ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: Jaffna residents demand release of Maruti Suzuki workers

இலங்கை: யாழ்ப்பாண மக்கள் மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுதலை செய்ய கோருகின்றனர்

By our correspondents 
22 April 2017

இலங்கையில் போரால் நாசமாக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாணத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் இந்தியாவில் சோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுதலை செய்ய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரச்சாரத்தை முழுமையாக அங்கீகரித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அடுத்த வாரம் (ஏப்பிரல் 28) யாழ்ப்பாணத்தில் இந்த வாகன தொழிலாளர்களின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டமும் பகிரங்க கூட்டமும் ஏற்பாடு செய்துள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகம், நகர சபை மற்றும் ஏனைய வேலைத் தளங்களிலும் பிரச்சாரக் குழுவினர் கலந்துரைடாயல் நடத்தினர்.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது போலிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. ஹரியானாவில் மனேசரில் உள்ள ஜப்பானிய நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிராக அவர்கள் போராடத் துணிந்ததே இதற்கு காரணம். பதிமூன்று தொழிலாளர்களுக்கு எதிராக ஆயுள் தண்டனையும் மேலும் 18 பேர் மீது மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும் தற்போதைய பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான நிர்வாகம் உட்பட இந்திய பொலிஸ், நீதித்துறை மற்றும் அரசியல் ஸ்தாபனமும் இந்த வேட்டையாடலுக்கு ஒத்துழைத்தன.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், யாழ்ப்பாணம் பல்லாயிரக்கணக்கான இலங்கை இராணுவப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், யுத்தத்தின் போது "காணாமற் போன" மக்களைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று தமிழ் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாருதி-சுசூகி தொழிலாளர்களை விடுவிக்கும் சர்வதேச பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தை பற்றி சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.எஸ்.ஈ. உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாநகர சபைத் தொழிலாளர்களுடன் உரையாடினர்.

சோ... அறிக்கையை படிக்கும் யாழ்ப்பாண மாநகரசபை தொழிலாளர்கள்

"மாருதி சுசுகி தொழிலாளர்களை பாதுகாக்க எங்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது," என்று ஒரு தொழிலாளி கூறினார். "நாங்கள் ஒன்பது மணிநேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், ஆனால் எட்டு மணி நேரத்திற்கு மட்டுமே பணம் செலுத்துகின்றனர். நிரந்தர வேலைகள் வழங்கப்பட வேண்டிய பல தற்காலிக தொழிலாளிகள் இங்கு இருக்கிறார்கள். காலி இடங்கள் இருப்பினும், வட மாகாண சபை இந்த வெற்றிடங்களை நிரப்ப நிரந்தர வேலைகளை வழங்கவில்லை."

மற்றொரு தொழிலாளி கூறியதாவது: "அத்தகைய போராட்டத்தை அபிவிருத்தி செய்வது நல்லது, அது ஜனநாயக உரிமைகள் பாதுகாக்க உதவும். நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவோம். இதனைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை, நீங்கள் மட்டுமே இதைப் பற்றி விளக்குகின்றீர்கள்."

மாநகர சபை தொழிலாளி எம். பத்மநாதன், "இந்த வழிமுறைகளால் இந்த தொழிலாளர்களை தண்டிப்பது அநியாயம், எனவே அவர்களை விடுவிக்கும் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருகிறோம்," என்றார்.

மாநகரசபை சாரதிகள் குழுவினரும் கருத்து தெரிவித்தனர். "தீர்ப்பு பற்றி நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம்," என்று ஒருவர் கூறினார். "13 தொழிலாளர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அது ஏற்கத்தக்கது அல்ல. இதுபோன்ற ஒரு விஷயத்தை எதிர்காலத்தில் நாமும் எதிர்கொள்ள நேரிடும்."

ஒரு வேல்டிங்க தொழிலாளியும் யாழ்ப்பாண மாநகர சபை தொழிலாளர் சங்க தலைவருமான ஏ. வாஷிங்டன் மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையாடலை கண்டனம் செய்ததோடு, யாழ்ப்பாண மாநகர சபைத் தொழிலாளர்கள் இன்னமும் ஒன்பது மணி நேரம் வேலை செய்கின்றனர் என்று விளக்கினர்.

"எங்கள் தொழிலாளர்களும் நிரந்தர வேலைகளுக்காக போராடுகிறார்கள். இங்கு பாகுபாடு காட்டப்படுகின்றது. நான் ஒரு வெல்டர், ஆனால் சரியான ஊதியம் கொடுக்கவில்லை," என்று அவர் கூறினார். "நாங்கள் இங்கு பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம் ஆனால் தீர்வு இல்லை. உள்ளூராட்சி சபையை தமிழ் தேசிய முன்னணி (தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் கூட்டணி) ஆளுகிறது. ஆனால் அவை தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை."

ஒரு பல்கலைக்கழக ஊழியரான கேசவன், இந்திய வாகன தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட சிறைத் தண்டனைகளை கண்டனம் செய்தார். "இந்திய நீதித் துறையால் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்கள் உடனடியாகவும் நிபந்தனையற்றும் விடுதலை செய்யப்பட வேண்டும் என நான் கோருகிறேன்," என்று அவர் கூறினார். "இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களுக்கு எதிராக இந்த தீர்ப்புகளை பயன்படுத்தப்பட முடியும். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை நான் எதிர்க்கிறேன். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மக்களை சிறை வைப்பது, தொழிலாளர்கள் அடிமைகளாக மாற்றும் நடவடிக்கையாகும்."

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த தாக்குதல்களுக்கு எதிராக ஏன் போராடவில்லை என மற்றொரு பல்கலைக் கழக ஊழியரான நவரட்ணம் கேட்டார். பிரச்சாரகர்கள், இந்த ஸ்ராலினிச அமைப்புக்களின் சீரழிவை விளக்கியதுடன், காங்கிரஸ் உட்பட முதலாளித்துவக் கட்சிகளுடனான அவர்களின் ஒத்துழைப்பு, மற்றும் முதலாளித்துவ ஸ்தாபனத்தின் கட்சிகளுக்குள் அவை உருமாற்றம் அடைந்தமை பற்றியும் தெளிவுபடுத்தினர்.

"விடுமுறை நாட்களில் கூட நாங்கள் ஒன்பது மணி நேரம் வேலை செய்ய வேண்டும்," என நவரட்ணம் கூறினார். "இந்த அநீதியை கேள்வி கேட்க அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. நான் இங்கு 25 வருடங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறேன். என் பதவி உயர்வுக்கு அவர்கள் ஒரு பரீட்சையை நடத்தினர். பல கடினமான கேள்விகள் இருந்தன, என்னால் பதில் எழுத முடியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்ல, இலங்கைத் தொழிலாளர்களும் முகங்கொடுக்கின்றனர். மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என நான் கோருகிறேன்."

யாழ்ப்பாணத்தில், வேலை கோரி தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகளில் ஒருவரான பி. சுபா, அழகியல் பட்டதாரி ஆவார். "மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீதான தாக்குதலை நாங்கள் கண்டிக்க வேண்டும், நான் இன்று மனுவில் கையெழுத்திடுவேன்," என்று அவர் கூறினார்.

"நான் 2011ல் என் கல்வியை முடிக்க வேண்டியிருந்தது. போர் மற்றும் வெள்ளம் காரணமாக நாங்கள் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளோம், அதனால் நான் மேலும் ஒரு வருடத்திற்கு என் படிப்பை தொடர வேண்டியிருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் வேலையில்லாமல் இருந்தேன். பல்கலைக்கழக கல்வியின் போது விடுதிக்குக்கும் பிற தேவைகளுக்கும் அதிக பணம் செலவழிக்க வேண்டியிருந்தது. இப்போது வேலையில்லை, என் பெற்றோரை கவனித்துக் கொள்ள முடியவில்லை.

"போரின் போது, நாங்கள் கப்பல்கள் மூலம் மோதல் பகுதிகளிலிருந்து வெளியேறினோம். நாங்கள் இடத்திற்கு இடம் கப்பல்களுள் மூலமே தாக்குதலல்களின் அதிக ஆபத்தை எதிர்கொண்டு இடம்பெயர்ந்தோம்," என அவர் கூறினார்.

ஏப்ரல் 28, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் பகிரங்க கூட்டத்தில் பங்கேற்பதற்குமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும் சோ.ச.க. மற்றும் ஐ.எஸ்.எஸ்.எஸ்.ஈ. அழைப்பு விடுக்கின்றது.

ஆர்ப்பாட்டம்: ஏப்ரல் 28, யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு அருகில், 3.30 மணிக்கு.

கூட்டம்: ஏப்பிரல் 28, வீரசிங்கம் மண்டபம், மாலை 5 மணி.