ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“There is an air of worker rebellion in India and China”
A conversation with Professor Immanuel Ness on the Maruti Suzuki workers
 

“இந்தியாவிலும் சீனாவிலும் தொழிலாளர் கிளர்ச்சி சூழ்நிலை உள்ளது”

மாருதி சுசூகி தொழிலாளர்கள் குறித்து பேராசிரியர் இமானுவல் நெஸ் உடன் ஒரு உரையாடல்

By Jerry White
4 May 2017


பேராசிரியர் இமானுவல் நெஸ்

நியூயோர்க் நகர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த புரூக்ளின் கல்லூரியின் அரசியல் விஞ்ஞான பேராசிரியரான இமானுவல் நெஸ், நாட்டின் புதிதாக உருவாக்கப்பட்டதும், உலகளவில் இணைக்கப்பட்டதுமான வாகனத் துறை உட்பட, இந்தியாவில் நடக்கின்ற வர்க்கப் போராட்டங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். புது தில்லிக்கு அருகே மானேசரிலுள்ள மாருதி சுசூகி வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் தொழிலாளர்கள் துன்புறுத்துப்பட்டது பற்றி விசாரணை செய்வதற்கு வருகைதந்த வழக்கறிஞர்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக வாதாடுபவர்களின் ஒரு சர்வதேச குழுவின் உறுப்பினராக நெஸ் மே 2013 ல் இந்தியாவிற்கு பயணம் செய்தார்.

ஜூலை 2013 ல், “வர்த்தகர்களின் அச்சுறுத்தல்: இந்தியாவின் புதிய தொழில்துறை பகுதியில் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை” என்ற தலைப்பில் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட தொழிலாளர் உரிமைகளுக்கான சர்வதேச ஆணையம் (New York-based International Commission for Labor Rights) வெளியிட்ட ஒரு அறிக்கையானது, ஜூலை 18, 2012 அன்று நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு கைகலப்பு மற்றும் அப்போது நிகழ்ந்த அந்நிறுவன மனிதவள மேலாளர் அவனிஷ் தேவ் இன் மரணம், இவற்றை தொடர்ந்து நடந்த பாரிய கைது நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் பணிநீக்கங்கள் போன்றவை பற்றி விவரித்தது.

பேராசிரியர் நெஸ், தெற்கு கிளர்ச்சி : உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் வருகை (Southern Insurgency : The Coming of the Global Working Class) என்ற 2015 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். இது இந்தியா, சீனா மற்றும் தெற்கு ஆபிரிக்கா நாடுகளின் தொழிலாளர் போராட்டங்கள் பற்றிய வழக்கு ஆய்வுகளை கொண்டது. மாருதி சுசூகி தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு மற்றும் உலகளவில் தொழிலாளர்கள் மீதான அதன் தாக்கங்கள் குறித்து அவர் சமீபத்தில் உலக சோசலிச வலைத் தள நிருபர் ஜெர்ரி வைட் உடன் கலந்துரையாடினார்.

இந்த வழக்கில் அவரது ஈடுபாடு குறித்து விவரித்ததுடன், நெஸ், “ஜூலை 18, 2012 அன்று சம்பவம் நிகழ்ந்து, கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பின்னர் இந்தியாவில் பாரபட்சமின்றி விசாரணை நடத்திய எட்டு பேர் கொண்ட ஒரு சர்வதேச குழுவில் நானும் ஒருவராக இருந்தேன். இந்த தொழிலாளர்கள் மனிதவள மேலாளரை கொல்வதில் ஈடுபட்டனர் என்ற வகையிலான, இந்திய அரசாங்கம், ஹரியானா மாநில அரசாங்கம் மற்றும் நிறுவனத்தின் விவாதங்கள் மீதான நம்பகத்தன்மையை நாங்கள் தீர்மானிக்க விரும்பினோம். அந்த நேரத்தில், 150 தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலிடப்பட்டிருந்தனர்” என்றும் கூறினார்.

 


சிறையிலிடப்பட்ட வாகனத் தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டது (ராகுல் ராய் இன் த ஃபேக்டரி என்ற திரைப்படத்திற்கு நன்றி)

இந்த ஆண்டு மார்ச் 18 அன்று மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் 12 தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் உட்பட 13 பேருக்கு ஒரு இந்திய மாவட்ட நீதிமன்றம் மிருகத்தனமான தண்டனைகள் விதித்தது குறித்து கருத்து தெரிவிக்கையில், “தொழிலாளர் முயற்சிகளுக்கு மிகப்பரந்தளவில் ஆதரவாக இருந்த அந்த மேலாளர், மூச்சுத்திணறலில் இறந்ததற்கும் 13 தொழிலாளர்களுக்கும் முற்றிலும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை சாட்சியங்கள் தெரிவிக்கின்றபோதும், அந்த தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுமென்பது அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. அவர் புகையை உள்ளிழுத்ததனால் நெருப்பில் சிக்கி இறந்தார். அப்படியே ஒரு தொழிலாளி நெருப்புவைக்கத் தொடங்கியிருந்தாலும், அவர் ஒருவர் மீதான வழக்காகத் தானே அது இருக்கவேண்டும், 13 பேர் மீதானது அல்லவே” என்று நெஸ் தெரிவித்தார்.

“யாராவது கொல்லப்பட்டால், நீங்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்வீர்கள், நிச்சயமாக நானும் அதைத்தான் செய்வேன். இருப்பினும் ஆணைய உறுப்பினர்கள் மத்தியில், இந்த தொழிலாளர்கள் இதில் ஈடுபடாதபோதும், அரசாங்கம் அவர்களது உரிமைகளை மீறியுள்ளது என்பதிலும், அந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு தரப்படவேண்டும் என்பதிலும் ஒருமித்த கருத்து இருந்தது. தொழிலாளர்களை தம்மை ஒழுங்கமைவு செய்யவும், கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும், எதிர்ப்பு தெரிவிக்கவும் தொழிலாளர்களுக்கு வழிவகை செய்யும் சர்வதேச தொழிலாளர் வரையறைகளை மாருதி சுசூகி நிறுவனம் மீறியுள்ளதை நாங்கள் கண்டோம்.

“நீதிமன்ற ஆவணங்களை படிக்கின்ற எவரானாலும் சரி, தொழிலாளர்களை பேட்டி கண்டவர்களானாலும் சரி, ‘கருங்காலிகள்’, அல்லது அந்த நிறுவனத்தைச் சார்ந்த துரோகிகளை தொழிலாளர்கள் உடையில் அணிதிரட்டித் தான் இந்தியாவில் ஜூலை 2012 அன்று மோதல்கள் தொடங்கப்பட்டது என்பதை அவர்கள் அங்கீகரிக்கவேண்டும். ஏற்பாடு செய்திருந்த பிரச்சாரத்தை சீர்குலைக்க, திட்டமிட்டே அவர்கள் தொழிற்சாலையில் ஒரு ஊடுருவலை நடத்தினர் என்று நான் வாதிடுவேன். ஹரியானா மாநில தலைநகரான சண்டிகரில் மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தை ஸ்தாபிக்க தொழிலாளர்கள் ஏற்கனவே ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், அவர்களது ஒழுங்கமைவை தகர்ப்பதற்கு என்பதோடல்லாமல், அதன்மூலம் தொழிலாளர்களுக்கென்று எந்தவொரு அமைப்போ, எந்தவித முயற்சிகளோ அங்கு இல்லாமல் போவதற்கான நிலையை உருவாக்கவே இது செய்யப்பட்டது”

“சம்பவத்திற்கு பின்னர், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து சுற்றிவளைத்து இருந்தனர். தொழிற்சாலையில் முழுநேர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இருவருமே முற்றிலும் மாற்றப்பட்டிருந்தனர். எனவே, தொழிற்சாலையில் அல்லது மாருதி சுசூகி நகரில் எந்தவொரு பகுதியிலும் ஒருவேளை எவரும் எதிர்ப்பில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களும் மாற்றப்படுவர் என்ற நிலையே இருந்தது.”

அதன் பின்னர், சட்டரீதியான சதிவேட்டையின் பின்னணியில் இருக்கும் உண்மையான நோக்கங்களை நோக்கி நெஸ் திரும்பினார். “உங்கள் வலைத் தளத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, விசாரணையின்போது, வாதித் தரப்பும், ஹரியானா அதிகாரிகளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு நட்பு வணிக சூழலை பராமரிப்பது பற்றிய இந்திய ஆளும் வர்க்கத்தின் கவலைகளை சுட்டிக்காட்டினர்.

“2012ல், மீண்டும் 2017ல், முக்கியமாக ஏகாதிபத்திய நாடுகளுக்கான ஏற்றுமதிக்காகவும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் லண்டன் சிட்டி இலாபங்களை ஈட்டுவதற்காகவும், இந்தியா தொழில்மயமாக்கத்திற்கும், ஏற்றுமதிகள் உருவாக்கத்திற்கும் ஒரு மிகப்பெரிய உந்துதலைக் கொண்டிருந்தது. மாருதி சுசூகி நிறுவனம் சுசூகிக்கு சொந்தமானது, ஜப்பானிய தொழிலாளர்களை கொடூரமாக நடத்தும் மிக மோசமான ஜப்பானிய நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த காலங்களில் அமெரிக்காவில் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டிருந்த அதிதீவிர வேகத்தையும், அவர்கள் அனுபவித்த பல விடயங்களையும் இப்போது இந்தியாவில் இன்னும் அதிகளவில் அவர்கள் உச்சபட்சமாக செயல்படுத்தியுள்ளனர். இந்திய அரசாங்கம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை வாகன நிறுவனங்கள், மின்னணு நிறுவனங்கள் மற்றும் அதற்கு அப்பாற்பட்டும் ஊக்குவிக்க முயற்சித்துவருகிறது.

பின்னர் இந்த விவாதம் கைது செய்யப்பட்ட தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் நிலைமைகளுக்குத் திரும்பியது. “மே 2013ல் நாங்கள் அங்கிருந்தபோது தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் பாதிப்பு இருந்தது. கைக்குழந்தையுடன் அவர்களது மனைவி இருந்த நிலையில், அந்த குழந்தைகள் அவர்களது தந்தையை ஒருபோதும் காணதாவர்களாக இருந்தனர். வீட்டு வாடகை அல்லது உணவிற்கான செலவினங்களை தாங்களே மேற்கொள்ள இயலாத நிலையில் இருந்த அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் தான் ஒன்றாக வாழவேண்டியிருந்தது. கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இளம்பருவ பெண்கள் மத்தியில் உளவியல் ரீதியான, உணர்ச்சி ரீதியான மற்றும் உடல் ரீதியான துன்பங்கள் மிகப்பெரிய அளவிற்கு இருந்தது. இந்த பெண்கள் நீண்ட காலமாக தங்கள் கணவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். ராகுல் ராய் இன் த ஃபேக்டரி திரைப்படத்தில் இந்த மாதிரி இன்னும் உள்ளது.


மானேசரில் மாருதி சுசூகி ஆலையை சுற்றியுள்ள குடிசைகள் (ராகுல் ராய் இன் த ஃபேக்டரி என்ற திரைப்படத்திற்கு நன்றி)

“மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஐக்கியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர், மே 2013ல் ஹரியானாவில் Kaithal என்றவொரு நிர்வாக மையத்திற்கு விஜயம் செய்தோம். அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு, மிக அபாயகரமான நிலைமையில் சிறையிலடைக்கப்பட்டனர். எமது குழுவினர் சிறைக்கு விஜயம் செய்ததுடன், ஒரு பொலிஸ் ஆணையாளரையும் சந்தித்தது.

“மாருதி சுசூகி தொழிலாளர்கள் குற்றவாளிகள் (கொலைக்கும், அவர்கள் மீது போடப்பட்ட ஏனைய கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் குறித்தும்) மேலும் அவர்களது பாதுகாப்பிற்காக சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்த மக்களும் குற்றவாளிகளே என்ற ஒரு அடிப்படையான கருத்தையே ஆணையாளர் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களின் உரிமைகளை கருத்தில் கொண்டு முற்றிலுமாக அங்கு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், வேலை வழங்குநர்கள், பொலிஸ் மற்றும் தொழிலாளர் துறையினர் ஆகியோர் மத்தியில் இது குறித்து ஒரு நிலையான கருத்து நிலவியது. உண்மையில், இந்திய ஆளும் வர்க்கம் வெளிநாட்டு முதலீட்டுடன் இணைவதற்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்று நான் முன்பு சுட்டிக்காட்டிய அதே பிரச்சனையையே இது சுற்றிவரும். வணிக நட்பு சூழல் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் முனைப்பில் அவர்கள் எதையும் நிறுத்த மாட்டார்கள்.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் உச்சக்கட்ட துன்புறுத்தலுக்கு உள்ளான சமயத்தில் அல்லது நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து பேரினவாத பி.ஜே.பி. மே 2014 ல் மையத்தில் ஆட்சிக்கு வந்த சமயத்தில், காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, ஹரியானா மற்றும் தேசிய அரசாங்கத்தை ஆட்சி செய்த இந்திய ஆளும் வர்க்கத்தின் பாரம்பரிய கட்சியானாலும் சரி, இது அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் அதிகாரபூர்வமான கொள்கையாகும் என்று இந்த நிரூபர் சுட்டிக்காட்டினார்.

“இந்த கேள்வியை பொறுத்தவரையில் மோடி அரசாங்கம் ஒருவேளை மிக மோசமாக உள்ளதென்று நான் வாதிடுவேன்” என்று நெஸ் கூறினார். “ஆனால், ஒழுங்கமைவு செய்வது போன்ற தொழிலாளர்களின் உரிமைகள் மீதான கேள்வி குறித்து உண்மையில் இரு கட்சிகளுக்கும் மற்றும் சில பிராந்தியக் கட்சிகளுக்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. இந்த அமைப்பில் குறிப்பாக தொழிலாளர்கள் பக்கம் மிகச்சிறய அளவிலான நீதியே உள்ளது.

இந்திய பெரு நகரங்களைச் சுற்றியுள்ள புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் (Special Economic Zones-SEZ), ஏற்றுமதி நடைமுறை மண்டலங்களிலும் (Export Processing Zones-EPZ) பணியாற்றும் இளம் தொழிலாளர்கள் பற்றி நெஸ் விவரித்தார். “உதாரணமாக, தில்லி மற்றும் ஹரியானாவில், பல தொழிலாளர்கள் பீகார், உத்திரப்பிரதேச பகுதிகள் மற்றும் அதற்கு அப்பாலிருந்தும் வந்து பணிபுரிகின்றனர். அவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருகின்றனர், பல சந்தர்ப்பங்களில், பண்ணைகள் இனி அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்காது என்ற நிலையில், பிழைப்பிற்காக நகரங்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.”

அவர்களின் நிலைமைகளை சுட்டிக்காட்டி, “அதிகளவு தூய்மைகேடான, கிட்டத்தட்ட தாங்க முடியாத வகையில் சுற்றிலும் சேரிகள் உள்ள பகுதியில் நீங்கள் வாழ்கிறீர்கள். இந்த மண்டலங்களிலுள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் ஒரு ஆண்டில் பெரும்பகுதி வேலையின்றியிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். இது அந்தந்த மண்டலத்தில் தங்கியுள்ளது. ஏனெனில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பல தொழிலாளர்கள் முறையான பயிற்சி பெறுவதற்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு செல்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் 30 முதல் 35 வயதானவர்களுக்கான ஊதியங்கள் நிறுவனங்களால் உயர்த்தப்படவேண்டிய நிலை ஏற்படுகையில் அவர்களை பணிநீக்கம் செய்யவே நிறுவனங்கள் விரும்புகின்றன.

“உயர் மட்ட திறன் பயிற்சிகளை பெற்ற தொழிலாளர்கள் கூட ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே மாற்றப்பட்டுள்ளனர். ஏனைய மண்டலங்களில் சிலவும் மோசமான நிலைமையில் உள்ளன. சென்னையில் சுமார் 25 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் தங்களது தொழில்வழங்குநர்களுக்கு தவிர்க்கமுடியாதவர்களாக உள்ளனர். இந்த துறைகளில் இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் தொழில்வயது 18 முதல் 25 வரையிலும், சில சந்தர்ப்பங்களில் 35 வயது வரையிலுமாகவுள்ளது. ஒரு தொழிலாளியாக உங்கள் வாழ்க்கையில் இந்த வகையான வசதிகள் அத்துடன் முடிந்துவிடுகிறது. பின்னர் ஒரு ஒப்பந்தத் தொழிலாளராக மேலும் நீங்கள் ஓரங்கட்டப்படுவீர்கள்.”

இத்தகைய நிலைமைகள் தான் மாருதி சுசூகி தொழிலாளர்களை திரும்ப திரும்ப ஆர்ப்பாட்டங்களையும், வேலை நிறுத்தங்களையும் தொடரும் நிலைக்கு இட்டுச்சென்றது. “தொழிற்சங்கங்களை ஒழுங்கமைக்க கடந்த 12 முதல் 15 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்து, முதலில் குர்கானிலுள்ள முதலாவது ஆலையிலும், தொடர்ந்து மானேசர் ஆலையிலும் 2006 ல் அது ஸ்தாபிக்கப்பட்டது. முதல் ஆலையில், மாருதி உத்யோக் காம்கர் யூனியன் (Maruti Udyog Kamgar Union-MUKU) என்பதாக நிறுவனம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு தொழிற்சங்கமாக முடிவில் உருவானது, புதிய ஆலையில் தொழிலாளர்களால் சுயாதீனமான தொழிற்சங்கங்களை ஒழுங்கமைவு செய்ய 2009ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து எடுக்கப்பட்ட முயற்சிகளின் உச்சப்பட்சமாக 2012 ல் மாருதி சுசூகி தொழிலாளர்கள் யூனியன் (Maruti Suzuki Workers Union-MSWU) ஸ்தாபிக்கப்பட்டது.    


மானேசரில் மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அக்டோபர் 2011 ல் சுசூகி பவர்டிரெய்ன் தொழிலாளர்கள் அநுதாப வேலை நிறுத்தத்தில் ஈடுபடுதல்

“இந்தியாவின் தொழிலாளர் தொகுப்பில் 95 சதவிகிதமாகவுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை பாரம்பரிய தொழிற்சங்கங்கள் ஒழுங்கமைக்க இயலாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக நெஸ் கூறினார், ஏனெனில் புதிதாக மேம்பட்ட தொழிற்துறைகளில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதை இந்திய அரசாங்கம் அந்தளவிற்கு தடுக்கிறது.

ஸ்ராலினிச தலைமையிலான இந்திய தொழிற்சங்கங்கள் (Stalinist-led Centre of India Trade Unions-CITU) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All-India Trade Union Congress-AITUC) போன்றவை இந்த இளம் தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டங்களுக்கு விரோதமாகயிருப்பது அச்சுறுத்தலாகவுள்ளது. ஏனெனில் காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை 2004-08 முதல் ஆதரவளித்தது உட்பட, உலக முதலாளித்துவத்திற்கான ஒரு மலிவு உழைப்பு மையமாக இந்தியாவை உருவாக்கும் இந்திய முதலாளித்துவத்தின் வேலைத்திட்டத்தையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM மும் பலமுறை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளன. 

“ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்கள் அவர்களது அரசியல் நோக்குநிலையைப் பொருட்படுத்தாமல், அவர்கள் கம்யூனிஸ்ட்கள் அல்லாமல், அவர்கள் சார்ந்திருக்கும் கொள்கைகளின் வகைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது சிறந்த சமூக ஜனநாயகமாகவுள்ளது என்று நான் வாதிடுவேன். CITU தொழிற்சங்கத்தின் கட்சியான CPM பல ஆண்டுகளாக எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் மேற்கு வங்கத்தில் அதிகாரத்தில் இருந்தபோதும் அது எந்தவொரு ஆதரவு அடித்தளமும் இல்லாமல் இருந்தது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர்களிடையே பெருகிவரும் போராட்டங்கள் பற்றி நெஸ் விவரிக்கத் தொடங்கினார். “தில்லியைச் சுற்றிலும் குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து கணிசமான தொழிலாளர் போராட்டங்கள் நடைபெறுகின்றன, அதுவும் தற்சமயத்தில் கூட டஜன் கணக்கில் அல்லது அதற்கும் மேற்பட்ட வேலைநிறுத்தங்கள் வழமையாக நடக்கின்றன, அதேபோல் இருசக்கர வாகனங்கள் அல்லது மோட்டார் சைக்கிள் தொழில் மற்றும் ஆட்டோ ரிக்சா உற்பத்தி எனக் குறிப்பிடப்படும் வாகனத் தொழில்துறையில் வேலை வழங்குநர்களின் வெளிநடப்பும் நிகழ்கின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் நான் ஹோண்டா பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை சந்தித்தேன். மிகத் திறமைவாய்ந்த இந்த தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இடம்பெயர்ந்துவருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் அவர்களது அரசியல் செயல்பாடு மூலமாக தங்களது பாத்திரத்தை முன்னெடுப்பதற்கு அவர்களிடையே பெரும் தேவையும், சாத்தியங்களும் உள்ளது என்பதே இந்தியாவில் உள்ள முக்கிய கேள்விகளில் ஒன்றாகும்.   

“மாருதி சுசூகியில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களை அணிதிரட்டுவதைப் பற்றி பலர் பேசுகின்றனர், ஆனால் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் அணிதிரட்டவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தொழிலாளர் தொகுப்பில் 80 சதவிகிதத்தைப் பற்றி நீங்கள் பேசுகையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அது ஒரு பெரிய கிளர்ச்சிக்கான அல்லது ஒருவேளை இன்னும் கூடுதலான கிளர்ச்சிக்கு அடித்தளத்தை உருவாக்கும். இந்தியா, சீனா மற்றும் பிற இடங்களில் இருக்கும் சாத்தியங்கள் தொழிலாளர்களின் அணிதிரட்டலுக்கு மிகவும் வலுவானவை என்று நான் நினைக்கிறேன்.        

“கிளர்ச்சிக்கான ஒரு சூழ்நிலை உள்ளது. குர்கான் போன்ற இடத்திற்குச் சென்று, ஒரு பூங்காவிற்குச் சென்று பார்த்தால், அந்த வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வட்டமாக அமர்ந்து அவர்களது நிலைமைகளைப் பற்றி, அரசியலைப் பற்றி, சோசலிச சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றை அங்கு எப்படி பெறுவது என்பது பற்றியும் உரையாடுவதை காணலாம்.”

தொழிலாள வர்க்கமும், வர்க்கப் போராட்டமும் “மறைந்துவிட்டன” என்ற விதத்திலான சில கல்வியாளர்களின் மனத்தளர்ச்சியுற்ற கூற்றுக்களை நெஸ் நிராகரிக்கிறார். உலகின் பல உற்பத்தி நிலையங்கள் மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவை விட்டு வெளியே சென்றுவிட்ட நிலையிலும், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகளவில் சுரண்டப்பட்ட மில்லியன் கணக்கிலான தொழிலாளர்கள் ஒரு சக்திவாய்ந்த சமூக சக்தியாக எழுந்துள்ளதாக அவர் கூறுகிறார்.

“இந்தியாவில், மற்ற இடங்களை விட நிறுவன நடவடிக்கைகளின் அளவு மிக அதிகமாகவுள்ளது. தென்னாபிரிக்காவிலும் இதை நாங்கள் கண்டோம். பிரேசில் மற்றும் மெக்சிகோ போன்ற இடங்களில் நானும், மற்றவர்களும் சுரங்கத் தொழிலாளர்கள், பிளாட்டினம் தொழிலாளர்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வில், பரந்த அணிதிரட்டுதல்கள் அங்கு நடைபெறுவது தொடர்பாக இதுவரை கவனத்தில் கொள்ளப்படாமல் இருப்பதும், பெரும்பாலும் முதல் பக்கங்களில் அவை செய்திகளாக வெளிவராமலிருப்பதும் தெரியவருகிறது.

“திடீரென்று நடக்கும் தன்னியல்பான வேலைநிறுத்தங்களையும் நாம் காண்கிறோம். ஆனால் நாம் அதை எப்படி உருவாக்கவேண்டும்? நம்பிக்கை வைத்துள்ள மிகப்பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்டு அமைப்புக்களை நாம் உருவாக்கவேண்டுமென நான் கருதுகிறேன். ஏற்கனவே உள்ள தொழிற்சங்கங்கள் திறமையற்றதாகவும், இதை செயல்படுத்துவதில் ஈடுபாடும் கொண்டிராத நிலையில், தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு புதிய அமைப்புக்கள் தேவைப்படுகின்றது என்ற கருத்தை நோக்கி இந்தியாவிலும், வட அமெரிக்காவிலும் உள்ள மக்கள் நகர்கின்றனர். இந்த நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களும் உலகின் பிற பகுதிகளில் இருப்பது போன்றே மிகவும் பலவீனமாக உள்ளன.”

“இந்த கருத்தை எடுத்துக்கொண்டு, பூகோளமயமாக்கம், நாடுகடந்த நிறுவனங்கள் வெளிப்படுதல் ஆகியவற்றில் இருந்ததான, அனைத்து தேசிய அடிப்படையிலான தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் தோல்வி தொடர்பாக 1990 களின் ஆரம்பத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மேற்கொண்ட பகுப்பாய்வு பற்றி இந்த நிருபர் விவாதித்தார். தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த ஒரு சர்வதேச மூலோபாய பிரச்சனையை நெஸ் எப்படி கண்டார்? என்று இந்த நிருபர் கேட்டார்.  

“தொழிலாளர்களிடம் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்த போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் தொழிலாளர்கள் தங்களுக்காக போராடவும், தங்களுக்கு மத்தியில் ஐக்கியத்தை கட்டமைக்கவும் போகிறார்கள். அவர்கள் தங்கள் இடங்களில் ஐக்கியத்தை உருவாக்க முடியுமென்றால், நீங்கள் குறிப்பிடுவது போன்ற சர்வதேசிய அளவிலான போராட்டங்களில் ஈடுபடுவதற்கான திறனையும் அவர்கள் கொண்டிருப்பார்கள் என்பது தான் முக்கிய கேள்வியாகவுள்ளது.

“ஆனால் இந்த நாட்டில் சர்வதேச அளவிலான ஒற்றுமைக்கு நாம் மிகச் சில உதாரணங்களை மட்டுமே உள்ளன. இது AFL-CIO இன் இயல்புடன் தொடர்புபட்டதாகும். உண்மையில் AFL-CIO, தொழிலாளர் இயக்கங்களுக்கு எதிரானதாக இருந்து அமெரிக்க அரசாங்கத்தை ஆதரித்தது. இத்தகைய ஐக்கியத்திற்காக சுயாதீன தொழிற்சங்கங்களின் தகமையில் இவ்விதமான சிக்கலான தன்மைகளும் உள்ளன.

“அமெரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு வெளியேயுள்ள தொழிலாளர்கள் குறித்த பெரும் சுரண்டலுக்கு இடையிலான தொடர்பு பற்றியும், மேலும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் நிலைமையை மேம்படுத்துவதற்கு அவர்களின் நிலைமைகளை முன்னேற்றுவிப்பது எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும் தொழிலாளர்களை அறிந்துகொள்ளச் செய்வது அவசியமாகவுள்ளது

இந்த விவாதத்தை முடிக்கும்வகையில், உலக சோசலிச வலைத் தளத்தால் முன்வைக்கப்பட்ட முன்னோக்கை இந்த நிருபர் சுட்டிக்காட்டினார். ஒரு புரட்சிகர தலைமையில்லாத பட்சத்தில், தொழிலாளர்களின் மகத்தான போர்குணமும், சுய தியாகமும் ஆளும் உயரடுக்கின் ஒன்று அல்லது மற்றொரு பிரிவின் பின்னால் அணிதிரண்டு பின்தங்கிப்போவதுடன், உள்ளடங்கி நசுங்கிப்போய்வடும் என்பதை இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா மற்றும் மிக சமீபத்தில் 2011 ல் எகிப்தில் நிகழ்ந்தது போன்ற வரலாற்று அனுபவங்கள் நிரூபித்துள்ளன. சுரண்டல், அரசு அடக்குமுறை மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதன் உந்துதல்களை தொழிலாள வர்க்கம் உணரவேண்டும் என்பதுடன், அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவும், முதலாளித்துவத்திற்கு பதிலாக சோசலிசத்தைக் கொண்டுவரவும், அதன் சொந்த சர்வதேச கட்சியை அது ஒழுங்கமைவு செய்துகொள்ள வேண்டும்.

“நாம் கவனம்செலுத்தவேண்டிய மிக முக்கிய கேள்விகளாக நான் இவற்றை கருதுகிறேன்,” என்று நெஸ் விடையிறுத்ததுடன், அவர் உலக சோசலிச வலைத் தளத்தை விரும்பி வாசிப்பதாகவும், மற்றவர்களுக்கும் இந்த தளத்தைப் பற்றி அதிகளவு பரிந்துரைப்பதாகவும் தெரிவிக்கிறார். “எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.” என்றார்.