ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron names government to implement social counterrevolution in France

பிரான்சில் சமூக எதிர்புரட்சியை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்திற்கு மக்ரோன் அழைப்புவிடுகின்றார்

By Francis Dubois
18 May 2017

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் மே 15 அன்று பெயரிட்ட பிரதம மந்திரி எடுவார்ட் பிலிப் (Edouard Philippe) நேற்று அவர் அமைச்சரவையின் தேர்வுகளை பகிரங்கமாக அறிவித்தார். ஒரு சமூக எதிர்புரட்சிக்கு தயாரிப்பு செய்வதற்காக அரசியல் ஸ்தாபகத்தின் செல்வாக்கான சகல கன்னைகளும், குறிப்பாக சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் குடியரசுக் கட்சி (LR) களின் மிதவாத பிரிவுகள் என்றழைக்கப்படுவதை, நெருக்கமாக கொண்டு வந்திருக்கும் ஓர் அரசாங்கமாக உள்ளது.

அமைச்சரவையில் நியமிக்கப்பட்டவர்கள் எவரும், பொது வாழ்வை "நன்னெறிப்படுத்தவும்" மற்றும் அதிகாரிகளது வரி ஏய்ப்புகளை நிறுத்தவும் சூளுரைத்துள்ள மக்ரோனை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அமைச்சரவை குறித்த அறிவிப்பு 24 மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது. சிக்கனக் கொள்கை, போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் என இதற்கு முன்பிருந்த சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் மதிப்பிழந்த கொள்கைகளையே தொடர்ந்து தீவிரப்படுத்தவிருக்கும் அவரது கொள்கைகளுக்கு, மக்ரோன், சட்டபூர்வ மறைப்பை வழங்க விரும்புகிறார்.

உள்துறை, வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்பு, நீதித்துறை மற்றும் பொருளாதாரம் என மூலோபாய அமைச்சகங்களை, அரசியல் ஸ்தாபகத்தின் நீண்டகால முண்டுகோல்களும் மற்றும் LR இன் வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அல்லது ஹோலாண்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் கீழ் பிரான்சில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கையின் ஆதரவாளர்களும் பிடித்துக் கொள்வார்கள்.

ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாம் சுற்றில், மக்ரோன் மற்றும் நவ-பாசிச மரீன் லு பென்னுக்கு இடையிலான ஒரு போட்டியின் போது, பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste – PES) வலியுறுத்துகையில், மக்ரோனுக்கு வாக்களிப்பதன் மூலமாக, இராணுவவாதம் மற்றும் பொலிஸ் அரசு வளர்ச்சியை தொழிலாளர்களால் நிறுத்த முடியாது என்றும், மக்ரோனின் வேலைத்திட்டமே ஆழமாக பிற்போக்குத்தனமானது என்றும் வலியுறுத்தியது. அதற்கு பதிலாக பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி வரவிருக்கின்ற மக்ரோனுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஒரு சுயாதீனமான, புரட்சிகரமான மற்றும் சோசலிச முன்னோக்குடன் தொழிலாளர்களை ஆயுதபாணியாக்க ஒரு செயலூக்கமான புறக்கணிப்பை முன்மொழிந்தது.

லு பென்னைத் தடுக்க வாக்காளர்கள் மக்ரோனை தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற வாதங்களுக்கு அவர்களது ஆதரவை சமிக்ஞை செய்த ஜோன்-லூக் மெலோன்சோன் மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி போன்ற அனைவருக்கும் முரண்பட்ட விதத்தில், மக்ரோனின் ஜனாதிபதி பதவிகாலத்தைக் குறித்த PES இன் பகுப்பாய்வை மக்ரோன் மற்றும் பிலிப் முன்னிறுத்தும் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

சோசலிஸ்ட் கட்சி உள்துறை அமைச்சர் பேர்னார்ட் கசெனேவ் இன் முன்னாள் தலைமை ஆலோசகர் பாட்ரிஸ் ஸ்ட்ரோடா (Patrice Strzoda) அவரே மக்ரோனின் தலைமை ஆலோசகராக இருப்பார் என்பதை இவ்வார தொடக்கத்தில் மக்ரோன் அறிவித்தார்.

“மரண ஆபத்தில்லாத" இரப்பர் தோட்டாக்களை, திட்டமிட்டும் அபாயகரமாகவும் பிரயோகித்தது உட்பட ஹோலாண்ட்க்கு எதிரான போராட்டங்களின் மூர்க்கமான பொலிஸ் ஒடுக்குமுறையை ஸ்ட்ரோடா ஒழுங்கமைத்தார். 2013 இல் இருந்து 2016 வரையில் பிரிட்டானி (Brittany) இன் உயர் நிர்வாக அதிகாரியாக (prefect) இருந்த அவர், பொலிஸ் நடவடிக்கைகள் மற்றும் படுகாயமேற்படுத்தும் கையெறி குண்டுகளின் பயன்பாட்டை மேற்பார்வை செய்தவராவார், இத்தகைய கையெறி குண்டுகளை பயன்படுத்திய போதுதான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டக்காரர் Rémi Fraisse 2014 இல் உயிரிழந்தார். மக்ரோன் மற்றும் பிலிப் இன் கொள்கைகள் தூண்டிவிடக்கூடிய வெடிப்பார்ந்த எதிர்ப்பை ஒடுக்க அவர்கள் தயங்கி நிற்கப் போவதில்லை என்பதற்கு இவரின் நியமனமே ஒரு அடையாளமாக உள்ளது.

பிரான்சின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜோன்-ஈவ் லு திரியோன் (சோசலிஸ்ட் கட்சி) நியமிக்கப்பட்டுள்ளார். ஹோலாண்ட் இன் கீழ் பாதுகாப்பு அமைச்சராக இருந்த இவர், சிரியா மற்றும் ஆபிரிக்காவில் ஆக்ரோஷமான பிரெஞ்சு ஏகாதிபத்திய கொள்கையிலும் மற்றும் நேட்டோ கூட்டணியின் பாகமாக ரஷ்யாவிற்கு எதிராகவும் முக்கிய பாத்திரம் வகித்தவராவார். அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்தம் செய்யும் அவசரகால நெருக்கடி நிலையை நீடிக்கும் உள்ளடக்கத்தில், அவர் பிரெஞ்சு மண்ணிலேயே இராணுவத்தை நிலைநிறுத்துவதையும் மேற்பார்வை செய்துள்ளார்.

பத்திரிகை செய்திகளின்படி, சோசலிஸ்ட் கட்சியின் "ஆட்கொலை நடவடிக்கைகளின்" இலக்குகளை அடையாளம் காணவும் மற்றும் ஒப்புதல் வழங்கவும் லு தியோன், ஹோலாண்ட் உடன் நெருக்கமாக வேலை செய்திருந்தார். மரண தண்டனை தடைசெய்யப்பட்ட பிரெஞ்சு அரசியலமைப்பை வெளிப்படையாக மீறியவகையில், நீதி விசாரணையற்ற இத்தகைய படுகொலைகளும், சொந்த குடிமக்கள் உட்பட "இலக்கில் வைத்த படுகொலைகளும்", வெளிநாடுகளிலும் பிரெஞ்சு அரசால் நடத்தப்பட்டது. பேர்லினின் நெருக்கமான ஒத்துழைப்புடன், ஐரோப்பிய வெளியுறவு கொள்கையை மீள ஒழுங்கமைப்பது மற்றும் மீள இராணுவமயப்படுத்துவதை செய்வதே இந்த புதிய அரசாங்கத்தில் அவர் வகிக்க இருக்கும் முக்கிய பாத்திரமாக இருக்கும்.

லியோன் நகரின் சோசலிஸ்ட் கட்சி மேயர் ஜெரார் கொலொம் (Gérard Collomb) இப்போது உள்துறை மந்திரியாகி உள்ளார். இவர் சோசலிஸ்ட் கட்சியின் ஒரு ஸ்தாபக அங்கத்தவர் ஆவார். Le Monde மற்றும் Libération இன் ஒரு முன்னாள் இதழாளர் Luc Rosenzweig இன் கருத்துப்படி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் வணிக வட்டாரங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பின் காரணமாக கொலொம் இன் கீழ் லியோன் நகரம், “மக்ரோன் அரசியல் அரங்கில் களமிறங்கி ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்னரே மக்ரோனிசத்தின் ஒரு ஆய்வுகூடமாக" இருந்தது. நவம்பர் 13, 2015 பாரீஸ் தாக்குதல்களுக்கு பின்னர், லியோன் நகரசபை பொலிஸை ஆயுதமயப்படுத்த கொலொம் உத்தரவிட்டார்.

அரசியல் ஸ்தாபகத்தின் மற்றொரு முண்டுகோலான ஜனநாயக இயக்கத்தின் (MoDem) வலதுசாரி அரசியல்வாதி பிரான்சுவா பேய்ரூ இப்போது நீதித்துறை அமைச்சராக ஆகியுள்ளார். பேய்ரூ 1980 களுக்குப் பின்னர் இருந்தே வழமையாக பிற்போக்குத்தன அரசாங்கங்களின் ஒரு அமைச்சராக இருந்துள்ளார். கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் இவர், தனியார் பள்ளிகளுக்கு நிதியுதவிகளை அதிகரிக்க அனுமதிக்கும் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி அமைச்சராக இருக்கையில் முயன்றார். 1994 இல், அண்மித்து ஒரு மில்லியன் போராட்டக்காரர்கள் இந்த திட்டத்தை எதிர்த்து அணிவகுத்தனர்.

15,000 க்கும் அதிகமான சிறையறைகள் உட்பட மக்ரோனின் "பூச்சிய சகிப்புத்தன்மை" (zero tolerance) திட்டத்தை நடைமுறைப்படுத்த மற்றும் இளைஞர்களுக்கான தடுப்புக்காவல் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பொலிஸின் உடனடி அபராத விதிப்புமுறை என்றழைக்கப்படுவதை அறிமுகப்படுத்துவது உட்பட சிறிய குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகளை விதிப்பது ஆகியவற்றை நடைமுறைப்படுத்த பணிபுரிவார்.

பாதுகாப்பு அமைச்சகம் பேய்ரூவின் MoDem ஐ சேர்ந்த சில்வி குலார் (Sylvie Goulard) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இவர் 2001 மற்றும் 2004 க்கு இடையே ஐரோப்பிய கமிஷன் தலைவர் ரோமனோ பிரோடி (Romano Prodi) க்கு ஆலோசனை வழங்கிய பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். இராணுவ செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக உயர்த்துவது மற்றும் கட்டாய இராணுவச் சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவது உட்பட மக்ரோனின் இராணுவவாத வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்புகளை இப்பெண்மணி ஏற்றுள்ளார்.

மக்ரோன் அவரின் பதவியேற்பு விழாவிற்கு ஓர் இராணுவ வாகனத்தில் Champs-Élysées க்கு வந்திறங்கியதன் மூலம், போருக்கு தயாராவது மற்றும் இராணுவத்திற்கு ஆதரவளிப்பது ஆகியவை அவரின் உயர்மட்ட முன்னுரிமைகளில் இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட அனைத்தையும் செய்துள்ளார். மே 25 இல் புரூசெல்ஸில் நடக்கவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கெடுக்க உள்ள அவர், மாலியில் மற்றும் ஆபிரிக்காவின் எல்லையோர சாஹெல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரெஞ்சு துருப்புகளை இன்றோ அல்லது நாளையோ சந்திக்க உள்ளார்.

புதிய தொழிலாளர்துறை அமைச்சரான முரியேல் பெனிக்கோ (Muriel Pénicaud) மக்ரோனுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். இப்பெண்மணி பல பெரிய அரசுத்துறை மற்றும் தனியார் பிரெஞ்சு நிறுவனங்களில் தலைமை நிறைவேற்று அதிகாரியாக (CEO) இருந்துள்ளார். Voix du Nord நாளிதழ் இவரை "வெளிநாட்டு மூலதனத்திற்கு பிரான்சை விற்பனை செய்பவர்" என்று குறிப்பிட்டது. பாரியளவில் நெறிமுறைகளை தளர்த்துவதன் மூலமாக, ஊதியங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சமூக செலவினங்கள் மீது வரலாற்று தாக்குதல்கள் நடத்துவதன் மூலமாக வெளிநாட்டு மூலதனங்களை ஈர்ப்பதற்கான மக்ரோனின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதே இவரின் வேலையாக இருக்கும்.

ஹோலாண்டின் கீழ், நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பின்றியும், அதற்கு எதிரான போராட்டங்களை கடுமையாக ஒடுக்கிய பின்னரும் கொண்டு வரப்பட்ட, ஆழமாக மக்கள் மதிப்பிழந்த தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் மக்ரோன் அறிவித்த தொழிலாளர் நெறிமுறை அழிப்பை பெனிக்கோ மேற்பார்வை செய்வார்.