ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington pushes world to brink of nuclear war

வாஷிங்டன் உலகை அணுஆயுத போர் விளிம்பிற்கு தள்ளுகிறது

Bill Van Auken
18 April 2017

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸூம் ஏனைய ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளும் மீண்டும் மீண்டும் வட கொரியா உடனான "மூலோபாய பொறுமைக் காலம்" முடிந்துவிட்டதாகவும், “சகல வாய்ப்புகளும் மேசையில் இருப்பதாகவும்" திங்களன்று வெளியிட்ட அறிக்கைகள், அணுஆயுத பிரயோகத்துடன் மில்லியன் கணக்கானவர்களின் உயிரிழப்புகளோடு கொரிய தீபகற்பத்தில் வாஷிங்டன் ஒரு போரைத் தூண்டுவிடும் என்ற அதிகரித்துவரும் அச்சுறுத்தலை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது.

“கடந்த வெறும் இரண்டு வாரங்களில், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் நமது புதிய ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகளில் இருந்து அவரின் பலத்தையும் உறுதிப்பாட்டையும் உலகம் கண்டுள்ளது,” என்று ஆத்திரமூட்டும் தென் கொரிய விஜயத்தில் பென்ஸ் அறிவித்தார், அந்த வேளையில் அவர் வட கொரிய எல்லையோரம் உள்ள தென் கொரிய இராணுவமயப்படாத பகுதிக்கும் சென்றிருந்தார். “இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆயுத படைகளின் பலத்தையோ அல்லது அவரது உறுதிப்பாட்டையோ வட கொரியா சோதிக்க முயற்சிக்காமல் இருப்பதே நல்லது,” என்று பென்ஸ் தெரிவித்தார்.

முதலாவதாக ஏப்ரல் 7 இல் சிரியா மீதான விமானந்தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் மற்றும் பின்னர், ஒரு வாரம் கழித்து, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியை அமெரிக்கா சாம்பலாக்கியதற்குப் பின்னர் வேறெந்த இடத்திலும் பயன்படுத்தியிராத மிகவும் அழிவுகரமான ஆயுதமான MOAB எனும் பாரிய வெடிமருந்து குண்டை வானிலிருந்து ஆப்கானிஸ்தான் மீது வீசியமை ஆகிய ஈவிரக்கமற்ற இராணுவ ஆக்ரோஷ நடவடிக்கை குறித்த இந்த பெருமைபீற்றலை, அமெரிக்க கோரிக்கைகளை ஏற்பதற்கான வட கொரியாவிற்கான ஓர் இறுதி எச்சரிக்கை என்பதாக அல்லாமல் வேறொன்றுமாக அது புரிந்து கொள்ள முடியாது அல்லது அது இன்னும் அதிக வன்முறை இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

அணுஆயுதம் தாங்கிய விமானந்தாங்கி போர்க்கப்பல் USS கார்ல் வின்சன் தலைமையில் கடற்படையின் தாக்கும் பிரிவு கொரிய தீபகற்பத்திற்கு அருகில் நிலைநிறுத்தப்பட இருப்பதுடன், வன்முறையை சுமத்துவதற்கான அதுபோன்ற வழிவகைகள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு வருகின்றன. வின்சன் படைப்பிரிவுக்கு பின்னாலேயே ரஷ்யாவும் சீனாவும் இரண்டும் உளவுபார்ப்பு கப்பல்களை அனுப்பியதாக வந்த செய்திகளோடு, இந்த ஆயத்தப்படுத்தலின் உலகளாவிய தாக்கங்கள் திங்களன்று அடிக்கோடிடப்பட்டன. அவ்விரு அணுஆயுதமேந்திய நாடுகளைப் பொறுத்த வரையில், வட கொரியாவுக்கு எதிராக வாஷிங்டன் ஒரு போர் தொடங்குவது mtw;wpd; உயிர்பிழைப்பிற்கே அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது.

அணுஆயுத மூன்றாம் உலக போருக்கு இட்டுச் செல்லக்கூடிய ஓர் ஆசிய இராணுவ மோதலை நோக்கிய உந்துதல், பெரிதும், அமெரிக்க மக்களின் மற்றும் ஒட்டுமொத்த உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இரண்டு பெருவணிக கட்சிகளின் அரசியல்வாதிகள் ஆகட்டும் அல்லது பெருநிறுவன கட்டுப்பாட்டிலான ஊடகங்கள் ஆகட்டும் கொரிய தீபகற்பத்தில் ஒரு "மட்டுப்படுத்தப்பட்ட" அணுஆயுத பரிமாற்றமே கூட படுபயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றோ, அல்லது அனேகமாக அதுபோன்றவொரு பேரழிவானது பிரதான அணுஆயுத சக்திகள் அனைத்தையுமே ஓர் உலகளாவிய மோதலுக்குள் இழுத்துவரும் என்பதையோ ஒரு சிறிதும் கோடிட்டுக் காட்டவில்லை.

வாஷிங்டன் பின்பற்றி வரும் பாதையின் பொறுப்பற்றத்தன்மை மலைப்பூட்டி வருகிறது. ஏன் "மூலோபாய பொறுமைக் காலம்" நிறைவு செய்யப்பட்டுள்ளது என்பது விளங்கப்படுத்தப்படவே இல்லை, அல்லது இந்த பிரகடனத்திலிருந்து பெறப்படும் தீர்மானங்களும் கூட சவால் செய்யப்படவில்லை. இப்போது நிறைய நாடுகள் அணுஆயுதங்கள் வைத்துள்ளன. அதுபோன்ற ஆயுதங்களில் வட கொரியா நாட்டம்கொள்வது, அமெரிக்காவிற்கு ஒரு நம்பத்தகுந்த அச்சுறுத்தலை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

“சகல வாய்ப்புகளும் மேசையில் இருக்கின்றன" என்பது வட கொரியாவிற்கு எதிராக ஒரு தூண்டுதலற்ற முதல் தாக்குதலை தொடங்குவதற்கு வாஷிங்டன் தயாரிப்பு செய்கிறது என்பதை மட்டுமே அர்த்தப்படுத்தும். இவ்வாறு இருக்கின்ற போதினும், இதுபோன்றவொரு போக்கு அணுஆயுத போர் அச்சுறுத்தலை உள்ளடக்கி உள்ளது என்தை ஊடகங்கள் அரிதாகவே குறிப்பிடுகின்றன. அல்லது மில்லியன் கணக்கானவர்களுக்கு பாதிப்பேற்படுத்தக் கூடிய ஒரு தாக்குதலை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்பதன் மீது வாக்களிப்பதற்காக அமெரிக்க காங்கிரஸ் கூட்டப்பட வேண்டும் என்பதற்கும் கூட அங்கே ஒரு சிறிய அறிவுறுத்தலும் கிடையாது. தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் வரையில் டொனால்ட் ட்ரம்ப் என்ன இராணுவ நடவடிக்கை எடுப்பார் என்பதை யாருக்கும் அவர் கூற வேண்டியதில்லை என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட புரிதலாக உள்ளது. திங்களன்று ஈஸ்டர் தினத்தின் முட்டை-உருட்டும் நிகழ்வின் போது வெள்ளை மாளிகை புல்வெளியில் ட்ரம்ப் அவரின் உள்நோக்கங்களை சிறு குறிப்பாக மட்டுமே வழங்கினார், அங்கே அவர் பேசுகையில் வட கொரியா "அடக்கத்தோடு நடந்து கொள்ளவேண்டும்" என்று அறிவித்தார்.      

வாஷிங்டன் பின்பற்றி வரும் கொள்கையின் உண்மையான தன்மை, புஷ் நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதராக இருந்த ஜோன் போல்டனால் சுட்டிக் காட்டப்பட்டது. அவர் Fox News க்குத் தெரிவிக்கையில் "வட கொரியாவுக்கு முடிவு கட்டுவது தான் வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழி" என்றார்.

வாஷிங்டனின் பொறுப்பற்ற கொள்கை முன்னிறுத்தும் அதிகரித்து வரும் நிஜமான அபாயம், வெறும் மிதமான வடிவத்தில் தான், பதிவாக ஆரம்பித்துள்ளது.

ஏப்ரல் 7 இல் கப்பற்படை ஏவுகணை தாக்குதல் "உணர்வுபூர்வமாக திருப்தியாக இருப்பதாகவும் மற்றும் நீதி வழங்கப்பட்டிருப்பதாகவும்" அறிவித்து, முன்னதாக சிரியா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக இராணுவவாதத்தை அதிகரிப்பதை நோக்கி ட்ரம்ப் நிர்வாகம் திரும்பியதை கொண்டாடி இருந்த நியூ யோர்க் டைம்ஸ், விடயங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைக் கண்டு சற்றே பதட்டமாகி உள்ளது.

சிஐஏ இன் குடும்ப அங்கமாக அதிகரித்தளவில் செயல்பட்டு வரும் அப்பத்திரிகை திங்களன்று, ட்ரம்பின் "தான்தோன்றித்தனமான பேச்சு பிராந்திய பதட்டங்களை அதிகரித்து வருகிறது, கூட்டாளிகளை பதட்டப்படுத்தி வருகிறது, அமெரிக்காவால் ஒரு நாள் தாக்கப்படலாம் என்ற வட கொரியாவின் நீண்டநாள் அச்சத்தை அனேகமாக உறுதிப்படுத்தி வருகிறது—இந்த காரணத்தை முன்னிறுத்தித்தான் வட கொரியா அணுஆயுத தளவாடங்களுக்கு முதலிடத்தில் முதலீடு செய்தது,” என்று கவலைகளை வெளியிட்டது. அமெரிக்க ஜனாதிபதியின் போர்வெறியூட்டும் அச்சுறுத்தல்கள் "அவர் ஏதோவொரு வித பலப்பரீட்சை நடத்த செல்வதற்கே" சேவையாற்றுவதாகவும், “நாசகரமான தவறான கணக்கீடுகளுக்கு" வழி வகுத்திருப்பதாகவும் அது எச்சரித்தது.

பைனான்சியல் டைம்ஸின் வெளியுறவு விவகாரங்களுக்கான தலைமை கட்டுரையாளர் கீடியன் ராஹ்மன் திங்களன்று வெளியான ஒரு கட்டுரையில், “அமெரிக்கா உண்மையில் அதன் ஆட்சியைத் தாக்க உள்ளதாக" வட கொரிய தலைவர் கிம் ஜொங்-உன் "முடிவு செய்தால், அவரே முதலில் தாக்க விருப்பமுறுவார். அமெரிக்காவின் போர் திட்டங்கள் வட கொரிய தலைமையைப் படுகொலை செய்வதற்கு முதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்ற ஊடக கதைகள் அவர் இன்னும் வேகமாக செயல்பட மட்டுமே ஊக்கமளிக்கின்றன,” என்று எழுதினார். உண்மையில் 2011 இல் ஒசாமா பின் லேடனைக் கொன்ற அதே அமெரிக்க சிறப்புப்படை பிரிவு தென் கொரியாவில் பயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்பின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்கள் பியொங்யாங்கை மண்டியிடச் செய்வதற்காக இருக்கலாம் என்றாலும், ராஹ்மன் தொடர்ந்து குறிப்பிடுகையில், “… அனேகமாக பெரும்பாலும் வட கொரியா பின்வாங்காது—மேலும் அவ்விதத்தில் ட்ரம்ப் மூலோபாயம் தோல்வியுறும். அப்போது, அமெரிக்க ஜனாதிபதி ஒரு தடுமாற்றத்தை முகங்கொடுப்பார். திரு. ட்ரம்பின் 'மிகவும் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களின்" அணி, அதன் திட்டத்தை நிறைவேற்றாமலேயே கொரிய தீபகற்பத்திலிருந்து பின்வாங்குமா?  

கேள்வி எழுப்புவது அதற்கு பதலளிப்பதற்காகவே ஆகும். ட்ரம்புக்கும் சரி, அவர் வெளியுறவு கொள்கைக்காக உட்கார்ந்திருக்கும் பதவியிலிருக்கும் தளபதிகள் மற்றும் ஓய்வூபெற்ற தளபதிகளின் கூட்டத்திற்கும் சரி சண்டையிடப்படும் அதுபோன்றவொரு போரில் அவர்களது நோக்கங்களை அடையாமல் —அதாவது வட கொரியாவை முழுமையாக அடிபணிய செய்து நிராயுதபாணியாக்காமல்— போர் விளிம்பிலிருந்து பின்வாங்க நாட்டம் இல்லை.

பெரும்பாலும் ஆயுதமற்ற ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு எதிராக தொடர்ந்து போர் நடத்தி மில்லியன் கணக்கானவர்களை கொன்று 25 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒப்பீட்டளவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒப்பீட்டளவில் ஒருசில பலாபலன்களை மட்டுமே அனுபவித்துள்ள நிலையில், அது இப்போது இராணுவ மோதலின் முற்றிலும் ஒரு வேறுபட்ட மட்டத்தில் அதன் சொந்த உள் நெருக்கடி மற்றும் முரண்பாடுகளால் உந்தப்பட்டு வருகிறது.

நிலைமை மேலும் மேலும் அதிகமாக இரண்டாம் உலக போருக்கு முன்னர் 1930 களின் இறுதியில் மேலோங்கிய நிலைமைகளை ஒத்திருக்கின்றன. அடால்ஃப் ஹிட்லருக்கு ஒரு ட்வீட்டர் கணக்கு இருந்திருந்தால், அமெரிக்க ஜனாதிபதி தனது கணக்கை பயன்படுத்துவதில் இருந்து அவர் எவ்விதத்தில் மிகவும் வித்தியாசமாக பயன்படுத்தி இருப்பார் என்று கற்பனை செய்வது சிரமமாக உள்ளது.

“நமது இராணுவம் ஆயத்தப்படுத்தப்பட்டு வருகிறது, மிக வேகமாக முன்னொருபோதும் இல்லாதளவில் மிகவும் பலமாக மாறி வருகிறது. வெளிப்படையாக கூறுவதானால், நமக்கு வேறு வாய்ப்பில்லை!” என்று ட்ரம்ப் ஞாயிறன்று ட்வீட் செய்தார்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக அவர் குறிப்பிடுகையில்: “சீனா அனேகமாக வட கொரியாவைக் கையாளுமென எனக்கு மிகவும் நம்பிக்கை உள்ளது. அவர்களால் அதை செய்ய முடியவில்லை என்றால், அமெரிக்கா, அதன் கூட்டாளிகளோடு சேர்ந்து, அதை செய்யும்! USA” என்று எழுதினார்.

ட்ரம்பின் வாய்சவடால், செக்கோலோவேஸ்கியா மற்றும் போலாந்திற்குள் ஜேர்மனி அணிவகுப்பு நடத்துவதற்கு முன்னதாக ஹிட்லர் பயன்படுத்திய மொழிகளை எதிரொலிக்கின்றன. செக்கோலோவேஸ்கியா "பிரச்சினை" “தீர்க்கப்பட வேண்டும்" என்று நாஜி தலைவர் பிரகடனப்படுத்தினார். பின்னர் போலாந்து "பிரச்சினை" “தீர்க்கப்பட வேண்டும்" என்றார். அவர் இராணுவ நடவடிக்கைக்கான சாக்குபோக்குகளாக நெருக்கடிகளை வேண்டுமென்றே உருவாக்கினார்.

ட்ரம்பும், வட கொரியாவை, அந்த ஒட்டுமொத்த நாட்டையும், ஒரு "பிரச்சினையாக" விவரித்து, அதேபோன்ற வாய்சவடால்களைப் பயன்படுத்துகிறார், பின்னர் "அது கவனிக்கப்படும்" என்று அச்சுறுத்தும் விதத்தில் எச்சரிக்கிறார். இந்த பிரச்சினை ஏன் இப்போது இந்தளவிற்கு அவசியமாகிறது, இதை யாரும் விவரிப்பதில்லை, ஊடகங்களை பொறுத்த வரையில், நடைமுறையளவில் யாரும் கேள்வி எழுப்புவதே இல்லை.

வாஷிங்டனை திருப்திப்படுத்த பியொங்யாங் சாத்தியமானளவிற்கு என்ன செய்ய முடியும்? அது அதன் அணுஆயுத திட்டத்தைக் கைவிட்டு, ஈராக்கின் சதாம் ஹூசைன் மற்றும் லிபியாவின் மௌம்மர் கடாபியின் நாடுகள் சீரழிக்கப்பட்டு அவர்களே வன்முறையில் கொல்லப்படுவதற்கு சென்ற அதே பாதையில் செல்லும் வகையில், அதன் ஆட்சியை சோதனை நடவடிக்கைகளுக்கு வேண்டுமானால் திறந்துவிடலாம்.

வட கொரியா சம்பந்தமாக வாஷிங்டனின் கட்டளையை திணிப்பதில் சீனாவிற்கு அழுத்தமளிக்கலாமென கருதுவது அடித்தளமற்றது. 1950 இல் அமெரிக்க துருப்புகள் யாலு (Yalu) ஆற்றை அடைந்த போது சீனா போருக்குள் இறங்க நிர்பந்திக்கப்பட்டது, அமெரிக்க இராணுவத்தைத் திருப்பி அனுப்பும் அந்த முயற்சியில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவினால் போரைக் கொண்டு எதை சாதிக்க முடியவில்லையோ அதை இப்போது அவர்களிடம் ஒப்படைக்க, சீனா தலையிட வேண்டுமென வாஷிங்டன் விரும்புகிறது. இந்த கோரிக்கைகளுக்கு பெய்ஜிங் இணங்கினால், அது சீனா மீது ஆழ்ந்த மூலோபாய தாக்கங்களை அத்துடன் மிகப்பெரும் உள்அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்தும்.

வட கொரியா ஏவுகணைகளுக்கு எதிராக தற்காப்புக்காக வடிவமைக்கப்பட்டதாக அமெரிக்க வாதிடுகின்றதும், ஆனால் அமெரிக்கா அதன் முதல் அணுஆயுத தாக்குதல் தகைமையை உறுதிப்படுத்துவதற்கான வழிவகையாக சீனா கருதுகின்றதுமான அமெரிக்காவின் Terminal High Altitude Area Defense system அல்லது THAAD அமைப்பை சியோல் விரைவாக நிறுவ விரும்புகிறது என்ற அதன் அறிவிப்புக்குப் பின்னர், பெய்ஜிங் மற்றும் வாஷிங்டனுக்கு இடையே ஏற்கனவே அங்கே பதட்டங்கள் தீவிரமடைந்து வருவதற்கான அறிகுறிகள் உள்ளன.

உலக முதலாளித்துவ நெருக்கடியானது, 20 ஆம் நூற்றாண்டில் இரண்டு முறை, முதலாளித்துவ அரசு தலைவர்களையும் மற்றும் அவர்களின் தளபதிகளையும் போர் மூலமாக ஒரு வழி காண உந்தியது, அதில் பத்து மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இன்றோ, அதேபோன்ற அழுத்தங்கள் பூமியின் உயிரினங்களையே அழிக்கும் அளவிற்கு ஓர் அணுஆயுத மோதலை நோக்கிய முனைவைக் கட்டவிழ்த்து விட்டு வருகின்றன.

அணுஆயுத போர் உட்பட அமெரிக்க அரசாங்கம் செய்துவரும் ஒவ்வொன்றும் மலைப்பூட்டும் அபாயத்தைக் கொண்டுள்ளன. வட கொரியாவுடன் உடனடியான ஒரு மோதல் நிகழுமா நிகழாதா என்று அனுமானிக்க இயலாது, ஆனால் உலகெங்கிலும் இந்த போக்கை பின்தொடர்வதற்காக வாஷிங்டன் தயாரிப்பு செய்து வருகிறது என்பதை மறுக்கவியலாது.

இன்றைய முதலாளித்துவ அரசாங்கங்கள், அணுசக்தியால் நிர்மூலமாகி விடக்கூடிய அச்சுறுத்தல் காரணமாக, 1914 மற்றும் 1939 ஐ போல, போரில் இறங்காது என்று யாரும் பிரமையில் இருக்க முடியாது. எந்தவொன்றாக இருந்தாலும், அவை அவற்றிற்கு முன்பு நடந்திருந்ததை காட்டிலும் மிகவும் ஈவிரக்கமின்றி இருக்கும். ஆழமடைந்து வரும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளை முகங்கொடுத்து, அந்நெருக்கடிகளுக்கு அவற்றிடம் எந்த முற்போக்கான தீர்வும் இல்லாமல், அவை முன்பினும் அதிகமாக மனிதயினத்தைப் பேரழிவின் விளிம்பிற்கு இழுத்து சென்று கொண்டிருக்கின்றன.

தற்போதைய நெருக்கடியானது, போர் அபாய அளவுக்கும் மற்றும் அதற்கு எதிராக எந்தவொரு இயக்கமும் ஒழுங்கமைக்கப்படாமல் இருப்பதற்கும் இடையிலான படுபயங்கர இடைவெளியால் குணாம்சப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல்ரீதியிலான நனவுபூர்வமான தலையீடு இல்லாமல் போர் உந்துதலை நிறுத்துவதற்கு அங்கே எந்த வழியும் கிடையாது.

சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சர்வதேச போர்-எதிர்ப்பு, ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைக்க போராடி வருகின்றன. வேலையிடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிலாள வர்க்க அண்டைப்பகுதிகளில் போருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைப்பதும் இந்த இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கான போராடுவதில் உள்ளடங்கும்.

ICFI ஏப்ரல் 30 இல் அதன் வருடாந்தர சர்வதேச இணையவழி மே தின கூட்டம் நடத்த உள்ளது, ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடுவதே அதன் மைய நோக்கமாகும். நமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதில் பங்கெடுக்குமாறும், சாத்தியமான அளவிற்கு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளிடையே இந்த பேரணியைக் கொண்டு செல்லுமாறும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.