ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

What did the UK government know?
British intelligence received warnings that Manchester bomber was plotting attacks

இங்கிலாந்து அரசாங்கத்திற்கு என்ன தெரிந்திருந்தது?

மான்செஸ்டர் குண்டுதாரி தாக்குதல்களுக்குத் திட்டமிட்டு வந்தமை குறித்த எச்சரிக்கைகளை பிரிட்டிஷ் உளவுத்துறை பெற்றிருந்தது

By Laura Tiernan
29 May 2017

மான்செஸ்டர் தற்கொலை குண்டுதாரி சல்மான் அபேடி ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குத் திட்டமிட்டு வந்ததன் மீது இங்கிலாந்தின் MI5 உளவுத்துறை முகமைக்கு முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்திருந்ததாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ளன.

மே 22 இல், அபேடி அமெரிக்க பாப் இசைப் பாடகர் அரினா கிராண்ட் இன் மான்செஸ்டர் இசைநிகழ்ச்சி அரங்கிற்கு வெளியே உலோகத்துண்டுகள் நிரப்பிய திடீரென வெடிக்கும் ஒரு கருவியை வெடிக்கச் செய்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் குழந்தைகள் என்பதுடன், 116 பேர் காயமடைந்துள்ளனர்.

ஞாயிறன்று Mail பத்திரிகை செய்தியின்படி, “இங்கிலாந்தில் ஓர் அரசியல் இலக்கை தாக்க திட்டமிட்டு வரும் வட ஆபிரிக்க இஸ்லாமிய அரசு (IS) பிரிவின் பாகமாக அபேடி இருக்கிறார் என்பதை MI5 க்கு FBI கூறியிருந்தது.”

2016 இல் FBI அதன் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அபேடியை நிறுத்திய பின்னர், இந்த ஜனவரியில் அது இத்தகைய எச்சரிக்கைகளை MI5 க்கு வழங்கி இருந்தது. ஒரு பெயர் வெளியிட விரும்பாத "பாதுகாப்புத்துறை ஆதாரநபர்" Daily Mail க்கு கூறுகையில், அபேடி "மான்செஸ்டரை மையமாக கொண்ட வட ஆபிரிக்க பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர், அக்கும்பல் இந்நாட்டில் ஓர் அரசியல் இலக்கை தேடிக்கொண்டிருப்பதாக" MI5 க்கு FBI தகவல் அளித்திருந்ததாக தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறினார்: “இந்த அமெரிக்க உளவுத்தகவலைத் தொடர்ந்து, அபேடியும் அக்கும்பலின் ஏனைய அங்கத்தவர்களும் MI5 ஆல் கூர்மையாக கண்காணிக்கப்பட்டார்கள். அபேடி ஓர் அரசியல் பிரமுகரைப் படுகொலை செய்ய திட்டமிட்டு வந்ததாக அச்சமயம் கருதப்பட்டது. ஆனால் இந்த விசாரணையில் இருந்து எதுவும் கண்டறியப்படவில்லை என்பதோடு, துயரகரமாக, அவர் இலக்குகளை மாற்றி விட்டிருந்தார்.”

அபேடி ஒரு "தனித்த தாக்குதல்தாரியாக" செயல்பட்டார் என்றும், பிரிட்டனின் பாதுகாப்பு சேவைகளுக்கு "ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கே" அவரைத் தெரியும் என்றும் கூறிய பிரதம மந்திரி தெரேசா மே இன் கூற்றுக்கள் சிதைந்து போயுள்ளன. ஒரு பிரிட்டிஷ் "அரசியல் பிரமுகரை" —அதிலும் கருதத்தக்க வகையில் பிரதம மந்திரி, வெளியுறவுத்துறை செயலர் அல்லது அரசியையே கூட உள்ளடங்கி இருக்கலாம் என்ற பட்சத்தில்— படுகொலை செய்ய திட்டமிட்டு வந்த ஒருவர் கண்காணிப்பிலிருந்து "நழுவி" இருக்கலாம் என்பதும் சற்றும் நம்பத்தகுந்ததல்ல.

அபேடி ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்காக MI5 ஆல் நடைமுறையளவில் சுதந்திரமாக விடப்பட்டிருந்தார். இஸ்லாமிய பயங்கரவாத வலையமைப்புகளை விதைப்பதிலும், இத்தகைய "உடைமைகளை" லிபியா மற்றும் சிரியாவில் அவர்களது ஆட்சி மாற்ற நடவடிக்கைகளின் பாகமாக பாதுகாப்பதிலும், பிரிட்டிஷ் உளவுத்துறை சேவைகள் மற்றும் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் வகித்த பாத்திரம் குறித்து அதிகரித்தளவில் வெளிவந்து கொண்டிருக்கும் ஆதரங்களுடன் Daily Mail இன் வெளியீடுகளும் சேர்கின்றன.

டேவிட் கேமரூனின் முந்தைய பழமைவாத அரசாங்கம், கேர்னல் மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து வெளியேற்றும் இராணுவ நடவடிக்கைகளின் பாகமாக 2011 இல் லிபிய இஸ்லாமிக் போராளிகள் குழு (LIFG) அங்கத்தவர்களை லிபியாவிற்கு பயணிக்க அனுமதித்து, அது பின்பற்றிய கொள்கையை Middle East Eye (MEE) பத்திரிகை, "கதவைத் திறந்துவிடும்" (open door) கொள்கை என்று வர்ணித்து வியாழனன்று ஒரு செய்தியில் அதை அம்பலப்படுத்தியது. அந்த அரசாங்கத்தில் மே உள்துறை செயலராக இருந்தார். அபேடியின் பெற்றோர்கள் இருவருமே LIFG இன் அங்கத்தவர்களாக இருந்தார்கள். இவர்களால் இங்கிலாந்து, லிபியா, சிரியா மற்றும் ஏனைய இடங்களுக்கும் சுதந்திரமாக பயணிக்க முடிந்திருந்தது.

முன்னாள் கிளர்ச்சிகர போராளிகளுக்கு கடவுச்சீட்டுக்கள் வழங்கியும் மற்றும் அவர்கள் வெளியேறுவதற்கு வசதி செய்தளித்தும், பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் அவர்களது இயக்கங்களுக்கு எவ்வாறு உதவியது என்பதை MEE ஆல் நேர்காணல் செய்யப்பட்ட அந்த முன்னாள் கிளர்ச்சிகர போராளிகள் விவரித்தனர். 2011 இல் லிபியாவிற்குப் பயணம் செய்திருந்த பெலால் யூனிஸ் கூறுகையில், 2011 இன் ஆரம்பத்தில் லிபியாவிற்கான ஒரு பயணத்திற்குப் பின்னர் விசாரணைக்காக அவரைக் கைது செய்திருந்த ஒரு MI5 அதிகாரி, அவரிடம் "நீங்கள் போர்களத்திற்குச் செல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டதாக தெரிவித்தார்.

“அதற்கு பதில் கூற நான் நேரமெடுத்துக் கொண்ட அந்த வேளையில், அவர் என்னை நோக்கி திரும்பி கடாபிக்கு எதிராக சண்டையிடுபவர்களுடன் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்,” என்று யூனிஸ் MEE க்குத் தெரிவித்தார்.

அதற்கடுத்து மே 2011 இல் லிபியாவிற்கான ஒரு பயணத்தின் போது, அவர் பிரிட்டிஷ் விமான நிலைய ஓய்வறையில் பயங்கரவாத-தடுப்பு பொலிஸால் விசாரிக்கப்பட்டார், ஆனால் MI5 அதிகாரி ஒருவர் குறுக்கிட்டதன் பேரில், “சுதந்திரமாக வெளியில்" அனுப்பப்பட்டார். இதன் பின்னர் அந்த MI5 அதிகாரி யூனிஸை அழைத்து அவர் அப்பிரச்சினையைச் "சரி செய்து விட்டதாக" தெரிவித்திருந்தார்.

லிபியாவிற்கு பயணம் செய்தவர்களில் பலர், முன்னதாக பயங்கரவாத-தடுப்பு கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ், அவர்களது நகர்வுகள் மற்றும் இணைய நடவடிக்கைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளைப் பெற்றிருந்தவர்களாவர். இருப்பினும் கடாபியை பதவியிலிருந்து கவிழ்ப்பதற்காக அமெரிக்க மற்றும் பிரெஞ்சு முயற்சிகளில் பிரிட்டன் இணைந்ததும், 2011 இல், இந்த கட்டுப்பாட்டு ஆணைகள் நீக்கப்பட்டன.

கடந்த திங்கட்கிழமை இரவு தங்களின் நேசத்திற்குரியவர்களை இழந்த குடும்பங்கள் உட்பட பிரிட்டிஷ் மக்களுக்குத் தெரியாத விதத்தில், லிபியாவிற்குள் கிளர்ச்சிகர போராளிகளை அனுப்பிய நடவடிக்கைகளுக்கான மையமாக மான்செஸ்டர் இருந்துள்ளது. யூனிஸ் MEE செய்தியாளர்களுக்கு கூறுகையில், “இங்கிருந்து சென்றவர்களில் பெரும்பான்மையினர் மான்செஸ்டரில் இருந்து சென்றவர்கள்,” என்றார். நேர்காணல் செய்யப்பட்ட மற்றொருவர், அதேயாண்டு மிஸ்ரடாவில் உள்ள கிளர்ச்சியாளர் முகாமிற்கு விஜயம் செய்தபோது அவர் எதிர்கொண்ட புதிதாக சேர்க்கப்பட்ட இளைஞர் குறித்து கூறுகையில், “அவர்கள் சரியான மான்செஸ்டர் உச்சரிப்புகளைக் கொண்டிருந்தனர். என்றார்.

பிரிட்டனில் பிறந்த மற்றொரு போராளி MEE க்கு கூறுகையில், அல் கொய்தா மற்றும் அமெரிக்க மற்றும் பிரிட்டனால் ஆதரிக்கப்பட்ட அதன் துணை அமைப்புகளும் இஸ்லாமிய குழுக்களும், பஷர் அல்-அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்து கவிழ்க்க சண்டை நடந்து வரும் சிரியாவிற்கு பயணம் செய்ய அவர்களும் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார். அபேடியே கூட சிரியாவுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார். “எந்த விசாரணையும் இல்லை,” என்று யூனிஸ் தெரிவித்தார். பிரிட்டனைச் சேர்ந்த மற்றொரு லிபியர் கூறுகையில், SAS மற்றும் ஐரிஷ் சிறப்புப்படைகள் இரண்டினாலும் போராளிகள் பயிற்சி பெறுவதைக் காட்டும், நியமன மற்றும் சந்தைப்படுத்தும் காணொளி தொகுப்புகளைச் சீரமைக்க அவர் பெங்காசியில் பிரிட்டிஷ் SAS க்கு வேலை செய்திருந்ததாக தெரிவித்தார்.

பிரிட்டனின் வெளிநாடுகளுக்கான உளவுத்துறை சேவை MI6, லிபியா மற்றும் சிரியாவின் பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பில் இருந்ததாக சனிக்கிழமை Daily Mail இல் பீட்டர் ஓபர்ன் குற்றஞ்சாட்டினார். Spectator சஞ்சிகையின் துணை ஆசிரியரும், Daily Telegraph இல் முன்னாள் தலைமை அரசியல் விமர்சகருமான ஓபர்ன் எழுதினார், “இந்த நாட்டை அழிப்பதற்கான அவர்களின் முயற்சியில் எதையும் செய்ய, யாரையும் —சின்ன குழந்தைகளையும் கூட— கொல்ல தயாராக இருந்த, பிரிட்டனில் பிறந்த ஜிஹாதிஸ்டுகளின் ஒரு தலைமுறையை உருவாக்குவதில் MI6 அதிகாரிகள் உடந்தையாய் இருந்தனர்.

“திங்களன்று இரவு மான்செஸ்டர் அரங்கில் சல்மான் அபேடியின் கொடூரமான கைவேலை, பகுதியாக, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க விவகாரங்களில் MI6 தலை நுழைத்ததன் ஒரு நேரடியான விளைவாகும் என்று ஊகிப்பதற்கு அங்கே எல்லா காரணங்களும் உள்ளன,” என்றார்.

டோனி பிளேயரின் தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ் MI6 இன் பாத்திரத்தை ஓபர்ன் சுட்டிக்காட்டினார், அப்போது தொழிற் கட்சியின் முன்னாள் உளவுத்துறை தலைவர்கள், சர் ரிச்சார்ட் டீர்லவ் மற்றும் சர் ஜோன் ஸ்கார்லெட், “தொழிற் கட்சி பிரதம மந்திரியின் போர்வெறி கொண்ட குழுவிற்கான ஒரு பிரச்சார கருவியாக மாற [MI6] ஐ அனுமதித்திருந்தனர்."

சதாம் ஹூசைனிடம் இருந்திராத பாரிய பேரழிவுகரமான ஆயுதங்களைக் குறித்த இழிவுகரமான ஆவணங்களை ஸ்கார்லெட் தான் வரைவு செய்தார், இவை பிரிட்டனை போருக்குள் கொண்டு செல்ல பிளேயரால் பயன்படுத்தப்பட்டன.

“ஜிஹாதிஸ்ட் அமைப்புகளில் இணைவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட" “நூற்றுக்கணக்கான" பிரிட்டிஷ் குடிமக்களை சுட்டிக்காட்டி, ஓபர்ன் எழுதுகையில், “இந்த தோல்வியில் இருந்து MI6 படிப்பினைகளைப் பெற தவறிவிட்டது,” என்றார்.

LIFG மற்றும் ஏனைய அல் கொய்தா தொடர்புபட்ட குழுக்களுடன் பிரிட்டனின் கீழ்தரமான கையாளுகைகள் 1990 கள் வரை நீள்கிறது. சோவியத் ஒன்றியத்தை நிலைகுலைப்பதன் பாகமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் கட்டமைக்கப்பட்ட முஹாஜிதீன்களில் இருந்து தான் LIFG வளர்ந்தது. அப்போதிருந்து LIFG இன் தலைவிதி, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வெளியுறவு கொள்கை மாற்றங்களை நேரடியாக பின்தொடர்ந்துள்ளது.

மூத்த பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் MI5 அதிகாரி டேவிட் ஷ்யேலெர் ஆகியோரது கசிவுகளின்படி, கடாபியைப் படுகொலை செய்யும் முயற்சிக்காக 1996 இல் பிரிட்டிஷ் உளவுத்துறை முகமைகள் LIFG தலைவர்களுக்கு பெரும் தொகைகளை வழங்கின. 2004 இல், லிபிய ஆட்சியுடனான பிளேயர் அரசாங்கத்தின் சமரசத்திற்குப் பின்னர், LIFG தலைவர் அப்தெல்-ஹகிம் பெல்ஹாஜ் மற்றும் அவர் நிர்வாகி சமி அல்-சாடியைப் பிடிக்க MI6 உதவியது. பிரிட்டிஷ் வரலாற்றாளரும் எழுத்தாளருமான மார்க் குர்டிஷ் கருத்துக்களின்படி, பெல்ஹாஜ் சிஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்பட்டு, பின்னர் தனிச் சிறைச்சாலையில் ஆறாண்டுகள் செலவிட திரிப்போலிக்கு அனுப்பப்பட்டார், அங்கே MI6 முகவர்கள் அவரை விசாரணை செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2011 இல், அரேபிய எழுச்சிக்கு விடையிறுப்பாக, அமெரிக்காவும் பிரிட்டனும் மத்திய கிழக்கில் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்காக நீண்டகாலமாக நிலுவையில் இருந்த திட்டங்களை செயலுக்குக் கொண்டு வந்தன. LIFG தலைவர்களுக்கு எதிரான பயங்கரவாத-தடுப்பு கட்டுப்பாட்டு ஆணைகள் நீக்கப்பட்டன, ஏனென்றால், குர்டிஷ் கருத்துப்படி, பிரிட்டிஷ் அரசாங்கம் "அதன் நலன்கள் மீண்டுமொருமுறை —பிரதானமாக எண்ணெய் சம்பந்தப்பட்ட நலன்கள்— லிபியாவில் இருந்த இஸ்லாமிய சக்திகளுடனான நலன்களுடன் பொருந்தி இருந்ததாக கண்டது.”

சிரியா, லிபியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் எண்ணற்ற ஏனைய நாடுகள் மீது படையெடுத்து ஆக்கிரமித்ததற்கு குறைவில்லாத விதத்தில், மான்செஸ்டரில் கொல்லப்பட்ட 22 பேரும் மற்றும் காயமடைந்த பலரும் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்திய சதிக்குப் பலியானவர்கள் என்பதோடு, இவற்றை "துணை சேதமாக" கருத வேண்டும்.

இந்த அதிர்ச்சியூட்டும் வெளியீடுகள் பதிலளிக்கப்பட வேண்டிய பல கேள்விகளை எழுப்புகின்றன:

கடந்த வாரம் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின், காலனித்துவ-பாணியிலான போர்களில் பிரிட்டன் சம்பந்தப்பட்டிருப்பதற்கும் மற்றும் பயங்கரவாத அபாயம் உயர்ந்திருப்பதற்கும் இடையிலான வெளிப்படையான தொடர்பைச் சுட்டிக்காட்டி, ஊடகங்களின் வெறுப்பை சம்பாதித்தார். கார்டியன் அத்தாக்குதல்களுக்கு வழிகாட்டி இருந்தது, ஜொநாதன் ஃப்ரீட்லாந்து வலியுறுத்துகையில், “பயங்கரவாத தாக்குதல்கள் வெளியுறவு கொள்கை சம்பந்தப்பட்டதென யோசிப்பது பைத்தியக்காரத்தனமானது,” என்றார், மற்றும் பௌல் மாசன் அறிவிக்கையில், “இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு நேரடியாக மேற்கத்திய சாகச போர்முறையைக் குறைகூறும் இந்த 'திரும்பி தாக்கும் தத்துவம்' (blowback theory), இவ்விடயத்தில் கூறுவதற்கு எளிமையாக இருந்தாலும் பொருத்தமின்றி உள்ளது,” என்றார்.

ஆனால் ஆக்கிரமிப்பு போர்களைத் தொடங்கியதிலும் மற்றும் கூடுதல் ஆதாரவளங்களாக படை மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்க வாக்குறுதியளித்ததிலும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த தொழிற் கட்சி மற்றும் டோரி அரசாங்கங்களே அரசியல் பொறுப்பாகின்றன என்பதைக் குறித்து கோர்பின் வாய்திறக்கவில்லை. அபேடியின் தாக்குதல் குறித்து MI5 க்கு முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்தது மீதான வெளியீடுகள் குறித்து அவர் இதுவரையில் ஒன்றுமே கூறவில்லை.