ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump administration recklessly escalating the conflict with Korea

ட்ரம்ப் நிர்வாகம் கொரியாவுடனான மோதலை பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்துகிறது

Joseph Kishore and David North
17 April 2017

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான ஒரு இராணுவ மோதலின் அபாயம் வார இறுதி முழுமையிலும் தொடர்ந்து தீவிரமடைந்து சென்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் பதட்டங்களைக் குறைக்க முனைவதற்கெல்லாம் வெகுதூரத்தில், ட்ரம்ப் நிர்வாகமானது, உடனடி இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கும் சாத்தியத்தை சமிக்கையளிக்கும் வாய்வீச்சைப் பிரயோகிப்பதையே தொடர்ந்தது.

ஞாயிறன்று, வட கொரியா ஒரு மத்திய-தூர ஏவுகணை ஒன்றை வெடிப்பு சோதனை செய்ததாகக் கூறப்பட்டது, ஆனால் இந்த சோதனை தோல்வியடைந்தது. அமெரிக்காவின் ஒழுங்கமைப்பிலான இரகசிய நாசவேலை தான் இதற்குக் காரணமாய் இருக்கக் கூடும் என அமெரிக்க ஊடகங்கள் ஊகங்களை வெளியுட்டுள்ளன. இவ்வாறான சம்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் மறுக்கவோ அல்லது ஏற்கவோ மறுத்திருக்கின்றனர் என்றாலும், வடகொரியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவற்கென இத்தகைய வழிமுறைகளை அமெரிக்கா பல வருடங்களாய் அபிவிருத்தி செய்து வந்திருக்கிறது.

ட்ரம்ப்பின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான லெப்டினண்ட் ஜெனரல் எச்.ஆர்.மெக்மாஸ்டர், ABC தொலைக்காட்சியின் இந்த வார நிகழ்ச்சி என்பதில் பேசுகையில் “இதேநிலை இனியும் தொடரமுடியாது” என்று அறிவித்தார். “செய்யப் போவதை முன்கூட்டியே அறிவிப்பது தன் வேலை இல்லை என்பதை ஜனாதிபதி மிகத் தெளிவாக்கி விட்டிருக்கிறார்” என்று அவர் மேலும் சேர்த்துக்கொண்டார்.

அமெரிக்காவின் நோக்கங்கள் குறித்த இந்த திட்டமிட்ட குழப்பும் செய்தியானது அமெரிக்காவின் முன்கூட்டிய வலிந்தவொரு இராணுவத் தாக்குதல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத்தவிர வேறெந்த நோக்கத்திற்கும் சேவைசெய்யவில்லை. விடயங்கள் கைமீறிச் செல்லும் அபாயத்தை இது மேலும் அதிகப்படுத்துகிறது.

ட்ரம்ப் நிர்வாகம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்பது ஒருவரும் அறியாததாக இருக்கிறது என்ற உண்மையானது சூழ்நிலையை 1960களின் ஆரம்பத்தில் பனிப்போரின் உச்சத்தில் இருந்ததை விடவும் அதிக அபாயமானதாக ஆக்குகிறது. 1962 கியூப ஏவுகணை நெருக்கடியின் போது, கென்னடி நிர்வாகமானது, தனது நடவடிக்கைகள் சோவியத் ஒன்றித்தால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அது ஒரு அணுஆயுத மோதலில் விளைந்து விடக் கூடும் என்பது குறித்து அதீத அச்சம் கொண்டிருந்தது என்பது வரலாற்றுக் குறிப்பேடுகளில் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அப்படியானதொரு எந்தக் கவலையும் இன்று தென்படவில்லை. அதுதவிர, பொருத்தமாய் கருதுகின்ற நடவடிக்கைகளை உத்தரவிட ஆங்காங்கு இருக்கும் இராணுவத் தளபதிகளுக்கு அதிகாரம் அளித்திருப்பதாக ட்ரம்ப் பெருமையடித்திருக்கிறார் என்ற உண்மையில் இந்த அபாயம் மேலும் தீவிரப்பட்டிருக்கிறது. சென்ற வாரத்தில் பாரிய வெடிமருந்து வான் வெடி குண்டு (MOAB) என்ற தனது கைவசம் இருப்பதில் அணு-சாராத மிகப்பெரும் குண்டை பயன்படுத்தும் முடிவு ஆப்கானிஸ்தானில் இருக்கும் இராணுவ அதிகாரிகளால் எடுக்கப்பட்டதாக நிர்வாகம் அறியச் செய்திருக்கிறது. வடகொரியா, சீனா, ரஷ்யா அல்லது ஈரான் என அமெரிக்காவின் சாத்தியமான எந்தவொரு எதிரியும் எண்ணற்ற முகமறியாத முடிவெடுப்பவர்களை எதிர்கொண்டு நிற்கின்றன, யார் கையில் கட்டுப்பாடு இருக்கிறது என்பது எவரொருவருக்கும் தெரியாது.

ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் இராணுவத்திற்கும் அப்பால், அமெரிக்காவிலுள்ள ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களும் போர்க் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளன. முக்கிய செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் அரசாங்க பிரச்சாரங்கள் தவிர்ந்த வேறொன்றையும் பேசுவது கிடையாது. வாஷிங்டனில் இருந்து வரும் வம்பிழுப்பான வாய்வீச்சு குறித்து எந்தவொரு விமர்சனபூர்வ மதிப்பீடும் கூட சிறிதும் இல்லாதிருக்கும் ஒரு சமயத்தில், ஒரு போரின் பின்விளைவுகள் குறித்த வெளிப்படையானதொரு மதிப்பீடு குறித்தெல்லாம் கேட்கவும் தேவையில்லை.

வட கொரியா உடனான மோதல் குறித்த உத்தியோகபூர்வ அரசாங்க விவரிப்பு முற்றிலும் சவால் செய்யப்படாமல் நகர்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்காவினால் தொடுக்கப்பட்ட ஒவ்வொரு மற்ற போரையும் அடியொற்றி, இந்த மோதலும் மிக அபத்தமான மற்றும் சிறுபிள்ளைத்தனமான வடிவங்களில் விளக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பனாமாவின் நோரிகா, ஈராக்கின் சதாம் ஹுசைன், சேர்பியாவின் மிலோசெவிக், லிபியாவின் கடாபி, சிரியாவின் ஆசாத் மற்றும் ரஷ்யாவின் புட்டின் ஆகியோரின் விடயத்தில் போலவே, வட கொரியாவின் கிம் ஜோங்-உன் இப்போது, மோதலைத் தூண்டி உலகின் அமைதியை அச்சுறுத்துகின்ற ஒரு “கிறுக்கு சர்வாதிகாரி”யாக சித்தரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். எந்த காரணகாரிய விளக்கமும் கொடுக்கப்படாமலேயே, வட கொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் சோதனை வெடிப்பு ஏவுகணைகளது வேலைத்திட்டம் குற்றவியல்தனமானதாகவும் கிறுக்குத்தனமானதாகவும் கூறி கண்டனம் செய்யப்படுகிறது.

இந்த மோசடியான மற்றும் சிடுமூஞ்சித்தனமான விவரிப்பில், கொரிய மக்கள மீதான ஏகாதிபத்திய ஒடுக்குமுறை வரலாற்றின் - 1910 முதல் 1945 வரையான 35 ஆண்டுகால மிருகத்தனமான ஜப்பானிய காலனித்துவ ஒடுக்குமுறை, அல்லது 1950க்கும் 1953க்கும் இடையில் வட கொரியாவுக்கு எதிரான அமெரிக்காவின் போரினால் கிட்டத்தட்ட 3 மில்லியன் உயிர்கள் பலியான படுபயங்கர போர் மரண எண்ணிக்கை ஆகியவை குறித்த- எந்தக் குறிப்பும் இல்லை. கொரியப் போரின் காலம் முழுமையாக அமெரிக்க இராணுவமானது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் இடைவிடாத அழுத்தத்தை செலுத்தியது என்ற உண்மை குறித்து அமெரிக்க ஊடகங்கள் வாயே திறப்பதில்லை.

வல்லரசின் ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையின் ஒரு நெடிய வரலாற்றைக் கொண்ட வட கொரியா என்ற ஒரு சிறிய நாடு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசினால் அழிக்கப்படுவதற்கு அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது ஒரு அரசியல் உண்மையாகும். வட கொரிய ஆட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவளிக்காத அதேநேரத்தில், அது தன் இருப்புக்கு அணு ஆயுதங்கள் அவசியம் என ஏன் நம்புகிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமான ஒன்றல்ல. வடகொரியாவின் உத்தியோகபூர்வ மத்திய செய்தி நிறுவனம் தாங்கி வந்த ஒரு அறிக்கையில், வடக்கின் மக்கள் இராணுவத்தின் பொது வீரர்களுக்கான ஒரு செய்தியாளர் கூறினார்: “அமெரிக்கா அதன் மூர்க்கத்தனத்திற்கு பரிதாபகரமான விதத்தில் பலியான ஈராக் மற்றும் லிபியாவை கையாண்டதைப்போலும், அது தாக்கப்பட்டதற்குப் பின்னரும் கூட உடனடியாக பதில் தராத சிரியாவைப்போல் எங்களைக் கையாண்டு விடலாம் என்று நினைத்தால் அதனை விட முட்டாள்தனமான ஒன்று வேறெதுவும் இருக்க முடியாது.”

வட கொரியாவை நோக்கிய அமெரிக்க மிரட்டலின் பின்னால், அமெரிக்காவுக்கான நீண்டகால பொருளாதார மற்றும் புவியரசியல் போட்டியாக அமெரிக்க அதிகாரிகளும் இராணுவ மூலோபாயவாதிகளும் பார்க்கின்ற சீனாவுடனான அதன் மிக அடிப்படையான மோதல் அமைந்திருக்கிறது. கொரிய தீபகற்பத்திலான பிரச்சாரத்தின் மையத்தானமாய் இருப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மீதான அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சீனா -இதுவும் அணுஆயுதங்களைக் கொண்டிருக்கிறது- ஏற்க நிர்ப்பந்திக்கும் முயற்சியாகும்.

உலகின் ஒட்டுமொத்தக் கவனமும் கிழக்கு ஆசியாவின் மீது குவிந்திருக்கிறது என்றபோதிலும், அணுஆயுத சக்திகளிடையேயான ஒரு மோதலுக்கான இன்னொரு வெடிப்பு புள்ளியாக அமைந்திருக்கக் கூடிய சிரியா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அதன் பிரச்சாரத்தையும் அமெரிக்கா தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்பாகத் தான், சிரிய அரசாங்கம் ஒரு இரசாயன ஆயுதங்களது தாக்குதலை நடத்தியதான இதுவரை முழுமையாக ஊர்ஜிதப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகளைப் பிடித்துக் கொண்டு, ட்ரம்ப் நிர்வாகம் சிரியாவுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களைத் தொடுத்தது. வெள்ளிக்கிழமையன்று, ரஷ்யா, ஈரான் மற்றும் சிரியாவின் வெளியுறவு அமைச்சர்கள் விடுத்த ஒரு கூட்டு அறிக்கையில், சிரிய அரசாங்கத்திற்கு எதிரான மேலதிகமான எந்த தாக்குதலும் “பிராந்திய பாதுகாப்புக்கு மட்டுமல்லாது உலகப் பாதுகாப்பிற்கே மரணகரமான விளைவுகளைக் கொண்டதாக ஆகக் கூடும்”, அதாவது அது உலகப் போரைத் தூண்டக் கூடும், என்பதாய் அறிவித்திருந்தனர்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பொறுப்பற்ற தன்மையானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு பரந்துவிரிந்த சர்வதேச நெருக்கடியின் உள்ளடக்கத்திற்குள்ளேயே கட்டாயம் காணப்பட வேண்டும்.

அமெரிக்க ஆளும் வர்க்கம், போர் மட்டுமே, வரிசையான ஒன்றுடன் ஒன்று பிணைந்த உலகளாவிய மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளில் இருந்து வெளியில் வருவதற்கான ஒரே வழி எனக் காண்பது மேலும் மேலும் அதிகரித்துச் செல்கிறது. பொருளாதார வளர்ச்சி குறித்த உத்தியோகபூர்வமான வாய்ச்சவடால்கள் இருந்தபோதிலும், 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிந்தைய காலத்தில் அபிவிருத்தி கண்டிருந்த பணச்சுருக்க உள்ளமிழ்வின் ஒரு சாத்தியம் குறித்து ஆளும் வர்க்கம் மிரண்டு போய் கிடக்கிறது. சந்தைகள் ஏற்கனவே தலைகீழாகத் தொடங்கியிருப்பது மற்றும் நிதி ஏற்றஇறக்கம் அதிகரித்துச் செல்வது ஆகியவற்றின் அறிகுறிகள் ஏற்கனவே தென்பட்டு விட்டன.

பொருளாதாரப் பதட்டங்கள் பெரும் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான மோதல்களை மேலும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ கூட்டணியும் முறிந்து கொண்டிருக்கின்றன. ஜேர்மனி தன்னை ஒரு ஐரோப்பிய மற்றும் உலக பொருளாதார மற்றும் இராணுவ சக்தியாக மீண்டும் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து தேசியவாத சக்திகள் எழுச்சி கண்டு வருகின்றன.

இப்போதிருக்கும் உலக ஒழுங்கை அழிப்பதற்கு அச்சுறுத்துகின்ற உடைக்கும் அழுத்தங்களுக்கு ஒரு பொது எதிரியை அடையாளம் கண்டு குறிவைப்பதன் மூலமாய் மட்டுமே எதிர்விளைவை காட்ட முடியும் என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்குகளின் சக்திவாய்ந்த பிரிவுகள் நம்புகின்றன. அமெரிக்காவும் சரி முக்கிய ஐரோப்பிய நாடுகளும் சரி ரஷ்யாவை நோக்கி மூர்க்கம் அதிகரித்துச் செல்லும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்குக் கீழமைந்திருக்கும் நோக்கங்களில் ஒன்றாக இதுவும் இருக்கிறது.

அமெரிக்காவை போரை நோக்கிச் செலுத்துவதில் இன்னுமொரு இன்றியமையாத காரணியும் இருக்கிறது. சமூக அதிருப்தி மிகப் பிரம்மாண்ட அளவில் இருப்பது ஆளும் வர்க்கத்திற்கு மிக நன்றாகவே தெரியும். சமூகப் பதட்டங்களை வெளியே நோக்கித் திருப்புகின்ற அதேநேரத்தில் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பினை ஒடுக்குவது மற்றும் குற்றமாக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு வழியாக போர் பார்க்கப்படுகிறது.

ஸ்தாபக ஊடகங்களின் இடைவிடாத பிரச்சாரம் இருந்தபோதிலும் கூட, அரசாங்கத்தின் மீதான ஒரு ஆழமான அவநம்பிக்கையும் போருக்கான எதிர்ப்பும் நிலவுகின்றன. ஆயினும் உத்தியோகபூர்வ அரசியலின் கட்டமைப்புக்குள்ளாக போர் எதிர்ப்பு மனோநிலைக்கு எந்த வெளிப்பாடும் கிடைப்பதில்லை. ஜனநாயகக் கட்சியானது வெறித்தனமான ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்கு தலைமை கொடுத்துக் கொண்டிருப்பதோடு சிரியாவில் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதற்கும் கோரி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும், ஜனநாயகக் கட்சியினர், சிரியா மீதான வான் தாக்குதல்களுக்கும், வடகொரியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கும் ஆப்கானிஸ்தானில் பாரிய MOAB குண்டைப் போடுவதற்கும் துரிதகதியில் ஆதரவளித்தனர்.

போர் என்பது கிறுக்குத்தனம் என்பதையும், அணு ஆயுதம் சார்ந்த மற்றும் சாராத முன்னேறிய ஆயுதங்களுடனான ஒரு மோதல் ஒரு பேரழிவுக்கு கட்டாயம் இட்டுச் செல்லும் என்பதையும் உலக மக்களின் பரந்த பெரும்பான்மையினர் நன்கறிந்து வைத்துள்ளனர். ஒரு பெரும் போர் நடக்கக் கூடும் என்று சிந்திக்கவும் கூட சாதாரண மக்கள் அஞ்சக் கூடிய அளவிற்கு அதன் சாத்தியம் மிகத் திகிலூட்டக் கூடியதாய் இருக்கிறது. விளிம்பில் நிற்கும் நிலையில் இருந்தேனும் அரசாங்கங்கள் ஏதோவொரு விதத்தில் நிச்சயம் பின்வாங்கி விடும் என்று நம்புவதற்கு அவர்கள் விரும்புகின்றனர்.

ஆனால் இந்த நம்பிக்கையானது ஒரு பிரமையாகும். போர் அபாயம் என்பது முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய-அரசு அமைப்புமுறையின் அடிப்படையான இயல்பில் வேரூன்றியிருக்கின்றது. அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற தன்மை, மில்லியன் கணக்கானோரது வாழ்க்கை விடயத்தில் நம்பமுடியாத அளவுக்கான ஆபத்துகளில் இறங்குவதற்கு அவர்கள் கொள்கின்ற விருப்பம் ஆகியவை ஒரு புறநிலை நெருக்கடியின் அகநிலையான ஒரு வெளிப்பாடாகும்.

கால் நூற்றாண்டு கால முடிவற்ற போர்களும், பதினைந்து ஆண்டு கால “பயங்கரவாதத்தின் மீதான போரும்” பெரும் அணு ஆயுத சக்திகளிடையேயான ஒரு மோதலாக அபிவிருத்தி கண்டு கொண்டிருக்கின்றன. ஒருவேளை இப்போதைய நெருக்கடி அத்தகைய ஒரு போராய் வெடிக்காமல் போய் விட்டாலும் கூட, இன்னுமொரு நெருக்கடி தொடர்ந்து வந்தேதீரும்.

ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பானது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றியதாக இருந்தாக வேண்டும். போருக்கு தொழிலாள வர்க்கம் தான் தனது வாழ்க்கைகளையும் வாழ்வாதாரங்களையும் கொண்டு விலை செலுத்த இருக்கிறது.

சுகாதாரப் பராமரிப்பு, ஓய்வூதியங்கள், ஊதியங்கள் மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை அழிப்பதன் மூலமே பாரிய இராணுவ எந்திரத்துக்கான செலவுகளுக்கு விலை கொடுக்கப்பட இருக்கிறது. சர்வதேச அளவில் ஒரு முதலாளித்துவ-எதிர்ப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தப்பட்ட தொழிலாள வர்க்கம் மட்டுமே, ஒட்டுமொத்த மனித இனத்தையும் அச்சுறுத்துகின்ற கிறுக்குத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தக்க ஒரேயொரு சமூக சக்தியாகும்.

முதலாளித்துவ-ஏகாதிபத்திய போர் வெறியர்களுக்கு எதிராக அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகெங்கிலும் இருக்கக் கூடிய பல பத்து மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவது மட்டுமே போரைத் தடுத்து நிறுத்துவதற்கு இருக்கக் கூடிய ஒரேயொரு வழியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் உலகெங்கும் இருக்கும் சகோதர அமைப்புகளுடன் தனது ஐக்கியத்தை வெளிப்படுத்துவதோடு ஆளும் உயரடுக்குகளின் போர்க் கொள்கைகளை கண்டனம் செய்கின்ற ஆர்ப்பாட்ட பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்வதற்கு அழைக்கிறது. சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது இன்றியமையாததாகும். போருக்கு எதிரான போராட்டமானது விஞ்ஞானத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக ஏப்ரல் 22 அன்று நடைபெறவிருக்கும் சர்வதேசரீதியாக ஒருங்கிணைக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட அத்தனை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு வெளிப்பாடுகளுக்குள்ளும் கொண்டுவரப்பட வேண்டும். விஞ்ஞானம், பகுத்தறிவு, முன்னேற்றம் மற்றும் மனிதகுலம் ஆகியவற்றைப் பாதுகாத்து நிற்பது என்பதே கூட போருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாததாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஏப்ரல் 30 அன்று, தனது வருடாந்திர சர்வதேச மே தின இணையவழிப் பேரணியை நடத்துகிறது. ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமே இந்தப் பேரணியின் மையத்தானமாய் இருப்பதாகும். இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கும் அதனைக் கட்டியெழுப்புவதற்கும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களை ICFI கேட்டுக் கொள்கிறது. கல்லூரி வளாகங்களிலும் அண்டை அருகாமைப் பகுதிகளிலும் போருக்கு எதிரான கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் வேலையிடத்திலும் போருக்கு எதிரான போராட்டம் கையிலெடுக்கப்படுவதற்கு உதவுங்கள்.

ஏகாதிபத்திய போரை உருவாக்குகின்ற அதே முரண்பாடுகள்தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தையும் கூட உருவாக்குகின்றன. போருக்கு எதிரான போராட்டத்தை சமூக சமத்துவமின்மைக்கும், அரசியல் ஒடுக்குமுறைக்கும் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிரான போராட்டத்துடன் இணைப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதும் அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதுமே அவசர அவசியமாகும்.

கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்வதற்கு ICFI ஐ தொடர்பு கொள்ளுங்கள்.