ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fighting flares in eastern Ukraine amid continued NATO buildup against Russia

ரஷ்யாவிற்கு எதிராக தொடர்ச்சியான நேட்டோ ஆயத்தப்படுத்தல்களுக்கு இடையே கிழக்கு உக்ரேனில் சண்டை உக்கிரமடைகிறது

By Bill Van Auken
2 February 2017

உக்ரேனிய ஆயுத படைகளும் மற்றும் கூட்டு இராணுவ போராளிகள் குழுக்களும் டொனெட்ஸ் மாகாணத்தில் ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாத படைகளுடன் சண்டையிட்டு வருகின்ற நிலையில், இந்த புதுப்பிக்கப்பட்ட கிழக்கு உக்ரேனிய சண்டையில் இருதரப்பிலும் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர்.

இந்த சண்டை, 2014 இல் மற்றும் 2015 இன் குளிர்காலத்தில் வெடித்த சண்டை அளவிற்கு இரத்தந்தோய்ந்ததாக இல்லை என்றாலும், இது கனரக பீரங்கிகளும் மற்றும் குண்டுகளைச் சரம்சரமாய் வீசும் ராக்கெட் ஏவுகளங்களும் படைத்துறைசாரா பகுதிகளை நோக்கி கட்டவிழ்த்துவிட்டதைக் கண்டுள்ளது. இந்த குண்டுவீச்சு தாக்குதல், அரசு மற்றும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டு பகுதியைப் பிரிக்கும் எல்லை கோடான, 20,000 பேர் வசிக்கும் ஒரு தொழில்துறை நகரம் அவ்திவ்காவை (Avdiivka) தண்ணீர், மின்சாரம் அல்லது வெப்பமூட்டல் வசதி இல்லாமல் பாதியளவிற்கு உறைந்துபோகும் நிலைமைகளில் விட்டுள்ளது.

“எல்லா தரப்பிலும் இந்த மோதலில் அபாயத்திலிருப்பது அவ்திவ்காவில் உள்ள ஆயிரக் கணக்கான குழந்தைகளின் வாழ்க்கை மட்டுமல்ல, மாறாக விடயத்தைப் படுமோசமாக்கும் விதமாக தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாதிருப்பதானது, நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் வீடுகள் அபாயகரமாக குளிர்ந்து கொண்டிருக்கின்றன மற்றும் உடல்நல நிலைமைகளும் சீரழிந்து வருகின்றன என்பதையே அர்த்தப்படுத்துகிறது,” என்று செவ்வாயன்று உக்ரேனுக்கான யுனிசெஃப் பிரதிநிதி Giovanna Barberis தெரிவித்தார்.

பெப்ரவரி 2015 இல் பேரம்பேசி கொண்டு வரப்பட்ட மின்ஸ்க் உடன்படிக்கைகளின் வரையறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட போர்நிறுத்தத்தைப் புதுப்பிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியமும், நேட்டோ, அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்தும் அழைப்பு விடுத்துள்ளன. வாஷிங்டனும் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும், மாஸ்கோ க்கு எதிராக தடையாணைகளைப் பேணுவதற்கு ஒரு சாக்குபோக்காக, ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளே உடன்படிக்கைகளை மீறிவிட்டதாக மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டுவதைக் கையிலெடுத்துள்ளன. ஆனால் உக்ரேனிய அரசு படைகளின் அத்துமீறல்கள் அதுபோன்ற எதிர்கருத்துக்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை.

கியேவ் இல் அதிதீவிர வலதுசாரி மற்றும் மிகத் தீவிரமான ரஷ்ய-விரோத ஆட்சியைக் பதவிக்குக் கொண்டு வந்த அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவிலான 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து, டொன்பாஸ் பிரதேச கிளர்ச்சியாளர்கள் உக்ரேனிய அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் கோரிய பின்னரில் இருந்து, அச்சண்டைகளில் அண்மித்து 10,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வாஷிங்டனும் மற்றும் அதன் கூட்டாளிகளும் கிழக்கில் எழுந்த மேலெழுச்சியை இராணுவரீதியில் ரஷ்யா தான் ஆதரித்து தூண்டிவிடுகிறது என்று அதன் மீது குற்றஞ்சுமத்தின.

அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஒட்டி கிரிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதோடு சேர்ந்து கிழக்கு உக்ரேனிய நிலைமையானது தடையாணைகளை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டினாலும் கைப்பற்றப்பட்டது.

கியேவ் உம் மற்றும் டொனெட்ஸ் இல் உள்ள பிரிவினைவாதிகளும் சமீபத்திய இந்த வன்முறை வெடிப்புக்கு ஒருவரை ஒருவர் பழிசுமத்தி உள்ளன.

“நிலைமை ஸ்திரப்பாடு அடைவதைத் தடுக்கும் கண்ணோட்டத்துடன் மின்ஸ்க் உடன்படிக்கைகளின் கீழ் ரஷ்யா ஏற்றுக்கொண்ட கடமைப்பாடுகளை அது அப்பட்டமாக தொடர்ந்து மதிக்காமல் இருப்பதன் ஒரு தெளிவான அறிகுறியே, டொன்பாஸில் தற்போதைய இந்த தீவிரப்பாடு,” என்று உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.

கியேவ் தான் அத்துமீறலைத் தொடங்கியது என்பதற்கு ஆதாரமாக அவ்திவ்காவைச் சுற்றியுள்ள பகுதியில் "உக்ரேனிய ஆயுத படைகள் ஒவ்வொரு அடியாக முன்னோக்கி நகர்ந்து வருகின்றன" என்று பெருமைபீற்றிய உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஓர் ஆரம்ப அறிக்கையை, மாஸ்கோ, அதன் பங்கிற்கு, சுட்டிக்காட்டியது.

உக்ரேனின் நீடித்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் இருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காக ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ அரசாங்கம் வடிவமைத்த ஒரு திட்டமிட்ட "ஆத்திரமூட்டலின் விளைவே" இந்த சண்டை என்று கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்தார்.

இந்த ஆத்திரமூட்டலின் நிஜமான உள்நோக்கம், குடியரசு கட்சி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் வாஷிங்டன் மற்றும் மாஸ்கோ இடையிலான எந்தவொரு நல்லிணக்கத்தையும் தொந்தரவுக்கு உட்படுத்த மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான எந்தவொரு தடையாணைகளையும் தளர்த்துவதை தடுக்க கியேவ் தீர்மானகரமாக இருப்பதில் தங்கியுள்ளது என்று ஜேர்மன் நாளிதழ் Süddeutsche Zeitung எடுத்துரைத்தது.

“இப்போது உக்ரேனிய இராணுவம், பிரதான போக்கை அவர்களுக்குச் சாதகமாக மாற்றுவதற்கு முயன்று வருகிறது. பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன … ஜேர்மன் நிர்வாகத்தின் சில அங்கத்தவர்களது கருத்துப்படி, இந்த நிலைப்பாட்டிற்குப் பின்னால், தடையாணைகளைத் தளர்த்தும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டங்களை அவர் கைவிடச் செய்யும் அளவிற்கு நிலைமைகளை மோசமாக்கும் ஒரு முயற்சி இருக்கக்கூடும் என்பதை அவர்கள் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார்கள்,” என்று அப்பத்திரிகை குறிப்பிட்டது. “பேர்லினின் பொருள்விளக்கத்தின்படி, தடையாணைகளைத் திரும்ப பெறுவதைத் தடுக்க பொறோஷென்கோ எதையும் செய்ய தயாராக இருக்கிறார்.”

பென்டகன் மற்றும் சிஐஏ உடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் தனியார் அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான Stratfor உம், புதுப்பிக்கப்பட்ட சண்டை மீதான அதன் பகுப்பாய்வில் இதே போன்றவொரு உள்நோக்கத்தை எடுத்துரைத்தது: “உக்ரேனிய அதிகாரிகள் மேற்கு உடன் அதன் பேரம்பேசுவதற்கான இடத்தைப் பலப்படுத்த, ரஷ்யாவே திடீர் சீற்றத்தைத் தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டினாலும், இந்த மோதல் மீது கவனத்தை ஈர்க்கவும் மற்றும் மாஸ்கோ மீதான தடையாணைகளைத் தொடர்வதற்கு சர்வதேச ஆதரவை அணிதிரட்டவும் கியேவ் அதுவே வன்முறையைத் தூண்டி இருக்கலாம்.”

ரஷ்யாவை நோக்கிய குறைந்தளவிலான மோதல் நிலைப்பாடு எடுப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு நகர்வுக்கு எந்தவொரு சாத்தியக்கூறையும் இல்லாதாக்குவதற்கும் மற்றும் தடையாணைகள் மீதான ஆதரவுக்கு முட்டுகொடுக்க செய்வதற்கும் அவர் அரசாங்கம் எடுக்கும் முயற்சியின் பாகமாக, பொறோஷென்கோ ஜனவரி 30அன்று ஜேர்மனி சான்சிலர் அங்கேலா மேர்க்கெலை சந்திக்க பேர்லினுக்குப் பயணித்தார். அவரது விஜயத்தின் போது, மேர்க்கெல் தடையாணைகளை நீடித்து வைத்திருப்பதற்கு அவர் அரசாங்கத்தின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தி இருந்தார். டொன்பாஸ் நெருக்கடியைக் கையாள அவர் திரும்ப வேண்டியிருப்பதாக கூறி, பொறோஷென்கோ பேர்லினில் இருந்து அவசர அவசரமாக புறப்பட்டார்.

வாஷிங்டன், ரஷ்யா மீது பழி சுமத்தாமல், ஆனால் "ஆழமாக கவலை" கொண்டிருப்பதாகவும் மற்றும் "போர்நிறுத்தத்திற்கு அழைப்புவிடுப்பதாகவும்" வெளியிட்ட அறிவிப்பு மட்டுமே, கிழக்கு உக்ரேனில் நடந்து வரும் சண்டைக்கு வெளியுறவுத்துறையின் குறிப்பிடத்தக்க விடையிறுப்பாக இருந்தது.

ஒரு ரஷ்ய அரசு நாளிதழான Rossiiskaya Gazeta, அமெரிக்க கொள்கை மாற்றத்திற்கு ஒரு அறிகுறியாக அந்த அறிக்கை மீது கவனத்தை ஈர்க்க அழைப்புவிடுத்தது: “போர்நிறுத்தத்தை உடைப்பதற்காக அங்கீகரிக்கப்படாத குடியரசுகள் மீது வாஷிங்டன் குறை கூறவில்லை, கியேவ் க்கு எந்த ஆதரவும் அறிவிக்கவில்லை, ரஷ்யாவின் பாத்திரம் குறித்து ஒரேயொரு வார்த்தையும் கூறவில்லை … இந்த கூறுபாடுகள் வேறுவேறு விதமாக, ஒரு விதியைப் போல, உக்ரேன் விவகாரத்தில் பராக் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் வெளியான எல்லா அறிக்கைகளிலும் முக்கிய பாகமாக இருந்தன.”

மறுபுறம், ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் வெளியுறவுத்துறையின் தொழில்ரீதியிலான பணியாளர்களுக்கும் இடையே பகிரங்கமான பிளவு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டும் விதமாக, காட்சியில் இருக்கும் அமெரிக்க அதிகாரிகளோ அவர்கள் போக்கில் அதுபோன்ற எந்தவொரு மாற்றத்தையும் காட்டவில்லை. “ரஷ்யாவும் பிரிவினைவாதிகளும் தான் அவ்திவ்காவில் வன்முறையைத் தூண்டினார்கள்,” என்று செவ்வாயன்று வியன்னாவில் கூடிய ஒரு அவசர OSCE கூட்டத்தில், ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்புக்கான (OSCE) அமெரிக்க பொறுப்பதிகாரி Kate Byrnes குற்றஞ்சாட்டினார். “வன்முறையை நிறுத்த, போர்நிறுத்தத்தை மதிக்க, கனரக ஆயுதங்களைத் திரும்ப பெற மற்றும் தொடர்பு எல்லைக்கு அப்பால் புதிய பிரதேசத்தை முற்றுகையிடுவதற்கான முயற்சிகளை நிறுத்திக் கொள்ள நாங்கள் ரஷ்யாவிற்கு அழைப்புவிடுக்கிறோம்,” என்றார்.

கடந்த வாரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடன் அவரது பதவியேற்றதற்குப் பிந்தைய முதல் தொலைபேசி உரையாடலுக்கு முந்தைய நாள் ட்ரம்ப் அறிவிக்கையில், “தடையாணைகளைப் பொறுத்த வரையில், அதை குறித்து பேசுவது மிகவும் முன்கூட்டியே பேசுவதாக இருக்கும்,” என்றார். அந்த உரையாடலின் போதே கூட, தடையாணைகள் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் உக்ரேன் குறித்தும் அங்கே எந்த பிரத்யேக விவாதமும் இருக்கவில்லை என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதற்கிடையே, அமெரிக்க மற்றும் ஜேர்மன் இராணுவம் தொடர்ந்து ரஷ்யாவின் மேற்கு எல்லைகளுக்கு அருகே படைகளை ஆயத்தப்படுத்தி வருகின்றன.

திங்களன்று அமெரிக்க துருப்புகளும் மற்றும் டாங்கிகளும் போலாந்தில் ஒத்திகைகளுக்காக ஒன்றுகூடின, அவற்றின் தளபதிகள் அதை ரஷ்யாவை அச்சுறுத்துவதற்காக என்று ஒப்புக் கொண்டனர்.

“உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் சட்டவிரோதமாக கிரிமியாவை இணைத்துக் கொண்டமை" ஆகியவை இந்த நிலைநிறுத்தத்தை அவசியமாக்கி இருப்பதாக ஐரோப்பாவிற்கான அமெரிக்க தரைப்படை தளபதி லெப்டினண்ட் ஜெனரல் பென் ஹோட்ஜெஸ் வாஷிங்டன் போஸ்டு க்குத் தெரிவித்தார். “ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்ட கடைசி அமெரிக்க டாங்கி மூன்றாண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது ஏனென்றால் ரஷ்யா எங்களின் பங்காளி ஆகவிருப்பதாக நாங்கள் அனைவரும் நம்பினோம். ஆகவே இதை எல்லாம் திரும்ப பெற வேண்டியிருக்கும் என்று கருதினோம்,” என்றார்.

இதற்கிடையே செவ்வாயன்று ஜேர்மன் டாங்கிகளும் துருப்புகளும் லித்துவேனியா வரத் தொடங்கின, இரண்டாம் உலக போரின் போது நாஜிக்கள் ஆக்கிரமிப்புக்குப் பின்னர் முன்னாள் பால்டிக் சோவியத் குடியரசுக்குள் ஜேர்மன் இராணுவம் உள்நுழைவது இதுவே முதல்முறையாகும். ஜேர்மன் நிலைநிறுத்தம் 400 துருப்புகளையும் மற்றும் 30 டாங்கிகள் உட்பட சுமார் 200 வாகனங்களையும் உள்ளடக்கி இருக்கும்.

மொத்தத்தில், நிரந்தர "சுழற்சிமுறை" நிலைநிறுத்தலின் பாகமாக வடகிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவை தாக்கும் தொலைவிற்குள் சுமார் 3,000 இல் இருந்து 4,000 வரையிலான துருப்புகள் கொண்ட நான்கு படைப்பிரிவுகளை நகர்த்த நேட்டோ கூட்டணி பொறுப்பேற்றுள்ளது.

மாஸ்கோ உடன் உறவுகளை அபிவிருத்தி செய்வது குறித்து ட்ரம்ப் நிர்வாகத்தின் அறிக்கைகள் என்னவாக இருந்தாலும், ரஷ்ய எல்லைகளில் நேட்டோவின் ஆக்ரோஷ இராணுவ நிலைநிறுத்தத்துடன் சேர்ந்து உக்ரேனிய சண்டையானது, உலகின் இரண்டு மிகப் பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஓர் ஆயுத மோதலின் அச்சுறுத்தலைக் கூர்மையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.