ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On the eve of the French presidential election

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் பொழுதில்

Alex Lantier
6 May 2017

பிரான்சில், ஒரு முன்கண்டிராத அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைத்திருக்கும் ஒரு அவசரகாலநிலையின் கீழும் நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் இறுதிச் சுற்றில் பத்து மில்லியன் கணக்கான மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய அரசாங்கத்திற்கான பிரான்சின் இரண்டு பாரம்பரியமான கட்சிகளின் வேட்பாளர்களும் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ஆயினும், வாக்காளர்கள் முகம்கொடுக்கும் தெரிவானது பிரான்சின் ஆளும் உயரடுக்கின் மீதான பதிலளிக்க முடியாத குற்றப்பத்திரிகையை கொண்டிருக்கிறது.

ஒரு பக்கத்தில், இரண்டாம் உலகப் போரின் சமயத்து பிரான்சின் நாஜி ஒத்துழைப்புவாத ஆட்சியின் வழிவந்த தேசியமுன்னணியைச் சேர்ந்த மரின் லு பென் நிற்கிறார். போர் மற்றும் பாதுகாப்புவாதத்தின் ஒரு தேசியவாத “முதலில் அமெரிக்கா” வேலைத்திட்டத்தின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப் தேர்வாகியிருந்ததை மரின் லு பென் பாராட்டியிருந்தார் என்பதோடு, பிரான்ஸின் பிரதான வர்த்தகக் கூட்டாளியான ஜேர்மனிக்கு மிக அதிகப்பட்சமான பொருளாதார சேதாரத்தை உண்டாக்கும் வகையில் பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோவையும் கைவிடுவதற்கு அழைப்புவிடுக்கிறார். சொந்த நாட்டில் ஒரு பாசிச போலிஸ் சர்வாதிகாரத்தை அமைப்பதற்கும், புலம்பெயர்வை தடைசெய்வதற்கும், பாரிய சோதனைகளை நடத்துவதற்கும் மற்றும் பிரெஞ்சுக் குழந்தைகளாக இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாக கல்வி கற்பதை நிறுத்துவதற்கும் அவர் சோசலிஸ்ட் கட்சியின் அவசரகால நிலையையும் பாரிய மின்னணு வேவு எந்திரத்தையும் பயன்படுத்திக் கொள்வார்.

லு பென்னின் எதிராளியான, PS ஆதரவு பெற்ற வங்கியாளரும் இப்போது ஜெயிக்கும் நிலையில் இருப்பவராக கருதப்படுபவருமான இமானுவல் மக்ரோன் FNக்கான ஒரு மாற்றீடு அல்ல. ஜேர்மனியினதும், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினதும் ஒரு கூட்டாளியான மக்ரோன், சிரியா, வடகொரியா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போர் முனைப்புக்கு -இது அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான போருக்கு தூண்டிவிட அச்சுறுத்துகிறது- ஆதரவளிக்கிறார் என்பதோடு கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கும் அழைப்பு விடுக்கிறார். சொந்த நாட்டில் அவர் அவசரகாலநிலையை தொடர்ந்து பராமரிக்கவும், பொது சுகாதார பராமரிப்பு மற்றும் ஓய்வூதியங்கள் உள்ளிட இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய தொழிலாளர்கள் பல தலைமுறை காலமான போராட்டங்களின் மூலமாக பெற்றெடுத்த ஒப்பந்தங்கள் மற்றும் சமூக உரிமைகளை கிழித்தெறிவதற்கும் அவசரகால நிலையையும் அதனுடன் PS இன் வெறுப்புக்குரிய தொழிலாளர் சட்டத்தையும் பயன்படுத்துவதற்கும் நோக்கம் கொண்டுள்ளார்.

எந்த வேட்பாளர் வென்றாலும், நிதி மூலதனத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்கின்றதும், நாட்டிற்குள் வர்க்கப் போர் மற்றும் எல்லைகளுக்கு வெளியே ஏகாதிபத்தியப் போர் ஆகியவற்றின் ஒரு வேலைத்திட்டத்திற்கு அர்ப்பணித்து கொண்டதுமான ஒரு அரசாங்கத்தாலேயே பிரான்ஸ் ஆளப்படுவதாய் இருக்கும். பத்துக்கு ஏழு வாக்காளர்கள், வேட்பாளர்களின் தெரிவு குறித்து கோபம் கொண்டிருக்கும் நிலையில், பிரான்ஸிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் புரட்சிகரப் பரிமாணங்களுடனான வர்க்க மோதலானது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஸ்ராலிஸ்ட்டுக்கள் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததற்கு பிந்தைய கால்நூற்றாண்டு கால போர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கு பின்னர், பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பேர் வர்க்கப் போராட்டம் வாழ்வின் அன்றாட யதார்த்தமாக இருப்பதாகக் கூறுகின்றனர். 2008 வோல் ஸ்டீரீட் பொறிவுக்குப் பின்னர் கட்டவிழ்ந்திருந்த சமூக மற்றும் பொருளாதார பொறிவைத் தவிர்த்த வேறு எதனையும் அறிந்திராத இளைஞர்கள் மத்தியில், ஐயத்திற்கிடமில்லாத ஒரு புரட்சிகர மனோநிலை பெருகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நூறாயிரக்கணக்கான ஐரோப்பிய இளைஞர்கள் மத்தியில் எடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் “Generation What” கருத்துக்கணிப்பில், 34 வயதுக்கு குறைந்த பிரெஞ்சு இளைஞர்களில் 61 சதவீதம் பேர் தாங்கள் அரசியல் அமைப்புமுறைக்கு எதிரான ஒரு “பெரும் அளவிலான எழுச்சி”யில் பங்கேற்க விருப்பத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். பிரிட்டன், ஸ்வீடன், நோர்வே, ஃபின்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல், ஹங்கேரி, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் 60 சதவீதத்துக்கு அதிகமான இளைஞர்கள் இதே பதிலை அளித்திருந்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (The Parti de l’égalité socialiste - PES) ஞாயிறன்றான இரண்டாம்-சுற்று வாக்களிப்பை செயலூக்கத்துடன் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது. இந்த நிலைப்பாடானாது, தனிநபர்கள் வாக்களிக்காது விடுவதற்கான அழைப்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இரண்டு வேட்பாளர்களையும் எதிர்ப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி (PES) விடுக்கும் அழைப்பானது, அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் வேரூன்றியதாகும். ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்து சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒட்டுமொத்த அனுபவமும், ஒரு முதலாளித்துவக் கட்சியுடன் தேர்தல் கூட்டணிகளுக்கு நுழைவதன் அரசியல்ரீதியான மரணகரமான பின்விளைவுகளை எடுத்துக்காட்டியிருக்கிறது. ஒரு முதலாளித்துவக் கட்சி மிகவும் பிற்போக்கானதாய் இருப்பதாக சொல்லி அதன் வெற்றியைத் தடுக்க, நிதி மூலதனத்தின் வேறொரு பிற்போக்குக் கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படியச் செய்வதானது மீண்டும் மீண்டும் அரசியல் பேரழிவுக்கே இட்டுச் சென்றிருக்கிறது. இந்த முறையும் அதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. இத்தகைய அரசியலுக்கு ஒரு அரசியல் தர்க்கமும் இருக்கிறது. மக்ரோன் தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது அரசாங்கத்தை தோற்கடிக்கவோ தூக்கிவீசவோ போராடக் கூடாது, இல்லையென்றால் FN அதிகாரத்துக்கு வந்து விடும் என்பதாக வரும்நாட்களில் தொழிலாளர்களிடம் கூறப்படும்.

தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற அரசியல் நெருக்கடியை தீர்க்கக் கூடியதான புத்திசாலித்தனமான தேர்தல் தந்திரம் என்று எதுவுமில்லை. தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பே சரியானது, ஏனென்றால் அது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்துவதோடு வரவிருக்கும் போராட்டங்களுக்கு அதனைத் தயாரிப்பு செய்கிறது.

இந்தப் போராட்டங்களுக்கு அவசியமான ஒரு மார்க்சிச மற்றும் சர்வதேச முன்னோக்கை வழங்குவதும் தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதுமே இன்றியமையாத பிரச்சினையாகும்.

சென்றமுறை 2002 இல் ஜோன்-மரி லு பென்னுக்கும் ஜாக் சிராக்குக்கும் இடையில் இறுதிச்சுற்று நடைபெற்ற போது FN ஐ தடுத்துநிறுத்துவதாகச் சொல்லி ஒரு வலது-சாரி அரசியல்வாதியின் பின்னால் PS உடன் இணைந்த “அதி இடது” கட்சிகளாக சொல்லப்படுபவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அணிவகுத்ததில் இருந்தே பிரான்சில் தொழிலாளர்கள் பலரும் இந்த முடிவுக்கு வந்து விட்டனர். தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் தீவிரப்பட்டமை, பாரம்பரிய ஆளும் கட்சிகள் மேலதிகமாய் வலது நோக்கி நகர்ந்தமை மற்றும் நவ-பாசிஸ்டுகளின் செல்வாக்கு தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டமை ஆகியவையே அதன் விளைவுகளாய் இருந்தன.

இந்த தேர்தல் மற்றும் அதனை உருவாக்கிய அரசியல் அமைப்புமுறை ஆகியவற்றின் ஒட்டுமொத்த பிற்போக்குத்தனமான கட்டமைப்பையும் நிராகரிப்பது அவசியமாகும். ஞாயிறன்றான இறுதிச் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதில் தொடங்கி தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான அரசியல் மாற்றீட்டினை முன்னெடுக்க வேண்டும்.

ஜோன் லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (UF) இயக்கம் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA)  போன்ற சக்திகள், “குறைந்த தீமை” வாதத்திற்கு தம்மை தகவமைத்துக் கொண்டு மக்ரோனுக்கு எதிராக இடதுபக்கத்தில் இருந்து எழுகின்ற புரட்சிகரமான எதிர்ப்பை தடுத்துநிறுத்துவதில் வெற்றிகாண்கிற மட்டத்திற்கு அவை FN ஐ வலுப்படுத்துவதை மட்டுமே செய்துகொண்டிருக்கின்றன என PES எச்சரிக்கிறது. தேர்தலில் இந்த போலி-இடது சக்திகளின் நிலைப்பாடானது தங்களை ஒரே ஸ்தாபகவிரோதக் கட்சியாக காட்டிக் கொள்வதற்கு நவ-பாசிஸ்டுகள் செய்கின்ற முயற்சிகளை வலுப்படுத்த மட்டுமே செய்யும் என்பதோடு, மக்ரோன் வெற்றிபெற்று அவரது தொழிலாள-வர்க்க விரோதக் கொள்கைகளின் காரணமாக பாரிய சமூக எதிர்ப்பு தூண்டப்படுகின்ற போது அந்த நவ-பாசிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரிப்பதற்கும் இது வழிசெய்து கொடுக்கும்.

மெலோன்சோனின் நிலைப்பாடானது அரசியல் பொறுப்புணர்வை கோழைத்தனமாய் கைதுறப்பதாகும். அவர் 20 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். அவ்வாறிருந்தும், மக்ரோனை ஆதரித்தால் தனது வாக்காளர்களிடையே தான் மதிப்பைத் தொலைக்க நேரும் என்று அஞ்சி மக்ரோனை வெளிப்படையாக ஆதரிக்க அவர் மறுக்கின்ற அதேநேரத்தில், மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலைத் தடுப்பதற்காக தன்னால் இயன்ற அத்தனையையும் அவர் செய்து கொண்டிருக்கிறார். ஜூன் சட்டமன்ற தேர்தல்களில் UF போட்டியிட அழைப்பு விடுத்ததன் பின்னர், மக்ரோனின் பிரதமராக தான் விருப்பத்துடன் இருப்பதாகவும் மெலன்சோன் அறிவித்தார்.

மக்ரோனின் தலைமையில் ஒரு பாரிய இராணுவப் பெருக்கமும் ஒரு மூர்க்கமான வெளியுறவுக் கொள்கையும் முன்னெடுக்கப்படுகின்ற அதே சமயத்தில், உள்நாட்டுக் கொள்கையை மெலோன்சோன் பார்த்துக் கொள்ள விரும்புகிறார் என்பதை தெளிவாக்கும் விதமான இத்தகையதொரு அறிக்கை, அமைதியையும் சமூக சமத்துவத்தையும் எதிர்நோக்கும் வாக்காளர்களுக்கு UFம் அதன் கூட்டாளிகளும் ஒரு முட்டுச் சந்தாகவே இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

PS மற்றும் LR ஐச் சுற்றிய பழைய அரசியல் அமைவு உருக்குலைகின்ற நிலையில், PS மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் இருந்து நனவுடன் முறித்துக் கொள்வதும் புரட்சிகரப் பாதைக்கு திரும்புவதுமே தொழிலாளர்களின் முன்னே இருக்கின்ற ஒரேயொரு பாதையாகும். பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் முற்றுமுதலான முட்டுச் சந்தானது, போர் மற்றும் சர்வாதிகாரம் என்ற அதலபாதாளத்திற்குள் மூழ்கிக் கொண்டிருக்கின்ற உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு மரண நெருக்கடியில் வேரூன்றியிருக்கிறது.

PS, மக்ரோன் மற்றும் FN ஆகியவற்றுக்கு எதிரான ஒரு புரட்சிகர எதிர்த்தாக்குதலை முன்னெடுப்பதற்கு, தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சொந்தக் கட்சியும் அரசியல் தலைமையும் அத்தியாவசியமாய் இருக்கிறது. அக்டோபர் புரட்சியின் இந்த நூறாவது ஆண்டில், 1917 இல் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் போல்ஷிவிக் கட்சியால் முன்வைக்கப்பட்ட சமரசமற்ற சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டம் மற்றும் ICFI ஆல் பாதுகாக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச பாரம்பரியம் ஆகியவற்றின் பிரதிநிதியாக சோசலிச சமத்துவக் கட்சி (PES) தன்னை முன்நிறுத்திக் கொள்கிறது. தேர்தல் குறித்த PES இன் பகுப்பாய்வுடன் உடன்படுகின்ற தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அதை ஆதரிக்க வேண்டும் என்றும், அதன் வேலைத்திட்டத்தை படித்து பிரான்சில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முன்னணிப்படையாக அதனைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் அதனுடன் கைகோர்க்க வேண்டும் என்றும் PES உரிமையுடன் அழைப்பு விடுகின்றது.