ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Emmanuel Macron inaugurated as president of France

இமானுவல் மக்ரோன் பிரான்சின் ஜனாதிபதியாக பதவியேற்றார்

By Alex Lantier
15 May 2017

இரண்டாம் சுற்று தேர்தலில் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னுக்கு எதிராக வெற்றி பெற்று ஒரு வாரத்திற்குப் பின்னர், இமானுவல் மக்ரோன் நேற்று எலிசே மாளிகையில் பிரான்சின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அவர் பதவியேற்கையில், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரான்சின் இந்த எட்டாவது ஜனாதிபதியினது வேலைத்திட்டம் பிரெஞ்சு மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் எதிர்ப்பை முகங்கொடுக்கிறது. மக்களில் அறுபத்தியொரு சதவீதத்தினர் இராணுவவாதத்திற்கான அவர் வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும், முந்தைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் அரசாணை மூலமாக ஆழ்ந்த சமூக சிக்கனத் திட்டங்களை திணிப்பதற்கும் தேவையான தேசிய நாடாளுமன்ற பெரும்பான்மை அவருக்குக் கிடைக்க கூடாதென விரும்புவதாக தெரிவிக்கின்றனர். அவரின் பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்தில் எந்த ஜனநாயக சட்டபூர்வத்தன்மையும் இல்லை.

நேற்றைய பதவியேற்பு விழாவின் சூழல், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி பதவியேற்கிறாரோ என்பதை விட ஒரு மன்னரின் முடிசூட்டு விழா நடப்பதற்கு ஒத்திருந்தது. நிதி பிரபுத்துவம், மக்களிடமுள்ள அனைத்து எதிர்ப்பிற்கு மத்தியிலும் சமூக போராட்டத்தை நசுக்கவும், மக்ரோனையும் அத்தோடு தொடர்ச்சியாக புதுப்பித்துக் கொண்டே பிரான்சின் அவசரகால நெருக்கடி நிலையையும் பயன்படுத்தலாமென நம்புகின்ற நிலையில், புதிய ஜனாதிபதியும் ஊடகங்களும் ஆளும் உயரடுக்கில் வேகமாக பரவி வரும் இராணுவவாத மற்றும் முடியாட்சி மனோபாவத்தை ஏற்றிருந்தனர்.

மக்ரோன் ஒரு திறந்த இராணுவ வாகனத்தில் எலிசே மாளிகை வந்தடைந்தார். அந்த வாகனம் ஜனாதிபதி தேர்தல்களின் முதல் சுற்றுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஏப்ரல் 20 அன்று ஒரு இஸ்லாமியவாதியால் பொலிஸ்காரர் Xavier Jugelé ஐ படுகொலை செய்த இடமான Champs-Elysées இலும் தரித்து நின்றது. ஆயுதப்படையினருக்கான இந்த அடிபணிவும், மற்றும் Champs-Elysées இல் அவர் வந்து நின்ற அவரது நடவடிக்கைகளும் ஊடகங்களில் எல்லையில்லாத மற்றும் அர்த்தமற்ற உற்சாகத்தைத் தூண்டியது.     

“மக்கள் அவரிடம் வந்து, அவர் கரங்களில் தஞ்சமடைந்துள்ளனர். முந்தைய சகாப்தத்தில், மன்னர்கள் முடிசூட்டிக் கொண்ட பின்னர் கண்டமாலை (scrofula) நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டு ஆறுதளிப்பார். இதிலும் அது போன்றவொன்று இருக்கிறது,” என்று France 2 சேனலில் ஒரு தொலைக்காட்சி பண்டிதர் கூறிய அதேவேளையில், முன்னாள் Le Monde ஆசிரியர் Eric Fottorino விவரிக்கையில் மக்ரோன் சாமானிய மனிதர்களைப் போன்றவர் இல்லை என்று விவரித்தார்: “எஃகு தொழிற்சாலைகள் தனித்துவமான உலோகங்களை உருவாக்குகின்றன. அவர் வேறொரு உலோகத்தால் ஆனவர்,” என்றார்.

பின்னர் மக்ரோன் முற்றிலுமாக வங்கிகளுக்கும், இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகளுக்கும் நேரடியான ஓர் உரை வழங்கினார். “மே 7 இல் பிரெஞ்சு மக்கள் நம்பிக்கை மற்றும் வெற்றி உத்வேகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்,” என்று தொடங்கிய அவர், 19 ஆம் நூற்றாண்டு பிரான்சின் காலனித்துவவாதிகளுக்கு எதிரான அதிகாரப்பித்து பிடித்த போட்டியாளர்களது ஓர் ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கையை விவரிக்க தொடங்கினார். “உலகின் பாதையில் தேவையற்றுள்ள அனைத்தையும் சரி செய்ய" “நாம் ஓர் ஆழ்ந்த பாத்திரம் வகிக்க வேண்டியுள்ளது. இது நம்மை அழைக்கிறது.” என்றவர் விவரித்தார்.

“அதுவே நமது பலத்தின் மற்றும் இறையாண்மையின் கருவி என்பதால், மிகவும் திறமையான, மிகவும் ஜனநாயகரீதியான, மிகவும் அரசியல்ரீதியான" ஒரு ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சுக்கு அவசியப்படுகிறது. “இதை நோக்கி நான் பணியாற்றுவேன்,” என்றவர் தெரிவித்தார்.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பரந்த பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நாட்டத்தை சூசகமாக வெளியிட்ட பின்னர், பிரான்ஸ் "அதனைக் குறித்தே அது சந்தேகம் கொண்டுள்ளது,” மற்றும் "பயத்தை" உணர்கிறது என்றார். மக்ரோனுக்கு முந்தையவர், அதாவது சோசலிஸ்ட் கட்சியின் பிரான்சுவா ஹோலாண்ட் கொண்டு வந்த சட்ட-ஒழுங்கு விஷமப்பிரச்சாரத்தை ஊக்குவித்து கொண்டே, தீவிர சுதந்திர-சந்தை அதிர்ச்சி வைத்தியம் செய்வதே அவர் முன்மொழிந்த தீர்வாக இருந்தது. அதாவது "வேலைகள் மீதான கட்டுப்பாட்டு நெறிமுறைகள் தளர்த்தப்படும், நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படும், புதிய முனைவுகள் ஊக்குவிக்கப்படும்.”

“ஒருவர் அச்சமின்றி வாழ்வதற்கு, பிரான்சை ஒரு பாதுகாப்பான நாடாக ஆக்க செய்ய வேண்டிய ஒவ்வொன்றும் செய்யப்படும்,” என்றார். “குடியரசு மதசார்பின்மை பாதுகாக்கப்படும், நமது பொலிஸ் படைகள், நமது உளவுத்துறை முகமைகள், மற்றும் நமது இராணுவங்கள் பலப்படுத்தப்படும் மற்றும் ஆதரிக்கப்படும்,” என்றார்.

போர் மற்றும் சிக்கனத் திட்டங்களுக்கான ஹோலாண்டின் மக்கள்விரோத கொள்கைகளை அவர் தொடரவும் தீவிரப்படுத்தவும் விரும்புவதை அந்த முன்னாள்-ரோத்ஸ்சைல்ட் வங்கியாளர் பிதற்றியதும் ஊடகங்கள் உற்சாகத்தில் மிதந்தன. “விடயங்களை வித்தியாசமாக செய்வதே" மக்ரோனின் "விருப்பம்" என்று பாராட்டி இருந்த BFM-TV ஆசிரியர் Ruth Elkrief, “அவர் முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்,” என்று உற்சாகத்தில் துள்ளினார்.

24 மணி நேர செய்தி சேனல் ஒன்றின் மற்றொரு இதழாளராலும் அவர் உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை: “ஓர் இராணுவ வாகனத்தில் இமானுவல் மக்ரோனின் இந்த கண்கவர் காட்சியை நாம் அனைவரும் நினைவுகூர்வோம்.”

இவ்விதமான இராணுவ வெறி ஒரு திவாலான சமூக ஒழுங்கமைப்பின் விளைவாகும். பல தசாப்தகால சிக்கன திட்டங்களுக்குப் பின்னர், தொழிலாளர்களுக்கு வழங்க முதலாளித்துவ வர்க்கத்திடம் எதுவுமின்றி, எந்தவித தீர்வும் இல்லாமல் எல்லா தரப்பிலிருந்தும் நெருக்கடியால் சூழப்பட்டிருப்பதாக உணர்கிறது. விச்சி ஆட்சியின் நாஜி-ஒத்துழைப்புவாதத்தின் அரசியல் வழிதோன்றலான லு பென்னுக்கு மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றிரவு வழங்கிய அவரது வெற்றி உரையில் "குடியரசு வணக்கம்" வழங்கியமை, பிரெஞ்சு ஆளும் வட்டாரங்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக எந்தவிதமான பொலிஸ்-அரசு ஆட்சியை அமைக்க மக்ரோன் விருப்பமுறுகிறார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. 

பிரான்சின் கண்டமாலை (scrofula) நோயை அற்புதத்தின் மூலம் குணமாக்கும் ஒரு அரசராக மக்ரோனின் கண்ணோட்டங்களை இதழாளர்கள் முன்னிறுத்துகிறார்கள் என்றால், இது ஏனென்றால் ஆளும் வர்க்கத்திடம் சமூக நெருக்கடிக்கு எந்த தீர்வும் கிடையாது என்பதுடன், அதுவே ஹோலாண்டின் பிரபலமான வலதுசாரி, சுதந்திர-சந்தை திட்டநிரலில் ஏதேனும் ஒரு விதத்தில் அற்புதம் ஏற்படுமா என்று அவநம்பிக்கையுடன் எதிர்பார்த்து நிற்கின்றது.

எவ்வாறிருப்பினும், பிரான்சின் ஜனாதிபதி ஆவதற்கு முன்னர் ஒருபோதும் எந்த பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிராத, ஹோலாண்டின் முன்னாள் பொருளாதார மந்திரியான மக்ரோன் தேர்வாகி இருப்பதாலேயே முதலாளித்துவ நெருக்கடியைக் கடந்து வந்துவிட முடியாது. அது எதையும் தீர்க்கப் போவதில்லை. போர், வேலைவாய்ப்பின்மை மற்றும் அகதிகள் நெருக்கடியை மட்டுமே தீவிரப்படுத்திய ஹோலாண்டின் மதிப்பிழந்த கொள்கை திட்டநிரலை விரிவாக்குவதன் மூலமாக, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ஹோலாண்டின் கீழ் அவர்களால் தீர்க்க முடியாத நெருக்கடிகளை மக்ரோனின் கீழ் தீவிரப்படுத்த மட்டுமே செய்யும்.

யூரோ மண்டலத்தை, குறிப்பாக அதன் பிரான்கோ-ஜேர்மன் அச்சை, சிதறடித்துக் கொண்டிருக்கும் நிதி கொள்கை மீதான வெடிப்பார்ந்த கருத்து முரண்பாடுகளைக் கையாள மக்ரோன் இன்று பேர்லினுக்கு பயணிக்கிறார். அவர் பிரதம மந்திரி பெயரை இன்று அறிவித்த பின்னர் மற்றும் நாளை மந்திரிசபையை அறிவித்த பின்னர், 2011 இல் லிபியாவில் நேட்டோவினது ஏகாதிபத்திய போருக்குப் பின்னர் ஹோலாண்ட் தொடங்கிய ஒரு நவகாலனித்துவ போரால் சீரழிக்கப்பட்டுள்ள மாலிக்கு, மக்ரோன் இவ்வாரயிறுதியில் பயணிப்பார்.

ஜேர்மனிக்கும் பின்னர் ரஷ்யாவிற்குமான ஒரு முன்னாள் பிரெஞ்சு தூதர் Philippe Etienne ஐ எலிசே மாளிகையின் செல்வாக்கு மிக்க தூதரக ஆலோசகர் பதவிக்கு மக்ரோன் பெயரிட்டார். இது ஐரோப்பிய நெருக்கடியில் பாரீசின் முக்கியத்துவத்தை அடிக்கோடிடுகிறது. ஒரு பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் கொண்டு உக்ரேனில் ரஷ்ய-ஆதரவிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதென்ற நேட்டோ முடிவுக்குப் பின்னர், உலகின் மிகப்பெரிய அணுஆயுத சக்தியான ரஷ்யாவுடன் "முழுமையான போர்" அபாயம் இருப்பதை ஹோலாண்ட் ஒப்புக் கொண்டிருந்தார். எவ்வாறிருப்பினும், மக்ரோன் இராணுவ செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக அதிகரித்தும், மற்றும் கட்டாய இராணுவச் சேவையைக் கொண்டு வந்தும் ஒரு மிகப்பெரிய இராணுவ மோதல்களுக்கு முன்மொழிந்து வருகிறார்.

மக்ரோன் பதவியேற்பு நிகழ்வின் சூழல்கள், மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES) விடுத்த அழைப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (PES) மட்டுமே இந்த அழைப்பை விடுத்தது. தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல்ரீதியில் சுயாதீனமான ஒரு புரட்சிகர முன்னோக்கை விவரித்து, தேர்தலுக்குப் பின்னர் வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதே முக்கிய பிரச்சினை என்பதை அது வலியுறுத்தியது. அது லு பென்னால் தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள மோசமான அபாயங்களை காட்டி மக்ரோனுக்கு ஆதரவு வழங்குவதை நியாயப்படுத்தியவர்களை எதிர்த்ததுடன், மக்ரோனின் இராணுவவாத மற்றும் சர்வாதிகார கொள்கைகளும் தொழிலாள வர்க்கத்திற்கு அபாயகரமான அச்சுறுத்தல்களை முன்வைக்கின்றது என்பதை எடுத்துக்காட்டியது.

ஜோன் லூக் மெலோன்சோனின் France insoumise (அடிபணியா பிரான்ஸ் இயக்கம் - FI)  மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற நாடாளுமன்றத்தை நோக்கி நோக்குநிலை கொண்ட மற்றும் மெல்லிய மூடுமறைப்பில் மக்ரோனுக்கு ஆதரவளித்த சக்திகளுடன் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு கூர்மையாக முரண்படுகிறது. இன்று, மக்ரோனும் ஊடகங்களும் ஒருங்கிணைந்து அரசியல் சூழலை வலதிற்கு தீவிரமாக நகர்த்த இயங்குகின்ற நிலையில், மக்ரோன் "குறைந்த தீமை கொண்டவர்" என்ற ஊடக பொய்களுடன் அவர்கள் சேர்ந்து கொள்வதானது கூர்மையாக அம்பலமாகி உள்ளது.

போர் மற்றும் சர்வாதிகார கொள்கைகளை திட்டமிடும் ஆளும் உயரடுக்கிற்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான ஒரு புரட்சிகர பரிமாணத்திலான மோதலே பிரான்சிலும் சர்வதேச அளவிலும் மேலெழும். பிரான்சில் நான்கு மில்லியன் வாக்காளர்கள் இரண்டு வேட்பாளர்களுக்கும் எதிராக அவர்களது வாக்குச்சீட்டுக்களை செல்லுபடி அற்றதாக்கினர் அல்லது வெற்று வாக்குச்சீட்டுக்களை வழங்கினர். மேலும் பாரிய போராட்டங்களுக்கு மத்தியிலும் சோசலிஸ்ட் கட்சி கொண்டுவந்த தொழிலாளர் சட்டத்தை மக்களில் 70 சதவீதத்தினர் எதிர்த்தனர். சர்வாதிகாரம் மற்றும் போருக்கான உந்துதலை எதிர்க்க இப்போது தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர அரசியல் தலைமையை தயார் செய்வதே முக்கிய பிரச்சினையாகும்.