ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No to Macron and Le Pen! For an active boycott of the French election!

மக்ரோனும் வேண்டாம் லு பென்னும் வேண்டாம்! பிரெஞ்சு தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணி!

Political Committee of the Parti de l'égalité socialiste
27 April 2017

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றை தொழிலாளர்களும் இளைஞர்களும் புறக்கணிக்க வேண்டும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste - PES) அழைப்பு விடுக்கிறது. நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென்னுக்கு எதிராக முன்னாள் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளரும் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பொருளாதார அமைச்சருமான மக்ரோனை தொழிலாளர்கள் ஆதரித்தாக வேண்டும் என்று கூறுவதை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது.

பிரெஞ்சு மக்களை மக்ரோனுக்கு வாக்களிக்கச் செய்ய அச்சுறுத்தும் வகையில் முன்வைக்கப்படும் வாதங்கள், குதர்க்கங்களினதும் பொய்களினதும் ஒரு கலவையாக இருக்கின்றன. முதலாவதாய் மக்ரோனுக்கு அளிக்கப்படும் வாக்கு, சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராய், ஜனநாயகத்தை ஆதரித்துப் போடும் ஒரு வாக்காகும் என நம்மிடம் கூறுகிறார்கள். ஆனால் மக்ரோனும் பாகமாக இருந்த PS அரசாங்கம் ஒன்றினாலேயே பிரான்ஸ் அவசரகால நிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகள் செயலலிழக்க செய்யப்பட்டுள்ளதோடு, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அவரது சொந்த அதிகாரத்தை பயன்படுத்தி, பிரெஞ்சு மக்களின் முதுகுக்குப் பின்னால், நீதித்துறை கடந்த கொலைக் கொள்கை ஒன்றை மீண்டும் அறிமுகம் செய்தார்.

அடுத்ததாக, லு பென்னின் தேசியவாதத்திற்கு எதிரான மக்ரோனின் எதிர்ப்பு மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தை ஒன்றாக வைத்திருப்பதற்கும் பிரான்சும் ஐரோப்பாவும் மீண்டும் தேசியவாதத்திற்குள்ளும் போருக்குள்ளும் விழுந்து விடாமல் பாதுகாப்பதற்கும் உள்ள ஒரேயொரு வழியாகும் என்று நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவாளரான மக்ரோன் தான், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு ஆலோசனை அளித்துக் கொண்டிருக்கிறார் என்பதோடு சிரியா, ரஷ்யா மற்றும் வட கொரியாவுக்கு எதிராய் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் தலைமையிலான ஏகாதிபத்திய போர் முனைப்பையும் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்.

இறுதியாய், நவ-பாசிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிரிகள் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது. அது உண்மையே. ஆனால் நாஜி ஆக்கிரமிப்பு சமயத்தில் யூதர்களை மரண முகாம்களுக்கு திருப்பியனுப்புவதற்கான சட்ட அடிப்படையாக திகழ்ந்த, குடியுரிமை பறிப்புக் கோட்பாட்டை பிரெஞ்சு அரசியல்சட்டத்தில் பொறிப்பதற்கு முனைந்த PS அரசாங்கத்தின் பகுதியாக இருந்தவரே மக்ரோன் ஆவார். சமூக வெட்டுகளின் மூலமாக பத்து பில்லியன் கணக்கில் யூரோக்களை திரட்டுவதற்கும், இருபதாம் நூற்றாண்டின் பாதையில் பல தலைமுறைப் போராட்டங்களின் மூலமாக தொழிலாளர்கள் வென்றெடுத்திருந்த சமூக உரிமைகளை PS இன் பிற்போக்கான தொழிலாளர் சட்டத்தை பயன்படுத்தி கிழித்துவீசுவதற்கும் அவர் உறுதிபூண்டிருக்கிறார்.

ஒரு நச்சுத்தனமான பிற்போக்குவாதியான மரின் லு பென், புலம்பெயர்-விரோத மற்றும் இனவாத மனோநிலைகளுக்கு விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார். அவரது தேசிய முன்னணியானது (FN) இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பிரான்சை ஆட்சிசெய்த நாஜி-ஒத்துழைப்புவாத ஆட்சியின் வழிவந்ததாகும். தொழிலாள வர்க்கத்தில் இடதின் பக்கத்தில் இருந்து மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்குமான எதிர்ப்பை அபிவிருத்தி செய்வதே இன்றியமையாத பிரச்சினையாகும். இல்லையேல், லு பென் தன்னுடைய ஜனரஞ்சகவாத மற்றும் பாதுகாப்புவாத வாய்வீச்சைப் பயன்படுத்தி பிரெஞ்சு உழைக்கும் மக்களின் Jeanne d'Arc (காவல் வீராங்கனையாக) ஆக தொடர்ந்தும் தன்னைக் காட்டிக் கொண்டிருப்பார்.

இரண்டாம் சுற்றில் எந்த பிற்போக்கான வேட்பாளர் ஜெயிக்கின்ற போதும், போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்வதே தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதன் நோக்கமாகும். செயலூக்கமான புறக்கணிப்புக்கான அழைப்பு என்பது நாடாளுமன்ற கணக்கீடுகளது நிலைப்பாட்டில் இருந்து செய்யப்படவில்லை, மாறாக வர்க்கப் போராட்டத்தின் இயக்கவியல் முறையை கணக்கிட்டு மேற்கொள்ளப்படுகிறது.

சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் குடியரசுக் கட்சியின் (LR) வேட்பாளர்கள் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டதன் மூலம், நாட்டை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த இரண்டு கட்சி ஆட்சிமுறையின் ஒரு வரலாற்றுப்பெரும் நிலைகுலைவின் வழியாக பிரான்ஸ் கடந்து சென்று கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பெருகிச் செல்லும் பொருளாதார சமத்துவமின்மை ஆகியவை தொடர்பாக வெடிப்பான சமூக கோபம் நிலவுவதன் மத்தியில், மக்ரோனும் லு பென்னும் இரண்டாம் சுற்றுக்கு தேர்வாகியிருக்கிறார்கள் என்ற உண்மையானது, பதவிக்கு வரவிருக்கும் ஜனாதிபதிக்கும் தொழிலாள வர்க்கத்துக்கும் இடையில் ஒரு கடுமையான மோதல் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது.

ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுப்பதற்கும் அரசியல் செயற்பாட்டின்மைக்கும் அல்லது அக்கறையற்று இருப்பதற்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. இது இரண்டு பிற்போக்கான வேட்பாளர்களையும் எதிர்ப்பதற்கு, பொதுக் கூட்டங்கள் கொண்ட ஒரு பிரச்சாரம், ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்புகள் மற்றும் தொழிலாளர்களது அரசியல் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை ஊக்கப்படுத்தல் ஆகியவற்றை சூழ்ந்ததாகும். இது, தொழிலாள வர்க்கம் தேர்தலைக் கொண்டு அதன்மீது திணிக்கப்படும் தளைகளை முறிப்பதற்கும், பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சர்வாதிகாரம் மற்றும் போரின் ஒரு பாதையில் இறங்கியிருக்கின்ற முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான ஒரு தீர்மானகரமான போராட்டத்திற்கு வலுவைத் திரட்டுவதற்கும் அதற்கிருக்கக்கூடிய ஒரே வழிவகையாகும்.

இந்த நெருக்கடிக்கு ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் (UF, முன்னதாக இடது முன்னணி) வழங்கும் பதிலிறுப்பு, எந்த முன்னோக்கிய பாதையையும் காட்டவில்லை. சிரியா மீதான ஏப்ரல் 7 அமெரிக்கக் குண்டுவீச்சுக்குப் பின்னர் போர்-எதிர்ப்பு மனோநிலை அதிகரித்ததன் மத்தியில் மெலோன்சோன் கிட்டத்தட்ட 20 சதவீத வாக்குகளை வென்றிருந்தார். மார்சைய், துலூஸ், லீல் மற்றும் வடக்கு பாரிஸின் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளில் அவர் வெற்றி கண்டிருந்தார். இப்போது PS இன் இந்த முன்னாள் அமைச்சர், UF இன் 440,000 இணைய அங்கத்தவர்களுக்கு, ஒரு வெற்று வாக்காகவோ அல்லது வாக்களிக்காது விடவோ, அல்லது மக்ரோனுக்கு ஆதரவாய் வாக்களிக்கும் ஒரு தெரிவை வழங்குகிறார்.

இது அரசியல் பொறுப்பை கோழைத்தனமாய் தட்டிக்கழிப்பதாகும், மக்ரோனுக்கு ஆதரவளிப்பது இல்லையேல் வாக்குச் சாவடியில் மட்டும் ஒரேயொரு முறை செய்து விட்டுப் போகக் கூடிய ஒருதடவைக்கான அடையாள சமிக்கையின் முட்டுச் சந்து என்ற தெரிவை அவர்களுக்கு வழங்குவதன் மூலமாக மெலோன்சோனின் 7 மில்லியன் வாக்காளர்களை மீண்டும் PSக்கு கீழ்ப்படியச் செய்வதற்கு நிகரானதாகும்.

மெலோன்சோனின் வாக்காளர்களில் லு பென் அடையாளப்படுத்தும் ஒவ்வொன்றையும் வெறுப்பவர்களாகவும், மக்ரோனையும் வெறுப்பவர்களாகவும், அத்துடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தெரிவில் அவலட்சணமானதும் பயங்கரமானதுமான ஏதோவொன்று இருப்பதாக உள்ளுணர்வில் உணரக் கூடியவர்களாகவும் எண்ணற்ற தொழிலாளர்களும், இளைஞர்களும் மற்றும் மாணவர்களும் இருக்கிறார்கள் என்பதை சோசலிச சமத்துவக் கட்சி நன்கறியும். அவர்கள் ஒரு முன்னோக்கிய பாதையை எதிர்நோக்கியிருக்கின்றனர். 2002 இல் போல —கடைசியாக FN இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி கன்சர்வேடிவ் வேட்பாளரான ஜாக் சிராக்குடன் மோதிய சமயத்தில்— FN இன் முதலாளித்துவ எதிராளிக்கு ஆதரவாய் வாக்களிப்பது என்ற ஒரு முட்டுச்சந்திற்குள் PS மற்றும் அதன் அரசியல் கூட்டாளிகளால் அவர்கள் வழிநடத்தப்பட்டு விடக்கூடாது.

சந்தர்ப்பவாதம் மற்றும் புரட்சிகரக் கோட்பாடுகளின் நிராகரிப்பு ஆகியவற்றால் கொடுக்க நேர்ந்த கடுமையான விலைகள் தொடர்பாக தொழிலாள வர்க்கம் பிரம்மாண்டமான அரசியல் அனுபவங்களை கொண்டிருக்கிறது. PS மற்றும் அதன் கூட்டாளி அமைப்புகள் சோசலிச அமைப்புகளாக நிரூபணமாகவில்லை, மாறாக நிதி மூலதனத்தின் கருவிகளாகவும், அதனால் பல தசாப்தங்களாய் ஒடுக்கப்பட்டு வந்திருக்கும் தொழிலாளர்களின் எதிரிகளாகவுமே நிரூபணமாகி உள்ளன.

பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கமானது, 1917 இல் போல்ஷிவிக் கட்சியும் ரஷ்ய தொழிலாள வர்க்கமும் நடத்திய போராட்டங்களுடன் அது கொண்டிருந்த தொடர்புகளை புதுப்பிப்பதே முன்னோக்கியிருக்கும் ஒரே வழியாகும் என்று, அக்டோபர் புரட்சியின் இந்த நூறாவது ஆண்டில், சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. மக்ரோன் மற்றும் லு பென் இருவருமே, அடியில் இருந்து நுனிவரை இற்றுப் போய்க் கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறை என்ற ஒரே நோயின் வடிவங்களேயாகும்.

தேர்தலை செயலூக்கமாக புறக்கணிப்பது என்பது, போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டத்திற்கு பாதையை தயாரித்துக் கொடுக்கும். தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குவதன் மூலமாக, பொருளாதாரத்தின் மீதான முதலாளிகளின் இரும்புப்பிடியை உடைப்பதற்கும், பிரான்சிலும் ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசத்தை வெற்றி காணச் செய்வதற்குமான போராட்டம் என்பதே இதன் பொருளாகும்.

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முட்டுச் சந்திற்கு எதிராக தொழிலாளர்களும் இளைஞர்களும், தொழிலாள வர்க்கத்தில் தேர்தலின் ஒரு புறக்கணிப்புக்காக போராடுவதற்கும், சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பதற்கும், அதன் வேலைத்திட்டத்தை படிக்குமாறும், பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முன்னணிப் படையாக அதனைக் கட்டியெழுப்புகின்ற போராட்டத்தில் இணையுமாறும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.