ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sections of Paris on lockdown after pre-election shooting

தேர்தலுக்கு முன் துப்பாக்கிச்சூடு நடந்ததில் பாரிஸின் பல பகுதிகளில் இயல்புவாழ்க்கை முடக்கம்

By Johannes Stern and Alex Lantier
21 April 2017

ஞாயிறன்று பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கு மூன்று நாட்கள் முன்பாக, Champs-Elysées அவென்யூவில் போலிஸைக் குறிவைத்து நடந்த ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் பாரிஸ் தாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒரு போலிஸ்காரர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர், அதில் வழிப்போக்கரும் ஒருவர். பாரிஸின் சுற்றுலாப்பகுதிகளது இருதயத்தானமாக விளங்குகின்ற இந்தப் பகுதி சென்ற இரவில் முடக்கப்பட்டது.

வேட்பாளர்களும் கருத்துரையாளர்களும் பயங்கரவாதப் பிரச்சினையை தேர்தல் விவாதத்தின் மையமாக இருத்த வேண்டும் என்று பிரெஞ்சு ஊடகங்கள் ஏற்கனவே கோரி வந்திருக்கின்றன. 2015 பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைக்கின்ற அவசரகாலநிலையை முடிய முடிய நீட்டிச் செல்லும் நிலையில் ஏற்கனவே பிரான்ஸ் இருந்து வருகின்ற சமயத்தில், இந்த சமீபத்திய தாக்குதலானது, சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அழைப்பு விடுக்கின்ற அரசியல் சக்திகளை வலுப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. தாக்குதலுக்கு முந்தைய நாளில், தேர்தலை கிட்டத்தட்ட துப்பாக்கிமுனையில் நடத்துவதற்கு ஒப்பாக தேர்தல் நாளன்று 50,000 துருப்புகளை வீதிகளில் நிறுத்துவதற்கு பிரெஞ்சு அதிகாரிகள் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

தாக்குதலுக்குப் பின்னர், அதிகாரிகள் பிரபலமான பெருவீதிப் பகுதி மற்றும் சுற்றியிருக்கும் பகுதிகளை கனரக ஆயுதமேந்திய இராணுவ மற்றும் போலிஸ் படைகளைக் கொண்டு மூடியதோடு இப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்தனர். போலிஸ் ஹெலிகாப்டர் ஒன்று மத்திய பாரிஸுக்கு மேல் தாழ்வாய் பறந்து கொண்டிருந்தது.

இந்தத் தாக்குதல் குறித்த ஆரம்பகட்ட விவரிப்புகள் மட்டுமே கிடைக்கின்றன என்ற நிலையிலும், அவையே கூட, இது நடக்க எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்ற கேள்விகளை ஏற்கனவே எழுப்புவதாய் இருக்கின்றன.

இன்று அதிகாலை, பாரிஸ் அரசுவழக்கறிஞரான பிரான்சுவா மொலான் உம் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரான பியர்-ஹென்றி பிராண்டெ உம் Champs-Elysées சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினர்.

“தொழில்நுட்ப மற்றும் அறிவியல் போலிசின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று கூறிய பிராண்டெ மேலும் சேர்த்துக் கொண்டார், “இன்றிரவு 8.50 மணிக்கு, Marks & Spencer நிறுவனத்தின் முன் பணியில் இருந்த போலிஸ்காரர்கள் மீது துப்பாக்கி ஏந்திய ஒரு மனிதர் சுட்டதில் போலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார், இன்னொருவர் படுகாயம் அடைந்திருக்கிறார், அந்தப்பக்கமாக சென்று கொண்டிருந்த சுற்றுலாப்பயணி ஒருவரும் கூட காயமடைந்துள்ளார். திருப்பிச் சுட்டதில் அந்த பயங்கரவாதி கொல்லப்பட்டார்.”

”தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் காணப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது” என்றார் பிராண்டெ. “அதனை உங்களிடம் தெரிவிக்க முடியாது ஏனென்றால் அவருடன் வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா என்பதைக் கண்டறிவதற்காக போலிஸ் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.” இன்னொரு தாக்குதல்தாரி இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர், இன்னும் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரித்து விட முடியாது என பிராண்டெ தெரிவித்தார்.

வியாழனன்று இரவு சுமார் 9 மணியளவில் போலிஸ் அதிகாரிகள் சகிதமாய் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றை கார் ஒன்று நெருங்கி வந்ததாக பிரெஞ்சு அதிகாரிகளும் ஊடக செய்திகளும் தெரிவித்தன. காரில் இருந்து வெளிவந்த ஒரு மனிதர் வேனை நோக்கி ஒரு “தானியங்கி துப்பாக்கி”யால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே ஒரு அதிகாரி மரணமடைந்ததாக பிராண்டட் தெரிவித்தார். அதன்பின் அந்த மனிதர் “விலகி ஓடிக் கொண்டே சுட்டதில் இன்னும் இரண்டு போலிஸ்காரர்கள் காயமடைந்தனர். மற்ற போலிஸ்காரர்கள் சேர்ந்து அந்த தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்று விட்டனர்” என்று அவர் விளக்கினார்.

அருகிலுள்ள Rue de Ponthieu பகுதியில் இருக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளரான Choukri Chouanine, AFP செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், கொஞ்ச நேரத்திற்கு எனக்கு “நிறைய துப்பாக்கிகள் சுடும் சத்தம் கேட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை கீழ்த்தளத்தில் நாங்கள் மறைத்து வைக்க வேண்டியதானது” என்றார். அருகிலிருந்த பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் மெட்ரோ ஸ்டேஷனிலும் “பீதி” உண்டானதாக ஒரு பெண்மணி தெரிவித்தார். “மக்கள் அனைத்து திசைகளிலும் ஓடிக் கொண்டிருந்தனர்.”

Ines என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு சாட்சி BFM-TV பிரெஞ்சு தொலைக் காட்சியிடம், துப்பாக்கி சுடும் சத்தத்தை அவர் கேட்டதையும், தரையில் ஒரு மனிதனின் உடல் வீழ்ந்து கிடந்ததையும் அந்த பகுதியில் இருந்தவர்களை போலிசார் துரிதகதியில் வெளியேற்றியதையும் கூறினார்.

வியாழனன்று பின்னிரவில், இஸ்லாமிக் ஸ்டேட் (IS) போராளிக்குழு Amaq என்ற அதன் பிரச்சார வெளியீட்டில் விடுத்திருந்த ஒரு அறிக்கையில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தது. இந்தக் குழுவின் “போராளிகளில்” ஒருவரான அபு யூசுப் அல்-பெல்ஜிகி என்ற ஒரு “பெல்ஜியர்” தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த அறிக்கை தெரிவித்தது என்று AFP கூறியது.

பாரிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகிக்கப்படுகின்ற பெல்ஜியத்தில் இருந்து இரயிலில் வந்த ஒருவருக்கு எதிராய் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் செய்திநிறுவனமும் செய்திவெளியிட்டிருந்தது.

நீண்டதொரு போலிஸ் பதிவு வரலாற்றுடன் பாரிஸின் புறநகர்ப்பகுதியில் வாழ்ந்து வந்த கரீம் சி என்பவர் தான் இந்த சந்தேகிக்கப்படும் நபர் என பின்னர் ஊடகச் செய்திகள் கூறின. இந்த மனிதரின் வரலாறு குறித்த ஊடகங்களின் செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அவர் பிரான்சில் போலிஸ்காரர்கள் மீது ஒரு மரணகரமான தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்ய அனுமதிக்கப்பட்டார் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2001 இல் பாரிஸ் அருகில் இரண்டு போலிஸ்காரர்களை கிட்டத்தட்ட கொலைசெய்யும் நிலைக்குச் சென்ற ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2003 இல் அவருக்கு 20 வருட சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது. மேல்முறையீட்டில் அவர் விடுதலையான போதும், போலிஸ் அதிகாரிகளை கொல்வதற்காக ஆயுதங்களை தேடிவருவதாக அவர் பேசி வந்ததை அடுத்து சமீபத்தில் Meaux இல் மீண்டும் அவர் காவலுக்குள் செல்ல நேர்ந்தது.

“போலிஸ் துறையால் நன்கு அறியப்பட்டிருந்தவரே” என்று போலிஸ்-நீதித்துறை செய்தித்தொடர்பாளரான Audrey Goutard பிரான்ஸ்2 தொலைக்காட்சியிடம் அறிவித்தார். “மொத்தமான கொலைமுயற்சிகளுக்காக அவர் ஏற்கனவே வட்டமிடப்பட்டிருந்தார்”. பயங்கரவாதத் தடுப்பு போலிசால் அவர் விசாரணை செய்யப்பட்டு வந்ததாக AFP இன் செய்திகள் தெரிவிக்கின்றன.

திகைப்பூட்டக் கூடியது என்னவென்றால், கரீம் சி ஆபத்தானவராக போலிசால் கருதப்பட்டிருக்கவில்லை என்பதுடன் இந்த பயங்கரமான துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்கு கொஞ்சநாள் முன்னதாக அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த துப்பாக்கிசூடு குறித்து விவாதிக்க, வெளியேறவிருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் இரவு சுமார் 11.30 மணியளவில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இந்தத் தாக்குதல் “பயங்கரவாதத் தன்மை கொண்டது” என்று கூறிய அவர் தேர்தலை பத்திரமாய் நடத்துவதற்கு பாதுகாப்பு சேவைகள் “முழுமையான கண்காணிப்பை” மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார். “கோழைத்தனமான முறையில் கொலைசெய்யப்பட்ட போலிஸ் அதிகாரிக்காக ஒரு தேசிய அளவிலான நினைவுகூரல் நடத்தப்படும்... போலிஸ் படைகளுக்கு தேசத்தின் ஆதரவு முழுமையாக இருக்கிறது” என்று ஹாலண்ட் அறிவித்தார்.

ஹாலண்ட் தனது பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு கூட்டத்தையும் இன்று காலை 8 மணிக்கு கூட்டியிருக்கிறார்.

ஹாலண்ட் சொல்வதும் ISIS சொல்வதும் உண்மையென்றால், இந்த அத்தியாயமும் லிபியா மற்றும் சிரியாவிலான நேட்டோவின் இரத்தம்பாயும் போர்களது இன்னுமொரு பின்விளைவாகவே தோன்றுகிறது. அந்த நாடுகளில் ஆட்சி மாற்றங்களுக்கான பினாமிப் போர்களில் நேட்டோ சக்திகளால் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாதக் குழுக்களின் பல்வேறு பின்னல்களால் ஐரோப்பாவில் நடந்த குண்டுவெடிப்புகள் ஏற்கனவே நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவுவாங்கியிருக்கின்றன. 2012 இல் Toulouse ஐ சுற்றி நடந்த முகமது மெரா துப்பாக்கிச்சூடுகள், 2015 ஜனவரி சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூடுகள், பாரிஸில் 2015 நவம்பர் 1 3 அன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதல், புரூசேல்ஸில் 2016 மார்ச் 22 அன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் எல்லாமே இத்தகைய சக்திகளாலேயே நடத்தப்பட்டிருந்தன.

ஒரு பக்கம் நேட்டோவின் அதிகாரிகளுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதப் பின்னல்களுக்கும் இடையில் நெருக்கமான பிணைப்புகள் இருப்பதையும், இன்னொரு பக்கத்தில் பிரான்சில் தீவிரமான அரசியல் நெருக்கடி நிலவுவதையும் கொண்டு பார்க்கும்போது, இந்தத் தாக்குதலிலும் அரசு எந்திரத்தின் கன்னைகள் எதுவும் ஏதோவொரு விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடுமோ என்ற கேள்வி முற்றிலும் நியாயமானதே ஆகும்.

மக்களிடையே போர்-எதிர்ப்பு மற்றும் ஸ்தாபக-விரோத மனோநிலை பெருகிச் செல்லும் நிலை, முன்கணிக்கவியலாத ஒரு ஜனாதிபதித் தேர்தல், ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் வரலாற்று உருக்குலைவு ஆகியவற்றுக்கு முகம்கொடுத்திருக்கும் நிலையில், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. சிரியாவில் சட்டவிரோதமாகவும் ஆத்திரமூட்டலற்ற நிலையிலும் ஏப்ரல் 7 அன்று அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், போர்-எதிர்ப்பு மனோநிலை அதிகரித்திருப்பதைக் கண்டு -இதற்குப் பின்னர் கருத்துக்கணிப்புகளில் வேட்பாளர் ஜோன் லூக் மெலன்சோனுக்கான ஆதரவு கணிசமாய் அதிகரித்துள்ளது- பிரான்சின் ஆளும் உயரடுக்கு மிரட்சி கண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதற்கான கோரிக்கைகளை கொண்டு அது பதிலிறுத்துள்ளது.

தேர்தலின் சமயத்தில் பிரான்சின் வீதிகள் எங்கிலும் 50,000 துருப்புகளை நிறுத்துவதற்கு உள்துறை அமைச்சர் மத்தியாஸ் ஃபேகல் ஆலோசனை வைத்திருப்பதைத் தொடர்ந்து, தேர்தல் விவாதம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய விடயங்களில் கவனம்குவிக்க வேண்டும் என்று ஊடகங்களில் இருந்தான கோரிக்கைகளின் ஒரு அலை வந்துள்ளது.

அரசாங்கத்தால் -இந்த விடயத்தில் பல்வேறு உளவு மற்றும் பாதுகாப்பு முகமைகளையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்- கூறப்படுகின்ற அல்லது செய்யப்படுகின்ற எந்த விடயத்தையும் அதன் தோற்றமதிப்பைக் கொண்டு கணக்கிட முடியாது. தேர்தலின் இறுதி நாட்களில் அரசியல் சூழ்நிலையை அதி வலது நோக்கி நகர்த்துவதில் தனக்கு முழு நலன்களும் இருக்கிறது என ஆளும் உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகள் தெளிவுபட நம்புகின்றன.

ஆளும் வர்க்கத்தின் போர்-ஆதரவு, போலிஸ்-ஆதரவு அரசுப் பரப்புரையை ஜனாதிபதி வேட்பாளர்களில் எவரொருவருமே எதிர்க்கவில்லை என்பது தான் அவர்களது பிரதான அனுகூலமாய் இருக்கிறது. அதற்கு மாறாய், அத்தனை வேட்பாளர்களுமே, தாக்குதல் நடந்த சமயத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி விவாத பங்கேற்பில், போலிசைப் பாராட்டினர். இதில் மெலன்சோனும் உண்டு, அவரது போலிஸ்-ஆதரவு பிரதிபலிப்பானது, அவர் மற்ற வேட்பாளர்களுக்கான ஒரு “இடது” மாற்று அல்ல என்பதை மீண்டுமொரு முறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென் ட்விட்டரில் எழுதினார்: “மீண்டுமொருமுறை குறிவைக்கப்பட்டிருக்கும் போலிசுக்கு என்னுடைய அனுதாபங்களும் ஐக்கியமும்”. வலது-சாரி கன்சர்வேடிவ் பிரான்சுவா ஃபிய்யோன் ட்வீட் செய்தார்: “நம்மைப் பாதுகாப்பதற்காக தங்களது வாழ்க்கையைக் கொடுக்கும் போலிசுக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன், #ChampsElysees.”

PS ஆதரவு பெற்ற “En Marche” இயக்கத்தின் இமானுவேல் மக்ரோனும் இதேபோன்றதொரு தொனியை வெளிப்படுத்தினார்: “இன்றிரவு, எனது முழு ஆதரவும் நமது பாதுகாப்புப் படைகளுக்கு இருப்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.”

மெலன்சோன் தனது பங்காக ட்விட்டரில் எழுதினார்: “உணர்ச்சிப்பெருக்கான ஆதரவை மறைந்த போலிஸ்காரர்களது குடும்பங்களுக்கும் காயம்பட்ட போலிஸ்காரர்களது குடும்பங்களுக்கும் நாங்கள் அனுப்புகிறோம்... குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போக மாட்டார்கள் அவர்களது உடந்தையாளர்களும் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள்.”