ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian auto workers demand release of Maruti Suzuki workers

இந்திய வாகனத் தொழிலாளர்கள் மாருதி சுசூகி தொழிலாளர்களின் விடுதலைக்கு கோரிக்கை விடுக்கின்றனர்

By Moses Rajkumar and Yuvan Darwin
30 March 2017

தமிழ்நாடு மாநில தலைநகரமான சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிகளில் (Speical Economic Zones-SEZs) இயங்கிவரும் உலகளவிலான வாகன பெருநிறுவனங்களின் தொழிலாளர்கள், மாருதி சுசூகி தொழிலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்த வாரம் தங்களது வர்க்க ஒருமைப்பாட்டை பிரகடனப்படுத்தினர்.

மானேசரிலுள்ள மாருதி சுசூகி வாகன அசெம்பிளி ஆலையின் 31 தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அரக்கத்தனமான குற்றச்சாட்டுக்கள் குறித்து இந்த தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்களை விடுவிப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் பொருட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) மூலமாக ஆரம்பிக்கப்பட்ட இணையவழி மனுவில் கையெழுத்திட்டனர்.

வட இந்திய மாநிலமான ஹரியானாவிலுள்ள குர்கான் மாவட்ட நீதிமன்றம் போலித்தனமான கொலை குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது, மேலும் அதற்கு சற்று குறைவான குற்றங்களின் பேரில் ஏனைய 18 தொழிலாளர்களை குற்றம்சாட்டி அவர்களின் மீது கடுமையான சிறை தண்டனைகளை சுமத்தியுள்ளது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் காங்கிரஸ் கட்சி போன்ற இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளின் முழு உடந்தையுடன் நிறுவனம், பொலிஸ் மற்றும் நீதித்துறை மூலமாக தொடுக்கப்பட்ட போலியான ஜோடிப்பு வழக்கின் பேரில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைகளுக்கும், தீர்ப்புகளுக்கும் ICFI கண்டனம் தெரிவித்துள்ளது. அதிலும் சிறையிலடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் குற்றமற்றவர்கள். ஆலையிலுள்ள அடிமை-உழைப்பு நிலைமைகளுக்கு எதிராக போராடியது மட்டுமே அவர்கள் செய்த ஒரே “குற்றமாகும்.”

ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க முனையும் ICFI இன் இந்த பிரச்சாரம் சர்வதேச அளவிலும், சென்னை பகுதியிலுள்ள பல்வேறு வாகன தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள், மற்றும் நகரிலுள்ள இந்திய இரயில்வேக்கு சொந்தமான ஒருங்கிணைந்த நான்கு சக்கரவண்டி தொழிற்சாலையின் (Integral Coach Factory-ICF) தொழிலாளர்கள் மத்தியிலும் முக்கியமான ஆதரவை பெற்றுள்ளது.  

மாருதி சுசூகி போன்று, இந்தியாவில், ஹூண்டாய், ஃபோர்ட், டொயோட்டோ, போஸ்ச், ரிக்கோ, நிசான், ப்ரிகால் மற்றும் டாடா போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்களும் அதிக ஊதியம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர பணிநியமனம், மற்றும் கண்ணியமான வேலை நிலைமைகள் போன்றவற்றை  வழங்க கோரி ஒரு தொடர்ச்சியான, கசப்பான வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் வாகனத்துறை தொழிலாளர்களின் பெரும்பான்மையினர் கிராமப்புறங்களிலிருந்து வருபவர்களாக இருப்பதுடன், வேலைகளிலுள்ள கடுமையான மற்றும் மிகுந்த சுரண்டல் நிலைமைகள் மற்றும் மோசமான ஊதியம் வழங்கும் நிலைமைகளின் கீழ், மாருதி சுசூகி நிறுவனத்தில் சுமார் 80 சதவிகிதம் பேரும், ஃபோர்ட் இந்தியா நிறுவனத்தில் 80 சதவிகிதம் பேரும், ஹூண்டாய் நிறுவனத்தில் 82 சதவிகிதம் பேரும் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதிலும் கடுமையான வேலை விபத்துக்களும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.  

ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (Oragadam Special Economic Zone) அமைந்துள்ள ரெனால்ட் நிசான் வாகன தொழிற்சாலையில் (Renault Nissan’s auto plant) சமீபத்தில் ஏற்பட்ட ஒரு தொழில்துறை விபத்தின் காரணமாக ஒரு இளநிலை பொறியாளரான 29 வயது தியாகராஜன் மஹாலிங்கம் கொடூரமாக இறந்தார் என்பதுவும், இந்திய தொழிற்சாலைகளில் நிலவும் அபாயகரமான வேலையிட நிலைமைகளுக்கு மற்றொரு அறிகுறியாகும்.

இந்தியாவில் ICFI ஆதரவாளர்கள், சமீபத்தில் ரெனால்ட் நிசான் தொழிலாளர்கள் பலரிடம், மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிப்பதற்கான ICFI இன் பிரச்சாரம் பற்றி பேசினர்.

கிருஷ்ணகுமார், 19 வயதானவர், ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்துள்ள ஒரு பயிற்சிபெறும் கைவினைஞரான இவர், மாருதி சுசூகி தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து கண்டனம் தெரிவித்தார். “அவர்களது சட்டபூர்வமான போராட்டத்திற்கு தண்டனை பெற்றுள்ளனர்,” என்று கூறினார்.

“நிறுவனம், பொலிஸ் மற்றும் நீதித்துறையும் இந்த தொழிலாளர்களுக்கு எதிராக இரகசியமாக இணைந்து செயலாற்றியுள்ளபோதும், நிறுவனத்திற்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுவருகின்றன. அவர்களுக்கு நிலம், மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்றவை மலிவான விலைக்கு வழங்கப்படுகின்றன, ஆனால் அரசாங்கம் விவசாயிகளுக்கு கடன்கள் அல்லது மானியங்களை வழங்க மறுக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கங்கள் எதுவுமே மக்கள் நலன்களுக்காக செயல்படுவதில்லை.”

“சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பலத்தை அணிதிரட்டி உங்களை போன்ற ஒரு சர்வதேச கட்சி மூலமாக மேற்கொள்ளப்படும் ஒரு உறுதியான போராட்டத்தினால் மட்டுமே மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.”

முத்துகுமார், ஒரு பொறியியல் பட்டதாரியும், ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவருமான இவர், ICFI பிரச்சாரத்துடனான தனது ஐக்கியத்தை வெளிப்படுத்தியதுடன், “அந்த தொழிலாளர்களை விடுவிக்க உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் கண்டிப்பாக ஒருங்கிணையவேண்டும். எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து வந்துள்ளனர், எனவே இவர்களையும் எங்கள் வர்க்க சகோதர்கள் போலவே நாங்கள் கருதவேண்டும். சர்வதேச ஒற்றுமை இல்லாமல் அவர்கள் தங்களின் உரிமைகளை வெற்றிகொள்ள முடியாது” என்றும் அவர் கூறினார்.  

தொழிற்சங்கங்கள் பயனற்றவையாக உள்ளதுடன், நிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அரசாங்கத்தின் முகவர்களாக மாறிவிட்டன என்றும் முத்துகுமார் கூறினார்.

“நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடையிலான ஊதிய வேறுபாட்டுக்கு எதிராக எந்தவொரு தொழிற்சங்கமும் போராடுவதில்லை,” மேலும் “எங்களை ஐக்கியப்படுத்துவதற்கு மாறாக, எங்களை நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்று பிரிக்கவே தொழிற்சங்கங்கள் முனைகின்றன. நீங்கள் குறிப்பிட்டது போன்று, ஒரு சர்வதேச கட்சி கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும்” என்றும் கூறினார்.

ராஜ்குமார், பன்ருட்டி மாவட்டத்திலிருந்து வந்திருக்கும் இவர் பின்வருமாறு கூறினார்: “13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்பினை பற்றி பலரும் அறிந்திருக்கமாட்டார்கள், ஏனென்றால் மற்ற கட்சிகள் எதுவும் இந்த தாக்குதல் பற்றி பேசவில்லை. மற்ற அனைத்து கட்சிகளுமே முதலீட்டாளர்களின் நலன்களையே பாதுகாக்கின்றனர். சர்வதேச அமைப்பான உங்களது ஒரு கட்சி மட்டுமே இந்த தொழிலாளர்களின் விடுதலைக்காக போராடுகிறது. நான் இதை பாராட்டுவதுடன், அதன் பிரச்சாரத்திற்கும் ஆதரவளிக்கிறேன்.”

அவரது பின்னணி குறித்து, ராஜ்குமார் மேலும் பின்வருமாறு கூறினார்: “எனது தந்தை ஒரு விவசாய பணியாளர். மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கென்று எதையும் செய்துவிடவில்லை. மானியங்களும் வழங்கப்படவில்லை, இதனால் விவசாயிகளுக்கு தற்கொலை செய்துகொள்ளும் நிலையையே உருவாக்கியுள்ளது.”

அருண்குமார், சேலம் மாவட்டத்திலிருந்து வந்துள்ள ஒரு ஒப்பந்த தொழிலாளியான இவர் பின்வருமாறு கூறினார்: “இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளவும், அவர்களது உரிமைகளை பெறுவதற்குமென போராடுவதற்கு தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை அவசியமாகிறது. நான் CPM மற்றும் CPI யை வெறுக்கிறேன் (பிரதான ஸ்ராலினிச கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி). அவர்கள் தங்களது பெயரை பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே போராட்டங்களை ஒழுங்கமைக்கின்றனர், ஆனால் தொழிலாளர் உரிமைகளை வெற்றிகொள்வதற்காக அல்ல. நீங்கள் குறிப்பிடுவது போன்று, தொழிலாள வர்க்கத்திற்கென்று ஒரு சர்வதேச கட்சி தேவைப்படுகிறது.”

தினேஷ், ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு நிரந்தர தொழிலாளியான இவர், “மாருதி சுசூகி தொழிலாளர்களின் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரியும் என்றாலும், உங்களை போன்று மற்ற எந்தவொரு கட்சியோ அல்லது தொழிற்சங்கமோ பிரச்சாரம் எதையும் நடத்தவில்லை. அந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை விடுவிக்க கோரும் உங்களது சர்வதேச போராட்டத்திற்கு நான் ஆதரவளிக்கிறேன். உலக அளவிலான நிறுவனங்களின் தாக்குதல்களை தோற்கடிக்க, ஹூண்டாய் போன்ற ஒரு நிறுவனமானாலும் கூட, ஒரு உலகளாவிய கட்சியின் போராட்டத்தின் மூலமாக மட்டுமே வெற்றிபெறமுடியும். நான் உங்களது கட்சிக்கு ஆதரவளிக்கிறேன், மேலும் இது வலுப்படுத்தப்படவேண்டும். அதுவே என்னுடைய விருப்பம்.” என்று கூறினார்.