ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

බොරු නඩු අටවා ජීවිතාන්තය දක්වා සිර කල ඉන්දියාවේ මරුති සුසුකි කම්කරුවන් වහා නිදහස් කරනු!

பொய் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் மாருதி சுசுகி தொழிலாளர்களை உடனே விடுதலை செய்!

By Socialist Equality Party
21 March 2017

மார்ச் 18 அன்று, இந்தியாவில் ஒரு நீதிமன்றத்தினால் போலிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பதின்மூன்று மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனையும் மேலும் பதினெட்டு பேருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கடுமையாக கண்டனம் செய்கின்றது. அத்துடன், இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் உலகின் ஏனைய நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களும் இந்த வழக்குத் தீர்ப்பை தோற்கடிக்க அணிதிரள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அனைத்துலகக் குழு விடுத்துள்ள அழைப்பை முழுமையாக அங்கீகரிக்கும் சோ.ச.க., உலக சோசலிச வலைத் தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இணையவழி மனுவில் கைச்சாத்திடுமாறும், கூடுமானவரை தொழிலாளரகள், இளைஞர்களின் ஆதரவை அதற்காக வென்றெடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றது.

நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள ஜப்பான் மாருதி சுசுகி வாகன உற்பத்தி தொழிற்சாலையில், நிர்வாகத்தால் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்ட ஆத்திரமூட்டலின் போது ஏற்பட்ட தீயில், துரதிஷ்டவசமாக உயிரிழந்த மனிதவள முகாமையாளரான அவனிஷ் குமார் தேவ் இன் மரணத்துக்கு, இந்த தொழிலாளர்கள் மோசடியான முறையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாமலேயே அநியாயமாக வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு, இவர்கள் மீது மிகவும் கொடூரமான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒவ்வொரு 44 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு காரை உற்பத்தி செய்யும் ஜப்பான் கார் நிறுவனம், தொழிலாளர்களை அடிமை நிலையில் நடத்துவதற்கு எதிராக காத்திரமாகப் போராடுவதற்கு பெரும்பான்மையான இளம் தொழிலாளர்கள் உறுதிப்பாட்டை காட்டினர். வளரும் போராளிக் குணம் ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் பரவுவதை தடுப்பற்காக, ஹரியானா மாநில அரசாங்கமும், பொலிசும், கைக்கூலி குண்டர்களும் கம்பனியுடன் சேர்ந்து தீட்டிய திட்டத்தின் விளைவாகவே இந்த படுமோசமான ஆத்திரமூட்டல் தூண்டிவிடப்பட்டது.

மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டத்தின் சர்வதேச முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், 2012 ஜூலை-ஆகஸ்ட் காலத்தில் அந்தப் போராட்டத்தில் தலையீடு செய்து, உலகத் தொழிலாள வர்க்கத்துக்கு மாருதி சுசுகி கம்பனியின் ஆத்திரமூட்டல்களதும் வெளிநாட்டு முதலீட்டை யாசிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தினதும் அதன் போலீசினதும் தொழிலாள-விரோத வேலைத் திட்டத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தின. உலக சோசலிச வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட பல கட்டுரைகள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு தொழிலாளர் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தினதும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளதும் புறக்கணிப்புகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அரசியல் முன்னோக்குடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியல் தலையீடானது குர்கான் பிரதேசத்திலும் உலக அளவிலும் உள்ள தொழிலாளர்களின் நினைவில் இருந்து அழியாது.

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்க நீண்ட காலமாக முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக, 2012ல் ஸ்தாபிக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் (Maruti Suzuki Workers Union - MSWU), இப்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தலைமைத்துவம் உட்பட, போர்க்குணமிக்க தொழிலாளர்கள் 148 பேர், மனித வள முகாமையாளர் மரணத்தினதும் ஆத்திரமூட்டல்களதும் சந்தேக நபர்களாக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். மாருதி சுசுகி தொழிலாளர்கள் போலவே ஏனைய தொழிலாளர்களதும் தைரியத்தை தகர்ப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்கள், கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளமை இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் 2016 அறிக்கையின் படி, 16.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டுள்ள இந்தியாவின் பிராமண்டமான தகவல் தொழில்நுட்ப சேவைகளை நடத்தும் வயிப்ரோ லிமிடட் நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜியை மேற்கோள் காட்டி, 2012 ஜூலை 24 அன்று இந்து பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தி, தொழிலாளர் மீதான இந்த வேட்டையாடலையிட்டு முதலாளிகள் எந்தளவுக்கு அக்கறை காட்டினர் என்பதற்கான சிறந்த உதாரணமாகும். தொழிலாளர்களுக்கு எதிராக "இரக்கமற்று செயற்படுமாறு" அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட பிரேம்ஜி, பணயத்தில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் "விழிப்பூட்டக்கூடியது என்றும் நாட்டினுள்ளும் தொழிற்சங்கங்கள் மத்தியிலும் பெருகும் சமூக அமைதியின்மையை பிரதிபலிக்கும் ஒன்று" என்றும் கூறியுள்ளார். அப்போது அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியும் இப்போது ஆட்சியில் உள்ள் பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியும் இந்த முதலாளிகளின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பதை இந்த வழக்குத் தீர்ப்பு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறையின் பாதுகாவலனான நீதித்துறையின் அடக்குமுறை பாத்திரத்தையே இந்திய வாகனத் தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கிய முழு நீதிமன்ற நடைமுறையும் உறுதிப்படுத்துகிறது. மார்ச் 10 அன்று நடந்த வழக்கில், கைது செய்யப்பட்ட 117 தொழிலாளர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் இல்லை என விடுதலை செய்யப்பட்டதில் இருந்து, தண்டிக்கப்பட்டவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சாட்சிகள் தொழிற்சாலை நிர்வாகமும் பொலிசும் போலியாக சோடித்தவை என்பதை தெளிவாக காட்டுகிறது. விடுதலை செய்யப்பட்டவர்கள் நான்கரை ஆண்டுகள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பதையிட்டு நீதிமன்றம் எந்த கவலையும் வெளியிடாமை, தாராளவாத சிந்தனையாளர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் போலி இடது குழுக்களும் வருணிக்கும் இந்திய "நீதித்துறையின் சுயாதீனம்" எத்தகையது என்பதை தெளிவாக்குகிறது.

போலி சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்திய ஆளும் வர்க்கத்தால் சந்தர்ப்பம் பார்த்து நடத்திய இந்த கொடூரத் தாக்குதலின் குறிக்கோள், ஒரு புறம் போராளிக் குணம் பெற்றுவரும் மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்களுக்கு நச்சுத்தனமாக எச்சரிக்கை விடுப்பதாகும். மறுபுறம், இந்த பரந்த தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான சட்ட மற்றும் இராணுவ-பொலிஸ் வழிமுறைகளை பயன்படுத்துவதற்கான தமது தயார் நிலையை உயந்த மட்டத்தில் காட்சிப்படுத்துவதாகும்.

நீண்டு வரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் பிற்போக்கு தேசியவாத பாதுகாப்புவாத கொள்கையை அமுல்படுத்துகின்ற நிலமையின் கீழும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்த பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் வென்றிகண்ட பின்னர், சிக்கன நடவடிக்கைகளையும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் முன்னெடுக்கின்ற நிலைமையின் கீழேயுமே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இத்தகைய பின்னணியிலேயே, பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஆசியாவின் ஏனைய முதலாளித்துவ தேசியவாத ஆட்சியாளர்கள் அனைவரையும் போலவே, இந்திய ஆளும் வர்க்கமும் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் ஏக்கத்துடன் தொழிலாளவர்க்க-விரோத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றது.

ஒட்டுண்ணி தொழிற்சங்க அதிகாரத்துவம், அவை பிணைந்துள்ள முதலாளித்துவ சார்பு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டு உட்பட சகல கட்சிகளதும் குழி பறிப்புக்கள் மற்றும் திசை திருப்பல்களுக்கு மத்தியிலும், நெருக்கடியில் மூழ்கியுள்ள மோடி அரசாங்கத்தின் போலி பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக, மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்கள் தெருக்களில் இறங்குவதற்கான தயார் நிலையை ஏற்கனவே காட்டியுள்ளனர். தொழிலாளர்களை வெளியேற்றவும் தொழிற்சாலைகளை நினைத்த மாத்திரத்தில் மூடுவதற்கும் ஏற்றவாறு, தொழிற் சட்டங்களை மாற்றுவதற்கும் விவசாயிகளது நிலங்களை பெரும் வர்த்தகர்களுக்கு வழங்க சட்டங்களைக் கொண்டுவரவும், தனியார்மயத்தை துரிதப்படுத்தவும் அற்ப மானியங்களை நிறுத்தவும் சமூக செலவுகளை வெட்டித் தள்ளவும் மோடி அரசாங்கம் திரும்பி உள்ளது. இதற்கு எதிராக, 2016 செப்டெம்பரில் பத்து மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபட்ட ஒரு நாள் தொழிலாளர் போராட்டமும், மிக அண்மையில் ஒரு மில்லியன் வங்கி ஊழியர்கள் அரச வங்கிகளை தனியார்மயப்படுத்தும் திட்டத்துக்கு எதிராக பிப்பிரவரி 28 அன்று வேலைநிறுத்தம் செய்தனர். வளர்ச்சி கண்டு வரும் தொழிலாளர் போராட்டங்களையிட்டு மோடி அரசாங்கம் விழிப்படைந்துள்ளது.

மாருதி சுஜூகி தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட தண்டனைகள் சம்பந்தமாக மகிழ்ச்சியடைந்த அந்த நிறுவனத்தின் ஆலோசகரான விகாஸ் பாஸ்வா, நீதிமன்றமானது "கூலித் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களால் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முடியாது என்று ஒரு சக்திவாய்ந்த சமிக்ஞையை அனுப்பியுள்ளது," என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கூறினார்.  தொழிலாளர்களின் சாவை கோரிய அவர், "இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்," சவால் செய்வதாகவும், 117 தொழிலாளர்களை விடுவிக்க எடுத்த முடிவையும் இவ்வாறு சவால் செய்ய எதிர்பார்ப்பதாகவும் மேலும் கூறினார். கடுமையான வேலை நிலைமைகளை திணித்து வெற்றிகரமாக இயக்கப்படும் இந்த ஜப்பான் வாகன நிறுவனத்தின் பிரமாண்டமான இலாப சுரண்டலுக்கு, எதிர்காலத்தில் எந்தவொரு சவாலும் வரமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை முதலாளித்துவ ஆட்சியாளர்கள், நீதிமன்றம் மற்றும் பொலிஸ் உட்பட முதலாளித்துவ அமைப்பு முறையின் உதவியுடன் உறுதி செய்துகொள்ள அது எதிர்பார்க்கின்றது என்பதையே இது குறிக்கின்றது.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்படும் தாக்குதல் எந்தவிதத்திலும் ஒரு தனிப்பட்ட இந்திய சூழலில் நடந்த சம்பவம் அல்ல. இது பிராந்தியத்திலும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழிலாளர் போராட்டங்களை எதிர்கொள்ளும் பெரும் முதலாளிகள், தங்களது முகவர்களின் ஆதரவுடன், இடைவிடாமல் தொடுக்கும் தாக்குதல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து, பங்களாதேஷ் டாக்கா தொழில்துறை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சம்பள உயர்வும் ஏனைய கொடுப்பனவும் கோரி வேலை நிறுத்தம் செய்தனர். இந்த தொழிலாளர்களில் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றவும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் பங்களாதேஷ் அரசாங்கமும் ஆடைத் தொழிற்துறை உரிமையாளர்களும் கடந்த ஜனவரியில் நடவடிக்கை எடுத்தனர். பங்காளாதேஷ் போலவே கடுமையான சுரண்டல் மற்றும் கொத்தடிமை வேலை நிலைமைகளைக் கொண்ட, இலங்கையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளர்களும் 2011 மே மாதத்தில் அரசாங்கம் கொண்டுவர முயற்சித்த ஓய்வூதிய சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். மேலும் 200 பேர் அளவில் காயமடைந்தனர். சுமார் நூறு பேர் வரை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கூறக்கூடிய டசின் கணக்கான உதாரணங்கள், தமது இலாப நலன்களுக்கு சவால் விடுக்கப்படும் ஒவ்வொரு சமயத்திலும், முதலாளிகளதும் அவர்களின் தேவைகளை பிரதிநித்துவம் செய்யும் அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களும் மிலேச்சத்தனமான செயல்படும் விதத்தையே இது காட்டுகின்றது.

இத்தகைய அடிமை வேலை நிலைமைகள், அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் தொழிலாளர்களை நசுக்குவதில், முதலாளித்துவ சார்பு துரோகத் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஆற்றும் பாத்திரம், மாருதி சுசுகி தொழிலாளர்கள் மற்றும் ஏனைய உழைக்கும் மக்கள் மீதான இத்தகைய அடக்குமுறையில் அம்பலத்துக்கு வந்துள்ளது. மாருதி சுசுகி தொழிலாளர்களின் போராட்டம் முழுவதும், அவர்களை தைரியமிழக்கச் செய்வதன் பேரில் தலையிட்ட ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சிபிஎம் சார்பு இந்திய தொழிற்சங்கங்களின் மையத்துக்கு, (Centre of Indian Trade Unions) இப்போது மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் பற்றி சொல்ல இருப்பது, தாம் "வருத்தமும் கவலையும்" அடைந்திருப்பதாக மட்டுமே. இதற்கு நேர் மாறாக, இந்த அநீதியான நீதிமன்ற முடிவை எதிர்த்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பிரச்சாரம், மறியல் போராட்டம் உட்பட பல்வேறு முறைகள் ஊடாக தங்கள் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆயினும், இந்திய முதலாளித்துவத்தின் அங்கமாக இருக்கும் ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சியான சிபிஎம், அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய எதுவும் இந்த முடிவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுதலை செய்வதற்கு அல்லது மோடி அரசாங்கம் உட்பட முதலாளித்துவ வர்க்கம் மேற்கொள்ளும் ஜனநாயக விரோத தாக்குதல்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதற்கு, இந்தியா தொழிலாள வர்க்கத்துக்கு ஏனைய நாட்டு தொழிலாளர்களுக்குப் போலவே ஒரு புரட்சிகர தலைமை மற்றும் முன்னோக்கு அவசியமாகும். இந்தியா முழுவதும் தெற்காசியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன், மாருதி சுசூகி மற்றும் குர்கான் தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும். சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தில் ஆயுதபாணியாகியுள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதன் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியையும் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே இந்த ஐக்கியத்தை ஸ்தாபிக்க முடியும்.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலை தோற்கடி!

தொழிலாள வர்க்க புரட்சிகர கட்சியை கட்டியெழுப்பு!