ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை அரசாங்கத்துக்கு சலுகையளிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கின்றது

By Subash Somachandran and S. Jayanth
23 February 2017

இலங்கை சம்பந்தமாக 2015 அக்டோபரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (யு.என்.எச்.ஆர்.சி.) நிறைவேற்றப்பட்ட, “போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக் கூறுதல்” ஆகியவை அடங்கிய, 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக, அரசாங்கத்துக்கு இரண்டு ஆண்டு கால வகாசம் வழங்கி, இன்று யு.என்.எச்.ஆர்.சி.யில் கொண்டுவரப்படும் தீர்மானத்துக்கு அமெரிக்க சார்பு அர்சாங்கத்துக்கு முண்டு கொடுத்துவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடன்பட்டுள்ளது.

வரவுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவானது, அதன் ஒத்துழைப்புடன் 2015 ஜனவரியில் வாஷிங்டனின் திட்டமிடலுடன் நடத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரத்துக்கு கொண்டுவரப்பட்ட, ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைப் பாதுகாக்க அது அர்ப்பணித்துக் கொண்டுள்ளதற்கான எடுத்துக்காட்டாகும்.

இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனும் 2015ல் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், வாஷிங்டனின் ஒத்துழைப்புடன் பிரிவினைவாத தமிழீழ விடுதைப் புலிகளை நசுக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த போது, இராணுவத்தால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பை கொழும்பு அரசாங்கத்திடமே ஒப்படைத்தது.  

குற்றத்தை செய்தவர்களிடமே விசாரணையையும் நடத்தும் பொறுப்பை ஒப்படைத்ததன் மூலம், யு.என்.எச்.ஆர்.சி., தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வாஷிங்டனும் இலங்கை அரசாங்கத்துக்கு அந்தக் குற்றங்களை மூடி மறைக்கவும் விசாரணைகளை காலம் தாழ்த்தி சமாளித்துக்கொள்ளவும் ஒத்துழைத்தன.

2015க்கு முன்னர், இராஜபக்ஷவை சீனாவிடமிருந்து தூர விலக்குவதற்கு நெருக்குவதன் பேரிலேயே வாஷிங்டன் யூ.என்.எச்.ஆர்.சி.யில் போர்க் குற்ற விசாரணைகளை சுரண்டிக்கொண்டது. மாறாக, தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பற்றிய அக்கறை அதற்கு இருக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுக்கும் உடன்பாட்டை எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் அறிவித்தவுடன், தமிழ் கூட்டமைப்புக்குள் வெடித்த முரண்பாடுகள் தந்திரோபயமானவையே அன்றி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல.

தமிழ் கூட்டமைப்பின் ஒரு கன்னை கால அவகாசம் கொடுப்பதை எதிர்த்த அதேவேளை அதன் உச்சகட்டமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுமாக 11 பேர் கையெழுத்திட்டு "கால அவகாசம் வழங்க கூடாது" எனக் கோரி யு.என்.எச்.ஆர்.சி.க்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தனர். கூட்டமைப்பின் முக்கியமான பங்காளியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, கால அவகாசம் வழங்குவது தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமானது என, கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை சாடியது.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் தமிழ் மக்களின் ஜனநயாக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் பாதுகாக்கும் என்ற கூட்டமைப்பின் வாக்குறுதியினால் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில், கூட்டமைப்பு மற்றும் அரசாங்கம் சம்பந்தமாக வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பே இந்த முரண்பாடுகளுக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளன. அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுப்பதானது ஏற்கனவே சரிந்துபோயுள்ள வெகுஜன ஆதரவு மேலும் வீழ்ச்சியடையும் என எதிர்ப்புக் கன்னை அஞ்சுகின்றது.

முடிவில் தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, சம்பந்தன் மார்ச் 11 அன்று வவுனியாவில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களது ஒரு கலந்துரையாடலுக்கு அழைப்புவிடுத்தார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடுமாறும் இராணுவம் கைப்பற்றியுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறும் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள், கலந்துரையாடல் நடக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் இறங்குவதை தவிர்ப்பதற்காக, சம்பந்தன் இந்தக் கூட்டத்தை விசேட அதிரடிப் படையின் கடும் பாதுகாப்புடன் நடத்தினார்.

கூட்டம் நடக்கும் இடத்தில் அதிரடிப்படையினர் கடும் சோதனை நடத்தியதாகவும், கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நவீன சொகுசு வாகனங்களில் வருகை தந்திருந்ததாகவும் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எஃப்.), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளோட்) ஆகிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் பங்குபற்றிய இந்தக் கூட்டம் நாள் முழுவதும் நடந்திருந்தது.

2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும், ஐநா உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஒன்று இலங்கையில் நிறுவப்பட்டு, இந்த தீர்மானம் “கடுமையான நிபந்தனையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதை” மேற்பார்வை செய்ய வேண்டும் என கூட்டமைப்பு தனது முடிவை அறிவித்தது.

“இலங்கை அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறைகளின் மூலம் நிறைவேற்றத் தவறினால்”, அதற்கான பொறுப்பில் இருந்து அரசாங்கத்தை விடுவித்துவிட வழிதேடும் கூட்டமைப்பு, “பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த தீர்மானத்தின் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்துப் பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக அதற்குரிய பெறுபேறுகளை ஐநா பேரவை உறுதிசெய்ய வேண்டும்,” என அறிவிக்கின்றது.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அறிவித்த அதே வேளை, டெலோ உறுப்பினர்களை முடிவுகளுக்கு உடன்படுவதற்கு அனுமதித்த பின்னர், அதன் செயலாளர் சிறிகாந்தா தனது கட்சியும் உடன்படவில்லை என போலியாக ஒரு அறிவித்தலை விடுத்தார்.

சீனாவுக்கு எதிரான ஒரு போருக்கு இலங்கையை முழுமையாகப் பயன்படுத்த முயலும் அமெரிக்கா, சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை தொடர்ந்தும் தன் பிடிக்குள் வைத்திருப்பதற்கும், அந்த அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளடங்கலான தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களின் முண்டுகொடுப்பை உறுதிப்படுத்துவதற்குமான முயற்சியாகவே யு.என்.எச்.ஆர்.சி.யில் இத்தகைய தீர்மானங்களைக் கொண்டுவருகின்றது. பிராந்தியத்தில் தமது சொந்த நலன்களைத் தக்கவைத்துக்கொள்ளவதற்கு வாஷிங்டனுடன் கைகோர்த்துள்ள இந்தியாவுக்கும் இதே தேவை இருப்பதோடு, இலங்கையில் தமிழ் சிறுபான்மையினரின் துன்பங்கள் சம்பந்தமாக தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் நிலவும் வெகுஜனக் கரிசனையை தணிப்பதும் அவசியமாகும்.

மறுபக்கம், போர்க்குற்ற விசாரணைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் ஒரு பகுதி இராணுவ உயர் மட்டத்தினர் மற்றும் சிங்கள அதி தீவிரவாத சக்திகளின் பிரச்சாரத்தில் இருந்து காத்துக்கொள்வதன் பேரில் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு இத்தகைய கால அவகாசத்தை வழங்குவது அவசியாமாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, இந்த பேரினவாத சக்திகளை தன் பின்னால் அணிதிரட்டிக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவற்றை நன்கு புரிந்துகொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம், அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து, அமெரிக்காவின் புவி-அரசியல் மூலோபாயத்துக்கு சேவையாற்றுவதன் மூலம், தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை தக்கவைத்துக்கொள்ள முயல்கின்றது. இதன் மூலம் ஒரு அணு ஆயுத மூன்றாம் உலகப் போரின் பேரழிவு ஆபத்தை தீவிரப்படுத்தியுள்ள, சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் போர்த் தயாரிப்புகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்கின்றது.

இதன் பாகமாக, சம்பந்தன் புது டில்லியல் இந்த வாரம் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் பங்கெடுத்துக்கொண்டு முக்கிய உரையொன்றையும் ஆற்றவுள்ளார்.

சம்பந்தனின் பிற்போக்கு பாத்திரத்தை பாராட்டிய சிலோன் டுடே பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் மேனக்ஷோ, “கூட்டமைப்பின் தலைவர் தனது அரசியல் முதிர்ச்சியை மட்டும் காட்டவில்லை, மனிதாபிமான பிச்சினைகளை புத்திசாலித்தனமான முறையில் அனுகுவதன் மூலம், இனப் பிரச்சினைக்கு உறுதியான தீர்வை எட்டுதவற்கான சிக்கலான முயற்சியில், பானையைக் கவிழ்க்காமல் இருப்பதற்கு தனது அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்,” என குறிப்பிட்டுள்ள அதே வேளை, “கால அவகாசம் கொடுப்பதற்கான சம்பந்தனின் பெருந்தன்மை முழுதும் கிடைத்துவிட்டதாக கருதவும் கூடாது,” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கால அவகாசம் கொடுப்பதை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் பிரிவு, 2015ல் இலங்கைக்கு சலுகை கொடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அதே நேரம், தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வருவதையும் எதிர்க்கவில்லை. தமிழ் கூட்டமைப்புக்கு ஆலோசனை வழங்குவதன் பேரில், ஈ.பி.ஆர்.எல்.எஃப். உட்பட சிவில் அமைப்புகளும் சேர்ந்து உருவாக்கிய தமிழ் மக்கள் பேரவையும், தீர்மானத்தை எதிர்ப்பதாக அறிவித்த போதிலும், அரசாங்கத்தை பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.

இந்த இரு தமிழ் முதலாளித்துவ தேசியவாத கன்னைகளும் தங்களின் நலன்களை தக்கவைத்துக்கொள்வதன் அடிப்படையில், ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வதற்காக மக்களின் அவலங்களை சுரண்டிக்கொள்கின்றன. இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்தும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் காணாமல் போனவர்களைத் தேடியும், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுக்கும் தொடர் போரட்டங்கள், தமது கட்டுப்பாட்டை மீறி, தெற்கில் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிவரும் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் போராட்டத்துடன் ஐக்கியப்பட்டுவிடும் என்பதையிட்டு தமிழ் தேசியவாதிகள் பீதியடைந்துள்ளனர்.

இதனால் சம்பந்தனின் செயற்பாடுகளை விமர்சிக்கும் கன்னை, எழுக தமிழ் போன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்து தமிழ் இனவாதத்தை கிளறிவிட்டு, அரசாங்கத்தையும் அதை ஆதரிக்கும் தமிழ் கூட்டமைப்பையும் விமர்சிப்பதாக காட்டிக்கொள்ளும் அதேவேளை, அரசாங்கத்தின் ஒடுக்குமுறை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஒப்புதலளித்து வருகின்றன. மறுபுறம் இராஜபக்ஷவின் போருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஐநா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற மாயையை பரப்பி மக்களின் எதிர்ப்பைத் தணிக்கச் செயல்படுகின்றன.

உலகம் பூராவும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவிடமும் அதற்கு ஒப்புதலளித்து வரும் ஐநாவிடமும் தமிழ் ஒடுக்கப்பட்ட மக்கள் எந்தவொரு நியாயத்தினையும் எதிர்பார்க்க முடியாது.

பெரும் நிதி நெருக்கடியில் மூழ்கியிருக்கும் தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கட்டளைகளின் அடிப்படையில் முன்னெடுக்கும் சமூக வெட்டுக்களுக்கு எதிராக அன்றாடம் வளர்ச்சியடையும் போராட்டங்களை நசுக்க பொலிசையும் இராணுவத்தையும் பயன்படுத்தி வருவதோடு, தொழிலாள வர்க்கத்தின் பலத்தை தகர்ப்பதற்காக கொழும்பு ஆளும் வர்க்கத்தால் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வரும் இனவாதத்தில் மேலும் மேலும் தங்கியிருக்கின்றது. அவகாசம் பெறும் எதிர்வரும் நாட்களில், “போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமான பொறுப்புக்கூறலை” அன்றி, அதற்கு எதிரானதையே அரசாங்கம் செய்யும்.

கொழும்பு அரசாங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஒட்டு மொத்த முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் மூலம் முதலாளித்துவ அரசை தூக்கி வீசி, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கம் ஒன்றை ஸ்தாபித்து, சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மட்டுமே, ஏகாதிபத்திய போருக்கு முடிவுகட்டவும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் முடியும். வடக்கு கிழக்கிலும் தெற்கிலும் மற்றும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும். சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் மட்டுமே இந்த வேலைத் திட்டுத்துக்காகப் போராடுகின்றன.