ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron prepares enabling act to slash contracts, labor rights in France

பிரான்சில் ஒப்பந்தங்களை, தொழிலாளர் உரிமைகளை அழிக்க வழிவகுக்கும் சட்டத்திற்கு மக்ரோன் தயாரிப்பு செய்கிறார்

By Alex Lantier
23 May 2017

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அதிகரித்து வரும் பொதுமக்களின் எதிர்ப்புக்கு முன்னால், வேலைகள், கூலிகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மீதான ஒரு வரலாற்று தாக்குதலை ஜனாதிபதி உத்தரவாணை மூலமாக நிறைவேற்றுவதற்கு தயாரிப்பு செய்து வருகிறார்.

செவ்வாயன்று எலிசே மாளிகையில் தொழிற்சங்கங்கள் மற்றும் வணிக பிரதிநிதிகளுடான அவர் சந்திப்புக்குப் முன்னதாக, திங்களன்று மக்ரோன் திட்டங்களின் விபரங்கள் வெளியாயின.

அடுத்த மாத சட்டமன்ற தேர்தல்களுக்குப் பின்னர், மக்ரோன், பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களுக்கு உத்தரவிட அவருக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தை (Loi d'habilitation) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு கோருவார். “தொழிலாளர் விதிமுறை சீர்திருத்தம் உரிய விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று வரவிருக்கும் பிரதம மந்திரி எடுவார்ட் பிலிப் Journal du Dimanche க்கு தெரிவித்தார். “இப்போது நாம், அதை முழுமைப்படுத்துவது மற்றும் விவரிப்பதைக் குறித்து விவாதிப்போம். தொழிற்சங்கங்களுடன் விவாதிப்பது, இது தவிர்க்கவியலாததாகும், மற்றும் நாடாளுமன்றத்தால் வரையறுக்கப்பட்ட உள்ளடக்கத்தில் ஜனாதிபதி உத்தரவாணைகளைப் பிறப்பிப்பதற்கு அனுமதிக்கும் சட்டத்தை நிறைவேற்றும் வாக்கெடுப்பு நடக்கையில் இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது என்பதே இதன் அர்த்தமாகும்,” என்றார்.

அவரும் தொழிற் கட்சி அமைச்சர் முரியேல் பெனிக்கோவும் (Muriel Pénicaud) தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக வேலை செய்து, பிரதான தொழ்ற்சங்க கூட்டமைப்புகள் ஒவ்வொன்றையும் பரஸ்பரம் சந்திப்பார்கள் என்று பிலிப் தெரிவித்தார். “ஆனால் விவாதம் தொடங்கியதும்,” “நாம் விரைவாக நடவடிக்கையில் இறங்க வேண்டியிருக்கும். இந்த வேலையை முடிக்க நாம் இரண்டு வருடங்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. இமானுவல் மக்ரோன் பிரெஞ்சு மக்களின் கோபத்தை உணர்ந்துள்ளார். நாட்டை மாற்றுவது எவ்வளவு அவசரமானது என்பதையும் அவர் அறிவார்,” என்றார்.

பிரான்சில் நாஜி ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர் உறவுகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மற்றும் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய உடனடிக் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட சமூக சலுகைகளையும் கிழித்தெறிய மக்ரோன் நோக்கம் கொண்டுள்ளார் என்பதையே உத்தரவாணைகள் குறித்த விவாதங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

2016 தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நிறுத்துவதற்காக முந்தைய சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தால் அச்சட்டங்களில் இருந்து நீக்கப்பட்ட வழிவகைகளை, மீண்டும் கொண்டு வருவதே பல உத்தரவாணைகளின் நோக்கமாக உள்ளது. பிரெஞ்சு மக்களில் 70 சதவீதத்தினரின் எதிர்ப்புக்கு முன்னால் ஒரு நாடாளுமன்ற வாக்கெடுப்பு கூட இல்லாமல் சோசலிஸ்ட் கட்சி அச்சட்டத்தை முன்னெடுத்த அதேவேளையில், போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்த தொழிலாளர்களை தாக்குவதற்காக அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் கலகம் ஒடுக்கும் பொலிஸை அது அனுப்பியது. இருப்பினும் ஒரு சமூக வெடிப்பைத் தடுப்பதற்காக அப்போது மக்ரோன் முன்னுரிமையளித்திருந்த பல வழிவகைகள் அச்சட்டத்திலிருந்து நீக்கப்பட்டன, இதைத்தான் இப்போது அவர் மீண்டும் நிலைநாட்ட விரும்புகிறார். அவற்றில் உள்ளடங்குபவை:

● பணியாளர்களைச் சட்டவிரோதமாக வேலையிலிருந்து நீக்கினால் முதலாளிமார்கள் மீது தொழிலாளர் நீதிமன்றங்கள் விதிக்கும் அபராதங்களுக்கு வரம்பு நிர்ணயிப்பது. அபராத வரம்பைக் குறைப்பதானது தொழிலாளர் நீதிமன்றங்களை பலவீனப்படுத்தும்: முதலாளிமார்கள் அவர்களின் வணிக செலவில் "நிஜமான அல்லது ஆழ்ந்த பாதிப்பின்றி" அபராதங்களை வழங்கி விட்டு, பணியாளர்களை சர்வசாதாரணமாக வேலையிலிருந்து நீக்க பார்ப்பார்கள். Le Parisien தகவலின்படி, அபராத வரம்பாக மக்ரோன் மூன்று மாத சம்பளத்தைப் பரிசீலித்து வருகிறார், இது இப்போதைய அபராதமான குறைந்தபட்சம் ஆறு மாத சம்பளம் என்பதில் பாதியாகும். முதலாளிமார்கள் அவர்கள் விருப்பம் போல வேலைக்கு ஆள் எடுப்பதையும் நீக்குவதையும் அனுமதிப்பதே இதன் நோக்கமென்பது தெளிவாக தெரிகிறது.

● ஒவ்வொரு தனிப்பட்ட நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பேரம்பேசுகையில், துறைசார் ஒப்பந்த உடன்படிக்கைகளையும் மற்றும் தேசிய மட்டத்திலான தொழிலாளர் சட்ட விதிமுறைகளையும் மீறுவதற்கு உதவும். நிறுவனங்கள் தற்போது தொழிலாளர்களுக்கு அதிக அனுகூலமாக மட்டுமே ஒப்பந்தங்களை பேரம்பேச முடியும். மக்ரோனின் உத்தரவாணை, இந்த தொழிலாளர் சட்டமசோதா அனைத்தையும் முகவரியற்ற கடிதமாக மாற்றிவிடும் என்பதால், அதை கொண்டு நிறுவனங்கள் தொழிலாளர்களை மிரட்டலாம் என்பதோடு, தொழிற்சாலை மட்டத்திலான உடன்படிக்கைகளும் மற்றும் தேசியளவிலான உடன்படிக்கைகளும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று கூறிக் கொண்டே தொழிலாளர்கள் குறைந்த சம்பள ஒப்பந்தங்களை ஏற்காவிட்டால் அவர்களது வேலைகள் பறிபோகுமென அச்சுறுத்தலாம்.

● ஒப்பந்தங்களை முன்வைக்கும் முதலாளிமார்கள், ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்பதன் மீது ஆலைகளில் தொழிலாளர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்த கோருவதற்கு, இவற்றிக்கு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு இருந்தால், அதற்கிடையிலும் ஒருசில தொழிற்சங்கவாதிகள் மட்டுமாவது ஆதரவளிப்பதற்கு உதவும். பிரான்சில் பரந்த பெரும்பான்மையாக போலி தொழிற்சங்கங்கள் (yellow unions) இருக்கின்ற நிலையில், இது ஒப்பந்தங்களைக் கட்டளையிடுவதற்கும், சிறுபான்மை ஆதரவைப் பெறுவதற்கும், பின்னர் தொழிலாளர்களை நோக்கி ஒப்பந்தத்தை ஏற்கிறீர்களா அல்லது வேலைகளை இழக்கிறீர்களா என கோருவதற்கும் நடைமுறையளவில் முதலாளிமார்களுக்கு உதவியாக அமையும்.

மக்ரோன் ஆதரிக்கும் ஏனைய முன்மொழிவுகள் ஐரோப்பாவின் ஏனைய இடங்களில் உள்ள சமூக-விரோத சட்டமசோதாக்களை உள்ளீர்த்துள்ளது, அதுவும் குறிப்பாக ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சி திணித்த 2010 திட்டநிரலான ஹார்ட்ஸ் IV சட்டங்களைச் சார்ந்துள்ளன. இதில், அரசு நிதியளிக்கும் ஓய்வூதியங்களுக்கான உரிமையை நீக்குவதை நோக்கிய ஒரு படியாக தொழிலாளர்களைத் தனியார் தொகுப்பு ஓய்வூதிய திட்டங்களுக்குள் தள்ளுவது, வேலைவாய்ப்பின்மை சலுகைகள் கோருகையில் தொழிலாளர்கள் மீது கடுமையான சரிபார்ப்புகளை திணிப்பது ஆகியவை உள்ளடங்கும்.

மக்ரோன் நிர்வாகம் பிரான்சை "நவீனப்படுத்தும்" திட்டத்தின் பாகமாக, குறிப்பாக பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த கொள்கைகள் நோக்கம் கொண்டுள்ளது என்ற பாசாங்குத்தனத்துடன், இத்தகைய முன்மொழிவுகளைக் கொண்டு வர முயற்சித்து வருகிறது. பிரான்சின் வெவ்வேறு மகப்பேறு கால விடுப்பு திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றன, ஒரு முன்மொழிவின்படி, இவற்றின் உள்ளம்சங்கள் "மிகவும் ஆதாயகரமான திட்டத்திற்கேற்ப மாற்றப்படும்." முதலாளிமார்கள் பெண்களைப் பாரபட்சமாக நடத்தக்கூடாது என்பதை சோதிப்பதற்காக என்று கூறி, அங்கே தொழிலிடங்களில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

ஆனால் இதுவொரு பிற்போக்குத்தனமான மோசடியாகும். இந்த சட்டமசோதா, பெண் தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களையும் முதலாளிமார்கள் மற்றும் அரசின் கட்டளைகளுக்கு உட்படுத்தும் ஒரு பாரிய பின்நோக்கிய படியாகும். ஆண்-பெண் சமத்துவம் குறித்து கூறப்படும் இந்த முன்மொழிவுகளில், தொழிலிட மத சுதந்திரம் மீது ஜனநாயக-விரோத கட்டுப்பாடுகளையும் மற்றும் "மதம் மாறுவதற்கான" தடை ஆகியவை உள்ளடங்கி உள்ளன என்ற உண்மையானது, ஓர் அச்சுறுத்தலான அறிகுறியாகும்: இவை முக்காடு இட்ட முஸ்லீம் பெண்களை வேலையிலிருந்து நீக்கவும் மற்றும் பொதுவாக முஸ்லீம்-விரோத வெறுப்பு மற்றும் போர்-ஆதரவு உணர்வுகளை ஊட்டி வளர்க்கவும் பயன்படுத்தப்படலாம்.

1991 இல் ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் தொடங்கி, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் தீவிரமடைந்த ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கை முனைவும் மற்றும் முதலாளித்துவ நெருக்கடியும், ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குக் குழிபறித்து வருகின்றன.

மக்ரோன் நிர்வாகம் முன்மொழிந்து வரும் வேலைத்திட்டத்தை நிறைவேற்ற எந்தவொரு மக்கள் ஆணையும் அவருக்கு இல்லை. அதன் மிகவும் சர்ச்சைக்குரிய வழிவகைகள் இல்லாமலேயே கூட தொழிலாளர் சட்டம் ஆழமாக மக்களிடையே மதிப்பிழந்துள்ளது; மக்ரோனின் கொள்கைகளை நெறிப்படுத்த உதவிய, சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் பொருளாதார கொள்கை வெறும் 4 சதவீத ஒப்புதல் விகிதத்தையே பெற்றிருந்தது. ஆழமாக மதிப்பிழந்துள்ள நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென்னை எதிர்கொண்டிருந்ததால், பெரிதும் வேறுவழியின்றி மக்ரோன் தேர்தலில் வென்ற பின்னர், இப்போது மக்ரோனும் அதேபோன்றவொரு திட்டத்தையே முன்னெடுத்து வருகிறார்.

ரோத்ஸ்சைல்ட் வங்கியின் ஒரு முன்னாள் முதலீட்டு வங்கியாளரான மக்ரோன், வங்கிகளின் மூர்க்கமான கட்டளைகளை திணிக்க நோக்கம் கொண்டுள்ளார். ஹோலாண்டின் ஜனாதிபதி பதவிக்காலத்தின் கீழ், தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்கள் வீழ்ச்சி அடைந்திருந்த நிலையில், லில்லியான் பெத்தான்கூர் (Liliane Bettencourt) மற்றும் பிலிப் அர்னோல்ட் (Philippe Arnault) போன்ற உயர்மட்ட பிரெஞ்சு பில்லியனர்களின் செல்வ வளமோ அண்மித்து இரட்டிப்பானது. ஆனால் உலக பொருளாதாரம் இப்போதும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், மற்றும் பிரான்சின் பொருளாதார நிலைமையும் உலக வர்த்தகத்தில் அதன் பலமும் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ஆளும் வர்க்கம் தொழிலாளர்களிடம் இருந்து இன்னும் அதிகளவில் பணத்தைப் பறித்து, அதை பெரும் செல்வந்தர்களின் கரங்களில் ஒப்படைக்க தீர்மானகரமாக உள்ளது.

வங்கிகளின் கட்டளையை முன்னெடுப்பதற்காக 1940 களுக்குப் பின்னர், பிரான்சில் பார்த்திராத ஒடுக்குமுறை வடிவங்களை ஏற்க விரும்பும் முற்றிலும் ஈவிரக்கமற்ற அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஓர் அரசியல் போராட்டத்தை முகங்கொடுக்கிறது. புதிய நிர்வாகம் பாரிய மக்கள் எதிர்ப்பை முகங்கொடுக்கிறது என்பது அதற்கு நன்றாக தெரியும் என்பதோடு, அது வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நசுக்க விரிவார்ந்த திட்டங்களைச் செய்து வருகிறது.

மரீன் லு பென் வென்றிருந்தால் நடைமுறைப்படுத்துவதற்காக, ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னர் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கான திட்டங்களை சோசலிஸ்ட் கட்சி செய்திருந்ததாக கடந்த வாரம் ஊடக செய்தி வெளியானது. இருப்பினும் அதன் உள்நோக்கம் லு பென்னை பதவியேறாமல் தடுப்பதல்ல, மாறாக பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்களை நசுக்குவதும் மற்றும் லு பென் மீது ஒரு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை நிறுத்தி வழமையான நாடாளுமன்ற நடைமுறைகளை நீக்குவதே அதன் நோக்கமாக இருந்தது.

வரவிருக்கின்ற உள்துறை அமைச்சர் ஜெரார் கொலொம் வெள்ளியன்று கூறுகையில் அவர் அவசரகால நெருக்கடி நிலையை மீளாய்வு செய்யவிருப்பதாகவும், ஆனால் தற்போதைய காலாவதி தேதியான ஜூலை 15 ஐ மீண்டும் நீடிப்பதை அவர் ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். “அவசரகால நெருக்கடி நிலையை ஏதேனும் ஒரு புள்ளியில் நாம் முடிவுக்குக் கொண்டு வந்து தான் ஆக வேண்டுமென நான் நினைக்கிறேன். ஆனால் இப்போது சரியான நேரமா? அரசாங்கம் உருவாக்கிய பின்னர் சரியான நேரமாக இருக்காது,” என்று கொலொம் RTL க்குத் தெரிவித்தார்.

அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிப்பது, ஏதேச்சதிகார கைது நடவடிக்கைகள், பொலிஸால் வீட்டுக்காவலில் வைக்கப்படுவது ஆகியவற்றைக் கொண்டு அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட வேலைநிறுத்த மற்றும் போராடுவதற்கான தொழிலாளர்களது உரிமைகளை இலக்கில் வைக்க முடியும். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் அது அளித்திருந்த வாக்குறுதிகளை, அதாவது நாஜி ஆக்கிரமிப்பை குணாம்சப்படுத்தும் விதத்தில் ஒருபோதும் எதேச்சதிகாரத்திற்கு திரும்புவதில்லை மற்றும் உழைக்கும் மக்களின் மீது கட்டுப்பாடின்றி ஒடுக்குவதற்குத் திரும்புவதில்லை என்ற வாக்குறுதிகளை அது கைத்துறக்கிறது என்று இதை கூறலாம்.

இந்த நிலைமை, மக்ரோன் மற்றும் மரீன் லு பென்னுக்கு இடையியே இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதற்கு பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES) விடுத்த அழைப்பை சரியென நிரூபிக்கிறது. லு பென்னுக்கு மக்ரோன் ஒரு மாற்றீடு கிடையாது என்றும், எந்தவொரு ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரின் தாக்குதல்களை தொழிலாள வர்க்கம் எதிர்த்து போராடும் வகையில் அரசியல்ரீதியில் சுயாதீனமான ஒரு புரட்சிகர முன்னோக்கை வழங்குவதே முக்கிய பிரச்சினை என்றும் PES வாதிட்டது. இந்த நிலைப்பாடுகள் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.