ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s lavish welcome for Japan’s prime minister

ஜப்பான் பிரதம மந்திரிக்கு ட்ரம்பின் தாராள வரவேற்பு

By Peter Symonds
11 February 2017

நேற்று அமெரிக்காவிற்கு இரண்டு நாள் விஜயத்தைத் தொடங்கிய ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே க்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர் பாணியிலிருந்து வித்தியாசமாக அவ்விருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு ஆகியவற்றுடன் உற்சாகமான வரவேற்பும் வழங்கி உள்ளார். ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான உறவுகள் குறித்து அவ்விரு தலைவர்களும் உற்சாகத்தோடு இருந்தாலும் கூட, அங்கே பதட்டங்களும் நிச்சயமற்றத்தன்மையும் இருந்தன.

நவம்பர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பின்னர் ட்ரம்பை சந்திக்கும் முதல் உலக தலைவரான அபே, அமெரிக்காவுடனான ஜப்பானின் நீண்டகால இராணுவ கூட்டணி மீதும், அத்துடன் அவ்விரு நாடுகளுக்கு இடையே பொருளாதார உறவுகள் மீதும் மறுஉத்தரவாதங்களை கோருகிறார். ட்ரம்ப் அவரது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜப்பான் மற்றும் தென் கொரியா உடனான அமெரிக்க கூட்டணிகள் மீது கேள்வி எழுப்பி இருந்ததுடன், அவ்விரு நாடுகளது நியாயமற்ற வணிக நடைமுறை குறித்தும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

எவ்வாறிருப்பினும் நேற்று அபே ஐ ஆரத்தழுவிய ட்ரம்ப் பின்னர் கூறுகையில், இது "ஏனென்றால் நாங்கள் மிக, மிக சிறந்த பிணைப்பை கொண்டுள்ளோம். மிக, மிக சிறந்த புரிதலைக் கொண்டுள்ளோம். அது மாறுமேயானால் உங்களுக்கு அதை தெரிவிப்பேன் ஆனால் அது மாறுமென்று நான் நினைக்கவில்லை,” என்றார். அபே விஜயத்தின் போது, அவ்விருவரும் நான்கு முறை ஒருசேர உணவு விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள், அமெரிக்க ஜனாதிபதிக்கான பிரத்யேக விமானச்சேவை Air Force One இல் ஒருசேர பயணிக்க இருக்கிறார்கள், மற்றும் தெற்கு புளோரிடாவில் ஜனாதிபதியின் உல்லாச விடுதியில் ஒரு சுற்று கோல்ஃப் விளையாட இருக்கிறார்கள்.

அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரம்ப் அறிவித்தார்: “நம்மிரு நாடுகளுக்கு இடையிலான பிணைப்புகளும் மற்றும் நம்மிரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புணர்வும் மிகவும் மிகவும் ஆழமானது. இத்தகைய உறவுகளை இந்த நிர்வாகம் இன்னும் நெருக்கமாக கொண்டு வர பொறுப்பேற்றுள்ளது,” என்றார்.

கிழக்கு சீனக் கடலில் உள்ள, சீனாவில் தியாவு என்று அறியப்படும், சர்ச்சைக்குரிய சென்காயு தீவுத்திட்டுகளையும் உள்ளடக்கி இருந்த அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு உடன்படிக்கையை ஒரு கூட்டறிக்கை மீளஉறுதிப்படுத்தியது. “இத்தீவுகளில் ஜப்பான் நிர்வாகத்திற்கு குழிபறிக்க முயலும் எந்தவொரு ஒருதலைபட்சமான நடவடிக்கையையும்" அவ்விரு நாடுகளும் சேர்ந்து "எதிர்க்கும்" என்று அது அறிவித்தது. "முழு அளவிலான அமெரிக்க இராணுவ தகைமைகளைக் கொண்டு, அதன் பெருநிலம், படைகள் மற்றும் கூட்டாளிகளைப் பாதுகாக்க முழுவதுமாக" அமெரிக்கா "பொறுப்பேற்றுள்ளது" என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ், இதேபோன்ற மறுஉத்தரவாதங்களை வழங்கவும், தென் கொரியா மற்றும் ஜப்பான் உடனான இராணுவ உறவுகளைப் பலப்படுத்தவும் கடந்த வாரம் அவ்விரு ஆசிய நாடுகளுக்கும் விஜயம் செய்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், ஜப்பானிய பிரதம மந்திரிக்கு தாராளமான வரவேற்பும் மற்றும் ஆரவாரமாக அவரை நடத்தியமையும் யாரையும் முட்டாளாக்காது, வேறு யாரையும் விட குறிப்பாக அபே ஐ முட்டாளாக்காது. வெளியுறவு கொள்கை மீது கோட்பாட்டுரீதியில் ட்ரம்ப் "அனுமானிக்கவியலாத நிலையை" அதிகரித்திருக்கும் நிலையில், அமெரிக்க-ஜப்பான் கூட்டணி மீது கேள்விக்குறி தொக்கி நிற்கிறது என்பதோடு, ஜப்பானுக்கு எதிராக தண்டிக்கும் விதமான அமெரிக்க வர்த்தக நடவடிக்கையின் அச்சுறுத்தலும் தொடர்கிறது.

ட்ரம்ப் ஏற்கனவே, பசிபிக் இடையிலான பங்காண்மையிலிருந்து (TPP) விலகி கொண்டதன் மூலம் ஜப்பானுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியை வழங்கியுள்ளார். இது தனிப்பட்டரீதியில் அபே க்கும் ஒரு அடியாகும். TPP ஜப்பானிய பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டும் என்று அவர் பெரும் நம்பிக்கைகளை வெளியிட்டதோடு, அதை நிறைவேற்றுவது ஜப்பானிய பசிக்குத் தீனிப்போடும் என்று அழுத்தமளித்து வந்தார்.

வாஷிங்டனில் பேசுகையில், அபே TPP ஐ பாதுகாத்ததோடு, “நியாயமற்ற வணிகம்" மற்றும் அமெரிக்க வேலைகளின் இழப்பு குறித்த ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" சொல்லாடல் மீதும் ஒரு விளாசு விளாசினார். அமெரிக்க சாலைகளில் ஓடும் ஜப்பானிய கார்களில் "அதிக பெரும்பான்மை" அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவையே என்பதை அவர் அமெரிக்க வணிக தலைவர்களுக்கு தெரிவித்தார். அங்கே பெரும்பான்மையாக 70 சதவீதம், ட்ரம்ப் முன்னர் அவரது விமர்சனத்திற்குக் குறிப்பிட்டிருந்த ஒரு நிறுவனமான டொயோட்டா கார்கள் உள்ளன என்றும், அமெரிக்காவில் ஜப்பானிய பெருநிறுவனங்கள் 800,000 க்கும் அதிகமான வேலைகளை வழங்குவதாகவும் அபே தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்காவுடனான மிகப்பெரும் வர்த்தக உபரியில் கடந்த ஆண்டு சீனாவிற்கு அடுத்து இரண்டாவதாக இருந்த ஜப்பான் தான் இருந்தது என்பதால், ட்ரம்ப் ஜப்பானை இலக்கில் வைத்துள்ளார். செலாவணி கைப்புரட்டுக்காக ஜப்பான் மற்றும் சீனா இரண்டையுமே குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப் நேற்று அறிவிக்கையில், இம்மூன்று நாடுகளது செலாவணிகளும் விரைவிலேயே ஒரு நியாயமான, சமமான வாய்ப்பில் இருக்கும் என்றார். “நியாயமாக இருப்பதற்கு அதுவொன்று மட்டுமே வழி. வணிகத்திலும் மற்றும் ஏனைய விடயங்களிலும் நியாயமாக போட்டியிட அது ஒன்று மட்டுமே வழி,” என்றார்.

ஜப்பான் உடனான பொருளாதார பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஜப்பான்-அமெரிக்க பாதுகாப்பு உடன்படிக்கைக்கு ட்ரம்ப் மறுஉத்தரவாதம் அளித்துள்ளார் என்றால், அது பெய்ஜிங்கை எதிர்கொள்ள தயாரிப்பு செய்யும் வகையில் வாஷிங்டனின் கரங்களைப் பலப்படுத்துவதை நோக்கமாக கொண்டவொரு தந்திரோபாய நகர்வாகும்.

வாஷிங்டனில் அபே இன் வருகைக்குச் சற்று முன்னதாக, ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் ஒரு நீண்ட தொலைபேசி உரையாடலை மேற்கொண்டார், வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வ வாசிப்பின்படி, அது "முற்றிலும் சுமூகமாக இருந்தது, மற்றும் இருதரப்பு தலைவர்களும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மற்றவர்களது நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.”

குறிப்பாக ஜி க்கு ட்ரம்ப் கூறுகையில், அவர் "ஒரே சீனா" கொள்கையை "மதிப்பதாகவும்", அதுவே அமெரிக்க-சீன உறவுகளுக்கு அஸ்திவாரத்தை அமைப்பதாகவும் மற்றும் அதன் கீழ் தாய்வான் உட்பட சீனா முழுமைக்கும் பெய்ஜிங்கை ஒரே சட்டபூர்வ அரசாங்கமாக வாஷிங்டன் அங்கீகரிக்கிறது என்றும் தெரிவித்தார்.

சீனாவிற்கான ட்ரம்பின் "விட்டுக்கொடுப்பு" மீது நிறைய ஊடக விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் குறைந்தபட்சம் ஒரே சீனா கொள்கையிலாவது ஓர் உத்தியோகபூர்வ ஒப்புதல் இல்லை என்பதால் அவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே சீர்குலைந்து போயுள்ள உறவுகள் இன்னும் துரிதமாக சீர்குலைந்து போகக்கூடும்.

ட்ரம்ப் அவரது தேர்தல் வெற்றிக்கு பின்னர் தாய்வான் ஜனாதிபதி சாய் இன்ங் வென்னிடம் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்றதன் மூலமாக —இது 1979 க்குப் பிந்தைய அவ்விரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான முதல் அழைப்பாகும்— பெய்ஜிங்கிடம் இருந்து ஒரு கோபமான எதிர்விளைவை ஏற்கனவே தூண்டிவிட்டிருந்தார்.

டிசம்பரில் Fox News க்கு பேசுகையில், ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்தார்: “வணிகம் உட்பட ஏனைய விடயங்களில் சீனாவுடன் நமக்கு ஒரு உடன்படிக்கை ஏற்படாவிட்டால், 'ஒரே சீனா கொள்கையில்' நாம் ஏன் பிணைந்திருக்க வேண்டுமென எனக்கு தெரியவில்லை.” சீனா பெரிதும் விட்டுக்கொடுக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கும் பகுதிகளை அடையாளம் காட்டுமளவிற்கு ட்ரம்ப் சென்றார்.

அவர் கூறினார், “பாருங்கள், நான் கூறுவது இதைத் தான், நாணய மறுமதிப்பீட்டில் சீனாவினால் நாம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறோம்; அவர்கள் மீது நாம் வரி விதிக்காதபோதும், எல்லைகளில் நம்மீது பலமாக வரிவிதிக்கப்படுகிறது; தென் சீனக் கடலின் மத்தியில் ஒரு பாரிய கோட்டை கட்டப்பட்டு வருகிறது, அதை அவர்கள் செய்யக் கூடாது; இன்னும் வெளிப்படையாக கூறுவதானால், வட கொரியாவிற்கு முற்றிலுமாக உதவக்கூடாது,” என்றார்.

அமெரிக்காவுடனான ஜப்பானின் இராணுவ கூட்டணிக்கு ஜப்பான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கோருவதில் அவர் மனதை மாற்றிக் கொள்ளாததைப் போலவே, ஒரே சீனா கொள்கையை நோக்கிய அவர் மனோபாவத்தையும் ட்ரம்ப் மாற்றிக் கொள்ளவில்லை. ட்ரம்ப் ஐ பொறுத்த வரையில், வர்த்தக போர் நடவடிக்கைகளது அச்சுறுத்தல் போலவே, ஒரே சீனா கொள்கையும், பெய்ஜிங் ஆட்சியிடமிருந்து பிரதான விட்டுக்கொடுப்புகளை பெறுவதற்கு வெறும் ஒரு பேரம்பேசும் துருப்புச்சீட்டாக உள்ளது.

அபே உடனான அவரது பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ட்ரம்ப் அபத்தமாக அறிவித்தார்: “நாம் அனைவரும் ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கும் வகையில், சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் அப்பிராந்தியத்தில் ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்படுவோம் என நினைக்கிறேன்,” என்றார். யதார்த்தத்தில், அமெரிக்க ஜனாதிபதி, அடிமட்டத்திலிருந்து ஒரு விட்டுக்கொடுப்பு மாற்றி ஒரு விட்டுகொடுப்பாக சீனா விட்டுக்கொடுக்காவிட்டால், சீனாவுடனான ஒரு மோதலுக்கு களம் அமைத்துள்ளார்.

தென் சீனக் கடலில் அமெரிக்க P-3C ஓரியன் இராணுவ உளவு விமானத்திற்கும் மற்றும் சீன முன்னறிவிப்பு போர்விமானத்திற்கும் இடையே புதனன்று ஒரு நெருக்கமான மோதல் எடுத்துக்காட்டியதை போல, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான பதட்டங்கள் ஏற்கனவே கூர்மையாக உள்ளன. பென்டகன் அது எதை "பாதுகாப்பற்ற" எதிர்கொள்ளல் என்று முத்திரை குத்தியதோ அதற்காக அது சீனா மீது பழிசுமத்தியது.

இதுபோன்ற சம்பவங்கள் தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ ஓர் இராணுவ மோதல் மற்றும் சண்டைக்கான தூண்டுவிசையாக மாறிவிடலாம். நிர்வாகத்தின் மோதல் தன்மை கொண்ட "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" மற்றும் அப்பிராந்தியம் எங்கிலும் இராணுவ கட்டமைப்பை தொடர்ந்து, சீனாவை நோக்கிய ட்ரம்பின் ஆக்ரோஷமான நிலைப்பாடு, அபாயங்களைத் தான் உயர்த்தி உள்ளன.