ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French media, political parties hush up PS government’s coup plan

பிரெஞ்சு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மறைக்க முயல்கின்றன

By Alex Lantier
20 May 2017

மே 7 ஜனாதிபதி தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சி (PS) ஆதரவு வேட்பாளர் இமானுவல் மக்ரோன் அல்லாமல் தேசிய முன்னணி வேட்பாளர் மரீன் லு பென் ஜெயித்திருந்தால், வெளியேறவிருக்கும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்ததாக வியாழனன்று L’Obs சஞ்சிகை வெளியிட்ட அசாதாரண செய்தி குறித்து பிரதான பிரெஞ்சு ஊடகங்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் வெள்ளியன்று தொடர்ந்து மௌனம் சாதித்தன.

பாசிச-எதிர்ப்பு போராட்டங்களை நசுக்கவும், மற்றும் வழமையான தேர்தல் கால நடைமுறைகளில் இருந்து உடைத்துக் கொள்ளவும் மற்றும் ஒரு சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரியை ஏற்குமாறு லு பென்னை நிர்பந்திக்கவும் பெருமளவிலான பொலிஸை அணிதிரட்டும் திட்டங்கள் செய்யப்பட்டிருந்தன. உயர்மட்ட அரசு அதிகாரி ஒருவர் L’Obs க்கு கூறியவாறு, “நாடு முழுமையாக செயல்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும். அரசின் பாதுகாப்பை உறுதி செய்து வைப்பது மட்டுமே அரசாங்கத்தின் ஒரே முன்னுரிமையாக இருந்திருக்கும்.” அதாவது, சோசலிஸ்ட் கட்சி பிரான்சில் வழமையான நாடாளுமன்ற ஆட்சி வடிவங்களை நடைமுறையளவில் இடைநிறுத்தி இருக்கும் என்கின்ற அதேவேளையில், லு பென்னை அதிகாரத்தில் தக்க வைப்பதும் மற்றும் இடதிலிருந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதுமே அதன் நோக்கமாக இருந்தது.

இச்செய்தியின் உள்ளடக்கத்தை அதிகாரிகள் மறுக்காததுடன் சேர்ந்து, இந்த செய்தி குறித்து முற்றிலும் கண்டுங்காணாமல் இருக்கும் மௌனமானது, பல அநாமதேயர்கள், சோசலிஸ்ட் கட்சியின் உயர்மட்ட ஆதார நபர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அமைந்திருந்த L’Obs இன் செய்தி, அடிப்படையில் சரியானதே என்பதற்கு தெளிவான அறிகுறியாக உள்ளது.

சோசலிஸ்ட் கட்சி அதிகாரிகள் நாடாளுமன்ற நடைமுறைகளை இடைநீக்கம் செய்து, பாரிய போராட்டங்களை நசுக்க உளவுத்துறை மற்றும் பொலிஸைக் கொண்டு ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக சர்வாதிகாரத்தை நிறுவ விரும்புகிறார்கள் என்பதை அச்செய்தியின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மே 7 இல் லு பென் வென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வெறுமனே ஒரு அனுமானம் அல்ல: அதாவது சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக சம்பளங்கள் மற்றும் ஒப்பந்தங்களை வெட்டுவதற்கும் மற்றும் கட்டாய இராணுவச் சேவையைக் கொண்டு வருவதற்குமான மக்ரோனின் திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. புதிய மக்ரோன் நிர்வாகம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதுபோன்ற முறைகளைப் பயன்படுத்த தயாரிப்பு செய்து வருகிறதா என்ற கேள்வி முன்வருகிறது.

தேசிய முன்னணி துணை-தலைவர் Louis Aliot வசம் அச்செய்தி குறித்து Le Figaro கேள்வி எழுப்பிய போது, அவர் கூறுகையில் அத்திட்டம் "மக்களின் இறையாண்மைக்கு விரோதமான நடவடிக்கை. … அது முதல் நடவடிக்கையாக இருந்திருக்கும் என்பதோடு, ஆயுதப்படையின் தலைமை தளபதியாக மரீன் லு பென்னுக்கு மிகப்பெரும் பிரச்சினையைக் கொண்டு வந்திருக்கும்,” என்றார். இருப்பினும் அவர் அதை "அனுமானிக்க முடியாத" நடவடிக்கை என்று குறிப்பிட்டு அத்திட்டத்தைக் குறைத்துக் காட்ட முயன்றதுடன், தேசிய முன்னணியின் வெற்றிக்குப் பின்னால் அங்கே பாரிய இடதுசாரி வன்முறை இருந்திருக்கும் என்ற சோசலிஸ்ட் கட்சியின் வாதங்களை உதறித்தள்ளினார்: “தொழிலாளர் சட்ட போராட்டங்களின் போது இருந்ததை விட ஒன்றும் அதிகமான [வன்முறை] இருந்திருக்காது,” என்றார்.

எவ்வாறிருப்பினும் சோசலிஸ்ட் கட்சியும் சரி மக்ரோனின் புதிய நிர்வாகத்தில் உள்ள சோசலிஸ்ட் கட்சி அதிகாரிகளும் சரி அச்செய்தியின் உள்ளடக்கத்தைக் குறித்து கருத்துக் கூறுவதோ அல்லது அதை மறுப்பதோ பொருத்தமானது என கருதவில்லை. அத்துடன் தொலைக்காட்சி செய்திகளும், Le Monde மற்றும் Libération போன்ற பிரதான சோசலிஸ்ட்-கட்சி செய்திதாள்களும் அச்செய்தியை தொடர்ந்து இருட்டடிப்பு செய்தன.

அரசியல் ஸ்தாபகமும் மற்றும் ஊடகங்களும், L’Obs கட்டுரையின் உள்ளடக்கங்களுக்கு —அதாவது வழமையான நாடாளுமன்ற நடைமுறைகளை இடைநிறுத்தம் செய்து இராணுவ சட்டத்தைக் கொண்டு வருவதற்கான திட்டங்களுக்கு— குறிப்பாக எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதாக நடந்து கொள்கின்றன. உலக சோசலிச வலைத் தள (WSWS) செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது, சோசலிஸ்ட் கட்சி (PS), புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (FI) இயக்கத்தின் பத்திரிகை தொடர்பு அதிகாரிகள் அச்செய்தி குறித்து கருத்துரைக்க மறுத்தனர் அல்லது அவசியமில்லை என்பதாக புறக்கணித்தனர்.

சோசலிஸ்ட் கட்சி பத்திரிகை தொடர்பு அதிகாரிகள், L’Obs செய்தியை அடிப்படையாக கொண்ட ஏனைய செய்திகளை அவர்கள் வாசித்திருந்ததாக ஒப்புக் கொண்ட போதினும், அவர்கள் WSWS செய்தியாளர்களுக்குக் கூறுகையில், L’Obs இன் செய்தியை அவர்கள் பார்க்கவில்லை என்று முற்றிலும் நம்ப முடியாதளவிற்கு தெரிவித்தனர்: “நான் L’Express மற்றும் Le Figaro இல் அது குறித்து பார்த்தேன், ஆனால் L’Obs இல் பார்க்கவில்லை,” என்றனர். பின்னர் அவர்கள் எல்லா கேள்விகளையும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி பேர்னார்ட் கசெனேவிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி, அவ்விடயம் குறித்து அவர்கள் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்தனர்.

பல்வேறு போலி-இடது அமைப்புகள் WSWS க்கு அளித்த அவற்றின் அறிக்கைகளில் மெத்தனமாக மற்றும் அலட்சியமாக இருந்தன. அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் FI பத்திரிகை தொடர்பு அலுவலக பிரதிநிதிகள் WSWS க்கு கூறுகையில், அவ்விடயத்தில் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை என்றும், அதுகுறித்து FI கருத்து கூறுவதாக இருந்தால், அதன் தேசிய செய்தி தொடர்பாளர்கள் அதை கூறி இருப்பார்கள் என்றனர். அவ்விடயத்தில் FI செய்தி தொடர்பாளர்கள் முற்றிலும் வாய்மூடி உள்ளனர்.

NPA பத்திரிகை தொடர்பு அதிகாரியை WSWS தொடர்பு கொண்ட போது, “நான் அதை பார்த்தேன். ஆனால் அது ஏதோவொரு வித பரபரப்பூட்டும் தலைப்பாக தெரிந்ததால், நான் அதை வாசிக்கவில்லை என்று கூறுவேன்,” என்றார். NPA இல் இருக்கும் வேறு யாரும் கூட அது குறித்து கருத்துரைக்க மாட்டார்கள் என்பதையும் அந்த நிர்வாகி சேர்த்துக் கொண்டார்.

சோசலிஸ்ட் கட்சியின் அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் NPA அங்கத்தவர்கள் சட்டங்களைக் கொண்டு அச்சுறுத்தப்பட்டு போராட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட்டிருப்பதை WSWS செய்தியாளர்கள் குறிப்பிட்டுக் காட்டி, இத்தகைய நிலைமைகள் இருந்தும், NPA ஏன் ஜனநாயக உரிமைகள் மீதான சோசலிஸ்ட் கட்சியின் தாக்குதல்கள் மீதான செய்திகளில் ஆர்வமின்றி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். NPA பத்திரிகை தொடர்பு அதிகாரி பதிலுரைக்கையில், “அது சரியான தருணம் சம்பந்தப்பட்ட விடயம், நாங்கள் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தைக் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. நான் அந்த கட்டுரையை பார்த்தேன், ஆனால் அதுவொருவித பரபரப்பூட்டும் ஏதோவொன்றைப் போல எனக்கு தோன்றியது,” என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “தேசிய முன்னணிக்கு எதிராக சோசலிஸ்ட் கட்சி ஓர் ஆட்சிக்கவிழ்ப்பை ஒழுங்கமைத்திருக்குமென நான் நினைக்கவில்லை, அவ்வாறான ஒன்றை எதிர்பார்க்கமுடியாது, தேசிய முன்னணி அதிகாரத்திற்கு வந்திருந்தால் அது அதே பலமான அணுகுமுறைகளை நமக்கு எதிராக பயன்படுத்தி இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்,” என்றார்.

எவ்வாறிருப்பினும், பிரான்சில் "அவசரகால நெருக்கடிநிலையில் ஒரு மாற்றம் இருந்தது. அடிநிலையிலுள்ள சித்தாந்தத்தில் அதிகளவில் பொலிஸ்-பாணியிலான திருப்பம் இருந்தது, இதை நாம் உள் அரசு என்றழைக்கலாம்,” என்றவர் ஒப்புக் கொண்டார். அந்த "உள் அரசு" பாதுகாப்பு சேவைகளைக் கொண்டு ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக ஜனநாயகக் ஆட்சியை இடைநிறுத்தம் செய்யக்கூடியதாக இருந்தால் என்று கேட்டபோது, அவர், “இன்று அவ்வாறில்லை. பின்னர் ஏற்படுமா என்பது எனக்குத் தெரியாது,” என்றார்.

சோசலிஸ்ட் கட்சி மற்றும் PS உடன் இணைந்துள்ள ஊடகங்களின் மௌனம் மற்றும் FI மற்றும் NPA இன் பொறுப்பற்ற நிலைப்பாட்டை தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தசாப்த காலமாக "இடது" என்பதாக காலங்கழித்து வந்துள்ள சக்திகள் மெத்தனமாக இருப்பதுடன், மக்ரோன் கீழ் தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்றதும் மற்றும் நடத்தப்பட்டுள்ளதுமான ஜனநாயக உரிமைகள் மீதான ஆழ்ந்த தாக்குதல்களுக்கு பெரிதும் அலட்சியமாக உள்ளன.

அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தம் செய்யும் மற்றும் தனிநபர்களை எதேச்சதிகாரமாக கைது செய்வதற்கும், போராட்டங்களுக்கு தடை விதிப்பதற்கும் மற்றும் தனிநபர்களை கைது செய்வதற்கும் அனுமதிக்கும் அவசரகால நெருக்கடி நிலையை சோசலிஸ்ட் கட்சி 2015 இல் திணித்தது. அது ஏற்கனவே சமூக போராட்டங்களை மூர்க்கமாக ஒடுக்கவும் மற்றும் தொந்தரவுக்கு உள்ளாக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முஸ்லீம்-விரோத மற்றும் இராணுவவாத சூழலைத் தூண்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சோசலிஸ்ட் கட்சிக்கு ஓர் அரசியல் பொறிவை உருவாக்கியது, அக்கட்சி ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றில் வெறும் 6 சதவீத வாக்குகளுடன் வெளியேற்றப்பட்டது.

இப்போது மக்ரோன், சிக்கனக் கொள்கை மற்றும் போருக்கான பரவலாக மக்கள் மதிப்பிழந்த ஒரு அரசியல் திட்டநிரலுடன், சோசலிஸ்ட் கட்சி மற்றும் வலதுசாரி அரசியல்வாதிகளின் ஒரு பலவீனமான கூட்டணியின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்துள்ளார். மக்ரோன், ஒடுக்குமுறைக்கான அவர் பாணிகளில் சோசலிஸ்ட் கட்சியை விட இன்னும் அதிக மூர்க்கமாக இருப்பார் என்பதற்கு அனைத்து அறிகுறிகளும் உள்ளன. L’Obs செய்தியும், மற்றும் இன்னும் அதிகளவில் மற்ற ஊடகங்களின் எதிர்வினைகளும், ஜனநாயக உரிமைகள் மீதான மக்ரோனின் தாக்குதல்களும், மற்றும் பிரான்சில் ஒரு சர்வாதிகாரத்தை திணிப்பதற்கான நகர்வுகளும் கூட, ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களிடம் இருந்து குறைந்த எதிர்ப்பை கூட எதிர்கொள்ளாது என்பதற்கு ஓர் எச்சரிக்கையாகும்.

அடிபணியா பிரான்ஸ் (FI) மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற போலி-இடது சக்திகளின் அறிக்கைகள் L’Obs கட்டுரையின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்டுகின்றன என்பது அவர்களது போலி-இடது வகைப்பட்ட அரசியலின் திவால்நிலையைப் பிரதிபலிக்கிறது. அண்மித்து ஓர் அரை நூற்றாண்டு காலமாக, இந்த சக்திகளும் மற்றும் அவற்றின் முன்னோடிகளும், மார்க்சிசம் மற்றும் அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை அவர்கள் நிராகரித்ததன் அடிப்படையில், 1971 இல் சோசலிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து அதை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்தன. இன்றோ, சோசலிஸ்ட் கட்சி பொறிகின்ற நிலையில் மற்றும் தீவிரமாக வலதை நோக்கி திரும்புகின்ற நிலையில், அவை இந்த பிரமாண்டமான அரசியல் நெருக்கடிகள் மற்றும் வரவிருக்கின்ற புரட்சிகர போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு வழங்குவதற்கு அவற்றிடம் ஒன்றும் இல்லை என்பதை எடுத்துக்காட்டி வருகின்றன.