ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Victimized Maruti Suzuki workers stage fresh protests

இந்தியா: பழிவாங்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்கள் மீண்டும் போராட்டங்களை நடாத்துகின்றனர்

By Deepal Jayasekera
13 April 2013

வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள மானேசரில் உள்ள மாருதி சுஜூகி இந்தியா (MSI) கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் பணிபுரியும் பழிவாங்கப்பட்ட 200 க்கும் அதிகமான தொழிலாளர்கள் நியாயத்திற்கு புறம்பாக பணி நீக்கப்பட்டதற்கும் மற்றும் நிறுவனத்தினதும், ஆளும் மாநில காங்கிரஸ் அரசின் தூண்டுதலின் பேரில் போலீசால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதற்கும் எதிராக போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

18 ஜூலை அன்று தொழிற்சாலையின் நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு விவாதத்தில் நிறுவனத்தின் மனித வளவசதிகள் மேலாளர் அவனிஷ் குமார் தேவ் கொல்லப்பட்டார். அவரின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணையையும் தொழிலாளர்கள் கோரி வருகிறார்கள். மாருதி சுஜூகி இந்தியா நிர்வாகம் மற்றும் மாநில அரசு, மானேசர் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையின் அடிமைக்கூலி நிலைமைகளுக்கு எதிராக மாருதி சுஜூகி இந்தியா தொழிலாளர்களின் ஆண்டுக்கணக்கான போராட்டத்தை நிர்மூலமாக்கும் அவர்களின் முயற்சிகளை விரைவுபடுத்த தேவின் இறப்பை தமக்கு சாதகமாக்கிக் கொண்டது.

MSI நிர்வாகத்தின் வேறு பிரிவினரால் மேலாளர் கொல்லப்பட்டார் என்பதை தொழிலாளர்கள் வற்புறுத்துகிறார்கள். ஏனென்றால் அவர் தொழிலாளர்களுடன் பரிவுணர்வு கொண்டவராகவும், பிப்ரவரி 2012இல் அவர்களின், 'மாருதி சுஜூகி தொழிலாளர் சங்கத்தை' (MSWU) பதிவு செய்யவும் கூட உதவினார். நிறுவனத்தின் கைக்கூலியான ஒரு தொழிற்சங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து MSWU வை அமைக்க தொழிலாளர்கள் பல மாதங்களாகப் போராடினார்கள். தங்கள் மீதான தேவ்வின் பரிவின் காரணமாக அவருக்கு எந்தவொரு காயமும் ஏற்படுத்த தமக்கு காரணம் இல்லை என வற்புறுத்தினார்கள்.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் MSI, அதன் நிரந்தர தொழிலாளர்களில் 546 மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் 2000 பேரையும் வெளியேற்றியது.அவர்களை மறுநியமனம் செய்யவும், ஜூலை கடைசியிலிருந்து சிறையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் MSWU வின் அனைத்து தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட 147 தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும் தொழிலாளர்கள் கோரி வருகிறார்கள். அனைவரும் இல்லை என்றாலும் கூட,சிறையில் அடைக்கப்பட்ட அநேக தொழிலாளர்கள், தேவ் இன் கொலை உள்ளிட்ட கொலைக் குற்றங்களுக்கு குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலத்தைப் பெற காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டதோடு சித்திரவதையும் செய்யப்பட்டார்கள். [பார்க்கவும் இந்தியா: சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள்]

MSWU இன் அனைத்து தேர்தெடுக்கப்பட்ட தலைமையும் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அடைக்கப்பட்ட பின்னர், மாநில அரசு மற்றும் MSI நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தைத் தொடர தொழிலாளர்களின் ஒரு குழு, இடைக்கால தலைமையை உருவாக்கினர். தொழிலாளர்களின் மீது அந்தளவுக்கு விரோதம் கொண்ட அரசாங்கமாக இருப்பதால் அது ஜனவரி இறுதியில் காரணமேதுமின்றி இடைக்கால தலைமையில் ஒருவரை சிறையிலடைத்தது.

மிக அண்மையில் மார்ச் 24 அன்று மாநில அரசின் தொழில்துறை அமைச்சர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலாவின் வீட்டிற்கு முன்னால் தொழிலாளர்கள் எதிர்ப்பைக் காட்டும் போராட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான கிராமத்தவர்களும் ஏனைய தொழிலாளர்களும் மற்றும் MSI தொழிலாளர்களின் குடும்ப அங்கத்தவர்களும் தமது ஆதரவை அதற்கு வழங்கினர்.

நான்கு நாட்களுக்கு பின்னர் வீட்டின் அருகில் ஒரு கொட்டகை அமைத்து வேலையிலிருந்து நீக்கப்பட்ட நான்கு தொழிலாளர்களின் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து அவர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தார்கள்.தொழிலாளர்கள் தொழில்துறை அமைச்சருடன் ஒரு சந்திப்புக்கு கோரிக்கை வைத்தார்கள்.

எதிர்பார்த்தபடி, சரியாக இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 30 அன்று மாநில காங்கிரஸ் அரசாங்கம், ஒரு திறந்த கூடாரத்தில் மழை, வெய்யிலை எதிர்த்து நின்ற இந்த அமைதியான மற்றும் நிராயுதபாணியான தொழிலாளர்களிடமிருந்து தொழில்துறை அமைச்சரை பாதுகாப்பது என்ற போர்வையில் ஒரு பெரிய போலீஸ் படையை அனுப்பியது. அதேவேளை தொழிலாளர்கள், அமைச்சரை சந்திக்க நிர்ப்பந்திக்க வேறுவழிவகைகளை கையாளலாம் எனவும் எச்சரித்தனர்.

இறுதியாக மத்திய தொழில்துறை அமைச்சர் சிங் மற்றும் ஹரியானா முதலமைச்சர் புபிந்தர் சிங் ஹூடா, போராட்டத்திற்கு மேலதிக ஆதரவு சேர்வதை தடுக்க MSWU இன் இடைக்கால தலைமையை ஏப்ரல் 3 அன்று சந்திக்க ஒத்துக்கொண்டார்.

மாநில தலைநகரம் சண்டிகாரில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பின் MSWU இன் இடைக்கால தலைமை கீழ்காணும் அறிக்கையை வெளியிட்டது:

தங்கள் பெயர்களில் வழக்குகள் இல்லாத தொழிலாளர்களை திரும்பவும் வேலைக்கு எடுத்துக்கொள்ள குர்கானில் உள்ள கூடுதல் தொழிலாளர் ஆணையருக்கு, தகவல் தெரிவிக்கப்படும் என்று முதலமைச்சரும், தொழில்துறை அமைச்சரும் உறுதிமொழி வழங்கினார்கள். ஹரியானா மாநிலத்திற்கு எதிராக ஜியா லால் மற்றும் ஏனையோரினதும் குற்ற வழக்குகள் நடந்துக்கொண்டிருக்கும்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்கள் மீது பழிக்குப்பழி வாங்கப்பட மாட்டார்கள் எனவும் வாக்குறுதி கொடுத்தார்கள்.

முழுவதும் பயனற்ற இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது என்ற போதிலும் அவர்களின் போராட்டம் முழுவதும் அரசாங்கமானது MSI இன் ஒரு கருவியாக திறம்பட செயல்பட்டது என MSWU இன் இடைக்கால தலைமையும் கூட ஒத்துக்கொள்கிறது.

நிர்வாகத்தின் கைக்கூலி சங்கத்தின் அதிகாரத்தை தூக்கிநிறுத்துவது,நிறுவனத்தின் நிபந்தனைகளை ஆதரிப்பது அதாவது தொழிலாளர்கள் ஒரு நன்நடத்தை பத்திரத்தில் கையெழுத்திடுவது, அதாவது தொழிலாளர்கள் நக்சலைட்களின் (அல்லது இந்திய அரசாங்கத்தின் மொழிப்பாணியில் தீவிரவாதிகள்) வேண்டுகோளின் பேரில் இயங்கினார்கள், தொழிலாளர்களின் தொழிற்துறை நடவடிக்கையை நசுக்க அல்லது தடைசெய்ய ஒட்டு மொத்த காவல்துறையை அணித்திரட்டுவது ஆகியவை இதில் அடங்கும்.

MSWU இன் இடைக்கால தலைமையுடனான ஒரு முந்தைய சந்திப்பின் போது ஹூடா, தொழிலாளர்களை குற்றவாளிகள் எனக் குறிப்பிட்டார். சுர்ஜேவாலா அவர் பங்கிற்கு, ஒரு மாநில தொழில்துறை அமைச்சராக தனியார் பெரு நிறுவனங்களுக்கு நிலத்தை பெற்றுக்கொடுப்பது மட்டுமே தனது பொறுப்பு எனக்குறிப்பிட்டார்.

ஹரியானா அரசாங்கம், மத்தியில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் (United Progressive Alliance) பங்காளியாக நடந்துகொள்கிறது. மாருதி சுஜூகி தொழிலாளர்கள் போராட்டத்தை நசுக்குவதன் மூலம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெரு வணிகத்திற்கு,இந்தியாவிலுள்ள பூகோளரீதியாக இணைக்கப்பட்டுள்ள கார் மற்றும் பிற தொழிற்சாலைகளில் விதிமுறையாக உள்ள மோசமான உழைப்பு நிலைமைகளுக்கு எந்தவிதமான எதிர்ப்பையும் தான், பொறுத்துக்கொள்ளாது என்பதை எடுத்துக்காட்ட தீர்மானித்துள்ளது.

MSWU தலைமை மற்றும் சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிக மோசமான நிலைமைகளையும், MSI நிர்வாகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளால் தொல்லை மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றிற்கு அவர்களின் குடும்பங்கள் உட்படுத்தப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் சிறையிலிருந்து MSWU தலைமை விடுத்த ஒரு முறையீடு வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. (இந்தியா: பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்கள் தங்கள் மீதான சித்திரவதையை ஆவணப்படுத்தி உறுதிமொழிப்பத்திரங்களை தாக்கல் செய்கிறார்கள்)

அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: எமது சக தொழிலாளர்களில் பலரும் பெற்றோர்களோ அல்லது பாதுகாவலர்களோ இல்லாதவர்கள், குடும்பச் சுமை முழுவதையும் தமது தோள்களில் சுமந்து கொண்டிருப்பவர்கள். பல தொழிலாளர்களின் மனைவிகள் நாங்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது தாய்மையடைந்து இருந்தார்கள். அவர்களின் பிரசவத்தின் போது கூட,தொழிலாளர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை அல்லது காவலுடன் கூடிய பிணையும் வழங்கப்படவில்லை.

இந்த ஆற்றொணா முறையீடு மேலும் இவ்வாறு குறிப்பிட்டது: சிறையில் நாங்கள் மிக கடுமையான மன அழுத்தத்தில் உள்ளோம். எங்களில் பல பேர் காச நோய், மூல வியாதி, மனநலம் பாதிக்கப்பட்டதுடன் மற்றும் பல நோய்களாலும் அவதியுறுகின்றனர்.

MSI தொழிலாளர்களின் இக்கட்டான நிலைமை மற்றும் துயரத்திற்கான முக்கிய அரசியல் பொறுப்பு, குர்கான் மற்றும் மானேசர் தொழிற்பேட்டையில் இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரதான தொழிற்சங்க கூட்டமைப்பின் தோள்களின் மீது நேரடியாக விழுகிறது. நிர்வாகத்தின் கைக்கூலியாக செயல்படும் தொழிற்சங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்ததில் இருந்து மாருதி சுஜூகி தொழிலாளர்களை அவர்கள் திட்டமிட்டு தனிமைப்படுத்தி விட்டார்கள்.இதில் ஸ்ராலினிச சி.பி.எம் (CPM) உடன் இணைந்த, இந்திய தொழிற் சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions -CITU) மற்றும் மற்றொரு நாடாளுமன்ற ஸ்ராலினிச கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தொழிற்சங்க கிளையான அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trades Union Congress -AITUC) தொழிற்சங்கம் ஆகியவை உள்ளடங்கும். AITUC மற்றும் CITU, தொழிற்சாலை நிர்வாகத்துடன் இரகசியமாக ஒன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில அரசிடம் பலனற்ற வேண்டுகோளில் நம்பிக்கை வைக்க MSI தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூறின.

MSI தொழிலாளர்களின் எதிர்ப்புகளில் வெளிவேடமிடும் ஏனைய இடதுசாரி அமைப்புக்களான மாவோவாத குழுக்கள் உள்ளிட்ட மற்றும் புதிய தொழிற்சங்கம் முன்னெடுப்பு (NTUI) ஆகியவை இதேமாதிரியான முன்னோக்கையே அபிவிருத்தி செய்கிறார்கள். தொழிலாளர்கள் சார்பாக தலையீடு செய்ய, அரசாங்கம் மற்றும் ஏனைய பெருவர்த்தக அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தேசத்துடன் எதிர்ப்புகளை நடத்த CITU மற்றும் AITUC இடம் வேண்டுகோள்விடுக்க தொழிலாளர்களை தூண்டுகிறார்கள்.

இத்தகைய சிந்தனைகளின் ஆளுமையின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சக்தியை அணிதிரட்ட போராடாது அரசாங்கத்திற்கு எதிர்ப்புக்களை காட்ட MSWU முக்கியத்துவம் கொடுக்கின்றது. MSWU தலைவர்கள் தங்களது மிக சமீபத்திய எதிர்ப்பில் தொழில்துறை அமைச்சரின் மீது கவனத்தை திருப்ப முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணம், அவர் ஹூடாவை முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்ற சூழ்ச்சிக்கையாளல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதுடன் மற்றும் அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்படுகிறார். இந்திய தேசிய அரசாங்கத்தின் உண்மையான தலைவரான காந்தி, ஒரு ஏழைகளின் நண்பராக சித்தரிக்கப்படுகையில் அவரின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரு வணிக கொள்கைகளை ஈவிரக்கமின்றி பின்பற்றுகிறது.

அவர்களுடைய போர்க்குணம் மற்றும் ஹரியானாவின் ஏழை கிராமவாசிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தினர் மத்தியில் பரந்த பரிவுணர்வு இருந்த போதிலும், இந்த எதிர்ப்பு காட்டும் நிலைநோக்கு MSWU தொழிலாளர்களை ஒரு முட்டுச்சந்துக்குள் இட்டுச் சென்றுள்ளது. இது சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்களால் வழங்கப்பட்ட அறிக்கையில் பிரதிபலித்தது. அது கீழ்கண்டவாறு அறிவிக்கிறது:

நாங்கள் மாநில தொழிற்துறைகள் அமைச்சரிடமிருந்து முதலமைச்சருக்கு நீதிக்காக எங்கள் கோரிக்கையை கொண்டு சென்றோம். ஆனால் அரசாங்கம் தொழிலாளரான எங்களை கவனத்தில் கொள்வதைக் காட்டிலும் முதலாளிகள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு சாதகமான நிலையை எடுக்கும் முயற்சியில் வளைந்து கொடுத்துள்ளது.

நாங்கள் தற்கொலை செய்துகொள்ளவும் அல்லது மற்றவர்களை கொல்லும் நிலமைக்கு தள்ளப்படும் முன்னால் எங்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியை வழங்குமாறு கடைசி முறையாக நாங்கள் அரசாங்கத்திடம் முறையீடு செய்கிறோம் என்று அது தொடர்கிறது.

மாருதி சுஜூகி தொழிலாளர்கள் இந்த முன்னோக்கை நிராகரிக்க வேண்டும். இதுதான் ஸ்ராலினிஸ்ட்டுகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க எந்திரத்தால் அவர்களின் போராட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டதன் விளைவு ஆகும்.

குர்கான்-மானேசர் தொழிற்பேட்டை மற்றும் இந்தியா முழுவதும் உள்ள குறைந்த ஊதியம், ஒப்பந்த தொழிலாளர் மற்றும் அவற்றை நிலை நிறுத்தும் பெரு வணிக ஆதரவு அரசாங்கங்கள் ஆகியவற்றிக்கு எதிராக தொழிலாளர்களின் ஒரு தொழிற்துறை மற்றும் அரசியல் தாக்குதலை முன்னெடுத்துச் செல்பவர்களாக அவர்களின் போராட்டத்தை மாற்ற வேண்டும். அதை செய்வதற்கு நடப்பில் உள்ள முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்கங்களையும் அவற்றின் கட்சிகளையும் குறிப்பாக ஸ்ராலினிச CPI மற்றும் CPM ஆகியவற்றிற்கு எதிராகவும் அவற்றிலிருந்து சுயாதீனமானதுமான புதிய அமைப்புகளை கட்டியெழுப்புவது அவசியமாகிறது.