ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

FBI director: “No such thing as absolute privacy in America”
The WikiLeaks exposures and the CIA’s threat to democratic rights

FBI இயக்குநர்: “அமெரிக்காவில் முற்றுமுதலான அந்தரங்கம் என்கிற ஒரு விடயம் கிடையாது”

விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களும் ஜனநாயக உரிமைகள் மீதான சிஐஏ இன் அச்சுறுத்தலும்

By Patrick Martin
10 March 2017

புதனன்று போஸ்டன் கல்லூரியில் நடந்த இணைய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய FBIயின் இயக்குநரான ஜேம்ஸ் கோமி கூறினார், “அமெரிக்காவில் முற்றுமுதலான அந்தரங்கம் என்கிற ஒரு விடயம் கிடையாது.” வாழ்க்கைத்துணைகளுக்கு இடையிலான, மதகுருக்கள் மற்றும் வழக்கறிஞர்களுடனான உரையாடல்கள் உள்ளிட அமெரிக்கர்கள் எந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவை “நீதித்துறையின் எல்லை”க்குள் தான் இருக்கிறதாம். ”பொருத்தமான சந்தர்ப்பங்களில், அந்த மிக அந்தரங்கமான உரையாடல்கள் குறித்து நம்மில் ஒருவர் சாட்சியமளிப்பதற்கும் கூட ஒரு நீதிபதி கட்டாயப்படுத்த முடியும்” என்று அவர் அறிவித்தார்.

நீதிமன்ற உத்தரவு என்பதெல்லாம் அமெரிக்காவின் இராணுவ-உளவு எந்திரத்திற்கு முற்றிலும் ஒரு பொருட்டே கிடையாது என்பதையும் கூட FBIயின் இயக்குநர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம், ஆனாலும் அவர் சொல்லவில்லை. தனது குடிமக்கள் என்ன சிந்திக்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு, நீதிமன்ற உத்தரவுகளை விடவும் மிக நேரடியான வழிமுறைகளாய் மிகநவீன இணைய ஆயுதங்களின் பயன்பாடு அமெரிக்க அரசாங்கத்துக்கு இருக்கிறது. செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் தொடங்கி அநேக கார்களை இயக்கும் கணினி அமைப்புகள் வரையிலும் மில்லியன் கணக்கான சாதாரண சாதனங்களை வேவு ஆயுதங்களாக மாற்றுவதற்கு சிஐஏ செய்துவந்திருந்த முயற்சிகளை அம்பலப்படுத்துகின்ற ஒரு விபர வெளியீட்டின் மூலம், செவ்வாய்கிழமையன்று விக்கிலீக்ஸால் வெளிக்கொணரப்பட்டதான ஆயிரக்கணக்கான ஊடுருவல் கருவிகளும் இதில் அடங்கும்.

அந்தரங்கத்திற்கென உரிமை ஏதும் கிடையாது என்ற FBI இயக்குநரின் அறிவிப்பானது பெருநிறுவன ஊடகங்கள் -இவை அவரது கருத்துக்களை வெகுகுறைவாக வெளியிட்டன- மற்றும் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளால் கொட்டாவியுடன் வரவேற்கப்பட்டது. சிஐஏ இன் இணையஆயுதங்கள் சேகர விவகாரத்தில் அம்பலமான ஜனநாயக உரிமைகளுக்கான அச்சுறுத்தல் என்ற விடயத்துக்கு காட்டுகின்ற அலட்சியங்களில் ஒன்றாய் இருக்கின்ற, ஒட்டுமொத்த விக்கிலீக்ஸ் வெளிக்கொணரல்களை நடத்தும் விதத்தை அடியொற்றியதாக இது இருந்தது.

ஊடகங்களை பொறுத்தவரை, அந்தரங்கத்திற்கான உரிமை குறித்து, அல்லது மற்ற ஜனநாயக உரிமைகள் குறித்து, தேசிய பாதுகாப்பு எந்திரத்தால் அச்சுறுத்தப்படுவது குறித்து கவலை எழுப்புகின்ற எவராயினும் அவர் ரஷ்யாவின் முகவர். இந்த நிலைப்பாட்டை வியாழக்கிழமையன்று வாஷிங்டன் போஸ்ட் ”விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் எதிரிகளுக்கு பெரும் சாதகம் செய்துதருகிறது” என்ற தலைப்பிலான அதன் முன்னணி தலையங்கத்தில் மிக அப்பட்டமாக முன்வைத்திருந்தது.

சிஐஏ ஐ திட்டவட்டமாக 100 சதவீதம் ஆதரிக்கும் ஒரு தொனியுடன் அத்தலையங்கம் அறிவிக்கிறது, “சிஐஏ இடம் இருந்து திருடப்பட்டு விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டிருக்கும் இணைய ஊடுருவல் கருவிகளது தொகுப்பு குறித்து சொல்லப்பட வேண்டிய முதல் விடயம் என்னவென்றால், இவை மக்களைக் கண்காணிப்பதற்கான சாதனங்கள் இல்லை, மாறாக தனிநபர்களது மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளை வேவு பார்ப்பதற்கானவை. அவை அமெரிக்கர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதற்கோ அல்லது முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை...”

அந்த தலையங்கம் தொடர்கிறது, “இந்த ஊடுருவல் முறைகளின் குறிகளாக இருப்பதும், இந்த ஆவணக்கசிவால் பிரதானமாக ஆதாயமடையவிருப்பதும் இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகள், வட கொரியாவின் வெடிகுண்டு தயாரிப்பவர்கள், ஈரானிய, சீன மற்றும் ரஷ்ய உளவாளிகள் மற்றும் பிற அமெரிக்க எதிரிகள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.” விக்கிலீக்ஸை ரஷ்யாவின் ஒரு சாதனமாக அவதூறு செய்யும் இந்த தலையங்கம், ஆகவே “நிகர விளைவாக, இணையவெளியில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக நிராயுதபாணியாவதற்கு அறிவுறுத்துகின்ற” “அந்தரங்க உரிமை ஆர்வலர்களை” கண்டனம் செய்கிறது.

சிறிதும் கூச்சமின்றி சிஐஏ ஐ இப்படி காப்பாற்றிப் பேசுவதைப் பார்க்கும் ஒருவருக்கு என்ன கேட்கத் தோன்றுகிறது என்றால், வாஷிங்டன் போஸ்ட், தானே அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு பிரச்சார அங்கம் என்றும் இராணுவ-உளவு எந்திரத்தை சித்தாந்தரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பாதுகாத்துப் பேசும் பணி தனக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்றும் ஏன் அறிவித்து விடக் கூடாது? அந்தத் தலையங்கத்தில் துளியும் ஒரு சுயாதீனமான, விமர்சனரீதியான மனப்பான்மை இல்லை. சிஐஏ தனது முகவர்கள் அமெரிக்கர்கள் மீது வேவுபார்ப்பதில் இருந்து “சட்டரீதியாக தடுக்கப்பட்டிருப்பவர்கள்” என்று கூறும் உறுதிமொழிகளை இந்த செய்தித்தாள் அப்படியே வாங்கிக் கொள்கிறது. அரசாங்கத்தின் தவறான நடத்தை குறித்து விபரங்களைச் சேகரித்து அவற்றை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்ற உண்மையான பத்திரிகையாளர்களாக நடந்து கொள்வதற்காக விக்கிலீக்ஸை அது கண்டனம் செய்கிறது.

46 ஆண்டுகளுக்கு முன்பாக, நிக்சனின் வெள்ளை மாளிகை மற்றும் சிஐஏ மற்றும் அந்நாளின் இராணுவத் தலைவர்கள் அனைவரும் இதே “தேசியப் பாதுகாப்பு” என்னும் கூக்குரல் எழுப்பி வன்மையாக ஆட்சேபித்த போதும், நியூயோர்க் டைம்ஸ் உடன் இணைந்து பென்டகன் ஆவணங்களை வெளியிட்ட ஒரு செய்தித்தாளிடம் இது நிகழ்கிறது. பென்டகன் ஆவணங்களைப் போன்ற எதையேனும் இன்று ஒருவர் போஸ்ட் (அல்லது டைம்ஸ்) பத்திரிகையிடம் இன்று கொண்டுவருவாரானால், ஆசிரியர்கள் உடனடியாக FBIக்கு அழைத்துச் சொல்லி அந்த ஆவணங்களைக் கொண்டுவந்தவரை கைதுசெய்ய வைப்பர் என்ற முடிவுக்கே யாரும் வர முடியும்.

ோஸ்ட்டின் நிலைப்பாடானது செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சியிலும் எண்ணிலா வடிவங்களில் மறுபிரசுரம் கண்டிருக்கிறது. உத்தியோகபூர்வ அரசாங்கத்தின் நிலையை முன்வைப்பதற்காக கிட்டத்தட்ட ஒவ்வொரு செய்தி நிகழ்ச்சியிலும் சிஐஏ மற்றும் NSA இன் முன்னாள் இயக்குநரான மைக்கல் ஹேய்டன் முன்னுக்கு கொண்டு வரப்படுகிறார். பெரும் ஒளிபரப்பு நிறுவனங்களில் எதுவொன்றுமே ஒரு விமர்சனபூர்வ நிலைப்பாட்டை எடுக்கவில்லை, அல்லது விக்கிலீக்ஸை மற்றும் சிஐஏ குற்றங்களின் மீதான அதன் அம்பலப்படுத்தலை ஆதரிக்கிற எவரொருவரையும் நேர்காணல் செய்ய விழையவில்லை.

ியூயோர்க் டைம்ஸில் சிஐஏ மற்றும் பென்டகன் பகிரங்கப்படுத்த விரும்பும் தகவல்களுக்கான பிரதான வடிகாலாக இருக்கும் டேவிட் சாங்கர் மூலம் இந்த வார ஆரம்பத்தில் அதன் வலைத் தளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி, ஊடகங்களுக்கும் இராணுவ-உளவு எந்திரத்திற்கும் இடையில் நிலவும் உறவின் ஸ்தூலமானதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளை தோல்விகாணச் செய்வதற்கான வழிமுறைகளை அமெரிக்க இராணுவம் உருவாக்கி வைத்திருந்ததாகக் கூறுகின்ற “வடகொரிய ஏவுகணைகளுக்கு ஏதிரான ஒரு இரகசிய இணையப் போரை ட்ரம்ப் மரபாக எடுத்துக் கொள்கிறார்” என்ற தலைப்பில் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை எதிர்கொள்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை விவரிக்கும் சென்ற ஞாயிறன்று வந்த முதல்-பக்க செய்திக் கட்டுரையை தானும் இன்னொரு டைம்ஸ் செய்தியாளருமான வில்லியம் பிராடும் சேர்ந்து தயாரித்த விதம் குறித்து சாங்கர் எழுதியுள்ளார். எதிர்நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதும், அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக வடகொரிய அணு ஆயுதத் தாக்குதலின் அச்சுறுத்தலுக்கு எதிராக இன்னும் அதிரடியான நடவடிக்கைகள் அவசியமாக இருந்தன என்பதும் தான், செய்தித்தாளின் முகப்புப் பக்கம் முழுவதும் விசிறப்பட்டிருந்த, இந்தக் கட்டுரையின் பிரதான சாரமாக இருந்தது.

ஒரு முக்கியமானதொரு பத்தியில் சாங்கர் விவரிக்கிறார், “இந்த விசாரணையின் மிக நுட்பமான பகுதி: அரசாங்கத்திடம் எங்களிடம் இருப்பதைக் கூறி, உத்தியோகபூர்வமான கருத்து என்னவாக இருக்கிறது (எந்த ஆட்சேபக் கருத்தும் இல்லை) என்பதை அறிய முயலுவது, அதன்பின் நடவடிக்கைகள் தொடர்வதை எங்களது வெளிக்கொணரல்கள் பாதிக்கக் கூடுமா என்பதை மதிப்பிடுவது”. அவர் விவரிக்கிறார், “ஒபாமா நிர்வாகத்தின் கடைசி வாரங்களில், தேசிய உளவு முகமை இயக்குநரின் அலுவலகங்களுக்கு நாங்கள் விஜயம் செய்தோம்”, அங்கே “நாங்கள் வெளியிடத் திட்டமிடுகின்ற விவரங்கள் குறித்து ஏதேனும் கவலைகள் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது முக்கியமானது, ஏனென்றால் அப்போது தான் அவற்றை நமது ஆசிரியர்களுடன் நாம் கலந்தாலோசிக்க முடியும்”

எளிமையான ஆங்கிலத்தில் இதைச் சொல்வதென்றால், நியூயோர்க் டைம்ஸின் முதற்பக்க “பிரத்யேக” கட்டுரையானது, டைம்ஸின் உயர் நடுத்தர வர்க்க வாசகர்களிடையே வடகொரியாவின் அணுசக்தித் திறன் குறித்த அச்சத்தைப் பரப்பி இந்தப் பிரச்சினயில் தேசிய ஊடகங்களிலான செய்திவழங்கல்களின் தொனியை நிர்ணயிக்கும் நோக்கத்துடனான இராணுவ-உளவு எந்திரத்தின் ஒரு செய்திக்குறிப்புக்கு மேலான எதுவொன்றாகவும் இல்லை. மிசிசிப்பி மாநிலத்தின் அளவே இருக்கக் கூடிய ஒரு வறுமைப்பட்ட நாடான வடகொரியாவின் மீது அமெரிக்காவின் ஒரு முன்கூட்டிய இராணுவத் தாக்குதலை ஆதரிக்கின்ற வகையில் பொதுக் கருத்தை வடிவமைப்பது தான் அரசியல் இலக்காக இருக்கிறது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கின் அத்தனை ஸ்தாபனங்களிலுமே ஜனநாயக நனவு முழுமையாக அரிக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது என்பது தான் விக்கிலீக்ஸ் வெளிக்கொணரல்களுக்கு ஊடகங்கள் அளித்த பதிலிறுப்பின் பிரதான முக்கியத்துவமாகும். கரிபீயன் மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுமையிலும் அதன் படுகொலை மற்றும் ஆத்திரமூட்டல் வழிமுறைகளுக்காக ”சாபக்கேடான கொலை நிறுவனம்” என ஜனாதிபதி லிண்டன் ஜோன்சனாலேயே வருணிக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் சொந்த கெஸ்டப்போவான சிஐஏ, அமெரிக்க ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்கள் குறித்த எந்த முக்கியத்துவத்துக்குரிய கணக்கெடுப்பிலும், முதலிடம் பெறும்.

நெருக்கடியால் பின்னப்பட்டிருப்பதும் வரலாற்றுரீதியாக அழிவுக்குள்ளான ஆளும் உயரடுக்கின் கடைசி வரிசை பாதுகாப்பாக திகழக் கூடிய அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவ-உளவு எந்திரத்தைக் காட்டிலும் பெரிய அபாயம் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வேறெதுவும் இல்லை.