ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ballot dispute erupts as Erdogan declares a “Yes” victory in Turkish constitutional referendum

துருக்கிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பில் "ஆம்" வாக்குகள் வென்றிருப்பதாக எர்டோகன் அறிவித்துள்ள நிலையில், வாக்கெடுப்பு மீது சர்ச்சை எழுந்துள்ளது

By Halil Celik
17 April 2015

நேற்றிரவு வெளியான முடிவுகளின்படி, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்பு 51.4 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது. வாக்குகளில் 99 சதவீதம் எண்ணப்பட்டிருந்த நிலையில், எதிர்கட்சியான கெமாலிச குடியரசு மக்கள் கட்சி (CHP) மற்றும் குர்திஷ்-ஆதரவு மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) ஆகியவை ஆதரித்திருந்த "வேண்டாம்" பிரச்சாரம் 48.6 சதவீதத்தில் இருந்தது. நீதி மற்றும் வளர்ச்சி கட்சிக்கு (AKP) தலைமை கொடுத்து வரும் எர்டோகன், அவர் ஊக்குவித்திருந்த கடுமையான அரசியலமைப்பு மாற்றங்களுக்கான பிரச்சாரம் வென்றிருப்பதாக அறிவித்தார்.

எவ்வாறிருப்பினும் அந்த சர்வஜன வாக்கெடுப்பு மிகப் பெரியளவில் வாக்குப்பதிவு முறைகேடுக்களைக் கொண்டிருந்ததுடன், உடனடியாக தேர்தல் மோசடி குறித்த சந்தேகங்களை எழுப்பியது. “வாக்குச்சாவடிகளில் இருந்த தலைமை தேர்தல் ஆணைய (YSK) அதிகாரிகள் வாக்குகளில் முத்திரை வைக்க தவறியதாக வந்த பெரும் எண்ணிக்கையான குற்றச்சாட்டுக்களை" மேற்கோளிட்டு, தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கையில் அதன் அதிகாரிகளால் "முத்திரையிடப்படாத" வாக்குகள் "மோசடியானவை என்று நிரூபித்தால் ஒழிய அவற்றை செல்லுபடியானதாகவே" கணக்கில் எடுக்கப்படும் என்று அது அறிவித்தது.

கெமாலிச குடியரசு மக்கள் கட்சி (CHP), அது 60 சதவீத வாக்குகளின் மறுஎண்ணிக்கைக்கு முறையிடுமென அறிவித்தது. வாக்குப்பதிவு முறைகேடு மீதான அதன் முறையீடு குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் வரையில் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு தெளிவின்றியே இருக்குமென, HDP, அதன் பங்கிற்கு குறிப்பிட்டது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவானது, சர்வஜன வாக்கெடுப்பின் செல்லுபடித்தன்மை மீது பகிரங்கமாக கேள்வி எழுப்பி இருப்பதாக CHP இன் தலைவர் Kemal Kilicdaroğlu அறிவித்தார். நேற்று இரவு Kilicdaroğlu செய்தியாளர்களிடம் சுருக்கமாக பேசுகையில், அரசியலைமைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தின் விளைவாக இருக்க வேண்டும் என்றார். துருக்கிய அரசியலமைப்பைக் கருத்தொருமித்த அடிப்படையில் அபிவிருத்தி செய்ய அவர் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நீதி மற்றும் வளர்ச்சி கட்சியும் மற்றும் பாசிசவாத தேசிய இயக்க கட்சியும் அந்த சர்வஜன வாக்கெடுப்பை ஆதரித்த போதினும், “ஆம்" வாக்குகளின் மொத்த அளவு 2015 நவம்பர் பொது தேர்தலில் AKP மற்றும் MHP க்கு கிடைத்த வாக்குகளை விட 15-20 சதவீதம் குறைந்திருப்பதை ஆரம்ப வாக்கு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. HDP அதன் குர்திஷ் வாக்காளர்களது பெரும்பான்மை கொண்ட சில இடங்களிலேயே பகுதியாக அதன் வாக்குகளை இழந்துள்ளது, அங்கெல்லாம் நூறாயிரக் கணக்கானவர்கள் துருக்கிய இராணுவம் மற்றும் குர்திஷ் தேசியவாத குழுக்களுக்கு இடையிலான சண்டையால் வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருந்தனர்.

துருக்கியின் மிகப் பெரிய நகரங்களான இஸ்தான்புல், இஜ்மிர், அங்காரா, அதானா, தியர்பகிர் ஆகியவற்றில் "வேண்டாம்" வாக்குகளே வந்தன, அதேவேளையில் புர்சா, கொசெலி மற்றும் மனிசா போன்ற பிரதான தொழில்துறை நகர மக்களில் பெரும்பான்மை பிரிவுகள் "வேண்டாம்" என்றே வாக்களித்தன.

உத்தியோகப்பூர்வ முடிவு "ஆம்" வாக்குகளாக இருக்கும் என்பது தெளிவானதும், துருக்கிய பிரதம மந்திரி பினாலி யெல்ட்ரிம் AKP ஆதரவாளர்களின் ஒரு கூட்டத்தில் கூறுகையில், அந்த சர்வஜன வாக்கெடுப்பு துருக்கிய வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை திறந்துவிட்டிருப்பதாக தெரிவித்தார். பின்னர் எர்டோகன் அவரது மிகச் சிறியளவிலான வெற்றியைப் புகழ்ந்து பேசினார். “இந்த முடிவுகளைச் சிறுமைப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,” என்று அவர் எதிர்ப்பாளர்களை மேற்கோளிட்டு குறிப்பிட்டார். “காற்றில் கையசைத்து கொண்டிருக்காதீர்கள். இப்போது மிகவும் காலங்கடந்துவிட்டது,” என்றார்.

அவருக்கு நடைமுறையளவில் சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும் அந்த சர்வஜன வாக்கெடுப்பை அங்கீகரிப்பதன் மூலமாக, துருக்கி அதன் 200 ஆண்டு கால அதன் நிர்வாக முரண்பாட்டைத் தீர்த்திருப்பதாக எர்டோகன் இஸ்தான்புலின் ஹூபர் மாளிகையில் பேசுகையில் அறிவித்தார். “ஒரு நிஜமான ஆழ்ந்த நிர்வாக அமைப்புமுறைக்கு மாறுவதற்கான ஒரு முடிவு, ஒரு மாற்றம் இன்றைய தினம் எடுக்கப்பட்டுள்ளது,” என்றவர் தெரிவித்தார்.

“ஆம்" வாக்குகளுக்கு ஆதரவான தேசியவாத இயக்க கட்சி (MHP) இன் தலைவர் Devlet Bahçeli, சுமார் 50 சதவீத MHP வாக்காளர்கள் "வேண்டாம்" என்று வாக்களித்ததைப் புறக்கணித்து விட்டு, அந்த முடிவை "ஒரு முக்கிய வெற்றியாக" குறிப்பிட்டார். வாக்குப்பதிவு முறைகேடு பிரச்சினையை உதறிவிட்டு, அவர் அறிவிக்கையில், “இறையாண்மைக்கு முழு உரிமை கொண்ட மாபெரும் துருக்கிய தேசம், அதன் சுதந்திரம் மற்றும் எதிர்காலத்திற்காக, அந்நாட்டின் எதிர்காலம் மீதான இறுதி வார்த்தைகளை வழங்கி உள்ளது,” என்றார்.

துருக்கிய நாடாளுமன்ற அமைப்புமுறையை, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை மீது முழு கட்டுப்பாட்டை பெறும் சர்வ-அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியைக் கொண்டு பிரதியீடு செய்கின்ற இந்த அரசியலமைப்பு திருத்தம் ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும். இது ஜனாதிபதியே சட்ட ஆணைகளைப் பிறப்பிக்க, வரவு-செலவு திட்டக்கணக்கை வரைய, நீதித்துறையை நியமிக்க, நாடாளுமன்றத்தை கலைக்க, நாடாளுமன்ற தேர்தல்களுக்கான ஆளும் கட்சி வேட்பாளர்களை நியமிக்க அவருக்கு அனுமதியளிக்கிறது. நாடாளுமன்றம் என்பது வெறும் ஒரு முத்திரை குத்தும் இடமாக ஆகிவிடும்.

“ஆம்" வாக்குகள் உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், இந்த சர்வஜன வாக்கெடுப்பானது துருக்கியின் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளுக்கு மறுவடிவம் அளிக்கும். இந்த சர்வஜன வாக்கெடுப்புக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அவரது அகதிகள் உடன்படிக்கையை மீளாய்வு செய்ய இருப்பதாக ஏற்கனவே எர்டோகன் சூளுரைத்துள்ளார்.

வாக்குப்பதிவு மீது மிகப் பெரியளவிலான முறைகேடுகள் தொங்கி கொண்டிருக்கின்ற போதும், ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் துருக்கிய தொழில்துறை மற்றும் வணிக அமைப்பு (TUSIAD) “ஆம்" வாக்கு முடிவை ஆதரிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டது. "ஒரு பலமான துருக்கியுடன் நல்லிணக்கமாக" நின்று, “காலங்கடத்தாமல் எதிர்காலத்தை அணுகுமாறு" அது மக்களைக் கேட்டுக் கொண்டது. “நம் நாட்டின் முன்பிருக்கும் சீர்திருத்த திட்டநிரலை முன்னுரிமைப்படுத்துமாறும்" அது "அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தை" வலியுறுத்தியது. “சுதந்திரங்கள், பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதன் மூலமாக இது வளர்ச்சிக்குரிய நேரமாகும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஐயத்திற்கிடமின்றி துருக்கிய ஜனாதிபதிக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்குகின்ற போதினும், TUSIAD எர்டோகனிடம் "சுதந்திரம் மற்றும் நீதித்துறையைப் பலப்படுத்துமாறும்" மற்றும் கடந்த ஆண்டு ஜூலை 15 இல் வாஷிங்டன் மற்றும் பேர்லினால் ஆதரிக்கப்பட்ட, ஆனால் தோல்வியடைந்த ஆட்சி கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டது.

TUSIAD இன் அறிக்கையானது, சுங்க கட்டணங்கள், ஊடகம் மற்றும் இணைய சுதந்திரம், அகதிகள் கொள்கை மீதான பாதுகாப்பு கூட்டுறவு, சுதந்திர நுழைவனுமதி பயணம், சைப்ரஸில் ஓர் அரசியல் தீர்வு, சிரியாவில் போருக்கு ஒரு தீர்வு போன்ற பிரச்சினைகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவுகளுக்கும் அழைப்புவிடுத்தது.

துருக்கிய அரசாங்கத்தின் வெற்றிக்குப் பின்னர் அந்நாட்டை மிகவும் கவனமாக முன் செலுத்துமாறு அழைப்புவிடுத்து, ஐரோப்பிய கவுன்சிலும் அதேபோன்ற கருத்துக்களைத் தெரிவித்தது. ஒரு எழுத்துபூர்வ அறிக்கையில், ஐரோப்பிய கவுன்சிலின் பொது செயலாளர் Thorbjørn Jagland குறிப்பிடுகையில், “ஐரோப்பிய மனித உரிமை சாசனத்தில் பொதிந்துள்ள சட்ட விதி கோட்பாடுகளுக்கு இணங்கிய விதத்தில் நீதித்துறை சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிக மிக முக்கியமாகும். ஐரோப்பிய கவுன்சிலில் துருக்கி ஒரு முழு அங்கத்துவ நாடாக விளங்குகின்ற நிலையில், ஐரோப்பிய கவுன்சில் இந்த நிகழ்முறையில் அந்நாட்டை ஆதரிக்க தயாராக துணை நிற்கும்,” என்றார்.

ஜேர்மனியில் வெளியுறவு மந்திரி சிக்மார் காப்ரியல் கூறுகையில், "நிலை தடுமாறாமல் விவேகமான பாதையில்" முன்செல்லுமாறு துருக்கிய அரசாங்கத்தை வலியுறுத்தினார். சமூக ஜனநாயக கட்சியின் Axel Schaefer அந்த சர்வஜன வாக்கெடுப்பின் முடிவை 1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததுடன் ஒப்பிட்டு, ஒரு பேரழிவுகரமானதாக குறிப்பிட்டார்.

“பிரிட்டன் வெளியேறுவது மீதான வாக்கெடுப்பு பிரிட்டனை ஓரத்திற்கு தள்ளி வருகிறது, ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்வானமை அமெரிக்காவை ஒரு சாகசத்திற்குள் இட்டுச் செல்கிறது, எர்டோகனின் சர்வஜன வாக்கெடுப்போ, 1933 ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தல் ஜேர்மனியை படுபாதாளத்திற்குள் கொண்டு சென்றதைப் போல துருக்கியை வரம்பற்ற ஆட்சியதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது,” என்றார்.

எர்டோகனின் நெருங்கிய கூட்டாளிகள் இந்த சர்வஜன வாக்கெடுப்பு மீதான அவர்களது அறிக்கைகளில் மிகவும் ஆதரவாக இருந்தனர். அஜேரி (Azeri) ஜனாதிபதி Ilham Aliyev, “இந்த சர்வஜன வாக்கெடுப்பு ஐயத்திற்கிடமின்றி நமது சகோதர நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும், இது சர்வதேச அரங்கில் ஒரு நிலையான பலமான துருக்கிக்கான இடத்தை மற்றும் அது வகிக்க இருக்கின்ற பாத்திரத்தைப் பலப்படுத்தும்" என்று கூறி, எர்டோகனை வாழ்த்தினார்.

கட்டார் அரசர் Sheikh Tamim bin Hamad Al Thani மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரும், பாகிஸ்தான், ஹங்கேரி, மாசிடோனியா, சவூதி அரேபியா, சூடான் மற்றும் கென்யாவின் தலைவர்களும், இந்த முடிவுக்காக எர்டோகனை வாழ்த்த துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுத் கவ்சோக்லு (Mevlut Cavusoglu) ஐ தொலைபேசியில் அழைத்தனர்.