ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Oppose Humboldt University’s attack on freedom of speech and historical truth!

பேச்சு சுதந்திரம் மற்றும் வரலாற்று உண்மை மீதான ஹம்போல்ட் பல்கலைக்கழக தாக்குதலை எதிர்ப்போம்!

By the International Editorial Board of the World Socialist Web Site
6 April 2017

மார்ச் 15 இல், கொலோன் மாவட்ட நீதிமன்றம் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியை ஒரு வலதுசாரி தீவிரவாதியாக குறிப்பிட பிரேமன் பல்கலைக்கழக மாணவர் அமைப்பான Asta க்கு அனுமதியளித்து இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாக சபை அதன் ஆதரவை அப்பேராசிரியருக்கு கொடுத்துள்ளது. அவர் பதவி குறித்து விமர்சிப்பதை "ஏற்றுக் கொள்ள முடியாதென" அறிவித்துள்ள அது, பார்பெரோவ்ஸ்கி மீதான விமர்சகர்கள் மீது கடுமையான சட்ட தடைகள் விதிக்கப்படுமென அச்சுறுத்தி உள்ளது.

“கொலோன் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு மீதான அறிக்கை" ஒன்றில், ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாக சபை அந்த பேராசிரியர் "ஒரு நிகரில்லா மேதை, அவர் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது,” என்று வலியுறுத்துகிறது. மேற்கொண்டு அது குறிப்பிடுகையில், “ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கியின் அறிவார்ந்த கருத்துக்கள் —குறிப்பாக அதன் உள்ளடக்கத்திற்குள் வைத்து பார்த்தால்— வலதுசாரி தீவிரவாதம் இல்லை. … ஹம்போல்ட் பல்கலைக்கழக அங்கத்தவர்கள் மீதான ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை ஏற்றுக் கொள்ள முடியாது,” என அது குறிப்பிடுகிறது. பின்னர் அது ஹம்போல்ட் பல்கலைக்கழகம் சார்பாக "ஏற்கனவே தொடுக்கப்பட்ட" வேறொரு "குற்ற" வழக்கையும் மேற்கோளிடுகிறது. ஆனால் இதற்காக அது உள்ளது உள்ளவாறே எந்த விபரங்களையும் வழங்கவில்லை.

இந்த அறிக்கை பேச்சு சுதந்திரம் மீதான ஒரு தாக்குதல் என்பதோடு, ஜேர்மன் ஊடகங்களின் வலதுசாரி அரசியல் தாக்குதலின் பாகமாக உள்ளது. இதன் மைய இலக்கு ஜேர்மனியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei, SGP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பாகும் (IYSSE), இவை ஒருபுறம் பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி வரலாற்று திருத்தல்வாதம் (அதாவது நாஜி ஆட்சியின் இனப்படுகொலை கொள்கைகளைகளை மற்றவற்றுடன் தொடர்புபடுத்துவது) மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத வாய்சவடாலுக்கும், மறுபுறம், ஜேர்மன் இராணுவவாதத்தை புத்துயிரூட்டுவதற்கு அதிகரித்துவரும் அரசு-ஆதரவிலான பிரச்சாரத்திற்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்தின. ஜேர்மனியின் முன்னணி பழமைவாத பத்திரிகையான Frankfurter Allgemeine கடந்த வாரம் SGP மீது இரண்டு தாக்குதல்களை நடத்தியது, அதில் முதல் பக்கத்தில் வெளியான ஒன்றும் அதில் உள்ளடங்கும். “பல்கலைக்கழகங்களை இராணுவவாதத்தின் சித்தாந்த மையங்களாக மாற்றுவதற்கு" SGP காட்டும் எதிர்ப்பு பெற்றுள்ள "பலமான செல்வாக்கு" குறித்து அது கவலைகளை வெளியிட்டது.

மக்கள் கருத்துக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சியில், ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாக சபை பார்பெரோவ்ஸ்கியை பேச்சு சுதந்திரம் மற்றும் கல்வித்துறைசார் சுதந்திரம் மீதான தாக்குதலில் பாதிக்கப்பட்டவராக  காட்டுவதற்கு முயன்று வருகிறது. இந்த வாதத்தின் போக்கு முற்றிலும் மோசடியானதாகும். பார்பெரோவ்ஸ்கி அவரது விஞ்ஞானபூர்வ உழைப்புகளுக்காக தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் ஒரு அறிஞர் கிடையாது. உண்மையில் அவர் பரவலாக பிரசுரிக்கப்படும் பிற்போக்குத்தனமான அரசியல் திட்டநிரலை கொண்ட ஒரு வலதுசாரி அரசியல் நடவடிக்கையாளர் ஆவார். பார்பெரோவ்ஸ்கியால் பாதுகாப்பிற்காக வெளிப்படையாகவே உயர்மட்டத்தில் உள்ள எண்ணற்ற நண்பர்களின் ஒரு வலையமைப்பை உதவிக்கு அழைக்க முடியும். பார்பெரோவ்ஸ்கி வேறுபடுத்தி பார்க்க முடியாத அவரது அறிவார்ந்த படைப்புகளுக்கு இடையே, அவர் ஜேர்மனியின் ஒப்புயர்வற்ற வரலாற்றாளராக முடிவில்லா பொது பாராட்டுகளுக்குரிய ஒருவராகி உள்ளார். அகதிகள் மீதான வெறுப்பை நியாயப்படுத்தும், ஈவிரக்கமின்றி அரசு வன்முறை மேற்கொள்ள ஆலோசனை வழங்கும் மற்றும் நாஜி குற்றங்களை குறைத்துக்காட்டியும் பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தோன்றுகிறார், பேட்டி அளிக்கிறார் மற்றும் சஞ்சிகை கட்டுரைகளில் எழுதுகிறார்.

இணையத்தில், பார்பெரோவ்ஸ்கியின் பெயருக்கும் ஜேர்மன் மற்றும் அமெரிக்க வலதுசாரிக்கும் இடையிலான தொடர்பு, காட்சி ஒவ்வொருவரும் காணும் வகையில் அப்பட்டமாக காட்சியளிக்கிறது. அந்த தீர்ப்புக்குப் பின்னர், அவர் வலதுசாரி தீவிர இதழான Compact, தீவிர வலது தினசரியான Junge Freiheit மற்றும் Politically Incorrect உட்பட பல்வேறு வலதுசாரி தீவிர கொள்கை வலைப்பதிவுகளால் அவர் பாதுகாக்கப்பட்டார். வலது-தீவிரவாத அமெரிக்க வலைத் தளங்களான Breitbart News உம் மற்றும் யூதயின விரோத நாஜி துர்நாற்ற இதழ் “Der Stürmer” இன் ஒரு நவீன பதிப்பான Daily Stormer உம் அகதிகளுக்கு எதிரான அவரது பிரச்சாரத்திற்காக பார்பெரோவ்ஸ்கியைத் தூக்கி வைத்து கொண்டாடின.

பார்பெரோவ்ஸ்கியை குற்றஞ்சாட்டுபவர்கள் "அரசியலமைப்பு ரீதியில் பேச்சு சுதந்திர உத்தரவாதத்தால்" பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவரை ஒரு "வலதுசாரி தீவிரவாதியாக" அழைக்க கொலோன் தீர்ப்பு அனுமதி அளிக்கிறது என்று ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகசபை பொய்யாக வாதிடுகிறது. ஆனால் உண்மையில், பார்பெரோவ்ஸ்கியின் நிலைப்பாடு அவரை வலதுசாரி தீவிரவாதியாக குறிப்பிடுவதற்கு "போதிய தொடக்க புள்ளியை" வழங்குவதாக தீர்ப்பு அறிவிக்கிறது. பார்பெரோவ்ஸ்கி கருத்துக்கள் மீதான பிரேமன் மாணவர்களது விமர்சனம் அவதூறானது இல்லை "ஏனென்றால் சம்பந்தப்பட்ட புறநிலை உண்மைகளுக்கு அவசியமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன” என்பதை நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதற்கும் மேலாக, அவரது "அறிவார்ந்த" கருத்துக்கள் குற்றஞ்சாட்டப்படுவதை போல உள்ளடக்கத்திற்கு வெளியே கையாளப்பட்டிருப்பதற்காக பார்பெரோவ்ஸ்கி பிரேமன் பல்கலைக்கழக Asta அமைப்பு மீது வழக்கு தொடுக்கவில்லை, மாறாக, அகதிகளுக்கு எதிரான அவர் பிரச்சாரம் மற்றும் இரத்தம் உறைய வைக்கும் வகையில் இராணுவ வன்முறைக்கு அவர் வக்காலத்துவாங்குவதை மாணவர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக அவர்களை வழக்கில் இழுக்கிறார். பார்பெரோவ்ஸ்கியின் கருத்துக்கள் உள்ளடக்கத்திற்கு வெளியே மேற்கோளிடப்பட்டதாக வலியுறுத்திய வலதுசாரி நீதிமன்றத்தின் இரண்டாவது தீர்ப்பு, ஒரு நீதித்துறை மோசடியாகும். ஜேர்மனியில் மிகவும் பழமைவாத நீதிமன்றங்களில் ஒன்றாக நன்கறியப்படும் கொலோன் நீதிமன்றம், பார்பெரோவ்ஸ்கியின் வெறுப்பார்ந்த கருத்துக்கள் குறித்து பிரதிவாதியின் விளக்கத்திற்கு சாதகமாக பின்னோக்கி வளைந்து கொடுத்தது. பார்பெரோவ்ஸ்கியின் கருத்துக்களில் இருந்து பந்திகளை அவர்கள் சட்டபூர்வமாக தேர்ந்தெடுத்ததில், பிரேமன் மாணவர்கள் அவர் கருத்துக்களின் உள்ளடக்கத்தை பொய்மைப்படுத்தவில்லை. குறிப்பாக பார்பெரோவ்ஸ்கி உரைகளை முழுமையாக வாசிக்கையில், அவை அவரது தீவிர வலது அரசியலைக் குறித்து எந்த சந்தேகமும் விட்டு வைப்பதில்லை.

பார்பெரோவ்ஸ்கியின் கல்வித்துறைசார் தொழில் வாழ்க்கையும் அவர் அரசியல் நடவடிக்கைகளும் பிரிக்க முடியாதவாறு ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. அவர் அவரது பொதுவான அரசியல் நிலைப்பாடுகளையும் அவரது "அறிவுசார் கருத்துக்களையும்" வேறுபடுத்தி வைக்கவில்லை. அவர் அரசியல் பிரச்சினைகள் மீதான அவரது அனைத்து தர்க்க கருத்துக்களின் ஒரு பட்டியலை அவரது உத்தியோகபூர்வ ஹம்போல்ட் பல்கலைக்கழக வலைத் தளத்தில் உள்ளடக்கி உள்ளார். பார்பெரோவ்ஸ்கி அவர் கலந்து கொண்டிருந்த 101 வானொலி நிகழ்ச்சிகள், 39 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் 32 பத்திரிகை நேர்காணல்களை அதில் பட்டியலிட்டுள்ளார்.

பார்பெரோவ்ஸ்கியின் பொது கருத்துக்களில் தொடர்ச்சியாக இருக்கும் ஒரு விடயம் அகதிகளுக்கு எதிரான அவரது பிரச்சாரமாகும், இதில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மீதான கடுமையான தாக்குதல்களும் உள்ளடங்கி உள்ளன. அவர் Frankfurter Allgemeine Zeitung இல் எழுதினார்: “சிறியதொரு காலத்தில் பல மில்லியன் கணக்கான மக்களை ஏற்றுக் கொண்டமையானது, நாம் ஆதாரமாக கொண்டிருக்கும் மற்றும் ஒரு சமூகத்தை காப்பாற்றி வைத்திருக்கும் மற்றும் அதற்கு நீடிப்புத்தன்மையை வழங்கும் நமது கலாச்சாரங்களின் தொடர்ச்சியைத் (Überlieferungszusammenhang) தொந்தரவுக்கு உட்படுத்துகிறது,” என்கிறார்.

புலம்பெயர்ந்தவர்கள் மீதான பார்பெரோவ்ஸ்கியின் தாக்குதல்கள், ஜேர்மனிக்கு வெளியில் உள்ள வலதுசாரி பத்திரிகைகளிலும் அவரை விருப்பத்திற்குரியவராக மாற்றியுள்ளது. இரண்டு அதிதீவிர வலதுசாரி அமெரிக்க பத்திரிகைகள் —ப்ரைய்ட்பார்ட் நியூஸ் மற்றும் நவ-நாஜி வலைத் தளமான Stormer— பார்பெரோவ்ஸ்கியை மேற்கோளிட்டன. அமெரிக்க நாஜிக்களுக்கு அந்த பேராசிரியரின் அறிக்கைகளில் கூறும் கருத்துக்களின் அர்த்தம் குறித்து முற்றுமுழுதாக எந்த சந்தேகமும் கிடையாது.

அவர் Basler Zeitung க்கு ஒரு மாதாந்தர கட்டுரையும் எழுதுகிறார், இப்பத்திரிகை, சுவிஸ் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு வலதுசாரி பேரினவாத ஊடக சாம்ராஜ்ஜியத்தின் உரிமையாளர் Christoph Blocher க்கு உரியதாகும். பார்பெரோவ்ஸ்கியின் வாதங்கள் ஜேர்மன் தீவிர வலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) இன் வாதங்களை பிரதிபலிக்கின்றன, இக்கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதிகளில் பாசிசவாதிகள் உள்ளடங்கி இருக்கிறார்கள் என்ற "அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கு" எதிராக அவர் அக்கட்சியை பாதுகாக்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில், பார்பெரோவ்ஸ்கி, பயங்கரவாதிகளுக்கு எதிராக ஈவிரக்கமின்றி அரசு வன்முறை பயன்பாட்டை பெருமைப்படுத்துகிறார். அதிதீவிர வலதின் குணாம்சமாக விளங்கும் மூர்க்கமான மொழியைப் பயன்படுத்தி அவர் இவ்வாறு எழுதியுள்ளார்: “அலட்சியம் என்பது கோழைத்தனத்தின் மற்றொரு வார்த்தை மட்டுமேயாகும். ஒருவருக்கு வன்முறையை தவிர வேறெந்த மொழியும் தெரியாது என்றால், பின் அவரும் அதை உணர வேண்டும்.”

பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி அரசியல் பழியுரைகளை ஒரு வரலாற்றாளராக அவர் படைப்புகளில் இருந்து பிரித்து பார்க்க முடியாது.

அவரது கல்விசார் சுயவிபரக் குறிப்பில், அவர் 2014 பெப்ரவரியில் ஜேர்மன் சஞ்சிகை Der Spiegel  க்கு அளித்த ஒரு பேட்டியும் உள்ளடங்கி உள்ளது, அப்பேட்டியில் பார்பெரோவ்ஸ்கி இவ்வாறு அறிவித்திருந்தார்: “ஹிட்லர் ஒரு மனநோயாளி அல்லர். அவர் வக்கிரமானவரும் அல்லர். யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து அவர் மேசையில் பேசுவதை அவர் விரும்பவில்லை,” என்றார். இந்த கருத்தே கூட போதுமானதாக உள்ளது, இதன் இயல்புக்கு மீறிய அர்த்தத்தை எந்தளவிலான சுய ஒப்புதல் வார்த்தைஜாலங்களில் இருந்தும் வேறுபடுத்த முடியாது.

அதே நேர்காணலில் பார்பெரோவ்ஸ்கி, ஜேர்மன் போருக்குப் பிந்தைய பேராசிரியர்களில் நாஜி குற்றங்களை மிகவும் இழிவுகரமாக வக்காலத்துவாங்கிய மறைந்த ஏர்ன்ஸ்ட் நோல்ட ஐ நியாயப்படுத்தினார். நாஜி குற்றங்களை நோல்ட நியாயப்படுத்துவதை முன்னணி ஜேர்மன் வரலாற்றாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்த, 1980 களின் இறுதியில் நடந்த புகழ் வாய்ந்த "வரலாற்றாளர்களின் விவாதத்தைக்" (Historikerstreit) குறிப்பிட்டு, பார்பெரோவ்ஸ்கி குறிப்பிடுகையில், “வரலாற்றுரீதியில் பேசுவதானால், அவர் சரியாகவே இருந்தார்,” என்றார்.

நாஜி குற்றங்களை ஒப்பீடு செய்வதென்பது பார்பெரோவ்ஸ்கியின் படைப்புகள் நெடுகிலும் ஒரு சிவப்பு நூலிழையாக ஓடுகிறது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜி ஆட்சி நனவுபூர்வமாக திட்டமிட்டு நிர்மூலமாக்கும் போரை (Vernichtungskrieg) நடத்தியது என்பதை அவர் மறுக்கிறார். நோல்ட இன் வாத போக்கை பின்தொடர்ந்து, பார்பெரோவ்ஸ்கியும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஹிட்லர் இராணுவத்தின் நடவடிக்கைகளை —யூதர்களை நிர்மூலமாக்கும் இனப்படுகொலை மற்றும் படைத்துறைசாரா மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பாரிய படுகொலைகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை— செம்படையின் எதிர்ப்பு மற்றும் பிரிவினைவாத படைகளின் தாக்குதல்களுக்கு ஒரு எதிர்வினையாக முன்னிறுத்துகிறார்.

நாஜி குற்றங்களைக் குறைத்துக் காட்டுவதற்காக, பிரபல ஜேர்மன் வரலாற்றாளர்களால் அவர் கல்வித்துறைசார் எழுத்துக்கள் கூர்மையாக தாக்கப்பட்டுள்ளன என்ற உண்மை உள்ளபோதும், ஹம்போல்ட் பல்கலைக்கழம் பார்பெரோவ்ஸ்கியை பாதுகாப்பதானது, அனைத்திற்கும் மேலாக மிகவும் அசாதாரணமானதாகும்.

பார்பெரோவ்ஸ்கியின் Verbrannte Erde (எரிந்த மண்) என்ற நூல் "ஹிட்லர் இராணுவத்தை வெளிப்படையாக குற்றமற்றதாக" ஆக்குவதற்காக, Tübingen மற்றும் St. Gallen இல் பாடம் கற்பிக்கும் டாக்டர் பென்னோ என்கெர் (Benno Ennker) அதை விமர்சித்தார். நாஜிக்கள் அவர்களது நிர்மூலமாக்கும் போரை "கட்டுப்பாட்டில்" கொண்டு வர இயலாமல் இருந்தார்கள் என்று சர்வசாதாரணமாக பார்பெரோவ்ஸ்கி வலியுறுத்துவது குறித்து என்கெர் எழுதினார்: “கிழக்கு நீர்மூலமாக்கல் மீது சித்தாந்தரீதியில் திட்டமிட்ட கொள்கையை “சந்தர்ப்ப சூழல்களைக்” காட்டி, இதுபோல முற்றிலும் ஆதாரமற்றதாக சுய-நியாயப்பாடு வழங்குவதை, இதுவரையில் போலாந்தின் பரபரப்புவாத [வலதுசாரி] வரலாற்றாளர் Bogdan Musial மட்டுந்தான் முயன்று வந்திருந்தார்,” என்றார்.

வரலாறு மற்றும் இனப்படுகொலையின் தாக்கம் குறித்த ஒரு மையமான Fritz Bauer பயிலகத்தின் Christoph Dieckmann, “ஆய்வில் நடுநிலை" வகிக்க தவறியதற்காக பார்பெரோவ்ஸ்கியை சாடினார், “இது, சோவியத் ஒன்றியம் மீதான தாக்குதலுக்கு முன்பு, ஒரு சில மாதங்களில் பல மில்லியன் கணக்கான சோவியத் மக்கள் கொல்லப்படுவதற்காக பட்டினிக்கு உட்படுத்திய ஜேர்மன் தலைமை மற்றும் ஜேர்மன் இராணுவத்தின் உயரதிகாரிகளுடன் நீண்டகால கருத்தொற்றுமையை காட்டுகிறது.” இந்த ஆய்வு நிலைப்பாட்டின் வெளிச்சத்தில், பார்பெரோவ்ஸ்கியின் வாதங்கள், Dieckmann இன் வார்த்தைகளில், “அனுதாபகரமாக" ஆக்குவதாக தெரிகிறது.

அப்பட்டமாக கூறுவதானால், பார்பெரோவ்ஸ்கி நாஜிக்களது குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்க ஒரு பொய்யுரையை முன்னெடுக்கிறார் என்பதை, கண்ணியமான கல்வித்துறைசார் வழியில் இந்த "அனுதாபகரமான" என்ற சொல் எடுத்துரைக்கிறது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மூன்றாம் ரைஹ் நிர்மூலமாக்கும் போருக்கு திட்டமிடவில்லை என்ற வாதம், உலகெங்கிலுமான அறிஞர்கள் நிறுவியுள்ள ஒவ்வொன்றையும் காற்றில் பறக்க விடுகிறது. அமெரிக்க வரலாற்றாளர் ஸ்டீபன் ஜி. பிரிட்ஸ் (Stephen G. Fritz) தசாப்தகால ஆராய்ச்சியின் முடிவுகளை தொகுத்தளித்துள்ளார்: “ஆரம்பத்தில் இருந்தே, ஜேர்மன் இராணுவ தலைமையின் முழு புரிதலோடு மற்றும் உடந்தையோடும், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போர் நிர்மூலமாக்கும் போராக திட்டமிடப்பட்டு வந்தது.” 2011 இல் Kentucky பல்கலைக்கழக பிரசுரத்தில் வெளியான பேராசிரியர் பிரிட்ஸ் இன் 640 பக்க படைப்பின் தலைப்பு, கிழக்கு போர்: கிழக்கில் ஹிட்லரின் நிர்மூலமாக்கும் போர் என்பதாகும்.

ஹிட்லர் "வக்கிரமானவர் கிடையாது" என்ற வாதத்தைப் பொறுத்தமட்டில், இந்த குறிப்பைக் குறித்து வாதிட அறிவார்ந்த மக்கள் தங்களைத்தாங்களே குறைத்துக் கொள்ள வேண்டுமா? ஏற்றுக் கொள்ளத்தக்க மனித நடத்தை பற்றி திருவாளர். பார்பெரோவ்ஸ்கியின் தரம் என்ன என்பதை அறிந்து ஒருவர் ஆச்சரியம் மட்டுமே கொள்ள முடியும்.

ஆனால் ஜேர்மன் தலைநகரில் உள்ள மிக முக்கிய இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை, பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி மற்றும் வரலாற்றுரீதியில் திருத்தல்வாத நிலைப்பாடுகளை விமர்சிப்பதையோ கண்டிப்பதையோ "ஏற்றுக் கொள்ள முடியாதென" இப்போது அறிவிக்கிறது. அவர் கருத்துக்கள் எந்தளவிற்கு ஆத்திரமூட்டுவதாக மற்றும் அருவருப்பாக இருந்தாலும், அவற்றை பார்பெரோவ்ஸ்கிக்கு மிக சாதகமான வெளிச்சத்தில் பொருள்விளக்கம் வழங்க வேண்டுமாம். அவரை இடித்துரைப்பதற்கு மேலே வைக்கப்பட வேண்டுமாம். இவ்விதத்தில், "ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் அங்கத்தவர்கள் மீதான ஊடக மற்றும் தனிநபர் தாக்குதல்களை" இனியும் சகித்துக் கொள்ளவியலாதென அது அறிவிக்கிறது. ஆகையால், “ஹிட்லர் வக்கிரமானவர் இல்லை" என்ற பார்பெரோவ்ஸ்கியின் வலியுறுத்தலை கண்டிக்கும் எவரொருவரும் கடுமையான சட்ட தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்றவொரு கருத்தை விமர்சிக்க முடியாவிட்டால், அதன் ஆசிரியரை பகிரங்கமாக கண்டிக்க முடியாவிட்டால், பின்னர் உண்மையில் நாம் "அனைத்தும் அனுமதிக்கப்பட்ட" ஒரு Dostoyevskian பாணியிலான ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாகிறது.

உலக வரலாற்றில் மிக மோசமான படுகொலையாளரின் குற்றங்களைக் குறைத்துக் காட்டும் ஒரு முயற்சியானது, அந்த நிர்வாக சபையின் வார்த்தைகளைப் பிரயோகிப்பதானால், “வாத விவாதத்திற்குரிய" விடயமாக ஆக்கப்படக் கூடாது என்று, ஹிட்லரின் தோல்விக்குப் பின்னர் முதல்முறையாக, ஒரு ஜேர்மன் பல்கலைக்கழகத்தின் தலைமை அறிவிக்கிறது.

யதார்த்தத்தை தலைகீழாக்கி, ஹம்போல்ட் பல்கலைக்கழகம் பார்பெரோவ்ஸ்கியின் விமர்சகர்களைக் குற்றஞ்சாட்டி விரல் உயர்த்துவதோடு, அவர்களது நடவடிக்கைகளை அவமதிக்க முயல்கிறது: “பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வன்முறைக்கோ, தீவிரவாதத்திற்கோ இடமில்லை,” என்கிறது. இதுவொரு எரிச்சலூட்டும், பாசாங்குத்தனமான, நேர்மையற்ற கருத்தாகும். பார்பெரோவ்ஸ்கி புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டிவிட சுதந்திரமாக விடப்படுகிறார், ஆனால் அவரை எதிர்த்து கட்டுரை எழுதுபவர்களும் உரையாற்றுபவர்களும் "வன்முறை மற்றும் தீவிரவாதத்துடன்" தொடர்புபட்டவர்களாக இருக்கிறார்களாம்.

பார்பெரோவ்ஸ்கியின் விமர்சகர்களால் "வன்முறை" பயன்படுத்தப்பட்டதற்கான ஒரேயொரு எடுத்துக்காட்டை கூட, ஹம்போல்ட் பல்கலைக்கழ நிர்வாகம் வழங்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், “வன்முறை” கொண்டு அச்சுறுத்தப்பட்டதற்கான ஒரேயொரு சான்றையும் கூட வழங்கவில்லை. பல்வேறு கூட்டங்களில் IYSSE அவரது வலதுசாரி நிலைப்பாடுகளை விவரித்துள்ளது, அவற்றில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர், ஆனால் அங்கெல்லாம் அதுபோன்ற ஒரேயொரு சம்பவம் கூட நடந்ததில்லை. வன்முறையுடன் கீழ்தரமான ஆவேசத்தை பார்பெரோவ்ஸ்கியின் எழுத்துக்களே அம்பலப்படுத்துகின்ற நிலையில், அவர் IYSSE அங்கத்தவர்களுக்கு எதிராக கீழ்தரமான வார்த்தைகளைப் பிரயோகித்துள்ளார் என்பதோடு, இந்த "பித்தர்களை" பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென பகிரங்கமாகவே கோரியுள்ளார்.

பார்பெரோவ்ஸ்கி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாக சபை அறிவிக்கின்றது என்ற உண்மையானது, ஓர் அரசியல் தலையீட்டின் விளைபொருளாகும். கொலோன் தீர்ப்புக்குப் பின்னர், இதை பிரேமன் பல்கலைக்கழகத்தின் Asta அமைப்புக்கு கிடைத்த "பகுதியான வெற்றி" என்று பல ஊடக நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ள நிலையில், வலதுசாரி அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்கள் பார்பெரோவ்ஸ்கியின் பாதுகாப்பில் ஒரு பாரிய பிரச்சாரத்தை தொடங்கின.

1980 களில் நோல்ட ஐ ஆதரித்த, பிரபல ஜேர்மன் பழமைவாத நாளிதழான Frankfurter Allgemeine Zeitung, பல்கலைக்கழக நிர்வாகத்திற்குள்ளேயே அப்பேராசிரியருக்கு எதிர்ப்பு இருக்கின்ற போதினும், பார்பெரோவ்ஸ்கியை பகிரங்கமாக பாதுகாக்க ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்கு அழுத்தமளித்துள்ளது. அப்பத்திரிகை மார்ச் 27 இல், “பார்பெரோவ்ஸ்கிக்கு ஆதரவு காட்டும் அறிக்கை” மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக குறைகூறியது. இந்த விமர்சனத்திற்கு விடையிறுப்பாக, ஹம்போல்ட் பல்கலைக்கழக தலைவர் Sabine Kunst, “கொலோன் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பு மீதான ஓர் அறிக்கை" வெளியிடப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Kunst, ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியில் ஓர் உயர்மட்ட பிரமுகர் ஆவார். 2011 இல் இருந்து 2016 வரையில் பிராண்டன்பேர்க் மாநிலத்தில் விஞ்ஞானத்துறை அமைச்சராக இருந்த அப்பெண்மணி, வெளியுறவு கொள்கை ஸ்தாபகம் மற்றும் ஜேர்மன் இராணுவத்துடன் நெருங்கிய உறவுகளை பேணுகிறார். “வெளிப்படையான மற்றும் சுதந்திரமான அறிவார்ந்த கருத்து பரிவர்த்தனைகளின்" நலன்களுக்காக Kunst அந்த வலதுசாரி பேராசிரியரை பாதுகாக்கவில்லை, மாறாக அரசியல் காரணங்களுக்காக பாதுகாக்கிறார்.

மக்கள் எதிர்ப்புக்கு இடையிலும் ஓர் ஆக்ரோஷமான வல்லரசு கொள்கையைக் கோருவதில், ஆளும் மகாகூட்டணிக்குள் SPD ஒரு முன்னணி பாத்திரம் வகிக்கிறது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் இப்போதைய ஜனாதிபதியுமான பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் ஜேர்மனியின் பொருளாதார பலம் மற்றும் செல்வாக்கை எடுத்துக்காட்டும் வகையில் அது ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் இராணுவ பாத்திரம் வகிக்க அழைப்புவிடுத்துள்ளார்.

ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாக சபை மற்றும் பார்பெரோவ்ஸ்கிக்கு இடையே உத்தியோகபூர்வ பதவிகளில் நெருக்கமாக இருப்பவர்களை, வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகள் மீதான விமர்சனத்தை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டுள்ள இவர்களை, ஆளும் வட்டாரங்களில் வலதை நோக்கி ஒரு கூர்மையான மாற்றமெடுக்கும் உள்ளடக்கத்திற்குள் வைத்து மட்டுமே விவரிக்க முடியும். உள்நாட்டு கொள்கை களத்தில், சமூக ஜனநாயகக் கட்சியும் சரி இடது கட்சியின் பிரிவுகளும் சரி அகதிகளுக்கு எதிரான பேரினவாத பிரச்சாரங்களை ஏற்று வருகின்றன மற்றும் அதில் பங்கெடுத்தும் வருகின்றன. பார்பெரோவ்ஸ்கி இந்த பிற்போக்குத்தனமான நோக்குநிலையின் ஒரு கூட்டாளியாக பார்க்கப்படுகிறார்.

அனைத்திற்கும் மேலாக, ஜேர்மனியை ஒரு பிரதான மற்றும் செயலூக்கமான இராணுவ சக்தியாக மறுஸ்தாபிதம் செய்வதற்கான முயற்சிக்கு, 20 ஆம் நூற்றாண்டின் துயரகரமான மற்றும் இரத்தந்தோய்ந்த அனுபவங்களில் வேரூன்றி உள்ள போர் மீதான ஜேர்மன் மக்களின் வெறுப்பை கடந்து வர வேண்டியது அவசியமாகிறது. இதனால், வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டியாகிறது மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை மூடிமறைக்க வேண்டியதாகி விடுகிறது. இந்த பொய் மற்றும் பித்தலாட்ட வேலைகளில், பார்பெரோவ்ஸ்கி ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார்.

பார்பெரோவ்ஸ்கியை கல்வித்துறைசார் சுதந்திரத்தின் பாதுகாவலராக காட்டும் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் சித்தரிப்பு ஒரு இழிவார்ந்த பொய்யாகும். பல்கலைக்கழகத்தின் இந்த அறிக்கையானது, ஜேர்மன் இராணுவவாத புதுப்பிப்பு, புலம்பெயர்வோர்-விரோத பேரினவாதம், மற்றும் முற்றுமுதலான நாஜி-சார்பு வக்காலத்து ஆகியவற்றிற்கு புத்திஜீவிதரீதியில் கோட்பாடற்று, வஞ்சகமான மற்றும் கோழைத்தனமான அடிபணிவாகும்.

ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியின் கல்வித்துறைசார் படைப்பு, அண்மைக்காலம் வரையில், ஜேர்மனிக்கு வெளியே எந்த குறிப்பிடத்தக்க கவனத்தையும் பெறவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அவரது சமீபத்திய படைப்பான Verbrannte Erde, வக்கிரமாக கம்யூனிஸ்ட் விரோத உணர்வு கொண்ட ஹூவர் பயிலகத்தின் ஒத்துழைப்புடன் யேல் பல்கலைக்கழக பதிப்பகத்தால் Scorched Earth என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் ஆங்கிலத்தில் வெளியாவதற்கு முன்னதாக, 2007, 2013 மற்றும் 2014 இல் ஹூவர் பயிலகத்தின் கோடைகால பட்டறைகளில் பங்கெடுக்க பார்பெரோவ்ஸ்கி அழைக்கப்பட்டிருந்தார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு, ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாக சபை எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் IYSSE இன் போராட்டத்தை அங்கீகரிக்கிறது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஹிட்லரின் நிர்மூலமாக்கும் போர் எங்கே திட்டமிடப்பட்டதோ அதே பல்கலைக்கழகம் நாஜி குற்றங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு எதிரான மற்றும் புலம்பெயர்வோர்-விரோத வாய்சவடால்களுக்கு எதிரான விமர்சனத்தை சட்டவிரோதமாக அறிவிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஜோர்ஜ் பார்பெரோவ்ஸ்கிக்கு ஆதரவான ஹம்போல்ட் பல்கலைக்கழக அறிக்கையை கண்டனம் செய்வதற்கு ஜேர்மனியிலும் சர்வதேச அளவிலும் உள்ள உயர்நோக்குடைய மற்றும் கோட்பாட்டுரீதியிலான வரலாற்றாளர்களுக்கு இது சரியான நேரமாகும்.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகில அனைத்துலக குழுவின் பிரிவுகளுக்கு, வரலாற்றை திருத்தி எழுதும் மற்றும் நாஜி குற்றங்களை மூடிமறைக்கும் பிற்போக்குத்தனமான முயற்சிகளுக்கு விட்டுக்கொடுக்கும் எந்த நோக்கமும் கிடையாது. நாஜிசத்திற்கு எதிரான ஒரு நீண்ட மற்றும் துணிச்சலான வரலாற்று போராட்டத்தின் அரசியல் வாரிசுகளாக விளங்கும் ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், வரலாற்று படிப்பினைகளை மாணவர்களுக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளுக்கும் கல்வியூட்டுதவற்காக எடுக்கும் முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம், ஊக்குவிக்கிறோம். இந்த போராட்டத்தில், சகல முற்போக்கு சக்திகளிடம் இருந்தும் நமது ஜேர்மன் தோழர்கள் கோட்பாட்டுரீதியில் ஆதரவைப் பெறுவார்கள்.