ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The key facts of the Maruti Suzuki workers’ case

மாருதி சுசூகி தொழிலாளர்களின் வழக்கு பற்றிய முக்கிய உண்மைகள்

22 March 2017

இந்திய தலைநகரமான தில்லியின் புறநகர் பகுதியிலுள்ள மாருதி சுசூகி கார் அசெம்பிளி ஆலையில் ஜுலை 2012 இல் நடந்த மோதலின் இருந்து உருவான ஜோடிக்கப்பட்ட கொலை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் பதின்மூன்று வாகனத்துறை தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவின் கொடூரமான சிறைகளில் அடைக்கப்பட்டு வாடுவதற்கு தண்டனை பெற்றவர்களுள் ஹரியானாவின் மானேசர் மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) மொத்தம் 12 நிர்வாக அங்கத்தவர்களும் அடங்குவர். காங்கிரஸ் கட்சி மற்றும் இந்துமத மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (BJP) போன்ற இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளின் முழு உடந்தையுடன் பெருநிறுவனம், பொலிஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் மூலமாக தொடுக்கப்பட்ட ஈவிரக்கமற்ற சதி வேட்டையால்  இந்த அனைத்து தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொழிலாளர்கள் முற்றிலும் அப்பாவிகளாக உள்ளனர். ஒரு நிறுவனம் சார்பான ஒரு தலையாட்டி தொழிற்சங்கத்தின் உதவியுடன் ஜப்பானை தளமாக கொண்ட நாடுகடந்த பெருநிறுவனத்தின் மூலமாக சுமத்தப்பட்ட மலிவுகூலி உழைப்பு நிலைமைகளுக்கு சவால் விடுத்ததே அவர்கள் செய்த ஒரே "குற்றமாகும்".

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் ராம் மெஹர், சந்தீப் தில்லன், ராம் பிலாஸ், சரப்ஜீத் சிங், பவன் குமார், சோஹன் குமார், அஜ்மர் சிங், சுரேஷ் குமார், அமர்ஜீத், தன்ராஜ் பாம்பி, பிரதீப் குஜ்ஜார், யோகேஷ் மற்றும் ஜியாலால் ஆகியோரை உடனடியாக விடுவிப்பதற்கு கோரிக்கை விடுக்கும் பொருட்டு ஒரு சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த வழக்கிற்கான பின்னணி

மார்ச் 2012ல், ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தொழிற்சங்கத்தினை மீறி பல மாதகால வெளிநடப்புகள், உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை அதிகரித்த பின்னரே, மானேசர் மாருதி சுசூகி உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் அவர்களது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும் முதல் படியாக MSWU இனை அங்கீகரிப்பதற்கு நிறுவனத்தை வலியுறுத்தினர். ஆயிரக்கணக்கான தற்காலிக தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 14,000 ரூபாய் (US $214) இனை அல்லது நிரந்தர தொழிலாளர்களின் ஊதியத்தில் பாதிக்கும் குறைவான ஊதியத்தினை வழங்கக்கூடிய வெறுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிப்பதை இது உள்ளடக்கியது. நான்கு மாதங்களுக்கு பின்னர், 2012 ஜுலை 18 அன்று, நிர்வாகம் தொழிற்சாலை பிரிவில் ஒரு கைகலப்பினை தூண்டிவிட்டது. தொழிலாளர்கள் ஒரு தனியார் பாதுகாப்பு குண்டர்கள் படையினரிடமிருந்து தங்களை தற்காத்து கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் நெருப்பு பற்றிக்கொண்டது. அப்போது நெருப்பு புகையிலிருந்து தப்பிக்க முயன்றுகொண்டிருந்த நிறுவன மனிதவள மேலாளரான அவனிஷ் குமார் தேவ் இன் உயிரை நெருப்பு பறித்துக்கொண்டது.

ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், நெருப்பு பற்றியதற்கும் அல்லது தேவ் உயிரிழப்பு ஏற்பட்டதற்கும் தொடர்புடைய எந்தவொரு சிறு ஆதார துணுக்கும் கூட அங்கு இல்லை. இதற்கும் மேலாக, ஆலையில் அவர் ஒருவர் மட்டுமே தொழிலாளர்களுக்கு ஆதரவான மேலாளராக இருந்திருக்கிறார், எனவே தொழிலாளர்களால் தீங்கிழைக்கப்பட விரும்பப்பட்டவரில் இறுதியானவராக அவர் இருந்திருக்கமுடியும். மேலும், ஹரியானா தொழிலாளர் துறையில் MSWU இனை பதிவு செய்வதற்கு கூட அவர்களுக்கு உதவி செய்துள்ளார்.

வாதி தரப்பு கொலை வழக்கின் முக்கிய அம்சமாக நெருப்பு பற்றியது இருந்தது. இன்னும் அந்த நெருப்பு, எங்கே, எப்போது அல்லது எவ்வாறு பற்றியது என்பது குறித்து வாதி தரப்பால் எதையும் நீரூபிக்க முடியவில்லை. நெருப்பு பற்றியது தொடர்பான ஆரம்ப விசாரணையின் போது கிடைக்காது இருந்த மற்றும் நெருப்பு ஜ்வாலையால் அழிக்கப்பட்ட ஒரு பகுதியில் நெருப்பில் சிக்காமல் இருந்ததாக கூறப்படும் ஒரு தீப்பெட்டியை கண்டெடுத்ததாக அதிகாரிகள் கூறினார்கள். இந்த தீப்பெட்டிக்கும் எந்தவொரு தொழிலாளிக்கும் தொடர்பு எதுவுமில்லை.

பொலிஸ் அடக்குமுறை

தொழிலாளர்கள் மீதான ஒரு பாரியளவிலான அடக்குமுறைக்கு ஒரு சாக்குப்போக்காக ஜுலை 18ம் நாளின் நிகழ்வுகள், நிறுவனம் மற்றும் இந்திய அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டன. அடுத்த நாள் முதல், பொலிஸ் தொழிலாளர்களது வீடுகளை நொருக்கியதுடன், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை காவலில்வைத்து அடித்தனர்.

சுசூகி நிறுவனம் பின்னர் மானேசர் தொழிலாளர் தொகுப்பிலிருந்து ஏராளமான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததுடன், அதற்கு பதிலாக 2,300 புதிய தொழிலாளர் நியமனங்களை மேற்கொண்டது.

கிட்டத்தட்ட 150 தொழிலாளர்களுக்கு எதிராக அரசு ஜோடித்த வழக்கின் பேரில் தொழிலாளர்களை பொலிஸ் பொதுவாக கைதுசெய்து காவலில் வைத்துள்ளனர் என்பதை பிரதிவாதி வழக்கறிஞர் விரைவில் வெளிக்கொண்டுவர தொடங்கினார். நிர்வாகத்தால் வழங்கப்பட்ட “சந்தேகத்துக்குரியவர்கள்” பட்டியலை அடிப்படையாகக்கொண்டு பொலிஸ் செயல்பட்டனர் என்று அவர்கள் எடுத்துக்காட்டினர், மேலும் நான்கு மாருதி சுசூகி ஒப்பந்தக்காரர்கள் மூலமாக அகரவரிசையில் ஒழுங்குபடுத்தப்பட்டு பொலிஸிடம் வழங்கப்பட்ட பெயர்களின் அடிப்படையில் 89 தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனால் “கலகத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை” ஒரே “நேரில் கண்ட சாட்சியின்படி” அவர் பார்த்தவர்களின் பெயர்கள் A முதல் G வரையிலான எழுத்துக்களில் ஒன்றை கொண்டு தொடங்கும், மற்றொருவர் பார்த்தவர்களின் பெயர்கள் G முதல் P வரம்பிற்குள்ளான எழுத்துக்களை மட்டும் முதல் எழுத்தாகக்கொண்டு மற்றொருவர் பார்த்தது மேலும் இப்படியே தொடர்ந்து இருக்கும். சோதனை விசாரணையின் போதே, இத்தகைய மற்றும் ஏனைய சாட்சிகளும் அதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை முறையாக அடையாளம் காட்ட முடியவில்லை.

இவைகளும், இன்னும் வேறுபல குறைபாடுகளும், இட்டுக்கட்டல்களும் இருந்தபோதிலும், 148 தொழிலாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலடைக்கப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு மனித உரிமைகள் குழுக்களை பொறுத்தவரையில் அங்கு அவர்கள் பொலிஸால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு பிணை மறுப்பதன் மூலம் அதிகாரிகள் உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டதாகவும், மேலும் அவர்கள் இந்தியாவில் “தொழிலாளர் அமைதியின்மையை” எதிர்கொள்ளப் போவதில்லை என்பதையும் நிரூபிக்கவேண்டியிருந்தது என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

கொலை தொடர்பாக 13 தொழிலாளர்களையும், அதற்கு சற்று குறைந்த குற்றங்கள் தொடர்பாக ஏனைய 18 தொழிலாளர்களையும் குற்றவாளிகளாக்குவதில், குர்கான் மாவட்ட நீதிமன்றம் அதன் சொந்த கண்டுபிடிப்புகளையும் புறக்கணிக்கவேண்டியிருந்தது. அவர்களின் இந்த சொந்த கண்டுபிடிப்புக்கள் பொலிஸ், மாருதி சுசூகி நிர்வாகம் இணைந்து செயற்பட்டதையும் மற்றும் ஆதாரங்களை திரிபுபடுத்தியதையும் கண்டுகொண்டது.

உண்மையில் வாதி தரப்பின் ஆதாரங்கள் முழு அளவிலான ஓட்டைகளுடனும், சந்தேகத்திற்குரியவையாகவும் இருந்த நிலையில், 117 தொழிலாளர்களை மற்றவர்களை போலவே குற்றவாளிகள் என்றே இறுதிவரை அரசாங்க வழக்கறிஞர்கள் திட்டவட்டமாக கூறிவந்தபோதும், அவர்களை நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கவேண்டியிருந்தது.  

ஏன் மாருதி சுசூகி தொழிலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்

பாரிய கைதுகளுக்கும் மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்குகளுக்கும் 14 மாதங்களுக்கு முன்னதாகவே, பிரம்மாண்டமான மானேசர்-குர்கான் தொழில்துறை மண்டலம் முழுமையிலுமான தொழிலாளர்கள் எதிர்ப்பின் ஒரு மையப்புள்ளியாக மானேசர் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மாறிவிட்டதுடன், பெருநிறுவன முதலாளிகள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களின் ஆத்திரத்தையும் சம்பாதித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா அரசாங்கமும் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க ஒட்டுமொத்தமாக திரும்ப திரும்ப பொலிஸை அணிதிரட்டியதுடன், MSWU “தீவிரவாதிகளுக்கும்,” மற்றும் நாட்டின் பொருளாதாரம் குறித்த “நாசவேலைக்கு” என்று தீர்மானிக்கப்பட்ட ஏனைய “வெளிநபர்களுடனும்” நெருக்கமாக இருந்தது என்று ஆலோசனையளித்தது.

வாதி தரப்பு அதன் விவாதத்தை நிறைவு செய்வதில், பா.ஜ.க. தேசிய அரசாங்கத்தின் “இந்தியாவில் உற்பத்திசெய்யுங்கள்” திட்டத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக மாருதி சுசூகி தொழிலாளர்களின் நடவடிக்கைகள் இருப்பதாக தெரிவித்து அவர்களுக்கு எதிராக மூர்க்கமான தண்டனையை கோரினர். அதாவது, சீனாவிற்கு குழிபறிக்கவும், மேலும் மலிவான மற்றும் இணக்கமான உழைப்புடன் கூடிய நாடுகடந்த பெருநிறுவனங்களை வழங்குவதன் மூலமாக உலகளவில் இந்தியாவை ஒரு மலிவு உழைப்பு புகலிடமாக மாற்றும் அதன் உந்துதலுக்கும் ஒரு அச்சுறுத்தலாக அவர்கள் இருந்தனர் எனக்குறிப்பிட்டனர்.

மாருதி சுசூகி தொழிலாளர்களின் பாதுகாப்பானது ஒரு சர்வதேச பிரச்சினையாக இருப்பதுடன், சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பொறுப்பாகவும் உள்ளது. சுசூகி போன்ற நாடுகடந்த பெருநிறுவனங்கள் மிக குறைந்த உற்பத்தி செலவுகளை கண்டுபிடிக்க உலகம் முழுவதிலும் துருவிதுருவி தேடுகின்றனர். இதற்கிடையில், அரசாங்கங்கள் தொழிலாளர் எதிர்ப்பை குற்றங்களாக்கிக்கொண்டிருக்கின்றன.

இழப்பதற்கு இனி நேரம் இல்லை! இந்த மோசமான நிலைமை பின்வாங்கப்படவில்லை என்றாலோ, மாருதி சுசூகி தொழிலாளர்கள் விடுவிக்கப்படவில்லை என்றாலோ, அது இந்திய ஆளும் உயரடுக்கினரை மட்டும் ஊக்குவிக்காது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெருநிறுவனங்களையும், நிதிய பிரபுத்துவங்களையும் ஊக்கப்படுத்துவதாக அமையும்.

இந்திய சிறை அமைப்புமுறை என்பது ஒரு வாழும் நரகமாகவே உள்ளது. ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுள் பெரும்பாலானவை தங்களது ஒரே குடும்ப பராமரிப்பாளர் கம்பிக்கு பின்னால் சிறையில் வாடுகின்ற நிலையில் வறிய நிலைமையை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், மாருதி சுசூகி நிறுவனமும் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதை அதிக கருணை மிக்கதாகவே கருதுவதாக அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும், 13 பேர் தூக்கிலிடப்படவேண்டும் என்ற வாதி தரப்பு கோரிக்கையின்படி தண்டனையை வழங்கவேண்டுமென்று வலியுறுத்தும் வகையில் நிறுவன வழக்கறிஞர்களும் மார்ச் 18 தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யப்போவதாக சபதமிட்டுள்ளனர்.

உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் யுத்தத்தின் ஒரு பகுதியாகவே மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளன. இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நீதி, இந்த ஸ்தாபகத்துடன் இணைந்ததான முதலாளித்துவ நீதிமன்றங்கள், இந்திய அரசியல் ஸ்தாபகம், அல்லது முக்கிய தொழிற்சங்கங்கள் போன்றவற்றின் மூலமாக முறையீடு செய்யப்பட்டு பெறப்படமுடியாது. அவை அனைத்தும் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலாளர்களை திட்டமிட்டு தனிமைப்படுத்திவிட்டனர்.

உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க விரும்பும் அனைவரும் தைரியமான மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு உதவ முன்வரவேண்டும், மேலும் அவர்களது உடனடி விடுதலைக்கும் கோரிக்கை விடுக்கவேண்டும்.