ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Pence’s Asian tour reinforces US threats to North Korea

பென்ஸின் ஆசிய சுற்றுப்பயணம் வடகொரியா மீதான அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு வலுவூட்டுகிறது

By Mike Head
24 April 2017

வடகொரியாவுக்கு எதிராக சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க கூட்டணிகளை பலப்படுத்தும் பொருட்டு முக்கிய அமெரிக்க ஆசிய-பசிபிக் தலைநகரங்களுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மேற்கொண்ட 10 நாட்களுக்கான சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் இறுதியாக இரண்டு நாள் சிட்னி விஜயத்துடன் நிறைவுசெய்தார்.      

தென் கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட அவரது சுற்றுப்பயணம் முழுவதிலும் பென்ஸூம், ட்ரம்ப் நிர்வாகத்தின் ஏனைய உறுப்பினர்களும் வட கொரியாவிற்கு எதிரான அவர்களது அச்சுறுத்தல்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியதுடன், பெய்ஜிங்கின் அண்டை நாட்டு கூட்டாளிகளுக்கு எதிராக சீனா தலையீடு செய்யவேண்டுமென்ற அவர்களது கோரிக்கைகளை தீவிரப்படுத்தினர். 

பென்ஸ் தனது நடவடிக்கையில் கட்டவிழ்த்துவிட்டதைப்போல், ஞாயிறன்று CNN இன் “State of the Union” நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலின்போது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலரான ஜோன் கெல்லி பேசுகையில், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு ஒரு வடகொரிய அணுஆயுத ஏவுகணை திறன்கொண்டிருப்பது என்பது “ஒரு நாடாக நாங்கள் கடுமையான அபாயத்தில் இருப்பதாகவே” அர்த்தமாகும் என கூறினார். ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்குவதற்கு முன்பு வட கொரியா இந்த திறமையை அடைந்துவிடும் எனக் கூறினார்.  

உண்மையில், அமெரிக்காவின் பெரும் ஆயுத கட்டமைப்புடன் ஒப்பிடுகையில், வட கொரிய ஏவுகணையும், அணுஆயுத திறனும் இன்றளவும் பழமையானதாகவும், பலவீனமானதாகவும் உள்ளன. குறிப்பாக ஏனைய அணுஆயுதமேந்திய சக்திகளுடனும் மற்றும் வட கொரியாவுடன் எல்லைகளை கொண்டுள்ள சீனா மற்றும் ரஷ்யாவை மோதலுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புள்ள போருக்கு இழுக்கக்கூடிய வகையில் ஒரு மோதலை தூண்டிவருவது வாஷிங்டனே தவிர பியோங்யாங் அல்ல.      

ஜப்பானின் இரண்டு கடற்படை அழிப்புக்கப்பல்களானது, “பல்வேறு தந்திரோபாயங்களை கையாளும்” வகையிலான பயிற்சிகளுக்காக அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான கார்ல் வின்சனின் தாக்குதல் குழுவை சந்திக்கவிருப்பதை ஞாயிறன்று ஜப்பானில் பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் அரசாங்கம் உறுதிசெய்தபோது ஆத்திரமூட்டல்கள் அதிகரித்தன. நாளை வட கொரிய இராணுவ ஸ்தாபித நாள் (North Korea’s Military Foundation Day) நினைவுகூரலின்போது, இந்த பயிற்சிகள் தென் சீனக் கடல்பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு, ஜப்பான் கடல் பகுதியிலும், கொரிய கடற்கரை பகுதிகளிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.       

வட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் போதுமானளவு சீன அரசாங்கம் செயலாற்றவில்லையென சென்ற வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரது குற்றச்சாட்டுக்களுக்கு புத்துயிர் கொடுத்தார். “வட கொரியாவின் பொருளாதார உயிர்நாடியாக சீனா பெரும்பங்கு வகிக்கிறது” என டவீட் செய்துள்ளார். “எளிதானது இல்லை என்றாலும், வட கொரிய பிரச்சனைக்கு அவர்கள் தீர்வு காண விரும்பும் பட்சத்தில், அவர்கள் அதை செய்துவிடுவார்கள்.”  

பொது அறிக்கைகளின்படி, சியோல், டோக்கியோ, ஜகார்த்தா மற்றும் சிட்னியில் பென்ஸ் பேசுகையில், வட கொரியாவுடனான மோதல் என்பதே “முதல் திட்ட நிரலாக” இருந்தது. எனினும், மூடிய அறைக்குள் விவாதிக்கப்பட்டவை குறித்து சரியாக விபரங்கள் வெளிபடுத்தப்படவில்லை.

50 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் எந்தவொரு போருக்கும் உடனடியாக முன் வரிசையில் முகம்கொடுக்கின்றதான தென் கொரியாவிலிருந்து தொடங்கப்பட்ட சுற்றுப்பயணம், 127 மில்லியன் கணக்கிலான மக்கள் நேரடியாகவே துப்பாக்கி சூடுகளை எதிர்நோக்கி நிற்கும் ஜப்பானை நோக்கி முன்னேறியது. சீனாவுடனான அதன் அடிப்படை மோதலுக்கு ஒரு முக்கிய மூலோபாய இடமாக வாஷிங்டன் கருதுகின்ற இந்தோனேஷியாவில் பின்னர் பென்ஸ் நிலைகொண்டார். ஜகார்த்தாவில் பென்ஸ் பேசுகையில், ஒபாமா நிர்வாகத்தின்போது, இந்தோனேஷியாவுடன் ஸ்தாபிக்கப்பட்டதான அதன் “மூலோபாய கூட்டாண்மை” மீது அமெரிக்கா கொண்டிருக்கும் “உயர் மதிப்பு” குறித்து சமிக்ஞை செய்வதே அவரது விஜயத்தின் பிரதான நோக்கம் என்றும் கூறினார். 

சனிக்கிழமையன்று சிட்னி துறைமுகத்தின் கடற்கரை பகுதியில், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்கம் டர்ன்புல்லுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு கூட்டு ஊடக மாநாட்டில், வட கொரியாவிற்கு எதிராக “சகல வாய்ப்புகளும் தயாராகவுள்ளன” என்றும், மேலும் வட கொரியாவை சீனா “கையாளவில்லை” எனில், “அமெரிக்கா அதை செய்யும்” என்ற வகையில் ஒரு அப்பட்டமான இராணுவ அச்சுறுத்தலாக, வாஷிங்டனின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளை பென்ஸ் மூன்று முறை திரும்ப திரும்ப வலியுறுத்தினார்.

ஆஸ்திரேலியாவுடனான அமெரிக்க கூட்டணி “புனிதமானது” என்றும், “மீறமுடியாதது” என்றும் பென்ஸ் விவரித்தார். கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு முக்கிய யுத்தத்திலும் அமெரிக்காவுடன் இணைந்தே ஆஸ்திரேலியாவும் போராடிவந்ததாக குறிப்பிட்டார். மேலும், “கோரல் கடலிலிருந்து கந்தகார் நகர் வரையிலுமான எங்களது நட்பு தியாக தீயூடாக ஒன்றிணைக்கப்பட்டது,” எனவும் அறிவித்தார்.

பென்ஸின் வருகை மூலம் அவர் “கௌரவ” படுத்தப்பட்டதாக டர்ன்புல் பாசாங்குத்தனத்துடன் தனது கருத்தை பரிமாறினார். பசிபிக் மீதான அமெரிக்காவின் நீண்டகால நலனும், தலையீடும் வழங்கியுள்ள “சமாதான அமெரிக்கா” பற்றி டர்ன்புல் பாராட்டினார். மேலும், “ஆஸ்திரேலியாவை விட வலுவான, அதிக ஈடுபாடுகொண்ட, அதிக விசுவாசமுள்ள பங்குதாரரும், நட்பு நாடும் வேறெதுவுமில்லை என்பதை அமெரிக்கா புரிந்துகொண்டிருப்பதாகவும்” அவர் கூறினார்.  

பென்ஸை போலவே, டர்ன்புல்லும் போரை அடிப்படையாக வைத்தே உறவை வரையறுத்தார். “கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பு ஆஸ்திரேலிய, அமெரிக்க துருப்புக்கள் முதல் உலக போரில் ஈடுபட்டபோதே ஆரம்பிக்கப்பட்டதான அமெரிக்க, ஆஸ்திரேலிய கூட்டணி பற்றி அவர் குறிப்பிட்டார். அப்போதிருந்து கடந்த 99 வருடங்களாக ஒவ்வொரு முக்கிய மோதலிலும் அமெரிக்காவுக்கு ஆஸ்திரேலியா தோளோடு தோள் கொடுத்து வருவதாகவும்” தெரிவித்தார். 

எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் பில் ஷார்டெனும் இதேபோன்ற கூற்றுக்களையே சொன்னார். ஆஸ்திரேலிய வெளியுறவு கொள்கையின் ஒரு “அடித்தளம்” போன்று கூறப்படுகின்றதான “பாதுகாப்பு கவசம்” அமெரிக்காவினால் வழங்கப்பட்டிருப்பது குறித்து அவர் விவரித்ததுடன், தனது “நன்றியுணர்வையும்” காட்டினார்.

ஆஸ்திரேலிய மக்களுடனான எவ்வித ஆலோசனையுமின்றி, அரசியல் ஸ்தாபகம் ஒரு பேரழிவுகரமான அணுஆயுத போர் எனும் ஆபத்தில் மில்லியன் கணக்கிலான மக்களை சிக்கவைத்துகொண்டிருக்கிறது. பென்ஸ் உடனான ஊடக மாநாட்டின்போது, வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் எதிலும் ஆஸ்திரேலிய இணைந்து செயலாற்றுமா என்பது குறித்த ஒரு நிருபரின் கேள்விக்கு டர்ன்புல் விடையிறுக்க மறுத்துவிட்டார். மாறாக, ஆஸ்திரேலியா அமெரிக்காவிற்கு இராஜதந்திர ஆதரவினை வழங்கிவந்ததாகவும், மேலும் சீனா விடையிறுக்குமென அவர் “நம்பிக்கை” கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.   

கொரிய தீபகற்பத்தின் மீதான எந்தவொரு அமெரிக்க போரும் ஆஸ்திரேலியாவை தானாகவே அதில் ஈடுபடுத்தும் என்பதே உண்மையாகும். “Pine Gap” இல் அமைந்துள்ள அமெரிக்க செயற்கைகோள் தகவல்தொடர்பு தளமானது எந்தவொரு இராணுவ நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்ற நிலையில், அமெரிக்க தலைமையிலான “Five Eyes” எனும் உலகளாவிய உளவுத்துறை வலைப்பின்னலில் ஆஸ்திரேலியா உறுப்பினராக இருப்பது பற்றியோ, ஆஸ்திரேலிய அதிகாரிகள் அமெரிக்க இராணுவ கட்டளையகங்கள் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவை தளமாக கொண்ட அமெரிக்க கடற்படை மற்றும் போர் விமானங்களுடன் ஒருங்கிணைப்பது பற்றியோ கூறவேண்டியதில்லை.      

1,250 க்கும் மேற்பட்ட கடற்படையினருடன் இராணுவ விமானந்தாங்கி கப்பலும் இணைந்ததான சமீபத்திய சுழற்சியாக, கடந்த வாரம் வட கொரியாவிற்கு எதிராக “போராட தயார்” என்று டார்வினை தொட்டதாக அவர்களது கட்டளை அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் பிரையன் மிடில்டன் நிருபர்களிடம் கூறினார்.  

பென்ஸின் வருகையை முன்னிட்டு, வட கொரிய நிலைமையை பற்றி பாதுகாப்பு அதிகாரிகளுடன் விவாதிப்பதற்காக அமைச்சரவை தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தை டர்ன்புல் நடத்தியதாக Rupert Murdoch’s இன் ஆஸ்திரேலியன் பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையே இராணுவ பயிற்சிகளை முடுக்கிவிடுவது, வட கொரியாவிற்கு எதிரான கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பது, மோதல் ஏற்பட்டால் தற்செயல் திட்டங்களை வகுப்பது உட்பட அனைத்து வாய்ப்புகளுக்கும் ஆதரவுதிரட்டப்பட்டது.  

பென்ஸ் விஜயத்தின்போது, டர்ன்புல் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஜூலி பிஷப் இருவரும் வேண்டுமென்றே சூழ்நிலைக்கு தீயூட்டினர். வட கொரியா ஆஸ்திரேலியாவிற்கு ஒரு உடனடி அபாயமாக இருப்பதாக சித்தரிப்பதன் மூலமாக ஊடகங்களுக்கு பரபரப்பான தலைப்பு செய்திகளை தந்தனர். எவ்வித ஆதாரத்தையும் வெளியிடாமல், ஆஸ்திரேலியாவிற்கான ஒரு “தீவிர அச்சுறுத்தல்” என பிஷப் முத்திரை குத்தியதுடன், அது விரைவில் “அதன் ஏவுகணை ஸ்தாபிதங்களை அடைந்துவிடும்” என்றும் தெரிவித்தார்.       

அவரது கருத்துக்கள் ஒரு இராணுவவாத விடையிறுப்பை தூண்டியது. “அமெரிக்க தலைமையில் ஒரு அதிர்ச்சி படைப்பிரிவில்” ஆஸ்திரேலியா தொடர்ந்து நீடிப்பதானது, வட கொரியாவிலிருந்து ஏவப்படுவதான “ஒரு அணுஆயுத தாக்குதலுக்கு உட்பட்ட எல்லைக்குள் வருகின்ற ஒரு தற்கொலை நடவடிக்கையாகவே” அது இருக்குமென வட கொரிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய நாட்களில் வெளிவரும் இதுபோன்ற அறிக்கைகளை போல இந்த வெடிப்பும் அமெரிக்க தாக்குதலால் ஒரு அரசாங்கத்தை உருவாக்கும் எச்சரிக்கைமிக்க முயற்சிகளை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இது வாஷிங்டனின் கைகளுக்கு தட்டும் சாதகமாக இருக்கவில்லை மாறாக,  தற்போது உலகத்தையே ஒரு அணுஆயுத போரின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் ஒரு பொதுவான நலன்களை கொண்டுள்ள சர்வதேசரீதியான அவர்களது சக தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துகின்றது.     

ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் வழங்கும் பங்களிப்பை ஆஸ்திரேலியர்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாகவே பென்ஸின் விஜயம் வடிவமைக்கப்பட்டதென ஆஸ்திரேலியாவிலுள்ள பெருநிறுவன ஊடக நிலையங்கள் சித்தரித்தன. இன்றைய ஆஸ்திரேலிய தலையங்கம், “வாஷிங்டன் உடனான எங்கள் கூட்டணியின் நீடித்த மதிப்பு தொடர்பாக ஒரு வரவேற்கும் நினைவூட்டலாக அமைந்ததான இது எங்களது பாதுகாப்பிற்கான மைல்கல்” என தலையங்கமிட்டது. 

உத்தரவாதம் அளிப்பது என்பதை தாண்டி, மில்லியன் கணக்கிலான ஆஸ்திரேலியர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தையும், அமெரிக்க கூட்டணியையும் மிகப்பெரிய ஆபத்தாக எதிர்கொள்வதாகவே அவர்கள் கருதுவதாக சமீபத்திய கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

பென்ஸ் விஜயத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் எதுவும் அங்கு உருவாகவில்லை என்றாலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீட்டுகூரைகளிலும், தாழப்பறந்த ஹெலிகாப்டர்களிலும் மறைந்திருந்து சுடும் இராணுவ வீரர்கள் காணப்பட்டனர், அமெரிக்க இரகசிய சேவை முகவர்கள் அதிகமாக தென்பட்டனர், பென்ஸின் மோட்டார் வாகன பவனியை முன்னிட்டு சாலைகள் மூடப்பட்டிருந்தன, மேலும் பெரும் எண்ணிக்கையில் பொலிஸ்கள் தெருக்களிலும், பூங்காக்களிலும், வணிகப்பகுதிகளிலும் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர்.