ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ahead of May 7 runoff, French right-wing Les Républicains on verge of split

மே 7 இறுதிச் சுற்றை ஒட்டி, பிரெஞ்சு வலது-சாரி குடியரசுக் கட்சி உடைவின் விளிம்பில் நிற்கிறது

By Kumaran Ira
5 May 2017

முன்னாள் வங்கியாளர் இமானுவல் மக்ரோனுக்கும் தேசிய முன்னணித் தலைவர் மரின் லு பென்னுக்கும் இடையில் மே 7 அன்று ஜனாதிபதித் தேர்தல் இறுதிச் சுற்று நடைபெறவிருக்கும் நிலையில், பிரான்சின் வலது-சாரி குடியரசுக் கட்சியானது கோலிச இயக்கத்தை பிளக்க அச்சுறுத்துகின்ற ஒரு ஆழமான உடைவுக்கு முகம்கொடுத்து நிற்கிறது. கோலிச இயக்கத்தினதும் சோசலிஸ்ட் கட்சியினதும் பல்வேறு பிரிவுகளுக்கு இடையில் அதிகாரம் மாறிமாறிக் கொடுக்கப்பட்டு வந்ததான பிரான்சின் 1968க்குப் பிந்தைய இரண்டு கட்சி அமைப்புமுறை துரிதமாக உருக்குலைந்து கொண்டிருக்கிறது.

LR இன் ஜனாதிபதி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன், அமெரிக்காவுக்கு எதிராக ஜேர்மனி மற்றும் ரஷ்யாவுடன் ஒரு கூட்டணிக்கான ஆலோசனையை முன்வைத்த பின்னர் ஒரு ஊழல் மோசடியில் மாட்டிக் கொண்டதை அடுத்து, அவரது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் மோசமாக பாதிக்கப்பட்டது. முதல் சுற்றில் ஃபிய்யோனும் PS வேட்பாளரான பெனுவா அமோனும் வெளியேற்றப்பட்டதன் பின்னர், LR, மக்ரோனுக்கு வாக்களிக்க ஆலோசிப்பவர்களாகவும் நவ-பாசிச FNக்கு நெருக்கமான LR பிரிவுகளாகவும் கடுமையாக பிளவுபட்டிருக்கிறது.

இரண்டாம் சுற்றில் லு பென்னுக்கு வாக்களிக்க அழைப்பு விடுத்த செனட்டர்களும், ஜூன் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணத்துடன் இமானுவல் மக்ரோனின் En marche! இயக்கத்தில் வெளிப்படையாக இணைந்தவர்களும் வெளியேற்றப்பட இருப்பதாக புதன்கிழமையன்று LR இன் பிரச்சார மேலாளரான பிரான்சுவா பறுவான் தெரிவித்தார். முதல் சுற்றுக்குப் பின்னர், பறுவான், “தனிப்பட்ட முறையில்” அவர் மக்ரோனுக்கு வாக்களிக்க இருப்பதாக கூறினார். ஆயினும் பின்னர் அவர் RTL வானொலியில் பின்வருமாறு தெரிவித்தார்: “மரின் லு பென்னுடன் நெருங்குபவர்கள் அனைவருமே வெளியேற்றப்படுவார்கள்.... சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்ரோனுக்கு நெருக்கமாகும் அனைவருக்கும் கூட, இதே அணுகுமுறை தான்.”

இந்த வார ஆரம்பத்தில் வலது-சாரியான டுப்போன்-எய்னியோன், லு பென்னுக்கு ஏற்பிசைவு அளித்ததற்கும் LR இன் நிர்வாகிகள் கடுமையாக எதிர்வினையாற்றினர். ஃபிய்யோன் அரசாங்கத்தில் ஒரு கேபினட் அமைச்சராக இருந்தவரும் மூத்த அரசியல்வாதியுமான டொமினிக் புஸ்செரோ, ட்விட்டரில் டுப்போன்-எய்னியோன் ஒரு பாசிஸ்ட் என கூறிக் கண்டனம் செய்தார். அவர் அறிவித்தார்: “கோலிசவாதியாக சொல்லிக் கொண்டாலும் உண்மையில் ஒரு பெத்தான்வாதியான [நாஜி ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியான மார்ஷல் பிலிப் பெத்தானின் ஆதரவாளர்] டுப்போன்-எய்னியோன் சட்டமன்றத் தேர்தலிலும் அவரது நகரசபையிலும் தோற்கடிக்கப்பட வேண்டும். பச்சையான ஒத்துழைப்புவாதி!”

LR மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் மோதல்கள் வெடிக்கின்ற நிலைமையில் இந்தக் கருத்துக்கள் வருகின்றன. முதல் சுற்றில் ஃபிய்யோன் வெளியேற்றப்பட்ட பின்னர், ஓர்பால் திருமணத்துக்கு விரோதமான அனைவருக்குமான இயக்கம் (Manif pour tous) உள்ளிட்ட அதி-வலது உணர்வுகளுக்கு விண்ணப்பம் செய்யும் விதத்திலேயே அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்திருந்தார் என்றபோதிலும் லு பென்னுக்கு எதிராய் மக்ரோனுக்கு ஆதரவாய் வாக்களிக்க ஃபிய்யோன் அழைப்பு விடுத்திருந்தார்.

மக்ரோனை வழிமொழிந்த LR நிர்வாகிகளில் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலா சார்க்கோசி, முன்னாள் பிரதமர்கள் அலென் ஜூப்பே, ஜோன்-பியர் ரஃப்ரான், மற்றும் சேவியே பேர்த்ரோண்ட் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். முதலாம் சுற்றுக்குப் பின்னர், ஜூப்பே அறிவித்தார்: “எந்தத் தயக்கமும் இல்லாமல், இந்த ஞாயிறன்று இரவு, அதி வலதுக்கு, பிரான்சை பேரழிவுக்கு இட்டுச்செல்லத்தக்க ஒரு அதிவலதுக்கு, எதிரான போராட்டத்தில் இமானுவல் மக்ரோனை ஆதரிக்க நான் முடிவு செய்கிறேன்.”

“லு பென்னுக்கு எதிராக வாக்களிக்க அழைப்பு விட மறுத்த அரசியல் நண்பர்களை” தான் எச்சரித்ததாக பேர்த்ரோண்ட் Le Point இதழிடம் தெரிவித்தார், “ஒரு ஜனாதிபதித் தேர்தல் என்பது நாம் என்ன மாதிரியான சமூகத்தை விரும்புகிறோம் என்ற தெரிவாகும்” என்ற அவர், LR “உள்முகமாய் சரிந்து அமிழும் அபாயத்திற்கு” முகம்கொடுத்திருப்பதாக மேலும் சேர்த்துக் கொண்டார்.

LR இன் பெரும்பகுதியினர் மக்ரோனுக்குப் பின்னால் அணிதிரள்கின்ற அதேநேரத்தில், சார்க்கோசிக்கு நெருக்கமான LR அங்கத்தவர்கள் பலரும் மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் இடையில் தெரிவினை செய்ய மறுத்து வருகின்றனர். சார்க்கோசி ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு உரை எழுதி கொடுத்தவரும், FN வாக்காளர்களுக்கு அதிவலது தேசியவாத விண்ணப்பங்களைச் செய்ய அறிவுறுத்தி வருபவருமான ஹென்றி கேய்னோ, LR இன் துணைத் தலைவர் லோரோன் வோக்கியே, மற்றும் முன்னணி அங்கத்தவர்களான கிறிஸ்டின் புத்தான், எரிக் சியோட்டி மற்றும் தியரி மரியானி ஆகியோரும் இதில் இடம்பெறுவர். ஹென்றி கேய்னோ கூறுகையில், “மக்ரோனுக்கு வாக்களிப்பதென்பது நான் எதிர்க்கின்ற அமைப்புமுறைக்கு வாக்களிப்பதாகும்” என்றார்.

மக்ரோனுக்கு வழிமொழிய மறுத்த லோரோன் வோக்கியே, ஜூன் சட்டமன்றத் தேர்தலில் LR கவனம் செலுத்த அழைப்புவிடுத்தார். ”இமானுவல் மக்ரோனைச் சுற்றி நிற்பதோடு மட்டுமே எனது அரசியல் உருவாக்கத்தின் பதிலாக அமைவதை நான் விரும்பவில்லை. நான் தெளிவாகச் சொல்வேன்: மக்ரோனைச் சுற்றிய ஒரு கூட்டணியில் நான் சேரமாட்டேன், ஏனென்றால் நாம் அதே உறுதிப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை.”

இந்த மோதல்கள் தொடருமானால் கட்சி உடைவு காணும் அபாயத்தில் உள்ளதாக எரிக் வேர்த் மற்றும் பிரெஞ்சு செனட்டின் தலைவரான ஜெரார் லார்சே உள்ளிட LR நிர்வாகிகளின் ஒரு அடுக்கு எச்சரிக்கை செய்கிறது. LR இன் கடமைகளில் ”நமது உறுதிப்பாடுகளை பகிர்ந்து கொள்கின்ற மக்களது அரசியல் இயக்கத்தை உடைத்து விடாமல் இருப்பது....தோல்வியின் கடுஞ்சுவையுடன் பிளவின் சுவைகளும் சேர்ந்தால் அது நாம் உள்முகமாக அமிழ்ந்து போக இட்டுச் செல்லக் கூடும் அவ்வாறு நடவாமல் பார்த்துக் கொள்வது” ஆகியவையும் இடம்பெற்றுள்ளதாகவும் லார்சே தெரிவித்தார்.

பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் வெகுவாக வலதை நோக்கித் திரும்புகின்ற நிலையில், அது ஒரு வரலாற்று நெருக்கடியால் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே இத்தகைய கருத்துக்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

குடியரசுக் கட்சி என்பது, இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பிரெஞ்சு நாஜி-எதிர்ப்பியக்கத்தில் இருந்த முதலாளித்துவ-ஆதரவு சக்திகளது பெரும்பான்மையினரின் தலைவராக இருந்தவரும், நாஜி ஆக்கிரமிப்புக்கு எதிராக ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) கூட்டணி சேர்ந்தவருமான ஜெனரால் சார்ல்ஸ் டு கோலின் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்களாக கூறிக் கொள்கின்ற சக்திகளின் வழிவருவதாகும். பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத ஆட்சி வீழ்ந்ததற்குப் பின்னர், டு கோலும் PCFஉம் தொழிலாள வர்க்கத்தில் வெடித்த புரட்சிகரப் போராட்டங்களை ஒடுக்கினர். முன்னணி ஒத்துழைப்புவாதிகள் பலரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும், FN மற்றும் சோசலிஸ்ட் கட்சி உள்ளிட போருக்குப் பிந்தைய பிரான்சின் முன்னணிக் கட்சிகளை ஸ்தாபிக்கவும் அவர்கள் அனுமதித்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சமூகப் புரட்சியை தவிர்ப்பதற்காகவும், ஐரோப்பிய முதலாளித்துவத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும், அமெரிக்கா ஐரோப்பாவுக்கு அளித்த பாரிய நிதி உதவிதான், டு கோலின் தேசபற்று விண்ணப்பங்களுக்கும் PCF இன் வர்க்க-ஒத்துழைப்புவாதக் கொள்கைக்குமான புறநிலை அடிப்படையாக அமைந்திருந்தது. ஸ்ராலினிசத்துடனான போர்க்கால கூட்டணியின் அரசியல் பாரம்பரியத்தினை சார்ந்து, கோலிசவாதிகள், போருக்கு உடனடியாக பின்வந்த தசாப்தங்களில் தொழிலாள வர்க்கத்திற்கு அளிக்கப்பட்ட வரம்புபட்ட என்றாலும் நன்குணரத்தக்கதான விட்டுக்கொடுப்புகள் மற்றும் வாக்குறுதிகளை தமது ஆட்சிக்கு அடித்தளமாகக் கொள்ள முடிந்தது.

“பொருளாதார மற்றும் நிதி பிரபுத்துவங்களை” முதலாளித்துவ பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதில் இருந்து வெளியேற்றுவதற்கும், ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கின்ற ஒரு சமூக நல உதவி அரசை அமைப்பதற்கும், ஐரோப்பா மீண்டும் இரண்டு உலகப் போர்களின் படுகொலைக்கு திரும்பாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் அவர்கள் வாக்குறுதியளித்தனர்.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு, ஸ்ராலினிசக் கட்சிகளது உருக்குலைவு மற்றும் சோவியத்துக்குப் பிந்தைய ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி ஆகியவற்றின் பின்னர் இந்தப் பொறிமுறைகள் சீர்ப்படுத்த முடியாத அளவுக்கு நொருங்கி விட்டன. PCF, டு கோலுடன் ஒத்துழைப்பதற்கான அடிப்படையை அமைத்துத் தந்த சமூக விட்டுக்கொடுப்புகள், மற்றும் சோவியத் ஒன்றியத்தின் இருப்பினால் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகளின் மீது திணிக்கப்பட்டிருந்த இராணுவரீதியான ஒதுங்கியிருப்புகள் ஆகியவை காணாமல் போய்விட்டன. இப்போது ஐரோப்பிய ஒன்றியம் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர் ஆகியவற்றைத் திணிப்பதற்கான ஒரு எந்திரம் ஆக செயல்படுகிறது, அத்துடன் பிரான்சில் PS இன் அவசரகால சட்ட நிலையின் கீழ் இரண்டு ஆண்டுகளாக ஜனநாயக உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

பல தசாப்த காலங்களில், டு கோலுக்கு LR அழைப்புவிடுவது எந்தவகையிலும் அதன் கன்னைகளை இணைப்பதில் உதவாத வெற்று வாய்வீச்சாக ஆகியிருக்கிறது. குறிப்பிடத்தக்கவிதத்தில், சார்க்கோசியின் 2007-12 பதவிக்காலத்தின் போது FN இன் வாக்காளர்களுக்கு விண்ணப்பிக்கும் நிக்கோலா சார்க்கோசி மற்றும் ஹென்றி கேய்னோவின் மூலோபாயத்தை ஏற்கும் விதமாக, அவர்கள் அனைவரும் வலது நோக்கி வெகுதூரம் திரும்பினர்.

மக்ரோன் லு பென்னைக் காட்டிலும் ஒரு குறைந்த தீமையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக தொழிலாளர்களுக்கு எதிரான ஐரோப்பிய முதலாளித்துவத்தின் எதிர்ப்புரட்சிகரத் தாக்குதலில் ஒரு முன்னேறிய கட்டத்தையே குறிக்கிறது. சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் ஒரு முன்னாள் அமைச்சரான இவர், PS இன் அவசரகால நிலை சட்டத்தை பராமரிப்பதற்கும் அதன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்தை பயன்படுத்தி மோசமான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கும் மட்டும் வாக்குறுதியளிக்கவில்லை, ஒரு போரின் சகாப்தமாக அவர் கணிக்கின்ற ஒன்றில் போரிடுவதற்காக கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர் வாக்குறுதியளித்திருக்கிறார்.

இரு கட்சி அமைப்புமுறையின் வீழ்ச்சியும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் வலது நோக்கி நகர்ந்திருப்பதும் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’égalité socialiste) பகுப்பாய்வை ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கும், மக்ரோன் மற்றும் லு பென் இருவரது பிற்போக்கு கொள்கைகளையும் அம்பலப்படுத்துவதற்கும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவர்கள் இருவருக்கும் இருக்கும் எதிர்ப்பை ஊக்குவிப்பதற்கும், ஞாயிறன்று எந்த வலது-சாரி வேட்பாளர் ஜனாதிபதி பதவியை வெல்கின்ற போதும் அவருக்கு எதிராக ஒரு புரட்சிகர மற்றும் சர்வதேசிய முன்னோக்கின் அடிப்படையில் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக போராடுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.