொண்டார்.

விக்கிரமசிங்கவும் சிறிசேனவும் தனிப்பட்ட முறையில் தனக்கு தொலைபேசியில் அழைத்து தமது கவலைகளை வெளிப்படுத்தியதாக சுமந்திரன் மேலும் சேர்த்துக் கொண்டார்.

கூறப்படும் இந்த சதித்திட்டம் குறித்து பிப்ரவரி 1 அன்று சுமந்திரன் பேசும்போது, அது முன்னாள் விடுதலைப் புலிகளால் ஒழுங்கமைக்கப்படுவதாக கூறப்படுவதை அவர் மறைமுகமாக நிராகரித்ததோடு, இலங்கை அரசு சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய சாத்தியத்தைக் குறித்தும் பேசினார். லண்டனை மையமாகக் கொண்டு செயல்படும் IBC தொலைக்காட்சியிடம் பேசிய அவர் கூறினார்: “இந்த சதித்திட்டத்தின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெளிவாக தெரியவில்லை. யார் இவர்களை இயக்குகிறார்கள் என்பது பற்றியும் எனக்கு சரியாக தெளிவில்லை. வெளிநாட்டில் திட்டமிடப்படுவதாகச் சொல்லப்படுகிறது, ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்களும் யாரால் இயக்கப்படுகிறார்கள் என்பதும் தெளிவில்லை. இதற்கு முன்னர் இப்படி நடந்த இரண்டு மூன்று விடயங்களில் அரச புலனாய்வுக்கு சம்பந்தம் இருந்ததான வலுவான சந்தேகங்கள் இருந்தது.”

இலங்கையில் ஒரு புதிய, அமெரிக்க-ஆதரவு அரசியல் அமைப்பு சட்ட வரைவை தயாரிப்பதிலான தனது பாத்திரம், தனக்கு எதிரான படுகொலை முயற்சிகளுக்கு இட்டுச் சென்றிருக்கலாம் என்பதான ஊகத்தையும் சுமந்திரன் வெளிப்படுத்தினார். எவ்வாறாயினும், புதிய அரசியல் அமைப்பு சட்டமானது, தமிழ் சிறுபான்மையினருக்கு ஜனநாயக உரிமைகளை வழங்கும்விதமாகவும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களை ஐக்கியப்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்படவில்லை, மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு பொருந்திப் போவதற்கும், கொழும்பு ஆட்சிக்கு கூடுதலான போலிஸ் மற்றும் இராணுவ அதிகாரங்களை வழங்குவதற்கும் தக்கவிதமாகவே வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற வரையில், இவர் கூறுவது ஒரு அரசியல் மோசடியாகும்.

இலங்கை இராணுவத்துடன் ஒரு கூட்டாளியாக இருக்கவும், புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை வரைவு செய்வதில் அரசாங்கத்திற்கு “உதவவும்” அமெரிக்கா நோக்கம் கொண்டிருப்பதாக அமெரிக்க தூதர் அதுல் கெஷாப் கூறியிருந்தார். சிஐஏ இன் முன்னணி அமைப்பாக நம்பப்படும் அபிவிருத்தி மாற்றுகள் நிறுவனம் (Development Alternatives Incorporated), 2015 முதலாக  பாராளுமன்றத்திற்கு “உதவுவதை” தொடங்கியிருக்கிறது, அரசியல் அமைப்பு சட்டம் தொடர்பாக பாராளுமன்ற அலுவலர்களுக்கு பயிலரங்குகளை நடத்தியிருக்கிறது.

சுமந்திரனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கூறப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ வெறிக்கூச்சலானது, 2015 இல் அமெரிக்க ஆதரவுடனான ஆட்சிமாற்ற நடவடிக்கையில் சிறிசேன அமர்த்தப்பட்டதற்குப் பின்னர், இன்னும் குறிப்பாக அமெரிக்காவில் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதன் பின்னர், அபிவிருத்தி கண்டிருக்கும் அரசியல் நெருக்கடியின் உள்ளடக்கத்திற்குள்ளேயே பொருத்திப் பார்க்கப்பட வேண்டும்.

சிறிசேனவின் அரசாங்கம் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், அது அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எதனையும் அது பூர்த்தி செய்திருக்கவில்லை. அதற்கு மாறாய், சர்வதேச நாணய நிதியத்தால் உத்தரவிடப்பட்ட சீர்திருத்தங்கள் மக்களை நாசம்செய்து தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடையே ஆழமான கோபத்தைத் தூண்டியிருக்கிறது. அதேசமயத்தில், அமெரிக்கா, சீனா, இந்தியாவுக்கு இடையிலான பதட்டங்களும் அதிகரித்துச் செல்கின்றன. இது இலங்கையின் ஆளும் வர்க்கத்திற்குள்ளாக அரசியல் மோதல்களை தீவிரப்படுத்தியிருக்கிறது, ஏனென்றால் அமெரிக்கா, சீனாவுக்கு எதிரான தனது “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்” பில் இந்திய பெருங்கடலில் ஒரு புறக்காவல் இராணுவச் சாவடியாக இலங்கையை பயன்படுத்திக் கொள்வதற்கு முனைந்து வருகிறது.

சிறிசேனவின் அரசாங்கமும் சிங்கள-பேரினவாத எதிர்க் கட்சிகளும் ”தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்பெறுவதை” குறித்து எச்சரிப்பதற்காய் இந்த சதித்திட்டமாக கூறப்படும் ஒன்றை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்ப்புக்கு எதிரான போலிஸ்-அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதையே இது நோக்கமாய் கொண்டிருக்கிறது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது, ஊதிய அதிகரிப்புகள், ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் பிற சமூக நல உதவிகள் மூலமாக வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை உறுதியளிக்கும் ஒரு “100 நாள் வேலைத்திட்டத்தை” முன்வைத்து சிறிசேன அதிகாரத்திற்கு வந்தார். ஆயினும், இலங்கையின் உள்நாட்டுப் போரில் இருந்து எழுந்திருந்த பிரச்சினைகளில் எதுவொன்றுமே, 2009க்குப் பிந்தைய காலத்தில், தீர்க்கப்பட்டிருக்கவில்லை.

காணாமல் போனவர்களின் உறவினர்களும், இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் சொந்தக்காரர்களும், அரசாங்கத்திற்கும், சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராக உண்ணாவிரத போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். 2016 முடிவதற்குள்ளாக ஒரு புதிய அரசியல் அமைப்பு சட்ட கட்டமைப்பிற்குள்ளாக தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிட்டிவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் வாக்குறுதியளித்திருந்தார்.

இதுதவிர, இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்த ஒரு சர்வதேச விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படுவது மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்களில் இருந்து இராணுவம் திரும்பப் பெறப்படுவது ஆகியவற்றுக்கும் சம்பந்தன் வாக்குறுதியளித்திருந்தார். இந்த வாக்குறுதிகளில் எதனையும் நிறைவேற்றுவதற்கெல்லாம் வெகுதூரத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிசேன மற்றும் வாஷிங்டனின் கொள்கைகளின் உடந்தையாளராக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தின் ஒரு பாகமாக இருக்கிறது என்பதும், அதன் தலைவர்கள் மக்களிடம் இருந்து பதிலடிகள் கிடைக்கும் என்ற அச்சத்தில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்க்கிறார்கள் என்பதுமான உணர்வே தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளிடையே வளர்ந்திருக்கிறது.

"தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்பெறுவதாக” கூறப்படுவது குறித்த வெறிக்கூச்சல்களின் மத்தியில், அரசாங்கத்திற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமான எதிர்ப்பை வடக்கில் ஒடுக்குவதற்கு புதிய போலிஸ் படைகளை அனுப்புவதற்கு சிறிசேன முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே, அக்டோபரில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் போலிசால் கொலையுண்டதை காரணம்காட்டி, ஆயிரக்கணக்கான இராணுவ-பாணி விசேட அதிரடிப் படையினர் (STF) யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் மேலதிகமாக, குற்றவியல் இளைஞர் கூட்டங்களையும் போதைமருந்து கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக எனவும் STF படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சரும் இனவாத ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, “தீவின் பாதுகாப்பை” உறுதிசெய்யும் பொருட்டு உடனடியாக 12,000 முன்னாள் விடுதலைப் புலிகளையும் கைதுசெய்ய வேண்டும் என கோரினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ”விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்பெறக்கூடும்” என்பதை தனது அரசாங்கம் முன்பே எதிர்பார்த்திருந்ததாகக் கூறினார்; இராணுவ முகாம்களை அகற்றியும் இராணுவ உளவுப்பிரிவுக்கு உதவிகளை வெட்டியும் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியிருந்ததாக சிறிசேன மீது அவர் குற்றம்சாட்டினார்.

”பொது எதிர்க் கட்சிகள்” தலைமையிலான தமிழர்-விரோத பிரச்சாரத்தின் பகுதியாக இருக்கும் இத்தகைய கோரிக்கைகள், தொழிலாள வர்க்கத்தை இனவாத அடித்தளத்தில் துண்டாடும் நோக்கம் கொண்டவையாகும். உண்மையில், தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்குப் பகுதியில் இராணுவ உளவுப்பிரிவுதான் குடிமக்கள் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதோடு, குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் காரியாளர்கள் தொடர்ச்சியான கண்காணிப்பிலேயே இருந்து வருகின்றனர்.

வர்க்கப் பதட்டங்களை இனவாத பாதைகளில் திருப்பி விடுவதற்காய் “விடுதலைப் புலிகள் மீண்டும் உயிர்பெறுவது” குறித்த அச்சுறுத்தல்கள் 2009 முதலாகவே தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. 2014 மார்ச்சில் விடுதலைப் புலிகளின் மறுகுழுவாக்கத்தில் பங்குபற்றியதாக கூறி, இராஜபக்ஷவின் அரசாங்கம் 60 பேரைக் கைதுசெய்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலம்பெயர்ந்த சக்திகளுடன் ஒருங்கிணைந்து “பயங்கரவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முனைந்த” சந்தேகத்திற்குரிய நான்கு பேர் சிறைவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக ஏப்ரல் மாதத்தில், மேஜர் ஜெனரல் உதய பெரேரா உதயன் தமிழ் தினசரியிடம் தெரிவித்தார். பின்னர், இந்த “விடுதலைப் புலிகளாக சந்தேகிக்கப்பட்டவர்கள்” 2500 படையினர்களும் 18 இராணுவ வாகனங்களும் பங்கேற்ற ஒரு சண்டையில் கொல்லப்பட்டதாய் இராணுவம் தெரிவித்தது.

இலங்கைக்கு வெளியில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் சுமந்திரனுக்கு எதிராக சதிவேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது, இலங்கை அரசு அதில் சம்பந்தப்படவில்லை என்பதற்கான நிரூபணமாக ஆகிவிடாது. 2016 மார்ச்சில், சிங்கள செய்தித்தாள் ஒன்றில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தற்கொலைப்படை அங்கியும் மற்றும் வெடி சாதனங்களும் சாவகச்சேரியில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. அந்த ஆயுதங்கள் ஒரு “பயங்கரவாதத் தாக்குதலுக்காக” கொழும்புக்கு அனுப்பப்பட தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தவை என்று வெளிவிவகார முன்னாள் அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார். தாக்குதலை திட்டமிட்டதாக விடுதலைப் புலிகளின் முன்னாள் “தலைவர்கள்” 11 பேரை TID கைதுசெய்தது.

ஆயினும், அந்த சதிகாரர்களுக்கு அரசுடன் நெருக்கமான தொடர்புகள் இருந்தது பின்னர் தெரியவந்தது. பாரிஸில் வாழும் இலங்கை இராணுவ உளவுத்துறை அதிகாரிகள், தற்போது பாரிஸில் வாழுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அங்கத்தவர் ஒருவரின் உதவியுடன் இந்த ஆயுதங்களை சேமித்து வைத்திருந்ததாக கொழும்பில் இருந்து வெளியாகும் லங்காநியூஸ் பத்திரிகை பிப்ரவரி 12 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதற்காக மாதம் ஒன்றுக்கு 2 இலட்சம் இலங்கை ரூபாய் (US$1,327) தொகையை இராணுவம் அந்த வீட்டு உரிமையாளருக்கு செலுத்தியிருந்தது என தெரிவிக்கிறது.