ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Despite G7 endorsement of Syria airstrike, US-Europe divisions grow

சிரிய வான்தாக்குதலை G7 வழிமொழிந்தபோதும், அமெரிக்க-ஐரோப்பிய பிளவுகள் பெருகுகின்றன

By Alex Lantier and Johannes Stern
12 April 2017

இத்தாலியின் லூக்கா நகரில் நேற்று முடிவடைந்த G7 வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் உச்சிமாநாடு ஒரு வெளிப்படையான முரண்பாட்டால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது: சிரிய அரசாங்கத்துக்கு எதிராக சென்ற வாரத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலை உறுப்பு நாடுகள் அத்தனையும் வழிமொழிந்தன என்பது உண்மையாக இருந்தபோதும், வெளியுறவு மற்றும் வர்த்தக விடயங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இடையே பிளவுகள் ஆழமடைவதைக் இந்த கூட்டம் எடுத்துக்காட்டியது.

லூக்கா நகரம் போலிஸ் முற்றுகையின் கீழ் வைக்கப்பட்ட நிலையில், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராச்சியம், மற்றும் அமெரிக்கா ஆகிய உலகின் ஏழு முன்னணி ஜனநாயகங்களாய் சொல்லப்படும் நாடுகளது வெளியுறவு அமைச்சர்கள் ஒன்றாய் இணைந்து சிரியாவுக்கு எதிரான ட்ரம்ப்பின் வலிந்து தாக்கிய போர் நடவடிக்கையை பாராட்டினர்.

தாக்குதலுக்கு சாக்காக இருந்த, Khan Sheikhoun நகரில் சிரிய அரசாங்கம் ஒரு சரின் வாயு தாக்குதலை நடத்தியது என்ற, சென்ற வாரத்தில் சிரிய அரசாங்கத்தின் வான் தளம் ஒன்றிற்கு எதிராக நடத்தப்பட்ட அமெரிக்க கப்பல் ஏவுகணைத் தாக்குதலுக்கான சாக்குப்போக்காக சேவை செய்த, ஊர்ஜிதமற்ற கூற்றுகளையும் அவர்கள் வழிமொழிந்தனர். அமெரிக்க-ஆதரவு இஸ்லாமிய எதிர்ப்புப் படையினர் இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள், முந்தைய சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள் —இதில் 2013 இல் Ghouta இல் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா அசாத் அரசாங்கத்தின் மீது பழிபோட முனைந்தது— என்ற பரவலாக அறியப்படுகின்ற உண்மையை அவர்கள் உதாசீனம் செய்தனர்.

G7 செய்திக்குறிப்பு அறிவித்தது: “ஏப்ரல் 4 அன்று தெற்கு இட்லிப்பின் Khan Shaykhun பகுதியில் நடந்த ஒரு வான் தாக்குதலில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக வந்த செய்திகள் குறித்து நாங்கள் அதிர்ச்சியும் திகைப்பும் அடைகிறோம்... அதற்குப் பின்னர் ஷயரத் விமானத் தளத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட அமெரிக்க இராணுவ நடவடிக்கையானது கவனமாக திட்டமிடப்பட்ட, அந்த போர்க்குற்றத்திற்கு பதிலிறுப்பாய் நடத்தப்பட்ட வீச்சு குறைந்த ஒன்றாக இருந்தது என்பதோடு, சிரியாவில் மரண ஆபத்தான இரசாயன ஆயுதங்களின் பரவலையும் பயன்பாட்டையும் தடுக்கவும் தவிர்க்கவும் பொருட்டு, ஏப்ரல் 4 இரசாயன ஆயுதத் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடைய சிரிய இராணுவ இலக்குகளுக்கு எதிராக செலுத்தப்பட்டது.”

ஆயினும் அதேசமயத்தில், சிரியா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்துவதற்கான அமெரிக்க ஆதரவுடனான பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட ஒரு திட்டத்தில், ஐரோப்பிய கண்ட சக்திகளிடம் இருந்தான எதிர்ப்பு பெருகியதை அடுத்து, உடன்பாடு காண முடியாமல் போனது. பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரான ஜோன்-மார்க் எய்ரோ கூறுகையில், தனது பிரிட்டிஷ் சகாவான போரிஸ் ஜோன்சன் இந்த ஆலோசனையை முன்வைத்ததாகவும், ஆயினும் அது ஆழமாக விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

“இப்போதைக்கு புதிய தடைகளை ஒரு திறம்பட்ட சாதனமாக பயன்படுத்துவதற்கு அங்கே கருத்தொற்றுமை இல்லை” என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சரான அஞ்சலினோ அல்ஃபானோ தெரிவித்தார். கூடுதல் தடைகளை விதிப்பதற்கு எதிராக எச்சரித்த அவர், அது ரஷ்யாவை “ஒரு மூலைக்குள்” தள்ளிவிடும் என்றார்.

ரஷ்யா மீது மேலதிகமாய் தாக்குவதும் நெருக்குதலளிப்பதும் போருக்கு இட்டுச் செல்லக் கூடும் என்று எச்சரிப்பதும், ஐரோப்பிய கண்ட சக்திகள் இப்போதைக்கு ரஷ்யா மற்றும் ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு ஆதரவாய் இருக்கின்றன என்பதை அமெரிக்காவுக்கு சமிக்கையளிப்பதும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான சிக்மார் காப்ரியல் வசம் விடப்பட்டது: “G7 நாடுகள் எதுவுமே இராணுவத் தலையீட்டு அதிகரிப்பை விரும்பவில்லை, மாறாக வன்முறை மேலும் பரவாமல் ஒரு அரசியல் தீர்வு காணவே விரும்புகின்றன. சிரிய மோதலுக்கு ஒரு அமைதியான தீர்வுக்கான அரசியல் நடைமுறையை ஆதரிக்க ரஷ்யாவுக்கு நாங்கள் ஊக்கமளிக்க விரும்புகிறோம்.... எல்லோருக்கும் பிடித்ததாக இது இல்லாமல் போகலாம், ஆனால் ரஷ்யாவும் ஈரானும் இல்லாமல், சிரியாவுக்கு அங்கே எந்த தீர்வும் இருக்க முடியாது.”

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-தலைமையிலான மோதலுக்கு இத்தாலி அரசாங்கம் தனது எதிர்ப்பை தெள்ளத் தெளிவாக பதிவு செய்தது, G7 கூட்டத்தின் சமயத்தில் ரஷ்ய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினையும் பிரதமர் டிமிட்ரி மெட்வெடேவ் ஐயும் சந்தித்து விவாதிப்பதற்காக தனது ஜனாதிபதி சேர்ஜியோ மத்தரெல்லா வை அது அனுப்பியது. ரஷ்ய-இத்தாலி நட்பு “உறுதியானது” என்றும் “தொடர்ந்து வலிமையுடன் திகழும்” என்று இத்தாலியின் ஜனாதிபதி தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்கது என்னவென்றால், Khan Sheikhoun தாக்குதலை ஒரு ஆத்திரமூட்டலாக அடையாளம்காட்டி, 2003 இல் ஈராக் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடங்குவதற்காக புஷ் நிர்வாகம் பயன்படுத்திய பேரழிவு ஆயுதங்கள் குறித்த பொய்களுடன் அதை ஒப்பிட்டு ரஷ்ய ஜனாதிபதி பேசிய கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் மத்தரெல்லா அவருடன் நின்றிருந்தார். சிரியாவில் அமெரிக்க ஆதரவு போராளிகள் இன்னுமொரு வாயுத் தாக்குதலை விரைவில் தொடங்கக் கூடும் என்றும் புட்டின் எச்சரித்தார்.

“ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி அமெரிக்க தூதர்கள் [ஐநா] பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாடம்நடத்திக் கொண்டிருந்த நிகழ்வுகளை இது என் நினைவுக்குக் கொண்டுவருகிறது. நாம் இதை ஏற்கனவே பார்த்து விட்டோம்” என்றார் புட்டின். அவர் மேலும் கூறினார்: “இதேபோன்ற ஆத்திரமூட்டல்களை டமாஸ்கஸின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் உள்ளிட சிரியாவின் மற்ற பகுதிகளிலும் நடத்துவதற்கு தயாரிப்பு செய்யப்பட்டு வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன, அங்கே அவர்கள் திரும்பவும் ஏதேனும் பொருட்களை பயன்படுத்தி விட்டு சிரிய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுவதற்காய் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.”

G7 பிரதிநிதிகளிடையே ஏற்பட்ட மோதல்களானவை ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையில் அபிவிருத்தி கண்டுவருகின்ற ஆழமான புறநிலை மோதல்கள் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் போருக்கு அதிகரித்துச் செல்லும் எதிர்ப்பு ஆகியவற்றின் ஒரு மங்கலான மற்றும் சிதறலான பிரதிபலிப்பாகவே அமைந்திருக்கின்றன.

ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்கா ஐரோப்பா இரண்டு இடங்களிலும் வெறுப்பை சம்பாதித்து இருக்கிறது, அவர் பதவியேற்ற பின்னர் அவர் மீதான அதிருப்தி ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 80 சதவீதமாய் இருக்கிறது. ட்ரம்ப் போரை நோக்கித் திரும்பியிருப்பது இந்த அரசியல் மற்றும் வர்க்கப் பதட்டங்களை மிகப்பெரும் அளவில் கூர்மைப்படுத்தியிருக்கிறது. ஜேர்மனியில், சிரிய இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு வெறும் 26 சதவீத ஆதரவே இருக்கிறது, பிரான்ஸில், ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் லுக் மெலோன்சோன் ட்ரம்ப்பின் ஏவுகணைத் தாக்குதலை விமர்சனம் செய்த பின்னர் அவருக்கான ஆதரவு துரிதமாக ஏற்றம் கண்டு வருகிறது.

மேலும், உச்சிமாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க முதலாளித்துவங்கள் இடையிலான ஒரு வர்த்தகப் போரின் ஆரம்ப கட்டங்கள் கட்டவிழத் தொடங்கின. அமெரிக்காவுக்கான ஜேர்மன் கார் ஏற்றுமதிகளுக்கு கடுமையான சுங்க வரி விதிக்க ட்ரம்ப் அச்சுறுத்திய சற்று காலத்திற்குப் பின்னர், ஜேர்மன் உருக்கு தயாரிப்பு நிறுவனமான Salzgitter, அமெரிக்காவின் வணிகத் துறை ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் பெல்ஜிய உருக்கு ஏற்றுமதிக்கு விதித்திருக்கும் சுங்க வரிகளுக்கு நேற்று கண்டனம் தெரிவித்தது. “எங்களது தயாரிப்புகளுக்கு வரிகள் விதிக்க எடுக்கப்பட்டுள்ள முடிவும் அதன் அளவும் எங்களால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

உலக மக்கள் தொகையினர் முதலாளித்துவ அமைப்பு முறையின் ஒரு பேரழிவுகரமான முறிவுக்கு முகம்கொடுத்துள்ளனர். முந்தைய நூற்றாண்டில் இரண்டு முறை உலகப் போர்களாய் வெடித்திருந்த, சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான பங்கீட்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் இடையிலான கடுமையான மோதலானது, மீண்டும் அதை நிகழ்த்திக் காட்ட அச்சுறுத்துகிறது.

Süddeutsche Zeitung (SZ) இது விடயத்திலான தனது தலைமைக் கருத்தை செவ்வாய்க்கிழமையன்று “போர் குறித்த சிந்தனைகள்” என்ற அசாதாரண தலைப்பின் கீழ் வெளியிட்டது. இந்த முன்னணி ஜேர்மன் தினசரியானது அமெரிக்காவுடனான ஒரு இராணுவ மோதலுக்கு தயாரிப்பு செய்தாக வேண்டும் என்று ஏறக்குறைய அறிவிக்காத குறைதான்: “வர்த்தக போரால் அச்சுறுத்தப்படும் ஒருவருக்கு தற்காப்பு மூலோபாயம் அவசியமாகிறது... இதுவே உலகமயமாக்கலுக்குப் பிந்தைய சகாப்தத்தின் தர்க்கமாகும். ஜேர்மனி தனது மிக முக்கியமான கூட்டாளிக்கு எதிராய் தற்காத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.”

SZ, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளாக கூட்டாளிகளை தேடுமாறு ஆலோசனையளித்ததோடு, ஆத்திரமூட்டும் வகையில், அமெரிக்காவிற்குள்ளான பிளவுகளை சுரண்டிக் கொள்வதற்கும் ஆலோசனையளித்தது. அது எழுதியது: “அமெரிக்க மாநிலங்கள் மத்தியிலும் கூட ஜேர்மனி கூட்டாளிகளை கண்டறிய முடியும். தெற்கு கரோலினா, டென்னஸி மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களில் BMW, Volkswagen மற்றும் Daimler ஆகிய நிறுவனங்கள் மிக முக்கியமான வேலைவாய்ப்பளிப்பவர்களாக உள்ளதை அம்மாநிலங்களின் ஆளுநர்களும் செனட்டர்களும் நன்கு அறிவார்கள்.”

இராணுவ ரீதியாக ரஷ்யாவுக்கு எதிராக வேறு உதவியற்ற நிலையில் அமெரிக்காவுடனான தனது உறவையே இன்னும் சார்ந்ததாய் இருக்கின்ற ஐரோப்பாவை விட்டு விலகிவிடும் அச்சுறுத்தலை மேற்கொள்வதாக, அமெரிக்க அதிகாரிகள் மீது ஐரோப்பிய அதிகாரிகள் கிட்டத்தட்ட பகிரங்கமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். அமெரிக்க வரிசெலுத்துவோர் உக்ரேன் —இங்கு 2014 இல் அமெரிக்காவும் ஜேர்மனியும் ஒரு ரஷ்ய ஆதரவு அரசாங்கத்தை ஒரு பாசிசத் தலைமையிலான சதியின் மூலம் கவிழ்த்தன— குறித்து ஏன் கவலை கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலரான றெக்ஸ் ரில்லர்சன் தன்னிடம் கேட்டதாய் எய்ரோ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிகாரிகள் ஐரோப்ப்பிய பாதுகாப்பு குறித்து நம்பகமான வகையில் உறுதியளிப்பதற்கு இனியும் தயாராக இல்லாத நிலையையே, இந்தக் கேள்வி சுட்டிக்காட்டுவதாக எய்ரோ வெளிப்படக் கண்டார். “ஐரோப்பாவை பாதுகாப்பானதாக மற்றும் அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் வலிமையானதாக வைத்திருப்பது அமெரிக்க வரியளிப்பாளர்களின் நலன்கள் சம்பந்தப்பட்டதே” என்று ரில்லர்சனுக்கு தான் பதிலளித்தாக எய்ரோ தெரிவித்தார். “ஐரோப்பா மிகப் பலவீனமானதாக, பல சிறு பாகங்களாய் பிளவுபட்டதாக, மற்றும் வலிமையற்றதாக இருப்பதை நீங்கள் விரும்பப் போவதில்லை.”

ஐரோப்பாவின் பாதுகாப்புச் செலவினங்களில் பாரிய அதிகரிப்புகளுக்கும், ஜேர்மனியின் மீள்-இராணுவமயமாக்கத்திற்கும், பிரான்சில் கட்டாய இராணுவச் சேவை மறு அறிமுகம் செய்யப்படுவதற்கான அழைப்புகளுக்கும் உந்திக் கொண்டிருக்கின்ற சக்திவாய்ந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் மேற்பரப்புக்கு வந்து கொண்டிருக்கின்றன. “500 மில்லியன் குடிமக்களைக் கொண்டிருக்கும் ஐரோப்பியர்களாகிய நாம், பக்கவாட்டில் அமர்ந்து கொண்டு சர்வதேச அரசியல் கட்டவிழ்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மாறாக சர்வதேச அரங்கில் ஒரு நம்பிக்கையுடனான வீரராக நாம் உருவெடுத்தாக வேண்டும்” என்று காப்ரியல் லூக்காவிற்கு கிளம்பும் முன்னதாக ஜேர்மன் தினசரியான Tagesspiegel இல் ஒரு கருத்துரையில் எழுதியிருந்தார்.

காப்ரியலும் ஐரோப்பிய சக்திகளும் ட்ரம்ப்பின் வான் தாக்குதலை ஆதரித்து அசாத்தை தூக்கியெறிவதற்கு நெருக்குதலளிக்கும் போது, அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நண்பர்களாய் அதைச் செய்யவில்லை. மாறாக அவர்கள் தமது முறைக்காக காத்திருக்கிறார்கள், இப்போதைக்கு அமெரிக்கா தலைமையிலான சூறையாடலின் மூலமாக தமது நலன்களை முன்செலுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில், உழைக்கும் மக்களின் நலன்களை விலையாகக் கொடுத்து நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற தங்கள் மீள்-இராணுவமயமாக்கல் வேலைத்திட்டங்கள், தமது சொந்த ஏகாதிபத்திய நலன்களை இன்னும் திறம்பட்ட வகையில் திட்டவட்டம் செய்வதற்கு தங்களை அனுமதிக்கின்ற வரையில், அமெரிக்காவுடனான தங்களது தீர்மானகரமான வலிமை தொடர்பான சோதனை வரப் போவதில்லை என்று அவர்கள் நம்புகின்றனர்.