ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Japan expands military operations in Asia

ஜப்பான் ஆசியாவில் இராணுவ செயல்பாடுகளை விரிவாக்குகிறது

By Peter Symonds
15 March 2017

ட்ரம்ப் நிர்வாகம் வட கொரியாவுடன் அதன் மோதலை அதிகரித்து, அப்பிராந்தியம் எங்கிலும், குறிப்பாக சீனாவுடன் பதட்டங்களை உயர்த்துகின்ற நிலையில், ஜப்பானிய அரசாங்கம் அதன் இராணுவ நடவடிக்கைக்களை குறிப்பிடத்தக்களவில் விரிவாக்கி வருகிறது. அமெரிக்கா உடனான அதன் மூலோபாய கூட்டணியின் குடையின் கீழ் செயல்படுகின்ற போதினும், டோக்கியோ அதன் சொந்த ஏகாதிபத்திய அபிலாஷைகளை பின்தொடர்வதற்காக இராணுவரீதியில் மீள்ஆயுதமயமாவதற்கு இந்த வாய்ப்பைச் சாதகமாக்கி வருகிறது.

பியொங்யாங்கிற்கான மற்றொரு அச்சுறுத்தும்ரீதியிலான எச்சரிக்கையாக, ஏவுகணை தாங்கிய ஜப்பானிய சிறுபோர்க்கப்பல் ஒன்று, நேற்று தென் கொரியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த அதே மாதிரியான சிறுபோர்க்கப்பல்களுடன் சேர்ந்து இரண்டு நாட்கள் கூட்டு ஒத்திகைகளை தொடங்கியது. தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை தடுப்பு கவச அமைப்புகளைக் கொண்ட அவை அனைத்து போர்க்கப்பல்களும், கடந்த வாரம் வட கொரியா சோதனை செய்த நான்கு ஏவுகணைகள் வந்தடைந்த பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

ஊடக கசிவுகளின்படி, ட்ரம்ப் நிர்வாகம் வட கொரியாவை நோக்கிய அமெரிக்க மூலோபாயத்தை மீளாய்வு செய்வதுடன், பியொங்யாங் ஆட்சி உடனான ஒரு உடன்படிக்கையை எட்ட “ஆட்சி மாற்றம்" மற்றும் இராணுவ தாக்குதல்களைப் பரிசீலித்து வருகிறது. இப்போது தென் கொரியாவும் அமெரிக்காவும் மிகப்பெரும் வருடாந்தர போர் சாகச ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளன, அவற்றில் வட கொரிய தலைமையைப் படுகொலை செய்வதற்கு சிறப்புப்படை பிரிவுகளது "தலைமை அழிப்பு வேட்டைகளின்" ஒத்திகைகளும் உள்ளடங்கும்.

ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு கடற்படை பயிற்சிகள், வட கொரியாவிற்கு எதிராக மட்டுமல்ல, சீனாவிற்கு எதிராகவும் செய்யப்படும் போர் தயாரிப்புகளின் பாகமாகும். Terminal High Altitude Area Defence (THAAD) எனும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை தடுப்பு அமைப்பை தென் கொரியாவில் நிலைநிறுத்த தொடங்குவதென்ற பென்டகனின் கடந்த வார முடிவை பெய்ஜிங் கண்டித்தது. அணுஆயுத சக்திகளுன் போர் புரிவதற்காக, கவச அமைப்புமுறை (Aegis system) உட்பட ஒரு பரந்த ஏவுகணை-தடுப்பு வலையமைப்பின் பாகமாக இந்த THAAD நிறுவுதல் நடக்கிறது.

அமெரிக்கா ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு இடையே, குறிப்பாக ஏவுகணை-தடுப்பு அமைப்புகள் மீது, நெருக்கமான இராணுவ கூட்டுறவுக்கு அழுத்தமளித்து வருகிறது. தென் கொரியாவின் முன்னாள் காலனி ஆட்சியாளரான ஜப்பானை நோக்கி தென் கொரியாவில் நிலவும் எதிர்ப்புணர்வால், டோக்கியோ மற்றும் சியோலுக்கு இடையிலான 2012 இன் உளவுத்தகவல்-பரிவர்த்தனை உடன்படிக்கையானது 2014 வரையில் காலதாமதமானது. தற்போதைய பயிற்சிகள் "தகவல் தொடர்புகள், உளவுத்தகவல்கள் மற்றும் கப்பல்களுக்கு இடையிலான ஏனைய தரவுகளைப் பரிவர்த்தனை செய்யும் தந்திரமான தரவு தொடர்பு அமைப்புகளை பயன்படுத்துமென" அமெரிக்க கடற்படை குறிப்பிட்டது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் "கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடிய ஒரு வக்கிரமான சுழற்சியை" முடிவுக்குக் கொண்டு வர எல்லா தரப்புகளுக்கும் அழைப்புவிடுத்ததுடன், “வட கொரியா அதன் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணைகள் மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களால் விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறியுள்ளது; மறுபுறம், தென் கொரியா, அமெரிக்கா—மற்றும் இப்போது ஜப்பானும்—மிகப்பெரியளவிலான இராணுவ பயிற்சிகளை நடத்துவதற்கு வலியுறுத்துகின்றன,” என்பதையும் சேர்த்துக் கொண்டது.

பியொங்யாங் ஒரு "முன்கூட்டிய தாக்குதலுக்கு" அமெரிக்கா தயாரிப்பு செய்து வருவதாக குற்றஞ்சாட்டியதுடன், அதன் பிரதேசம் தாக்கப்பட்டால் "தரைவழி, வான்வழி மற்றும் கடலுக்கடியில் இருந்தும் தயவுதாட்சண்யமின்றி அதிதுல்லிய தாக்குதல்களை நடத்த" அச்சுறுத்தியது. அதன் அணுகுண்டுகள் மற்றும் ஏவுகணை தகைமைகளின் விரிவாக்கத்துடன் சேர்ந்து இதுபோன்ற பொறுப்பற்ற வாய்சவுடால், நேரடியாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் கரங்களில் போருக்கான ஒரு சாக்குபோக்கை வழங்கி, அவர்களுக்கு சாதகமாகவே ஆகிவிடுகின்றன.

அமெரிக்கா மற்றும் தென் கொரிய கடற்படைகளுடன் ஜப்பானிய இராணுவம் கூடி ஒத்துழைப்பதுடன், மற்றொரு அபாயகரமான வெடிப்புப்புள்ளியில் அதாவது அமெரிக்க கடற்படையுடன் அது கூட்டு பயிற்சிகளில் ஈடுபடவுள்ள தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய கடல்எல்லை உட்பட மூன்று மாதகால நடவடிக்கைகளுக்காக அது அதன் மிகப்பெரிய போர்க்கப்பலான JS Izumo ஐ அனுப்பவும் திட்டமிடுகிறது.

தென் சீனக் கடலில் ஒரு ஜப்பானிய போர்க்கப்பலின் பிரசன்னம் நிச்சயமாக சீனாவுடனான பதட்டங்களை அதிகரிக்கும். அவ்விரு நாடுகளும் ஏற்கனவே கிழக்கு சீனக் கடலில் சீனாவில் தியாவு என்று அறியப்படும் சர்ச்சைக்குரிய சென்காயு தீவுத்திட்டுக்கள் விவகாரத்தில் ஒரு அபாயகரமான விட்டுக்கொடுப்பற்ற நிலையில் உள்ளன. இன்று ஜப்பானை வந்தடைய உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன், தென் சீனக் கடலில் உள்ள சீனாவின் தீவுத்திட்டுக்களை அது அணுகுவதைத் தடுக்க அச்சுறுத்தி உள்ளார் — இது போரைத் தூண்டக்கூடிய ஒரு பொறுப்பற்ற நடவடிக்கையாகும்.

பெயரளவில் ஹெலிகாப்டர் தாங்கி போர்க்கப்பலாகவும் மற்றும் நீர்மூழ்கிக்கப்பல் தகர்ப்பு போர்முறைக்காக வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படும் Izumo போர்க்கப்பல், அமெரிக்காவின் Osprey டில்ட்-ரோட்டார் போர்விமானங்களைத் தாங்கும் ஆற்றல் உடையதாகும். ஆகையால், யதார்த்தத்தில், ஏனைய பல நாடுகளில் செயல்படுவதை விட மிகப் பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலாகும். டோக்கியோ திட்டமிட்டே அதையொரு விமானந்தாங்கி போர்க்கப்பலாக கூறுவதில்லை. அந்த போர்க்கப்பலை ஒரு தாக்கும் ஆயுதமாக ஒப்புக்கொள்வதென்பது மேற்கொண்டும் ஜப்பானிய அரசியலமைப்பின் 9 ஆம் ஷரத்தை மீறுவதாக இருக்கும், அது சர்வதேச சர்ச்சைகளை தீர்ப்பதற்கு வழிவகையாக "போரை நிராகரிப்பதுடன்", இராணுவப் படைகளை ஒருபோதும் பேணக்கூடாதென வலியுறுத்துகிறது.

ஜப்பான் இராணுவத்தின் செயல்பாடுகள் அரசியலமைப்பை மீறாது இருக்க வேண்டுமென்ற நப்பாசையை பேணுவதற்காக அது தற்காப்பு படைகளாக கூறப்படுகின்றன. ஆனால் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் தற்போதைய வலதுசாரி அரசாங்கம் ஜப்பானை மீள்ஆயுதமயமாக்கவும், அதன் இராணுவத்தின் மீதிருக்கும் சகல சட்டரீதியிலான மற்றும் அரசியலமைப்புரீதியிலான கட்டுப்பாடுகளை நீக்கவும் தீர்மானகரமாக உள்ளது. ஜப்பானிய ஏகாதிபத்தியம் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை பின்தொடர இராணுவ பலத்தைப் பிரயோகிக்கலாம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அவர் ஜப்பானை ஒரு பலமான இராணுவத்துடன் ஒரு "வழமையான" தேசமாக மாற்ற விரும்புகிறார்.

2015 இல், பாரிய போராட்டங்களுக்கு பணிய மறுத்து, அபே அரசாங்கம் ஜப்பானிய இராணுவத்தை "கூட்டு தற்காப்பில்", அதாவது வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அமெரிக்க தலைமையிலான ஆக்ரோஷ போர்களில், ஈடுபட அனுமதிக்கும் சட்டமசோதாவை அடித்துபிடித்து நிறைவேற்றினார். இப்போது மூத்த அரசாங்க பிரமுகர்கள் வட கொரியாவிற்கு எதிராக ஜப்பானிய இராணுவம் "முன்கூட்டிய" தாக்குதல்கள் நடத்த திராணியுள்ளதாக இருக்க வேண்டுமென்று வாதிட —அதாவது தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணைகள் மற்றும்/அல்லது நீண்டதூர குண்டுவீசிகள் போன்ற தாக்கும் ஆயுதங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிட— பியொங்யாங் முன்னிறுத்தும் அச்சுறுத்தல் என்ற குற்றஞ்சாட்டுக்களை சுரண்டி வருகின்றனர்.

வட கொரிய ஏவுகணை சோதனைகளுக்கு பின்னர் ஜப்பானிய பாதுகாப்புத்துறை மந்திரி டொமொமி (Tomomi) கடந்த வாரம் பேசுகையில், முன்கூட்டிய இராணுவ தாக்குதல்களுக்கான தகைமையை பெறுவதை நிராகரிக்க மறுத்தார். “நான் எந்தவொரு அணுகுமுறையையும் ஒதுக்கிவிட மாட்டேன், நாங்கள் சர்வதேச சட்டங்களுக்கும் நமது நாட்டின் அரசியலமைப்பிற்கும் பொருந்திய விதத்தில் பல்வேறு வாய்ப்புகளைப் பரிசீலிப்போம்,” என்றார்.

அவர் கருத்துக்கள் ஜப்பானிய அரசியல் ஸ்தாபகத்திற்குள் நடந்து வரும் ஒரு பரந்த விவாதத்தின் பாகமாகும். கடந்த மாதம் Nikkei Asian Weekly அறிவிக்கையில் "ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் (LDP) தேசிய பாதுகாப்பு குழு, ஓர் உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் எதிரி நாட்டு தளங்களைத் தாக்கும் ஆற்றலை நாடு பெற்றிருக்க வேண்டுமென பரிந்துரைப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக" குறிப்பிட்டது. அதுபோன்றவொரு தகைமை "அரசியலமைப்பை மீறாது" என்று LDP இன் துணை ஜனாதிபதி Masahiko Komura வாதிட்டார். உண்மையில் 9 ஆம் ஷரத்தைக் கணிசமானளவிற்கு மாற்றும் அல்லது ஒட்டுமொத்தமாக அதை நீக்கும் ஒரு முழு அளவிலான அரசியலைமைப்பு திருத்தத்திற்கு LDP அழுத்தமளித்து வருகிறது.

Izumo ஐ அனுப்பியமையானது, ஆசியாவில் உள்ள கூட்டாளிகள் மற்றும் மூலோபாய பங்காளிகளுக்கு இடையே, அத்துடன் அமெரிக்காவுடனும், இராணுவ உறவுகள் மற்றும் கூட்டுறவை பலப்படுத்த —சீனாவுடனான போருக்கு அமெரிக்க மூலோபாய திட்டங்களுடன் முழுமையாக ஓரணியில் உள்ளது. இந்த ஜப்பானிய போர்க்கப்பல் ஜூலையில் இந்திய பெருங்கடலில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படை வாகனங்களுடன் நடக்கவுள்ள மலபார் கூட்டு கடற்படை ஒத்திகைகளில் இணைவதற்கு முன்னதாக சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையின் துறைமுகங்களில் நின்று செல்லும்.

இப்போதைக்கு அமெரிக்க திட்டங்களுடன் அணிசேர்ந்து நின்றாலும், அபே அரசாங்கம் ஜப்பானிய செல்வாக்கை மற்றும் நலன்களை ஆசியாவில் விரிவாக்கவும் மற்றும் 1930கள் மற்றும் 1940களின் போது ஜப்பானிய இராணுவவாதத்தின் குற்றங்களைக் குறித்த நினைவுகளை கடந்து வருவதற்கு உத்தேசிக்கிறது.

மோசமடைந்து வரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் புவிசார்-அரசியல் பதட்டங்களுக்கு இடையே, 1930 களில் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு இடையே ஆசிய மேலாதிக்கத்திற்கான போட்டி ஏற்பட்டு மில்லியன் கணக்கானவர்களை பலி கொண்ட ஒரு கொடூரமான பசிபிக் போருக்கு இட்டுச் சென்றதைப் போல, அவ்விரு ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையிலான ஒரு மோதலும் கூட வெடிக்கக்கூடும்.